Showing posts with label Economics. Show all posts
Showing posts with label Economics. Show all posts

Monday, 27 August 2018

GST – Twitter Support


ஒரு வருடத்திற்கு முன்பு GST வரி அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வர்த்தகர்களுக்கு அதுகுறித்து தலையும் புரியவில்லை… காலும் புரியவில்லை. வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கை எடுத்தது… அதுதான் டிவிட்டர் சப்போர்ட்.
GST@GOI  என்னும் டிவிட்டர் அக்கௌண்ட் மூலம் வரித்துறை அதிகாரிகள், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில், ‘இது புதிய நிர்வாக முறை’ என்று புகழ்ந்திருந்தார்.
இந்த டிவிட்டர் சப்போர்ட் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், என்னால் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வாதம் இதுதான்…. Twitter support is not legally binding...! அதிகாரிகளின் வழிகாட்டுதல் தவறாக இருக்கும்பட்சத்தில் வர்த்தகர்கள் மேல்தான் பெனால்டி விதிக்கப்படும். டிவிட்டரில் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படிதான் நடந்தேன் என்று கோர்ட்டில் சொல்லமுடியாது.
ஒரு வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், அங்கே சட்டம் மட்டும்தான் நிற்கும். இந்த டிவிட்டர் ஆலோசனைகள் நிற்காது… அரசாங்கம் இதற்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றேன். நண்பர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்துக்கு என் மோடி விரோதமே காரணம் என்று குறை கூறினார்.
ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. சட்டத்தோடு ஒத்துப்போகாத சில வழிகாட்டுதல்கள் இந்த டிவிட்டர் அக்கௌண்டில் வழங்கப்பட்டன. அதன் காரணமாக வர்த்தகர்களுக்கு பெனால்டியும் விதிக்கப்பட்டது. அரசாங்கம், இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லையென்று கைகழுவிவிட்டது.
தற்போது GST வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அரசு இந்த டிவிட்டர் சப்போர்ட்டை நிறுத்திவிட்டது.
இதே போன்று ரயில்வேயிலும், பாஸ்போர்ட் பிரச்சனைகளிலும் டிவிட்டர் மூலம் புகார்கள் ஏற்கப்பட்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிவிட்டர் மூலம் சப்போர்ட் என்பதில் இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று, அதிகார மையங்களை வெகு சுலபமாக அணுகமுடிகிறது. இரண்டு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் கணக்காக உடனடி தீர்வுகள் எட்டப்படுகின்றன.
அவசர உதவிகளுக்கு டிவிட்டர் சப்போர்ட் ஒரு நல்ல வழிமுறை. சமீபத்தில் 25 சிறுமிகள் கடத்தலை தடுக்க டிவிட்டர் சப்போர்ட் உதவியது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்கும் responsibility-யோ, நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரமோ இருப்பதில்லை. அதற்கு இந்த GST வழிகாட்டுதல்கள் ஒரு நல்ல உதாரணம். மேற்சொன்ன குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து விஷமிகளால் போலியாக தரப்பட்டால், போலீஸும், அரசு நிர்வாகமும் புகார் உண்மையா, பொய்யா என்ற குழம்பிவிடும்.
ஏதோ ஒரு வகையில் டிவிட்டர் சப்போர்ட் சட்டரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும். அப்போதுதான் இந்த நடைமுறையின் பயன்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

Saturday, 25 August 2018

Why Primary Sector is Important to India


நேற்று London School of Economics –ல் மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடி கொண்டிருந்தார். ஒரு மாணவியின் கேள்வியும், ராகுலின் பதிலும் என் ஞாபகத்திலிருந்து தருகிறேன். இது Verbatim கிடையாது.

கேள்வி – நீங்கள் ஏன் விவசாயத்திற்கு முன்னுரிமை தருகிறீர்கள்? தொழில்துறை, டெக்னாலஜிக்கு முன்னுரிமை தரலாமே….!

ராகுல் – நீங்கள் பொருளாதாரத்தை அப்படி பிரித்து பார்க்கலாம். நான் அப்படி பார்க்கவில்லை. அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது. விவசாய முன்னுரிமை குறித்து சொல்லவேண்டுமென்றால் நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். சில காலத்தில் Rural demand உயர்ந்தது. அது பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் kick start செய்தது. பொருளாதாரமே வளர்ந்தது.
வேறு விதத்தில் சொன்னால், நீங்கள் எல்லோரும் ஏன் மெடிக்கல் படிக்கக்கூடாது. ஏன் சிலர் தத்துவம் படிக்கிறீர்கள், சிலர் பொருளாதாரம் படிக்கிறீர்கள். இது அத்தனையும் சேர்ந்ததுதான் அறிவு அல்லவா? அது போலத்தான் பொருளாதாரமும். (மாணவர்களிடையே பலத்த கைத்தட்டல்கள்)

ராகுல் இந்த கேள்விக்கு இன்னும் முழுமையான விடையளித்திருக்கலாம். ஆனால், கூடியிருக்கும் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமென்று சுருக்கமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராகுலின் கருத்தை நான் எப்போதும் ஆதரித்திருக்கிறேன். அமெரிக்காவின் labour by sector பாருங்கள் – Primary: 0.9%, Secondary: 18.9%, Tertiary: 80.2%. சைனா - Primary: 29.5%, Secondary: 29.9%, Tertiary: 40.6% (2014). இப்போது இந்தியாவை பார்ப்போம் - Primary: 47%, Secondary: 22%, Tertiary: 31%

சைனா தன்னை secondary sector-ல் வளர்த்து கொண்டபோது காலம் அதற்கு சாதகமாக இருந்தது. இனி வரப்போகும் காலம் post-trump காலம்... outsourcing-ற்கு எதிராகவே இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் டெக்னாலஜி படையெடுப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இதில் outsourcing-ற்கு இடம் ஏது?

அதே போல டெக்னாலஜி படையெடுப்பால், tertiary sector-ல் வேலைவாய்ப்புகளும் வளரப்போவதில்லை. இந்தியாவில் employment elasticity (GDP வளர்ச்சிக்கு எத்தனை வேலைவாய்ப்புகள் என்னும் ratio) ஏற்கனவே குறைவாக இருக்கிறது. இனியும் அப்படி தொடரவே வாய்ப்பிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை நிறைய தருவது MSME (Micro, Small, Medium Enterprises). ஆனால், பாஜக அரசு அதைத்தான் நசுக்கி கொண்டிருக்கிறது. மாறாக, Make in India கோஷம் போட்டு வெளிநாட்டு பெரிய கம்பெனிகளை கூப்பிட்டு கொண்டிருக்கிறது. கடைசியில், MSMEயும் அடிவாங்கிவிட்டது. Make in India-வும் முன்னே சொன்ன காரணங்களால் வெற்றியடையவில்லை. இரண்டும் உருப்படவில்லை.

அப்படியே Make in India வெற்றியடைந்திருந்தாலும், எத்தனை பில்லியன் முதலீடுகள் வேண்டியிருக்கும்? அதனால், எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை சுற்றுசூழல் மாசடைந்திருக்கும்? சைனாவின் Primary செக்டாரில் 30% மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அதற்க்குள்ளேயே அந்த நாட்டின் சுற்றுசூழல் மோசமாகிவிட்டது. மக்கள்தொகை மிகக்குறைந்த அமெரிக்க மாடல், மக்கள்தொகை மிகுந்த சைனாவிற்கு ஒத்துப்போகாது. இனி வரப்போகும் outsourcing-ற்கு எதிரான காலத்தில் இந்தியாவிற்கு சுத்தமாக ஒத்துப்போகாது.

மிச்சமிருக்கும் ஒரே துறை விவசாயம் சார்ந்த துறைகள்தான். (கண்மூடித்தனமான சுரங்க தொழிலை நான் ஆதரிப்பதில்லை. வேறொரு சமயம் இதுகுறித்து பேசலாம்) எதிர்கால சமுதாயத்திற்கு செய்வதற்கு ஏதாவது வேலை வேண்டும். அதை விவசாயம் சார்ந்த வேலைகள் மட்டுமே தரும். லாப நோக்கம் மட்டுமே கொண்ட கார்ப்பரேட்டுகளால் பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியாது. GDP நம்பர் விளையாட்டு மட்டுமே நடக்கும்… வளர்ச்சி இருக்காது.

Thursday, 23 August 2018

Indian Power Sector and Uday Scheme


மின்சார விநியோகம் செய்யும் கம்பெனிகள் (சுருக்கமாக டிஸ்காம்) ஏகமாக கடனில் மூழ்கியிருக்க அவற்றை காப்பாற்ற வந்ததாக சொல்லப்படும் ஒரு ஸ்கீம்தான் உதய்.
கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும், யூனியன் டெரிடரிகளும் உதய் திட்டத்தில் இணைந்துவிட்டன. இந்த திட்டம் மூலமாக இந்திய மின்துறையில் அபாரமான மாற்றம் வரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. 2015 இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது இரண்டாண்டுகளை கடந்து விட்டது. இந்த திட்டம் என்ன, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

உதய் திட்டத்தின் செயல்பாட்டை பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முதலில் டிஸ்காம்களின் கடன்சுமையை தெரிந்து கொள்ளலாம். 2015 செப்டம்பரில் இந்தியாவில் இருந்த அனைத்து டிஸ்காம்களின் மொத்த கடன்சுமை 4.3 லட்சம் கோடிகள். அதிகபட்சமாக ராஜஸ்தான் 85000 கோடிகள் கடன், தமிழ்நாடு 75000 கோடிகள் கடன். இந்த கடனுக்கு வட்டி கட்டியே லாபம் மொத்தமும் போய்விடும். (லாபம் வந்துட்டாலும்… அது வேறு கதை)

டிஸ்காம்கள் நஷ்டத்தில் இருந்தால் இருந்துவிட்டு போகிறது, பிரச்சனை என்ன? நாடு முழுக்க தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பது மத்திய அரசுகளின் குறிக்கோள். மின்சாரம் இல்லாமல் வளர்ச்சி இல்லை. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியாவது இந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க காசு வேண்டுமே. நஷ்டத்தில் இயங்கும் டிஸ்காம்களால் மின்சாரம் வாங்க முடியாது, அல்லவா?

அதனால், டிஸ்காம்கள் லாபமாக இயங்கவேண்டும்…. அப்போது அவற்றின் கையிலே காசு புழங்கும்… மின்சாரத்தை அதிகமாக வாங்கும்…. மின்துறையில் முதலீடுகள் பெருகும். இப்படி நடந்தால் அனைவருக்கும் win-win situation.

சரி, டிஸ்காம்களின் கடன்தானே பிரச்சனை? அந்தந்த மாநில அரசுகளே அவர்கள் மாநிலத்தில் உள்ள டிஸ்காம்களின் கடனை எடுத்து கொண்டால் என்ன? டிஸ்காம்களை எளிதாக காப்பாற்றி விடலாமே…! அதுதான் முடியாது… FRBM Act என்னும் ஒரு சட்டம், அப்படி மாநில அரசுகள் கடன்களை எடுத்து கொள்வதை தடுக்கிறது. அது என்ன சட்டம்?

ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கண்டமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தன. வரவுக்கு மீறிய செலவு… fiscal deficit என்று சொல்வார்கள். வரவுக்கு மீறி செலவு செய்தால் என்ன ஆகும்? கடன்தான் ஆகும். இப்படி ஒரேடியாக கடன் வாங்க கூடாது என்பதை மத்திய அரசுகள் (காங், பாஜக இரண்டுமே) உணர்ந்தன. அதனால், Fiscal deficit-ற்கு லிமிட் வரையறுத்து ஒரு சட்டத்தை போட்டது. அதுதான் FRBM Act.

இப்போது டிஸ்காம்களின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் FRBM சட்டப்படி நிர்ணயித்த fiscal deficit அளவை தாண்டிவிடும். அதனால், மாநில அரசுகள் கடனை ஏற்க முடியாது.

நாளடைவில், டிஸ்காம்களின் கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே போனதால், debt trap எனப்படும் கடன் சுழலில் மாட்டி கொண்டன.

டிஸ்காம்களின் நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், வோட்டு அரசியல். மாநில அரசுகள் வோட்டு அரசியலை மனதில் வைத்துக்கொண்டு மின்கட்டணத்தை ஏற்றுவதில்லை. அதாவது, டிஸ்காம்களின் கடன் சுமையையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. அதே சமயம், வருமானம் அதிகமாக வர மின்கட்டணத்தையும் அதிகரிக்காது.

டிஸ்காம்களின் திறமையை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை அடுத்து பார்க்கலாம். டிஸ்காம்களின் திறன் Aggregate Technical and Commercial Losses எனப்படும் AT&C losses-யை அடிப்படையாக கொண்டது.

மொத்தம் இவ்வளவு மின்சாரம் அனுப்பினால், எத்தனை மின்சாரம் பெறப்படுகிறது என்பது டெக்னிக்கல் நஷ்டம். அதிக மின்சார லோடு, டிரான்ஸ்பார்மர், லைன் கெபாசிடி குறைவு, தரமான பராமரிப்பு இன்மை போன்றவை இதற்கான காரணங்கள். மற்றதெல்லாம் கமர்சியல் நஷ்டம். உதா. மின் திருட்டு, மீட்டரில் திருட்டுத்தனம், பில் பணம் கட்டாதது போன்றவை.

ஒரு டிஸ்காமின் திறமையை இந்த AT&C loss வைத்தே கணக்கிடுவார்கள். 15 சதவிகிதத்திற்குள் AT&C loss கொண்டு வரவேண்டும் என்பது உதய் திட்டத்தின் டார்கெட்.

சரி, ஓரளவிற்கு பேக்கிரவுண்ட் தகவல்களை பார்த்துவிட்டோம். இப்போது உதய் ஸ்கீம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் டிஸ்காம்களின் நஷ்டத்தை கட்டுப்படுத்துவது அந்த டிஸ்காம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் வேலை. தேவையான உதவிகளை செய்வது மட்டுமே மத்திய அரசின் வேலை.

முதலில் கடன்சுமையை எப்படியாவது குறைக்கவேண்டும். அப்போதுதான் டிஸ்காம்களால் புதிய கடன்களை பெற்று, தேவைப்படும் மின் உபகரணங்களில் முதலீடு செய்யமுடியும். லாபத்தின் பாதையில் திரும்பமுடியும். இல்லையென்றால் பழைய உபகரணங்களை கொண்டு AT&C loss-ஐ கட்டுப்படுத்த முடியாது.

உதய் திட்டத்தின் கீழே, டிஸ்காமின் கடன்களில் 75% மாநில அரசு எடுத்துக்கொண்டு பாண்டுகள் வெளியிடலாம். இது FRBM சட்டத்தின் கீழே தவறாக கருதப்படாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதே போல மீதமிருக்கும் 25% கடனை டிஸ்காம்கள், மாநில அரசின் கேரண்டியோடு பாண்டுகளாக மாற்றி கொள்ளலாம். மாநில அரசின் கேரண்டி இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். மாநிலங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக மின்கட்டணத்தை ஏற்றிவரவேண்டும். இதுவும் டிஸ்காம்களின் நஷ்டத்தை குறைக்கும்.

சரி, கடன்சுமை போனது… அடுத்து AT&C loss குறைக்கவேண்டும். புதிய எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்துவது, டிரான்பார்மர் பராமரிப்பு, மாற்றம் உள்ளிட்ட வேலைகள், மின்திருட்டை தடுப்பது, பணவசூல் ஆகியவை இதில் அடக்கம்.

AT&C loss கட்டுப்படுத்தினால் மின்உற்பத்திக்கு தேவையான கரி, அந்தந்த மாநிலங்களுக்கு சகாயவிலையில் கிடைக்கும். மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் உண்டு. இல்லையென்றால், ஒன்றும் கிடையாது. இது ஒரு கேரட்-ஸ்டிக் அப்ரோச்.

உதய் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், Coal Linkage Rationalisation என்னும் திட்டம். இதன்படி பவர் பிளாண்டுகளுக்கு அருகிலிருக்கும் கரி சுரங்கங்களிலிருந்து கரி வாங்கி கொள்ளலாம். முன்பெல்லாம் பிளாக் அலாக்கேஷன் என்று எந்த சுரங்கம் ஒதுக்கப்பட்டதோ, அங்கிருந்துதான் கரி வரவேண்டும். சரக்கு போக்குவரத்து கட்டணமே அதிகமாக இருக்கும். இப்போது அருகிலிருக்கும் சுரங்கங்களில் இருந்து கரி வருவதால் அந்த செலவு குறைவு.

இதன் நீட்சியாக, அடுத்திருக்கும் பவர் பிளாண்டுக்கு கரி இல்லையென்றால், கரியை கைவசம் வைத்திருக்கும் அருகாமை பிளாண்டிலிருந்து எடுத்து கொடுக்கலாம். இதை Swapping என்று சொல்கிறார்கள்.

இந்த இரண்டு ஐடியாக்களின் மூலம் போக்குவரத்து (Transportation and Logistics) செலவுகள் குறையும். அப்போது, மின் உற்பத்தி விலையும் குறையுமல்லவா? டிஸ்காம்கள் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கலாம்.

இப்போது உதய் திட்டத்தின் பயன்களை பார்க்கலாம்… முதல் வருடம் நல்ல ஆரம்பம். AT&C நஷ்டம் ஒரு சதவிகிதம் குறைந்தது. நிதி சீரமைப்பு (Fin Restructure) காரணமாக டிஸ்காம்களுக்கு 15000 கோடி ரூபாய்கள் மிச்சமாயின.

இரண்டாம் வருடத்தில் AT&C நஷ்டம் 20.3% லிருந்து 19.1%-ஆக வந்து விட்டது. (தற்சமயம் 18.75%). 4 மாநில டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் டிஸ்காம் லாபம் 1565 கோடி (போன வருடம் 10203 கோடி நஷ்டம்)

மோசமான மாநிலங்களை பார்ப்போம். பீமாரு மாநிலங்களில் ராஜஸ்தான் ஒருபக்கம் லாபகரமாக போனாலும், இன்னொரு பக்கம் ஜார்கண்ட் வந்து இணைந்து விட்டது. இந்த மாநிலங்களில் AT&C நஷ்டம் உபி 28%, பீஹார் 33%, மபி 30%, ஜார்கண்ட் 32%. இருப்பதிலேயே குறைச்சல் ஆந்திராவாம் 8.7%. (தமிழ்நாடு தற்சமயம் 14.23%)
வட்டியை குறைத்ததாலேயே டிஸ்காம்களின் பெரும் சுமை குறைந்துவிட்டது. Coal Linkage Rationalisation திட்டமும் சில ஆயிரம் கோடிகள் செலவை குறைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் மீட்டர்கள் மூலமும், துல்லியமாக மின்சார உபயோகம் கணக்கெடுக்கப்படுவதால் வரவு அதிகமாகிறது. இரண்டே வருடங்களில் டிஸ்காம்களின் நஷ்டம் 70% குறைந்து விட்டது. Very good என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?

அவ்வளவு எளிதாக சொல்லமுடியாது. டிஸ்காம்களின் லாபத்தை முழுவதுமாக கொண்டாட முடியாது. காரணம், டிஸ்காம்களின் கடன், வட்டி சுமையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது. அதாவது, மக்கள் மின்கட்டணம் கட்டியதற்கும் மேலாக வரிப்பணத்தை தருகிறார்கள் என்று அர்த்தம். FRBM சட்டத்திலிருந்து விலக்கு அளித்தாலும், கடன் என்பது கடன்தான். அதை அடைக்கும் வழிகளையும் பார்க்கவேண்டும்.

டிஸ்காம்களின் லாபத்தை கொண்டாட முடியாததற்கு இன்னும் ஒரு ரொம்ப முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் மின்உற்பத்திக்கு நிறுவனங்களுக்கு (Gencos) காசு கொடுப்பது. டிஸ்காம்கள் நஷ்டம் 17350 கோடிகள் குறைந்தது என்றால், ஜென்கோஸ்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 150% அதிகரித்து, 32071 கோடியாக உயர்ந்துள்ளது. உபி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே இந்த தொகையில் 60% காரணம்.

இதனால் என்னவாயிற்று…? 180000 கோடிகள் மதிப்புள்ள ஜென்கோஸ்களின் பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியுள்ளது. அதில் 70000 கோடி NPAவாக மாறிவிட்டது. ஜென்கோஸ்களுக்கு சரியான நேரத்தில் ஒழுங்காக பணம் கொடுத்திருந்தால், டிஸ்காம்களின் நஷ்டம் அதிகரித்திருக்கும் என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம் டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வருகிறது என்று பார்த்தால், இன்னொரு பக்கம் ஜென்கோஸ்கள் அடிவாங்குவதையும், கடன்கள் NPA ஆவதையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதாவது, நஷ்டம் மாறவில்லை…. நஷ்டம் ஏற்படும் இடம்தான் மாறியிருக்கிறது.

அடுத்ததாக ஜென்கோஸ்களையும், அவற்றின் பிரச்சனைகளையும் கவனிப்போம்.
உதய் திட்டம் என்பது பவர் செக்டாரின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை வல்லுனர்கள் இழந்துவிட்டனர். மத்திய அரசு உதய் திட்டத்தின் வெற்றி பற்றி மட்டுமே பேசும். ஜென்கோஸ்கள் பற்றியும், பவர் செக்டாரின் பிரச்சனைகள் குறித்தும் பேசவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.

முன்பெல்லாம் மின்சாரம் என்றாலே தெர்மல், ஹைட்ரோ, நியூக்ளியர் என்றிருந்தது. இப்போது பிரபலமாகி வருவது ரினூவபல்ஸ் (Renewables). அதாவது சோலார், விண்ட் போன்றவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல நாடுகள் ரினூவபல் எனர்ஜியில் முதலீடு செய்து வருகின்றன. பழைய தெர்மல் பிளாண்டுகளை மூடியும் வருகின்றன. இந்த மாற்றம் இந்தியாவின் ஜென்கோஸ்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் பவர் பிளாண்டுகளின் இன்ஸ்டால்டு கபாசிடி வைத்து பார்த்தால் தெர்மல் கிட்டதட்ட 65%, ஹைட்ரோ 14.5%, ரினூவபல்ஸ் 16.2% (நியூக்ளியர் எல்லாம் வெறும் 2%). இப்போதைய முதலீடுகள் பெரும்பாலும் ரினூபவல்ஸ் ஏரியாவில்தான், அதிலும் முக்கியமாக சோலார் பவர்.

2012ல் ரினூவபல் கபாசிடி 24500 மெகாவாட்டுகள். 2017ல் 57000 மெகாவாட்டுகள். 2018ல் 69000 மெகாவாட்டுகள். முக்கியமாக மோடி அரசு சோலார் மின்சாரத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. அதுதான் பிரச்சனைக்கு அடிநாதம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? விவரமாக சொல்கிறேன். (படத்தை கவனமாக பார்க்கவும். UPA2, NDA அரசுகளின் கீழே Growth% கவனிக்கவும். NDA ஆட்சியில் ரினூவபிலில் இருக்கும் அசுர வளர்ச்சியையும் கவனிக்கவும்)

ஆரம்பகாலத்திய டெக்னாலஜியில் ரினூவபல் மின்சாரம் விலை அதிகம். தெர்மல் மின்சாரம் விலை குறைவு. ஆனால், இப்போது டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு பிறகு ரினூவபல் மின்சாரம் விலை வெகுவாக குறைந்து விட்டது.

வேறுவிதத்தில் சொன்னால், தற்போதைய தெர்மல் மின்சாரம் மொத்தத்தையும் ரினூவபல் மின்சாரத்தின் விலையில் வாங்கினால் டிஸ்காம்களுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய்கள் மிச்சமாகும். தற்போதைய ரினூவபல் மின்சாரம் அவ்வளவு சீப்…!

உதய் திட்டம், லாபத்தை நோக்கமாக, அளவுகோலாக கொண்டு டிஸ்காம்களை குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்க தூண்டுகிறது. இப்போது, டிஸ்காம்கள் தெர்மல் மின்சாரம் வாங்குவார்களா, அல்லது குறைந்த விலையில் ரினூவபல் மின்சாரம் வாங்குவார்களா?

இன்னொரு விஷயமும் இருக்கிறது. ரினூவபல் மின்சாரத்தை மட்டுமே எடுத்து கொண்டாலும், ஆரம்ப காலத்து ரினூவபல் மின்சாரத்தின் விலை அதிகம். சமீபத்திய ரினூவபல் மின்சாரத்தின் விலை குறைவு. டிஸ்காம்கள் ஆரம்பித்தில் போட்ட PPA-க்களின் (Power Purchase Agreement) விலையில் மின்சாரம் வாங்க மறுக்கின்றன. இந்த PPAக்கள் 25 வருட காலத்திற்கு போடப்பட்டவை. (முக்கியமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் முந்திரிக்கொட்டை போல ஆரம்பகாலத்திய ரிடனூபவலில் ஏகத்துக்கும் இறங்கிவிட்டன. இப்போது விலையை குறைக்க கேட்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் மத்திய அரசும் இதே போல அவசர கதியில் இறங்குவதை கவனிக்கலாம்)

இந்த PPAக்கள் அடிப்படையில்தான் முன்னர் பிராஜெக்டுகள் தொடங்கப்பட்டன… கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது 40GW பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட 25GW பிராஜெக்டுகளுக்கு PPA-க்களே போடப்படவில்லை.

சரி, தெர்மல் பிளாண்டுகளில் முதலீடுகள் அடியோடு நிறுத்துப்பட்டுவிட்டனவா? அதுதான் இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி தெர்மல் பிளாண்டுகள் ஒரு பக்கம் கட்டப்பட்டு கொண்டிருகின்றன. அவற்றின் எதிர்காலம் என்னவாகும்?


இனி இந்திய பவர் செக்டாரின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பொறுமையாக பார்ப்போம்.
இந்தியா இப்போது உலகிலேயே மின் உற்பத்தியிலும் மின் நுகர்விலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிடம் சைனா 6000 டெராவாட்டுகள், இரண்டாமிடம் அமெரிக்கா 4300 டெராவாட்டுகள், மூன்றாமிடம் இந்தியா 1400 டெராவாட்டுகள். இந்தியாவில் இன்னும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வரவில்லை. இன்னுமும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற போகிறது. அப்போது மின்தேவை எவ்வளவு இருக்கும்?

சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்தால் ரினூவபல்ஸ்தான் எதிர்காலம். இப்போது கிடைக்கும் டெக்னாலஜியை கொண்டு ரினூவபல்ஸில் முதலீடு செய்கிறார்கள். ஒரு யூனிட் 2 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். நாளையே டெக்னாலஜி வளருகிறது. ஒரு யூனிட் 50 பைசாவுக்கு கிடைக்கலாம். தற்போது முதலீடு செய்பவர்கள் அப்போது நஷ்டத்தில போய்விடுவார்கள், அல்லவா?

அப்படியானால் என்ன செய்யவேண்டும்? உதய் திட்டத்திலே டிஸ்காம்களை ஒரு வர்த்தக போட்டியிலே, லாப நோக்கத்திலே அரசு தள்ளுகிறது. குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவது டிஸ்காம்களுக்கு லாபம். ஆனால், ஜென்கோஸ்களுக்கு நஷ்டம். இந்த நஷ்டம் பழைய டெக்னாலஜி ரினூவபல்ஸ்க்கும் வருகிறது.

இந்த லாப நோக்கத்தை கைவிட்டுவிட்டு, ஜென்கோஸ், டிஸ்காம், நுகர்வோர் இந்த மூவருக்கும் நிலையான பலன் தரும் திட்டங்கள்தான் நமக்கு தேவை. குறுகிய கால லாப நோக்கில் தீட்டப்படும் திட்டங்கள், நீண்ட கால முதலீடுகளை அழித்துவிடும். இன்றைய ஜென்கோஸ்களின் திண்டாட்டம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். காரணம், டெக்னாலஜியின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் மின்சார விலை குறையும் வாய்ப்பு/ ரிஸ்க் இருக்கிறது என்றால் எந்த முதலீட்டாளர் நீண்டகால முதலீடுகளை செய்வார்? இது மின்சாரத்துறையின் நீண்டகால நலனுக்கு எதிரானது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான துறையினை, வோட்டு அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. டிஸ்காம்களின் நஷ்டம் பல்லாயிரம் கோடிகள் குறைந்துவிட்டது என்று விளம்பரப்படுத்துவதும், பேட்டிகள் கொடுப்பதும் வோட்டுகளை கொண்டுவரலாம். ஆனால், கண்டிப்பாக நாட்டிற்கு முன்னேற்றத்தை கொண்டுவராது.
உதய் திட்டத்தை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். ஆனால், as usual the devil is in details. ஜென்கோஸ்களின் cash flow பிரச்சனை, டெக்னாலஜி பாய்ச்சல், மின்துறையில் NPA என்று பல விஷயங்களை காணும்போது, மத்திய அரசின் செயல்பாடு மின்துறையின் நீண்டகால குறிக்கோள்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
 

மின்சாரம் அனைவருக்கும் வேண்டும். அதில் சந்தேகமேயில்லை…. ஆனால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தில்தான் அது நடக்குமானால், அது சந்தை பொருளாதாரம் கிடையாது… நீண்ட கால வளர்ச்சிக்கும் அது உதவாது. இதை மனதில் கொண்டே மத்திய அரசு அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும்.


Tuesday, 31 July 2018

NSE and Sharemarket reforms


90-களில் நரசிம்மராவும், மன்மோகனும் சேர்ந்து செய்த பல பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று, பங்கு சந்தையை நவீனமயமாக்கியதே.

24 ஆண்டுகளுக்கு முன்பு (23.7.94), NSE  ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை BSEதான் நாட்டிலேயே பெரிய பங்குசந்தை. உண்மையிலேயே சந்தைக்கடை போல கூவிக்கூவித்தான் பங்குகளை வாங்க/ விற்கவேண்டும். பேப்பரில்தான் பங்கு சர்டிபிகேட்டுகள். Delivery default-கள் அதிகம்.

NSE அவற்றையெல்லாம் மாற்றியது. முதன்முறையாக Screen Based Trading அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டரில் விலையை போட்டால் உங்கள் ஆர்டரோடு பொருந்தும் இன்னொரு ஆர்டரை கம்ப்யூட்டர் மேட்ச் செய்தது.

மன்மோஹன் NSE-ஐ தொடங்கிவைக்கிறார்
ஆரம்பத்தில் NSE சந்தையை ஒருத்தரும் மதிக்கவில்லை. NSE-ல் வர்த்தகம் ஒரு நாளைக்கு 10 கோடிதான். BSE-ல் வர்த்தகமோ 200-250 கோடி. ஒரு பங்கு சந்தை வளர வர்த்தகம் முக்கியம். வர்த்தகம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் பங்குகளை எளிதாக வாங்கவோ, விற்கவோ முடியும். இதை Liquidity என்பார்கள். ஆக, liquidity இருந்தால்தான் நீங்கள் அந்த சந்தைக்கு போவீர்கள். உங்களை போன்ற பலர் சந்தைக்கு வந்தால்தான் liquidity பெருகும். Chicken or Egg பிராப்ளம்தான்.

NSE இதை அனாயசமாக சமாளித்தது. Screen based trading  புரோக்கர்களை ஈர்த்தது. எட்டே மாதத்தில் BSE-க்கு நிகரான வர்த்தகம், 18 மாதங்களில் BSE போல ஒன்றரை மடங்கு வர்த்தகம். கொஞ்சம் கொஞ்சமாக BSE  ஆதரவு புரோக்கர்கள் NSE வசம் வந்துவிட்டார்கள்.

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பங்குகளை டிமாட்டாக (Demat) வைத்து கொள்ள, 96-ல் NSDL ஆரம்பிக்கப்பட்டது. அதே போல பங்கு வர்த்தகத்தில் default வராமல் இருக்க NSCCL ஆரம்பிக்கப்பட்டது. இவையிரண்டும் சேர்ந்து T+2 செட்டில்மெண்டுக்கு வழிவகுத்தது. (T+2 என்றால் நீங்கள் பங்குகள் வாங்கிய இரண்டு நாட்களில் உங்கள் டிமாட் அக்கௌண்டுக்கு பங்குகள் வந்துவிடும் என்று அர்த்தம்)

இவற்றுக்கெல்லாம் முன்பேயே 92ல் SEBI ஆரம்பிக்கப்பட்டு, பங்குச்சந்தைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தரப்பட்டது.

இவையனைத்தையும் செய்தது காங்கிரஸ்தான் என்பதை மறக்கக்கூடாது. காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

எதற்காக பழைய கதை என்றால், NSE ஆரம்பித்து 24 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இரவு நேரத்திலும் டிரைவேடிவ் வர்த்தகம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று தெரியவில்லை.

காரணம், Cash Market எனப்படும் உண்மையான பங்குச்சந்தை இரவிலே இயங்காது. பங்குகளின் விலையை அடிப்படையாக வைத்துதான் டிரைவேடிவ் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆக, Cash market இல்லாது derivative market சிறக்காது.

இரவு பொழுதில் நிறைய பேர் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அதனால் கமிஷன் கட்டுபடியாகாது என்கிறார்கள் புரோக்கர்கள். எப்படியிருப்பினும் இது NSE-ன் புது முயற்சி…!

Monday, 23 July 2018

Jobless Growth


இந்தியாவில் அமைப்பு சார்ந்த வேலைகளில் (Formal Employment) இருப்பவர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. 2017ல் 40.67 கோடி பேர் பணிபுரிந்த இடத்தில் தற்போது 40.62 கோடி பேர் பணிபுரிகிறார்களாம். அதாவது, வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாக வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கையை விட 5 லட்சம் அதிகம். இது formal sector மட்டும் என்பதை கணக்கில் கொள்ளவும். Informal sector-ல் இன்னமும் அதிகமாக இருக்கக்கூடும்.

மார்ச் மாதமே இதுகுறித்து பதிவு போட்டிருந்தேன். https://www.facebook.com/vijayasarathy.rao/posts/1680577802035035. கூடிய விரைவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த வருடம் ஒரு காலாண்டு கழிந்த பின்னரும் ராக் பாட்டம் எனப்படும் அடிமட்டம் தொடப்படவில்லை.

சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் புதிய முதலீடுகள் 38% குறைந்துவிட்டன. ஏற்கனவே ஆரம்பித்த பிராஜெக்டுகளும் முடியாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. சென்ற வருடம் (17-18) FDI 15% குறைந்துவிட்டதாக தெரிகிறது. பொருளாதாரம் Demo, GST பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.


வேலைவாய்ப்புகள் மீண்டும் வர எத்தனை மாதங்களாகுமோ? இதில் புதிய வேலைவாய்ப்புகள் என்று நாடாளுமன்றத்தில் மோடி சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? Jobless growth யாருக்கு நன்மை?


Friday, 20 July 2018

Chinese Yuan and Indian Exports


அமெரிக்கா சீனபொருட்கள் மீது வரிவிதித்ததாலோ என்னவோ, சீனா நைஸாக தன் கரன்ஸியின் மதிப்பை குறைத்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 8% மதிப்பு குறைந்துவிட்டது. இது சீனாவின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான விஷயம்.

யானையும் யானையும் சண்டை போடும்போது கோழி நசுங்குவது போல, நடுவிலே 
இந்திய ஏற்றுமதி அடிபடும். ஒருவேளை டாலருக்கு எதிராக ரூபாய் விழுவது மத்திய அரசின் ராஜதந்திரமா அல்லது காலி பெருங்காய டப்பாவா?

யுவான் ஏப்ரலிலிருந்து விழுகிறது… அதாவது, அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரிவிதிப்பை முன்மொழிந்த நாளிலிருந்து….!

அதற்கு மாறாக ரூபாய் ஜனவரியிலிருந்து விழுகிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் – ஏற்றுமதி – இறக்குமதி வித்தியாசம், க்ரூட் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததும்/ வெளியேறுவதும்.

ஸோ, சீனாவை சமாளிக்கும் விதமாக ரூபாய் மதிப்பு விழவில்லை… காலி பெருங்காய டப்பாதான்…!

Tuesday, 17 July 2018

Minimum Support Price


சமீபத்தில் மத்திய அரசால் விவசாய பொருட்களுக்கான MSP அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50% விலை என்னும் தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றிவிட்டது என்று பாஜகவினரும், இந்த MSP கணக்கு ஏமாற்று வேலை என்று எதிர்கட்சியினரும் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை கொஞ்சம் அலசியிருக்கிறேன். 
ராகுல்காந்தி ஒரு கணக்கு சொல்கிறார். இந்தியாவில் 12 கோடி விவசாயக்குடும்பங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 15000 கோடி ரூபாய் MSP-க்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 1250 ரூபாய் மட்டுமே. இதனால் பயன் ஏதும் இல்லை என்கிறார். 
இந்த கணக்கு சரியா? தவறு. முதலில் 15000 கோடி என்பது அதிகரிக்கப்பட்ட MSPக்கான ஒதுக்கீடு. இதை மொத்த ஒதுக்கீடு போல பேசக்கூடாது. இரண்டாவது, இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் கம்பேர் செய்யும் பேச்சு. MSP என்பது பயிர்களின் உற்பத்தி அடிப்படையில் தருவது. விவசாய குடும்பம் அடிப்படையில் அல்ல. ஆக, ராகுலின் வாதத்தில் சாரம் இல்லை. 
இவ்வளவு MSP அதிகரிப்பதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை (Fiscal Deficit) அதிகரிக்கும் என்கிறார்கள். இதற்கு ஜேட்லி, பட்ஜெட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டதால் பற்றாக்குறை அதிகரிக்காது என்று அசட்டுத்தனமான விளக்கம் அளித்திருக்கிறார். MSP ஏற்றுவது ஒரு வருட கதையல்ல, ஒவ்வொரு வருடமும் மொய் வைக்க வேண்டும், அல்லவா? 
இப்படி இரண்டு பக்கமும் அசட்டுத்தனமான வாதங்களைத்தான் முன்வைக்கிறார்கள். 
இப்படி MSP ஏற்றப்பட்டிருப்பதால் rural demand அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் என்பது பாஜகவின் வாதம். UPA அரசு வருடாவருடம் அதிகரித்து வந்த MSP சதவிகிதத்தில்தான் இந்த முறையும் MSP அதிகரித்திருக்கிறது. இதில், விசேஷமாக ஒன்றும் இல்லை. இது வெறும் தேர்தல் விளம்பரம் என்றும் சொல்கிறார்கள். (படத்தை பார்க்கவும், தேர்தல் வருடங்களில் அதிக ஒதுக்கீடு நடப்பதை கவனிக்கவும்) 
இன்னொரு பக்கம், அதிகரிக்கப்பட்டிருக்கும் MSP தவறான பார்முலா… இந்த MSP விவசாயிகளுக்கு போதாது என்றும் கிளம்பியிருக்கிறார்கள். அதையும் பார்க்கலாம். 
இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து பொய்த்ததால் 2004ல் M.S. சுவாமிநாதன் தலைமையிலே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 வரை இந்த கமிஷன் 5 அறிக்கைகளை சமர்ப்பித்தது. அதில் ஐந்தாவது அறிக்கையில், Weighted Average Cost of Production-ஐ விட 50% அதிகமாக MSP இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், Weighted Average Cost of Production என்றால் என்னவென்று சொல்லவே இல்லை என்பது சிறப்பு. இங்கே முக்கியமாக இரண்டு பார்முலாக்கள் வருகின்றன. ஒன்று A2+FL, இன்னொன்று C2. A2+FL என்பது உற்பத்திக்கு செலவழித்த தொகையும், உற்பத்திக்காக வேலை செய்த விவசாய குடும்பத்தின் Notional கூலியும் சேர்ந்தது. C2 என்பது Comprehensive Cost. விவசாய நிலத்திற்கான குத்தகை பணம், அல்லது சொந்த நிலமாக இருந்தால் Notional வாடகை மற்றும் உபகரணங்களின் தேய்மானம் ஆகியவை வரும்.

மோடி அவர்கள் 2014 பிரச்சாரத்தில் Cost + 50% என்று வாக்குறுதி அளித்தார். உஷாராக, A2+FL, C2 குழப்பத்திற்குள் அவர் போகவில்லை. அவர் அறிவித்தபோதே பல பயிர்களின் MSP A2+FL விட 50% அதிகமாகத்தான் இருந்தது. ஆக, அவர் சொன்னது C2தான் என்பது விவசாயிகளின் வாதம். M.S. சுவாமிநாதனும் தான் அறிக்கையிலே குறிப்பிட்டது C2தான் என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.

அப்போது, C2+50%தானே அரசு அறிவித்துள்ள MSPயாக இருக்கவேண்டும். அதுதான் கிடையாது…! அரசு கூறியுள்ளது A2+FL+50%தான். காரணம் A2+FL மற்றும் C2 இடையேயான தொகை வித்தியாசம் அதிகம். அரசுக்கு C2 கண்டிப்பாக கட்டுப்படியாகாது. (படம் பார்க்கவும்)

சில நிபுணர்கள் அடிப்படையிலேயே கைவைக்கிறார்கள். அதாவது, பயிரை பொறுத்து பணம் தரும் திட்டங்கள் கூடாது. மாறாக, விவசாயியை பொறுத்து பணன் தரும் திட்டங்கள் வேண்டும் என்கிறார்கள் (Crop based vs Farmer based schemes). ஐரோப்பிய நாடுகள் தற்போது farmer based formula-விற்கு மாறிவிட்டனவாம். இதன் மூலம் பணக்கார விவசாயிகளுக்கு பதிலாக ஏழை விவசாயிகளுக்கு பலன் போய் சேரும்.

பொதுவாக Cost plus பார்முலாக்கள் திறனின்மையை (Ineffeciency) வளர்க்கும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதில் விவசாயிகளுக்கு உண்மையான பலன் இருக்கிறதா? அதை வரும் தேர்தல்கள்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் விவசாயிகளை தாஜா செய்வது பாஜக பார்முலா. இதுவும் அதில் சேர்த்திதான்.

இந்த திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா என்பதை அறிய சில வருடங்கள் தேவைப்படலாம். அதற்குமுன் இதை விமர்சிப்பதோ பாராட்டுவதோ சரியல்ல.

Friday, 13 July 2018

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு...!


வரிவிதிப்பு தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்குமல்லவா….? இது போன்ற வழக்குகளில், அப்பீல் போவதற்கான வரம்பை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 29600 நேரடி மற்றும் மறைமுக வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படும்.

இதனால், வழக்குகளில் கோரப்பட்ட 5600 கோடி ரூபாய் (Disputed Amount) அரசுக்கு வராது. இதை இழப்பு என்று சொல்லமுடியாது… ஆனாலும், அரசு விட்டு கொடுத்ததாய் எடுத்து கொள்ளலாம்.

முன்பொரு முறை GST காரணமாக புதிய வழக்குகள் நிறைய வந்து சேரும் என்று பதிவிட்டிருந்தேன். ஏற்கனவே குவிந்த வழக்குகளை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துள்ளது. நல்ல விஷயம், மத்திய அரசிற்கு பாராட்டுகள்...!

இதற்கு முன்னதாகவும் விரைவாக assessment முடிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிகாரிகளின் performance appraisal முறைகளையும் அரசு மாற்றியமைத்திருந்தது.

அரசின் போக்கு இப்படி இருந்தாலும், அதிகாரிகளின் போக்கு மாறினாற் போல தெரியவில்லை.  கடந்த மே மாதம், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு GST return-களுக்கு இடையே 78 பைசா வித்தியாசம் இருந்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

GST குறித்த புரிதல் இன்னும் சிறு, குறு வியாபாரிகளுக்கு வரவில்லை… சின்ன சின்ன விஷயங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, பெனால்டி போடுவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து அதிகாரிகள் விலக வேண்டும். மத்திய அரசு இதற்கும் வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Friday, 29 June 2018

Maternity Benefits – Boon or Curse?


போன மார்ச் மாதம், மத்திய அரசு பெண்களுக்கான மேடர்னிடி சலுகைகளை அதிகரித்தது. சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி விடுப்பு 12 வாரங்களிலிருந்து, 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது. கனடா, நார்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா ஆனது. (ஆச்சர்யமான விஷயம்… அமெரிக்காவின் 4 மாகாணங்கள் தவிர, வேறு எங்கும் சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி சலுகை இல்லை. உலகிலேயே மிகமிக சில நாடுகளில் மட்டும்தான் இப்படி மேடர்னிடி சலுகைகள் கிடையாது. அதில் ஒன்று அமெரிக்கா..!)


10 நபர்களுக்குக்கு மேலே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த மேடர்னிடி சலுகை விதிகள் பொருந்தும். 50 நபர்களுக்கு மேல் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்கவேண்டும்… வேலை செய்யும் தாய், வேலை நாளில் 4 முறை அந்த குழந்தையை பார்த்துவிட்டு வர அனுமதிக்கவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. 18 லட்சம் பெண்களுக்கு இந்த சட்டத்தினால் பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

கேட்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும் சட்டம் நடைமுறையில் வேலைக்காகுமா? நாடாளுமன்ற விவாதத்தின் போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றார். அதுதான் நடக்கிறது.

இது போன்ற மேடர்னிடி சலுகைகளின் செலவை யார் ஏற்பது? இரண்டு மாடல்கள் உள்ளன.. ஒன்று, பப்ளிக் ஃபண்டிங். அதாவது, அரசாங்கம் சோஷியல் செக்யூரிட்டி மூலமாகவோ அல்லது வேறு திட்டங்கள் மூலமாகவோ செலவை ஏற்பது. இன்னொன்று, பிரைவேட் ஃபண்டிங். அதாவது, நிறுவனமே இன்ஷூரன்ஸ் மூலமாகவோ, வேறு விதமாகவோ செலவை ஏற்பது. சில நாடுகளில் இரண்டும் கலந்த மாடலும் உண்டு.

இந்தியா பிரைவேட் ஃபண்டிங் மாடலுக்கு போனது… அதாவது, மேடர்னிடி சலுகைகளின் மொத்த செலவையும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த செலவை பெரிய நிறுவனங்களால் ஏற்று கொள்ள முடியும்… லாபம் அடிவாங்கும், ஆனாலும் பாதகமில்லை…! ஆனால், மீடியம், சிறு நிறுவனங்களால் இந்த செலவை சமாளிக்க முடியாது.

Teamlease  என்னும் HR கம்பெனி சமீபத்தில் 10 செக்டார்களில், ஒரு சர்வே எடுத்தது. மேடர்னிடி விடுப்பு செலவை சமாளிக்க முடியாததால், இந்த வருடம் (மார்ச் ‘19) 11-லிருந்து 18 லட்சம் பெண்கள் வரை வேலையிழப்பார்கள் என்று கணித்துள்ளது. எல்லா செக்டார்களையும் சேர்த்து பார்த்தால் ஒரு கோடியிலிருந்து 1.2 கோடி பெண்கள் வரை வேலையிழக்கலாம்.

ஏற்கனவே இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் வேலைக்கு போகும் பெண்களின் விகிதம் குறைந்துவிட்டது (என்னால் நம்பவே முடியவில்லை). 2006-ல் வேலைக்கு போன 100 பேரில் 36 பேர் பெண்கள். 2016-ல் அது நூற்றுக்கு 24-ஆக குறைந்துவிட்டது. இந்த சட்டத்தினால் பெண்கள் வேலைக்கு போவது இன்னும் குறையும் அபாயம் உள்ளது.

நிறுவனங்கள் இப்படி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தால், அரசு ஒரு பங்கு செலவை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, ஏதேனும் வரிச்சலுகை தரலாம். ஆனால், அப்படி மேடர்னிடி சலுகை செலவில் ஒரு பங்கை அரசு ஏற்கவேண்டுமெனில் பட்ஜெட் இடம் கொடுக்குமா? இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில், சில வருடங்களுக்கு இந்த சட்டத்தை நிறுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது.

இல்லையென்றால், இந்த சலுகைகள் நன்மையை விட தீமையே செய்யப்போகின்றன.

Thursday, 28 June 2018

உங்க இன்ஷூரன்ஸுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கா?

GSPC, HPCL கம்பெனிகளை ONGC தலையில் கட்டி அதை மொட்டை அடித்ததை குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தேன். அடுத்த மொட்டை LIC-க்கு. பொதுத்துறை வங்கிகளிலேயே ரொம்ப மோசமான வங்கியான IDBI வங்கியை LIC தலையில் கட்ட பார்க்கிறார்கள்.

கிட்டத்தட்ட 28% Gross NPA... அதாவது, 55000 கோடிகளுக்கு மேல் வாராக்கடன். மார்ச் காலாண்டில் மட்டும் 5600 கோடி நஷ்டம். இதுதான் பெர்பாமன்ஸ் நிலவரம்.

அரசு 85% மேல் பங்குகளை வைத்திருக்கிறது. இப்போது 43% சதவிகித பங்குகளை 10500 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு திட்டம் ரெடி.

IRDA (Insurance Regulatory and Development Authority) விதிகள் படி ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி, எந்தவொரு நிறுவனத்திலும் 15% மேல் முதலீடு செய்யக்கூடாது. இப்போது IDBI பங்குகளை LIC வாங்கினால், IDBI பங்குகளில் 51% LIC வசம் வந்துவிடும். ஆகவே, இந்த முதலீட்டை IRDA அப்ரூவ் செய்யவேண்டும். நாளைக்கு மீட்டிங்... அதெல்லாம் அப்ரூவ் செய்துவிடுவார்கள் என்று நம்பலாம்.

LIC போன்ற பெரிய நிறுவனத்திற்கு 10500 கோடியெல்லாம் விஷயமல்ல... ஆனால், பிரச்சனையே வங்கியை வாங்கியபிறகு, அதை நஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க கிட்டதட்ட 1 லட்சம் கோடியை முதலீடு செய்யவேண்டும். ஆமாம், லட்சம் கோடிதான். இந்த பணம் பொதுமக்கள் தங்கள் காப்பீடுக்காக LIC-யிடம் கட்டிய பணம்... ஒரு காலத்தில் லாபத்துடன் திரும்பி வரும் என்னும் நம்பிக்கையில் மக்கள் முதலீடு செய்த பணம்...!

இந்த பணத்தை எடுத்து, ஓடாத IDBI குதிரையில் கட்டவேண்டும்.... அப்புறம் வங்கி நிர்வாகத்தில் அனுபவமே இல்லாத LIC, அந்த ஓடாத குதிரையை வெற்றிகரமாக ஓட்டவேண்டும். அந்த குதிரை ஜெயித்தால், காப்பீட்டுதாரர்கள் பணம் பத்திரம் என்று அர்த்தம்... இல்லையென்றால்...?

இன்னொரு பக்கம் IDBI வங்கி நிர்வாகத்தில் LIC தலையிடாது... அது முதலீடு செய்வதோடு நின்றுவிடும் என்றும் சொல்கிறார்கள்.

அனுபவமில்லாத துறையில் நிர்வாகம், அல்லது பணத்தை போட்டு விட்டு நிர்வாகத்தில் எந்த அதிகாரமும் இல்லாமல் வாயை மூடி கொண்டு இருப்பது – இரண்டில் எது சிறந்த தீமை?

IDBI வங்கியை LIC வாங்கக்கூடாது என்று நிதித்துறை விற்பன்னர்கள் கூறுகிறார்கள்... அரசு கேட்குமா? Btw, தற்போது நாட்டின் நிதியமைச்சர் யார்?



பங்களாதேஷிற்கு மின்சாரம் - ஆதானி ஜார்கண்ட் ஆலை


விதிமுறைகள் மாற்றம் குறித்து, நேற்று போட்ட பதிவுக்கு இலவச இணைப்பாக இன்னொரு பதிவு.

பங்களாதேஷின் மின்சார தேவைக்காக மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதானி குழுமம் அமைக்க பார்க்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது.  

ஜார்கண்ட் மாநில விதிமுறைகளின் படி ஜார்கண்ட் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 25% மின்சாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கே குறைந்த விலையில் விற்கவேண்டும்.

இதற்கான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பொன்றை காரணமாக காட்டி மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த மாறிய விதிமுறைகளின் பலன்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் கிடைக்காது... ஆதானிக்கு மட்டும்தான் கிடைக்கும். இதை CAG கண்டித்துள்ளார். கண்டிச்சுட்டு போயிக்கோ என்று டீலில் விட்டுவிட்டார்கள்.

இந்த மின்உற்பத்தி நிலையத்தை அமைக்க 13500 கோடி ரூபாய்கள் தேவைப்படுமாம். ஏற்கனவே ஆதானி பவர், தன்னுடைய ஈக்வடி போல 16 மடங்கிற்கு கடன் வாங்கியிருக்கிறது. இந்த முறை எந்த வங்கியோ?

இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறமிருந்தாலும், பங்களாதேஷிற்கும் இந்த டீலில் ஆதாயமில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் கேட்டால் பங்களாதேஷுக்கு மின்சார விலை நிர்ணயிக்கும் கூட்டத்தை அவசர அவசரமாக, முக்கிய அதிகாரிகள் கூட இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்கள். திட்டமிட்ட தேதிக்கு முன்கூட்டியே ஏன் அவசர மீட்டிங் நடத்தப்பட்டது...? காரணம் தெரியாது.

இந்த ஆலைக்கான கரி எங்கிருந்து வரும் என்பதும் புரியவில்லை... ஆஸ்திரேலியாவிலிருந்து கரி இறக்குமதி செய்து இந்த ஆலைக்கு உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆதானிக்கு இருக்கும் எதிர்ப்பையும், திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதையும் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். (https://perungadal.blogspot.com/2017/12/carmichael-coal-mine.html)

முகத்திலே கரியை பூசினாலும், ஆதானியின் ஆஸ்திரேலிய கனவுகள்  இன்னும் முடியவில்லை போல...!

Wednesday, 27 June 2018

நாலு பேரு நல்லா இருக்கனும்னா...


வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில் இருக்கும் துறைமுகங்களுக்குள் சரக்கு போக்குவரத்து செய்யக்கூடாது. இதை கேபடாஜ் (Cabotage) என்பார்கள். அமெரிக்கா, சீனா உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கேபடாஜ் விதியை வைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இந்த தடை இருந்தது... ஆனா, இப்போ இல்லை..!

பொதுவாக வெளிநாட்டு கப்பல்கள் மூலம் சரக்கு போக்குவரத்து செய்வது சீப்பான விஷயம். காரணம், வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில் பெரிதாக வரி கட்ட தேவையில்லை. சராசரியாக இந்திய கப்பல் 9.7% வரி கட்டினால், வெளிநாட்டு கப்பல் 2.2% வரி கட்டும். GST இந்திய கப்பல்களுக்கு மட்டுமே. மேலும் சில அரசு விதிமுறைகள் இந்திய கப்பல்களின் செலவை அதிகரிக்கும். கப்பல்களின் செலவு அதிகரித்தால் ஏற்றுமதி-இறக்குமதி செலவும் அதிகரிக்கும். அதனால், ஏற்றுமதி – இறக்குமதியாளர்களுக்கு வெளிநாட்டு கப்பல்கள்தான் சரக்கு போக்குவரத்துக்கு நல்ல சாய்ஸ்.

பல ஆண்டு காலமாக, கார்ப்பரேட்கள் கேபடாஜ் தடையை நீக்கவேண்டும் என்று லாபி செய்து கொண்டிருந்தன. இப்போது மோடி அரசு அந்த தடையை நீக்கிவிட்டது. இனி, வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவிற்குள் இருக்கும் துறைமுகங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்தில் ஈடுபடலாம்.

இந்தியாவில் பல துறைமுகங்கள் ஏற்கனவே ஆதானி குழுமத்தின் வசம் உள்ளது. இன்னும் பல துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளோடு ஆதானி பல ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது.

இப்போது கேபடாஜ் விதியை நீக்கியதால் பெரும்பலன் அடைய போவது ஆதானி குழுமம்தான் என்கிறார்கள்... நஷ்டம் அடைய போவது மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான JNPT துறைமுகம்... மேலும் உள்ளூர் கப்பல் கம்பெனிகளில் கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் வரை வேலையிழக்கலாம்... அரசும் தன் வரி வருமானத்தை இழக்கும். ஒரு கட்டத்தில் நாட்டின் கப்பல் போக்குவரத்து முழுக்க வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் இருக்கும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் ஆகலாம்.

அதனால என்ன, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எது பண்ணாலும் தப்பில்ல...! கரெக்டுதானே...!

Tuesday, 12 June 2018

ONGC மொட்டை


ONGC – இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 78% பங்குகள் மத்திய அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் வசம் உள்ளது. மிச்ச பங்குகள் பொதுமக்களிடம், Institutional investors- இடமும் உள்ளது.

ONGC- ன் பிஸினஸிற்கு கையிலே நிறைய பணம் வைத்திருப்பது அவசியம். சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13000 கோடி ரூபாய் பணம் வைத்திருந்த இந்த நிறுவனத்திடம் இப்போது வெறும் 1000 கோடி ரூபாய்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல, ஏகப்பட்ட கடனும் அதன் தலையில் விடிந்திருக்கிறது. (படத்தை பார்க்கவும்)



எப்படி நடந்தது இந்த மாற்றம்? எல்லாம் நம் பிரதமரின் கைவண்ணம்தான். Hindustan Petoleum Corporation –  ல் தனக்கு இருக்கும் 51% பங்குகளை அரசு ONGC-க்கு கட்டாயப்படுத்தி விற்றது. (பங்கின் சந்தைவிலைக்கு 14% அதிகமான விலை வைக்கப்பட்டது). ONGC- க்கு இதனால் சில சாதகங்கள் இருக்கும் என்று சொல்லப்பட்டாலும் இது one sided deal-தான்.

Price Rise and Fall from 2014



அது தவிர வழக்கத்திற்கு மாறாக 8500 கோடி ரூபாய்களுக்கு டிவிடெண்ட் கொடுக்கப்பட்டது. மொத்தமாக 42600 கோடி ரூபாய் ONGC-யிடமிருந்து மத்திய அரசுக்கு சென்றுள்ளது. ONGC கடன் வாங்காமல் வேறென்ன செய்யும்?

ONGC முதலீடு செய்யவேண்டிய திட்டங்கள் 86000 கோடி ரூபாய்க்கு அடுத்தடுத்து காத்திருக்கின்றன. கண்டிப்பாக ONGC- க்கு மேலும் கடன் கிடைக்கும். ஆனால், மத்திய அரசு ONGC- யை மொட்டை அடித்ததென்னவோ உண்மை.

இப்படி ONGC – யை மோடி அரசு நிர்பந்திப்பது முதல்முறையல்ல. 2016ல் குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமான GSPC-யை ONGC வாங்கியது. அதன் பின்னால் 20000 கோடி ரூபாய் ஊழல் என்று பேசி கொள்கிறார்கள். ஊழலை மறைப்பதற்காக, ONGC GSPC-யை வாங்குமாறு நிர்பந்திக்கப்பட்டது. (GSPC ஊழல் தனிக்கதை… முடிந்தால் பதிவிடுகிறேன். காங்கிரஸிற்கு பாஜக எந்த விதத்திலும் சளைத்தது அல்ல)  

பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல…! இவ்வளவு பணமும் எங்கே போகிறது…?

Wednesday, 30 May 2018

The Rise of Bangladesh


வாரக்கடைசியில் முகநூலில் வெட்டியாக திரிந்த போது ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைத்தது. அதாவது, 2020-ல் பங்களாதேஷ் இந்தியாவை விட அதிகமான Per Capita Income கொண்டிருக்கும் என்பதுதான் அந்த ஆச்சர்யமான தகவல்.
மேலும் கொஞ்சம் தகவல்களை தேடியபோது புரிந்த விஷயம் - இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக தடுமாறும் போதும், பங்களாதேஷ் பொருளாதாரம் தெளிவாக முன்னேறி கொண்டிருக்கிறது. மக்கள்தொகையும் கட்டுக்குள் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலும்தான், பங்களாதேஷின் Per Capita Income இந்தியாவிற்கே சவால் விடுகிறது.

இந்தியாவின் தயவினால் சுதந்திரம் பெற்ற தேசம்…. சுதந்திரம் அடைந்த போது தரைமட்டமாக இருந்த தேசம்.. சுதந்திரம் அடைந்த மூன்று வருடங்களிலேயே பஞ்சத்தினால் பரிதவித்து, அமெரிக்காவின் கட்டளைகளுக்கு உட்பட்டு தானியத்தை தானமாக பெற்ற தேசம்…. ஜனநாயகம் என்பது மலராமல், பாகிஸ்தானை போல ராணுவ ஆட்சியில் சீரழிய போகிறது என்று நினைக்கப்பட்ட தேசம்….!
இப்போதோ தெற்கு ஆசியாவிலேயே வேகமாக வளரும் இரண்டாவது பொருளாதாரம்… இதே வேகத்தில் போனால் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாகிவிடும். ஆடை ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடம் (முதலிடம் சீனா… பங்களாதேஷ் சீனாவை முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது). உண்மையிலேயே பங்களாதேஷ் முன்னேறுகிறதா? பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்றடைகிறதா?
இந்த விஷயத்தை ஆராய்வதற்கு Economic Indicators-ஐ பார்ப்பதை விட Social Indicators-ஐ பார்ப்பதுதான் சிறந்தது. உலகவங்கியின் தரவுகள் 2016 வரைதான் கிடைத்தன. இருந்தாலும் பரவாயில்லை… இந்தியாவோடு ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். ரமணா ஸ்டைல் புள்ளிவிவரம்தான், கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.
Life Expectancy – இந்தியா 1990-ல் 57.9, 2016-ல் 68.6. பங்களாதேஷ் 1990-ல் 58.4, 2016-ல் 72.5. இந்தியாவை விட அதிகம்.
Birth Rate – அதாவது மக்கள்தொகையில் ஆயிரம் பேருக்கு புதிதாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 31.5, 2016-ல் 19. பங்களாதேஷ் 1990-ல் 35.4, 2016-ல் 19. இந்தியாவை விட அதிகம். இந்தியாவை விட அதிகமாக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி தற்போது குறைந்துவிட்டது. ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது அபாரமான விஷயம்.
Mortality Rate under age 5 – ஆயிரம் பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 125.9, 2016-ல் 43. பங்களாதேஷ் 1990-ல் 143.8, 2016-ல் 34.2. இந்தியாவை விட மோசமாக இருந்து, இப்போது இந்தியாவை விட சிறப்பாக உள்ளது.
Literacy Rate – UNESCO 2015 எஸ்டிமேட் படி இந்தியாவும், பங்களாதேஷும் ஒரே லெவல்தான்.
முக்கியமான விஷயம் – Gross Savings to GDP % - இந்தியா 1990-ல் 27%. 2007 சுபிட்ச காலத்தில் 41% ஆக உயர்ந்து, 2016-ல் 30%-ஆக குறைந்துவிட்டது. பங்களாதேஷ் 1990-ல் 16%. 2016-ல் 37%.
1991-ல் பங்களாதேஷில் 40%-ற்கும் மேற்பட்டவர்கள் மோசமான வறுமையில் வாடினர். இப்போது இந்த எண்ணிக்கை 14%-மாக குறைக்கப்பட்டுவிட்டது.
ஆக, பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது என்று தைரியமாக கூறலாம்.
பங்களாதேஷின் வளர்ச்சிக்கு NGOக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. முக்கியமான இரண்டு NGOக்கள் – ஒன்று, கிராமீன் பேங்க். 1970களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, கிராமப்புற மக்களுக்கு Unsecured Loans வழங்குகிறது. இதன் வெற்றியை பாராட்டி நோபல் பரிசே கொடுத்தனர். மற்ற நாடுகளிலும் இந்த மாடல் கடைப்பிடிக்கப்படுகிறது Grameen America கூட உண்டு..! இந்த மாடலுடைய நீட்சியாக கிராமீன் போன், கிராமீன் டெலிகாமெல்லாம் உண்டு.
பங்களாதேஷில் வங்கி மூலமான கணக்கு பரிமாற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தெற்காசிய சராசரியை விட அதிக சதவிகித மக்கள் வங்கி கணக்கை உபயோகிப்பதாக சொல்லப்படுகிறது. இயல்பான வளர்ச்சி…! இந்த வளர்ச்சிக்கு பின்னால் கிராமீன் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான NGO – BRAC… இதுவும் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு NGO. தற்போது உலகிலேயே பெரிய NGO. ஆரம்பத்தில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்திய BRAC பின்னர் சுகாதாரம் முதலிய பல விஷயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தது.
NGOக்களின் உதவியினால் கிட்டதட்ட எல்லா குழந்தைகளும் (பெண் குழந்தைகள் உட்பட) தொடக்க கல்வியை பெற்று வருகின்றன. மேல் வகுப்பு போக போக பெண்குழந்தைகள் கற்பது குறைந்துவிடுகிறது என்றாலும், ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது ஆரோக்கியமான வளர்ச்சிப்படி என்பதை மறுக்க முடியாது.
But, all is not well for Bangladesh…! பங்களாதேஷ் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்று பார்ப்போம்…!
ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலாக பங்களாதேஷை Least Developed Country மதிப்பீட்டிலிருந்து மாற்றியிருக்கிறது. 3 வருடங்களுக்கு ஒரு முறை பங்களாதேஷை மதிப்பிடுவார்கள். 6 வருட காலம் வளர்ச்சி தொடர்ந்தால் Developing Country Status தந்துவிடுவார்கள். பங்களாதேஷிற்கு இது ஒரு பெருமையான விஷயம்தான்.
ஆனால், இப்படி ஸ்டேட்டஸ் மாற்றுவது வரமா, சாபமா? ஸ்டேட்டஸ் மாறினால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியில் சில சலுகைகளை பங்களாதேஷ் இழந்துவிடும். புதிதாக கடன்கள் பெறுவதிலும் சில சலுகைகளும் போய்விடும்.
பங்களாதேஷிற்கு இதை தவிர வேறு பல சவால்களும் உள்ளன.
தொழிலாளர் உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு இவற்றை மேம்படுத்துதல் அவசியம். வருமானத்தில் 14% துணி ஏற்றுமதியில் இருந்துதான் வருகிறது. ஒரே செக்டாரை இவ்வளவு நம்பியிருப்பது பொருளாதாரத்திற்கு ரிஸ்க்…. நகரமயமாக்கல், கட்டமைப்பு போன்ற புதிய பிரச்சனைகள் முளைத்துள்ளன…. வரும் வருடங்களில் இன்னும் அதிகமாக போகின்றன. அரசியல் இப்போது போல வரும் வருடங்களிலும் அமைதியாக, உறுதியாக இருக்குமா?
போதை மருந்து பழக்கம் பங்களாதேஷில் பரவி வருகிறது. இதை தவிர பெரிய ஆபத்து global warming ரூபத்தில் வருகிறது. பங்களாதேஷ் டெல்டா பகுதிகள் மிகுந்த தேசம்…. கடல் உயரம் அதிகரிக்கும் போது பங்களாதேஷிற்கு பலத்த அடி விழும்.
பங்களாதேஷின் வளர்ச்சியோ, தடுமாற்றமோ மற்ற வளரும் நாடுகளுக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…! கற்று கொள்ள தயாரானால், இப்போதே பங்களாதேஷிடமிருந்து கற்க இந்தியாவிற்கு பாடங்களிருக்கிறது…!