சமீபத்தில்
மத்திய அரசால் விவசாய பொருட்களுக்கான MSP அறிவிக்கப்பட்டது. இதன்மூலம்
விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50% விலை என்னும் தேர்தல் வாக்குறுதியை
பாஜக நிறைவேற்றிவிட்டது என்று பாஜகவினரும், இந்த MSP கணக்கு ஏமாற்று வேலை என்று
எதிர்கட்சியினரும் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை கொஞ்சம் அலசியிருக்கிறேன்.
ராகுல்காந்தி ஒரு கணக்கு சொல்கிறார். இந்தியாவில் 12 கோடி
விவசாயக்குடும்பங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 15000 கோடி ரூபாய் MSP-க்காக ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 1250 ரூபாய்
மட்டுமே. இதனால் பயன் ஏதும் இல்லை என்கிறார்.
இந்த கணக்கு
சரியா? தவறு. முதலில் 15000 கோடி என்பது அதிகரிக்கப்பட்ட MSPக்கான ஒதுக்கீடு. இதை
மொத்த ஒதுக்கீடு போல பேசக்கூடாது. இரண்டாவது, இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் கம்பேர்
செய்யும் பேச்சு. MSP என்பது பயிர்களின் உற்பத்தி அடிப்படையில் தருவது. விவசாய
குடும்பம் அடிப்படையில் அல்ல. ஆக, ராகுலின் வாதத்தில் சாரம் இல்லை.
இவ்வளவு MSP
அதிகரிப்பதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை (Fiscal Deficit) அதிகரிக்கும்
என்கிறார்கள். இதற்கு ஜேட்லி, பட்ஜெட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டதால்
பற்றாக்குறை அதிகரிக்காது என்று அசட்டுத்தனமான விளக்கம் அளித்திருக்கிறார். MSP
ஏற்றுவது ஒரு வருட கதையல்ல, ஒவ்வொரு வருடமும் மொய் வைக்க வேண்டும், அல்லவா?
இப்படி இரண்டு
பக்கமும் அசட்டுத்தனமான வாதங்களைத்தான் முன்வைக்கிறார்கள்.
இப்படி MSP
ஏற்றப்பட்டிருப்பதால் rural demand அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் என்பது
பாஜகவின் வாதம். UPA அரசு வருடாவருடம் அதிகரித்து வந்த MSP சதவிகிதத்தில்தான் இந்த
முறையும் MSP அதிகரித்திருக்கிறது. இதில், விசேஷமாக ஒன்றும் இல்லை. இது வெறும்
தேர்தல் விளம்பரம் என்றும் சொல்கிறார்கள். (படத்தை பார்க்கவும், தேர்தல் வருடங்களில்
அதிக ஒதுக்கீடு நடப்பதை கவனிக்கவும்)
இன்னொரு
பக்கம், அதிகரிக்கப்பட்டிருக்கும் MSP தவறான பார்முலா… இந்த MSP விவசாயிகளுக்கு
போதாது என்றும் கிளம்பியிருக்கிறார்கள். அதையும் பார்க்கலாம்.
இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து பொய்த்ததால் 2004ல் M.S. சுவாமிநாதன்
தலைமையிலே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 வரை இந்த கமிஷன் 5 அறிக்கைகளை
சமர்ப்பித்தது. அதில் ஐந்தாவது அறிக்கையில், Weighted Average Cost of
Production-ஐ விட 50% அதிகமாக MSP இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், Weighted Average Cost of Production என்றால் என்னவென்று சொல்லவே
இல்லை என்பது சிறப்பு. இங்கே முக்கியமாக இரண்டு பார்முலாக்கள் வருகின்றன. ஒன்று
A2+FL, இன்னொன்று C2. A2+FL என்பது உற்பத்திக்கு செலவழித்த தொகையும், உற்பத்திக்காக
வேலை செய்த விவசாய குடும்பத்தின் Notional கூலியும் சேர்ந்தது. C2 என்பது
Comprehensive Cost. விவசாய நிலத்திற்கான குத்தகை பணம், அல்லது சொந்த நிலமாக
இருந்தால் Notional வாடகை மற்றும் உபகரணங்களின் தேய்மானம் ஆகியவை வரும்.
மோடி அவர்கள் 2014 பிரச்சாரத்தில் Cost + 50% என்று வாக்குறுதி அளித்தார்.
உஷாராக, A2+FL, C2 குழப்பத்திற்குள் அவர் போகவில்லை. அவர் அறிவித்தபோதே பல
பயிர்களின் MSP A2+FL விட 50% அதிகமாகத்தான் இருந்தது. ஆக, அவர் சொன்னது C2தான்
என்பது விவசாயிகளின் வாதம். M.S. சுவாமிநாதனும் தான் அறிக்கையிலே குறிப்பிட்டது
C2தான் என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.
அப்போது, C2+50%தானே அரசு அறிவித்துள்ள MSPயாக இருக்கவேண்டும். அதுதான்
கிடையாது…! அரசு கூறியுள்ளது A2+FL+50%தான். காரணம் A2+FL மற்றும் C2 இடையேயான
தொகை வித்தியாசம் அதிகம். அரசுக்கு C2 கண்டிப்பாக கட்டுப்படியாகாது. (படம்
பார்க்கவும்)
சில நிபுணர்கள் அடிப்படையிலேயே கைவைக்கிறார்கள். அதாவது, பயிரை பொறுத்து
பணம் தரும் திட்டங்கள் கூடாது. மாறாக, விவசாயியை பொறுத்து பணன் தரும் திட்டங்கள்
வேண்டும் என்கிறார்கள் (Crop based vs Farmer based schemes). ஐரோப்பிய நாடுகள்
தற்போது farmer based formula-விற்கு மாறிவிட்டனவாம். இதன் மூலம் பணக்கார
விவசாயிகளுக்கு பதிலாக ஏழை விவசாயிகளுக்கு பலன் போய் சேரும்.
பொதுவாக Cost plus பார்முலாக்கள் திறனின்மையை (Ineffeciency) வளர்க்கும்
என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதில் விவசாயிகளுக்கு உண்மையான பலன்
இருக்கிறதா? அதை வரும் தேர்தல்கள்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு முறையும்
தேர்தலுக்கு முன் விவசாயிகளை தாஜா செய்வது பாஜக பார்முலா. இதுவும் அதில்
சேர்த்திதான்.
இந்த திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா என்பதை அறிய சில வருடங்கள்
தேவைப்படலாம். அதற்குமுன் இதை விமர்சிப்பதோ பாராட்டுவதோ சரியல்ல.
No comments:
Post a Comment