டெல்லி மெட்ரோ – நம் நாட்டிலேயே பெரிய மெட்ரோ. 2007-லிருந்து
இயங்குகிறது. முதல் மூன்று வருடங்கள் மட்டும் லாபம் காட்டியது. பின்னர்
2010-லிருந்து நஷ்டம்தான். (2015-16 – 470 கோடி நஷ்டம். 2016-17 – 348 கோடி நஷ்டம்
PBT). இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களில் மெட்ரோவை உபயோகிப்போர் எண்ணிக்கை 56%
உயர்ந்துள்ளது.
கடன் தலைக்கு மேலே நிற்கிறது. டெல்லி மெட்ரோ Phase II PPP (Public
Private Partnership) மாடலில் செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த
அளவிற்கு லாபம் வராது என்று கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்த பிரைவேட் பார்ட்னர்கள் ஒரு
வருட காலத்தில் ஓடிவிட்டனர். (அவர்கள் 15% லாபம் எதிர்பார்த்தனர்)
இப்படி நிதி நிலைமை மோசமாக இருப்பதாலும், செலவுகள்
அதிகரிப்பதாலும், கட்டணங்களை உயர்த்தவேண்டிய கட்டாயம். இந்த ஆண்டு இதுவரை மே
மாதத்தில் ஒரு முறையும், அக்டோபரில் ஒரு முறையும் சேர்த்து கட்டணங்களை (கிட்டதட்ட)
இரண்டு மடங்கு உயர்த்தியாகி விட்டது. ஒவ்வொரு முறை கட்டணத்தை அதிகரிக்கும் போதும்
தினசரி பயணிப்போர் எண்ணிக்கை குறைகிறது. குறிப்பாக அக்டோபரில் கட்டணம்
உயர்ந்தவுடன் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 3.2 லட்சம் (12% m-o-m)
குறைந்துவிட்டது.
ஆனால், மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு அக்டோபரிலும் பண்டிகையினால்
இப்படி பயணிப்போர் எண்ணிக்கை குறையும்.... போன ஆண்டும் 1.3 லட்சம் குறைந்தது
என்கிறது. ஆனால், 1.3 லட்சமும் 3.2 லட்சமும் வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.
மெட்ரோவுடைய மிக பெரிய சாதகமாக சொல்லப்படுவதே அது சுற்றுச்சூழலை
பாதுகாக்கும் என்பதுதான். ஆனால், இந்த 3 லட்சம் பேர் மெட்ரோவை விட்டு மீண்டும்
சாலை போக்குவரத்திற்கு சென்றால் மெட்ரோவின் பயன்தான் என்ன? அதாவது, கட்டணத்தை
குறைத்தால் மெட்ரோ நடத்த முடியாது... கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் வருவதில்லை.
நகரங்கள் வளரும் போது மக்களின் தினசரி போக்குவரத்து தூரம்
அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்று ஐநா சபையின் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
அப்படி போக்குவரத்து தூரம் அதிகரிக்கும் பிரச்சனையை மெட்ரோவால் தீர்க்கமுடியுமா?
மெட்ரோவால் தீர்க்கமுடியுமா என்றால் பொருளாதார ரீதியாகவும் தீர்க்க முடியுமா என்று
பார்க்கவேண்டும். மெட்ரோ திட்டங்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாது என்று
இந்தியாவின் மெட்ரோ மேன் என்று புகழப்படும் ஸ்ரீதரனே கூறுகிறார். லேட்டஸ்டாக வந்த
கொச்சி மெட்ரோவுக்கு கேரள அரசாங்கம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக
தருகிறது.
என்னை பொறுத்த வரை, அதிக செலவு வைக்கும் மெட்ரோ ரயிலோ புல்லட்
ரயிலோ நமது பிரச்சனைகளை தீர்க்காது. நகரங்களில் ஏராளமான பாலங்களும்
கட்டியாகிவிட்டது. நகரமயமாக்கலை குறைத்தால் போக்குவரத்து மட்டுமல்லாது மேலும் பல
பிரச்சனைகளை தீர்க்கலாம்/ உருவாகாது தடுக்கலாம். அரசாங்கங்கள் ஏதாவது இந்த
திசையில் யோசிக்குமா?
No comments:
Post a Comment