Showing posts with label Legal. Show all posts
Showing posts with label Legal. Show all posts

Friday, 19 April 2019

சம்மதத்தோடு உறவு, கற்பழிப்பா?


போன வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு…

சத்தீஸ்கரில் ஒரு ஆள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தார். இரண்டு வீட்டின் சம்மதமும் அந்தத் திருமணத்திற்கு இருந்தது. பிற்பாடு என்ன காரணமோ, அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் ஆனது. இந்த விஷயம் முதல் பெண்ணிற்கு தெரியாது.

அப்புறம் ஆசாமி என்ன பண்ணினார் என்றால், முதல் பெண்ணின் சம்மதத்தோடு ஜாலியாக இருந்தார். வேலை முடிந்ததும் இந்தப் பெண்ணைக் கழட்டி விட்டுவிட்டு நிச்சயம் செய்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சந்தேகமே இல்லாத, பக்கா திட்டமிட்ட ஏமாற்று வேலை…!

போலீஸ் புகார், வழக்கு என்று கதை போனது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், அந்த நபர் மேல் கற்பழிப்புக் குற்றம் சுமத்தி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் சு.கோர்ட் கற்பழிப்புக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது, தண்டனையை மட்டும் 7 ஆண்டுகளாகக் குறைத்திருக்கிறது.

எனக்கு என்ன விசித்திரமாகப் படுகிறதென்றால், சில காலத்திற்கு முன்னால் லிவ்இன் உறவுகளை இதே சு.கோர்ட் அங்கீகரித்தது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, லிவ்இன் உறவில் இருந்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், சம்மதத்தோடு நடந்த உறவு கற்பழிப்பாக மாறிவிடுமா? என்ன லாஜிக்?

இதற்கு கோர்ட் அளித்திருக்கும் விளக்கம்தான் தலையைச் சுற்ற வைக்கிறது. "It tantamounts to a serious blow to the supreme honour of a woman and offends both her esteem and dignity."

பெண்ணின் கண்ணியமும், கௌரவமும் கற்பில் இருக்கிறது போன்ற சிந்தனைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு வைத்துக் கொள்ளப்போகிறோம்? கற்பு என்னும் நிலைப்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு கற்பழிப்புக் குற்றத்தைப் பார்ப்பதால்தான் marital rape வன்முறையாக இருந்தாலும் இந்திய சட்டப்படி அது தவறாகக் கருதப்படவில்லை. திருமணம் இல்லையென்றால் சம்மதத்தோடு நடக்கும் உறவும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.

With due respect to Supreme Court, சம்மதத்தோடு உறவு கொள்வதைக் கற்பழிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. லிவ்இன் தீர்ப்போடு இது முரண்படுவதாகக் கருதுகிறேன்.

Ref - https://www.ndtv.com/india-news/sex-on-false-promise-of-marriage-is-rape-supreme-court-2023409

Thursday, 6 September 2018

377


இன்றைய 377 தீர்ப்பு பல அச்சங்களையும், கவலைகளையும் விதைத்துள்ளதை என் நட்பு வட்டத்திலேயே பார்க்கிறேன்.

ஒரு சின்ன தகவல்… 2016 தரவுகள் படி இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 கற்பழிப்புகள் நடக்கின்றன. இதில் 40% மைனர்கள் மேலான தாக்குதல். கிட்டத்தட்ட 95% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மிக நெருங்கிய சொந்தங்களே..! (அப்பா, தாத்தா, சகோதரன், மகன் போன்றவர்கள்)

இது போலீஸில் ரிப்போர்ட் செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே…. வெளியில் சொன்னால் மானம் போகும் என்று பயந்து, தொண்டைக்குள் கசப்பை விழுங்கி, தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு மறைத்தவை தனிக்கணக்கு.

இதற்கு என்ன செய்யலாம்…? நாளை முதல் ஆண்-பெண் திருமணத்தை நிறுத்தலாமா? அல்லது ஆண்களையும் பெண்களையும் தனித்தனி சமூகமாக்க போகிறோமா? இந்த ரேஞ்சில் யோசித்தால் பிரியாணி கடைகளை கூட மூடவேண்டி வரும்.

377 சட்ட மாற்றத்தினால் தவறுகள் அதிகரிக்கும் என்னும் சிந்தனை, LGBT சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான பிம்பத்தினால் எழுவதுதான்…. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்குகள் அதிகமான ஆண் இனம் செய்யாத குற்றங்கள் LGBT சமூகத்தால் பெருகும் என்று நினைப்பது சுத்த அபத்தம்.

சமூகத்தில் சிலருக்கு பால் விருப்பங்கள் வேறுபடுகின்றன. அது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். மதத்தின் காரணமாகவோ, பெருவாரியான விருப்பத்திற்கு மாற்றாக இருப்பதன் காரணமாகவோ அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. இப்போது அவர்களுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தேவையற்ற சித்ரவதைகளில் இருந்து ஒரு விடுதலை கிடைத்துள்ளது.

US, UK, Australia, ஐரோப்பிய, தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஒரு பால் மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இப்போது இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒருபால் தம்பதியினர் குழந்தை பெற்று கொள்கின்றனர். சிறப்பாகவே குழந்தைகளை வளர்க்கின்னறனர். நம்மை போல்தான் அவர்களும்.

இந்த 377 தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த சட்டதிருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்தாத வகையிலும், நெறிப்படுத்தவேண்டிய முறையிலும் சட்டரீதியான வேறு மாற்றங்களும் தேவைப்படுகிறது. சட்டநிபுணர்கள் கூடிய விரைவில் மற்ற சட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.

முன்னேற்றம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். அந்த வகையில் ஒரு அரவணைப்பு இன்று நடந்துள்ளது. அதை வாழ்த்துவோம்….!

Monday, 27 August 2018

GST – Twitter Support


ஒரு வருடத்திற்கு முன்பு GST வரி அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வர்த்தகர்களுக்கு அதுகுறித்து தலையும் புரியவில்லை… காலும் புரியவில்லை. வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கை எடுத்தது… அதுதான் டிவிட்டர் சப்போர்ட்.
GST@GOI  என்னும் டிவிட்டர் அக்கௌண்ட் மூலம் வரித்துறை அதிகாரிகள், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில், ‘இது புதிய நிர்வாக முறை’ என்று புகழ்ந்திருந்தார்.
இந்த டிவிட்டர் சப்போர்ட் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், என்னால் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வாதம் இதுதான்…. Twitter support is not legally binding...! அதிகாரிகளின் வழிகாட்டுதல் தவறாக இருக்கும்பட்சத்தில் வர்த்தகர்கள் மேல்தான் பெனால்டி விதிக்கப்படும். டிவிட்டரில் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படிதான் நடந்தேன் என்று கோர்ட்டில் சொல்லமுடியாது.
ஒரு வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், அங்கே சட்டம் மட்டும்தான் நிற்கும். இந்த டிவிட்டர் ஆலோசனைகள் நிற்காது… அரசாங்கம் இதற்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றேன். நண்பர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்துக்கு என் மோடி விரோதமே காரணம் என்று குறை கூறினார்.
ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. சட்டத்தோடு ஒத்துப்போகாத சில வழிகாட்டுதல்கள் இந்த டிவிட்டர் அக்கௌண்டில் வழங்கப்பட்டன. அதன் காரணமாக வர்த்தகர்களுக்கு பெனால்டியும் விதிக்கப்பட்டது. அரசாங்கம், இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லையென்று கைகழுவிவிட்டது.
தற்போது GST வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அரசு இந்த டிவிட்டர் சப்போர்ட்டை நிறுத்திவிட்டது.
இதே போன்று ரயில்வேயிலும், பாஸ்போர்ட் பிரச்சனைகளிலும் டிவிட்டர் மூலம் புகார்கள் ஏற்கப்பட்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிவிட்டர் மூலம் சப்போர்ட் என்பதில் இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று, அதிகார மையங்களை வெகு சுலபமாக அணுகமுடிகிறது. இரண்டு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் கணக்காக உடனடி தீர்வுகள் எட்டப்படுகின்றன.
அவசர உதவிகளுக்கு டிவிட்டர் சப்போர்ட் ஒரு நல்ல வழிமுறை. சமீபத்தில் 25 சிறுமிகள் கடத்தலை தடுக்க டிவிட்டர் சப்போர்ட் உதவியது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்கும் responsibility-யோ, நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரமோ இருப்பதில்லை. அதற்கு இந்த GST வழிகாட்டுதல்கள் ஒரு நல்ல உதாரணம். மேற்சொன்ன குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து விஷமிகளால் போலியாக தரப்பட்டால், போலீஸும், அரசு நிர்வாகமும் புகார் உண்மையா, பொய்யா என்ற குழம்பிவிடும்.
ஏதோ ஒரு வகையில் டிவிட்டர் சப்போர்ட் சட்டரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும். அப்போதுதான் இந்த நடைமுறையின் பயன்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

Monday, 30 July 2018

VVPAT for 2019


2019 தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் VVPAT கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2017 ஏப்ரலில், தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டிலே சொன்னது.

இதையடுத்து Bharat Electronics Ltd (BEL) மற்றும் Electronics Corporation of India Ltd (ECIL) ஆகிய இரண்டு கம்பெனிகளிடம் 16.15 VVPAT யூனிட்டுகள் செய்து தரச்சொல்லி தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்தது.

நாளது தேதி வரையில் 3.5 லட்சம் யூனிட்டுகள்தான் ரெடியாகி இருக்கின்றன. தயாரிப்பு வேகத்தில் BEL ஆமை, ECIL நத்தை.

இப்போ 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்படி நடக்கப்போகிறது? EVM, VVPAT அல்லது Ballot Paper?

Friday, 13 July 2018

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு...!


வரிவிதிப்பு தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்குமல்லவா….? இது போன்ற வழக்குகளில், அப்பீல் போவதற்கான வரம்பை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 29600 நேரடி மற்றும் மறைமுக வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படும்.

இதனால், வழக்குகளில் கோரப்பட்ட 5600 கோடி ரூபாய் (Disputed Amount) அரசுக்கு வராது. இதை இழப்பு என்று சொல்லமுடியாது… ஆனாலும், அரசு விட்டு கொடுத்ததாய் எடுத்து கொள்ளலாம்.

முன்பொரு முறை GST காரணமாக புதிய வழக்குகள் நிறைய வந்து சேரும் என்று பதிவிட்டிருந்தேன். ஏற்கனவே குவிந்த வழக்குகளை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துள்ளது. நல்ல விஷயம், மத்திய அரசிற்கு பாராட்டுகள்...!

இதற்கு முன்னதாகவும் விரைவாக assessment முடிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிகாரிகளின் performance appraisal முறைகளையும் அரசு மாற்றியமைத்திருந்தது.

அரசின் போக்கு இப்படி இருந்தாலும், அதிகாரிகளின் போக்கு மாறினாற் போல தெரியவில்லை.  கடந்த மே மாதம், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு GST return-களுக்கு இடையே 78 பைசா வித்தியாசம் இருந்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

GST குறித்த புரிதல் இன்னும் சிறு, குறு வியாபாரிகளுக்கு வரவில்லை… சின்ன சின்ன விஷயங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, பெனால்டி போடுவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து அதிகாரிகள் விலக வேண்டும். மத்திய அரசு இதற்கும் வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Tuesday, 3 July 2018

Aadhar Biometric Data Theft


எது நடந்துவிடுமோ என்று அஞ்சி கொண்டிருந்தேனோ, அது நடந்தே விட்டது. Yes, ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் திருடு போயுள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில மாநிலங்கள் சொத்துக்களை ரிஜிஸ்டர் செய்யும்போது ஆதார் நம்பரை கட்டாயமாக்கியுள்ளன. இப்படி ரிஜிஸ்டர் செய்யப்படும் டாகுமெண்ட்களை முறையாக கட்டணம் செலுத்தியே நகலெடுத்து கொள்ளலாம்.

ஒரு சொத்து டாகுமென்டில் வாங்குபவர், விற்பவர், இரண்டு சாட்சிகள் என்று குறைந்தது 4 பேர் விவரமாவது இருக்கும். அந்த டாகுமென்டை நகலெடுத்தால், அவர்கள் பெயர், முகவரி, ஆதார் நம்பர், PAN ஆகிய அனைத்து விவரங்களோடு கைரேகையும் கிடைத்து விட்டது.

இந்த கை ரேகையை வைத்து ஒன்றும் செய்யமுடியாது….. ஆனால், கொஞ்சம் low cost டெக்னாலஜியை பயன்படுத்தினாலே போதும்…. கைரேகையை படம் எடுத்து, ஒரு பிலிமில் பதியவைத்து, போட்டோபாலிமர் ரெஸின் என்னும் திரவத்தில் மூழ்கடித்து, அல்ட்ராவயலெட் லைட்டில் கொஞ்சம் காட்டினால்… கைரேகை ரெடி. இந்த பிலிமை நீங்கள் ஆதார் ஆதன்டிகேஷன் மெஷினில் காட்டினால் ஒத்துக்கொள்ளுமாம். அதிக செலவு பிடிக்கும் விஷயமல்ல… ஒரு கைரேகை ரெடி பண்ண 75 ரூபாய்தான் ஆகுமாம்.

ஹைதராபாத்தில் ஒரு சிம் விற்பனையாளர் இது போல 6000 பேரின் ஆதார் தகவல்களையும், கைரேகைகளையும் திருடியிருக்கிறார். திருடப்பட்ட கைரேகைகளை வைத்து சிம்களை ஆதன்டிகேட் செய்திருக்கிறார். (இதன் விரிவான நடைமுறை தெரியவில்லை) கருப்பு மார்க்கெட்டில் ஒரு Aadhar Authenticated சிம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம்.

பார்ட்டி இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும், திறமையாகவும் இருந்திருந்தால் சொத்துக்களையே கைமாற்றியிருக்கலாம்… வங்கி அக்கௌண்டுகள் கூட ஆரம்பித்திருக்கலாம். கிறுக்குப்பயல், ஒரே பயோமெட்ரிக் ஸ்கானரில், ஒரே மாதத்தில் ஏகப்பட்ட ஆதன்டிகேஷன் செய்து மாட்டிக்கொண்டு விட்டான்.

இது தனிப்பட்ட சம்பவமல்ல… போன செப்டம்பர் மாதம், உத்தரபிரதேசத்தில், கான்பூரில் இன்னும் விவரமாகவே திருடியிருக்கின்றனர். Authorised Aadhar Operator-டைய கைரேகையை திருட்டுத்தனமாக ஒரு சாதாரண பட்டர் பேப்பரில் பதிய வைத்து கொண்டு, இதே மாதிரி போட்டோபாலிமர் ரெஸின் உபயோகித்து கைரேகை திருடிவிட்டனர். இதை வைத்துக்கொண்டு ஆதார் சிஸ்டம் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, ஆதார் க்ளையண்ட் சிஸ்டத்தின் சோர்ஸ் கோடையும் எடுத்துள்ளனர். இந்த சாப்ட்வேர் உபயோகித்துதான் ஆதார் வழங்கப்படுகிறது. ரெடினா ஸ்கேனிங் முறையையும் எப்படியோ ஏமாற்றியிருக்கிறார்கள். (நல்லவேளையாக  எப்படி ஏமாற்றினார்கள் என்ற தகவல் செய்தித்தாளில் தரவில்லை… அப்புறம் ஒவ்வொரு ஊருலேயும் இப்படி கிளம்புவாங்க..!)

அப்புறமென்ன, கனஜோராக பொய்யான ஆதார் கார்டுகள் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…! 10 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து உள்ளே போட்டிருக்கிறார்கள்.

நான் எப்போதும் சொல்லும் அதே விஷயம்தான்… டெக்னாலஜி என்பது இருமுனை கத்தி…. அது எப்போதும் நமக்கு சாதகமாகத்தான் இயங்கும் என்று நினைத்தால் நாம் முட்டாள்கள்… ஆதார், EVM இரண்டுமே தேசத்திற்கு பேராபத்துகள். டெக்னாலஜி மோகத்தை குறைத்து கொள்வதே தேசத்திற்கும் மக்களுக்கும் நல்லது. யார் கரடியாக கத்தினாலும், அரசாங்கம் இதை கண்டிப்பாக காதில் வாங்கி கொள்ளாது.

தற்போதைக்கு நம்மால் செய்யக்கூடியது இதுதான் - ஆதார் பயோமெட்ரிக் லாக் என்று ஒன்று இருக்கிறதாம். திருடர்கள் அன்லாக் செய்ய வழி கண்டுபிடிக்கும் வரையில் அதை உபயோகிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும்…!


Friday, 29 June 2018

Maternity Benefits – Boon or Curse?


போன மார்ச் மாதம், மத்திய அரசு பெண்களுக்கான மேடர்னிடி சலுகைகளை அதிகரித்தது. சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி விடுப்பு 12 வாரங்களிலிருந்து, 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது. கனடா, நார்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா ஆனது. (ஆச்சர்யமான விஷயம்… அமெரிக்காவின் 4 மாகாணங்கள் தவிர, வேறு எங்கும் சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி சலுகை இல்லை. உலகிலேயே மிகமிக சில நாடுகளில் மட்டும்தான் இப்படி மேடர்னிடி சலுகைகள் கிடையாது. அதில் ஒன்று அமெரிக்கா..!)


10 நபர்களுக்குக்கு மேலே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த மேடர்னிடி சலுகை விதிகள் பொருந்தும். 50 நபர்களுக்கு மேல் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்கவேண்டும்… வேலை செய்யும் தாய், வேலை நாளில் 4 முறை அந்த குழந்தையை பார்த்துவிட்டு வர அனுமதிக்கவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. 18 லட்சம் பெண்களுக்கு இந்த சட்டத்தினால் பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

கேட்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும் சட்டம் நடைமுறையில் வேலைக்காகுமா? நாடாளுமன்ற விவாதத்தின் போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றார். அதுதான் நடக்கிறது.

இது போன்ற மேடர்னிடி சலுகைகளின் செலவை யார் ஏற்பது? இரண்டு மாடல்கள் உள்ளன.. ஒன்று, பப்ளிக் ஃபண்டிங். அதாவது, அரசாங்கம் சோஷியல் செக்யூரிட்டி மூலமாகவோ அல்லது வேறு திட்டங்கள் மூலமாகவோ செலவை ஏற்பது. இன்னொன்று, பிரைவேட் ஃபண்டிங். அதாவது, நிறுவனமே இன்ஷூரன்ஸ் மூலமாகவோ, வேறு விதமாகவோ செலவை ஏற்பது. சில நாடுகளில் இரண்டும் கலந்த மாடலும் உண்டு.

இந்தியா பிரைவேட் ஃபண்டிங் மாடலுக்கு போனது… அதாவது, மேடர்னிடி சலுகைகளின் மொத்த செலவையும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த செலவை பெரிய நிறுவனங்களால் ஏற்று கொள்ள முடியும்… லாபம் அடிவாங்கும், ஆனாலும் பாதகமில்லை…! ஆனால், மீடியம், சிறு நிறுவனங்களால் இந்த செலவை சமாளிக்க முடியாது.

Teamlease  என்னும் HR கம்பெனி சமீபத்தில் 10 செக்டார்களில், ஒரு சர்வே எடுத்தது. மேடர்னிடி விடுப்பு செலவை சமாளிக்க முடியாததால், இந்த வருடம் (மார்ச் ‘19) 11-லிருந்து 18 லட்சம் பெண்கள் வரை வேலையிழப்பார்கள் என்று கணித்துள்ளது. எல்லா செக்டார்களையும் சேர்த்து பார்த்தால் ஒரு கோடியிலிருந்து 1.2 கோடி பெண்கள் வரை வேலையிழக்கலாம்.

ஏற்கனவே இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் வேலைக்கு போகும் பெண்களின் விகிதம் குறைந்துவிட்டது (என்னால் நம்பவே முடியவில்லை). 2006-ல் வேலைக்கு போன 100 பேரில் 36 பேர் பெண்கள். 2016-ல் அது நூற்றுக்கு 24-ஆக குறைந்துவிட்டது. இந்த சட்டத்தினால் பெண்கள் வேலைக்கு போவது இன்னும் குறையும் அபாயம் உள்ளது.

நிறுவனங்கள் இப்படி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தால், அரசு ஒரு பங்கு செலவை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, ஏதேனும் வரிச்சலுகை தரலாம். ஆனால், அப்படி மேடர்னிடி சலுகை செலவில் ஒரு பங்கை அரசு ஏற்கவேண்டுமெனில் பட்ஜெட் இடம் கொடுக்குமா? இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில், சில வருடங்களுக்கு இந்த சட்டத்தை நிறுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது.

இல்லையென்றால், இந்த சலுகைகள் நன்மையை விட தீமையே செய்யப்போகின்றன.

Wednesday, 20 June 2018

இந்தியா மேப் – ஒரு விளக்கம்


இன்று காலை என்னுடைய பதிவில் விக்கிபீடியாவில் இருந்து டவுன்லோட் செய்த ஒரு இந்தியா மேப் போட்டிருந்தேன். நண்பர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த மேப் உபயோகிப்பதில் எனக்கும் தயக்கம் இருந்ததால் வேறு மேப் படத்தை போட்டுவிட்டேன். ஆனாலும், உண்மையில் காஷ்மீர் பகுதியை காட்டாத இந்திய மேப் உபயோகிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தெளிவான விடையை தேடினேன்.
2006-ல் அப்துல்கலாம் அவர்கள் Google Map போன்ற Geospatial சேவைகளால் நாட்டிற்கு ஆபத்து வரலாம் என்றும், அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு சட்டவரைவு எழுதப்பட்டது. இதில் இந்தியா மேப்பை எப்படி போடவேண்டும் என்று சொல்லியிருந்தது. பிற்பாடு அந்த வரைவு ஒரு மூலையில் தூங்கப்போனது.
2016-ல் பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானதளம் தாக்கப்பட்ட பிறகு மீண்டும் அரசாங்கம் விழித்து கொண்டது. ஒரு வேளை கூகுள் மேப் மற்றும் கூகுள் எர்த் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பார்களோ என்னும் சந்தேகம் எழுந்தது.
ரொம்ப ஸ்டிரிக்டான சட்ட வரைவு ஒன்று எழுதப்பட்டது. Geospatial Information Regulation Bill, 2016 என்று பெயர். இதில் இந்திய மேப்பை தவறாக காண்பித்தால் கோடிக்கணக்கில் அபராதம், ஜெயில் தண்டனை என்றெல்லாம் கடுமையான சட்டவிதிகள் இருந்தன.
அடுத்த நாளே Geospatial சேவை சார்ந்த தொழில்துறையினர் அரசாங்கத்திடம், சட்டவரைவு ப்ராக்டிகலாக இல்லையென்று முறையிட்டனர். அதை தொடர்ந்து சட்டவரைவை நீர்த்து விட அரசு ஒப்புக்கொண்டது. பின்னர், இந்த வரைவும் தூங்கப்போனது.
காஷ்மீர் மேப்பை தவறாக காட்டியதற்காக கூகுளிடம் சண்டை, அல் ஜஸீரா டிவியை ஐந்தாறு நாட்கள் முடக்குவது என்று ஒரு பக்கம் இந்திய அரசு கண்டிப்பாக இருக்க, இன்னொரு பக்கம் NCERT பாடப்புத்தகத்திலேயே அக்சாய் சின் சீனாவின் பகுதியாக காண்பித்து மேப் வந்தது காமெடி.
காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை... அப்படியிருக்கும் பட்சத்தில் மேப் அதை எப்படி காட்டவேண்டும்...? இது குறித்து சர்வதேச நடைமுறை என்ன?
இது குறித்த எந்த சர்வதேச வரைமுறையும் இருப்பதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு China Political Map என்று கூகுளில் தேடினால், சில மேப்புகள் தைவானை சேர்த்து காட்டும். சில தைவானை சேர்க்காமல் காட்டும். இது போல பல உதாரணங்கள் சொல்லலாம்.
இந்திய சட்டப்படி எது சரி? The Criminal Law Amendment Act 1961 என்று ஒன்று இருக்கிறது. இந்திய சர்வே துறை வெளியிட்ட மேப்பிற்கு (படத்தில் உள்ளது) ஒத்துப்போகாமல் வேறு எந்த மேப் வெளியிட்டாலும், அந்த சட்டத்தின் கீழ், 6 மாதம் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். ஆனால், யார் வேண்டுமானாலும் இது குறித்து வழக்கு தொடர முடியாது. அரசாங்கம் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே கோர்ட் இதுகுறித்து விசாரிக்கும்.
சுருக்கமாக சொன்னால், நம்மை போன்றவர்கள் தவறான மேப் போட்டாலும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால், சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்... காஷ்மீரை உள்ளடக்கிய மேப்பையே நாம் போடவேண்டும்.

Friday, 27 April 2018

நீதிபதிகள் நியமனம்


கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதியின் பெயரை மத்திய அரசு நிராகரித்து விட்டது. நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கும் (இனிமேல் சுருக்கமாக கோர்ட்) மத்திய அரசுக்கும் இடையில் என்னத்தான் பிரச்சனை?
அரசியலமைப்பு சட்டப்படி நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்னால் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க (Consultation) வேண்டும்.
நடைமுறையில் மத்திய அரசுதான், கோர்ட்டுடன் கலந்தாலோசித்து புதிய நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், 90களில் இந்த நிலைமை மாறியது. Consultation என்று அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட வார்த்தையை Concurrence (ஒத்துப்போதல்) என்றே படிக்கவேண்டும் என்று கோர்ட் சொன்னது. அதாவது, கோர்ட் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயரை ஜனாதிபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், நீதிபதிகளின் நியமன அதிகாரம் கோர்ட்டின் கைக்கு வந்துவிட்டது. இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலீஜியம் முறை. இந்த முறையில் கோர்ட் பரிந்துரைக்கும் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் கொரியர் பாய்தான் மத்திய அரசு..!
இந்த முறை மிகவும் விசித்திரமானது... அரசியலமைப்பு சட்டத்திலும் சொல்லப்படாதது. வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கொலீஜியம் முறை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்கள், இந்த முறையை மீண்டும் பரிசீலனை செய்யச்சொல்லி கோர்ட்டை வேண்டினார். கோர்ட்டும் கொலீஜியம் முறையையே உறுதி செய்தது.
மோடியின் அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிபதிகளை ஒரு தனிக்குழு நியமிக்கும் என்று ஒரு சட்டம் (NJAC Act) கொண்டு வந்தது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி அந்த சட்டத்தை கோர்ட் நிராகரித்து விட்டது.
கடுப்பான மத்திய அரசு அதற்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிக்கவே இல்லை. கோர்ட்டின் பரிந்துரையை மத்திய அரசுதான் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அப்படி எந்த பரிந்துரையையும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இப்படியாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசும் முட்டி கொண்டது. இதுதான் இதுவரை நடந்த வரலாறு.
சரி, இப்போதைய பிரச்சனை என்ன? கொலீஜியம் பரிந்துரைத்த ஒரு நீதிபதியின் நியமனத்தை மத்திய அரசு ஏற்கவில்லை. அரசு சொல்லும் காரணம் – சீனியாரிட்டி அடிப்படையில் அவர் 45வது இடத்தில் இருக்கிறார் என்பதே.
பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றாலும், திறமையின் அடிப்படையிலும் கொலீஜியம் நீதிபதியை பரிந்துரைக்கலாம். ஆக, மத்திய அரசு பெயரை நிராகரித்தது, தற்போது இருக்கும் நடைமுறை பிரகாரம் சரியில்லை.
பாஜக சில சித்து வேலைகள் செய்து உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை 2016-ல் கொண்டுவந்தது. அப்படி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தவர்தான், தற்போது கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி என்பதால் இந்த விஷயம் அரசியல் முக்கியத்துவமும் பெறுகிறது.
மத்திய அரசின் தலையீட்டிற்கு எதிராக நீதித்துறை இருந்தாலும், தலைமை நீதிபதி இது குறித்து பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்பட்ட பெயரை நிராகரிக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லியிருக்கிறார். அதே நீதிபதியை இரண்டாவது முறை பரிந்துரைப்பார் என்னும் நம்பிக்கை எனக்கில்லை.
அதே சமயம் கொலீஜியம் முறையை தலைமை நீதிபதியால் மட்டுமே மாற்ற முடியாது. கொலீஜியம் தொடரத்தான் போகிறது... இதில் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதுதான் கேள்விக்குறி...! கொலீஜியம் முறை அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படாதது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

Friday, 6 April 2018

Test of Proportionality


ஆதார் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திலே தொடர்ந்து நடந்து வருகிறது. ஆதார் Proportionality Test-ற்கு உட்பட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது என்ன proportionality test?
1882 பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி) போலீஸின் அதிகாரம் குறித்த ஒரு வழக்கில் முதன்முதலாக இந்த proportionality கருத்து விவாதிக்கப்பட்டது. மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டன – ஒன்று, முக்கியத்துவம் (Suitability) சட்டம் என்ன செய்ய நினைக்கிறதோ, அந்த குறிக்கோளானது, குடிமக்களின் உரிமையை பறிக்கும் அளவிற்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். உதா. நீங்கள் சுதந்திரமாக நடமாட எல்லா உரிமையும் இருந்தாலும், முக்கியமான விஐபி செல்லும்போது நீங்கள் சாலையை கடக்கக்கூடாது.
இரண்டாவது, தேவை (Necessity) சட்டத்தின் குறிக்கோளை அடைய வரையறுக்கப்படும் வழிமுறைகள் உண்மையிலேயே தேவையானதாக இருக்கவேண்டும். வழிமுறைகளை எளிமையாக்கினாலும், குறிக்கோள் நிறைவேறும் என்றால், அந்த diluted வழிமுறைகளையே பின்பற்றவேண்டும். உதா. விமானநிலையத்தில் தீவிரமான security check இருக்கும். மற்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் போதும், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உங்களை தொட்டு தடவி பரிசோதனை செய்வதில்லை.
மூன்றாவது, பொருத்தம் (Rationality). வழிமுறைகள் குறிக்கோளுடன் பொருந்தியதாக, அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். உதா. பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரும் பச்சை சட்டை அணியவேண்டும் என்றால் அது அறிவுக்கு பொருத்தமானதாக இல்லை.
இப்போது ஆதார், இந்த proportionality test-ஐ கடக்கவேண்டும். ஆதார் சட்டப்படி, UIDAI-க்கு மிக அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். UIDAI விரல் ரேகை, கண் ரேகை மட்டுமல்லாது, எந்த biological attribute-ம் கேட்கலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. இது ஒரு blanket approval.
செல்போன் சிம்களோடு ஆதார் இணைப்பதற்கு என்ன காரணம் என்று நீதிபதி கேட்டபோது அரசு வழக்கறிஞர், தீவிரவாதத்தை தடுப்பதற்கு என்று காரணம் கூறியுள்ளார். நீதிபதி இதை முழுதாக ஒப்புக்கொள்ளவில்லை.
அதே போல, வங்கியில் நடக்கும் மோசடிகளை ஆதார் போக்குமா என்று நீதிபதி கேட்டதற்கு, வங்கி அதிகாரிகளின் துணையோடு மோசடிகள் நடக்கின்றன, அவற்றை ஆதார் கொண்டு தடுக்கமுடியாது என்று வழக்கறிஞர் பதில் கூறியுள்ளர்.
விசாரணை தொடர்கிறது...

Monday, 26 March 2018

Latest Developments


இரண்டு மிக முக்கிய நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

ஒன்று, ‘Fixed Term Employment’ அனைத்து தொழில் துறைகளுக்கும் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நிரந்தர வேலை என்று ஒன்று இனிமேல் இருக்காது, காண்ட்ராக்ட் வேலைகள் மட்டுமே இருக்கும், வேலைக்கு பாதுகாப்பு இருக்காது என்று தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றன.

இப்படி fixed term employment வந்ததில் தொழிலாளர்களுக்கு சில பலன்கள் இருக்கிறதென்றாலும், தொழிலாளர்கள் இதை வரவேற்கவில்லை. (எந்த நேரத்திலும் தொழிலாளி வேலையிலிருந்து தூக்கப்படலாம், notice pay கிடையாது) முன்பு வாஜ்பாய் இதே சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அவர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் காங்கிரஸ் அரசு அந்த சட்டத்திருத்தத்தை நீக்கியது.

வழக்கம் போல நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலேயே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கொண்டுவந்துள்ளது. விவாதம் வரக்கூடிய விஷயங்களில், பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருவது கவனிக்கவேண்டிய விஷயம். அதாவது, ஒரு விவாதத்தில் கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் தரும் நேர்மை அரசுக்கு இல்லை என்றே இதை பார்க்கவேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் 2ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாடு முழுக்க தொழிலாளர் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது நிகழ்வு, வன்கொடுமை சட்டத்தின் விதிகளில் சுப்ரீம் கோர்ட் கொண்டு வந்துள்ள சில மாற்றங்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 90% குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை, பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன என்று காரணம் கூறி உடனடி கைது நடவடிக்கைகள் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மத்திய அரசாங்கம் இதற்கு என்ன விதமான மேல் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இந்த இரண்டு மாற்றங்களும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு நல்ல தீனியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Thursday, 22 March 2018

Mining in India – New Changes


இயற்கைவளம் நிரம்பிய நம் நாட்டில் சுரங்கத்துறை ஒரு முக்கியமான துறையாகும். சுரங்கத்துறை நம்நாட்டு ஜி.டி.பி-யில் 2.5% வரை பங்களிக்கிறது.... கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு நிதி ஆயோக் நிலக்கரியைதான் நம்பியிருக்கிறது என்றால் இந்த துறையின் முக்கியத்துவத்தை அறியலாம்.

இந்த துறை இன்னமும் வளர மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், வளராததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் – ஒன்று, 2008க்கு பிறகு உலக மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனது. இரண்டாவது, சட்ட சிக்கல்கள், வெளிப்படைத்தன்மையின்மை, அரசு விதிமுறைகள் போன்ற காரணங்கள்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று கொண்டதும் இந்த துறையில் Foreign Direct Investment (FDI) ஒரு லட்சம் கோடி வரை அதிகரிக்கவேண்டும் என்று விரும்பியது. 2014ல் இருந்து 2016 வரை இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7800 கோடி ரூபாய் FDI வழியாக கிடைத்தது. (2017ல் மீண்டும் FDI 330 கோடியாக விழுந்துவிட்டது வேறு விஷயம்). மேலும், அரசு அனுமதியை எளிதாக்க 31 கனிமங்களை மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, மாநிலங்களின் நிர்வாகத்திற்கு கொடுத்தது.

இப்படி அரசாங்கம் சுரங்கத்துறை வளர முயற்சிகள் எடுக்கும்போது, நம் நாட்டின் அரசு நடைமுறைகள், ஊழல் காரணமாக Illegal Mining எனப்படும் முறையில்லாத சுரங்கத்தொழில் அதிகமாக நடைபெறுவதும், நீதிமன்றம் தலையிட்டு சுரங்க உரிமங்களை ரத்து செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.


இப்படி ஒரிஸ்ஸாவில் இரும்பு மற்றும் மங்கனீஸ் தாது எடுக்க அரசாங்கம் உரிமம் கொடுக்க, அனுமதி பெறாத இடங்களில் சட்டவிரோதமாக தாது எடுப்பது, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் தாது எடுப்பது என்று அட்டகாசம் நடந்திருக்கிறது. சுற்றுசூழல் சீர்கேடு சொல்லி மாளாதது. பாதிக்கப்பட்ட ஆதிவாசியினர் போன்றோருக்கு ஒரு நிவாரணமோ, நஷ்டஈடோ கிடையாது. இதற்கெல்லாம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆசி இருந்திருக்குமென்று சொல்ல தேவையில்லை. (அரசு கம்பெனியான கோல் இந்தியாவும் இது போன்ற விதிமீறல்கள் செய்திருக்கிறது)

இது குறித்த வழக்கு பல ஆண்டுகள் நடந்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு அதிர்ச்சி தீர்ப்பளித்தது. அதாவது, சுற்றுசூழல் பாதிப்பு இருந்தால், அது உரிமம் பெற்ற சுரங்கமாக இருந்தாலும், அங்கு நடப்பது illgal mining என்று அதிரடியாக சொல்லியது. தீர்ப்பின் விளைவு - MMDRA சட்டப்படி எவ்வளவு தாது தோண்டப்பட்டதோ அதன் மதிப்பிற்கு அபராதம் கட்டவேண்டும்! ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம்! மேலும், புதிய சுரங்க கொள்கை உருவாக்க வேண்டுமென்றும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

இதற்காக ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு சுற்றுசூழல் ஆர்வலர் கூட இல்லையென்பது வருத்தமான விஷயம். இதுநாள் வரை யார் illegal mining நடக்க யார் உதவி செய்தார்களோ, யார் கடமை தவறினார்களோ அந்த அரசு அதிகாரிகளை கொண்டே ஒரு கமிட்டி அமைந்தது.

கமிட்டி எப்படியோ போகட்டும்.... இப்போது விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் சுற்றுசூழல் குறித்த விஷயத்தை கிளறியிருக்கிறது என்பது அரசின் கருத்து. அதனால், சுற்றுசூழல் காரணமாக உரிமம் பெற்ற mining-ஐ illegal என்று சொல்லக்கூடாது என்று முன்தேதியிட்டு (retrospectively) சட்டதிருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது.

இரண்டு விஷயங்கள் – ஒன்று ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம் என்பது சுரங்க தொழிலை நிச்சயம் பாதிக்கும். சுற்றுசூழல் குறித்த நிபந்தனை MMDRA சட்டத்தில் இல்லாதது. அதனால், அபராதத்தை குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவது, சுற்றுசூழல் பாதிக்கப்பட்ட இடங்களை முடிந்தவரை சரிசெய்வது போன்ற விஷயங்களுக்கு நிதி ஒதுக்கீடு எங்கிருந்து வரும்? இரண்டையும் அரசாங்கம் கவனிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை, சுற்றுசூழல் நாசத்தை அப்படியே கைகழுவ கூடாது.

இரண்டாவது, நாளது தேதி வரையில் சுற்றுசூழலுக்கும் illegal mining –ற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால், உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஒரு சரியான பார்வையை வழங்கியபின்னரும், சுற்றுசூழலுக்கும் சுரங்க உரிமத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறுகள் தொடர்ந்து நடக்கவே வழிவகுக்கும்.

மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

Tuesday, 20 February 2018

டிரம்பும், அவர் பிஸினஸும்


பொதுவாக அமெரிக்க அதிபர்கள், தாங்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தங்கள் சொத்துக்கள், வியாபாரங்களை எல்லாம் ஒரு Blind Trust – ன் கட்டுப்பாட்டிற்கு மாற்றி விடுவார்கள்.

அது என்ன பிளைன்ட் டிரஸ்ட்? பணம் எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது, வியாபாரத்தில் என்ன நடக்கிறது போன்ற விவரங்களை சொத்தின் உரிமையாளருக்கு தெரிவிக்க மாட்டார்கள். அதுதான் பிளைன்ட் டிரஸ்ட்.

இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தனக்கு சாதகமாக எந்த முடிவும் எடுக்கவும் முடியாது…. அவர் தனக்கு சாதகமாக பொருளாதார முடிவுகள் எடுக்கிறார் என்று யாரும் குற்றம் சாட்டவும் முடியாது.

இந்த வழக்கத்தை முதலில் ஒபாமா உடைத்தார்…. தன்னுடைய பணத்தை எல்லாம் treasury bond – களில் முதலீடு செய்தார். அதனால், அவருக்கு பிளைன்ட் டிரஸ்ட் அமைக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதன் மூலமாக அதிபரின் சொத்து மதிப்பு என்னவென்று மக்களுக்கு நேரடியாக தெரியும் என்று காரணமும் கூறப்பட்டது.

இப்போது, டிரம்ப் விஷயத்துக்கு வருவோம்….

டிரம்ப் ஆர்கனைஸேஷன் என்பது மிகப்பெரிய நிறுவனம்…. 1923ல் டிரம்பின் பாட்டியும், அப்பாவும் ஆரம்பித்த நிறுவனம்… 70களில் இருந்து டிரம்ப் நிர்வாகம் செய்து வருகிறார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் டிரம்ப் தன் மகன்களை டிரஸ்டியாக போட்டு, தன் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டார். ஆனால், அது பிளைன்ட் டிரஸ்ட் கிடையாது.



அமெரிக்க அதிபர் பிளைன்ட் டிரஸ்ட்தான் உருவாக்க வேண்டுமென்று சட்டம் எதுவும் இல்லை…. அது ஒரு மரபுதான். அந்த மரபை ஒபாமா மாற்றியது, டிரம்பிற்கு சாதகமாகிவிட்டது.

அதிபர், தன் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு பாலிஸிகளை தீர்மாணிக்கிறார் என்ற சந்தேகம் அமெரிக்காவில் உண்டு. இது தொடர்பான வழக்குகளை சமீபத்தில் கோர்ட் தள்ளுபடி செய்து, அமெரிக்க காங்கிரஸ்தான் இதை பற்றியெல்லாம் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டது.

இப்படியெல்லாம் பிரச்சனை வரக்கூடாது என்றுதான் நம்ம ஊரிலே பினாமி வைத்து கொள்வது…!

Tuesday, 13 February 2018

GSTயும் வழக்குகளும்


GST - நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு அமலாகிவிட்டது. ஆனால், இன்னும் வர்த்தகர்களின் சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்ந்தபாடில்லை. வரித்துறை அதிகாரிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இருக்கும் புரிதல் குழப்பம், நீதிமன்றங்களில் வழக்காகத்தான் போய் முடியும்.

GST வரி அமலாக்கப்பட்டவுடன் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்... இது GST வரியை அமல்படுத்திய பல நாடுகளின் அனுபவம். நம் நாட்டிலும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட புரிதல் காரணமாக வழக்குகள் அதிகமாகலாம். இந்திய பொருளாதாரத்தின் அளவை வைத்து பார்த்தால் GST குழப்பங்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று KPMG கூறியுள்ளது.

இந்த விஷயத்தில் நம் நாட்டு சூழ்நிலை அவ்வளவு சிலாக்கியமானதாக இல்லை. ஏற்கனவே நேரடி, மறைமுக விரிவிதிப்பு தொடர்பாக 2 லட்சம் வழக்குகள் பல நிலைகளில் தேங்கி கிடக்கின்றன (படத்தை பார்க்கவும்). இவற்றோடு GST குறித்த வழக்குகளும் அதிகமாக சேரும் வாய்ப்பு இருக்கிறது.
 



இது விஷயத்தில் வரித்துறை அதிகாரிகள் மேல்தான் அதிக தவறு இருப்பதாக தோன்றுகிறது. இது போன்ற வழக்குகளில் 65% வழக்குகள் வரி கட்டுபவர்களுக்கு சாதகமாகவே முடிகின்றன. இந்த சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது, அதிகாரிகள் வீண் வழக்கு தொடுப்பது அதிகமாக இருக்கிறது.
 

இதற்காகவே வரித்துறை அதிகாரிகளின் Performance appraisal முறையை சென்ற வருடத்திலிருந்து அரசாங்கம் மாற்றியுள்ளது. அதாவது, நிறைய வரி வசூலித்தால் சிறந்த appraisal என்பது இல்லாமல், தரமான துரிதமான assessment, வரிகட்டுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது, நிலுவையில் இருக்கும் தகராறுகளை தீர்ப்பது போன்ற அடிப்படையில் appraisal முறை மாறியுள்ளது.

நிதித்துறை மட்டும் வேகமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டுவந்தால் போதாது, இந்திய நீதித்துறையும் வேகமாக செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையென்றால், நாட்டின் வர்த்தகம் பெருகாது வழக்குகள்தான் பெருகும்...!

Tuesday, 6 February 2018

ஒரே தேசம், ஒரே தேர்தல் – பகுதி ஒன்று


நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிற்கும் ஒன்றாக தேர்தல் நடத்தவேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இது குறித்து நிதி ஆயோக்-ஐ சேர்ந்த பிபேக் திப்ராயின் கட்டுரை (பேப்பர்) ஒன்றை படிக்க நேர்ந்தது. கட்டுரை ஒரு தலை பட்சமாக இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த கட்டுரையில் படித்ததை மட்டுமே வைத்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன். தவறுகளை திருத்தினால் சந்தோஷப்படுவேன்… ஆனால், ஆதாரங்கள், லிங்குகள் அவசியம்.

முதலில் எதற்காக இந்த ஒன்றாக தேர்தல் என்கிற பேச்சு வருகிறது என்று பார்ப்போம். முதல் காரணம், ஒரேடியாக தேர்தல் வைத்தால் செலவு குறைச்சல். கடந்த நாடாளுமன்ற தேர்தல் அரசுக்கு 3400 கோடிகளுக்கு மேல் செலவு வைத்தது. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வைத்தால் பாதுகாப்பு செலவு, கண்காணிப்பு செலவு ஆகியவற்றை குறைத்து விடலாம். ஆனால் விஷயம் என்னவென்றால், நாடு முழுக்க தேர்தல்கள் நடத்த ஐந்தாண்டுகளுக்கு 8000 கோடி ரூபாய்தான் செலவாகிறதாக சொல்கிறார்கள்…. அதாவது, சராசரியாக ஒரு வருஷத்திற்கு 1600 கோடி ரூபாய். இந்திய பட்ஜெட் படி ஒரு ஆண்டு மொத்த செலவு 25 லட்சம் கோடிகள். இதில் 1600 கோடி ரூபாய் ஒரு விஷயமேயில்லை. பிபேக் massive expenditure என்று சொல்கிறார்... பணத்தை சேமிக்கலாம் என்றால் தப்பில்லை, massive expenditure என்பது பில்டப்பு.
அடுத்தது மாடல் கோட்… தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசாங்கம் புது திட்டங்களை அறிவிக்க கூடாது, முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது. இதனால், அரசாங்கமே முடங்கி போவதாக குற்றச்சாட்டு. இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள் கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால், 5 வருடங்களில் மொத்தம் 4 மாதங்கள்… 6% நாட்கள் அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை என்றே அர்த்தம். ஆனால், நம் நாட்டின் நிலைமையை வைத்து பார்த்தால் ஏதோ 56 மாதங்கள் வெட்டி முறித்து விட்டு, அந்த 4 மாதங்களால்தான் நாடு முன்னேறமுடியவில்லை என்று சொல்வதெல்லாம் அபத்தம். பிபேக் எதிர்கேள்விகளுக்கு எதிர்பார்க்கும் தரவுகளை, இந்த மாடல் கோட் காலத்திற்கு தரவில்லை…. அதாவது, எத்தனை முக்கிய திட்டங்கள் மாடல் கோட் காலத்தில் நின்று போய், என்ன நஷ்டம் வந்தது என்றெல்லாம் சொல்லவில்லை. வாதத்தில் உண்மை இருந்தாலும், தரவுகள் இல்லை.
அடுத்தது, தேர்தல் ஜாதி, மத, இன உணர்வுகளை கிளப்புகிறது. எப்போது பார்த்தாலும் தேர்தல் நடந்து கொண்டிருந்தால், இதற்கு ஒரு விமோசனமே கிடையாது என்று முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி சொல்கிறார். ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.... இந்த இன்டர்நெட் யுகத்தில், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் செய்யப்படும் (அல்லது செய்வதாக சொல்லப்படும்) மதம் சார்ந்த பிரச்சாரங்கள் இந்தியா முழுக்க செய்தியாகிறது. அதே சமயத்தில் நாடு முழுக்க ஒரே நேரத்தில் மதத்துவேஷம் தோன்றினால், மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்னும் ரிஸ்கும் இருக்கிறது.... காரணம் தேர்தலும், மதவாதமும் ஒன்றாக பிணைந்துள்ளது.
1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறைதான் இருந்தது என்கிறார் பிபேக். இது அபத்தமான வாதம்… அப்போது காங்கிரஸிற்கு, நேருவிற்கு இருந்த செல்வாக்கு வேறு. நேரு மறைவிற்கு பின்னரே இந்திய அரசியல் களம் சூடாகி நாசமாகி போனது. இன்றைய சூழ்நிலையில், 30 வருடங்களுக்கு பிறகு 2014ல்தான் ஒரு கட்சி ஆட்சி வந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பது ஒரு தவிர்க்க முடியாத உண்மை. நமது அரசியல் சூழல் மாறிவிட்டது. 50 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்தகால நடைமுறை என்பது லாஜிக்கில்லாத வாதம்.
இப்போது இந்த ஐடியாவிற்கு எதிர்ப்புகளை பார்க்கலாம் …. அதற்கு முன்னர் – இந்த ஐடியாவை எந்த கட்சியெல்லாம் எதிர்க்கிறது என்று முழு லிஸ்ட் பிபேக் தரவில்லை. இது தவறு. பிபேக்கின் stature – ல் இருக்கும் ஒருவர் ஒரு அபெண்டிக்ஸில் இதையெல்லாம் போட வேண்டும். நான்கு கட்சிகள் பேர் போட்டு Etc போடுவது கூடாது. யார் எதிர்க்கிறார்கள் என்பதை முழுமையாக பதிவு செய்யவேண்டும். சரி, இனி விவாதத்திற்கு போவோம்.
இப்போது எதிர்ப்புக்கான முதல் காரணம், நடைமுறை சாத்தியம். ஒரே நேரத்தில் நாடு முழுக்க இரட்டை தேர்தல்கள் நடத்தினால் பாதுகாப்பை, கண்காணிப்பை உறுதி செய்வது எப்படி? கிட்டத்தட்ட 10 லட்சம் BSF ஆட்கள் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு தேவைப்படுகிறார்கள். ஒரே தேர்தலாக நடத்தினால் இந்த பாதுகாப்பு பிரச்சனை சுலபமாகிவிடும். ரொம்ப காலத்திற்கு BSF படைகள் தேவைப்படும் என்று எதிர்ப்பாளர்கள் சொல்வது சரியல்ல… பாராளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு காலம் ஆகுமோ அதே அளவுதான் ஆகும்... May be கொஞ்சம் கூடுதலாக ஆகலாம்.
ஆனால், கண்காணிப்பு? ஒரு RK நகரை கண்காணிக்கவே விழி பிதுங்குகிறது... இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையம் எப்படி கண்காணிக்கும்? நேர்மையில்லாத தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி என்ன புண்ணியம்? ஒரு அதிகாரி முறைகேடு செய்தார் என்று இடமாற்றம் செய்யலாம். எல்லா இடத்திலும் தேர்தல் நடக்கும் போது எங்கே இடமாற்றம் செய்வது? அத்தனை மனுக்களை பரிசீலனை செய்யவேண்டும்... வேட்பு மனு செல்லாது போன்ற வம்பு வழக்குகளை சமாளிக்க வேண்டும்.... இதற்கு நடுவில் சட்டம் ஒழுங்கையும் பார்த்து கொள்ளவேண்டும்.
ஒரே நேரத்தில் நாடு முழுக்க தேர்தல் நடத்தினால் எத்தனை வோட்டு மெஷின்கள் தேவைப்படும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதெல்லாம் one time investment என்று நினைக்கிறேன். ஆனால், மெஷின்களை தேர்தலுக்கு முன்பு டெஸ்ட் செய்வது, கவுண்டிங் வரை ஒழுங்காக பாதுகாப்பது இவையெல்லாம் சிரமம்தான்... நம் தேர்தல் ஆணையம் அனுபவமிக்கது... சமாளித்து விடலாம்.
இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடத்துவது? இந்தியா போன்ற பரந்து விரிந்த, பல கலாச்சார, காலநிலைகளை கொண்ட நாட்டில் இது கஷ்டம்தான். ஆனால், நாம் ஏற்கனவே அப்படித்தான் நாடாளுமன்ற தேர்தல் நடத்துகிறோம். இதெல்லாம் பெரிய பாயிண்டில்லை. ஆக, தேர்தல் கண்காணிப்பை தவிர மிச்ச விஷயங்கள் சாத்தியமாகத்தான் படுகிறது.
இரண்டாவது விஷயம் – முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி இரண்டு பாயிண்டுகள் சொல்கிறார். தேர்தல் காலத்தில் பொருளாதாரம் மேம்படுகிறது... வேலைவாய்ப்புகள் பெருகுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் இப்படி நடவாது. ஆனால், பிபேக் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் சார்ந்த பொருளாதாரம் கருப்பு பொருளாதாரம்... வேலைவாய்ப்புகள் நிரந்தரமல்ல என்கிறார். கருப்பு பொருளாதாரம் பாயிண்ட் ஓகே... உபி தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் செய்த செலவு 5500 கோடியாம்.... அத்தனையும் கருப்பு பணம்தான். அதேசமயம், இந்த காலத்தில் எந்த வேலைவாய்ப்பும் நிரந்தரமல்ல என்பது தான் உண்மை. நிரந்தரமின்மையை பார்த்தால் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தையும் நிறுத்த வேண்டுமல்லவா? கருப்பு பொருளாதாரத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் distribution of wealth நடக்கிறது. இந்தியா போல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக இருக்கும் நாட்டில் இது போன்ற wealth distribution சந்தர்ப்பங்களும் (துரதிர்ஷ்டவசமாக) முக்கியம்.
அடுத்தது, ஐந்தாண்டுகளுக்கு நடுவில் தேர்தல் வந்தால், அரசியல்வாதிகள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் கட்டாயம் கூடுதலாக வருகிறது… பொறுப்பு கூடுகிறது என்கிறார் குரேஷி. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் பொறுப்பே போதும் என்கிறார் பிபேக். குரேஷி சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. மக்களை அவ்வப்போது நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்க வேண்டுமென்பதால் அரசாங்கத்திற்கு கொஞ்சமேனும் பயம் இருக்கிறது.
இனிதான் மிக முக்கியமான பாயிண்ட் வருகிறது… ஒரு ஆய்வில் என்ன சொல்லியிருக்கிறது என்றால், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்தினால் 86% பேர் ஒரே கட்சிக்குதான் வோட்டு போடுகிறார்கள். (99ல் 68%, 2004ல் 77%, 2014ல் 84%). அதாவது, நம் வாக்காளர்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டிற்கும் இடையே பிரச்சனைகளை, தீர்வுகளை ஆராயும் அறிவு மழுங்கி கொண்டு வருகிறது. லோக்கல் பிரச்சனையை தீர்க்க சட்டமன்ற தேர்தல், அதற்கான தேர்தல் அறிக்கை பார்க்கவேண்டும்.... நாடு அளவில் உள்ள விஷயங்களுக்கு அதற்கான தேர்தல் அறிக்கை, செயல்பாடுகளை பார்க்கவேண்டும். நம்ம ஆட்களுக்கு அவ்வளவு விவரம் போதவில்லை.
இப்போது, இரண்டு தேர்தலுக்கும் இடையில் 6 மாத காலம் இடைவெளி விட்டால் 61% பேர் ஒரே கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதாவது, ஆறு மாத காலத்தில் அனுபவப்பட்டு, நிதானப்பட்டு முடிவெடுக்கும் திறன் அதிகமாகிறது எனலாம். இதே விஷயத்தை வேறொரு ஆய்வும், வேறு விதமாக தெரிவிக்கிறது. விஷயம் இதுதான் – ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் ஒரே கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்.
இதை பிபேக் மறுக்கமுடியவில்லை…. ஆனால், ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். Correlation is not causation, voter’s behaviour is complex என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார். இது பிபேக்கின் வாதத்தில் மிக பெரிய ஓட்டை.
நம் நாட்டு மக்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்படுபவர்கள்… ஒவ்வொரு தேர்தலுக்கும் அனுதாப அலையோ, எதிர்ப்பு அலையோ ஏதோ ஒரு அலை வருகிறது. அந்த நேரத்தில் ஒரே கட்சி இந்தியா முழுவதையும் (சட்டமன்றங்கள், நாடாளுமன்றம்) பிடித்து விட பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
அடுத்து, வாக்காளரின் இந்த முதிர்ச்சியின்மை காரணமாக மாநில கட்சிகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது… மக்கள் தேசிய கட்சிக்கு மட்டுமே வோட்டு போடுவார்கள். அல்லது கிறுக்குத்தனங்களும் நடக்கலாம்… உதாரணமாக, போன 2014 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றே சொல்லாத அதிமுக, இன்று நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
அடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல் குறித்து அரசியலமைப்பு சட்டமும், மற்ற சட்டங்களும் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கவேண்டும் என்பது குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தேர்தல் நடத்தவேண்டும் அவ்வளவுதான்... அதாவது, வெவ்வேறு நேரத்தில் தேர்தல் வைப்பது தவறல்ல. நாம் இப்போது தவறேதும் செய்யவில்லை... சாதகமாக இருந்தால், தேர்தல் நடைமுறைகளை சீர்திருத்தம் செய்யத்தான் பார்க்கிறோம். இந்த புரிதல் அவசியம்.

இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது… ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நேரத்தில் தேர்தல் வருகிறதே... முதல்முறை அனைத்தையும் ஒரு syncல் கொண்டு வருவது எப்படி? ஒரு நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் காலத்தை ஒரு ஆண்டு வரை நீட்டிக்கலாம். அல்லது, இடையிலே கலைக்கவும் செய்யலாம். இது இரண்டும் விரும்பத்தகாதது அல்ல என்றாலும் ஒரே ஒரு முறை மட்டும் செய்துவிட்டு, அனைத்து தேர்தல்களையும் Sync செய்துவிடலாம். (கொஞ்சம் கொஞ்சமாகவும் Sync செய்யலாம்)

சரி, ஒரு முறை அனைத்து தேர்தல்களையும் ஒருங்கிணைத்தாலும், நடுவில் ஏதாவது ஆட்சி கவிழ்ந்தால் என்ன செய்வது? இனி மேல்தான் அபத்தங்கள் ஆரம்பம். ஆட்சி கவிழாமல் இருப்பதே நல்லது.... அப்போதுதான் இந்த ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ செல்லுபடியாகும். அதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், கூடவே யாருக்கு ஆதரவு என்னும் நம்பிக்கை தீர்மானமும் கொண்டு வரவேண்டும். அதாவது, இந்த பிரதமர், முதல்வர் ஆட்சி வேண்டாம் என்றால், எந்த பிரதமர், முதல்வர் ஆட்சி வேண்டுமென்றும் சொல்லவேண்டும். இதன் மூலமாக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தடுக்கப்படும். ஐந்தாண்டுகள் நிலையான (அசைக்க முடியாத) ஆட்சி அமையும்.

ஆட்சியை கவிழ்த்த பின் கட்சிகள் ஆதரவை மாற்றி கொள்வதும் உண்டு. They change their camps. ஒரு வகையில் இது அசிங்கமாக இருந்தாலும், குதிரைபேரத்தை ஊக்குவித்தாலும், கட்டுப்பாடில்லாத நிலையான ஆட்சியை தடுப்பதால், இதுவும் நல்லதென்றே தோன்றுகிறது.

அடுத்து, ஒரு வேளை ஆட்சி கவிழ்ந்து விட்டால்? இன்னும் எவ்வளவு பதவி காலம் மீதமிருக்கிறதோ, அதை வைத்து முடிவு எடுக்கப்படும். மீதமிருக்கும் பதவிகாலத்திற்கு மறு தேர்தல் வைப்பதிலிருந்து, ஜனாதிபதியே (அல்லது கவர்னரே) ஆட்சி செய்வது வரை பாஸிபல் சொல்யூஷன்கள் தருகிறார் பிபேக். (இது குறித்து ப.சிதம்பரம் சொல்வதை நம்பாதீர்கள். எல்லா நேரத்திலும் ஜனாதிபதி ஆட்சி என்பது கிடையாது)

ஆனால், இப்போது பிரதமர் தலைமையிலே ஒரு சட்டம் நிறைவேறினால், அதை ஜனாதிபதி அப்ரூவ் செய்கிறார். ஜனாதிபதி, அதே அமைச்சரவையை வைத்து கொண்டு சட்டம் நிறைவேற்றினால் யார் அப்ரூவ் செய்வது? ஏற்கனவே மத்திய அரசு சொல்லும் விஷயங்களுக்கு ஜனாதிபதி தலை ஆட்டுகிறார் என்னும் குற்றச்சாட்டு உண்டு. பிரணாப் ஆம் ஆத்மியின் Office of Profit சட்டத்தை நிராகரித்தார். ஒரே கட்சி எல்லா இடத்திலும் இருந்தால் இது போல நடப்பது சந்தேகமே. நம் துணை ஜனாதிபதியை எடுத்து கொள்ளுங்கள்.... அவர் இன்னும் பாஜக உறுப்பினர் போலவே நடந்து கொள்கிறார். அவர் நாளை ஜனாதிபதியானால் எப்படி செயல்படுவாரோ?

ஜனாதிபதி ஆட்சியில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி நடக்கும்? நம் நாட்டு அரசியலமைப்பு ஜனாதிபதியை ம்யூட்டாகவும், பிரதமரை ஆக்டிவாகவும் வைத்திருக்கும். ஜனாதிபதியே ஆட்சி செய்தால், அது அரசியலமைப்புக்கு எதிராக அமையும்.

அடுத்து, ஜனாதிபதி சட்டமன்ற உறுப்பினர்களின் வோட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்க படுகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், ஒரே கட்சி ஜெயிக்கவே பெரிய வாய்ப்பு என்று ஏற்கனவே பார்த்தோம். ஒரே கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதியும் அதே கட்சியை சேர்ந்தவராகத்தான் இருப்பார். இப்போது, அதே கட்சி அமைச்சரவையை வைத்து அதே கட்சியை சேர்ந்த ஜனாதிபதி ஆட்சி நடத்தினால்… இதற்கு எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்? So, there will not be any real democracy post elections.

இப்போதே பல சட்டங்களை, money bill என்று சொல்லி ராஜ்யசபாவை மீறி கொண்டுவருகிறார்கள்...ஒரே நேரத்தில் தேர்தல், ஒரே கட்சி நாடு முழுவதும் ஆட்சி என்று வந்தால், எதிர்ப்பு என்பதே இல்லாமல் அனைத்து சட்டங்களும் நிறைவேறிவிடும். Genunine தவறுகளை கூட கண்டிக்கவோ, தடுக்கவோ ஆள் இல்லாமல் போய்விடும்.

இந்த திட்டத்திற்கு பல அரசு அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக பிபேக் சொல்கிறார். அரசு நிறுவனங்கள் (institutions) இப்போது சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. இந்த கருத்துகளையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள முடியாது.

பிபேக் இதை மிகவும் முன்னுரிமை தரவேண்டிய சீர்திருத்தம் என்கிறார். அப்படி எந்த அவசரமும் எனக்கு தெரியவில்லை. அரசியலமைப்பு சட்டத்தையே பட்டி டிங்கரிங் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தம் இது. பொறுமையாக அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து, அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து பேசி மாற்ற வேண்டிய விஷயம். குறுகிய கால நோக்கங்களுக்காக இதை செய்ய கூடாது என்பதே என் கருத்து.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை திரும்ப வரவழைக்க எந்த உரிமையும் இல்லாத நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானங்களுக்கு செக் வைப்பது போன்ற திருத்தங்கள், ஜனாதிபதியே ஆட்சி செய்வார் போன்ற திருத்தங்கள் மட்டும் ‘சீர்’ திருத்தங்களாக இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

Monday, 5 February 2018

குஜராத் PDS - எத்தனுக்கு எத்தர்கள்


குஜராத் ரேஷன் கடையில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் கொடுத்த மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் போட்டு டேட்டாவை திருடியிருக்கிறார்கள்.
ஆதார் வருவதற்கு முன்பிருந்தே குஜராத்தில் பயோமெட்ரிக் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் வினியோகம் நடந்து வந்தது. ரேஷன் கடையிலே போய் கைநாட்டு வைத்தால் ரசீதும் பொருளும் பெற்று கொள்ளலாம்.
இந்த நடைமுறை சரியாக இல்லை என்று ரேஷன் கடை டீலர்கள் போராடினார்கள். அப்போது குஜராத்தில் ரேஷன் கடை டீலர்கள் தலைவர் பிரஹ்லாத் மோடி.... ஆம், நரேந்திர மோடியின் சகோதரர்தான். டெக்னாலஜி வந்த பிறகு பொருட்களை திருட முடியாததால், ரேஷன் கடைக்காரர்கள் போராடுவதாக அரசாங்கம் சொன்னது. போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை... எப்படியோ, திட்டம் தொடர்ந்தது.
போலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும் இன்னொரு பக்கம் ரேஷன் பொருட்கள் திருட்டு குறைந்ததாக தெரியவில்லை... இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன – ஒன்று வாடிக்கையாளர்களின் கைரேகைகள் சரியாக பொருந்தவில்லை. அதனால், மானுவல் ரிஜிஸ்டர் முறையும் கொண்டு வரப்பட்டது. இது ரேஷன் பொருட்களை திருடுவதற்கு நல்ல வசதி செய்து கொடுத்தது. இரண்டாவது, ரேஷன் கடைகளில் ரசீது கொடுப்பதில்லை. அரசாங்கம் பிரிண்டர் வாங்க காசு கொடுக்கவில்லையோ என்னவோ, டீலர்கள் கைக்காசு போட்டு பிரிண்டர் வாங்கினார்கள். ரசீது குட்டியாக வராது.... A4 தாளில்தான் வரும். ரசீது வேண்டுமென்றால் கூடுதலாக 5 ரூபாய் தரவேண்டும். அதனால், மக்கள் ரசீதும் வாங்கவில்லை. இதுவும் திருட்டு நடப்பதற்கு ஏதுவானது.
போன வருடம் ஆதாரும் வந்தது.... ரேஷன் பொருள் வாங்கும் போது ஆதார் நம்பரும் தந்து, கைரேகையும் வைக்க வேண்டும் என்று நடைமுறை மாற்றப்பட்டது. இப்போது மாற்று மென்பொருள் மூலமாக பயோமெட்ரிக் தரவுகள் திருடப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

இதை பற்றி நெட்டில் தேடியபோது, ஜனவரி மாதமே குஜராத்தி பத்திரிக்கைகள் இதை பற்றி செய்தி வெளியிட்டுள்ளன என்பது தெரியவந்தது. 1.25 கோடி மக்களின் பயோமெட்ரிக் டேட்டா திருடு போயிருக்கிறது. 25000 ரூபாய்க்கு இதற்கான மென்பொருள் கிடைக்கிறது... பெருவாரியான கடைகள் இந்த திருட்டு மென்பொருளை வாங்கியுள்ளன.
என்ன டெக்னாலஜி கொண்டுவந்தாலும் மாற்று டெக்னாலஜி வரத்தான் செய்யும்.... எத்தனை இடங்களில் ஆதார் expose ஆகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் vulnerability அதிகமாகும். இந்த சிம்பிளான, straight forward விஷயம் ஏன் புரியவே மாட்டேன் என்கிறது?
மோசடிகளை தடுக்கவேண்டும், கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லி, ஆதார் கொண்டு சொத்து பதிவு நடைமுறைகள் வந்து கொண்டிருகின்றன. தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் இந்த விஷயத்தில் முண்ணனியில் இருப்பதாக நினைக்கிறேன். இப்படி கைரேகை தகவல்கள் திருடுபோனால், போலி பத்திர மோசடி போல, போலி பயோமெட்ரிக் மோசடிகளும் வரும்.
இந்த அரசாங்கம் execution-ல் ரொம்பவே சொதப்புகிறது. அது Demo ஆகட்டும், GST ஆகட்டும், E-Way bill ஆகட்டும் எல்லாமே சொதப்பல்... அவசர அவசரமாக ஆதாரை கொண்டுவருவதும் சொதப்பலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. தேவை எல்லாம் கொஞ்சம் நிதானம்.... காரணம் பயோமெட்ரிக் விஷயத்தில் நடக்கும் எந்த ஒரு தவறும் almost irreversible....

Friday, 5 January 2018

Equifax மற்றும் ஆதார் திருட்டு


Equifax என்பது அமெரிக்காவில் இருக்கும் ஒரு கிரெடிட் ரிப்போர்ட் கம்பெனி. அதன் வாடிக்கையாளர்களின் சகல விஷயங்களும் (Social Security Number (SSN) உட்பட) அதன் வசம் இருக்கும். கடந்த மே மாதத்தில் Equifax database சில புத்திசாலி திருடர்களால் ஹேக் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 14.5 கோடி அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. பெரிய அளவிலான திருட்டு... அமெரிக்க மக்கள்தொகையே 32 கோடிதான்.
அரசாங்கம் பரிந்துரைத்த சில செக்யூரிட்டி எச்சரிக்கை நடவடிக்கைகளை Equifax கடைப்பிடிக்கவில்லையென்பது குற்றச்சாட்டு. திருட்டு கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை பொதுமக்களுக்கு சொல்லவில்லை. ஆறு வாரங்கள் அமுக்கமாக இருந்து கொண்டு, 3 பெரிய தலைகள் அவர்களுக்கு Equifax-ல் இருந்த பங்குகளை பல மில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார்களாம்.
இப்படி, SSN திருடப்பட்டதால் பல விதமான திருட்டுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி ரீஃபண்டுகள் மோசடியாக வாங்கப்படும். கிரெடிட் கார்டு திருட்டுகள் அதிகமாகும். வாடிக்கையாளர் பெயரிலே வேறு ஒருவர் கடன் வாங்கலாம். இன்னும் என்னென்ன விதமான திருட்டுகள் நடக்கும் என்று சொல்லமுடியாது.
அரசாங்கத்தால் இந்த திருட்டுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. வருமான வரித்துறையால் முடிந்தது எல்லாம், ‘சீக்கிரமாக உங்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்துவிடுங்கள்” என்ற அறிவுரைதான்.
Credit freeze எனப்படும் பாதுகாப்பு முறையை பரிந்துரை செய்கிறார்கள். அதாவது, வாடிக்கையாளர்களின் சம்மதம் இல்லாமல் கிரெடிட் ரேட்டிங் கம்பெனிகள் யாருக்கும் ரிப்போர்ட் தரக்கூடாது என்பதே credit freeze. ஆனால், அதற்கு கட்டணம் உண்டு. Equifax வேறு வழியில்லாமல் கட்டணத்தை தள்ளுபடி செய்துவிட்டது.
ஆனால், இதிலும் ஒரு கஷ்டம் உண்டு. Equifax ஒரே ஒரு ரேட்டிங் கம்பெனி கிடையாது. TransUnion, Experian போன்ற மற்ற கம்பெனிகளும் உண்டு. அவர்கள் credit freezeற்கு கட்டணம் விதிக்கிறார்கள். அவர்களிடமும் credit freeze செய்யவேண்டும். இல்லையேல், உபயோகமில்லை. (கட்டணம் வாங்குவது கம்பெனிகளின் முடிவு. அமெரிக்க அரசாங்கம் இதில் தலையிட முடியாது)
இப்போது இந்தியாவின் ஆதார் மாதிரி பயோமெட்ரிக்கோடு கூடிய அடையாளம் வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். SSN, நம்மூர் ரேஷன் கார்டு போல 1930களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விஷயம். இந்த டிஜிட்டல் காலத்தில் அதன் உபயோகம் சரியல்ல என்றே பலரும் கூறுகின்றனர். (பயோமெட்ரிக் உண்மையிலேயே பாதுகாப்பானதா என்பது அடுத்த விவாதம்)
ஆனால், ஏதாவது செய்தாக வேண்டிய நெருக்கடியில் அமெரிக்கா இருக்கிறது. காரணம், நடந்திருக்கும் திருட்டினால் அப்பாவி மக்கள் ஆயுளுக்கும் பாதிக்கப்படுவார்கள். அவர்களது பிறந்த நாள் விவரங்களை எல்லாம் மாற்ற முடியாது, அல்லவா? கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் நம்பர் என்று எத்தனை விவரங்களை மாற்றுவார்கள்? எவ்வளவு செலவு பிடிக்கும்? மண்டையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது, இந்தியாவின் ஆதார்.... ரொம்பவே பாதுகாப்பான சிஸ்டம்.... டேட்டா திருடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவது. டிரிப்யூன் பத்திரிக்கை ஒரு குட்டி ஆபரேஷன் நடத்தியிருக்கிறார்கள். குறிப்பிட்ட ஏஜெண்டிற்கு 500 ரூபாய் பணம் கட்டினால் பத்து நிமிடத்தில் UIDAI databaseக்கு access கிடைத்துவிட்டது. கிட்டத்தட்ட 90 கோடி இந்தியர்களின் தரவுகள்... புகைப்படம், செல்பேசி எண், முகவரி, இமெயில் முகவரி விவரங்களுடன். நல்லவேளையாக, கைரேகை, ஐரிஸ் விவரங்கள் கிடைப்பதில்லை. இன்னொரு 300 ரூபாய் செலுத்தினால் ஆதார் அட்டை பிரிண்ட் செய்யும் softwareஐயும் தருகிறார்கள்.

இது போல UIDAI database-ற்கு கிட்டதட்ட ஒரு லட்சம் பேருக்கு access இருப்பதாக தெரியவந்துள்ளது. UIDAI இந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
இப்போது ஆதாருடன் வங்கி கணக்குகள், சொத்து, வருமான வரி மற்றும் இன்னபிற விவரங்களையும் இணைத்தால் என்ன மாதிரியான திருட்டுகள் நடக்கும்? நாம் பாதுகாப்பாக உள்ளோமா? இண்டர்நெட் பாங்கிங் சௌகரியங்களுக்காக விருப்பப்பட்டு நான் ரிஸ்க் எடுத்தால் வேறு விஷயம்....ஆனால், என்னை ரிஸ்க் எடுக்க கட்டாயப்படுத்தினால்...? Data theft மூலம் நடக்கும் திருட்டிற்கு இன்ஷூரன்ஸ் உண்டா? அதற்கான பிரீமியத்தை அரசாங்கம் கட்டுமா? எத்தனை கேள்விகள், பதில்தான் கிடைக்காது...!