Thursday 9 November 2017

டெல்லி காற்று மாசும் பொருளாதார சிக்கல்களும்


டெல்லி காற்று மாசை பார்க்கும் முன் கொஞ்சம் விவசாய காலங்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இந்தியாவில் விவசாயம் செய்யும் பருவத்தை இரண்டாக பிரிப்பர் – ஒன்று, கரிஃப், அதாவது தென்மேற்கு பருவழை காலத்தில் நெல் முதலிய தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பது. இரண்டாவது, ரபி. அதாவது பருவமழை முடிந்தபின் கோதுமை முதலிய பயிர்களை வளர்ப்பது. கோடைகாலத்திலும் கொஞ்சம் விவசாயம் நடக்கும்.
கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் நெல் பயிரிட முடியாது. பருவமழை ஆரம்பித்தவுடன் நெல் பயிரிடுவார்கள். பருவமழை முடிந்தவுடன் கோதுமை முதலிய ரபி பயிர்களுக்கு சென்று விடுவார்கள்.
இப்போது நெல் அறுத்து முடித்தவுடன் மிச்சம் இருக்கும் கதிர்களை அகற்ற வேண்டுமல்லவா...? அதற்கு நேரமும் இருப்பதில்லை... ஆட்களும் இருப்பதில்லை. அதனால் பஞ்சாப், ஹரியானா மாவட்டங்களில் வயல்களில் இருக்கும் கதிர்களை கொளுத்தி விடுகிறார்கள். பனி காலமான நவம்பர் மாதத்தில் கதிர்கள் கொளுத்தப்பட்டு உண்டாகும் அந்த மாசுதான் டெல்லியின் வில்லன்.

இப்படி கதிர்களை கொளுத்தக்கூடாது என்று சட்டமெல்லாம் உண்டு. ஆனால், இரண்டு மாநிலம் முழுவதும் வயல்களில் கதிர்கள் கொளுத்தப்பட்டால் எப்படி கண்டுபிடிப்பது, என்ன தண்டனை எத்தனை பேருக்கு தருவது? அதெல்லாம் வேலைக்காவதில்லை.
சரி, ஆட்களை கொண்டு ஏன் அந்த கதிர்களை சுத்தமாக அகற்றக்கூடாது? முன்பெல்லாம் விவசாயம் என்பது ஆட்களை சார்ந்திருந்தது. பஞ்சாப், ஹரியானா விவசாயத்திற்கு உ.பி. யிலிருந்து ஆட்கள் வருவார்கள். ஆனால், அதற்கும் சிக்கல்கள்.
ஒன்று, விவசாயம் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயம் முழுக்க இயந்திரங்களால் செய்யப்பட, கொஞ்சூண்டு கதிர் அறுக்க மட்டும் உ.பி.யிலிருந்து ஆட்கள் வருவார்களா? விவசாயத்தில் லாபம் குறைந்து விட்டது. லாபம் பார்க்க இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். அடுத்து, NRGEA திட்டம். சிலபல காரணங்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால் விவசாய கூலிகள் கிடைப்பதில்லை.
இப்படி கதிர்களை எரிப்பது மட்டுமா வில்லன்...? இல்லை... டெல்லியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளும்தான். என்னத்தான் மாசை கட்டுப்படுத்த சட்டம் இருந்தாலும் அதெல்லாம் வேலைக்காகுமா, என்ன?
அது தவிர பொதுவான தூசி, வாகனங்கள், இன்னபிற காரணங்கள். மொத்தத்தில் டெல்லியில் இருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியில்லாதது. அங்கீகரிக்கப்பட்ட நுண்ணியமாசை (PM 2.5) விட இரண்டு மடங்கு மாசு இருக்கிறது.
ஒரு பக்கம் கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க NRGEA திட்டம். அதனால், விவசாய கூலிகள் கிடைப்பதில்லை. NRGEA திட்டத்தை நிறுத்தினால், குறைந்தபட்சம் வருமானம் கூட இல்லாது Rural Demand அடி வாங்கும்.... பொருளாதாரம் தாங்காது.
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இயந்திர மயமாக்கம். அதனால் விவசாய கூலிகள் விவசாயத்தை சார்ந்து வாழ முடியாத சூழ்நிலை. ஆனால், முழுக்க முழுக்க இன்னும் இயந்திரமயமாகாத விவசாயம். விவசாய கூலிகள் கிடைக்காத நிலை.
இன்னொரு பக்கம் டெல்லியை சுற்றி தொழிற்சாலைகள். வேலைவாய்ப்பும், தொழில் முன்னேற்றமும் வேண்டுமல்லவா? ஊழல் துணை கொண்டு, சுற்றுசூழல் விதிகளை மதிக்காத தொழிலதிபர்கள். கார் இல்லாமல் வாழவே முடியாது என்று அடம்பிடிக்கும் மக்கள். (கார் இல்லாமல் டூவீலர் ஓட்டினால், வண்டி ஓட்டுபவருக்கு எத்தனை நுண்மாசு உள்ளே போகும். அதையும் பார்க்க வேண்டும்)
விவசாயிகளுக்கு, தொழிலதிபர்களுக்கு, சாதாரண டெல்லி மக்களுக்கு - அனைவர் கையிலும் ஏதோ காசு நிற்கிறது.... அவரவர் கையிலிருக்கும் காசுக்கேற்ப நுரையீரல் வைத்தியம் செய்து கொள்ளலாம்... மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே போகலாம்.... கடைசியில் இதுதான் நிகர லாபம்.

No comments:

Post a Comment