மிஸ் அமெரிக்கா
போட்டிகள்… 1921லிருந்து கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நடந்து வரும் இந்த அழகி போட்டி
ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்திக்கவிருக்கிறது… அடுத்த வருடம் நிகழ்விலிருந்து
போட்டியாளர்கள் நீச்சலுடையில் ஊர்வலமாக வரும் பகுதி ரத்து செய்யப்படவிருக்கிறது.
மேலும், போட்டியாளர்கள் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும்
அழகி போட்டியில் பங்கு பெறலாம். மிஸ் அமெரிக்கா என்பது இனிமேல் வெறும் அழகிற்கான
போட்டியாக இல்லாமல், திறமைக்கான போட்டியாக மாறப்போகிறது என்பதுதான் சேதி. .
மிஸ் அமெரிக்கா
போட்டியில் நீச்சலுடைக்கு எதிர்ப்பு என்பது மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இது பெண்களை வெறும் போகப்பொருளாக பார்க்க தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு.
அப்படியிருக்கும் நிலையில் ஏன் இந்த திடீர் மாற்றங்கள்?
கடந்த டிசம்பர்
மாதம் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இந்த போட்டிகளை நடத்தும் மிஸ் அமெரிக்க
ஆர்கனைசேஷன் என்னும் அமைப்பின் CEO சாம் ஹேஸ்கல் (Sam Haskell) என்பவர் 2014ம்
ஆண்டு எழுதிய சில இமெயில்கள் வெளியாயின. அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவருடைய
இமெயில்கள் அத்தனையும் சோதிக்கப்பட்டன. மிஸ் அமெரிக்கா போட்டிகளில் பங்கேற்ற
பெண்களை குறித்து மிக மோசமான வார்த்தைகளில் ஹேஸ்கல் அந்த இமெயில்களில்
விமர்சித்திருந்தார்.
முன்னாள் மிஸ்
அமெரிக்கா பட்டம் பெற்றவர்களும் மற்றவர்களும் இதை கண்டு கொதித்தனர். விளைவு, சாம்
ஹேஸ்கலின் பதவி உடனே பறி போயிற்று. கூடவே சேர்மன் மற்றும் COO ஆகியோரும் பதவியை
ராஜினாமா செய்தனர். அந்த பதவிகளுக்கு பெண்களே பொறுப்பேற்றனர். இப்போது ஒன்பது பேர்
கொண்ட போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஏழு பேர் பெண்கள். இவர்கள்தான் புதிய மாற்றங்களை
கொண்டு வருகிறார்கள்.
இந்த நீச்சலுடை ஊர்வலத்திற்கு
எதிராக பல வருடங்களாக பெண்ணியவாதிகள் போராடினாலும் மாற்றம் இப்போதுதான் நடக்கிறது.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று, அழகி போட்டியை
தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டனர்.... வருடாவருடம் பார்வையாளர்கள்
எண்ணிக்கை குறைகிறது. இதற்காக ஒரு ஏஜென்ஸியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில்,
போட்டியை வேறு முறையில் மாற்றினால் ஒழிய பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க
முடியாது என்பது புரிந்தது. ஆக இந்த மாற்றம் ஒரு வர்த்தக காரணம்.
இரண்டாவது காரணம், #MeToo
போராட்டம். சென்ற அக்டோபரில் ஹார்வே வெயின்ஸ்டேன் (Harvey Weinstein) என்னும் ஒரு படத்தயாரிப்பாளர் நடிகைகளிடம் தவறான முறையில் நடந்து
கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உலகெங்கிலும் இருக்கும் பெண்கள்,
சோஷியல் மீடியாக்களில் #MeToo என்னும் ஹேஷ்டேக் பதித்து தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை
பகிர்ந்தனர். இது உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏதோ, முன்னேறாத
சில நாடுகளில் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்ற பிம்பம் மறைந்து
உலகத்தில் எல்லா நாடுகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அவஸ்தைகள்
தெரியவந்தது. மிஸ் அமெரிக்காவின் மாற்றத்திற்கு இந்த #MeToo போராட்டமும் முக்கிய
காரணம்.
அப்போ இனி அழகி போட்டிகளில்
நீச்சலுடை கிடையாதா? அமெரிக்காவிலே இரண்டு அழகி போட்டிகள் நடக்கின்றன. ஒன்று, நாம்
பார்த்த மிஸ் அமெரிக்கா… இன்னொன்று, Miss USA. அந்த Miss USA போட்டியில் நீச்சலுடை ஊர்வலத்திற்கு எந்த மாறுதலும் இல்லை. அதே போல
மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளிலெல்லாம் எந்த மாறுதலும் கிடையாது.
வரவேற்கத்தக்க மாற்றங்கள்
ஆரம்பமாகி உள்ளன. மாற்றங்கள் பரவுவதும், தொடர்வதும் மிஸ் அமெரிக்கா போட்டியின்
வர்த்தக வெற்றியை பொறுத்தே அமையும்.
No comments:
Post a Comment