நேற்று வெளிவந்த நாச்சியார் பட டீஸர்… ஜோதிகா சொல்லும் ஒரு
வார்த்தையின் காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அப்படி சர்ச்சைக்கு
உள்ளானதாலேயே பிரபலமும் ஆகியிருக்கிறது.
மக்கள் தியேட்டர்களில் படம் பார்ப்பதை குறைத்து கொண்ட இந்த
காலத்தில், ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. அந்த கவன
ஈர்ப்புக்கு சுலபமான விளம்பரம்தான் – சர்ச்சை. அது படத்தின் டைரக்டர் கதாநாயகியை
அறைந்ததாக இருக்கலாம், அரசாங்கத்திற்கு எதிரான வசனமாக இருக்கலாம்… ஏதோ ஒன்று, ஒரு
பரபரப்பு… ஒரு சர்ச்சை… படத்தை விளம்பரப்படுத்த வேண்டும், அவ்வளவுதான் நோக்கம்.
இப்படிப்பட்ட சர்ச்சைகளை ஊதி பெரிதாக்குவதன் மூலம் நாம் அந்த
படத்திற்கு விளம்பரம்தான் தேடி தருகிறோம். ஒவ்வொரு படமும் இன்னும் மோசமான
சர்ச்சைகளை உருவாக்குவதற்கு நம்மையே அறியாமல் துணை போகிறோம் (ஒருவிதத்தில் இந்த
பதிவும் அதையேதான் செய்கிறது).
சரி, இதற்கு வழிதான் என்ன? ரொம்ப சிம்பிள்… சுயகட்டுப்பாடு.
மானமிகு சமுதாயம் இப்படிப்பட்ட படங்களை ஏன் புறக்கணிக்கக்கூடாது..? அதுமட்டுமல்ல,
பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளுக்கு கடுமையான சென்ஸார் தடை வரும் வரை எந்த
திரைப்படத்தையும் பார்க்க மாட்டோம் என்று ஏன் சொல்லக்கூடாது? அப்போது பாருங்கள்...
திரைத்துறையினரே மத்திய அரசிடம் சென்று சட்டதிருத்தம் செய்ய சொல்லி கெஞ்சி
நிற்பார்கள்.... அடுத்த முறை படமெடுக்கும்போது இன்னும் கவனமாக இருப்பார்கள்.
ஒத்துழையாமை இயக்கம் என்பது காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
எதிராக உபயோகப்படுத்தியது என்று வரலாற்றில் படித்திருப்போம்… அந்த ஆயுதம் இன்னும்
வலிமையாகத்தான் இருக்கிறது. Social media உதவியால் அந்த ஆயுதத்தை
உபயோகப்படுத்துவது இன்னும் சுலபம்தான். தேவையெல்லாம் மக்களின் மனக்கட்டுப்பாடும்
ஒற்றுமையும்தான்.
இன்னொரு விஷயம்… அந்த படத்தின் டீஸரில் ஒரு பெண்ணை போலீஸ்
சித்திரவதை செய்வது போல ஒரு கொடூரமான காட்சி வருகிறது. இதை குறித்து யாராவது
எதிர்த்தார்களா? போலீஸ் விசாரணையில் சித்திரவதை செய்வதை காட்டுவது யதார்த்தம்
என்றால், கெட்டவார்த்தை பேசுவதும் யதார்த்தம்தானே? இதற்கு மட்டும் பொங்குவது ஏனோ?
No comments:
Post a Comment