Saturday 11 November 2017

ஒரு சாதனை பெண்ணை குறித்த பதிவு


ஈ.சி.ஜி – நம்மில் அனைவருக்கும் தெரியும். நமது இதயத்தின் மின் அதிர்வை ஒரு பேப்பரில் படமாக வரையும். தேர்ந்த மருத்துவர் (Specialist) ஒருவர் இந்த ஈ.சி.ஜி கொண்டு இதயத்தில் என்ன பாதிப்பு, என்ன சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்வார்.
இந்தியாவின் கிராமங்களில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் இருக்கமாட்டார். சாதாரண பொதுநல மருத்துவர் இருந்தாலே சந்தோஷம். அரசாங்கமோ, நல்லிதயம் படைத்தவர்களோ ஒரு கிராம மருத்துவமனைக்கு ஈ.சி.ஜி மெஷின் வாங்கி தரலாம். ஆனால் என்ன விதமான இதயநோய் (diagnosis) என்று எப்படி கண்டறிவது? சிகிச்சை?
இங்குதான் ரமா என்னும் பயோமெடிக்கல் இன்ஜினியர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, பல ஈ.சி.ஜி ரிப்போர்ட்டுகளை மென்பொருளில் புகுத்தி, மாடல் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மாடலில் ஒரு நோயாளியின் ஈ.சி.ஜி ரிப்போர்ட்டை கொடுத்தால் அவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி விடும். அந்த மருத்துவரே சிகிச்சை அளிக்கலாம், அல்லது அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்காவது அனுப்பலாம். டெலிமெடிசினும் சாத்தியம்தான்.
இந்த மென்பொருள் இன்னும் முழுமையாக முடியவில்லையெனினும் நல்ல முன்னேற்றம் உள்ளது. தன்னுடைய மென்பொருளையும், ஈ.சி.ஜி கருவியையும் ஒன்றாக இணைத்துவிட்டால் இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார். ரமாவின் இந்த ஐடியாவும், முயற்சியும் பாராட்டத்தக்கதே.

சரி, இப்போது ரமா தன்னுடைய வாழ்க்கையில் போராடி கடந்து வந்த பாதையை காண்போமா?
ரமாவிற்கு போலியோ உண்டு... சிறு வயதில் அவரால் நிற்க கூட முடியாது. மூன்று சக்கர சைக்கிளில்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வார். ஆனால், தன் முயற்சியால் எழுந்து நடந்தார். சைக்கிள் பழகினார், ஸ்கூட்டர் ஓட்டினார், இப்போது காரையும் ஓட்டுகிறார்.
ரமாவிற்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் பெண்கள் இன்ஜினியரிங் படிக்க கூடாது என்று ஒரு உறவினர் கூறியதால், பயாலஜி குரூப் எடுத்து படித்துள்ளார். ஒரு மார்க் பயாலஜியில் குறைந்ததால் டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.
வேறு வழியில்லாமல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமா முடித்தார். 3 ஆண்டுகள் கழித்தே, பி.டெக் (பகுதி நேரமாக) சேர்ந்தார். முதலாம் ஆண்டு படிக்கும் போதே கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. வகுப்பிற்கு ஒழுங்காக வருகை தரமுடியவில்லை. எப்படியோ குறைந்த மதிப்பெண்களில் பாஸாகி விட்டார்.
பின்னர் ஐ.ஏ.எஸ் எழுத முயன்றாலும் குழந்தையை வைத்து கொண்டு கடினமான அந்த தேர்விற்கு தயாராக முடியவில்லை. ஐ.ஏ.எஸ் கனவை கை விட வேண்டி வந்தது.
சில கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றிய ரமா, பின் NITW (National Institute of Warangal) – இல் பணிக்கு சேர்ந்தார். தெலுங்கு மீடியத்தில் படித்ததால் ஆங்கிலத்திலேயே முழு வகுப்பெடுக்க முடியவில்லை. தளராமல் ஸ்போக்கன் ஆங்கிலத்தில் பயிற்சிகள் எடுத்து, தன்னுடைய வேலைக்கு தன்னை தகுதி படுத்தி கொண்டார்.
கூடவே பகுதி நேர படிப்பாக எம்.டெக்... இரண்டாவது குழந்தையும் பிறந்தது. குடும்பம், படிப்பு இரண்டிலும் தன் அயராத உழைப்பால் வெற்றி கண்டார்.
குடும்பம், படிப்பு, ஆராய்ச்சி தவிர சமூக சிந்தனையும் கொண்டவர். தெலுங்கானா மாநிலம் அமைய போராடிய அமைப்பொன்றில் துணை-தலைவராக இருக்கிறார். பெண்களுக்கு கல்வியும், சம உரிமையும் கிடைக்க தொடர்ந்து போராடுகிறார். பெண்களுக்கு இவையிரண்டையும் தராமல் நாடு முன்னேற முடியாது என்கிறார். சரிதானே? வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் துன்பங்களை கண்டு துவளாமல் போராடி வென்றவரை வாழ்த்துவோம்..!

No comments:

Post a Comment