Saturday, 4 November 2017

Chennai Floods - Problem and Solution


சென்னைக்கு இந்த மழைக்காலத்தில் வெள்ளம் வருவதும், ஏரிகள், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறுவதும் இயல்பாகி விட்டது.
ஆக்கிரமிப்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று சட்டத்திற்கு புறம்பாக, ஒரு அனுமதியும் இன்றி கட்டிடம் கட்டியது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது.
இன்னொரு வகையான ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்டது. அதாவது, உரிய அரசு அமைப்புகளிடம் உரிமம் வாங்கி, நிலத்தை மேம்படுத்தி, வீடுகள், நகர்கள் அமைத்தது. இவை ஏரி நிலங்களிலும் உள்ளது.
இவற்றை வாங்கியவர்கள் நேர்மையான (Bonafide) உரிமையாளர்கள். இவர்களிடம் வாங்கியவர்களும் நேர்மையானவர்களே. அப்படிப்பட்டவர்கள் வீடுகளை எப்படி அகற்ற முடியும்? விவகாரம் நீதிமன்றங்களில்தான் மாட்டி கொள்ளும்.
ஏரிகளை மீட்க வேண்டுமென்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இந்த உண்மையான, நேர்மையான (Genuine, bonafide) உரிமையாளர்கள் அதற்காக நஷ்டப்படுவது நியாயமாகாது. அவர்களில் எத்தனை பேர் வீட்டு கடன் வாங்கியவர்களோ? அவர்கள் கட்டிய வட்டித்தொகையும் நஷ்டமாகும். அத்தனை மக்களும் வேறு வசிப்பிடங்களுக்கு குடி பெயர வேண்டும்... பெரியவர்களுக்கான அலுவலகமாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்... ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகள்?
கண்டிப்பாக இவர்களுக்கு அரசாங்கம் தகுந்த நஷ்டஈடு தந்தே ஆகவேண்டும். எத்தனை பேருக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பது? அதற்கான நிதி எங்கிருந்து வரும்? ஊழல் செய்தவர்களிடம் இருந்து மீட்டு கொடுப்போம் என்பதெல்லாம் வெறும் வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.... வேலைக்கு ஆகாது. முதலில் ஊழலை நிரூபிக்க வேண்டும். அதுவே பிரம்ம பிரயத்தனம். அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதெல்லாம்... வியாழன் கிரகத்திற்கே ராக்கெட் விட்டுவிடலாம்.
மூன்றாவது வகை ஆக்கிரமிப்பு ரொம்ப ஸ்பெஷல்... அதாவது, அரசாங்கமே விதிகளை மீறி/ மாற்றி, வளர்ச்சி திட்டம் என்னும் பெயரில் ஏரி, கால்வாய், சதுப்பு நிலங்களை எடுத்து கொள்வது. உதா. பள்ளிக்கரணை, எண்ணூர், பறக்கும் ரயிலுக்காக பக்கிம்காம் கால்வாய் முதலியன. இப்போது ஏரிகளுக்காக, கால்வாய்களுக்காக மக்களுடைய வீடுகளை அகற்றினால், இந்த ‘வளர்ச்சி’ திட்டங்களையும் அகற்ற வேண்டுமல்லவா? அதுதானே நியாயம்?
ஆக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று பேசுவது எல்லாம் பேச்சோடு நின்று விடும். பிரச்சனைக்கு இது தீர்வாகாது என்பதே நிதர்சனம்.
அப்போது சென்னை வெள்ளத்திற்கு என்னத்தான் தீர்வு...?
ஒரு நோயை சிகிச்சை செய்யும் போது நோய் அதற்கு மேலும் முற்றாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுதான் முதல்படி. அதே போல, மேன்மேலும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையெல்லாம், அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத தனி அதிகாரம் (Autonomous) பெற்ற அமைப்பும் அதற்கு ஒரு நேர்மையான தலைவரும். இதற்கு மேல் விளக்கங்கள் தேவையில்லை.
இப்போது இருக்கும் ஏரிகள், கால்வாய்களை அளவெடுத்து வேலி அமைக்க வேண்டும். அட்லீஸ்ட் இப்போது இருக்கும் நீர் பிடிப்பு பகுதியாவது மிஞ்சும். சில இடங்களில் இந்த பணி நடந்துள்ளது.
இரண்டு/ மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஏரி, கால்வாய்களை தூர் வார வேண்டும். ஏரிக்கரைகளில் மரம் வளர்ப்பதும் நல்லது. ஏரிகளை குட்டி மகிழ்வூட்டும் இடமாக (entertainment center) மாற்றினால் மக்கள் நடமாட்டமும் இருக்கும்... ஆக்கிரமிப்புகள் தவிர்க்கப்படும். அரசுக்கு கொஞ்சம் வருமானமும் வரும்.
முக்கியமாக மரங்கள் பெருகினால், இப்படி அடித்து கொட்டும் மழை இல்லாது, மழை மேகங்கள் சீராக பொழியுமாம். சென்னையில் வார்தா புயலை அடுத்து லட்சம் மரங்கள் விழுந்தன. (http://www.thehindu.com/…/1-lakh-trees-…/article16871807.ece) எத்தனை மரங்கள் நடப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்பட்ட செய்திதான் கண்ணில் பட்டது. சாலை விரிவாக்கத்தை விட்டு தள்ளுங்கள்... எவ்வளவுதான் சாலையை விரிவாக்கினாலும் சில வருடங்களில் போதாமல்தான் போகும். அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டது ஆறாம் கிளாசுக்கான விஷயம் அல்ல... ஆயுசுக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயம்.
அடுத்தது, மழைநீர் வடிகால் கால்வாய்கள். சென்னை முழுவதும் 1900 கி.மீ நீளத்திற்கு இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெயரளவிற்கு, திட்ட அளவிற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் திட்டத்தில் பெரிய ஓட்டை இருப்பதாக தோன்றுகிறது. அதாவது, சென்னையின் புவியியல் அமைப்பை கவனிக்காமல், மேடான இடம் தாழ்வான இடம் என்று பிரிக்காமல், வெறும் சாலை அகலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால்வாய் முழுவதையும் தரமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். (http://www.dinamalar.com/news_detail.asp?id=1889013)
மேடான இடங்களில் எல்லாம் நீரேற்று நிலையங்கள் அமைத்து கால்வாய் நீரை அடுத்த தாழ்வான பகுதிக்கு வெளியேற்ற வேண்டும். கால்வாயின் கீழே கான்கிரீட் இல்லாமல் மண்ணாக இருந்தால் தண்ணீர் ஓரளவிற்காவது பூமிக்குள் செல்லும். அருகில் இருக்கும் ஏரிகளுக்கு, குளங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படவேண்டும்... நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக ஏற்றிவிடும். இதை முறையாக எல்லா இடங்களிலும் செய்யவேண்டும்.
ஒவ்வொரு முறை சாலை போட வரும்போதும் பழைய சாலையின் மீதே புதிதாக சாலை அமைக்கக்கூடாது. இதனால், வீடுகள் பள்ளத்திற்குள் சென்று இல்லாத வெள்ளத்தை உண்டாக்குகிறது. கான்கிரீட் ரோடு போட்டால் தயவு செய்து மரங்களை சுற்றி சிமெண்ட் ஊற்றாதீர்கள். மரங்கள் வலிமை இழந்து விடும். (https://timesofindia.indiatimes.com/…/articles…/55991710.cms)
முக்கியமானது, பிளாஸ்டிக் குப்பைகள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை ரொம்ப காலமாக சொல்லி கொண்டிருப்பதுதான். வருடம் முழுவதும் நகரை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதற்கு மழைகாலத்தில் கிடைக்கும் தண்டனைதான் இது. முக்கியமாக பொதுமக்கள் சாலைகளில் குப்பை போடாமல் இருத்தல் அவசியம். பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது.
கடைசியாக ஆக்கிரமிப்புகள் - சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை எந்த பிரச்சனையுமின்றி தாராளமாக அகற்றி விடலாம். தேவையெல்லாம் அரசின் உறுதிதான் (Political will). அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்ற முடியாது. முக்கியமான இடங்களில் மட்டும் அகற்றிவிட்டு, உரிய நஷ்டஈடு தரவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீரை (மெட்ரோ ரயில் போன்று tunnel அமைத்து) சீராக கீழே எடுத்து சென்றுவிட்டு பின்னர் மேலேற்ற முடியுமா, அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும்.
அரசாங்கம்தான், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். அரசாங்கமே சுற்றுசூழலை பாழ் செய்ய கூடாது. பொருளாதார வளர்ச்சி என்பது சூழலை சிதைத்து வரக்கூடாது. இயற்கையோடு இயைந்த வளர்ச்சியே அழகு. ஏற்கனவே அமைந்தவற்றை சரி செய்ய முடியாவிட்டால் தண்ணீர் வெளியேற மாற்று பாதையாவது அமைத்தல் வேண்டும்.
வளர்ச்சி என்னும் பெயரிலே புதியதாக எதையும் சென்னைக்கு கொண்டு வராதீர்கள். கொஞ்சம் திருச்சி, திருநெல்வேலி பக்கம் செல்லுங்கள். அவையும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.
மேற்சொன்ன யோசனைகளை நிறைவேற்ற சில வருடங்களே ஆகும். இதை செய்தாலே பிரச்சனையை பல மடங்கு சமாளித்து விடலாம். தேவையெல்லாம் அரசின் அக்கறையும் கவனமும் உறுதியும்தான். இதற்கெல்லாம் செலவு ஆகுமே என்று பார்க்காதீர்கள்... ஒவ்வொரு வெள்ளத்திலும் நாம் இழப்பது ஆயிரக்கணக்கான கோடிகளை..! (https://en.wikipedia.org/wiki/2015_South_Indian_floods)

No comments:

Post a Comment