Monday, 5 February 2018

குஜராத் PDS - எத்தனுக்கு எத்தர்கள்


குஜராத் ரேஷன் கடையில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் விவரங்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் கொடுத்த மென்பொருளுக்கு மாற்று மென்பொருள் போட்டு டேட்டாவை திருடியிருக்கிறார்கள்.
ஆதார் வருவதற்கு முன்பிருந்தே குஜராத்தில் பயோமெட்ரிக் அடிப்படையில்தான் ரேஷன் பொருட்கள் வினியோகம் நடந்து வந்தது. ரேஷன் கடையிலே போய் கைநாட்டு வைத்தால் ரசீதும் பொருளும் பெற்று கொள்ளலாம்.
இந்த நடைமுறை சரியாக இல்லை என்று ரேஷன் கடை டீலர்கள் போராடினார்கள். அப்போது குஜராத்தில் ரேஷன் கடை டீலர்கள் தலைவர் பிரஹ்லாத் மோடி.... ஆம், நரேந்திர மோடியின் சகோதரர்தான். டெக்னாலஜி வந்த பிறகு பொருட்களை திருட முடியாததால், ரேஷன் கடைக்காரர்கள் போராடுவதாக அரசாங்கம் சொன்னது. போராட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை... எப்படியோ, திட்டம் தொடர்ந்தது.
போலி ரேஷன்கார்டுகள் ஒழிக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும் இன்னொரு பக்கம் ரேஷன் பொருட்கள் திருட்டு குறைந்ததாக தெரியவில்லை... இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன – ஒன்று வாடிக்கையாளர்களின் கைரேகைகள் சரியாக பொருந்தவில்லை. அதனால், மானுவல் ரிஜிஸ்டர் முறையும் கொண்டு வரப்பட்டது. இது ரேஷன் பொருட்களை திருடுவதற்கு நல்ல வசதி செய்து கொடுத்தது. இரண்டாவது, ரேஷன் கடைகளில் ரசீது கொடுப்பதில்லை. அரசாங்கம் பிரிண்டர் வாங்க காசு கொடுக்கவில்லையோ என்னவோ, டீலர்கள் கைக்காசு போட்டு பிரிண்டர் வாங்கினார்கள். ரசீது குட்டியாக வராது.... A4 தாளில்தான் வரும். ரசீது வேண்டுமென்றால் கூடுதலாக 5 ரூபாய் தரவேண்டும். அதனால், மக்கள் ரசீதும் வாங்கவில்லை. இதுவும் திருட்டு நடப்பதற்கு ஏதுவானது.
போன வருடம் ஆதாரும் வந்தது.... ரேஷன் பொருள் வாங்கும் போது ஆதார் நம்பரும் தந்து, கைரேகையும் வைக்க வேண்டும் என்று நடைமுறை மாற்றப்பட்டது. இப்போது மாற்று மென்பொருள் மூலமாக பயோமெட்ரிக் தரவுகள் திருடப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

இதை பற்றி நெட்டில் தேடியபோது, ஜனவரி மாதமே குஜராத்தி பத்திரிக்கைகள் இதை பற்றி செய்தி வெளியிட்டுள்ளன என்பது தெரியவந்தது. 1.25 கோடி மக்களின் பயோமெட்ரிக் டேட்டா திருடு போயிருக்கிறது. 25000 ரூபாய்க்கு இதற்கான மென்பொருள் கிடைக்கிறது... பெருவாரியான கடைகள் இந்த திருட்டு மென்பொருளை வாங்கியுள்ளன.
என்ன டெக்னாலஜி கொண்டுவந்தாலும் மாற்று டெக்னாலஜி வரத்தான் செய்யும்.... எத்தனை இடங்களில் ஆதார் expose ஆகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் vulnerability அதிகமாகும். இந்த சிம்பிளான, straight forward விஷயம் ஏன் புரியவே மாட்டேன் என்கிறது?
மோசடிகளை தடுக்கவேண்டும், கருப்பு பணம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லி, ஆதார் கொண்டு சொத்து பதிவு நடைமுறைகள் வந்து கொண்டிருகின்றன. தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்கள் இந்த விஷயத்தில் முண்ணனியில் இருப்பதாக நினைக்கிறேன். இப்படி கைரேகை தகவல்கள் திருடுபோனால், போலி பத்திர மோசடி போல, போலி பயோமெட்ரிக் மோசடிகளும் வரும்.
இந்த அரசாங்கம் execution-ல் ரொம்பவே சொதப்புகிறது. அது Demo ஆகட்டும், GST ஆகட்டும், E-Way bill ஆகட்டும் எல்லாமே சொதப்பல்... அவசர அவசரமாக ஆதாரை கொண்டுவருவதும் சொதப்பலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. தேவை எல்லாம் கொஞ்சம் நிதானம்.... காரணம் பயோமெட்ரிக் விஷயத்தில் நடக்கும் எந்த ஒரு தவறும் almost irreversible....

No comments:

Post a Comment