Friday 29 June 2018

Maternity Benefits – Boon or Curse?


போன மார்ச் மாதம், மத்திய அரசு பெண்களுக்கான மேடர்னிடி சலுகைகளை அதிகரித்தது. சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி விடுப்பு 12 வாரங்களிலிருந்து, 26 வாரங்களாக உயர்த்தப்பட்டது. கனடா, நார்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் நாடாக இந்தியா ஆனது. (ஆச்சர்யமான விஷயம்… அமெரிக்காவின் 4 மாகாணங்கள் தவிர, வேறு எங்கும் சம்பளத்துடன் கூடிய மேடர்னிடி சலுகை இல்லை. உலகிலேயே மிகமிக சில நாடுகளில் மட்டும்தான் இப்படி மேடர்னிடி சலுகைகள் கிடையாது. அதில் ஒன்று அமெரிக்கா..!)


10 நபர்களுக்குக்கு மேலே வேலை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த மேடர்னிடி சலுகை விதிகள் பொருந்தும். 50 நபர்களுக்கு மேல் வேலை செய்தால் கண்டிப்பாக ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்கவேண்டும்… வேலை செய்யும் தாய், வேலை நாளில் 4 முறை அந்த குழந்தையை பார்த்துவிட்டு வர அனுமதிக்கவேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. 18 லட்சம் பெண்களுக்கு இந்த சட்டத்தினால் பயன் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

கேட்பதற்கு ரொம்ப நன்றாக இருக்கும் சட்டம் நடைமுறையில் வேலைக்காகுமா? நாடாளுமன்ற விவாதத்தின் போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர், இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றார். அதுதான் நடக்கிறது.

இது போன்ற மேடர்னிடி சலுகைகளின் செலவை யார் ஏற்பது? இரண்டு மாடல்கள் உள்ளன.. ஒன்று, பப்ளிக் ஃபண்டிங். அதாவது, அரசாங்கம் சோஷியல் செக்யூரிட்டி மூலமாகவோ அல்லது வேறு திட்டங்கள் மூலமாகவோ செலவை ஏற்பது. இன்னொன்று, பிரைவேட் ஃபண்டிங். அதாவது, நிறுவனமே இன்ஷூரன்ஸ் மூலமாகவோ, வேறு விதமாகவோ செலவை ஏற்பது. சில நாடுகளில் இரண்டும் கலந்த மாடலும் உண்டு.

இந்தியா பிரைவேட் ஃபண்டிங் மாடலுக்கு போனது… அதாவது, மேடர்னிடி சலுகைகளின் மொத்த செலவையும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்த செலவை பெரிய நிறுவனங்களால் ஏற்று கொள்ள முடியும்… லாபம் அடிவாங்கும், ஆனாலும் பாதகமில்லை…! ஆனால், மீடியம், சிறு நிறுவனங்களால் இந்த செலவை சமாளிக்க முடியாது.

Teamlease  என்னும் HR கம்பெனி சமீபத்தில் 10 செக்டார்களில், ஒரு சர்வே எடுத்தது. மேடர்னிடி விடுப்பு செலவை சமாளிக்க முடியாததால், இந்த வருடம் (மார்ச் ‘19) 11-லிருந்து 18 லட்சம் பெண்கள் வரை வேலையிழப்பார்கள் என்று கணித்துள்ளது. எல்லா செக்டார்களையும் சேர்த்து பார்த்தால் ஒரு கோடியிலிருந்து 1.2 கோடி பெண்கள் வரை வேலையிழக்கலாம்.

ஏற்கனவே இந்தியாவில், கடந்த பத்தாண்டுகளில் வேலைக்கு போகும் பெண்களின் விகிதம் குறைந்துவிட்டது (என்னால் நம்பவே முடியவில்லை). 2006-ல் வேலைக்கு போன 100 பேரில் 36 பேர் பெண்கள். 2016-ல் அது நூற்றுக்கு 24-ஆக குறைந்துவிட்டது. இந்த சட்டத்தினால் பெண்கள் வேலைக்கு போவது இன்னும் குறையும் அபாயம் உள்ளது.

நிறுவனங்கள் இப்படி சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தால், அரசு ஒரு பங்கு செலவை ஏற்றுக்கொள்ளலாம். அல்லது, ஏதேனும் வரிச்சலுகை தரலாம். ஆனால், அப்படி மேடர்னிடி சலுகை செலவில் ஒரு பங்கை அரசு ஏற்கவேண்டுமெனில் பட்ஜெட் இடம் கொடுக்குமா? இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில், சில வருடங்களுக்கு இந்த சட்டத்தை நிறுத்துவது நல்லது என்றே தோன்றுகிறது.

இல்லையென்றால், இந்த சலுகைகள் நன்மையை விட தீமையே செய்யப்போகின்றன.

ட்ரம்ப் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு


இந்த விஷயத்தில் எனக்கு அமெரிக்கர்களை ரொம்பவும் பிடித்திருக்கிறது... அவர்கள் நீதித்துறை மேல் மதிப்பு கூடுகிறது.

அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் பிடிக்கவில்லையென்றால் தங்கள் எதிர்ப்பை வலுவாகவே பதிவு செய்கிறார்கள். முன்பு ஜூலி பிரிஸ்க்மேன் என்னும் பெண்மணி ட்ரம்புக்கே நடுவிரலை உயர்த்தி காட்டியிருந்தார். ட்ரம்புக்கே அந்த கதியென்றால், மற்றவர்கள் நிலையை கேட்கவேண்டுமா?

அமெரிக்க எல்லையில் அகதிகளையும், அவர்கள் குழந்தைகளையும் பிரிப்பதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் ட்ரம்ப் மேல் செம கடுப்பில் இருக்கின்றனர்.

போனவாரம் வெள்ளை மாளிகை பிரஸ் செக்ரடரி சாரா சேண்டர்ஸ் ஒரு சின்ன ரெஸ்டாரண்டில் குடும்பத்தோடு சாப்பிட போயிருக்கிறார். கடை ஓனர் அப்போது கடையில் இல்லை. சாரா குடும்பம் பாதி சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் கடைக்கு வந்த ஓனர் ஸ்டீஃபானி, கடை ஊழியர்களுடன் கலந்தாலோசித்து விட்டு, சாராவை ஓட்டலை விட்டு உடனே வெளியேற கூறி, பாதி சாப்பாட்டில் துரத்தி விட்டார்.

இந்த விஷயத்தில் சாராவை மட்டும் கட்டம் கட்டவில்லை... கிர்ஸ்ட்ஜென் நீல்சன், ஸ்டீஃபன் மில்லர் என்று லிஸ்ட் நீளுகிறது. பொதுவிடங்களில் இந்த அதிகாரிகளை கண்டால், மக்கள் கூச்சல் போட்டு கேலி (Boo) செய்கின்றனர். கிர்ஸ்ட்ஜென் நீல்சனை, ஜார்ஜ்டவுன் பல்கலைகழக முன்னாள் மாணவர் சங்கத்திலிருந்து வெளியேற சொல்லியிருக்கிறார்கள். நாளாக நாளாக எதிர்ப்பு அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனால், ட்ரம்புக்கும் மவுசு இருக்கத்தான் செய்கிறது. அவரது ஆதரவாளர்கள் சாரா சேண்டர்ஸை வெளியில் அனுப்பிய ரெஸ்டாரண்ட் முன்னால் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். பிரச்சனை வேண்டாமென்று ரெஸ்டாரண்டை வரும் 5ம் தேதி வரை மூடியிருக்கிறார்கள்.

ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினால் பரவாயில்லை... அமெரிக்க பிரஸிடென்டே தரை லோக்கல் லெவலுக்கு இறங்கி வந்து அந்த ரெஸ்டாரண்டை திட்டியிருக்கிறார். இந்தாளெல்லாம் ஒரு அதிபரு...! (ட்வீட் இமேஜ் பார்க்கவும்)

பலன் இருக்கிறதோ இல்லையோ, வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் ஸ்டீஃபானி..!

கொசுறு தகவல் – ட்ரம்ப் பதவிக்கு வந்த இந்த 466 நாட்கள்ள 3000 பொய்கள் சொல்லிட்டாராம்...!

Thursday 28 June 2018

உங்க இன்ஷூரன்ஸுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கா?

GSPC, HPCL கம்பெனிகளை ONGC தலையில் கட்டி அதை மொட்டை அடித்ததை குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தேன். அடுத்த மொட்டை LIC-க்கு. பொதுத்துறை வங்கிகளிலேயே ரொம்ப மோசமான வங்கியான IDBI வங்கியை LIC தலையில் கட்ட பார்க்கிறார்கள்.

கிட்டத்தட்ட 28% Gross NPA... அதாவது, 55000 கோடிகளுக்கு மேல் வாராக்கடன். மார்ச் காலாண்டில் மட்டும் 5600 கோடி நஷ்டம். இதுதான் பெர்பாமன்ஸ் நிலவரம்.

அரசு 85% மேல் பங்குகளை வைத்திருக்கிறது. இப்போது 43% சதவிகித பங்குகளை 10500 கோடி ரூபாய்க்கு விற்பதற்கு திட்டம் ரெடி.

IRDA (Insurance Regulatory and Development Authority) விதிகள் படி ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனி, எந்தவொரு நிறுவனத்திலும் 15% மேல் முதலீடு செய்யக்கூடாது. இப்போது IDBI பங்குகளை LIC வாங்கினால், IDBI பங்குகளில் 51% LIC வசம் வந்துவிடும். ஆகவே, இந்த முதலீட்டை IRDA அப்ரூவ் செய்யவேண்டும். நாளைக்கு மீட்டிங்... அதெல்லாம் அப்ரூவ் செய்துவிடுவார்கள் என்று நம்பலாம்.

LIC போன்ற பெரிய நிறுவனத்திற்கு 10500 கோடியெல்லாம் விஷயமல்ல... ஆனால், பிரச்சனையே வங்கியை வாங்கியபிறகு, அதை நஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க கிட்டதட்ட 1 லட்சம் கோடியை முதலீடு செய்யவேண்டும். ஆமாம், லட்சம் கோடிதான். இந்த பணம் பொதுமக்கள் தங்கள் காப்பீடுக்காக LIC-யிடம் கட்டிய பணம்... ஒரு காலத்தில் லாபத்துடன் திரும்பி வரும் என்னும் நம்பிக்கையில் மக்கள் முதலீடு செய்த பணம்...!

இந்த பணத்தை எடுத்து, ஓடாத IDBI குதிரையில் கட்டவேண்டும்.... அப்புறம் வங்கி நிர்வாகத்தில் அனுபவமே இல்லாத LIC, அந்த ஓடாத குதிரையை வெற்றிகரமாக ஓட்டவேண்டும். அந்த குதிரை ஜெயித்தால், காப்பீட்டுதாரர்கள் பணம் பத்திரம் என்று அர்த்தம்... இல்லையென்றால்...?

இன்னொரு பக்கம் IDBI வங்கி நிர்வாகத்தில் LIC தலையிடாது... அது முதலீடு செய்வதோடு நின்றுவிடும் என்றும் சொல்கிறார்கள்.

அனுபவமில்லாத துறையில் நிர்வாகம், அல்லது பணத்தை போட்டு விட்டு நிர்வாகத்தில் எந்த அதிகாரமும் இல்லாமல் வாயை மூடி கொண்டு இருப்பது – இரண்டில் எது சிறந்த தீமை?

IDBI வங்கியை LIC வாங்கக்கூடாது என்று நிதித்துறை விற்பன்னர்கள் கூறுகிறார்கள்... அரசு கேட்குமா? Btw, தற்போது நாட்டின் நிதியமைச்சர் யார்?



பங்களாதேஷிற்கு மின்சாரம் - ஆதானி ஜார்கண்ட் ஆலை


விதிமுறைகள் மாற்றம் குறித்து, நேற்று போட்ட பதிவுக்கு இலவச இணைப்பாக இன்னொரு பதிவு.

பங்களாதேஷின் மின்சார தேவைக்காக மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதானி குழுமம் அமைக்க பார்க்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் பாஜகதான் ஆட்சி செய்கிறது.  

ஜார்கண்ட் மாநில விதிமுறைகளின் படி ஜார்கண்ட் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், 25% மின்சாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கே குறைந்த விலையில் விற்கவேண்டும்.

இதற்கான விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பொன்றை காரணமாக காட்டி மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இந்த மாறிய விதிமுறைகளின் பலன்கள் வேறு எந்த நிறுவனத்திற்கும் கிடைக்காது... ஆதானிக்கு மட்டும்தான் கிடைக்கும். இதை CAG கண்டித்துள்ளார். கண்டிச்சுட்டு போயிக்கோ என்று டீலில் விட்டுவிட்டார்கள்.

இந்த மின்உற்பத்தி நிலையத்தை அமைக்க 13500 கோடி ரூபாய்கள் தேவைப்படுமாம். ஏற்கனவே ஆதானி பவர், தன்னுடைய ஈக்வடி போல 16 மடங்கிற்கு கடன் வாங்கியிருக்கிறது. இந்த முறை எந்த வங்கியோ?

இந்த விதிமுறை மாற்றங்கள் ஒருபுறமிருந்தாலும், பங்களாதேஷிற்கும் இந்த டீலில் ஆதாயமில்லை என்று சொல்கிறார்கள். இன்னும் கேட்டால் பங்களாதேஷுக்கு மின்சார விலை நிர்ணயிக்கும் கூட்டத்தை அவசர அவசரமாக, முக்கிய அதிகாரிகள் கூட இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறார்கள். திட்டமிட்ட தேதிக்கு முன்கூட்டியே ஏன் அவசர மீட்டிங் நடத்தப்பட்டது...? காரணம் தெரியாது.

இந்த ஆலைக்கான கரி எங்கிருந்து வரும் என்பதும் புரியவில்லை... ஆஸ்திரேலியாவிலிருந்து கரி இறக்குமதி செய்து இந்த ஆலைக்கு உற்பத்தி செய்யலாம் என்பது திட்டம். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆதானிக்கு இருக்கும் எதிர்ப்பையும், திட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதையும் ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். (https://perungadal.blogspot.com/2017/12/carmichael-coal-mine.html)

முகத்திலே கரியை பூசினாலும், ஆதானியின் ஆஸ்திரேலிய கனவுகள்  இன்னும் முடியவில்லை போல...!

Wednesday 27 June 2018

நாலு பேரு நல்லா இருக்கனும்னா...


வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில் இருக்கும் துறைமுகங்களுக்குள் சரக்கு போக்குவரத்து செய்யக்கூடாது. இதை கேபடாஜ் (Cabotage) என்பார்கள். அமெரிக்கா, சீனா உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கேபடாஜ் விதியை வைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இந்த தடை இருந்தது... ஆனா, இப்போ இல்லை..!

பொதுவாக வெளிநாட்டு கப்பல்கள் மூலம் சரக்கு போக்குவரத்து செய்வது சீப்பான விஷயம். காரணம், வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவில் பெரிதாக வரி கட்ட தேவையில்லை. சராசரியாக இந்திய கப்பல் 9.7% வரி கட்டினால், வெளிநாட்டு கப்பல் 2.2% வரி கட்டும். GST இந்திய கப்பல்களுக்கு மட்டுமே. மேலும் சில அரசு விதிமுறைகள் இந்திய கப்பல்களின் செலவை அதிகரிக்கும். கப்பல்களின் செலவு அதிகரித்தால் ஏற்றுமதி-இறக்குமதி செலவும் அதிகரிக்கும். அதனால், ஏற்றுமதி – இறக்குமதியாளர்களுக்கு வெளிநாட்டு கப்பல்கள்தான் சரக்கு போக்குவரத்துக்கு நல்ல சாய்ஸ்.

பல ஆண்டு காலமாக, கார்ப்பரேட்கள் கேபடாஜ் தடையை நீக்கவேண்டும் என்று லாபி செய்து கொண்டிருந்தன. இப்போது மோடி அரசு அந்த தடையை நீக்கிவிட்டது. இனி, வெளிநாட்டு கப்பல்கள் இந்தியாவிற்குள் இருக்கும் துறைமுகங்களுக்கு இடையே சரக்கு போக்குவரத்தில் ஈடுபடலாம்.

இந்தியாவில் பல துறைமுகங்கள் ஏற்கனவே ஆதானி குழுமத்தின் வசம் உள்ளது. இன்னும் பல துறைமுகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு கப்பல் கம்பெனிகளோடு ஆதானி பல ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது.

இப்போது கேபடாஜ் விதியை நீக்கியதால் பெரும்பலன் அடைய போவது ஆதானி குழுமம்தான் என்கிறார்கள்... நஷ்டம் அடைய போவது மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான JNPT துறைமுகம்... மேலும் உள்ளூர் கப்பல் கம்பெனிகளில் கிட்டதட்ட ஒரு லட்சம் பேர் வரை வேலையிழக்கலாம்... அரசும் தன் வரி வருமானத்தை இழக்கும். ஒரு கட்டத்தில் நாட்டின் கப்பல் போக்குவரத்து முழுக்க வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் இருக்கும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் ஆகலாம்.

அதனால என்ன, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எது பண்ணாலும் தப்பில்ல...! கரெக்டுதானே...!

Tuesday 26 June 2018

The Forgotten Queen Mother


பகுதி 1 - பெர் லாஷ்யாஸ்

பெர் லாஷ்யாஸ்.... இது பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருக்கும் மிகப்பெரிய இடுகாடு.. 110 ஏக்கர்... 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளே நிரந்தரமாக உறங்குகிறார்கள். இந்த இடுகாட்டிற்கு வருடத்திற்கு 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகிறார்கள்.

காரணம், இந்த இடுகாட்டில் மிகவும் புகழ்பெற்ற ஆட்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். புகழ்பெற்ற கவிஞரும், நாடகாசிரியருமான ஆஸ்கார் வைல்ட், ஹோமியோபதி கண்டுபிடித்து ஹானேமான், தண்ணீர் என்பது இரண்டு வாயுக்களின் கலவை என்று கண்டுபிடித்த கே லூஸாக், பாடகர் ஜிம் மாரிஸன்... இன்னும் பலபல பிரபலங்கள் இங்கே உறங்குகிறார்கள். லிஸ்ட் ரொம்ப பெருசு..!

மெயின் கதைக்குள் போவதற்கு முன்னர் ஒரு குட்டி, சைடு கதையை பார்ப்போம். 1804-ல் நெப்போலியன் இந்த இடுகாட்டை நிறுவியிருக்கிறார். (இடுகாட்டை என்னடா நிறுவறது...!?). ஏழை, பணக்காரன், மதம், இனம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், யாராக இருந்தாலும் அவர்களது சடலங்கள் இங்கே புதைக்கப்பட வேண்டும் என்பது நெப்போலியனது ஆணை. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக இடுகாட்டில் ‘கூட்டம்’ சேரவில்லை.

காரணம் அப்போது இருந்த பாரீஸ் நகரிலிருந்து இடுகாடு ரொம்ப தூரம்... (இப்போது டைரக்ட் மெட்ரோ வசதிகள் கூட உண்டு). அடுத்து சர்ச் ஒப்புக்கொண்ட இடுகாட்டில்தான் உடலை புதைக்கவேண்டும் என்று கத்தோலிக்கர்கள் அடம்பிடித்தனர். ஒரு வருட காலத்தில் வெறும் 13 பேர்தான் புதைக்கப்பட்டனர்.

எப்படிடா இடுகாட்டில் கூட்டத்தை சேர்ப்பது என்று கொஞ்சம் யோசித்த அதிகாரிகள், ஒரு பெரிய விழாவொன்று எடுத்து, எங்கோ வேறிடத்தில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கவிஞர்களின் சடலங்களை கொண்டுவந்து இங்கே புதைத்தார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து ஒரு தத்துவ பேரறிஞர் மற்றும் ஒரு எழுத்தாளரின் சமாதியையும் அதே போல இடம் மாற்றினார்கள்.

அப்புறமென்ன, பெர் லாஷ்யாஸ் இடுகாடு புகழ் பெற்றது.... லட்சக்கணக்கானோர் இங்கே வந்து இறுதி துயில் கொண்டனர். இப்போது இடுகாட்டில் கொஞ்ச இடம்தான் இருக்கிறது... இடம் கிடைக்க படுகிராக்கி..!

சரி, இனி மெயின் கதைக்கு வருவோம்.... பல தத்துவ மேதைகள், அறிவியல் அறிஞர்கள், பாடகர்கள், எழுத்தாளர்கள், இசைஞர்களின் கல்லறைகள் இங்கே நினைவு சின்னங்களோடு, அற்புதமாக பராமரிக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட இடுகாட்டில், பராமரிக்கப்படாமல், உடைந்து போன கற்களோடு, வானமே கூரையாக கொண்ட, பாழடைந்த கல்லறையில் உறங்குகிறார் அவ்த் ராஜ்யத்தின் ராஜமாதா மலிகா கிஷ்வார் என்றழைக்கப்படும் பேகம் ஜனாப்-இ-ஆலியா....!

பகுதி 2 - அவ்த் ராஜ்யம்

வரலாற்றின் இடைவிடாத நிகழ்வுகளின் ஓட்டத்தில் நமக்கு தேவையான சம்பவங்களை மட்டும் எடுத்து கோர்த்து வசதிக்குதான்.... ஆனால், அந்த நிகழ்வுகள் நமக்கு கோர்வையாக புரியவேண்டுமென்றால் நாம் காணப்போகும் வரலாற்று காலத்திற்கும் கொஞ்சம் முன்னே போகவேண்டும். அதிகம் இல்லை, இன்றிலிருந்து சுமார் 300 ஆண்டுகள் பின்னால் போவோம். அவ்த் ராஜ்யத்தின் வரலாற்றை படுவேகமாக புரட்டி பார்த்து விட்டு நம் கதைக்குள் போய்விடுவோம்.

அவத் (Awadh) அல்லது அவ்த் (Oudh) என்னும் ராஜ்யம், உத்தரபிரதேசத்தில் கங்கை, யமுனை மற்றும் பல நதிகள் பாயும், நேபாளை ஒட்டிய மிக வளமான பகுதியாகும். ஔத் என்னும் பெயரே, ராமாயணத்து அயோத்தியா நகரின் பேரை ஒட்டி இருப்பதை கவனியுங்கள். இங்கு பேசப்படும் அவதி என்னும் மொழி, கிழக்கத்திய ஹிந்தி எனப்படுகிறது.

முகலாய பேரரசர் அக்பர் அவருடைய சாம்ராஜ்யத்தை மாகாணங்களாக பிரித்த போது அவ்த் ராஜ்யமும் ஒரு மாகாணம்... முகலாயர்களுக்கு அடங்கியே அவ்த் ஆட்சியாளர்கள் (சுபாதார் என்று அழைப்பார்கள்) இருந்தனர். அதில் முக்கியமானவர் சாதத் அலி என்பவர்.
ஔரங்கசீப் 1707-ல் மறைந்த பிறகு முகலாய பேரரசு வலிமை இழந்த காலத்தில், இவர் அவ்த் ராஜ்ஜியத்தின் முதல் நவாப் ஆனார். இவர்தான் ஃபைஸாபாத் நகரை கட்டியவர்.
இரண்டாம் நவாப் காலத்தில் அவ்த் பெரும்புகழையும், செல்வத்தையும் அடைந்தது. இதுதான் அவ்த் அரசின் பொற்காலம். இவரை ஏதோ சதியில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டனர்.

மூன்றாவது நவாப் காலத்தில் பக்ஸார் போர் (1764) என்னும் முக்கியமான சண்டை நடந்தது. முகலாயர்கள் தலைமையில் அவ்த் நவாபும் போரில் கலந்து கொண்டார். 40000 பேர் கொண்ட இந்திய படையை 18000 பேர் கொண்ட கம்பெனி படை எளிதாக தோற்கடித்தது..! நம்ம நவாப் போர்க்களத்திலிருந்து ‘எஸ்‘ ஆகிவிட்டார். அவ்த் அரசில் கொஞ்சம் பகுதிகளை கிழக்கிந்திய கம்பெனி விழுங்கியது. இருந்தாலும் அவ்த் இன்னமும் ஒரு பணக்கார மாகாணம்தான்… முகலாயர்களுக்கு கட்டுப்பட்டே அவ்த் அரசு இருந்தது.

நாலாவது நவாபின் அம்மா கொஞ்சம் பிடுங்கல் கேஸ்…. அதனால் அவர், தலைநகரை ஃபைஸாபாத்திலிருந்து லக்னோவுக்கு மாற்றி கொண்டு தனிக்குடித்தனம் வந்துவிட்டார். (மூன்றாவது நவாப் மாற்றியதாகவும் சொல்கிறார்கள்). அதிலிருந்து லக்னோ நகருக்கு ஏறுமுகம்தான்…. ஃபைஸாபாத் நகரம் கொஞ்சம் பொலிவிழந்தது. லக்னோ என்னும் பெயரும் ராமாயண லக்ஷ்மணன் பேரிலிருந்து வந்ததுதானாம்.

இதுவரை ஆண்ட அவ்தின் நவாப்கள் ஓரளவு திறமைசாலிகள்… செல்வ வளம் மிக்க பூமியின் துணைகொண்டு முகலாயர்கள், ஆப்கானியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் அனைவரையும் இந்த நவாப்களால் சமாளிக்க முடிந்தது.

இதற்கப்புறம் வந்த நவாப்கள் வீக் டைப்தான்… 1801ல் அவ்த் அரசு, பாதி ராஜ்யத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு தந்துவிட்டது… படைகளையும் வெகுவாக குறைத்து கொண்டு, கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை பாதுகாப்புக்கு வைத்து கொண்டது. முகலாயர்களின் கட்டுப்பாட்டை விட்டு விலகி அவ்த் அரசு ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

நம் கதை நடந்த காலகட்டம் 1856.... கிழக்கிந்திய கம்பெனி அசுர பலத்துடன் இந்தியாவில் வேறூன்றியிருந்தது. 1818-ல் மராத்திய பேரரசு இறந்து போயிருந்தது.... 1849-ல் சீக்கிய பேரரசு மறைந்து போயிருந்தது. முகலாய பேரரசு சுருங்கி போய், ஒரே ஒரு அரண்மனையை மட்டும் ‘ஆட்சி’ செய்துக்கொண்டு, சாகும் தருவாயில் மெலிதாக நூலளவு மூச்சு விட்டு கொண்டிருந்தது. கம்பெனியின் தயவிருந்தால் மட்டுமே ஆட்சி நிலைக்கும் என்ற நிலையில்தான் இந்திய அரசுகள் இருந்தன.

சீரும் சிறப்புமாக இருந்த அவ்த் அரசு, இப்போது பலமிழந்து போய், சும்மா பழம்பெருமை பேசி கொண்டிருந்த ஒரு ராஜ்யம். ஆனால், இப்போதும் அது பொன் விளையும் பூமிதான்.... அதனால், ஆங்கிலேயர்களுக்கு அதன் மேல் ஒரு கண்....! அப்போதைய நவாப் வாஜீத் அலி ஷா... வெறும் பொம்மை நவாப்...!

பகுதி 3 - Doctrine of Lapse

துணைகண்டத்தில் பலமாக தன்னை நிலைநிறுத்தியிருந்த கிழக்கிந்திய கம்பெனி சின்ன சின்ன இந்திய ராஜ்யங்களை விழுங்குவதற்கு Doctrine of Lapse என்று ஒரு கொள்கை வகுத்தது. அது என்ன கொள்கை?

ஒரு அரசருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால் உறவினர்களின் குழந்தை ஒன்றை தத்தெடுத்து கொள்வது வழக்கம்... Lapse doctrine இதை ஒப்புக்கொள்ளவில்லை... ஒரு அரசருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசரின் காலத்திற்கு பிறகு அந்த ராஜ்யம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்துவிடும். இதுதான் அந்த கொள்கை. (செம கொள்கை..!)

கொள்கையிலே இன்னொரு பாயிண்டும் உண்டு... எந்த அரசராவது ஒழுங்காக ஆட்சி செய்யாவிட்டால், அந்த ராஜ்ஜியத்தை கிழக்கிந்திய கம்பெனி எடுத்து கொண்டுவிடும்... இப்போ இருக்கும் ஆர்ட்டிகள் 356 போல.

சரி, ஆட்சி ஒழுங்காக நடத்தவில்லை என்று யார் தீர்மாணிப்பது? அதையும் கிழக்கிந்திய கம்பெனியே தீர்மாணிக்கும்.

356 செயல்படும் அதே modus operandi-தான். முதலில் ரெஸிடென்ட் என்பவரை கிழக்கிந்திய கம்பெனி நியமிக்கும். அவர் அந்த ராஜ்ஜியத்திலேயே உட்கார்ந்து கொண்டிருப்பார்.... கொஞ்ச காலம் கழித்து ராஜா சரியில்லை என்று ஒரு ரிப்போர்ட் தருவார்... அப்புறமென்ன..? ராஜ்யம் கிழக்கிந்திய கம்பெனியின் பாக்கெட்டுக்குள் போய்விடும்.
அவ்த் ராஜ்யத்திற்கு அப்படி நியமிக்கப்பட்ட ரெஸிடென்ட், கர்னல் வில்லியம் ஸ்லீமேன் என்பவர். A journey through the kingdom of oudh in 1849-1850 என்று ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவ்த் நவாப் நாட்டை ஒழுங்காக அரசாளவில்லை என்பது ஸ்லீமேனின் ரிப்போர்ட்.

அவ்த் அரசின் நவாப் வாஜீத் அலி ஷா பாட்டு, நடனம் என்று காலம் கழித்து கொண்டிருந்தார். ஆங்கிலேய படைகள் திடீரென முன்னேறி லக்னோ எல்லையில் அபாயகரமாக நின்றன. ஆங்கிலேய தளபதி அவுட்ரேம் என்பவரும், ஸ்லீமேனும் 1856, பிப்ரவரியில் நவாபை சந்தித்தார்கள். ஆங்கிலேயரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும். அல்லது ஆங்கில படைகளை எதிர்கொள்ளவேண்டும்.

ஆங்கிலேயர்களால் ஏற்கனவே மனம் நொந்திருந்த நவாப் தன் விதியை ஏற்றுகொண்டார். “ஒப்பந்தம் என்பது சமமானவர்களுடன் செய்து கொள்வது... வல்லமை பொருந்திய கம்பெனி, சாதாரணமானவனான என்னுடன் எப்படி ஒப்பந்தம் செய்யமுடியும்?” என்று கேட்ட நவாப் தன் தலைப்பாகையை கழற்றி ஸ்லீமேன் கையிலே கொடுத்தார். “நான் இப்போது நவாப் இல்லை... என்னால் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட முடியாது” என்றார்.

வந்த வேலை சுலபமாக முடிந்தது... ராஜ்ஜியம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்துவிட்டது. வாஜீத் அலியையும், அவரது குடும்பத்தினர்களில் முக்கியமானவர்களையும் கொல்கத்தாவிற்கு ‘பத்திரமாக’ அழைத்து சென்ற ஆங்கிலேயர்கள் ஒரு ‘மாளிகையில்’ தங்க வைத்தனர்.

ஸ்லீமேன் குறித்த சுவையான விஷயங்கள்.. ஸ்லீமேனின் அஸிஸ்டென்ட் ராபர்ட் பேர்டு பின்னாளில் ஸ்லீமேனின் குற்றச்சாட்டை மறுத்தார். மோசமான ரிப்போர்ட் தரவேண்டுமென்பது ஸ்லீமேனுக்கு முன்கூட்டியே தரப்பட்ட உத்தரவு என்றார் அவர். அதாவது, ரிப்போர்ட் ஃபிக்ஸிங்..!

அவ்த் ராஜ்யத்தை கிழக்கிந்திய கம்பெனி தன்வசப்படுத்தி கொள்வதை ஸ்லீமேனும் எதிர்த்தார். ஆனால், அவரது எதிர்ப்பு உதாசீனப்படுத்தப்பட்டது. ஸ்லீமேனை மேலிடம் ஏமாற்றியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. சில மாதங்களிலேயே கடல்விபத்து ஒன்றில் ஸ்லீமேன் இறந்து போனார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மத்தியபிரதேசத்தில் ஸ்லீமேனாபாத் என்னும் ஒரு கிராமம் கூட உண்டு...!

பகுதி 4 - வாஜீத் அலி

வாஜீத் அலி ஏன் இப்படி வெள்ளைக்காரன் காலிலே விழுந்தார்...? காரணம் ரொம்ப சிம்பிள்... ஆங்கிலேயர்களின் படைபலம் அப்படிப்பட்டது....போர் செய்தெல்லாம் வெல்லமுடியாது. வாஜீத் அலி தன் பக்கம் நியாயம் மட்டுமே இருப்பதை அறிந்திருந்தார். இந்தியாவில் உள்ள வெள்ளையர்களுடன் பேசி பிரயோஜனம் இல்லை... உண்மையான அதிகாரம் இங்கிலாந்தில் இருக்கிறது. அங்கு போய் முறையிட்டால் தனக்கு ராஜ்யம் திரும்ப கிடைத்து விடும் என்பது அவரது நம்பிக்கை. ஆங்கிலேய நீதியை எதிர்பார்த்த ஒரு அப்பாவி, முட்டாள் ராஜா...!

ராஜா வேண்டுமானால் அப்படி யோசிக்கலாம்... ஆனால், குடிமக்கள் அப்படி நினைக்கவில்லை... அவ்த் ராஜ்யத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பெரிய கலவரம் ஆரம்பித்தது. கலவரத்திற்கு தலைமை ஏற்றது ராஜாவின் ராணிகளில் ஒருத்தியான பேகம் ஹஸ்ரத் மஹால். முதல் சுதந்திர போரின் முக்கிய வீரரான நானா சாஹேப்புடன் இணைந்து அவர் பணியாற்ற தொடங்கினார்.

இங்கே கொல்கத்தாவில் நிலைமை வேறுவிதமாக போனது... இங்கிலாந்திற்கு கடற்பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு ராஜாவிற்கு உடல்நலம் ஒத்துழைக்கவில்லை... கடற்பயணம் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். பின் இங்கிலாந்திற்கு யார் போவது...? நீதிக்காக போராடுவது..?

நவாபின் தாயார், ராஜமாதா மலிகா பொறுப்பேற்க முன் வந்தார்... தன் வம்சத்தினரின் உரிமைக்காக விக்டோரியா மகாராணியை சந்தித்து வாதாட அவர் தயாராக இருந்தார். என்ன இருந்தாலும், விக்டோரியா மகாராணியும் ஒரு பெண்தானே... ஒரு பெண்ணின் உணர்வுகள் இன்னொரு பெண்ணுக்கு புரியும் என்பது அவரது சென்டிமெண்ட் கணக்கு..!
ஆக, தன் அந்தப்புரத்தை தாண்டி எதையும் அறியாத, அந்த பெண்மணி, தன் மகன், பேரன் ஆகியவர்களின் அரசுரிமைக்காக கடல்கடந்து போனார். புரியாத கலாச்சாரம், பருவநிலை, முன்பின் தெரியாத ஆண்கள் – எதுவாக இருந்தாலென்ன.... ராஜமாதா மலிகா மிகுந்த துணிச்சலுடன் இங்கிலாந்து சென்றார்.

மலிகா உண்மையில் திறமையான பெண்மணிதான்.... Doctorine of Lapse-ன் கீழே ஸ்லீமேன் ஒப்பந்தம் தயார் செய்தபோது முதலில் அதை மலிகாவிடம்தான் காட்டினார். இதிலிருந்து மலிகாவின் திறமையையும், செல்வாக்கையும் நாம் உணரலாம். (நடக்கப்போகும் கசப்பான நிகழ்வுகளை விரும்பாத மலிகா, தன் மகனிடமே டீல் செய்து கொள்ளுமாறு ஸ்லீமேனிடம் கூறிவிட்டார்)

நவாபின் தாயார் மலிகா இங்கிலாந்தில் நீதி கேட்டு போராட்டம் மேற்கொண்டார்... இங்கே இந்தியாவில், அவரது மருமகள் ஹஸ்ரத் மஹால் கத்தியெடுத்து வெள்ளையர்களுக்கு எதிராக போராடி கொண்டிருந்தார். நவாப் என்ன செய்து கொண்டிருந்தார்?

நவாப் சீரும், சிறப்புமாக ஆட்சி செய்த தன் முன்னோர்களையும், தன்னுடைய இயலாமையையும் எண்ணி மருகி கொண்டிருந்தார். ஆங்கிலேயர்கள் கொல்கத்தாவின் புறநகரில் சில ஏக்கர் நிலங்களை ஒதுக்கி தந்தனர்... ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் பென்ஷன்... லக்னோவை மறக்க முடியாத நவாப், அந்த பகுதியில் லக்னோ ஸ்டைலில் சில கட்டிடங்களை கட்டி விட்டு, தனக்கு பிடித்த இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆட்சி தன் கைக்கு திரும்பி வராது என்பதை அவர் மனமுவந்து ஏற்று கொண்டு விட்டார்.

ஹ்ம்... நவாப் ஒழுங்காக ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்தால், அவருக்கு ஒப்பந்தப்படி 15 லட்சம் பென்ஷன் கிடைத்திருக்கும்.... தொப்பியை கழட்டி கொடுத்ததால், வெள்ளையர்கள் டென்ஷன் ஆனார்களோ, என்னவோ...? பென்ஷன் 12 லட்சமாக குறைக்கப்பட்டுவிட்டது.

பகுதி 5 - இங்கிலாந்தில் முயற்சிகளும், தோல்விகளும்

மலிகாவின் இங்கிலாந்து பயணம் வெற்றிகரமாக அமையவில்லை... முதலில் விக்டோரியா மகாராணியை சந்திப்பதற்கே நாக்கு தள்ளி விட்டது. மகாராணியின் அப்பாயின்ட்மெண்ட்டே கிடைக்கவில்லை... இடையில் பல பேர் மலிகாவை ஏமாற்றி காசு பிடுங்கி விட்டனர்.

ஒருவழியாக விக்டோரியா மகாராணியை மலிகா சந்தித்தார். ஆனால், பேட்டி ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் மலிகாவிற்கு ஒரு விஷயம் புரிந்தது... இங்கிலாந்தின் உண்மையான அதிகாரம் பாராளுமன்றத்தில் உள்ளது... ராணி என்பது ஒரு மரியாதைக்குரிய பதவி, அவ்வளவுதான்...! விக்டோரியா மகாராணியிடம் படகுகளை பற்றியும், இங்கிலாந்து கட்டிட கலையை பற்றியும் மட்டும்தான் பேச முடிந்தது. லக்னோ ஆட்சியுரிமை பற்றி..? மூச்..!

மலிகா மனமுடைந்து விடவில்லை.... அவரது அடுத்த முயற்சி இங்கிலாந்து பாராளுமன்றத்தை நோக்கி..! பெரும் பிரயத்தனங்களுக்கு பிறகு இங்கிலாந்து பாராளுமன்றம் அவ்த் அரசுரிமையை பற்றி பேச ஒப்புக்கொண்டது. ஆனால், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை. காரணம், அவ்தின் ராஜமாதா ‘பணிவான வார்த்தைகளை’ உபயோகித்து தன் மகஜரை எழுதவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.

அதற்குள், இந்தியாவில் முதல் சுதந்திர போர் (1857) வெடித்து விட்டது. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் நடக்கும் போது, அதுவும் அவ்த் அரசுரிமையை ஒரு முக்கியமான பிரச்சனையாக முன்வைத்து போர் நடந்து கொண்டிருக்கும் போது, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் என்ன உதவி கிடைக்கும்?

அவமானங்களையும், தோல்விகளையும் மட்டுமே சந்தித்த ராஜமாதா, அடுத்ததாக பிரான்ஸ் செல்ல நினைத்தார். (பிரான்ஸிடம் உதவி கோர நினைத்திருக்கலாம் அல்லது கடற்பயணத்தை தவிர்க்க பிரான்ஸ் வழியாக இந்தியா வர நினைத்திருக்கலாம்... தெரியவில்லை). மலிகாவிற்கு எதிராக விதி இன்னும் கொஞ்சம் விளையாடியது.

அப்போதுதான் பிரான்ஸ் அரசு தன் சட்டங்களை மாற்றியிருந்தது. அதற்கு முன் பிரிட்டனிலிருந்து செல்பவர்கள் பிரான்ஸிற்குள் தாராளமாக, எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நுழையலாம். ஆனால், இப்போது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே பிரான்ஸிற்குள் அனுமதி.

வேறுவழியில்லாத ராஜமாதாவும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்தார். அங்குதான் ஆங்கிலேயர்கள் அவருக்கு ஒரு முக்கியமான செக் வைத்தார்கள். ராஜமாதா மலிகா தன்னை ஒரு பிரிட்டிஷ் குடிமகளாக ஒப்புக்கொண்டால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றனர்.

அதாவது, அவ்த் ராஜ்யம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை சேர்ந்தது என்பதை ராஜமாதா தன் வாயாலேயே ஒப்புக்கொள்ளவேண்டும். இது எப்படி இருக்கு...?

பகுதி 6 - ராஜமாதாவின் மரணமும், பிற்கால சம்பவங்களும்

இங்கிலாந்தின் சூழ்ச்சி நிபந்தனைகளுக்கு ராஜமாதா ஒப்புக்கொள்ளவில்லை... அவருக்கு பாஸ்போர்ட்டும் வழங்கப்படவில்லை. மலிகா எப்படியோ சமாளித்து பிரான்ஸிற்கு வந்துவிட்டார். (பிரான்ஸ் அரசு விலக்கு அளித்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது)

இதற்குள் ராஜமாதாவின் உடல்நிலை முற்றிலும் சீரழிந்துவிட்டது... தன் முயற்சிகளில் தோல்வியடைந்த அந்த ராஜகுலத்து பெண்மணி 1858 ஜன 24ம் நாள் பிரான்ஸிலேயே உயிர்நீத்தார். அவரது உடல் பெர் லாஷ்யாஸ் இடுகாட்டிலே புதைக்கப்பட்டது.

இங்கிலாந்து வேண்டுமானால் மலிகாவை மதிக்காமல் போகலாம்... ஆனால், பாரசீக, துருக்கிய சுல்தான்களின் தூதர்கள் மலிகாவிற்கு மரியாதை செலுத்தினர். கல்லறையிலே பளிங்கினால் ஒரு நினைவு ஸ்தம்பமும் (Cenatoph) கட்டப்பட்டது. பின்னாளில் மலிகாவின் இன்னொரு மகன், மற்றும் ஒரு கொள்ளுபேரனின் உடலும் அதே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சில பத்தாண்டுகளுக்கு பிறகு நினைவு ஸ்தம்பம் பழுதடைந்தது. இடுகாட்டின் நிர்வாகத்தார் அவ்த் நவாபை தொடர்பு கொண்டு கல்லறையை பழுதுபார்க்க பணம் கேட்டனர். தனக்கு வரும் பென்ஷனில் இந்த செலவை செய்ய கட்டுபடியாகாது என்று கூறி பணம் தருவதற்கு நவாப் வாஜீத் அலி மறுத்து விட்டார்...! யாருடைய ஆட்சி அதிகாரத்திற்காக மலிகா போராடினாரோ, அந்த மகனே அவரை ஒதுக்கி தள்ளியதுதான் கொடுமையிலும் கொடுமை...! கால ஓட்டத்தில் ராஜமாதாவின் கல்லறை சிதைந்தே போனது.

சில பிற்கால நிகழ்வுகள்

முதலாம் விடுதலை போரின்போது சில காலம் வாஜீத் அலியை சிறையில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், பின்னர் அவரை சுதந்திரமாக வாழ அனுமதித்தார்கள். வாஜீத் அலி மிகவும் சொகுசான, உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து 1887-ல் கொல்கத்தாவிலேயே இறந்தும் போனார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர்புரிந்த ராணி ஹஸ்ரத் மஹால், லக்னோவை கைப்பற்றி, வாஜீத் அலியின் மகனான பிர்ஜிஸ் காதிரை (அப்போது 12 வயது) நவாபாக ஆக்கினார். ஆனால், சில மாத காலங்களிலேயே ஆங்கிலேயர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கிய ராணி ஹஸ்ரத் மஹால், நேபாளத்தில் அடைக்கலம் புகுந்து 1879ல் அங்கேயே இறந்துபோனார். ஹஸ்ரத்திற்கு தேவையான வசதிகளை ஆங்கில அரசு செய்ய தயாராக இருந்தது என்றும், அவர் அதை மறுத்து நேபாளத்திற்கு சென்றதாகவும் கூறுவார்கள்... அது உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு.

1887-ல் விக்டோரியா மகாராணியின் ஐம்பதாண்டு ஆட்சி பொன்விழா கொண்டாட்டத்தில், பிர்ஜிஸ் காதிர் மன்னிக்கப்பட்டார் (1857-ல் புரட்சியில் 12 வயது பிர்ஜிஸ் ஈடுபட்டது குற்றம் அல்லவா? அதை இப்போது மன்னித்தார்கள்..! வாழ்க பிரிட்டிஷ் நீதி..!) சிறந்த கவிஞரான அவர், அதன்பிறகு இந்தியாவிற்கு திரும்பி வந்து ஐந்தாண்டுகள் வாழ்ந்தார். 1893-ல் இளவயதிலேயே கொல்கத்தாவில் இறந்து போனார்.

வாஜீத் அலி இறந்த அதே ஆண்டு, பிர்ஜிஸ் கொல்கத்தா வந்திருக்கிறார். பிர்ஜிஸ் கொல்கத்தாவில் தந்தையை சந்தித்தாரா என்பது தெரியவில்லை. தன் தாயின் போராட்டங்களை அருகிலிருந்து பார்த்த பிர்ஜிஸ், ஒரு முயற்சியும் செய்யாது, உல்லாச வாழ்க்கை வாழ்ந்த தந்தையை மன்னித்திருப்பாரா?

Wednesday 20 June 2018

Kashmir Violence


UPA அரசாங்கத்தில் காஷ்மீர் வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தன... NDA வந்தப்பின் அதிகமாகிவிட்டது
இதனால் காஷ்மீர் டூரிஸம் மிகவும் அடிவாங்கிவிட்டது...! இனி வரும் காலங்களில் வன்முறை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா மேப் – ஒரு விளக்கம்


இன்று காலை என்னுடைய பதிவில் விக்கிபீடியாவில் இருந்து டவுன்லோட் செய்த ஒரு இந்தியா மேப் போட்டிருந்தேன். நண்பர் ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அந்த மேப் உபயோகிப்பதில் எனக்கும் தயக்கம் இருந்ததால் வேறு மேப் படத்தை போட்டுவிட்டேன். ஆனாலும், உண்மையில் காஷ்மீர் பகுதியை காட்டாத இந்திய மேப் உபயோகிக்கலாமா, கூடாதா என்ற சந்தேகங்கள் எழுந்தன. தெளிவான விடையை தேடினேன்.
2006-ல் அப்துல்கலாம் அவர்கள் Google Map போன்ற Geospatial சேவைகளால் நாட்டிற்கு ஆபத்து வரலாம் என்றும், அவற்றை முறைப்படுத்த வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார். அதை தொடர்ந்து ஒரு சட்டவரைவு எழுதப்பட்டது. இதில் இந்தியா மேப்பை எப்படி போடவேண்டும் என்று சொல்லியிருந்தது. பிற்பாடு அந்த வரைவு ஒரு மூலையில் தூங்கப்போனது.
2016-ல் பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானதளம் தாக்கப்பட்ட பிறகு மீண்டும் அரசாங்கம் விழித்து கொண்டது. ஒரு வேளை கூகுள் மேப் மற்றும் கூகுள் எர்த் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பார்களோ என்னும் சந்தேகம் எழுந்தது.
ரொம்ப ஸ்டிரிக்டான சட்ட வரைவு ஒன்று எழுதப்பட்டது. Geospatial Information Regulation Bill, 2016 என்று பெயர். இதில் இந்திய மேப்பை தவறாக காண்பித்தால் கோடிக்கணக்கில் அபராதம், ஜெயில் தண்டனை என்றெல்லாம் கடுமையான சட்டவிதிகள் இருந்தன.
அடுத்த நாளே Geospatial சேவை சார்ந்த தொழில்துறையினர் அரசாங்கத்திடம், சட்டவரைவு ப்ராக்டிகலாக இல்லையென்று முறையிட்டனர். அதை தொடர்ந்து சட்டவரைவை நீர்த்து விட அரசு ஒப்புக்கொண்டது. பின்னர், இந்த வரைவும் தூங்கப்போனது.
காஷ்மீர் மேப்பை தவறாக காட்டியதற்காக கூகுளிடம் சண்டை, அல் ஜஸீரா டிவியை ஐந்தாறு நாட்கள் முடக்குவது என்று ஒரு பக்கம் இந்திய அரசு கண்டிப்பாக இருக்க, இன்னொரு பக்கம் NCERT பாடப்புத்தகத்திலேயே அக்சாய் சின் சீனாவின் பகுதியாக காண்பித்து மேப் வந்தது காமெடி.
காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை... அப்படியிருக்கும் பட்சத்தில் மேப் அதை எப்படி காட்டவேண்டும்...? இது குறித்து சர்வதேச நடைமுறை என்ன?
இது குறித்த எந்த சர்வதேச வரைமுறையும் இருப்பதாக தெரியவில்லை. உதாரணத்திற்கு China Political Map என்று கூகுளில் தேடினால், சில மேப்புகள் தைவானை சேர்த்து காட்டும். சில தைவானை சேர்க்காமல் காட்டும். இது போல பல உதாரணங்கள் சொல்லலாம்.
இந்திய சட்டப்படி எது சரி? The Criminal Law Amendment Act 1961 என்று ஒன்று இருக்கிறது. இந்திய சர்வே துறை வெளியிட்ட மேப்பிற்கு (படத்தில் உள்ளது) ஒத்துப்போகாமல் வேறு எந்த மேப் வெளியிட்டாலும், அந்த சட்டத்தின் கீழ், 6 மாதம் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கலாம். ஆனால், யார் வேண்டுமானாலும் இது குறித்து வழக்கு தொடர முடியாது. அரசாங்கம் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே கோர்ட் இதுகுறித்து விசாரிக்கும்.
சுருக்கமாக சொன்னால், நம்மை போன்றவர்கள் தவறான மேப் போட்டாலும் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால், சட்டத்தை மதித்து நடக்கவேண்டும்... காஷ்மீரை உள்ளடக்கிய மேப்பையே நாம் போடவேண்டும்.

Monday 18 June 2018

துணி எங்கு காயப்போட வேண்டும்?


நம்ம ஊரிலே எங்கு வேண்டுமானாலும் துணி காயப்போடுவோம்... வீட்டு கேட்டிலோ... பால்கனியிலோ... மொட்டைமாடியிலோ.... உள்ளாடையோ, மற்ற ஆடைகளோ நமக்கு எந்த கூச்சமும் கிடையாது, நம் பார்வையிலும் எந்த வித்தியாசமும் கிடையாது.

ஆனால், மேற்கத்திய நாடுகளில் இந்த விஷயத்தில் கொஞ்சம் நாசூக்கு பார்ப்பார்கள். மற்றவர் பார்வையில் படும்படிக்கு துணி காயப்போட தயங்குவார்கள். (வெயில் இல்லாத காலங்களில் dryer-ல் போட்டு எடுத்து விடுவார்கள்)

இதனால், நன்மையும் உண்டு... குடியிருப்புகள் டீசண்டாக தோற்றமளிக்கும்... அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயரும். (எல்லா வீடுகளுக்கும் ஒரே மாதிரி நிறத்தில் பெயிண்ட் கூட அடிப்பார்கள்...!)

Ms Claire Mountjoy
கோலிட்டான் (Colyton) இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறிய டவுன்... மக்கள்தொகை மிஞ்சி போனால் 3000 பேர்தான் இருப்பார்கள்... இந்த ஊரிலே க்ளேய்ர் மௌண்ட்ஜாய் (Claire Mountjoy) என்னும் அம்மையார், மற்றவர் பார்வையில் படும்படிக்கு துணி காயப்போட்டார். லோக்கலில் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் க்ளேய்ருக்கு ஒரு மொட்டை கடுதாசி அனுப்பினார்.

ரொம்ப டீசண்டான மொட்டை கடுதாசிதான்... “அம்மணி, உங்கள் வீடு ஊரின் prime area-வில் உள்ளது. வீட்டுக்கு வெளியே துணி காயப்போடாதீர்கள்... இதனால், எங்கள் வியாபாரம் கெடுகிறது. டிரையர் உபயோகித்து கொள்ளுங்கள் அல்லது வீட்டுக்கு உள்ளேயே துணி காயப்போடுங்கள். நம்ம ஊர் அழகாக இருந்தால் நமக்கு பெருமைதானே?”

ரொம்ப பணிவுடன்தான் கடுதாசி எழுதியிருக்கிறது... ஆனால், கோலிட்டான் நகரவாசிகள் எப்போதுமே கொஞ்சம் முரட்டு பேர்வழிகள்... “என் வீடு, நான் எங்க வேணா துணி காய போடுவேன்... நீ யாருடா கேட்க?” என்று க்ளெய்ர் சோஷியல் மீடியாவில் பொங்க அவருக்கு ஆதரவு கூடிவிட்டது.

இதை தொடர்ந்து பலரும் வீட்டுக்கு வெளியே வந்து துணி காயப்போட ஆரம்பித்து விட்டார்கள்...! கேட்டால் டிரையர் உபயோகித்தால் மின்சாரம் செலவாகிறது... சுற்றுசூழல் மாசு என்று காரணம் சொல்கிறார்கள். 


ஒரே ஒரு வீட்டில் துணி காயப்போட்டதை கண்டிக்க போக, இப்போது பல வீடுகளில் வெளியிலே துணி காயப்போடுகிறார்கள்....! நல்லதுக்கு காலமில்லை என்பது கரெக்டுதான் போல..!


Friday 15 June 2018

Miss America

மிஸ் அமெரிக்கா போட்டிகள்… 1921லிருந்து கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நடந்து வரும் இந்த அழகி போட்டி ஒரு மிகப்பெரிய மாறுதலை சந்திக்கவிருக்கிறது… அடுத்த வருடம் நிகழ்விலிருந்து போட்டியாளர்கள் நீச்சலுடையில் ஊர்வலமாக வரும் பகுதி ரத்து செய்யப்படவிருக்கிறது.
மேலும், போட்டியாளர்கள் ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் அழகி போட்டியில் பங்கு பெறலாம். மிஸ் அமெரிக்கா என்பது இனிமேல் வெறும் அழகிற்கான போட்டியாக இல்லாமல், திறமைக்கான போட்டியாக மாறப்போகிறது என்பதுதான் சேதி. .
மிஸ் அமெரிக்கா போட்டியில் நீச்சலுடைக்கு எதிர்ப்பு என்பது மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது பெண்களை வெறும் போகப்பொருளாக பார்க்க தூண்டுகிறது என்பது குற்றச்சாட்டு. அப்படியிருக்கும் நிலையில் ஏன் இந்த திடீர் மாற்றங்கள்?
கடந்த டிசம்பர் மாதம் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இந்த போட்டிகளை நடத்தும் மிஸ் அமெரிக்க ஆர்கனைசேஷன் என்னும் அமைப்பின் CEO சாம் ஹேஸ்கல் (Sam Haskell) என்பவர் 2014ம் ஆண்டு எழுதிய சில இமெயில்கள் வெளியாயின. அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவருடைய இமெயில்கள் அத்தனையும் சோதிக்கப்பட்டன. மிஸ் அமெரிக்கா போட்டிகளில் பங்கேற்ற பெண்களை குறித்து மிக மோசமான வார்த்தைகளில் ஹேஸ்கல் அந்த இமெயில்களில் விமர்சித்திருந்தார்.
முன்னாள் மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்றவர்களும் மற்றவர்களும் இதை கண்டு கொதித்தனர். விளைவு, சாம் ஹேஸ்கலின் பதவி உடனே பறி போயிற்று. கூடவே சேர்மன் மற்றும் COO ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். அந்த பதவிகளுக்கு பெண்களே பொறுப்பேற்றனர். இப்போது ஒன்பது பேர் கொண்ட போர்ட் ஆஃப் டைரக்டர்களில் ஏழு பேர் பெண்கள். இவர்கள்தான் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறார்கள்.
இந்த நீச்சலுடை ஊர்வலத்திற்கு எதிராக பல வருடங்களாக பெண்ணியவாதிகள் போராடினாலும் மாற்றம் இப்போதுதான் நடக்கிறது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.     
ஒன்று, அழகி போட்டியை தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டனர்.... வருடாவருடம் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைகிறது. இதற்காக ஒரு ஏஜென்ஸியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், போட்டியை வேறு முறையில் மாற்றினால் ஒழிய பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்பது புரிந்தது. ஆக இந்த மாற்றம் ஒரு வர்த்தக காரணம்.
இரண்டாவது காரணம், #MeToo போராட்டம். சென்ற அக்டோபரில் ஹார்வே வெயின்ஸ்டேன் (Harvey Weinstein)  என்னும் ஒரு படத்தயாரிப்பாளர் நடிகைகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உலகெங்கிலும் இருக்கும் பெண்கள், சோஷியல் மீடியாக்களில் #MeToo  என்னும் ஹேஷ்டேக் பதித்து தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகளை பகிர்ந்தனர். இது உலகம் முழுக்க பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏதோ, முன்னேறாத சில நாடுகளில் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்ற பிம்பம் மறைந்து உலகத்தில் எல்லா நாடுகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அவஸ்தைகள் தெரியவந்தது. மிஸ் அமெரிக்காவின் மாற்றத்திற்கு இந்த #MeToo போராட்டமும் முக்கிய காரணம்.
அப்போ இனி அழகி போட்டிகளில் நீச்சலுடை கிடையாதா? அமெரிக்காவிலே இரண்டு அழகி போட்டிகள் நடக்கின்றன. ஒன்று, நாம் பார்த்த மிஸ் அமெரிக்கா… இன்னொன்று, Miss USA.  அந்த Miss USA  போட்டியில் நீச்சலுடை ஊர்வலத்திற்கு எந்த மாறுதலும் இல்லை. அதே போல மிஸ் யூனிவர்ஸ் போட்டிகளிலெல்லாம் எந்த மாறுதலும் கிடையாது.
வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஆரம்பமாகி உள்ளன. மாற்றங்கள் பரவுவதும், தொடர்வதும் மிஸ் அமெரிக்கா போட்டியின் வர்த்தக வெற்றியை பொறுத்தே அமையும்.

Wednesday 13 June 2018

Blue Flag


ஒடிஷாவில் உள்ள சந்திரபாகா பீச் சமீபத்தில் Blue Flag அங்கீகாரம் பெற்றுள்ளது.

உலகில் உள்ள கடற்கரைகள், படகுத்துறைகளுக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரம்தான் Blue flag. கடல் நீரின் தூய்மை, கடற்கரை சுத்தம், சுற்றுசூழல் விழிப்புணர்வு, பாதுகாப்பு ஆகிய சில அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு Foundation for Environmental Education என்னும் அமைப்பால் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

60 உறுப்பினர் நாடுகளுக்கு மேல் இருந்தாலும், இந்த அமைப்பு ஐரோப்பிய யூனியனை சேர்ந்ததால் பொதுவாக ஐரோப்பிய நாடுகளில்தான் blue flag அங்கீகாரம் பிரபலம். முயற்சி செய்தால் மற்ற நாடுகளும் அங்கீகாரம் பெறலாம், தடையேதுமில்லை.



அப்படித்தான் ஒடிஷாவில் கோனார்க் அருகே உள்ள சந்திரபாகா பீச் Blue Flag அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இந்தியாவில் மேலும் 12 பீச்களுக்கு இந்த அங்கீகாரத்தை வாங்க முயற்சிக்கிறார்கள். ஆசியாவிலேயே Blue flag அங்கீகாரம் வாங்கிய முதல் பீச் இதுதான் என்கிறார்கள்.... அது தவறு, ஜப்பானில் 2 பீச்களுக்கு 2016லேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. (ஒரு நியூஸ்பேப்பர் தப்பா எழுதினா அத்தனை பேரும் தப்பாகவே எழுதுகிறார்கள்)

முதலாவதோ, இரண்டாவதோ... இதனால் tourism வளரும் என்கிறார்கள்... சந்தோஷம்...! முயற்சியெடுத்த மத்திய அரசிற்கும், ஒடிஷா அரசிற்கும் பாராட்டுக்கள்...!

இன்னும் அங்கீகாரத்திற்கு காத்திருக்கும் 12 பீச் லிஸ்டில் பாண்டிச்சேரியிலிருந்தும் ஒரு பீச் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலிருந்து ஒன்று கூட இல்லை...!