கேப்டவுன் – தென்னாபிரிக்காவின் முக்கியமான நகரம். ஏப்ரல்
மூன்றாவது வாரத்தில் கேப்டவுனுக்கு ஸீரோ டே வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அதென்ன ஸீரோ டே என்று கேட்கிறீர்களா? குழாய்களில் சொட்டு தண்ணீர் கூட வராமல்
போகும் நாள்தான் ஸீரோ டே.
ஆமாம், டூரிஸத்திற்கு பேர் போன இந்த நகரம் கடுமையான தண்ணீர்
பஞ்சத்தில் மாட்டி கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக மழை சரியில்லை.
தீவாட்டர்ஸ்க்ளூஃப் – கேப்டவுன் பகுதிக்கு தண்ணீர் தரும் பெரிய அணையானது வரண்டு
போய் காணப்படுகிறது (படத்தை பாருங்கள்). மக்கள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க
அரசுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தாலும், நிலைமையை சமாளிக்க முடியவில்லை.
Theewaterskloof Dam |
பிரச்சனைக்கு காரணம் மூன்று – முதல் காரணம், க்ளோபல் வார்மிங்.
பருவ மழை தள்ளி போகிறது, நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் தேவை இல்லாத
இடங்களில் மழை பெய்கிறது, குறைவாக மழை பெய்யும் ஆண்டுகள் குறைந்த இடைவெளிகளில்
வருகிறது (interval between below average rainfall years is decreasing).
இதெல்லாவற்றிற்கும் க்ளோபல் வார்மிங் காரணம் என்கிறார்கள் சுற்றுசூழல்
ஆய்வாளர்கள். எல் நினோவையும் சிலர் காரணமாக கூறுகின்றனர்.
இரண்டாவது காரணம், மக்கள் தொகை. கடந்த 2 பத்தாண்டுகளில் மக்கள்தொகை
79% (2018ல் 43 லட்சம் இருக்கும் என்று கணக்கு) அதிகமாகிவிட்டது. ஆனால், தண்ணீர்
சேமிப்பு 15% தான் அதிகமானது.
மூன்றாவது, அரசியல். கேப்டவுன் மாகாணம் மட்டும் எதிர்கட்சியால்
ஆளப்படுகிறது. மத்திய அரசு விவசாயத்திற்கு நிறைய தண்ணீரை திருப்பி விட்டுவிட்டதாக
கூறுகின்றனர்.
சரி பிரச்சனையை எப்படி சமாளிப்பது? தண்ணீர் சிக்கனம், கடல் நீரை
குடிநீராக்குவது, bore போட்டு தண்ணீர் எடுப்பது. ஏற்கனவே மக்கள் அதிகளவில்
சிக்கனமாகத்தான் இருக்கிறார்கள். நீச்சல் குளங்களை மூடிவிட்டனர். சுற்றுலா
பயணிகளையும் சிக்கனமாக இருக்க சொல்லி வலியுறுத்துகிறார்கள். முடிந்த வரை குளிக்க
வேண்டாம். குளித்தாலும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஷவர் உபயோகிக்க வேண்டாம்.
குழாயை திறந்து வைத்து கொண்டு பல் தேய்க்காதீர்கள். டாய்லெட் ஃப்ளஷ் பார்த்து
உபயோகியுங்கள்.... இன்னும் பல அறிவுரைகள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டமெல்லாம் ரொம்ப மெதுவாக நடக்கிறது.
அரசாங்க திட்டங்களில் ஏற்படும் தாமதம்தான் காரணம். அரசு நிர்வாகம் வேகமாகயில்லை.
தண்ணீர் மேலாண்மை செலவு அதிகரித்திருப்பதால், கேப் டவுன் மேயர்
வறட்சி வரி விதிக்க திட்டம் போட்டுள்ளார். அதாவது, சொத்து மதிப்பிற்கு ஏற்றார்போல
வரி..! இதற்கும் எதிர்ப்பு வந்துள்ளது. முதலில் இப்படியெல்லாம் வரி போட
அரசியலமைப்பு சட்டத்திலேயே இடமில்லையாம். அதற்கு பதிலாக தண்ணீருக்கு அதிக கட்டணம்
விதிக்க சொல்கிறார்கள். ஆனால், அப்படி தண்ணீருக்கு அதிக கட்டணம் விதித்தால்
பணக்காரர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் அதிக வரி செலுத்த வேண்டி வரும்.
சிக்கல்தான்....
கேப்டவுனின் இந்த பிரச்சனை தற்காலிகமானதல்ல என்று சுற்றுசூழல்
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வறட்சி இன்னும் அதிகரிக்கும் என்று
பயமுறுத்துகிறார்கள். இயற்கை வளங்களுக்கு ஏற்ப ஒரு நகரத்தில் இத்தனை பேர்தான்
வசிக்க முடியும் என்று சொல்வது ஒரு நல்ல தீர்வாக இருக்குமா?
No comments:
Post a Comment