Friday 23 March 2018

அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையும் தடையற்ற வர்த்தகமும்


ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இருக்கும் இடைவெளியை Balance of Trade என்பார்கள். ஏற்றுமதி அதிகமாக இருந்தால் வர்த்தக மிகை/ உபரி. உபரியாக இருந்தால், பணம் உள்ளே வருகிறது என்று அர்த்தம், சந்தோஷம். இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறை. பற்றாக்குறை என்றால் பணம் வெளியே போகிறது, நஷ்டம்..!

பொதுவாக, ஒவ்வொரு நாட்டோடும் வர்த்தகம் பற்றாக்குறையாக இருக்கிறதா, உபரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பார்கள். அதற்கேற்றார் போல வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.


அமெரிக்காவின் balance of payment பல வருடங்களாக பற்றாக்குறைதான். சீனா எப்போது உலக வர்த்தக நிறுவனத்தில் நுழைந்ததோ அதிலிருந்து சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையும் ஏறி வருகிறது. அமெரிக்காவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை 566 பில்லியன் டாலர்கள். அதில் சீனாவுடனான பற்றாக்குறை மட்டுமே 375 பில்லியன் டாலர்கள்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அளித்த ஒரு முக்கிய வாக்குறுதி வர்த்தக பற்றாக்குறையை முடிந்தவரை சரிசெய்வது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக இப்போது சீனப்பொருட்கள் மீது வரி விதிக்க ட்ரம்ப் தீர்மாணித்திருக்கிறார். 50 - 60 பில்லியன் டாலர் அளவிற்கு சீன இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா வரிவிதிக்கப்போகிறது. பதிலுக்கு சீனா அமெரிக்க பொருட்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவிற்கு வரிவிதிக்கப்போகிறது.

இதன் மூலம் உலகளாவிய வரிச்சண்டை மூளும், இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிப்படையும் என்ற அச்சம் நிலவுவதால் பங்குச்சந்தைகள் வீழ்ந்தன.

அமெரிக்கா இத்தனை நாள் ஊருக்கு உபதேசம் செய்த Free market என்பது மாயையா? இதே மாதிரிதான் தன் நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றதும் பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனை விட்டு விலக தீர்மாணித்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனது மார்க்கெட்டாக பயன்படுத்தவே தடையற்ற மார்க்கெட் தத்துவங்களை அமெரிக்கா உபயோகித்தது. இப்போது தன் நாட்டின் பொருளாதாரம் தடுமாறினால், தத்துவங்களை தூக்கிப்போட்டுவிடுகிறது.

No comments:

Post a Comment