இந்தியாவையும் சீனாவையும் பொதுவாக ஹிமாலய மலைத்தொடர் பிரித்து
வைத்திருக்கிறது. ஆனால், அப்படி மலைத்தொடர் பிரிக்காத இடங்களில் தரமான சாலை
கட்டமைப்புகள் அவசியமாயிருக்கின்றன. சாலை கட்டமைப்புகள் இரண்டு காரணங்களுக்கு
தேவைப்படுகின்றன. ஒன்று, ராணுவ பயன்பாட்டிற்கு. இன்னொன்று, குடிமக்கள் வந்து
குடியேறவும், வசிக்கவும்.
இதற்கு முன்பெல்லாம், எல்லையில் மக்கள் நடமாட்டம் இருந்தால்
பூச்சாண்டி பிடித்து போய் விடும் ரேஞ்சிலேயே இந்தியா யோசித்து வந்தது. எல்லையிலிருந்து
கிட்டத்தட்ட 50-100 கிலோமீட்டருக்கு பெரிதாக கட்டமைப்புகள் இருக்காது.
கட்டமைப்புகள் இல்லாததால் மக்களும் இல்லை.... மக்கள் இல்லாததால் கட்டமைப்புகளும்
இல்லை.
UPA ஆட்சிகாலத்தில்தான் கொஞ்சம் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள்.
மக்கள் அதிகமாக வந்து குடியேறிவிட்டால், அந்த இடங்களுக்குள் சீன வீரர்கள்
அத்துமீறி நுழைய மாட்டார்கள், அந்த இடத்திற்கு சீனா உரிமை கோர முடியாது என்று
இந்தியா யோசித்தது. இதற்காக தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், வேலைகள்
ஒன்றும் வேகமாக நடக்கவில்லை.
எல்லையில் கட்டமைப்புகள் வேகமாக அமைக்கமுடியாததற்கு காரணங்கள்
உள்ளன. முதல் காரணம், இயற்கை.... இந்திய சீன எல்லை பல இடங்களில் கடினமான புவியியல்
அமைப்பும், காலநிலையும் கொண்டது. வருடத்தின் எல்லா காலங்களிலும் அங்கே பணியாற்ற
முடியாது. மிக உயர்ந்த மலை பிரதேசங்களுக்கு கட்டுமான பொருட்களை எடுத்து செல்வதே
கடினமான காரியம்.
செயற்கை காரணமும் உண்டு.... நம் எல்லையோர சாலைகளை அமைப்பதும்,
பராமரிப்பதும் Border Road Organisation எனப்படும் ராணுவ அமைச்சகத்தின் கீழ்வரும்
ஒரு அமைப்பு. இந்த அமைப்பு கொஞ்ச...ம் மெது...வாக செயல்படும் அரசாங்க அமைப்பு. பல
முறை அரசாங்கம் கண்டித்தும் இந்த அமைப்பு சிவப்பு நாடா நடைமுறைகளாலும், பல
காரணங்களாலும் மெதுவாகத்தான் செயல்பட்டது.
2013-ல் சீன வீரர்கள் அக்சாய் சின் பகுதியில் எல்லை கடந்து
வந்தனர். தற்போதைய டோக்லாம் போல அப்போதும் கொஞ்சம் பிரச்சனை ஆகி, பின்னர் சமாதானம்
எட்டப்பட்டது. இதையடுத்து எல்லைப்புறத்தில் உள்கட்டமைப்பு அமைக்கும் பணியை
தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கம் போல இந்த முறையும் தாமதமானது.
சென்ற வருட டோக்லாம் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் எல்லையோர
கட்டமைப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சிவப்பு நாடா பிரச்சனைகளை
குறைப்பதற்காக ஏற்கனவே சுற்றுசூழல் விதிகள் வெகுவாக தளர்த்தப்பட்டிருந்தன. இந்த
நிலையில் இரண்டு முக்கியமான முடிவுகளை மோடி அரசு எடுத்தது. முதல் முடிவு - சில
சாலைகள் அமைக்கும் பணிகளை BRO-இடமிருந்து எடுத்து வேறு அரசு நிறுவனங்களுக்கு கொடுத்தது.
(இதை 2014-லிருந்தே மோடி அரசு செய்து வருகிறது) இரண்டு, BRO-ற்கு அதிக அதிகாரங்கள்
கொடுத்து சில அப்ரூவல் விதிமுறைகளை மாற்றியமைத்தது. உண்மையிலேயே பாராட்டவேண்டிய
முடிவுகள்தான்.
இப்போது அரசு எல்லையோர கட்டமைப்பு திட்டத்தை முடுக்கி
விட்டுள்ளது... BRO-விற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது..... நிதி
ஒதுக்கியாகிவிட்டது. ஆனால், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு எதிர்பாராத
இடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது...!
யாரிடமிருந்து எதிர்ப்பு... சீனா? உள்ளூர் மக்கள்? கிடையாது...
இந்திய ராணுவம்தான் எதிர்க்கிறது..! விசித்திரமாக இருக்கிறதல்லவா?
அருணாசல பிரதேசத்தில் டவாங் – விஜோய் நகர் இடையிலான 1500-2000
கி.மீ சாலை திட்டத்தை எடுத்து கொள்ளுங்கள். எல்லையை ஒட்டியே இந்த சாலை அமைவதாக
திட்டம். இதற்காக அரசு 30000-40000 கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கிறது. நம்
ராணுவத்தின் கவலை என்னவென்றால், அருமையான சாலைகளை
அமைத்த பின்னர், சீனாவுடன் சண்டை வந்து நாம் தோற்று போனால், இந்த சாலைகளின் வழியே
சீன துருப்புகள் வெகு எளிதாக ஊடுருவி விடும். நம்முடைய சாலைகளே நமக்கு எதிரியாகி
விடும். அப்படி சாலை கட்டமைப்பு இல்லாமல் இருந்தால் சீன துருப்புகளால் இந்த கடினமான
மலைகளில் ஊடுருவ முடியாது.
இது எப்படி இருக்கு? இத்தனைக்கும் சீனாவின் எல்லைப்புறம் பக்கா
கட்டமைப்புகளோடு இருக்கிறது. ஒரு வேளை இந்தியா சண்டையில் வென்றால் சீனாவிற்குள்ளே
வெகு எளிதாக ஊடுருவலாம், அல்லவா? ஏன் அப்படி யோசிக்கவில்லை?
காரணம், சீனாவின் ஆற்றல் அப்படி..! எல்லையிலே சாலை போடுவது என்பது
வெறுமனே தாரோ, கான்கிரீட்டோ கொட்டும் சமாசாரமல்ல.... நம் ராணுவ பலத்தோடு
சம்பந்தப்பட்டது. ராணுவ பலத்தையும் அதிகரித்து கொண்டு, சாலையும் போட வேண்டும்.
அதுதான் சிக்கல்...!
தற்போது இருக்கும் நிலவரப்படி அனைத்து பணிகளும் 2022-க்குள்
முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விஷயம் என்னவென்றால் சீனா தனது ராணுவ
அமைப்பை சீர்திருத்தம் செய்து கொண்டிருக்கிறது. 2020-க்குள் அந்த பணியை முடிக்க
போகிறது. இந்த வேலை முடிந்தவுடன் அனைத்து எல்லை பிரச்சனைகளையும் தீவிரமாக கவனிக்க
(!) போவதாக சொல்லியிருக்கிறது. சீன ராணுவமும் அதிவேகமாக நவீனமாகி கொண்டிருக்கிறது.
இந்த சவாலை இந்தியாவால் சமாளிக்கமுடியுமா? பார்க்கலாம், என்ன நடக்க
போகிறதென்று...! தற்சமயம் இந்திய-சீன எல்லை, ஒரு அமைதியான எல்லை.... கடந்த பல
வருடங்களாக ஒரு புல்லட் கூட சுடப்படாத எல்லை..! அமைதி தொடரும் என நம்புவோம்...!
No comments:
Post a Comment