Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

Friday, 6 July 2018

Via Verde - Mexico City


வையா வெரடே – அப்படியென்றால் ஸ்பானிஷ் மொழியில் பசுமை வழி என்று அர்த்தம். நம்ம ஊர் சேலம் – சென்னை சாலை இல்லை. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள சாலைகளை பசுமையான சாலையாக மாற்றும் ப்ராஜெக்டிற்கு பசுமை வழி என்று பெயர்.

மெக்ஸிகோ சிட்டி உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. லேட்டஸ்ட் தகவல்கள் படி கிட்டத்தட்ட 2.25 கோடி மக்கள் வசிக்கிறார்கள் (சென்னை ஒரு கோடிதான் இருக்கும்). ரொம்ப காலமாகவே அந்த ஊரில் அநியாய பொல்யூஷன். 90களிலேயே 10-ல் 6 பேருக்கு சுவாச பிரச்சனை இருந்தது.

சுற்றுசூழலை கொஞ்சமேனும் காப்பாற்ற, இப்போது வெர்டிகல் கார்டன் (Vertical Garden) முறைப்படி சாலைகளில் இருக்கும் பாலங்களின் தூண்களில் செடி, கொடிகளை வளர்க்கிறார்கள்... எப்படி?

வீணான பிளாஸ்டிக் முதலின உபயோகித்து, போர்டுகள் செய்து, அதில் துணி குப்பைகளை கொண்டு ஹைட்ரோபோனிக் (Hydroponic) என்னும் முறையிலே செடி நடுகிறார்கள். மண்ணே இல்லாமல் செடி வளர்க்கும் முறை இது. செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தண்ணீரில் கலந்து விடுவார்கள். செடி வேர்பிடித்து வளர்வதற்கு Felt எனப்படும் துணிக்குப்பை உபயோகப்படும்.

சரி, இதற்கு எவ்வளவு தண்ணீர் செலவாகும்? பாலங்களின் மேல் பொழியும் மழைநீரை சேகரித்து கொள்கிறார்கள்... Grey water  என்று சொல்லப்படும் அழுக்கு தண்ணீரையும் உபயோகப்படுத்தி கொள்கிறார்கள். மக்களுக்கான குடிநீரில் கை வைக்கவில்லை. லாரியில் தண்ணீர் கொண்டுபோய் தெருவெல்லாம் ஊற்றும் சமாசாரமல்ல... மாறாக, சொட்டு நீர் பாசன ஐடியாவை பயன்படுத்தி தேவையான அளவு நீரை மட்டுமே செடிகளுக்கு அளிக்கிறார்கள். இது எல்லாமே சென்ஸார் கொண்டு, ரிமோட்டாக நடக்கும் விஷயம்...!

ஆக, குப்பைகளை கொண்டும், அழுக்கு தண்ணீர் கொண்டும், டெக்னாலஜியை கொண்டும் சாலையை பசுமையாக்குகிறார்கள்.

இதன் பயன்கள் குறித்து, பல வெப்சைட்டுகள் பலவிதமான தரவுகளை தருகின்றன. அதனால் நான் அதற்குள் போகவில்லை. நிறைய கார்பன்டைஆக்ஸைடு, தூசுகளை குறைத்து, ஆக்ஸிஜன் தருகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அவ்வளவுதான் சேதி.

ஆனால், கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இதை மொத்தமும் செய்வது அரசாங்கம் இல்லை... பிரைவேட் கம்பெனிகள். (கொஞ்சம் பணம் அரசாங்கமும் தருவதாக சொல்கிறார்கள்).

நம் டெல்லியில் இதே போல செய்யவேண்டும் என்று ஆம்ஆத்மி முன்பு  யோசித்தது. அப்புறம் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. நம் நாட்டிலும் இது போல செய்யலாமே...!

Tuesday, 3 July 2018

Aadhar Biometric Data Theft


எது நடந்துவிடுமோ என்று அஞ்சி கொண்டிருந்தேனோ, அது நடந்தே விட்டது. Yes, ஆதார் பயோமெட்ரிக் தரவுகள் திருடு போயுள்ளன.

ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சில மாநிலங்கள் சொத்துக்களை ரிஜிஸ்டர் செய்யும்போது ஆதார் நம்பரை கட்டாயமாக்கியுள்ளன. இப்படி ரிஜிஸ்டர் செய்யப்படும் டாகுமெண்ட்களை முறையாக கட்டணம் செலுத்தியே நகலெடுத்து கொள்ளலாம்.

ஒரு சொத்து டாகுமென்டில் வாங்குபவர், விற்பவர், இரண்டு சாட்சிகள் என்று குறைந்தது 4 பேர் விவரமாவது இருக்கும். அந்த டாகுமென்டை நகலெடுத்தால், அவர்கள் பெயர், முகவரி, ஆதார் நம்பர், PAN ஆகிய அனைத்து விவரங்களோடு கைரேகையும் கிடைத்து விட்டது.

இந்த கை ரேகையை வைத்து ஒன்றும் செய்யமுடியாது….. ஆனால், கொஞ்சம் low cost டெக்னாலஜியை பயன்படுத்தினாலே போதும்…. கைரேகையை படம் எடுத்து, ஒரு பிலிமில் பதியவைத்து, போட்டோபாலிமர் ரெஸின் என்னும் திரவத்தில் மூழ்கடித்து, அல்ட்ராவயலெட் லைட்டில் கொஞ்சம் காட்டினால்… கைரேகை ரெடி. இந்த பிலிமை நீங்கள் ஆதார் ஆதன்டிகேஷன் மெஷினில் காட்டினால் ஒத்துக்கொள்ளுமாம். அதிக செலவு பிடிக்கும் விஷயமல்ல… ஒரு கைரேகை ரெடி பண்ண 75 ரூபாய்தான் ஆகுமாம்.

ஹைதராபாத்தில் ஒரு சிம் விற்பனையாளர் இது போல 6000 பேரின் ஆதார் தகவல்களையும், கைரேகைகளையும் திருடியிருக்கிறார். திருடப்பட்ட கைரேகைகளை வைத்து சிம்களை ஆதன்டிகேட் செய்திருக்கிறார். (இதன் விரிவான நடைமுறை தெரியவில்லை) கருப்பு மார்க்கெட்டில் ஒரு Aadhar Authenticated சிம் 500 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம்.

பார்ட்டி இன்னும் கொஞ்சம் பொறுமையாகவும், திறமையாகவும் இருந்திருந்தால் சொத்துக்களையே கைமாற்றியிருக்கலாம்… வங்கி அக்கௌண்டுகள் கூட ஆரம்பித்திருக்கலாம். கிறுக்குப்பயல், ஒரே பயோமெட்ரிக் ஸ்கானரில், ஒரே மாதத்தில் ஏகப்பட்ட ஆதன்டிகேஷன் செய்து மாட்டிக்கொண்டு விட்டான்.

இது தனிப்பட்ட சம்பவமல்ல… போன செப்டம்பர் மாதம், உத்தரபிரதேசத்தில், கான்பூரில் இன்னும் விவரமாகவே திருடியிருக்கின்றனர். Authorised Aadhar Operator-டைய கைரேகையை திருட்டுத்தனமாக ஒரு சாதாரண பட்டர் பேப்பரில் பதிய வைத்து கொண்டு, இதே மாதிரி போட்டோபாலிமர் ரெஸின் உபயோகித்து கைரேகை திருடிவிட்டனர். இதை வைத்துக்கொண்டு ஆதார் சிஸ்டம் உள்ளே நுழைந்திருக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, ஆதார் க்ளையண்ட் சிஸ்டத்தின் சோர்ஸ் கோடையும் எடுத்துள்ளனர். இந்த சாப்ட்வேர் உபயோகித்துதான் ஆதார் வழங்கப்படுகிறது. ரெடினா ஸ்கேனிங் முறையையும் எப்படியோ ஏமாற்றியிருக்கிறார்கள். (நல்லவேளையாக  எப்படி ஏமாற்றினார்கள் என்ற தகவல் செய்தித்தாளில் தரவில்லை… அப்புறம் ஒவ்வொரு ஊருலேயும் இப்படி கிளம்புவாங்க..!)

அப்புறமென்ன, கனஜோராக பொய்யான ஆதார் கார்டுகள் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்…! 10 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து உள்ளே போட்டிருக்கிறார்கள்.

நான் எப்போதும் சொல்லும் அதே விஷயம்தான்… டெக்னாலஜி என்பது இருமுனை கத்தி…. அது எப்போதும் நமக்கு சாதகமாகத்தான் இயங்கும் என்று நினைத்தால் நாம் முட்டாள்கள்… ஆதார், EVM இரண்டுமே தேசத்திற்கு பேராபத்துகள். டெக்னாலஜி மோகத்தை குறைத்து கொள்வதே தேசத்திற்கும் மக்களுக்கும் நல்லது. யார் கரடியாக கத்தினாலும், அரசாங்கம் இதை கண்டிப்பாக காதில் வாங்கி கொள்ளாது.

தற்போதைக்கு நம்மால் செய்யக்கூடியது இதுதான் - ஆதார் பயோமெட்ரிக் லாக் என்று ஒன்று இருக்கிறதாம். திருடர்கள் அன்லாக் செய்ய வழி கண்டுபிடிக்கும் வரையில் அதை உபயோகிக்கலாம். அவ்வளவுதான் நம்மால் முடியும்…!


Thursday, 30 November 2017

US Net Neutrality


Net Neutrality – நினைவிருக்கிறதா? போன பிப்ரவரி மாதத்தில் ட்ராய் (Trai) இந்தியாவில் இணைய சமநிலை இருக்கும் என்ற முக்கியமான முடிவெடுத்தது.
இப்போது இணைய சமநிலை என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்… நாம் பலவித வெப்சைட்டுகளை பார்க்கிறோம். நமக்கு இணைய கனெக்ஷனை வழங்கும் சர்வீஸ் ப்ரோவைடர்கள் அனைத்து வெப்சைட்டுகளையும் சீரான வேகத்திலே, பாரபட்சமின்றி தருகிறார்கள். இதுதான் இணைய சமநிலை. அப்படி சமநிலை இல்லையென்றால், சர்வீஸ் புரோவைடர்கள் பணம் வாங்கி கொண்டு, சில வெப்சைட்டுகளுக்கு மட்டும் வேகத்தை கூட்டலாம்… மற்றவர்களுக்கு வேகத்தை குறைக்கலாம்.
வேறு விதமாக சொன்னால் – உங்கள் கேபிள் டி.வி ஆபரேட்டர் சன்நியூஸ் மட்டுமோ, அல்லது ஜெயா நியூஸ் மட்டுமோ காட்டினால் உங்களுக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும்…? உங்களால் உண்மையான செய்தியை அறியவே முடியாதல்லவா? அது போலத்தான்…. இணைய சமநிலை இல்லாவிட்டால் உங்களால் இணையத்தில் எதையுமே அறிந்து கொள்ளமுடியாத நிலை உண்டாகும். இப்போது விஷயத்தை பார்ப்போம்.

ட்ரம்ப் வென்றபின்னர் அமெரிக்க அரசு, முந்தைய அரசு எடுத்திருந்த முக்கியமான முடிவுகளை மாற்றி கொண்டிருக்கிறது. இதற்கு இணைய சமநிலையும் விலக்கில்லை.
இந்தியாவிற்கு முன்னதாகவே அமெரிக்கா 2015ல் இணைய சமநிலை இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. ட்ரம்ப் வென்றபின்னர் இந்திய-அமெரிக்கரான அஜித் பாய் (Ajith Pai) FCC தலைவரானார். (Federal Communications Commission – நம் ஊர் Trai-ஐ விட பெரிய அமைப்பு). அஜித் பாய் எப்போதுமே இணைய சமநிலைக்கு எதிரானவர்.
இப்போது அவர் ‘இணைய சமநிலை கூடாது…. அது சந்தை போட்டியை வளர்க்கவில்லை… முதலீடுகளை ஈர்க்கவில்லை’ என்று காரணம் கூறி சமநிலையை நீக்க கோருகிறார். FCC இது குறித்து டிசம்பர் 14ம் தேதி முடிவெடுக்க போகிறது.
அமெரிக்க டெக்னாலஜி துறை இரண்டாக பிரிந்து கிடக்கிறது…. பலர் சமநிலைக்கு ஆதரவாக இருக்க, AT&T, Verizon போன்றவர்கள் இணைய சமநிலை வேண்டாம் என்கிறார்கள். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் Free Basics என்ற பெயரிலே இணைய சமநிலைக்கு எதிராக களமிறங்கிய பேஸ்புக், அமெரிக்காவிலே சமநிலை வேண்டும் என்கிறது…. இரட்டை நிலைப்பாடு. மார்க் பெரிய அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கலாம்.
உண்மையில் இணைய சமநிலைதான் போட்டியை வளர்க்க சமமான களம் அமைத்து தருகிறது… முதலீடுகளை ஈர்க்கிறது. இந்த காரணங்களுக்காகத்தான் இந்தியா சமநிலையை தேர்ந்தெடுத்தது. ஆனால் அஜித் பாய் சரியான காரணங்களை கூறி தவறான முடிவெடுக்க துடிக்கிறார்.
எப்போதுமே அமெரிக்கா ஒரு டிரெண்ட் செட்டர்… இப்போது அமெரிக்கா சமநிலைக்கு எதிரான முடிவெடுத்தால் பல நாடுகள் அமெரிக்காவை தொடரும். ஆக, FCC ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்கப்போகிறது. All eyes on FCC…