Tuesday 12 December 2017

Carmichael Coal Mine


கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் – திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய நிலக்கரி சுரங்கமாகும். நம் நாட்டு ஆதானி குழுமம், வருடத்திற்கு 60 மில்லியன் டன் மட்டரக கரியெடுத்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும். இதற்குத்தான் தடங்கல் வந்துள்ளது.
மோடி ஒரு தடவை SBI சேர்மனையும், ஆதானியையும் ஆஸ்திரேலியாவிற்கே அழைத்து போய், இந்த சுரங்க ப்ராஜக்ட்டுக்காக ஆஸ்திரேலிய பிரதமரிடம் டீல் பேசினார். SBI சேர்மனும் இந்த திட்டத்திற்காக ஒரு பில்லியன் டாலர் (இன்றைய ரேட்டில் ஏறக்குறைய 6500 கோடி ரூபாய்) கடன் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்.. ஒரு பிரதமர் ஒரு தனியார் ப்ராஜக்ட்டுக்காக இத்தனை முயற்சி எடுப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (RSS கூட கண்டித்ததாக நினைவு)
இப்போது திட்டத்தை பார்ப்போம். ஆரம்பித்ததிலிருந்தே சுற்றுசூழலியலாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்தார்கள். கார்மைக்கேலில் வெட்டியெடுக்கப்படும் கரி, இரண்டு துறைமுகங்கள் வாயிலாக ஏற்றுமதி செய்யப்படும். அப்பாட் பாயிண்ட் என்னும் துறைமுகத்தை மேம்படுத்த ஆதானி 183 கோடி டாலர்கள் (12000 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளது. ஆனால், துறைமுகத்தை ஆழம் செய்வதால் Great Coral Reef எனப்படும் பவளப்பாறைகளுக்கும், அங்கிருக்கும் உயிர்சங்கிலிக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால் திட்டம் முழுவதையும் செயல்படுத்த முடியவில்லை. துறைமுகத்திற்கே இந்த கதி என்றால் இப்போது சுரங்க ப்ராஜெக்ட்டுக்கே தலைவலி.
ஆஸ்திரேலிய அரசு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. (கார்மைக்கேல் அமைந்துள்ள குயின்ஸ்லேண்டின் பொருளாதார வளர்ச்சி அப்படி). சுற்றுசூழல் குறித்த எல்லா ஆட்சேபணங்களையும் நிராகரித்த அரசு, நீதிமன்றங்களில் இது குறித்த வழக்குகளை உடைக்க போராடி வருகிறது.

இப்போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இழுத்தடிப்பதால் கடுப்பான ஆஸ்திரேலிய அரசு, இனி வருங்காலங்களில் ஒரு திட்டம் குறித்து வழக்கு போட வேண்டுமென்றால், அந்த திட்டத்தால் நேரடியாக பாதிக்கப்படுபவர் மட்டும்தான் வழக்கு தொடுக்க முடியும் என்று சட்டதிருத்தம் கொண்டுவர உத்தேசித்துள்ளது. இதற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த களேபரத்தில் அண்மையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு எம்.பி க்களை அரசு கைது செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, நீதிமன்றங்களில் மட்டும் போராடினால் இவ்வளவு பெரிய திட்டத்தை முறியடிக்க முடியாது என்றுணர்ந்த சூழலியலாளர்கள் அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தனர். அதாவது இந்த திட்டத்திற்கு எந்த வங்கியும் நிதியுதவி செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
காரணம், திட்டம் அவ்வளவு பெரிது. திட்டமதிப்பு 16.5 பில்லியன் டாலர்கள் (108000 கோடி ரூபாய்). கண்டிப்பாக கடன் வாங்காமல் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. அதனால்தான், வங்கிகளை கடன் தர வேண்டாமென்று சூழலியலாளர்கள் வற்புறுத்த ஆரம்பித்தனர்.
தங்கள் பெயர் கெட்டு போய் விடுமென்று நினைத்த ஆஸ்திரேலிய வங்கிகள், கடன் தருவதிலிருந்து பின்வாங்கிவிட்டன. ஆதானி, அடுத்ததாக சீன வங்கிகளை அணுகியது. இப்போது அவர்களும் பல காரணங்களை சொல்லி பின்வாங்கி விட்டனர்.
ஆஸ்திரேலியாவின் பவழ பாறைகள் உலக புகழ் பெற்றது. அதை சிதைக்கும் இந்த திட்டம், கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று.

No comments:

Post a Comment