Friday 29 June 2018

Maternity Benefits – Boon or Curse?


போன மார்ச் மாதம், மத்திய அரசு பெண்களுக்கான மேடர்னிடி சலுகைகளை அதிகரித்தது. சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி விடுப்பு 12 வாரங்களிலிருந்து, 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது. கனடா, நார்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா ஆனது. (ஆச்சர்யமான விஷயம்… அமெரிக்காவின் 4 மாகாணங்கள் தவிர, வேறு எங்கும் சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி சலுகை இல்லை. உலகிலேயே மிகமிக சில நாடுகளில் மட்டும்தான் இப்படி மேடர்னிடி சலுகைகள் கிடையாது. அதில் ஒன்று அமெரிக்கா..!)


10 நபர்களுக்குக்கு மேலே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த மேடர்னிடி சலுகை விதிகள் பொருந்தும். 50 நபர்களுக்கு மேல் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்கவேண்டும்… வேலை செய்யும் தாய், வேலை நாளில் 4 முறை அந்த குழந்தையை பார்த்துவிட்டு வர அனுமதிக்கவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. 18 லட்சம் பெண்களுக்கு இந்த சட்டத்தினால் பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

கேட்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும் சட்டம் நடைமுறையில் வேலைக்காகுமா? நாடாளுமன்ற விவாதத்தின் போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றார். அதுதான் நடக்கிறது.

இது போன்ற மேடர்னிடி சலுகைகளின் செலவை யார் ஏற்பது? இரண்டு மாடல்கள் உள்ளன.. ஒன்று, பப்ளிக் ஃபண்டிங். அதாவது, அரசாங்கம் சோஷியல் செக்யூரிட்டி மூலமாகவோ அல்லது வேறு திட்டங்கள் மூலமாகவோ செலவை ஏற்பது. இன்னொன்று, பிரைவேட் ஃபண்டிங். அதாவது, நிறுவனமே இன்ஷூரன்ஸ் மூலமாகவோ, வேறு விதமாகவோ செலவை ஏற்பது. சில நாடுகளில் இரண்டும் கலந்த மாடலும் உண்டு.

இந்தியா பிரைவேட் ஃபண்டிங் மாடலுக்கு போனது… அதாவது, மேடர்னிடி சலுகைகளின் மொத்த செலவையும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த செலவை பெரிய நிறுவனங்களால் ஏற்று கொள்ள முடியும்… லாபம் அடிவாங்கும், ஆனாலும் பாதகமில்லை…! ஆனால், மீடியம், சிறு நிறுவனங்களால் இந்த செலவை சமாளிக்க முடியாது.

Teamlease  என்னும் HR கம்பெனி சமீபத்தில் 10 செக்டார்களில், ஒரு சர்வே எடுத்தது. மேடர்னிடி விடுப்பு செலவை சமாளிக்க முடியாததால், இந்த வருடம் (மார்ச் ‘19) 11-லிருந்து 18 லட்சம் பெண்கள் வரை வேலையிழப்பார்கள் என்று கணித்துள்ளது. எல்லா செக்டார்களையும் சேர்த்து பார்த்தால் ஒரு கோடியிலிருந்து 1.2 கோடி பெண்கள் வரை வேலையிழக்கலாம்.

ஏற்கனவே இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் வேலைக்கு போகும் பெண்களின் விகிதம் குறைந்துவிட்டது (என்னால் நம்பவே முடியவில்லை). 2006-ல் வேலைக்கு போன 100 பேரில் 36 பேர் பெண்கள். 2016-ல் அது நூற்றுக்கு 24-ஆக குறைந்துவிட்டது. இந்த சட்டத்தினால் பெண்கள் வேலைக்கு போவது இன்னும் குறையும் அபாயம் உள்ளது.

நிறுவனங்கள் இப்படி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தால், அரசு ஒரு பங்கு செலவை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, ஏதேனும் வரிச்சலுகை தரலாம். ஆனால், அப்படி மேடர்னிடி சலுகை செலவில் ஒரு பங்கை அரசு ஏற்கவேண்டுமெனில் பட்ஜெட் இடம் கொடுக்குமா? இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில், சில வருடங்களுக்கு இந்த சட்டத்தை நிறுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது.

இல்லையென்றால், இந்த சலுகைகள் நன்மையை விட தீமையே செய்யப்போகின்றன.

No comments:

Post a Comment