Monday, 27 August 2018

GST – Twitter Support


ஒரு வருடத்திற்கு முன்பு GST வரி அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வர்த்தகர்களுக்கு அதுகுறித்து தலையும் புரியவில்லை… காலும் புரியவில்லை. வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கை எடுத்தது… அதுதான் டிவிட்டர் சப்போர்ட்.
GST@GOI  என்னும் டிவிட்டர் அக்கௌண்ட் மூலம் வரித்துறை அதிகாரிகள், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில், ‘இது புதிய நிர்வாக முறை’ என்று புகழ்ந்திருந்தார்.
இந்த டிவிட்டர் சப்போர்ட் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், என்னால் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வாதம் இதுதான்…. Twitter support is not legally binding...! அதிகாரிகளின் வழிகாட்டுதல் தவறாக இருக்கும்பட்சத்தில் வர்த்தகர்கள் மேல்தான் பெனால்டி விதிக்கப்படும். டிவிட்டரில் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படிதான் நடந்தேன் என்று கோர்ட்டில் சொல்லமுடியாது.
ஒரு வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், அங்கே சட்டம் மட்டும்தான் நிற்கும். இந்த டிவிட்டர் ஆலோசனைகள் நிற்காது… அரசாங்கம் இதற்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றேன். நண்பர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்துக்கு என் மோடி விரோதமே காரணம் என்று குறை கூறினார்.
ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. சட்டத்தோடு ஒத்துப்போகாத சில வழிகாட்டுதல்கள் இந்த டிவிட்டர் அக்கௌண்டில் வழங்கப்பட்டன. அதன் காரணமாக வர்த்தகர்களுக்கு பெனால்டியும் விதிக்கப்பட்டது. அரசாங்கம், இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லையென்று கைகழுவிவிட்டது.
தற்போது GST வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அரசு இந்த டிவிட்டர் சப்போர்ட்டை நிறுத்திவிட்டது.
இதே போன்று ரயில்வேயிலும், பாஸ்போர்ட் பிரச்சனைகளிலும் டிவிட்டர் மூலம் புகார்கள் ஏற்கப்பட்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிவிட்டர் மூலம் சப்போர்ட் என்பதில் இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று, அதிகார மையங்களை வெகு சுலபமாக அணுகமுடிகிறது. இரண்டு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் கணக்காக உடனடி தீர்வுகள் எட்டப்படுகின்றன.
அவசர உதவிகளுக்கு டிவிட்டர் சப்போர்ட் ஒரு நல்ல வழிமுறை. சமீபத்தில் 25 சிறுமிகள் கடத்தலை தடுக்க டிவிட்டர் சப்போர்ட் உதவியது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்கும் responsibility-யோ, நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரமோ இருப்பதில்லை. அதற்கு இந்த GST வழிகாட்டுதல்கள் ஒரு நல்ல உதாரணம். மேற்சொன்ன குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து விஷமிகளால் போலியாக தரப்பட்டால், போலீஸும், அரசு நிர்வாகமும் புகார் உண்மையா, பொய்யா என்ற குழம்பிவிடும்.
ஏதோ ஒரு வகையில் டிவிட்டர் சப்போர்ட் சட்டரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும். அப்போதுதான் இந்த நடைமுறையின் பயன்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

No comments:

Post a Comment