Tuesday, 21 November 2017

ஆத்யா சிங் - Dengue Treatment


ஆத்யா சிங் என்னும் 7 வயது சிறுமி, டெங்கு முற்றிய நிலையில் குருகிராமில் இருக்கும் ஃபோர்ட்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

உறவினர்கள் ஆத்யாவிற்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர். குழந்தைக்கு மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சொன்னபோதும், CT ஸ்கானோ, MRI – யோ எடுக்கவில்லை. குழந்தையின் மூளை 80% பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய மருத்துவர்கள், ரத்த மாற்று சிகிச்சை (Full Body Plasma Transplant) செய்யவேண்டும் என்றிருக்கிறார்கள்.
80% சதவீதம் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இப்படி ரத்தமாற்று சிகிச்சை செய்தால் பலனிருக்குமா என்று கேட்டதற்கு, பிற உறுப்புகளை காப்பாற்ற இந்த சிகிச்சை செய்யவேண்டும் என்றிருக்கின்றனர். மருத்துவமனை மேல் சந்தேகப்பட்ட உறவினர்கள் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முன்னர் குழந்தை இறந்துவிட்டது.
சிகிச்சை குறித்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க, இனிமேல் வருவது பணவிஷயம்….. 15 நாள் சிகிச்சைக்கு 16 லட்சம் ரூபாய் பில் வந்தது. விரிவான பில் அறிக்கையில் (Itemised bill) 15 நாளிலே 660 சிரிஞ்சுகளும், 2700 க்ளவுஸ்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 44 சிரிஞ்சுகள்… 180 க்ளவுஸ்கள். சர்க்கரை அளவை அளக்கும் பட்டைகள் (சாதாரணமாக 10-12 ரூபாய்க்கு கிடைப்பது) ஒவ்வொரு பட்டையும் 200 ரூபாய்க்கு சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
உறவினர்கள் கன்ஸ்யுமர் கோர்ட்டை நாட போவதாக சொல்லியுள்ள நிலையில், மத்திய அரசு ஹரியானா அரசாங்கத்தை இது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடியும்வரை மருத்துவமனை குறித்து ஏதும் சொல்ல இயலாது. ஆனால், கார்ப்பரேட் மருத்துவமனைகள் குறித்து அவ்வபோது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அரசாங்கங்கள், இந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஏதாவது செய்யுமா?

No comments:

Post a Comment