Showing posts with label International. Show all posts
Showing posts with label International. Show all posts

Saturday, 25 May 2019

Manekken Pis


மானேகென் பிஸ் என்பது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இரண்டு அடி உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலை. மானேகன் பிஸ் என்றால் the litter pisser, அதாவது சிறுநீர் கழிக்கும் சிறுவன் என்று அர்த்தம்.

ஆமாம், சிறுநீர் கழிக்கும் சிறுவன் சிலைதான் பிரஸ்ஸல்ஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. பிரஸ்ஸல்ஸ் நகர மக்களின் நகைச்சுவை உணர்வுக்கு அடையாளமாக இந்தச் சிலை விளங்குகிறது. நகைச்சுவைக்கு மட்டுமல்ல, அவர்களின் தன்மான உணர்வுக்கும் இந்தச் சிலை அடையாளம் எனலாம்.

இந்தச் சிலையை எப்போது நிறுவினார்கள் என்று தெரியவில்லை. ஏன் நிறுவினார்கள் என்று பல கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்தக் கதை இதுதான். ஒரு முறை பிரஸ்ஸல்ஸ் நகரம் முற்றுகைக்கு உள்ளானது. எதிரிகள் கோட்டையை வெடி வைத்துத் தகர்க்க பார்த்திருக்கிறார்கள். எதிரிகள் இடையே உளவு பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், பற்றியெரிந்த திரி மீது சிறுநீர் கழித்து அதை அணைத்திருக்கிறான். பிரஸ்ஸல்ஸ் நகரையே காப்பாற்றிய இந்தத் தீரச்செயலைப் (!) பாராட்டி சிலை வைத்தார்களாம். (ஏதோ தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சீன் பார்த்த ஞாபகம் இருக்கிறது..!)

1451-ம் வருடத்தைய பிரஸ்ஸல்ஸ் நகர குடிநீர் சப்ளை கட்டுமானம் குறித்த ஆவணங்களிலேயே இந்தச் சிலையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. 1619-20ல் பழைய சிலை அகற்றப்பட்டுப் புதிதாக வெண்கல சிலையொன்று அமைக்கப்பட்டது. இப்போது இருக்கும் சிலை ஒரிஜினல் சிலை கிடையாது. ஒரிஜினலை மியூசியத்தில் வைத்துவிட்டு, அதே போல டூப்ளிகேட் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிலை பிரஸ்ஸல்ஸ் நகர அடையாளம் என்பதால் போர்களில் இதைத் சேதப்படுத்த முயன்றிருக்கின்றனர். திருடர்கள் இதைக் களவாட பார்த்திருக்கின்றனர். இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் சிறப்புப்படைப் பிரிவொன்று இந்தச் சிலையைத் திருட முயல, மக்கள் வீராவேசமாக கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். மக்கள் எதிர்பைக் கண்டு திகைத்த பிரான்ஸ் மன்னர் 15ம் லூயி, திருட்டு முயற்சியைக் கைவிட்டு, தங்க அங்கி ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இது போல பல்வேறு நாட்டினர் இந்தச் சிலைக்கு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். (போன மே மாதம் வரை இதுமாதிர 1000 உடைகள் சேர்ந்திருக்கின்றன)




விசேஷ நாட்களில் இந்தச் சிலைக்கு விதவிதமான ஆடை அலங்காரங்கள் செய்வர். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பீரை சிறுநீராக கழிப்பது போல செட்டப் செய்வார்கள். அந்தப் பீரை அனைவரும் குடித்து மகிழ்வார்கள்…!

அடுத்த சனிக்கிழமை, அதாவது, ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினமாம்…. அன்று இந்தச் சிறுவன் பாலைக் கழிக்கப் போகிறானாம். அதைப் பிடித்துக் குடித்துக் கொண்டாட போகிறார்கள்.

என்னது, ‘அவர்’ எப்போ பிரஸ்ஸல்ஸ் போவாரா? ஆளை விடுங்க…!

Monday, 6 August 2018

Kiki – Cochin man – Jaipur Police


கொச்சியை சேர்ந்த ஜவஹருக்கு ஏகப்பட்ட போன் கால்கள்… பல வருடங்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட அவருக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்கள். அவர் பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட போன்கால்கள்.

காரணம், ஜெய்ப்பூர் போலீஸ் வெளியிட்ட ஒரு விளம்பரம்… கிகி சேலன்ஜ் செய்யும்போது உயிரிழந்த வாலிபர் என்று ஜவஹரின் படம் போட்டு விளம்பரம் வந்திருந்தது.

ஆனால், ஜவஹர்தான் உயிரோடு இருக்கிறாரே…! அதுதான் காமெடி…! ஜவஹரின் உறவுக்காரர் ஒருவர் விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுப்பவர். ஒரு நாள் கேஷுவலாக ஜவஹரை போட்டோ எடுத்தவர், அதை ஷட்டர்ஸ்டாக் என்னும் வலைத்தளத்திலே வெளியிட்டார். அந்த தளம் போட்டோக்களை விற்பனை செய்யும் ஒரு பிரபல தளம். ஜெய்ப்பூர் போலீஸ் மாடர்ன் லுக்கில் இருக்கும் ஜவஹரின் போட்டோவை எடுத்து அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டது.

ஜெய்ப்பூர் காவல்துறையை பொருத்தவரை அவர்கள் காசு கொடுத்துதான் போட்டோ வாங்கினார்கள்…. அதை விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வாதம். இது சரியான வாதமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன கிகி சேலன்ஜ்? Drake என்னும் பாடகர் ‘In my feelings‘ என்றொரு வீடியோ பாடலை வெளியிட்டார். Shiggy என்றொரு சோஷியல் மீடியா ஸ்டார் (18 லட்சம் followers) அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார்.  Shiggy- யின் வீடியோவினால் அந்த பாட்டு செம பிரபலம் ஆனது.
Shiggy and Drake

ஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் சும்மா இல்லாமல் ஒரு பாலத்தின் மேல் ஏறி அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அதையும் வீடியோ எடுத்து போட்டார். அதிலிருந்து ‘Kiki Challange’  அல்லது ’Shiggy Challenge’ ஆரம்பித்தது.

சும்மா அந்த பாட்டிற்கு நடனம் ஆடாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். ஓடுகிற காரில் இருந்து கீழே இறங்கி நடனம் ஆடவேண்டும்…. நடனம் ஆடி கொண்டே காரை தொடரவேண்டும். இதுதான் தற்போதைய சாலன்ஜ்.

இந்த கூத்திலே பலருக்கு அடிபடுகிறது… மோசமான விபத்துகள் நடக்கின்றன. Shiggy – யே ஒரு தொலைக்காட்சி பேட்டியிலே ஜாக்கிரதையாக நடனமாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நம்மூரிலும் கிகி சேலன்ஜ் கூத்து ஆரம்பித்தது. அதனால்தான், ஜெய்ப்பூர் போலீஸ் கிகி சேலன்ஜிற்கு எதிராக விளம்பரம் வெளியிட, கொச்சினில் இருக்கும் ஜவஹருக்கு போன்கால்கள் குவிந்தன.

இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாவின் பவர் என்ன என்பதை ஜவஹர் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஜவஹரோ, “பரவாயில்லையே, நான் இறந்தால் இத்தனை பேர் விசாரிக்கிறார்களே…?“ என்று நடந்ததை பாஸிட்டிவ்வாக எடுத்து கொண்டு போய்விட்டார்.

Friday, 20 July 2018

Chinese Yuan and Indian Exports


அமெரிக்கா சீனபொருட்கள் மீது வரிவிதித்ததாலோ என்னவோ, சீனா நைஸாக தன் கரன்ஸியின் மதிப்பை குறைத்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 8% மதிப்பு குறைந்துவிட்டது. இது சீனாவின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான விஷயம்.

யானையும் யானையும் சண்டை போடும்போது கோழி நசுங்குவது போல, நடுவிலே 
இந்திய ஏற்றுமதி அடிபடும். ஒருவேளை டாலருக்கு எதிராக ரூபாய் விழுவது மத்திய அரசின் ராஜதந்திரமா அல்லது காலி பெருங்காய டப்பாவா?

யுவான் ஏப்ரலிலிருந்து விழுகிறது… அதாவது, அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரிவிதிப்பை முன்மொழிந்த நாளிலிருந்து….!

அதற்கு மாறாக ரூபாய் ஜனவரியிலிருந்து விழுகிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் – ஏற்றுமதி – இறக்குமதி வித்தியாசம், க்ரூட் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததும்/ வெளியேறுவதும்.

ஸோ, சீனாவை சமாளிக்கும் விதமாக ரூபாய் மதிப்பு விழவில்லை… காலி பெருங்காய டப்பாதான்…!

Wednesday, 11 July 2018

American Opposition to Breastfeeding


ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னர் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) ஒரு தீர்மானம் இயற்றப்பட இருந்தது. தீர்மானம் ரொம்ப சிம்பிள்… தாய்பாலுக்கு மாற்றாக ஃபார்முலா உணவுகள் (புட்டிபால் முதலியன) இருக்கிறதல்லவா..? இப்போதெல்லாம் தாய்பாலை விட ஃபார்முலா உணவுகள்தான் சத்துமிக்கவை, ஆரோக்கியமானவை என்று விளம்பரங்கள் வருகின்றன. உலகநாடுகள் இந்த பொய் பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் தீர்மானம்.

இந்த தீர்மானத்தை ஈக்வடார் என்னும் நாடு முன்மொழிய வேண்டும்…. மற்ற நாடுகள் ஆதரிக்கவேண்டும். ரொம்ப ஈஸியாக தீர்மானம் நிறைவேறிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்க, அமெரிக்கா வடிவில் முட்டுக்கட்டை வந்தது.

இந்த தீர்மானத்தை உப்புசப்பில்லாத தீர்மானமாக (diluted) மாற்ற முயன்ற அமெரிக்கா, ஒரு கட்டத்தில் ஈக்வடார் நாட்டை மிரட்ட ஆரம்பித்தது. தீர்மானத்தை முன்மொழிந்தால் ஈக்வடார் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்ட ஈக்வடார் பயந்து போய் ஒதுங்கி கொண்டது. அடுத்தடுத்து ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகள் இது போல அமெரிக்காவால் மிரட்டப்பட்டு ஒதுங்கிகொண்டன.

கடைசியில் அமெரிக்காவால் மிரட்டப்படமுடியாத நாடு, அதுதாங்க ரஷ்யா, தீர்மானத்தை முன்மொழிய அமெரிக்கா மூக்குடைப்பட்டு ஒதுங்கி கொண்டது.

அமெரிக்கா இது போல மிரட்ட காரணம், ஃபார்முலாக்களுக்கான மார்க்கெட். 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள மார்க்கெட் தற்போது வளர்ந்த நாடுகளில் ஆதரவிழந்து வருகிறது. மக்களுக்கு தாய்பால் குறித்த விழிப்புணர்வு வளருவதுதான் காரணம். (அதற்கு பதிலாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஃபார்முலா பிரபலமாகி வருவது கொடுமை!)

ஃபார்முலா உணவு வர்த்தகத்தை காப்பாற்றுவதற்காக ட்ரம்ப் அரசாங்கம் இப்படி மற்ற நாடுகளை மிரட்டுகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு இதெல்லாம் தர்ம சங்கடம்… காரணம், அந்த அமைப்பிற்கான பெரிய நிதி உதவி அமெரிக்காவிடமிருந்துதான் வருகிறது. So, அமெரிக்கா நாட்டாமைத்தனம் செய்கிறது.

இது தனிப்பட்ட நிகழ்வல்ல… குப்பை உணவுகள் என்றழைக்கப்படும் Junk Foods பாக்கெட்டுகளின் மீது எச்சரிக்கை வாசகங்கள் எழுதவேண்டும் என்னும் தீர்மானத்தையும் அமெரிக்கா எதிர்க்கிறது.

எவர் ஆரோக்கியம் கெட்டாலும் பரவாயில்லை, வர்த்தகம் நடக்கவேண்டும். டாலர்தான் கடவுளப்பா…! எவன் செத்தாலும் கவலையில்லைப்பா….!


Friday, 6 July 2018

Via Verde - Mexico City


வையா வெரடே – அப்படியென்றால் ஸ்பானிஷ் மொழியில் பசுமை வழி என்று அர்த்தம். நம்ம ஊர் சேலம் – சென்னை சாலை இல்லை. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள சாலைகளை பசுமையான சாலையாக மாற்றும் ப்ராஜெக்டிற்கு பசுமை வழி என்று பெயர்.

மெக்ஸிகோ சிட்டி உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. லேட்டஸ்ட் தகவல்கள் படி கிட்டத்தட்ட 2.25 கோடி மக்கள் வசிக்கிறார்கள் (சென்னை ஒரு கோடிதான் இருக்கும்). ரொம்ப காலமாகவே அந்த ஊரில் அநியாய பொல்யூஷன். 90களிலேயே 10-ல் 6 பேருக்கு சுவாச பிரச்சனை இருந்தது.

சுற்றுசூழலை கொஞ்சமேனும் காப்பாற்ற, இப்போது வெர்டிகல் கார்டன் (Vertical Garden) முறைப்படி சாலைகளில் இருக்கும் பாலங்களின் தூண்களில் செடி, கொடிகளை வளர்க்கிறார்கள்... எப்படி?

வீணான பிளாஸ்டிக் முதலின உபயோகித்து, போர்டுகள் செய்து, அதில் துணி குப்பைகளை கொண்டு ஹைட்ரோபோனிக் (Hydroponic) என்னும் முறையிலே செடி நடுகிறார்கள். மண்ணே இல்லாமல் செடி வளர்க்கும் முறை இது. செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தண்ணீரில் கலந்து விடுவார்கள். செடி வேர்பிடித்து வளர்வதற்கு Felt எனப்படும் துணிக்குப்பை உபயோகப்படும்.

சரி, இதற்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்? பாலங்களின் மேல் பொழியும் மழைநீரை சேகரித்து கொள்கிறார்கள்... Grey water  என்று சொல்லப்படும் அழுக்கு தண்ணீரையும் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். மக்களுக்கான குடிநீரில் கை வைக்கவில்லை. லாரியில் தண்ணீர் கொண்டுபோய் தெருவெல்லாம் ஊற்றும் சமாசாரமல்ல... மாறாக, சொட்டு நீர் பாசன ஐடியாவை பயன்படுத்தி தேவையான அளவு நீரை மட்டுமே செடிகளுக்கு அளிக்கிறார்கள். இது எல்லாமே சென்ஸார் கொண்டு, ரிமோட்டாக நடக்கும் விஷயம்...!

ஆக, குப்பைகளை கொண்டும், அழுக்கு தண்ணீர் கொண்டும், டெக்னாலஜியை கொண்டும் சாலையை பசுமையாக்குகிறார்கள்.

இதன் பயன்கள் குறித்து, பல வெப்சைட்டுகள் பலவிதமான தரவுகளை தருகின்றன. அதனால் நான் அதற்குள் போகவில்லை. நிறைய கார்பன்டைஆக்ஸைடு, தூசுகளை குறைத்து, ஆக்ஸிஜன் தருகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவுதான் சேதி.

ஆனால், கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இதை மொத்தமும் செய்வது அரசாங்கம் இல்லை... பிரைவேட் கம்பெனிகள். (கொஞ்சம் பணம் அரசாங்கமும் தருவதாக சொல்கிறார்கள்).

நம் டெல்லியில் இதே போல செய்யவேண்டும் என்று ஆம்ஆத்மி முன்பு  யோசித்தது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நம் நாட்டிலும் இது போல செய்யலாமே...!

Friday, 29 June 2018

ட்ரம்ப் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு


இந்த விஷயத்தில் எனக்கு அமெரிக்கர்களை ரொம்பவும் பிடித்திருக்கிறது... அவர்கள் நீதித்துறை மேல் மதிப்பு கூடுகிறது.

அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் பிடிக்கவில்லையென்றால் தங்கள் எதிர்ப்பை வலுவாகவே பதிவு செய்கிறார்கள். முன்பு ஜூலி பிரிஸ்க்மேன் என்னும் பெண்மணி ட்ரம்புக்கே நடுவிரலை உயர்த்தி காட்டியிருந்தார். ட்ரம்புக்கே அந்த கதியென்றால், மற்றவர்கள் நிலையை கேட்கவேண்டுமா?

அமெரிக்க எல்லையில் அகதிகளையும், அவர்கள் குழந்தைகளையும் பிரிப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் ட்ரம்ப் மேல் செம கடுப்பில் இருக்கின்றனர்.

போனவாரம் வெள்ளை மாளிகை பிரஸ் செக்ரடரி சாரா சேண்டர்ஸ் ஒரு சின்ன ரெஸ்டாரண்டில் குடும்பத்தோடு சாப்பிட போயிருக்கிறார். கடை ஓனர் அப்போது கடையில் இல்லை. சாரா குடும்பம் பாதி சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் கடைக்கு வந்த ஓனர் ஸ்டீஃபானி, கடை ஊழியர்களுடன் கலந்தாலோசித்து விட்டு, சாராவை ஓட்டலை விட்டு உடனே வெளியேற கூறி, பாதி சாப்பாட்டில் துரத்தி விட்டார்.

இந்த விஷயத்தில் சாராவை மட்டும் கட்டம் கட்டவில்லை... கிர்ஸ்ட்ஜென் நீல்சன், ஸ்டீஃபன் மில்லர் என்று லிஸ்ட் நீளுகிறது. பொதுவிடங்களில் இந்த அதிகாரிகளை கண்டால், மக்கள் கூச்சல் போட்டு கேலி (Boo) செய்கின்றனர். கிர்ஸ்ட்ஜென் நீல்சனை, ஜார்ஜ்டவுன் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்திலிருந்து வெளியேற சொல்லியிருக்கிறார்கள். நாளாக நாளாக எதிர்ப்பு அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனால், ட்ரம்புக்கும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. அவரது ஆதரவாளர்கள் சாரா சேண்டர்ஸை வெளியில் அனுப்பிய ரெஸ்டாரண்ட் முன்னால் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். பிரச்சனை வேண்டாமென்று ரெஸ்டாரண்டை வரும் 5ம் தேதி வரை மூடியிருக்கிறார்கள்.

ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினால் பரவாயில்லை... அமெரிக்க பிரஸிடென்டே தரை லோக்கல் லெவலுக்கு இறங்கி வந்து அந்த ரெஸ்டாரண்டை திட்டியிருக்கிறார். இந்தாளெல்லாம் ஒரு அதிபரு...! (ட்வீட் இமேஜ் பார்க்கவும்)

பலன் இருக்கிறதோ இல்லையோ, வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஸ்டீஃபானி..!

கொசுறு தகவல் – ட்ரம்ப் பதவிக்கு வந்த இந்த 466 நாட்கள்ள 3000 பொய்கள் சொல்லிட்டாராம்...!

Thursday, 28 June 2018

பங்களாதேஷிற்கு மின்சாரம் - ஆதானி ஜார்கண்ட் ஆலை


விதிமுறைகள் மாற்றம் குறித்து, நேற்று போட்ட பதிவுக்கு இலவச இணைப்பாக இன்னொரு பதிவு.

பங்களாதேஷின் மின்சார தேவைக்காக மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதானி குழுமம் அமைக்க பார்க்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது.  

ஜார்கண்ட் மாநில விதிமுறைகளின் படி ஜார்கண்ட் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 25% மின்சாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கே குறைந்த விலையில் விற்கவேண்டும்.

இதற்கான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பொன்றை காரணமாக காட்டி மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த மாறிய விதிமுறைகளின் பலன்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் கிடைக்காது... ஆதானிக்கு மட்டும்தான் கிடைக்கும். இதை CAG கண்டித்துள்ளார். கண்டிச்சுட்டு போயிக்கோ என்று டீலில் விட்டுவிட்டார்கள்.

இந்த மின்உற்பத்தி நிலையத்தை அமைக்க 13500 கோடி ரூபாய்கள் தேவைப்படுமாம். ஏற்கனவே ஆதானி பவர், தன்னுடைய ஈக்வடி போல 16 மடங்கிற்கு கடன் வாங்கியிருக்கிறது. இந்த முறை எந்த வங்கியோ?

இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறமிருந்தாலும், பங்களாதேஷிற்கும் இந்த டீலில் ஆதாயமில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் கேட்டால் பங்களாதேஷுக்கு மின்சார விலை நிர்ணயிக்கும் கூட்டத்தை அவசர அவசரமாக, முக்கிய அதிகாரிகள் கூட இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்கள். திட்டமிட்ட தேதிக்கு முன்கூட்டியே ஏன் அவசர மீட்டிங் நடத்தப்பட்டது...? காரணம் தெரியாது.

இந்த ஆலைக்கான கரி எங்கிருந்து வரும் என்பதும் புரியவில்லை... ஆஸ்திரேலியாவிலிருந்து கரி இறக்குமதி செய்து இந்த ஆலைக்கு உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆதானிக்கு இருக்கும் எதிர்ப்பையும், திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதையும் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். (https://perungadal.blogspot.com/2017/12/carmichael-coal-mine.html)

முகத்திலே கரியை பூசினாலும், ஆதானியின் ஆஸ்திரேலிய கனவுகள்  இன்னும் முடியவில்லை போல...!

Friday, 15 June 2018

Miss America

மிஸ் அமெரிக்கா போட்டிகள்… 1921லிருந்து கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நடந்து வரும் இந்த அழகி போட்டி ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்திக்கவிருக்கிறது… அடுத்த வருடம் நிகழ்விலிருந்து போட்டியாளர்கள் நீச்சலுடையில் ஊர்வலமாக வரும் பகுதி ரத்து செய்யப்படவிருக்கிறது.
மேலும், போட்டியாளர்கள் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் அழகி போட்டியில் பங்கு பெறலாம். மிஸ் அமெரிக்கா என்பது இனிமேல் வெறும் அழகிற்கான போட்டியாக இல்லாமல், திறமைக்கான போட்டியாக மாறப்போகிறது என்பதுதான் சேதி. .
மிஸ் அமெரிக்கா போட்டியில் நீச்சலுடைக்கு எதிர்ப்பு என்பது மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பெண்களை வெறும் போகப்பொருளாக பார்க்க தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு. அப்படியிருக்கும் நிலையில் ஏன் இந்த திடீர் மாற்றங்கள்?
கடந்த டிசம்பர் மாதம் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இந்த போட்டிகளை நடத்தும் மிஸ் அமெரிக்க ஆர்கனைசேஷன் என்னும் அமைப்பின் CEO சாம் ஹேஸ்கல் (Sam Haskell) என்பவர் 2014ம் ஆண்டு எழுதிய சில இமெயில்கள் வெளியாயின. அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவருடைய இமெயில்கள் அத்தனையும் சோதிக்கப்பட்டன. மிஸ் அமெரிக்கா போட்டிகளில் பங்கேற்ற பெண்களை குறித்து மிக மோசமான வார்த்தைகளில் ஹேஸ்கல் அந்த இமெயில்களில் விமர்சித்திருந்தார்.
முன்னாள் மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்றவர்களும் மற்றவர்களும் இதை கண்டு கொதித்தனர். விளைவு, சாம் ஹேஸ்கலின் பதவி உடனே பறி போயிற்று. கூடவே சேர்மன் மற்றும் COO ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த பதவிகளுக்கு பெண்களே பொறுப்பேற்றனர். இப்போது ஒன்பது பேர் கொண்ட போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஏழு பேர் பெண்கள். இவர்கள்தான் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்.
இந்த நீச்சலுடை ஊர்வலத்திற்கு எதிராக பல வருடங்களாக பெண்ணியவாதிகள் போராடினாலும் மாற்றம் இப்போதுதான் நடக்கிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.     
ஒன்று, அழகி போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டனர்.... வருடாவருடம் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைகிறது. இதற்காக ஒரு ஏஜென்ஸியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், போட்டியை வேறு முறையில் மாற்றினால் ஒழிய பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்பது புரிந்தது. ஆக இந்த மாற்றம் ஒரு வர்த்தக காரணம்.
இரண்டாவது காரணம், #MeToo போராட்டம். சென்ற அக்டோபரில் ஹார்வே வெயின்ஸ்டேன் (Harvey Weinstein)  என்னும் ஒரு படத்தயாரிப்பாளர் நடிகைகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உலகெங்கிலும் இருக்கும் பெண்கள், சோஷியல் மீடியாக்களில் #MeToo  என்னும் ஹேஷ்டேக் பதித்து தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்தனர். இது உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏதோ, முன்னேறாத சில நாடுகளில் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்ற பிம்பம் மறைந்து உலகத்தில் எல்லா நாடுகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அவஸ்தைகள் தெரியவந்தது. மிஸ் அமெரிக்காவின் மாற்றத்திற்கு இந்த #MeToo போராட்டமும் முக்கிய காரணம்.
அப்போ இனி அழகி போட்டிகளில் நீச்சலுடை கிடையாதா? அமெரிக்காவிலே இரண்டு அழகி போட்டிகள் நடக்கின்றன. ஒன்று, நாம் பார்த்த மிஸ் அமெரிக்கா… இன்னொன்று, Miss USA.  அந்த Miss USA  போட்டியில் நீச்சலுடை ஊர்வலத்திற்கு எந்த மாறுதலும் இல்லை. அதே போல மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளிலெல்லாம் எந்த மாறுதலும் கிடையாது.
வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஆரம்பமாகி உள்ளன. மாற்றங்கள் பரவுவதும், தொடர்வதும் மிஸ் அமெரிக்கா போட்டியின் வர்த்தக வெற்றியை பொறுத்தே அமையும்.

Thursday, 10 May 2018

India China Border Infrastructure


இந்தியாவையும் சீனாவையும் பொதுவாக ஹிமாலய மலைத்தொடர் பிரித்து வைத்திருக்கிறது. ஆனால், அப்படி மலைத்தொடர் பிரிக்காத இடங்களில் தரமான சாலை கட்டமைப்புகள் அவசியமாயிருக்கின்றன. சாலை கட்டமைப்புகள் இரண்டு காரணங்களுக்கு தேவைப்படுகின்றன. ஒன்று, ராணுவ பயன்பாட்டிற்கு. இன்னொன்று, குடிமக்கள் வந்து குடியேறவும், வசிக்கவும்.
இதற்கு முன்பெல்லாம், எல்லையில் மக்கள் நடமாட்டம் இருந்தால் பூச்சாண்டி பிடித்து போய் விடும் ரேஞ்சிலேயே இந்தியா யோசித்து வந்தது. எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 50-100 கிலோமீட்டருக்கு பெரிதாக கட்டமைப்புகள் இருக்காது. கட்டமைப்புகள் இல்லாததால் மக்களும் இல்லை.... மக்கள் இல்லாததால் கட்டமைப்புகளும் இல்லை.
UPA ஆட்சிகாலத்தில்தான் கொஞ்சம் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். மக்கள் அதிகமாக வந்து குடியேறிவிட்டால், அந்த இடங்களுக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய மாட்டார்கள், அந்த இடத்திற்கு சீனா உரிமை கோர முடியாது என்று இந்தியா யோசித்தது. இதற்காக தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வேலைகள் ஒன்றும் வேகமாக நடக்கவில்லை.
எல்லையில் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கமுடியாததற்கு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், இயற்கை.... இந்திய சீன எல்லை பல இடங்களில் கடினமான புவியியல் அமைப்பும், காலநிலையும் கொண்டது. வருடத்தின் எல்லா காலங்களிலும் அங்கே பணியாற்ற முடியாது. மிக உயர்ந்த மலை பிரதேசங்களுக்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்வதே கடினமான காரியம்.
செயற்கை காரணமும் உண்டு.... நம் எல்லையோர சாலைகளை அமைப்பதும், பராமரிப்பதும் Border Road Organisation எனப்படும் ராணுவ அமைச்சகத்தின் கீழ்வரும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பு கொஞ்ச...ம் மெது...வாக செயல்படும் அரசாங்க அமைப்பு. பல முறை அரசாங்கம் கண்டித்தும் இந்த அமைப்பு சிவப்பு நாடா நடைமுறைகளாலும், பல காரணங்களாலும் மெதுவாகத்தான் செயல்பட்டது.
2013-ல் சீன வீரர்கள் அக்சாய் சின் பகுதியில் எல்லை கடந்து வந்தனர். தற்போதைய டோக்லாம் போல அப்போதும் கொஞ்சம் பிரச்சனை ஆகி, பின்னர் சமாதானம் எட்டப்பட்டது. இதையடுத்து எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பு அமைக்கும் பணியை தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கம் போல இந்த முறையும் தாமதமானது.
சென்ற வருட டோக்லாம் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் எல்லையோர கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிவப்பு நாடா பிரச்சனைகளை குறைப்பதற்காக ஏற்கனவே சுற்றுசூழல் விதிகள் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் இரண்டு முக்கியமான முடிவுகளை மோடி அரசு எடுத்தது. முதல் முடிவு - சில சாலைகள் அமைக்கும் பணிகளை BRO-இடமிருந்து எடுத்து வேறு அரசு நிறுவனங்களுக்கு கொடுத்தது. (இதை 2014-லிருந்தே மோடி அரசு செய்து வருகிறது) இரண்டு, BRO-ற்கு அதிக அதிகாரங்கள் கொடுத்து சில அப்ரூவல் விதிமுறைகளை மாற்றியமைத்தது. உண்மையிலேயே பாராட்டவேண்டிய முடிவுகள்தான்.
இப்போது அரசு எல்லையோர கட்டமைப்பு திட்டத்தை முடுக்கி விட்டுள்ளது... BRO-விற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது..... நிதி ஒதுக்கியாகிவிட்டது. ஆனால், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது...!
யாரிடமிருந்து எதிர்ப்பு... சீனா? உள்ளூர் மக்கள்? கிடையாது... இந்திய ராணுவம்தான் எதிர்க்கிறது..! விசித்திரமாக இருக்கிறதல்லவா?
அருணாசல பிரதேசத்தில் டவாங் – விஜோய் நகர் இடையிலான 1500-2000 கி.மீ சாலை திட்டத்தை எடுத்து கொள்ளுங்கள். எல்லையை ஒட்டியே இந்த சாலை அமைவதாக திட்டம். இதற்காக அரசு 30000-40000 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது. நம் ராணுவத்தின் கவலை என்னவென்றால், அருமையான சாலைகளை அமைத்த பின்னர், சீனாவுடன் சண்டை வந்து நாம் தோற்று போனால், இந்த சாலைகளின் வழியே சீன துருப்புகள் வெகு எளிதாக ஊடுருவி விடும். நம்முடைய சாலைகளே நமக்கு எதிரியாகி விடும். அப்படி சாலை கட்டமைப்பு இல்லாமல் இருந்தால் சீன துருப்புகளால் இந்த கடினமான மலைகளில் ஊடுருவ முடியாது.
இது எப்படி இருக்கு? இத்தனைக்கும் சீனாவின் எல்லைப்புறம் பக்கா கட்டமைப்புகளோடு இருக்கிறது. ஒரு வேளை இந்தியா சண்டையில் வென்றால் சீனாவிற்குள்ளே வெகு எளிதாக ஊடுருவலாம், அல்லவா? ஏன் அப்படி யோசிக்கவில்லை?
காரணம், சீனாவின் ஆற்றல் அப்படி..! எல்லையிலே சாலை போடுவது என்பது வெறுமனே தாரோ, கான்கிரீட்டோ கொட்டும் சமாசாரமல்ல.... நம் ராணுவ பலத்தோடு சம்பந்தப்பட்டது. ராணுவ பலத்தையும் அதிகரித்து கொண்டு, சாலையும் போட வேண்டும். அதுதான் சிக்கல்...!
தற்போது இருக்கும் நிலவரப்படி அனைத்து பணிகளும் 2022-க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால் சீனா தனது ராணுவ அமைப்பை சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கிறது. 2020-க்குள் அந்த பணியை முடிக்க போகிறது. இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து எல்லை பிரச்சனைகளையும் தீவிரமாக கவனிக்க (!) போவதாக சொல்லியிருக்கிறது. சீன ராணுவமும் அதிவேகமாக நவீனமாகி கொண்டிருக்கிறது.
இந்த சவாலை இந்தியாவால் சமாளிக்கமுடியுமா? பார்க்கலாம், என்ன நடக்க போகிறதென்று...! தற்சமயம் இந்திய-சீன எல்லை, ஒரு அமைதியான எல்லை.... கடந்த பல வருடங்களாக ஒரு புல்லட் கூட சுடப்படாத எல்லை..! அமைதி தொடரும் என நம்புவோம்...!

Saturday, 28 April 2018

மோடி - ஷி சந்திப்பு


மோடி - ஷி இடையிலான சந்திப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், ஆப்கானிஸ்தானை குறித்தது. ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை இந்தியாவும், சீனாவும் ஒன்றாக செயல்படுத்துவது குறித்து ஆராயப்போகிறார்கள்.



ஆயிரம்தான் சொன்னாலும், அரசியலில் சீனர்கள் வெகு கில்லாடிகள்தான்.... பாராட்டவேண்டும். இனி வரும் காலத்தில் ஆப்கானில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கப்போகிறது. அமெரிக்காவின் செல்வாக்கு தேயப்போகிறது.

இந்தியாவிற்கு என்ன கிடைத்தது? வரும் நாட்கள்தான் சொல்லவேண்டும்.

Friday, 23 March 2018

அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையும் தடையற்ற வர்த்தகமும்


ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இருக்கும் இடைவெளியை Balance of Trade என்பார்கள். ஏற்றுமதி அதிகமாக இருந்தால் வர்த்தக மிகை/ உபரி. உபரியாக இருந்தால், பணம் உள்ளே வருகிறது என்று அர்த்தம், சந்தோஷம். இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறை. பற்றாக்குறை என்றால் பணம் வெளியே போகிறது, நஷ்டம்..!

பொதுவாக, ஒவ்வொரு நாட்டோடும் வர்த்தகம் பற்றாக்குறையாக இருக்கிறதா, உபரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பார்கள். அதற்கேற்றார் போல வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.


அமெரிக்காவின் balance of payment பல வருடங்களாக பற்றாக்குறைதான். சீனா எப்போது உலக வர்த்தக நிறுவனத்தில் நுழைந்ததோ அதிலிருந்து சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையும் ஏறி வருகிறது. அமெரிக்காவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை 566 பில்லியன் டாலர்கள். அதில் சீனாவுடனான பற்றாக்குறை மட்டுமே 375 பில்லியன் டாலர்கள்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அளித்த ஒரு முக்கிய வாக்குறுதி வர்த்தக பற்றாக்குறையை முடிந்தவரை சரிசெய்வது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக இப்போது சீனப்பொருட்கள் மீது வரி விதிக்க ட்ரம்ப் தீர்மாணித்திருக்கிறார். 50 - 60 பில்லியன் டாலர் அளவிற்கு சீன இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா வரிவிதிக்கப்போகிறது. பதிலுக்கு சீனா அமெரிக்க பொருட்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவிற்கு வரிவிதிக்கப்போகிறது.

இதன் மூலம் உலகளாவிய வரிச்சண்டை மூளும், இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிப்படையும் என்ற அச்சம் நிலவுவதால் பங்குச்சந்தைகள் வீழ்ந்தன.

அமெரிக்கா இத்தனை நாள் ஊருக்கு உபதேசம் செய்த Free market என்பது மாயையா? இதே மாதிரிதான் தன் நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றதும் பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனை விட்டு விலக தீர்மாணித்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனது மார்க்கெட்டாக பயன்படுத்தவே தடையற்ற மார்க்கெட் தத்துவங்களை அமெரிக்கா உபயோகித்தது. இப்போது தன் நாட்டின் பொருளாதாரம் தடுமாறினால், தத்துவங்களை தூக்கிப்போட்டுவிடுகிறது.

Tuesday, 6 March 2018

ஷி ஜின்பிங்


சீன அரசியலமைப்பு சட்டப்படி, யாரும் இரண்டு முறைகளுக்கு மேல் பிரசிடென்ட் பதவியை வகிக்க முடியாது. தற்போதைய பிரசிடென்ட் ஷி ஜின்பிங் அந்த சட்டவிதியை நீக்க முயற்சிக்கிறார். ஷி-க்கு இன்னும் ஐந்து வருட காலம் பதவி இருக்கிறது. அதற்கு முன்பே, அவர் தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள பார்க்கிறார்.

ஷி நிரந்தர அதிபராவது சீனா சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. ஏற்கனவே சீனா அண்டைநாடுகளுடன் வம்பு சண்டைக்கு போய் கொண்டிருக்கிறது. ஷி ஆட்சியில் தொடர்ந்தால் இந்த சண்டைகள் இன்னும் அதிகமாகும். இந்தியாவிற்கு தலைவலியும் அதிகமாகும். உலக அரசியலில் இது முக்கியமான விஷயம். இது குறித்து பார்க்கும் முன்னர், இந்த இரண்டு முறை அதிபர் விதி ஏன் வந்தது என்பதை குறித்தும் பார்க்கவேண்டும்.

சீனாவில் முன்பு மாவோ என்று ஒரு தலைவர் இருந்தார். கலாசார புரட்சி என்று கிறுக்குத்தனம் செய்து சீனாவை ஒரு வழி பண்ணினார். அவர் ஆட்சியில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்தான் டெங் ஷாஓ பெங். மாவோவின் மறைவுக்கு பிறகு டெங் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவுயர்ந்த (Paramount leader) தலைவரானார்.

மாவோ கீழே சீனா பட்ட கஷ்டத்தை நினைத்த டெங், நாட்டின் நன்மைக்காக சில மாறுதல்களை கொண்டுவந்தார். அதன்படி நாடு சர்வாதிகாரி ஒருவரின் கைப்பிடிக்குள் இனிமேல் போகக்கூடாது என்று முடிவு செய்து மூன்று பதவிகளுக்கு மொத்த அதிகாரத்தையும் பிரித்து அளித்தார். ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர். இரண்டு, பிரீமியர் (நம்ம ஊர் பிரதம மந்திரி போன்ற பதவி), மூன்று பிரசிடென்ட். உண்மையில் சீனாவின் அரசியலமைப்பு சட்டம் பிரசிடென்ட் பதவி பெரிதா, பிரீமியர் பதவி பெரிதா என்பது குறித்தெல்லாம் பேசவில்லை. இன்னும் கேட்டால் சீன ராணுவமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆக, யார் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரோ அவர்கள்தான் உண்மையில் ‘பாஸ்’.

டெங் இன்னொரு மரபு மாறுதலையும் செய்தார். அதாவது, கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் பதவி பறிபோனவர்களை, ரிட்டயர் ஆனவர்களை மன்னித்து விடுவது. அவர்கள் மேல் ஏதாவது குற்றச்சாட்டு போட்டு உள்ளே தள்ளுவது, மொத்த குடும்பத்தையும் சித்ரவதை செய்வது போன்ற பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் என்பது சர்வ சாதாரணம். ஆனால், டெங்கிற்கு பிறகு யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அளவோடு ஊழல், கட்சிக்கு கட்டுப்படுவது, உயிருக்கு உத்தரவாதம் – இதுதான் டெங் வகுத்த கொள்கை. இதெல்லாம் டெங் செய்த பெரிய சீர்திருத்தங்கள்.

டெங் வகுத்த கொள்கைப்படிதான் சீனா 20 வருடங்களாக நடந்து வந்தது. 2013ல் ஷி ஜின்பிங் வந்த பிறகு அதிரடி மாறுதல்கள் ஆரம்பித்தன. ஷி ஜின்பெங்கின் வலது கை, துணை அதிபரான வாங் சீஷான். ஊழலை அறவே ஒழிப்பேன் என்று முழங்கிய ஷி, வாங்கின் துணை கொண்டு தனக்கு போட்டியாக கருதப்பட்ட அரசியல் எதிரிகள் அத்தனை பேர் மீதும் ஏதாவது ஒரு ஊழல் வழக்கு தொடுத்து ஒழித்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஊழல் மிகுந்த கட்சியாதலால் இதை மிக எளிதாக செய்ய முடிந்தது.

சீனாவிற்கு புது யுகம் (New Era) பிறக்கிறது என்று முழக்கமிட்டார். சோஷலிஸம் சார்ந்த தன் கொள்கைகளே சீனாவின் புது யுகத்திற்கான கொள்கைகள் என்றார். சீனாவில் ஊழல் இருக்காது, உலகிலேயே வலிமை வாய்ந்த நாடாக சீனா உருவாகும் என்பதெல்லாம் அவரது உறுதிமொழிகள்.


இப்போது அவர் அரசிலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள முயல்கிறார். அதோடு, தன் வலது கையான வாங் சீஷானை நிரந்தர துணை அதிபராக்கவும் முயல்கிறார்.

ஷி ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர்,. மத்திய ராணுவ கமிஷனின் தலைவர். இது தவிர நாட்டை வழிநடத்தும் கட்சியின் பல்வேறு கமிட்டிகளிலும் இருக்கிறார். அவர் உத்தரவின்றி யாரும் சுண்டு விரலையும் அசைக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான் அவர் நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வர பார்க்கிறார்.

சீனாவிலும் ஒரு ஒப்புக்கு சப்பாணி பார்லிமென்ட் உண்டு. கட்சி சொல்வதை ஒப்புக்கொண்டு, தீர்மானங்களுக்கு சமர்த்தாக ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆக, ஷி நிரந்தர அதிபராவதை தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஷி தொடர்ந்து அதிபராக இருக்கப்போவது கட்சியினருக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது. அதிபரை நேரடியாக விமர்சித்தால் ஜெயில் நிச்சயம். (ஜெயிலுக்கு போனால் உடலுறுப்புகளை அகற்றி விற்றுவிடுவார்கள் என்பது வேறு கதை. ஆக, ஜெயிலுக்கு போவது என்பது அந்த ஊரில் ஒரு பயங்கரமான விஷயம்). அதற்கு பதிலாக, ஒரு கரடி (Winnie the pooh) கேரக்டரை வைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

ஷி நிரந்தர அதிபரானால் முதலில் அடிபட போவது பிரீமியரான லீகூஹ் சாங்-காகத்தான் இருக்கும். இவருக்கும் ஷி – க்கும் எப்போதும் ஒத்து போகாது. அவருக்கு கூடிய சீக்கிரம் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பொருளாதாரம் அவ்வளவு வலிமையாக இல்லை. ஷி-யின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப உற்பத்தி குறைக்கப்பட்டது (supply side reforms). ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால்(!?) ஆடம்பர பொருள்களின் நுகர்வு குறைந்து விட்டது. அதே சமயம் ஊழலை தடுக்கும் விதமாக நிரந்தர மாற்றமும் வரவில்லை. கார்ப்பரேட்களின் கடன் சீனாவின் ஜிடிபியில் 130 சதவிகிதம். அரசு கடன் 70 சதவிகிதம்.

பொருளாதாரம், வெளியுறவு இந்த நிலைமையில் இருக்கும் போது ஷி நிரந்தர அதிபராக துடிக்கிறார். சீனாவின் மாற்றங்கள் இந்தியாவுக்கு சந்தோஷமாக அமைய வாய்ப்புகள் குறைவு…. இந்தியாவிற்கு நீடித்த தலைவலி நிச்சயம்.

Friday, 23 February 2018

ஆசிரியர்கள் கையில் துப்பாக்கி?


அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் நாம் அனைவரும் அறிந்ததே…! கடந்த 14ம் தேதி ஃப்ளாரிடாவில் உள்ள MSD High School என்னும் பள்ளியில் ஜேக்கப் க்ரூஸ் என்னும் 19 வயது இளைஞன் (சிறுவன்?) நுழைந்து 17 மாணவர்களை சுட்டு தள்ளினான்.

க்ரூஸ் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன்…. கறுப்பர்களை காரணமே இல்லாமல் வெறுப்பவன்…. துப்பாக்கிகளை நேசிப்பவன்….. சமூக வலைத்தளங்களில் அவனது தீவிரவாத கருத்துக்களுக்காக அரசாங்கத்தின் பார்வையிலே ஏற்கனவே இருப்பவன். அப்படியிருந்தும் எப்படியோ இந்த துப்பாக்கி சூட்டை நிகழ்த்திவிட்டான்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இந்த முறை துப்பாக்கிகளுக்கு எதிராக போராடுபவர்கள் க்ரூஸின் தாக்குதலிலிருந்து தப்பித்த மாணவர்கள். “Never Again MSD” என்னும் இயக்கத்தை ஆரம்பித்து வலுவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க ரஷ்யாவும் களத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்க மக்களை இரண்டு குரூப்களாக பிரிக்க வலைதளங்களில் Automated BOT-கள் மூலமாக கருத்துகளை விதைத்து விடுகிறது. இது மூலமாக அமெரிக்க மக்களிடையே வெறுப்பை வளர்த்து வருகிறது. (இதே போல நெட் நியூட்ராலிட்டி விவாதங்களிலும் BOT-கள் மூலமாக கருத்துகளை பரவ செய்தனர். டெக்னாலஜி என்பது எப்போதுமே இருமுனை கத்திதான்…. அது வேறு கதை)

எப்போதெல்லாம் துப்பாக்கிகளுக்கு எதிரான கருத்து ஒலிக்கிறதோ, அப்போதெல்லாம் NRA (National Rifle Association) தன் லாபியை தொடங்கிவிடும். அதிபர் ட்ரம்போ துப்பாக்கி கலாச்சாரத்தை ஆதரிப்பவர். அவர் தேர்தல் பிரசாரத்திற்காக NRA மொத்தம் 30 மில்லியன் டாலர்கள் நன்கொடை அளித்தது.


அப்படிப்பட்ட ட்ரம்ப் வேறு என்ன முடிவெடுப்பார்…? பள்ளி குழந்தைகளை துப்பாக்கி சூடுகளிலிருந்து காப்பாற்ற, ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்கலாம் என்று திருவாய் மலர்ந்துள்ளார். நாளை ஏதாவது ஆசிரியரே மனநிலை தவறிப்போய் குழந்தைகளை கொன்றால்…? குழந்தைகளிடமும் துப்பாக்கி கொடுக்கலாம் என்பார். இவரையெல்லாம் அதிபராக வைத்துக்கொண்டு…?

மக்களுக்கு எதற்கு துப்பாக்கி? அமெரிக்கர்களுக்கு துப்பாக்கி ஒரு போதையாக உள்ளது…. கண்டிப்பாக மனநிலை சிகிச்சை தேவைப்படுகிறது.

Wednesday, 21 February 2018

Guilt Tax


நம்ம ஊரில் நியாயமாக வரி போட்டாலே, அதை கட்டுவதற்கு மூக்கால் அழுபவர்கள் உண்டு. ஆனால், லண்டனிலே அதிக வரி கட்டுவதற்கும் மக்கள் தயாராக உள்ளனர்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பணக்கார ஏரியா. அப்படிப்பட்ட ஏரியாவிலும் ஏழைகள் உண்டு. சமீபத்தில் கூட வீடில்லாமல் தெருவில் படுத்திருந்த ஒருவர் இறந்து போய்விட்டார். (இதையெல்லாம் அவர்கள் ஊரில் ரொம்ப சீரியஸாக எடுத்து கொள்கிறார்கள்)

இப்படி தங்கள் ஏரியாவில் இருக்கும் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயருவதற்காக, வெஸ்ட்மின்ஸ்டரில் இருக்கும் பணக்காரர்கள் City Council க்கு அதிக வரி கட்ட தாங்களாகவே முன்வந்திருக்கிறார்கள். அதாவது, தாங்கள் மட்டும் பணக்கார வாழ்க்கையை வாழ, மற்றவர்கள் ஏழ்மையில் வாடுவதை கண்டு வருந்தி, அதிக வரி கட்ட தயாராக இருக்கிறார்கள். அதனால், இதை guilt tax, அதாவது, குற்றவுணர்ச்சி வரி என்று அழைக்கிறார்கள்.

வெஸ்ட்மின்ஸ்டர் கவுன்சில் இதை சமூக நன்கொடை (Community Contribution) என்றழைக்கிறது. 10 மில்லியன் பவுண்டு மதிப்பிற்கு மேல் சொத்து இருந்தால், அவர்களை நிதியுதவி செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த நிதியுதவி செய்யவேண்டியது கட்டாயமில்லை என்றாலும், 55% பணக்காரர்கள் புதிய வரிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

நல்லார் உளரேல் அவர் பொருட்டு மழை...!

Tuesday, 20 February 2018

டிரம்பும், அவர் பிஸினஸும்


பொதுவாக அமெரிக்க அதிபர்கள், தாங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தங்கள் சொத்துக்கள், வியாபாரங்களை எல்லாம் ஒரு Blind Trust – ன் கட்டுப்பாட்டிற்கு மாற்றி விடுவார்கள்.

அது என்ன பிளைன்ட் டிரஸ்ட்? பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, வியாபாரத்தில் என்ன நடக்கிறது போன்ற விவரங்களை சொத்தின் உரிமையாளருக்கு தெரிவிக்க மாட்டார்கள். அதுதான் பிளைன்ட் டிரஸ்ட்.

இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தனக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கவும் முடியாது…. அவர் தனக்கு சாதகமாக பொருளாதார முடிவுகள் எடுக்கிறார் என்று யாரும் குற்றம் சாட்டவும் முடியாது.

இந்த வழக்கத்தை முதலில் ஒபாமா உடைத்தார்…. தன்னுடைய பணத்தை எல்லாம் treasury bond – களில் முதலீடு செய்தார். அதனால், அவருக்கு பிளைன்ட் டிரஸ்ட் அமைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதன் மூலமாக அதிபரின் சொத்து மதிப்பு என்னவென்று மக்களுக்கு நேரடியாக தெரியும் என்று காரணமும் கூறப்பட்டது.

இப்போது, டிரம்ப் விஷயத்துக்கு வருவோம்….

டிரம்ப் ஆர்கனைஸேஷன் என்பது மிகப்பெரிய நிறுவனம்…. 1923ல் டிரம்பின் பாட்டியும், அப்பாவும் ஆரம்பித்த நிறுவனம்… 70களில் இருந்து டிரம்ப் நிர்வாகம் செய்து வருகிறார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் டிரம்ப் தன் மகன்களை டிரஸ்டியாக போட்டு, தன் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டார். ஆனால், அது பிளைன்ட் டிரஸ்ட் கிடையாது.



அமெரிக்க அதிபர் பிளைன்ட் டிரஸ்ட்தான் உருவாக்க வேண்டுமென்று சட்டம் எதுவும் இல்லை…. அது ஒரு மரபுதான். அந்த மரபை ஒபாமா மாற்றியது, டிரம்பிற்கு சாதகமாகிவிட்டது.

அதிபர், தன் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு பாலிஸிகளை தீர்மாணிக்கிறார் என்ற சந்தேகம் அமெரிக்காவில் உண்டு. இது தொடர்பான வழக்குகளை சமீபத்தில் கோர்ட் தள்ளுபடி செய்து, அமெரிக்க காங்கிரஸ்தான் இதை பற்றியெல்லாம் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.

இப்படியெல்லாம் பிரச்சனை வரக்கூடாது என்றுதான் நம்ம ஊரிலே பினாமி வைத்து கொள்வது…!

Friday, 19 January 2018

Cape Town - Zero Day


கேப்டவுன் – தென்னாபிரிக்காவின் முக்கியமான நகரம். ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் கேப்டவுனுக்கு ஸீரோ டே வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதென்ன ஸீரோ டே என்று கேட்கிறீர்களா? குழாய்களில் சொட்டு தண்ணீர் கூட வராமல் போகும் நாள்தான் ஸீரோ டே.
ஆமாம், டூரிஸத்திற்கு பேர் போன இந்த நகரம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் மாட்டி கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக மழை சரியில்லை. தீவாட்டர்ஸ்க்ளூஃப் – கேப்டவுன் பகுதிக்கு தண்ணீர் தரும் பெரிய அணையானது வரண்டு போய் காணப்படுகிறது (படத்தை பாருங்கள்). மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தாலும், நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
Theewaterskloof Dam

பிரச்சனைக்கு காரணம் மூன்று – முதல் காரணம், க்ளோபல் வார்மிங். பருவ மழை தள்ளி போகிறது, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் தேவை இல்லாத இடங்களில் மழை பெய்கிறது, குறைவாக மழை பெய்யும் ஆண்டுகள் குறைந்த இடைவெளிகளில் வருகிறது (interval between below average rainfall years is decreasing). இதெல்லாவற்றிற்கும் க்ளோபல் வார்மிங் காரணம் என்கிறார்கள் சுற்றுசூழல் ஆய்வாளர்கள். எல் நினோவையும் சிலர் காரணமாக கூறுகின்றனர்.
இரண்டாவது காரணம், மக்கள் தொகை. கடந்த 2 பத்தாண்டுகளில் மக்கள்தொகை 79% (2018ல் 43 லட்சம் இருக்கும் என்று கணக்கு) அதிகமாகிவிட்டது. ஆனால், தண்ணீர் சேமிப்பு 15% தான் அதிகமானது.
மூன்றாவது, அரசியல். கேப்டவுன் மாகாணம் மட்டும் எதிர்கட்சியால் ஆளப்படுகிறது. மத்திய அரசு விவசாயத்திற்கு நிறைய தண்ணீரை திருப்பி விட்டுவிட்டதாக கூறுகின்றனர்.
சரி பிரச்சனையை எப்படி சமாளிப்பது? தண்ணீர் சிக்கனம், கடல் நீரை குடிநீராக்குவது, bore போட்டு தண்ணீர் எடுப்பது. ஏற்கனவே மக்கள் அதிகளவில் சிக்கனமாகத்தான் இருக்கிறார்கள். நீச்சல் குளங்களை மூடிவிட்டனர். சுற்றுலா பயணிகளையும் சிக்கனமாக இருக்க சொல்லி வலியுறுத்துகிறார்கள். முடிந்த வரை குளிக்க வேண்டாம். குளித்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஷவர் உபயோகிக்க வேண்டாம். குழாயை திறந்து வைத்து கொண்டு பல் தேய்க்காதீர்கள். டாய்லெட் ஃப்ளஷ் பார்த்து உபயோகியுங்கள்.... இன்னும் பல அறிவுரைகள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டமெல்லாம் ரொம்ப மெதுவாக நடக்கிறது. அரசாங்க திட்டங்களில் ஏற்படும் தாமதம்தான் காரணம். அரசு நிர்வாகம் வேகமாகயில்லை.
தண்ணீர் மேலாண்மை செலவு அதிகரித்திருப்பதால், கேப் டவுன் மேயர் வறட்சி வரி விதிக்க திட்டம் போட்டுள்ளார். அதாவது, சொத்து மதிப்பிற்கு ஏற்றார்போல வரி..! இதற்கும் எதிர்ப்பு வந்துள்ளது. முதலில் இப்படியெல்லாம் வரி போட அரசியலமைப்பு சட்டத்திலேயே இடமில்லையாம். அதற்கு பதிலாக தண்ணீருக்கு அதிக கட்டணம் விதிக்க சொல்கிறார்கள். ஆனால், அப்படி தண்ணீருக்கு அதிக கட்டணம் விதித்தால் பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் அதிக வரி செலுத்த வேண்டி வரும். சிக்கல்தான்....
கேப்டவுனின் இந்த பிரச்சனை தற்காலிகமானதல்ல என்று சுற்றுசூழல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வறட்சி இன்னும் அதிகரிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள். இயற்கை வளங்களுக்கு ஏற்ப ஒரு நகரத்தில் இத்தனை பேர்தான் வசிக்க முடியும் என்று சொல்வது ஒரு நல்ல தீர்வாக இருக்குமா?

Thursday, 21 December 2017

Jerusalem Issue - Trump's Mistake


ஜெருசலம் விஷயத்தில் அமெரிக்கா தவறுக்கு மேல தவறு செய்வதாக தோன்றுகிறது.... ஐக்கிய நாடுகள் பொது சபையில் தங்களுக்கு எதிராக வோட்டு போடும் நாடுகளுக்கு நிதியுதவி செய்ய போவதில்லை என்று மிரட்டியுள்ளது.

ஏற்கனவே செக்யூரிட்டி கவுன்சிலில் அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அமெரிக்காவின் முடிவு சட்டவிரோதம் என்று மற்ற நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

கூட்டாளிகளை தயார் படுத்தி கொள்ளாமல் அமெரிக்கா தன்னிச்சையாக ஜெருசலம் குறித்து அறிவித்ததே தவறு. ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா, ஈரான், சைனா – ஒருவர் கூட ஆதரிக்கவில்லை. யாருமே ஆதரிக்காத பட்சத்தில் ஒதுங்குவதுதான் நல்லது.... 

அனுபவமில்லாத ட்ரம்ப் இன்னும் என்னென்ன செய்ய போகிறாரோ..?

Friday, 15 December 2017

Choco Pie-யும் ஜனநாயகமும்


வடகொரியாவில் இருக்கும் மக்களுக்கு தொழில் வாய்ப்பளிக்கவும், அதே சமயம் தங்கள் நாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கவும், தென்கொரியா கே ஸாங் என்னும் இடத்திலே ஒரு தொழிற்பூங்காவை அமைத்தது. தன் நாட்டுக்குள் தென்கொரியா தொழிற்பூங்கா அமைக்க வடகொரியா எப்படி ஒப்புக்கொண்டது...? ஏதோ ஒரு விதத்தில் காசு வந்தால் சரி என்பதே காரணம்... வடகொரியாவின் பொருளாதாரம் அப்படி படுத்து கிடக்கிறது.
அவ்வபோது வடகொரியா இந்த தொழிற்பூங்காவை மூடினாலும் ஏதோ ஒரு விதத்தில் 124 தென்கொரிய கம்பெனிகள் இங்கு தம் பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. அதில் ஒரு கம்பெனி தன் ஊழியர்களை ஊக்கப்படுத்த சாக்கோ பை எனப்படும் இனிப்பு தின்பண்டத்தை தந்தது.
தென்கொரியர்களுக்கு சாக்கோ பை 70களில் இருந்து கிடைக்கும் ஒரு சாதாரண தின்பண்டம். ஆனால் வடகொரியர்கள் 2004ல்தான் முதன்முறையாக அதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சாக்கோபை என்பது வெறும் தின்பண்டமல்ல... தென்கொரியாவின் சுபிட்சத்தின் அடையாளம்.... தென்கொரியர்கள் நம்மை விட மோசமாக வாழ்கிறார்கள் என்ற அரசாங்க பிரச்சாரத்தை உடைத்த ஒரு ஆதாரம். தென்கொரியா உண்மையிலேயே வளமாக இருக்கிறது என்பதை வடகொரியர்கள் உணர்ந்தனர்.
அப்படி ஒரு இனிப்பை இது வரை சுவைத்திராத வட கொரிய தொழிலாளிகள் அதை சுவைத்து மகிழ்ந்தனர். ஓவர் டைம் செய்தால் அதிக சாக்கோ பை.... தின்பண்டத்திற்கு ஆசைப்பட்ட தொழிலாளர்கள் தென்கொரிய கம்பெனிக்கு அதிக உழைப்பை கொட்டினர்.
தொழிலாளர்கள் தாங்கள் சாக்கோ பையை சுவைத்ததோடு மட்டுமில்லாமல், கள்ளமார்கெட்டிலும் விற்றனர். இதையறிந்த வட கொரிய அரசு தொழிலாளர்களுக்கு சாக்கோ பை தர தடைவிதித்ததும், தாங்களே சாக்கோ பை உற்பத்தி செய்ய முயன்று தோற்றதும் வேறு கதை.
இப்போது மெயின் கதைக்கு வருவோம். போன மாதம், ஓஹ்-சுங்-சங் (Oh Chung Sung) என்னும் வடகொரிய ராணுவ வீரர் தென்கொரியாவிற்கு தப்பி செல்ல திட்டம் தீட்டினார். அவர் தப்பித்து வந்த ஜீப் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பள்ளத்திலே மாட்டிக்கொண்டது. வடகொரிய வீரர்கள் அவரை நோக்கி 40 முறை சுட்டனர். அதில் 5 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது. தன் மேல் இலை குப்பைகளை போட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்து உயிர் தப்பினார் நமது ஹீரோ.
தென்கொரிய ராணுவம் தெர்மல் சென்ஸார்கள் உதவி கொண்டு அவரை கண்டுபிடித்து காப்பாற்றினர். குண்டுகளை எடுக்க அவருக்கு ஆபரேஷன் செய்தபோதுதான், அவரது வயிற்றில் பெரிது பெரிதாக ஏராளமான புழுக்கள் இருப்பதை அறிந்தனர். ஓஹ்-வுடைய நிலைமையை கருத்தில் கொண்ட டாக்டர்கள் ஆபரேஷனுக்கு இடையிலே அந்த புழுக்களை அவசரவசரமாக வெளியே எடுத்தனர்.
ஓஹ் வயிற்றில் அவ்வளவு புழுக்கள் எப்படி வந்தது? வடகொரியாவில் பலரது வயிற்றில் இப்படித்தான் புழுக்கள் இருக்கிறது என்கிறார்கள். காரணம், 2014ல் சர்வாதிகாரி கிம் போட்ட முட்டாள்தனமான உத்தரவு. பயிர்கள் நன்றாக விளைய மனித கழிவை போட சொன்னார். (உரம் வாங்க காசு இருந்திருக்காது என்று நினைக்கிறேன்) வேறு வழியில்லாமல் விவசாயிகளும் விலங்கு கழிவோடு, மனித கழிவுகளையும் சேர்த்து உரமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுதான் வயிற்றில் இருக்கும் புழுக்களுக்கு காரணம்.

ஓஹ் சிகிச்சை முடிந்து, நினைவு திரும்பி கண் விழித்ததும் முதலில் கேட்டது – ஒரு சாக்கோ பை. சாக்கோ பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவருக்கு 100 டப்பாக்கள் சாக்கோ பை தந்தது... அதோடு ஆயுளுக்கும் இலவசமாக சாக்கோ பை தருவதாக அறிவித்துள்ளது.
நம் நாட்டிலும் சில பேர் “சர்வாதிகாரம் வந்தாதான் சார், நாடு முன்னேறும்.... எமர்ஜென்ஸி வந்த போது விலைவாசி குறைந்தது....” என்றெல்லாம் பினாத்துகிறார்கள்... அவர்கள் சுபிட்ச பூமியான வடகொரியாவிற்கு செல்லட்டும்.... கிம், சாக்கோ பை கொடுத்து இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறார்.

Tuesday, 12 December 2017

Carmichael Coal Mine


கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் – திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய நிலக்கரி சுரங்கமாகும். நம் நாட்டு ஆதானி குழுமம், வருடத்திற்கு 60 மில்லியன் டன் மட்டரக கரியெடுத்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும். இதற்குத்தான் தடங்கல் வந்துள்ளது.
மோடி ஒரு தடவை SBI சேர்மனையும், ஆதானியையும் ஆஸ்திரேலியாவிற்கே அழைத்து போய், இந்த சுரங்க ப்ராஜக்ட்டுக்காக ஆஸ்திரேலிய பிரதமரிடம் டீல் பேசினார். SBI சேர்மனும் இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் டாலர் (இன்றைய ரேட்டில் ஏறக்குறைய 6500 கோடி ரூபாய்) கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.. ஒரு பிரதமர் ஒரு தனியார் ப்ராஜக்ட்டுக்காக இத்தனை முயற்சி எடுப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (RSS கூட கண்டித்ததாக நினைவு)
இப்போது திட்டத்தை பார்ப்போம். ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுசூழலியலாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். கார்மைக்கேலில் வெட்டியெடுக்கப்படும் கரி, இரண்டு துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படும். அப்பாட் பாயிண்ட் என்னும் துறைமுகத்தை மேம்படுத்த ஆதானி 183 கோடி டாலர்கள் (12000 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. ஆனால், துறைமுகத்தை ஆழம் செய்வதால் Great Coral Reef எனப்படும் பவளப்பாறைகளுக்கும், அங்கிருக்கும் உயிர்சங்கிலிக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால் திட்டம் முழுவதையும் செயல்படுத்த முடியவில்லை. துறைமுகத்திற்கே இந்த கதி என்றால் இப்போது சுரங்க ப்ராஜெக்ட்டுக்கே தலைவலி.
ஆஸ்திரேலிய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. (கார்மைக்கேல் அமைந்துள்ள குயின்ஸ்லேண்டின் பொருளாதார வளர்ச்சி அப்படி). சுற்றுசூழல் குறித்த எல்லா ஆட்சேபணங்களையும் நிராகரித்த அரசு, நீதிமன்றங்களில் இது குறித்த வழக்குகளை உடைக்க போராடி வருகிறது.

இப்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இழுத்தடிப்பதால் கடுப்பான ஆஸ்திரேலிய அரசு, இனி வருங்காலங்களில் ஒரு திட்டம் குறித்து வழக்கு போட வேண்டுமென்றால், அந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுபவர் மட்டும்தான் வழக்கு தொடுக்க முடியும் என்று சட்டதிருத்தம் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த களேபரத்தில் அண்மையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு எம்.பி க்களை அரசு கைது செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நீதிமன்றங்களில் மட்டும் போராடினால் இவ்வளவு பெரிய திட்டத்தை முறியடிக்க முடியாது என்றுணர்ந்த சூழலியலாளர்கள் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தனர். அதாவது இந்த திட்டத்திற்கு எந்த வங்கியும் நிதியுதவி செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
காரணம், திட்டம் அவ்வளவு பெரிது. திட்டமதிப்பு 16.5 பில்லியன் டாலர்கள் (108000 கோடி ரூபாய்). கண்டிப்பாக கடன் வாங்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அதனால்தான், வங்கிகளை கடன் தர வேண்டாமென்று சூழலியலாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.
தங்கள் பெயர் கெட்டு போய் விடுமென்று நினைத்த ஆஸ்திரேலிய வங்கிகள், கடன் தருவதிலிருந்து பின்வாங்கிவிட்டன. ஆதானி, அடுத்ததாக சீன வங்கிகளை அணுகியது. இப்போது அவர்களும் பல காரணங்களை சொல்லி பின்வாங்கி விட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பவழ பாறைகள் உலக புகழ் பெற்றது. அதை சிதைக்கும் இந்த திட்டம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.