Monday 13 November 2017

ப்ரத்யுமன் தாகூர் – கொலை வழக்கு


ப்ரத்யுமன் தாகூர் என்னும் 7 வயது குழந்தை, செப் 8 அன்று அவன் படித்த பள்ளியிலேயே மர்மமான முறையில் இறக்கிறான். அதுவும் அவன் தந்தை அவனை பள்ளியில் விட்டு சென்ற 15 நிமிடங்களுக்குள்ளாக இறக்கிறான். அவன் படித்த பள்ளி ஒன்றும் சாதாரணமானது அல்ல.. ஹரியானா குருகிராமில் உள்ள ரையான் இண்டர்நேஷனல் பள்ளி... இந்தியாவின் 18 மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 186 கல்வி நிலையங்களை நடத்தும் குழுமம்.

ப்ரத்யுமன் தாகூர் பள்ளி கழிப்பறையில் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் இறந்தான். அந்த பள்ளி பேருந்தின் கண்டக்டர் அசோக் குமார் என்பவர் பாலியல் காரணங்களுக்காக அவனை கொன்றதாக கூறி போலீஸ் அவரை கைது செய்தது. பின்னர் விவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கின.
பள்ளி நிர்வாகம் ஆதாரங்களை அழிக்க கருதி கழிப்பறையை சுத்தம் செய்தது தெரியவந்தது. அசோக் குமார், தன்னை போலீஸ் சித்ரவதை செய்ததால், தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். பெற்றோர்கள் பள்ளிக்குள் புகுந்து நாற்காலிகளையும், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து போராடினர். போலீஸ் தடியடி நடத்த வேண்டி வந்தது.
நிலவரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஹரியானா அரசாங்கம் CBI விசாரணைக்கு செப் 23 அன்று உத்தரவிட்டது.
CBI தன் விசாரணையில் அசோக் குமார் கொலையாளி அல்ல என்றும், அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன்தான் கொலையாளி என்றும் தெரிவித்தது. தன் தந்தையின் முன்னிலையிலேயே அந்த மாணவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்றும் செய்திகள் வெளியாயின.
தன் வீட்டில் பெற்றோர்கள் எப்போதும் சண்டையிடுவார்கள் என்றும், தனக்கு பரீட்சை குறித்த பயம் இருந்ததால் பரீட்சையை தள்ளி போட ப்ரத்யுமனை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டான். ப்ரத்யுமனை கொன்ற கத்தியை கண்டக்டர் அசோக் குமாரின் பையிலே வைத்ததாகவும் ஒப்புக்கொண்டான். இதெல்லாம் CBI விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நான்கு போலீஸ்காரர்கள் ஆதாரங்களை கலைக்க முயன்றதாக CBI குற்றம் சாட்டியுள்ளது. இந்த விஷயத்தை தோண்ட தோண்ட பல மர்மங்கள் வெளியாகலாம். தோண்ட விடுவார்களா என்பது சந்தேகமே...! (ரையான் கல்வி குழுமம் இதற்கு முன்பும் பிரச்சனைகளில் மாட்டியிருக்கிறது. Google செய்து பார்க்கவும்)
இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தகவல்கள் வெளியாகிறது. இதுவரை வந்த விவரங்கள் அனைத்தும் உண்மை என்று கொள்ளவும் முடியாது. ஆனால் இதுவரை வந்துள்ள விவரங்களை குறித்து சிந்திப்போம்... வீட்டில் பெற்றோர்கள் சண்டையிடுவது பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது, அரசாங்கம் கல்வியை தனியார் மயமாக்கியது, கல்வி குழுமங்களின் பணபலம், அரசியல் செல்வாக்கு, பெரிய பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்னும் மக்களின் நம்பிக்கை, பரீட்சைகள் மேல் இருக்கும் பயம், குழந்தைகள் கொலை செய்யும் அளவிற்கு போவது, (உண்மையான கல்வி கிடைத்திருந்தால் குழந்தையை கொலை செய்ய மனம் வருமா?) அப்பாவிகளை குற்றவாளியாக்குவது, ஆதாரங்களை அழிப்பது... நம் சமூகத்தின் நோய்கள்தான் எத்தனை எத்தனை?

No comments:

Post a Comment