இன்று காலை என்னுடைய பதிவில்
விக்கிபீடியாவில் இருந்து டவுன்லோட் செய்த ஒரு இந்தியா மேப் போட்டிருந்தேன்.
நண்பர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த மேப் உபயோகிப்பதில்
எனக்கும் தயக்கம் இருந்ததால் வேறு மேப் படத்தை போட்டுவிட்டேன். ஆனாலும், உண்மையில்
காஷ்மீர் பகுதியை காட்டாத இந்திய மேப் உபயோகிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகங்கள்
எழுந்தன. தெளிவான விடையை தேடினேன்.
2006-ல் அப்துல்கலாம் அவர்கள்
Google Map போன்ற Geospatial சேவைகளால் நாட்டிற்கு ஆபத்து வரலாம் என்றும், அவற்றை
முறைப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு சட்டவரைவு
எழுதப்பட்டது. இதில் இந்தியா மேப்பை எப்படி போடவேண்டும் என்று சொல்லியிருந்தது.
பிற்பாடு அந்த வரைவு ஒரு மூலையில் தூங்கப்போனது.
2016-ல் பஞ்சாபில் உள்ள
பதான்கோட் விமானதளம் தாக்கப்பட்ட பிறகு மீண்டும் அரசாங்கம் விழித்து கொண்டது. ஒரு
வேளை கூகுள் மேப் மற்றும் கூகுள் எர்த் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்குதல்
நடத்தியிருப்பார்களோ என்னும் சந்தேகம் எழுந்தது.
ரொம்ப ஸ்டிரிக்டான சட்ட வரைவு
ஒன்று எழுதப்பட்டது. Geospatial Information Regulation Bill, 2016 என்று பெயர்.
இதில் இந்திய மேப்பை தவறாக காண்பித்தால் கோடிக்கணக்கில் அபராதம், ஜெயில் தண்டனை
என்றெல்லாம் கடுமையான சட்டவிதிகள் இருந்தன.
அடுத்த நாளே Geospatial சேவை
சார்ந்த தொழில்துறையினர் அரசாங்கத்திடம், சட்டவரைவு ப்ராக்டிகலாக இல்லையென்று
முறையிட்டனர். அதை தொடர்ந்து சட்டவரைவை நீர்த்து விட அரசு ஒப்புக்கொண்டது.
பின்னர், இந்த வரைவும் தூங்கப்போனது.
காஷ்மீர் மேப்பை தவறாக
காட்டியதற்காக கூகுளிடம் சண்டை, அல் ஜஸீரா டிவியை ஐந்தாறு நாட்கள் முடக்குவது
என்று ஒரு பக்கம் இந்திய அரசு கண்டிப்பாக இருக்க, இன்னொரு பக்கம் NCERT
பாடப்புத்தகத்திலேயே அக்சாய் சின் சீனாவின் பகுதியாக காண்பித்து மேப் வந்தது
காமெடி.
காஷ்மீரின் ஒரு பகுதி
இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை... அப்படியிருக்கும் பட்சத்தில் மேப் அதை
எப்படி காட்டவேண்டும்...? இது குறித்து சர்வதேச நடைமுறை என்ன?
இது குறித்த எந்த சர்வதேச
வரைமுறையும் இருப்பதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு China Political Map என்று
கூகுளில் தேடினால், சில மேப்புகள் தைவானை சேர்த்து காட்டும். சில தைவானை
சேர்க்காமல் காட்டும். இது போல பல உதாரணங்கள் சொல்லலாம்.
இந்திய சட்டப்படி எது சரி? The
Criminal Law Amendment Act 1961 என்று ஒன்று இருக்கிறது. இந்திய சர்வே துறை
வெளியிட்ட மேப்பிற்கு (படத்தில் உள்ளது) ஒத்துப்போகாமல் வேறு எந்த மேப்
வெளியிட்டாலும், அந்த சட்டத்தின் கீழ், 6 மாதம் வரை சிறைத்தண்டனையும், அபராதமும்
விதிக்கலாம். ஆனால், யார் வேண்டுமானாலும் இது குறித்து வழக்கு தொடர முடியாது.
அரசாங்கம் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே கோர்ட் இதுகுறித்து விசாரிக்கும்.
சுருக்கமாக சொன்னால், நம்மை
போன்றவர்கள் தவறான மேப் போட்டாலும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால், சட்டத்தை
மதித்து நடக்கவேண்டும்... காஷ்மீரை உள்ளடக்கிய மேப்பையே நாம் போடவேண்டும்.
No comments:
Post a Comment