Thursday 23 August 2018

Indian Power Sector and Uday Scheme


மின்சார விநியோகம் செய்யும் கம்பெனிகள் (சுருக்கமாக டிஸ்காம்) ஏகமாக கடனில் மூழ்கியிருக்க அவற்றை காப்பாற்ற வந்ததாக சொல்லப்படும் ஒரு ஸ்கீம்தான் உதய்.
கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும், யூனியன் டெரிடரிகளும் உதய் திட்டத்தில் இணைந்துவிட்டன. இந்த திட்டம் மூலமாக இந்திய மின்துறையில் அபாரமான மாற்றம் வரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. 2015 இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது இரண்டாண்டுகளை கடந்து விட்டது. இந்த திட்டம் என்ன, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

உதய் திட்டத்தின் செயல்பாட்டை பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முதலில் டிஸ்காம்களின் கடன்சுமையை தெரிந்து கொள்ளலாம். 2015 செப்டம்பரில் இந்தியாவில் இருந்த அனைத்து டிஸ்காம்களின் மொத்த கடன்சுமை 4.3 லட்சம் கோடிகள். அதிகபட்சமாக ராஜஸ்தான் 85000 கோடிகள் கடன், தமிழ்நாடு 75000 கோடிகள் கடன். இந்த கடனுக்கு வட்டி கட்டியே லாபம் மொத்தமும் போய்விடும். (லாபம் வந்துட்டாலும்… அது வேறு கதை)

டிஸ்காம்கள் நஷ்டத்தில் இருந்தால் இருந்துவிட்டு போகிறது, பிரச்சனை என்ன? நாடு முழுக்க தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பது மத்திய அரசுகளின் குறிக்கோள். மின்சாரம் இல்லாமல் வளர்ச்சி இல்லை. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியாவது இந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க காசு வேண்டுமே. நஷ்டத்தில் இயங்கும் டிஸ்காம்களால் மின்சாரம் வாங்க முடியாது, அல்லவா?

அதனால், டிஸ்காம்கள் லாபமாக இயங்கவேண்டும்…. அப்போது அவற்றின் கையிலே காசு புழங்கும்… மின்சாரத்தை அதிகமாக வாங்கும்…. மின்துறையில் முதலீடுகள் பெருகும். இப்படி நடந்தால் அனைவருக்கும் win-win situation.

சரி, டிஸ்காம்களின் கடன்தானே பிரச்சனை? அந்தந்த மாநில அரசுகளே அவர்கள் மாநிலத்தில் உள்ள டிஸ்காம்களின் கடனை எடுத்து கொண்டால் என்ன? டிஸ்காம்களை எளிதாக காப்பாற்றி விடலாமே…! அதுதான் முடியாது… FRBM Act என்னும் ஒரு சட்டம், அப்படி மாநில அரசுகள் கடன்களை எடுத்து கொள்வதை தடுக்கிறது. அது என்ன சட்டம்?

ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கண்டமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தன. வரவுக்கு மீறிய செலவு… fiscal deficit என்று சொல்வார்கள். வரவுக்கு மீறி செலவு செய்தால் என்ன ஆகும்? கடன்தான் ஆகும். இப்படி ஒரேடியாக கடன் வாங்க கூடாது என்பதை மத்திய அரசுகள் (காங், பாஜக இரண்டுமே) உணர்ந்தன. அதனால், Fiscal deficit-ற்கு லிமிட் வரையறுத்து ஒரு சட்டத்தை போட்டது. அதுதான் FRBM Act.

இப்போது டிஸ்காம்களின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் FRBM சட்டப்படி நிர்ணயித்த fiscal deficit அளவை தாண்டிவிடும். அதனால், மாநில அரசுகள் கடனை ஏற்க முடியாது.

நாளடைவில், டிஸ்காம்களின் கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே போனதால், debt trap எனப்படும் கடன் சுழலில் மாட்டி கொண்டன.

டிஸ்காம்களின் நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், வோட்டு அரசியல். மாநில அரசுகள் வோட்டு அரசியலை மனதில் வைத்துக்கொண்டு மின்கட்டணத்தை ஏற்றுவதில்லை. அதாவது, டிஸ்காம்களின் கடன் சுமையையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. அதே சமயம், வருமானம் அதிகமாக வர மின்கட்டணத்தையும் அதிகரிக்காது.

டிஸ்காம்களின் திறமையை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை அடுத்து பார்க்கலாம். டிஸ்காம்களின் திறன் Aggregate Technical and Commercial Losses எனப்படும் AT&C losses-யை அடிப்படையாக கொண்டது.

மொத்தம் இவ்வளவு மின்சாரம் அனுப்பினால், எத்தனை மின்சாரம் பெறப்படுகிறது என்பது டெக்னிக்கல் நஷ்டம். அதிக மின்சார லோடு, டிரான்ஸ்பார்மர், லைன் கெபாசிடி குறைவு, தரமான பராமரிப்பு இன்மை போன்றவை இதற்கான காரணங்கள். மற்றதெல்லாம் கமர்சியல் நஷ்டம். உதா. மின் திருட்டு, மீட்டரில் திருட்டுத்தனம், பில் பணம் கட்டாதது போன்றவை.

ஒரு டிஸ்காமின் திறமையை இந்த AT&C loss வைத்தே கணக்கிடுவார்கள். 15 சதவிகிதத்திற்குள் AT&C loss கொண்டு வரவேண்டும் என்பது உதய் திட்டத்தின் டார்கெட்.

சரி, ஓரளவிற்கு பேக்கிரவுண்ட் தகவல்களை பார்த்துவிட்டோம். இப்போது உதய் ஸ்கீம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் டிஸ்காம்களின் நஷ்டத்தை கட்டுப்படுத்துவது அந்த டிஸ்காம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் வேலை. தேவையான உதவிகளை செய்வது மட்டுமே மத்திய அரசின் வேலை.

முதலில் கடன்சுமையை எப்படியாவது குறைக்கவேண்டும். அப்போதுதான் டிஸ்காம்களால் புதிய கடன்களை பெற்று, தேவைப்படும் மின் உபகரணங்களில் முதலீடு செய்யமுடியும். லாபத்தின் பாதையில் திரும்பமுடியும். இல்லையென்றால் பழைய உபகரணங்களை கொண்டு AT&C loss-ஐ கட்டுப்படுத்த முடியாது.

உதய் திட்டத்தின் கீழே, டிஸ்காமின் கடன்களில் 75% மாநில அரசு எடுத்துக்கொண்டு பாண்டுகள் வெளியிடலாம். இது FRBM சட்டத்தின் கீழே தவறாக கருதப்படாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதே போல மீதமிருக்கும் 25% கடனை டிஸ்காம்கள், மாநில அரசின் கேரண்டியோடு பாண்டுகளாக மாற்றி கொள்ளலாம். மாநில அரசின் கேரண்டி இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். மாநிலங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக மின்கட்டணத்தை ஏற்றிவரவேண்டும். இதுவும் டிஸ்காம்களின் நஷ்டத்தை குறைக்கும்.

சரி, கடன்சுமை போனது… அடுத்து AT&C loss குறைக்கவேண்டும். புதிய எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்துவது, டிரான்பார்மர் பராமரிப்பு, மாற்றம் உள்ளிட்ட வேலைகள், மின்திருட்டை தடுப்பது, பணவசூல் ஆகியவை இதில் அடக்கம்.

AT&C loss கட்டுப்படுத்தினால் மின்உற்பத்திக்கு தேவையான கரி, அந்தந்த மாநிலங்களுக்கு சகாயவிலையில் கிடைக்கும். மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் உண்டு. இல்லையென்றால், ஒன்றும் கிடையாது. இது ஒரு கேரட்-ஸ்டிக் அப்ரோச்.

உதய் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், Coal Linkage Rationalisation என்னும் திட்டம். இதன்படி பவர் பிளாண்டுகளுக்கு அருகிலிருக்கும் கரி சுரங்கங்களிலிருந்து கரி வாங்கி கொள்ளலாம். முன்பெல்லாம் பிளாக் அலாக்கேஷன் என்று எந்த சுரங்கம் ஒதுக்கப்பட்டதோ, அங்கிருந்துதான் கரி வரவேண்டும். சரக்கு போக்குவரத்து கட்டணமே அதிகமாக இருக்கும். இப்போது அருகிலிருக்கும் சுரங்கங்களில் இருந்து கரி வருவதால் அந்த செலவு குறைவு.

இதன் நீட்சியாக, அடுத்திருக்கும் பவர் பிளாண்டுக்கு கரி இல்லையென்றால், கரியை கைவசம் வைத்திருக்கும் அருகாமை பிளாண்டிலிருந்து எடுத்து கொடுக்கலாம். இதை Swapping என்று சொல்கிறார்கள்.

இந்த இரண்டு ஐடியாக்களின் மூலம் போக்குவரத்து (Transportation and Logistics) செலவுகள் குறையும். அப்போது, மின் உற்பத்தி விலையும் குறையுமல்லவா? டிஸ்காம்கள் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கலாம்.

இப்போது உதய் திட்டத்தின் பயன்களை பார்க்கலாம்… முதல் வருடம் நல்ல ஆரம்பம். AT&C நஷ்டம் ஒரு சதவிகிதம் குறைந்தது. நிதி சீரமைப்பு (Fin Restructure) காரணமாக டிஸ்காம்களுக்கு 15000 கோடி ரூபாய்கள் மிச்சமாயின.

இரண்டாம் வருடத்தில் AT&C நஷ்டம் 20.3% லிருந்து 19.1%-ஆக வந்து விட்டது. (தற்சமயம் 18.75%). 4 மாநில டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் டிஸ்காம் லாபம் 1565 கோடி (போன வருடம் 10203 கோடி நஷ்டம்)

மோசமான மாநிலங்களை பார்ப்போம். பீமாரு மாநிலங்களில் ராஜஸ்தான் ஒருபக்கம் லாபகரமாக போனாலும், இன்னொரு பக்கம் ஜார்கண்ட் வந்து இணைந்து விட்டது. இந்த மாநிலங்களில் AT&C நஷ்டம் உபி 28%, பீஹார் 33%, மபி 30%, ஜார்கண்ட் 32%. இருப்பதிலேயே குறைச்சல் ஆந்திராவாம் 8.7%. (தமிழ்நாடு தற்சமயம் 14.23%)
வட்டியை குறைத்ததாலேயே டிஸ்காம்களின் பெரும் சுமை குறைந்துவிட்டது. Coal Linkage Rationalisation திட்டமும் சில ஆயிரம் கோடிகள் செலவை குறைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் மீட்டர்கள் மூலமும், துல்லியமாக மின்சார உபயோகம் கணக்கெடுக்கப்படுவதால் வரவு அதிகமாகிறது. இரண்டே வருடங்களில் டிஸ்காம்களின் நஷ்டம் 70% குறைந்து விட்டது. Very good என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?

அவ்வளவு எளிதாக சொல்லமுடியாது. டிஸ்காம்களின் லாபத்தை முழுவதுமாக கொண்டாட முடியாது. காரணம், டிஸ்காம்களின் கடன், வட்டி சுமையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது. அதாவது, மக்கள் மின்கட்டணம் கட்டியதற்கும் மேலாக வரிப்பணத்தை தருகிறார்கள் என்று அர்த்தம். FRBM சட்டத்திலிருந்து விலக்கு அளித்தாலும், கடன் என்பது கடன்தான். அதை அடைக்கும் வழிகளையும் பார்க்கவேண்டும்.

டிஸ்காம்களின் லாபத்தை கொண்டாட முடியாததற்கு இன்னும் ஒரு ரொம்ப முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் மின்உற்பத்திக்கு நிறுவனங்களுக்கு (Gencos) காசு கொடுப்பது. டிஸ்காம்கள் நஷ்டம் 17350 கோடிகள் குறைந்தது என்றால், ஜென்கோஸ்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 150% அதிகரித்து, 32071 கோடியாக உயர்ந்துள்ளது. உபி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே இந்த தொகையில் 60% காரணம்.

இதனால் என்னவாயிற்று…? 180000 கோடிகள் மதிப்புள்ள ஜென்கோஸ்களின் பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியுள்ளது. அதில் 70000 கோடி NPAவாக மாறிவிட்டது. ஜென்கோஸ்களுக்கு சரியான நேரத்தில் ஒழுங்காக பணம் கொடுத்திருந்தால், டிஸ்காம்களின் நஷ்டம் அதிகரித்திருக்கும் என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம் டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வருகிறது என்று பார்த்தால், இன்னொரு பக்கம் ஜென்கோஸ்கள் அடிவாங்குவதையும், கடன்கள் NPA ஆவதையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதாவது, நஷ்டம் மாறவில்லை…. நஷ்டம் ஏற்படும் இடம்தான் மாறியிருக்கிறது.

அடுத்ததாக ஜென்கோஸ்களையும், அவற்றின் பிரச்சனைகளையும் கவனிப்போம்.
உதய் திட்டம் என்பது பவர் செக்டாரின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை வல்லுனர்கள் இழந்துவிட்டனர். மத்திய அரசு உதய் திட்டத்தின் வெற்றி பற்றி மட்டுமே பேசும். ஜென்கோஸ்கள் பற்றியும், பவர் செக்டாரின் பிரச்சனைகள் குறித்தும் பேசவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.

முன்பெல்லாம் மின்சாரம் என்றாலே தெர்மல், ஹைட்ரோ, நியூக்ளியர் என்றிருந்தது. இப்போது பிரபலமாகி வருவது ரினூவபல்ஸ் (Renewables). அதாவது சோலார், விண்ட் போன்றவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல நாடுகள் ரினூவபல் எனர்ஜியில் முதலீடு செய்து வருகின்றன. பழைய தெர்மல் பிளாண்டுகளை மூடியும் வருகின்றன. இந்த மாற்றம் இந்தியாவின் ஜென்கோஸ்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் பவர் பிளாண்டுகளின் இன்ஸ்டால்டு கபாசிடி வைத்து பார்த்தால் தெர்மல் கிட்டதட்ட 65%, ஹைட்ரோ 14.5%, ரினூவபல்ஸ் 16.2% (நியூக்ளியர் எல்லாம் வெறும் 2%). இப்போதைய முதலீடுகள் பெரும்பாலும் ரினூபவல்ஸ் ஏரியாவில்தான், அதிலும் முக்கியமாக சோலார் பவர்.

2012ல் ரினூவபல் கபாசிடி 24500 மெகாவாட்டுகள். 2017ல் 57000 மெகாவாட்டுகள். 2018ல் 69000 மெகாவாட்டுகள். முக்கியமாக மோடி அரசு சோலார் மின்சாரத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. அதுதான் பிரச்சனைக்கு அடிநாதம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? விவரமாக சொல்கிறேன். (படத்தை கவனமாக பார்க்கவும். UPA2, NDA அரசுகளின் கீழே Growth% கவனிக்கவும். NDA ஆட்சியில் ரினூவபிலில் இருக்கும் அசுர வளர்ச்சியையும் கவனிக்கவும்)

ஆரம்பகாலத்திய டெக்னாலஜியில் ரினூவபல் மின்சாரம் விலை அதிகம். தெர்மல் மின்சாரம் விலை குறைவு. ஆனால், இப்போது டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு பிறகு ரினூவபல் மின்சாரம் விலை வெகுவாக குறைந்து விட்டது.

வேறுவிதத்தில் சொன்னால், தற்போதைய தெர்மல் மின்சாரம் மொத்தத்தையும் ரினூவபல் மின்சாரத்தின் விலையில் வாங்கினால் டிஸ்காம்களுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய்கள் மிச்சமாகும். தற்போதைய ரினூவபல் மின்சாரம் அவ்வளவு சீப்…!

உதய் திட்டம், லாபத்தை நோக்கமாக, அளவுகோலாக கொண்டு டிஸ்காம்களை குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்க தூண்டுகிறது. இப்போது, டிஸ்காம்கள் தெர்மல் மின்சாரம் வாங்குவார்களா, அல்லது குறைந்த விலையில் ரினூவபல் மின்சாரம் வாங்குவார்களா?

இன்னொரு விஷயமும் இருக்கிறது. ரினூவபல் மின்சாரத்தை மட்டுமே எடுத்து கொண்டாலும், ஆரம்ப காலத்து ரினூவபல் மின்சாரத்தின் விலை அதிகம். சமீபத்திய ரினூவபல் மின்சாரத்தின் விலை குறைவு. டிஸ்காம்கள் ஆரம்பித்தில் போட்ட PPA-க்களின் (Power Purchase Agreement) விலையில் மின்சாரம் வாங்க மறுக்கின்றன. இந்த PPAக்கள் 25 வருட காலத்திற்கு போடப்பட்டவை. (முக்கியமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் முந்திரிக்கொட்டை போல ஆரம்பகாலத்திய ரிடனூபவலில் ஏகத்துக்கும் இறங்கிவிட்டன. இப்போது விலையை குறைக்க கேட்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் மத்திய அரசும் இதே போல அவசர கதியில் இறங்குவதை கவனிக்கலாம்)

இந்த PPAக்கள் அடிப்படையில்தான் முன்னர் பிராஜெக்டுகள் தொடங்கப்பட்டன… கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது 40GW பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட 25GW பிராஜெக்டுகளுக்கு PPA-க்களே போடப்படவில்லை.

சரி, தெர்மல் பிளாண்டுகளில் முதலீடுகள் அடியோடு நிறுத்துப்பட்டுவிட்டனவா? அதுதான் இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி தெர்மல் பிளாண்டுகள் ஒரு பக்கம் கட்டப்பட்டு கொண்டிருகின்றன. அவற்றின் எதிர்காலம் என்னவாகும்?


இனி இந்திய பவர் செக்டாரின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பொறுமையாக பார்ப்போம்.
இந்தியா இப்போது உலகிலேயே மின் உற்பத்தியிலும் மின் நுகர்விலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிடம் சைனா 6000 டெராவாட்டுகள், இரண்டாமிடம் அமெரிக்கா 4300 டெராவாட்டுகள், மூன்றாமிடம் இந்தியா 1400 டெராவாட்டுகள். இந்தியாவில் இன்னும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வரவில்லை. இன்னுமும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற போகிறது. அப்போது மின்தேவை எவ்வளவு இருக்கும்?

சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்தால் ரினூவபல்ஸ்தான் எதிர்காலம். இப்போது கிடைக்கும் டெக்னாலஜியை கொண்டு ரினூவபல்ஸில் முதலீடு செய்கிறார்கள். ஒரு யூனிட் 2 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். நாளையே டெக்னாலஜி வளருகிறது. ஒரு யூனிட் 50 பைசாவுக்கு கிடைக்கலாம். தற்போது முதலீடு செய்பவர்கள் அப்போது நஷ்டத்தில போய்விடுவார்கள், அல்லவா?

அப்படியானால் என்ன செய்யவேண்டும்? உதய் திட்டத்திலே டிஸ்காம்களை ஒரு வர்த்தக போட்டியிலே, லாப நோக்கத்திலே அரசு தள்ளுகிறது. குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவது டிஸ்காம்களுக்கு லாபம். ஆனால், ஜென்கோஸ்களுக்கு நஷ்டம். இந்த நஷ்டம் பழைய டெக்னாலஜி ரினூவபல்ஸ்க்கும் வருகிறது.

இந்த லாப நோக்கத்தை கைவிட்டுவிட்டு, ஜென்கோஸ், டிஸ்காம், நுகர்வோர் இந்த மூவருக்கும் நிலையான பலன் தரும் திட்டங்கள்தான் நமக்கு தேவை. குறுகிய கால லாப நோக்கில் தீட்டப்படும் திட்டங்கள், நீண்ட கால முதலீடுகளை அழித்துவிடும். இன்றைய ஜென்கோஸ்களின் திண்டாட்டம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். காரணம், டெக்னாலஜியின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் மின்சார விலை குறையும் வாய்ப்பு/ ரிஸ்க் இருக்கிறது என்றால் எந்த முதலீட்டாளர் நீண்டகால முதலீடுகளை செய்வார்? இது மின்சாரத்துறையின் நீண்டகால நலனுக்கு எதிரானது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான துறையினை, வோட்டு அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. டிஸ்காம்களின் நஷ்டம் பல்லாயிரம் கோடிகள் குறைந்துவிட்டது என்று விளம்பரப்படுத்துவதும், பேட்டிகள் கொடுப்பதும் வோட்டுகளை கொண்டுவரலாம். ஆனால், கண்டிப்பாக நாட்டிற்கு முன்னேற்றத்தை கொண்டுவராது.
உதய் திட்டத்தை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். ஆனால், as usual the devil is in details. ஜென்கோஸ்களின் cash flow பிரச்சனை, டெக்னாலஜி பாய்ச்சல், மின்துறையில் NPA என்று பல விஷயங்களை காணும்போது, மத்திய அரசின் செயல்பாடு மின்துறையின் நீண்டகால குறிக்கோள்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
 

மின்சாரம் அனைவருக்கும் வேண்டும். அதில் சந்தேகமேயில்லை…. ஆனால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தில்தான் அது நடக்குமானால், அது சந்தை பொருளாதாரம் கிடையாது… நீண்ட கால வளர்ச்சிக்கும் அது உதவாது. இதை மனதில் கொண்டே மத்திய அரசு அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும்.


No comments:

Post a Comment