இன்றைய 377 தீர்ப்பு பல அச்சங்களையும்,
கவலைகளையும் விதைத்துள்ளதை என் நட்பு வட்டத்திலேயே பார்க்கிறேன்.
ஒரு சின்ன தகவல்… 2016 தரவுகள்
படி இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 கற்பழிப்புகள் நடக்கின்றன. இதில் 40% மைனர்கள் மேலான
தாக்குதல். கிட்டத்தட்ட 95% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின்
மிக நெருங்கிய சொந்தங்களே..! (அப்பா, தாத்தா, சகோதரன், மகன் போன்றவர்கள்)
இது போலீஸில் ரிப்போர்ட் செய்யப்பட்ட
குற்றங்கள் மட்டுமே…. வெளியில் சொன்னால் மானம் போகும் என்று பயந்து, தொண்டைக்குள் கசப்பை
விழுங்கி, தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு மறைத்தவை தனிக்கணக்கு.
இதற்கு என்ன செய்யலாம்…? நாளை
முதல் ஆண்-பெண் திருமணத்தை நிறுத்தலாமா? அல்லது ஆண்களையும் பெண்களையும் தனித்தனி சமூகமாக்க
போகிறோமா? இந்த ரேஞ்சில் யோசித்தால் பிரியாணி கடைகளை கூட மூடவேண்டி வரும்.
377 சட்ட மாற்றத்தினால் தவறுகள்
அதிகரிக்கும் என்னும் சிந்தனை, LGBT சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான பிம்பத்தினால்
எழுவதுதான்…. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்குகள் அதிகமான ஆண் இனம் செய்யாத குற்றங்கள்
LGBT சமூகத்தால் பெருகும் என்று நினைப்பது சுத்த அபத்தம்.
சமூகத்தில் சிலருக்கு பால் விருப்பங்கள்
வேறுபடுகின்றன. அது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். மதத்தின் காரணமாகவோ,
பெருவாரியான விருப்பத்திற்கு மாற்றாக இருப்பதன் காரணமாகவோ அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது.
இப்போது அவர்களுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தேவையற்ற சித்ரவதைகளில்
இருந்து ஒரு விடுதலை கிடைத்துள்ளது.
US, UK, Australia, ஐரோப்பிய,
தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஒரு பால் மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில்
இப்போது இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒருபால் தம்பதியினர்
குழந்தை பெற்று கொள்கின்றனர். சிறப்பாகவே குழந்தைகளை வளர்க்கின்னறனர். நம்மை போல்தான்
அவர்களும்.
இந்த 377 தீர்ப்பை வரவேற்கும்
அதே நேரத்தில், இந்த சட்டதிருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்தாத வகையிலும், நெறிப்படுத்தவேண்டிய
முறையிலும் சட்டரீதியான வேறு மாற்றங்களும் தேவைப்படுகிறது. சட்டநிபுணர்கள் கூடிய விரைவில்
மற்ற சட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.
முன்னேற்றம் என்பது அனைவரையும்
அரவணைத்து செல்வதுதான். அந்த வகையில் ஒரு அரவணைப்பு இன்று நடந்துள்ளது. அதை வாழ்த்துவோம்….!
No comments:
Post a Comment