Wednesday 30 May 2018

The Rise of Bangladesh


வாரக்கடைசியில் முகநூலில் வெட்டியாக திரிந்த போது ஒரு ஆச்சர்யமான தகவல் கிடைத்தது. அதாவது, 2020-ல் பங்களாதேஷ் இந்தியாவை விட அதிகமான Per Capita Income கொண்டிருக்கும் என்பதுதான் அந்த ஆச்சர்யமான தகவல்.
மேலும் கொஞ்சம் தகவல்களை தேடியபோது புரிந்த விஷயம் - இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில வருடங்களாக தடுமாறும் போதும், பங்களாதேஷ் பொருளாதாரம் தெளிவாக முன்னேறி கொண்டிருக்கிறது. மக்கள்தொகையும் கட்டுக்குள் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களாலும்தான், பங்களாதேஷின் Per Capita Income இந்தியாவிற்கே சவால் விடுகிறது.

இந்தியாவின் தயவினால் சுதந்திரம் பெற்ற தேசம்…. சுதந்திரம் அடைந்த போது தரைமட்டமாக இருந்த தேசம்.. சுதந்திரம் அடைந்த மூன்று வருடங்களிலேயே பஞ்சத்தினால் பரிதவித்து, அமெரிக்காவின் கட்டளைகளுக்கு உட்பட்டு தானியத்தை தானமாக பெற்ற தேசம்…. ஜனநாயகம் என்பது மலராமல், பாகிஸ்தானை போல ராணுவ ஆட்சியில் சீரழிய போகிறது என்று நினைக்கப்பட்ட தேசம்….!
இப்போதோ தெற்கு ஆசியாவிலேயே வேகமாக வளரும் இரண்டாவது பொருளாதாரம்… இதே வேகத்தில் போனால் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாகிவிடும். ஆடை ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடம் (முதலிடம் சீனா… பங்களாதேஷ் சீனாவை முந்திவிடும் என்று சொல்லப்படுகிறது). உண்மையிலேயே பங்களாதேஷ் முன்னேறுகிறதா? பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைவரையும் சென்றடைகிறதா?
இந்த விஷயத்தை ஆராய்வதற்கு Economic Indicators-ஐ பார்ப்பதை விட Social Indicators-ஐ பார்ப்பதுதான் சிறந்தது. உலகவங்கியின் தரவுகள் 2016 வரைதான் கிடைத்தன. இருந்தாலும் பரவாயில்லை… இந்தியாவோடு ஒப்பிட்டு சில விஷயங்களை பார்ப்போம். ரமணா ஸ்டைல் புள்ளிவிவரம்தான், கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்.
Life Expectancy – இந்தியா 1990-ல் 57.9, 2016-ல் 68.6. பங்களாதேஷ் 1990-ல் 58.4, 2016-ல் 72.5. இந்தியாவை விட அதிகம்.
Birth Rate – அதாவது மக்கள்தொகையில் ஆயிரம் பேருக்கு புதிதாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 31.5, 2016-ல் 19. பங்களாதேஷ் 1990-ல் 35.4, 2016-ல் 19. இந்தியாவை விட அதிகம். இந்தியாவை விட அதிகமாக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி தற்போது குறைந்துவிட்டது. ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது அபாரமான விஷயம்.
Mortality Rate under age 5 – ஆயிரம் பிறப்புகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்னும் விகிதம். இந்தியா 1990-ல் 125.9, 2016-ல் 43. பங்களாதேஷ் 1990-ல் 143.8, 2016-ல் 34.2. இந்தியாவை விட மோசமாக இருந்து, இப்போது இந்தியாவை விட சிறப்பாக உள்ளது.
Literacy Rate – UNESCO 2015 எஸ்டிமேட் படி இந்தியாவும், பங்களாதேஷும் ஒரே லெவல்தான்.
முக்கியமான விஷயம் – Gross Savings to GDP % - இந்தியா 1990-ல் 27%. 2007 சுபிட்ச காலத்தில் 41% ஆக உயர்ந்து, 2016-ல் 30%-ஆக குறைந்துவிட்டது. பங்களாதேஷ் 1990-ல் 16%. 2016-ல் 37%.
1991-ல் பங்களாதேஷில் 40%-ற்கும் மேற்பட்டவர்கள் மோசமான வறுமையில் வாடினர். இப்போது இந்த எண்ணிக்கை 14%-மாக குறைக்கப்பட்டுவிட்டது.
ஆக, பங்களாதேஷ் முன்னேறியிருக்கிறது என்று தைரியமாக கூறலாம்.
பங்களாதேஷின் வளர்ச்சிக்கு NGOக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. முக்கியமான இரண்டு NGOக்கள் – ஒன்று, கிராமீன் பேங்க். 1970களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வங்கி, கிராமப்புற மக்களுக்கு Unsecured Loans வழங்குகிறது. இதன் வெற்றியை பாராட்டி நோபல் பரிசே கொடுத்தனர். மற்ற நாடுகளிலும் இந்த மாடல் கடைப்பிடிக்கப்படுகிறது Grameen America கூட உண்டு..! இந்த மாடலுடைய நீட்சியாக கிராமீன் போன், கிராமீன் டெலிகாமெல்லாம் உண்டு.
பங்களாதேஷில் வங்கி மூலமான கணக்கு பரிமாற்றங்கள் அதிகரித்துவருகின்றன. தெற்காசிய சராசரியை விட அதிக சதவிகித மக்கள் வங்கி கணக்கை உபயோகிப்பதாக சொல்லப்படுகிறது. இயல்பான வளர்ச்சி…! இந்த வளர்ச்சிக்கு பின்னால் கிராமீன் இருக்கிறது.
இன்னொரு முக்கியமான NGO – BRAC… இதுவும் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு NGO. தற்போது உலகிலேயே பெரிய NGO. ஆரம்பத்தில் கல்வியில் மட்டும் கவனம் செலுத்திய BRAC பின்னர் சுகாதாரம் முதலிய பல விஷயங்களிலும் ஈடுபட ஆரம்பித்தது.
NGOக்களின் உதவியினால் கிட்டதட்ட எல்லா குழந்தைகளும் (பெண் குழந்தைகள் உட்பட) தொடக்க கல்வியை பெற்று வருகின்றன. மேல் வகுப்பு போக போக பெண்குழந்தைகள் கற்பது குறைந்துவிடுகிறது என்றாலும், ஒரு பின்தங்கிய இஸ்லாமிய நாட்டிற்கு இது ஆரோக்கியமான வளர்ச்சிப்படி என்பதை மறுக்க முடியாது.
But, all is not well for Bangladesh…! பங்களாதேஷ் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவென்று பார்ப்போம்…!
ஐக்கிய நாடுகள் சபை முதன்முதலாக பங்களாதேஷை Least Developed Country மதிப்பீட்டிலிருந்து மாற்றியிருக்கிறது. 3 வருடங்களுக்கு ஒரு முறை பங்களாதேஷை மதிப்பிடுவார்கள். 6 வருட காலம் வளர்ச்சி தொடர்ந்தால் Developing Country Status தந்துவிடுவார்கள். பங்களாதேஷிற்கு இது ஒரு பெருமையான விஷயம்தான்.
ஆனால், இப்படி ஸ்டேட்டஸ் மாற்றுவது வரமா, சாபமா? ஸ்டேட்டஸ் மாறினால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதியில் சில சலுகைகளை பங்களாதேஷ் இழந்துவிடும். புதிதாக கடன்கள் பெறுவதிலும் சில சலுகைகளும் போய்விடும்.
பங்களாதேஷிற்கு இதை தவிர வேறு பல சவால்களும் உள்ளன.
தொழிலாளர் உரிமைகள், தொழிலாளர் பாதுகாப்பு இவற்றை மேம்படுத்துதல் அவசியம். வருமானத்தில் 14% துணி ஏற்றுமதியில் இருந்துதான் வருகிறது. ஒரே செக்டாரை இவ்வளவு நம்பியிருப்பது பொருளாதாரத்திற்கு ரிஸ்க்…. நகரமயமாக்கல், கட்டமைப்பு போன்ற புதிய பிரச்சனைகள் முளைத்துள்ளன…. வரும் வருடங்களில் இன்னும் அதிகமாக போகின்றன. அரசியல் இப்போது போல வரும் வருடங்களிலும் அமைதியாக, உறுதியாக இருக்குமா?
போதை மருந்து பழக்கம் பங்களாதேஷில் பரவி வருகிறது. இதை தவிர பெரிய ஆபத்து global warming ரூபத்தில் வருகிறது. பங்களாதேஷ் டெல்டா பகுதிகள் மிகுந்த தேசம்…. கடல் உயரம் அதிகரிக்கும் போது பங்களாதேஷிற்கு பலத்த அடி விழும்.
பங்களாதேஷின் வளர்ச்சியோ, தடுமாற்றமோ மற்ற வளரும் நாடுகளுக்கு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…! கற்று கொள்ள தயாரானால், இப்போதே பங்களாதேஷிடமிருந்து கற்க இந்தியாவிற்கு பாடங்களிருக்கிறது…!

No comments:

Post a Comment