Tuesday 6 March 2018

ஷி ஜின்பிங்


சீன அரசியலமைப்பு சட்டப்படி, யாரும் இரண்டு முறைகளுக்கு மேல் பிரசிடென்ட் பதவியை வகிக்க முடியாது. தற்போதைய பிரசிடென்ட் ஷி ஜின்பிங் அந்த சட்டவிதியை நீக்க முயற்சிக்கிறார். ஷி-க்கு இன்னும் ஐந்து வருட காலம் பதவி இருக்கிறது. அதற்கு முன்பே, அவர் தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள பார்க்கிறார்.

ஷி நிரந்தர அதிபராவது சீனா சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. ஏற்கனவே சீனா அண்டைநாடுகளுடன் வம்பு சண்டைக்கு போய் கொண்டிருக்கிறது. ஷி ஆட்சியில் தொடர்ந்தால் இந்த சண்டைகள் இன்னும் அதிகமாகும். இந்தியாவிற்கு தலைவலியும் அதிகமாகும். உலக அரசியலில் இது முக்கியமான விஷயம். இது குறித்து பார்க்கும் முன்னர், இந்த இரண்டு முறை அதிபர் விதி ஏன் வந்தது என்பதை குறித்தும் பார்க்கவேண்டும்.

சீனாவில் முன்பு மாவோ என்று ஒரு தலைவர் இருந்தார். கலாசார புரட்சி என்று கிறுக்குத்தனம் செய்து சீனாவை ஒரு வழி பண்ணினார். அவர் ஆட்சியில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்தான் டெங் ஷாஓ பெங். மாவோவின் மறைவுக்கு பிறகு டெங் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவுயர்ந்த (Paramount leader) தலைவரானார்.

மாவோ கீழே சீனா பட்ட கஷ்டத்தை நினைத்த டெங், நாட்டின் நன்மைக்காக சில மாறுதல்களை கொண்டுவந்தார். அதன்படி நாடு சர்வாதிகாரி ஒருவரின் கைப்பிடிக்குள் இனிமேல் போகக்கூடாது என்று முடிவு செய்து மூன்று பதவிகளுக்கு மொத்த அதிகாரத்தையும் பிரித்து அளித்தார். ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர். இரண்டு, பிரீமியர் (நம்ம ஊர் பிரதம மந்திரி போன்ற பதவி), மூன்று பிரசிடென்ட். உண்மையில் சீனாவின் அரசியலமைப்பு சட்டம் பிரசிடென்ட் பதவி பெரிதா, பிரீமியர் பதவி பெரிதா என்பது குறித்தெல்லாம் பேசவில்லை. இன்னும் கேட்டால் சீன ராணுவமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆக, யார் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரோ அவர்கள்தான் உண்மையில் ‘பாஸ்’.

டெங் இன்னொரு மரபு மாறுதலையும் செய்தார். அதாவது, கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் பதவி பறிபோனவர்களை, ரிட்டயர் ஆனவர்களை மன்னித்து விடுவது. அவர்கள் மேல் ஏதாவது குற்றச்சாட்டு போட்டு உள்ளே தள்ளுவது, மொத்த குடும்பத்தையும் சித்ரவதை செய்வது போன்ற பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் என்பது சர்வ சாதாரணம். ஆனால், டெங்கிற்கு பிறகு யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அளவோடு ஊழல், கட்சிக்கு கட்டுப்படுவது, உயிருக்கு உத்தரவாதம் – இதுதான் டெங் வகுத்த கொள்கை. இதெல்லாம் டெங் செய்த பெரிய சீர்திருத்தங்கள்.

டெங் வகுத்த கொள்கைப்படிதான் சீனா 20 வருடங்களாக நடந்து வந்தது. 2013ல் ஷி ஜின்பிங் வந்த பிறகு அதிரடி மாறுதல்கள் ஆரம்பித்தன. ஷி ஜின்பெங்கின் வலது கை, துணை அதிபரான வாங் சீஷான். ஊழலை அறவே ஒழிப்பேன் என்று முழங்கிய ஷி, வாங்கின் துணை கொண்டு தனக்கு போட்டியாக கருதப்பட்ட அரசியல் எதிரிகள் அத்தனை பேர் மீதும் ஏதாவது ஒரு ஊழல் வழக்கு தொடுத்து ஒழித்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஊழல் மிகுந்த கட்சியாதலால் இதை மிக எளிதாக செய்ய முடிந்தது.

சீனாவிற்கு புது யுகம் (New Era) பிறக்கிறது என்று முழக்கமிட்டார். சோஷலிஸம் சார்ந்த தன் கொள்கைகளே சீனாவின் புது யுகத்திற்கான கொள்கைகள் என்றார். சீனாவில் ஊழல் இருக்காது, உலகிலேயே வலிமை வாய்ந்த நாடாக சீனா உருவாகும் என்பதெல்லாம் அவரது உறுதிமொழிகள்.


இப்போது அவர் அரசிலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள முயல்கிறார். அதோடு, தன் வலது கையான வாங் சீஷானை நிரந்தர துணை அதிபராக்கவும் முயல்கிறார்.

ஷி ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர்,. மத்திய ராணுவ கமிஷனின் தலைவர். இது தவிர நாட்டை வழிநடத்தும் கட்சியின் பல்வேறு கமிட்டிகளிலும் இருக்கிறார். அவர் உத்தரவின்றி யாரும் சுண்டு விரலையும் அசைக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான் அவர் நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வர பார்க்கிறார்.

சீனாவிலும் ஒரு ஒப்புக்கு சப்பாணி பார்லிமென்ட் உண்டு. கட்சி சொல்வதை ஒப்புக்கொண்டு, தீர்மானங்களுக்கு சமர்த்தாக ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆக, ஷி நிரந்தர அதிபராவதை தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஷி தொடர்ந்து அதிபராக இருக்கப்போவது கட்சியினருக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது. அதிபரை நேரடியாக விமர்சித்தால் ஜெயில் நிச்சயம். (ஜெயிலுக்கு போனால் உடலுறுப்புகளை அகற்றி விற்றுவிடுவார்கள் என்பது வேறு கதை. ஆக, ஜெயிலுக்கு போவது என்பது அந்த ஊரில் ஒரு பயங்கரமான விஷயம்). அதற்கு பதிலாக, ஒரு கரடி (Winnie the pooh) கேரக்டரை வைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

ஷி நிரந்தர அதிபரானால் முதலில் அடிபட போவது பிரீமியரான லீகூஹ் சாங்-காகத்தான் இருக்கும். இவருக்கும் ஷி – க்கும் எப்போதும் ஒத்து போகாது. அவருக்கு கூடிய சீக்கிரம் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பொருளாதாரம் அவ்வளவு வலிமையாக இல்லை. ஷி-யின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப உற்பத்தி குறைக்கப்பட்டது (supply side reforms). ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால்(!?) ஆடம்பர பொருள்களின் நுகர்வு குறைந்து விட்டது. அதே சமயம் ஊழலை தடுக்கும் விதமாக நிரந்தர மாற்றமும் வரவில்லை. கார்ப்பரேட்களின் கடன் சீனாவின் ஜிடிபியில் 130 சதவிகிதம். அரசு கடன் 70 சதவிகிதம்.

பொருளாதாரம், வெளியுறவு இந்த நிலைமையில் இருக்கும் போது ஷி நிரந்தர அதிபராக துடிக்கிறார். சீனாவின் மாற்றங்கள் இந்தியாவுக்கு சந்தோஷமாக அமைய வாய்ப்புகள் குறைவு…. இந்தியாவிற்கு நீடித்த தலைவலி நிச்சயம்.

No comments:

Post a Comment