Friday 15 December 2017

Choco Pie-யும் ஜனநாயகமும்


வடகொரியாவில் இருக்கும் மக்களுக்கு தொழில் வாய்ப்பளிக்கவும், அதே சமயம் தங்கள் நாட்டு கம்பெனிகளுக்கு குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கவும், தென்கொரியா கே ஸாங் என்னும் இடத்திலே ஒரு தொழிற்பூங்காவை அமைத்தது. தன் நாட்டுக்குள் தென்கொரியா தொழிற்பூங்கா அமைக்க வடகொரியா எப்படி ஒப்புக்கொண்டது...? ஏதோ ஒரு விதத்தில் காசு வந்தால் சரி என்பதே காரணம்... வடகொரியாவின் பொருளாதாரம் அப்படி படுத்து கிடக்கிறது.
அவ்வபோது வடகொரியா இந்த தொழிற்பூங்காவை மூடினாலும் ஏதோ ஒரு விதத்தில் 124 தென்கொரிய கம்பெனிகள் இங்கு தம் பொருட்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. அதில் ஒரு கம்பெனி தன் ஊழியர்களை ஊக்கப்படுத்த சாக்கோ பை எனப்படும் இனிப்பு தின்பண்டத்தை தந்தது.
தென்கொரியர்களுக்கு சாக்கோ பை 70களில் இருந்து கிடைக்கும் ஒரு சாதாரண தின்பண்டம். ஆனால் வடகொரியர்கள் 2004ல்தான் முதன்முறையாக அதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு சாக்கோபை என்பது வெறும் தின்பண்டமல்ல... தென்கொரியாவின் சுபிட்சத்தின் அடையாளம்.... தென்கொரியர்கள் நம்மை விட மோசமாக வாழ்கிறார்கள் என்ற அரசாங்க பிரச்சாரத்தை உடைத்த ஒரு ஆதாரம். தென்கொரியா உண்மையிலேயே வளமாக இருக்கிறது என்பதை வடகொரியர்கள் உணர்ந்தனர்.
அப்படி ஒரு இனிப்பை இது வரை சுவைத்திராத வட கொரிய தொழிலாளிகள் அதை சுவைத்து மகிழ்ந்தனர். ஓவர் டைம் செய்தால் அதிக சாக்கோ பை.... தின்பண்டத்திற்கு ஆசைப்பட்ட தொழிலாளர்கள் தென்கொரிய கம்பெனிக்கு அதிக உழைப்பை கொட்டினர்.
தொழிலாளர்கள் தாங்கள் சாக்கோ பையை சுவைத்ததோடு மட்டுமில்லாமல், கள்ளமார்கெட்டிலும் விற்றனர். இதையறிந்த வட கொரிய அரசு தொழிலாளர்களுக்கு சாக்கோ பை தர தடைவிதித்ததும், தாங்களே சாக்கோ பை உற்பத்தி செய்ய முயன்று தோற்றதும் வேறு கதை.
இப்போது மெயின் கதைக்கு வருவோம். போன மாதம், ஓஹ்-சுங்-சங் (Oh Chung Sung) என்னும் வடகொரிய ராணுவ வீரர் தென்கொரியாவிற்கு தப்பி செல்ல திட்டம் தீட்டினார். அவர் தப்பித்து வந்த ஜீப் துரதிர்ஷ்ட வசமாக ஒரு பள்ளத்திலே மாட்டிக்கொண்டது. வடகொரிய வீரர்கள் அவரை நோக்கி 40 முறை சுட்டனர். அதில் 5 குண்டுகள் அவர் மீது பாய்ந்தது. தன் மேல் இலை குப்பைகளை போட்டுக்கொண்டு அசையாமல் படுத்திருந்து உயிர் தப்பினார் நமது ஹீரோ.
தென்கொரிய ராணுவம் தெர்மல் சென்ஸார்கள் உதவி கொண்டு அவரை கண்டுபிடித்து காப்பாற்றினர். குண்டுகளை எடுக்க அவருக்கு ஆபரேஷன் செய்தபோதுதான், அவரது வயிற்றில் பெரிது பெரிதாக ஏராளமான புழுக்கள் இருப்பதை அறிந்தனர். ஓஹ்-வுடைய நிலைமையை கருத்தில் கொண்ட டாக்டர்கள் ஆபரேஷனுக்கு இடையிலே அந்த புழுக்களை அவசரவசரமாக வெளியே எடுத்தனர்.
ஓஹ் வயிற்றில் அவ்வளவு புழுக்கள் எப்படி வந்தது? வடகொரியாவில் பலரது வயிற்றில் இப்படித்தான் புழுக்கள் இருக்கிறது என்கிறார்கள். காரணம், 2014ல் சர்வாதிகாரி கிம் போட்ட முட்டாள்தனமான உத்தரவு. பயிர்கள் நன்றாக விளைய மனித கழிவை போட சொன்னார். (உரம் வாங்க காசு இருந்திருக்காது என்று நினைக்கிறேன்) வேறு வழியில்லாமல் விவசாயிகளும் விலங்கு கழிவோடு, மனித கழிவுகளையும் சேர்த்து உரமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுதான் வயிற்றில் இருக்கும் புழுக்களுக்கு காரணம்.

ஓஹ் சிகிச்சை முடிந்து, நினைவு திரும்பி கண் விழித்ததும் முதலில் கேட்டது – ஒரு சாக்கோ பை. சாக்கோ பை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அவருக்கு 100 டப்பாக்கள் சாக்கோ பை தந்தது... அதோடு ஆயுளுக்கும் இலவசமாக சாக்கோ பை தருவதாக அறிவித்துள்ளது.
நம் நாட்டிலும் சில பேர் “சர்வாதிகாரம் வந்தாதான் சார், நாடு முன்னேறும்.... எமர்ஜென்ஸி வந்த போது விலைவாசி குறைந்தது....” என்றெல்லாம் பினாத்துகிறார்கள்... அவர்கள் சுபிட்ச பூமியான வடகொரியாவிற்கு செல்லட்டும்.... கிம், சாக்கோ பை கொடுத்து இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறார்.

No comments:

Post a Comment