Thursday 30 November 2017

US Net Neutrality


Net Neutrality – நினைவிருக்கிறதா? போன பிப்ரவரி மாதத்தில் ட்ராய் (Trai) இந்தியாவில் இணைய சமநிலை இருக்கும் என்ற முக்கியமான முடிவெடுத்தது.
இப்போது இணைய சமநிலை என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்… நாம் பலவித வெப்சைட்டுகளை பார்க்கிறோம். நமக்கு இணைய கனெக்ஷனை வழங்கும் சர்வீஸ் ப்ரோவைடர்கள் அனைத்து வெப்சைட்டுகளையும் சீரான வேகத்திலே, பாரபட்சமின்றி தருகிறார்கள். இதுதான் இணைய சமநிலை. அப்படி சமநிலை இல்லையென்றால், சர்வீஸ் புரோவைடர்கள் பணம் வாங்கி கொண்டு, சில வெப்சைட்டுகளுக்கு மட்டும் வேகத்தை கூட்டலாம்… மற்றவர்களுக்கு வேகத்தை குறைக்கலாம்.
வேறு விதமாக சொன்னால் – உங்கள் கேபிள் டி.வி ஆபரேட்டர் சன்நியூஸ் மட்டுமோ, அல்லது ஜெயா நியூஸ் மட்டுமோ காட்டினால் உங்களுக்கு எவ்வளவு கடுப்பாக இருக்கும்…? உங்களால் உண்மையான செய்தியை அறியவே முடியாதல்லவா? அது போலத்தான்…. இணைய சமநிலை இல்லாவிட்டால் உங்களால் இணையத்தில் எதையுமே அறிந்து கொள்ளமுடியாத நிலை உண்டாகும். இப்போது விஷயத்தை பார்ப்போம்.

ட்ரம்ப் வென்றபின்னர் அமெரிக்க அரசு, முந்தைய அரசு எடுத்திருந்த முக்கியமான முடிவுகளை மாற்றி கொண்டிருக்கிறது. இதற்கு இணைய சமநிலையும் விலக்கில்லை.
இந்தியாவிற்கு முன்னதாகவே அமெரிக்கா 2015ல் இணைய சமநிலை இருக்கவேண்டும் என்று சொல்லியிருந்தது. ட்ரம்ப் வென்றபின்னர் இந்திய-அமெரிக்கரான அஜித் பாய் (Ajith Pai) FCC தலைவரானார். (Federal Communications Commission – நம் ஊர் Trai-ஐ விட பெரிய அமைப்பு). அஜித் பாய் எப்போதுமே இணைய சமநிலைக்கு எதிரானவர்.
இப்போது அவர் ‘இணைய சமநிலை கூடாது…. அது சந்தை போட்டியை வளர்க்கவில்லை… முதலீடுகளை ஈர்க்கவில்லை’ என்று காரணம் கூறி சமநிலையை நீக்க கோருகிறார். FCC இது குறித்து டிசம்பர் 14ம் தேதி முடிவெடுக்க போகிறது.
அமெரிக்க டெக்னாலஜி துறை இரண்டாக பிரிந்து கிடக்கிறது…. பலர் சமநிலைக்கு ஆதரவாக இருக்க, AT&T, Verizon போன்றவர்கள் இணைய சமநிலை வேண்டாம் என்கிறார்கள். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவில் Free Basics என்ற பெயரிலே இணைய சமநிலைக்கு எதிராக களமிறங்கிய பேஸ்புக், அமெரிக்காவிலே சமநிலை வேண்டும் என்கிறது…. இரட்டை நிலைப்பாடு. மார்க் பெரிய அரசியல்வாதியாக வருவார் என எதிர்பார்க்கலாம்.
உண்மையில் இணைய சமநிலைதான் போட்டியை வளர்க்க சமமான களம் அமைத்து தருகிறது… முதலீடுகளை ஈர்க்கிறது. இந்த காரணங்களுக்காகத்தான் இந்தியா சமநிலையை தேர்ந்தெடுத்தது. ஆனால் அஜித் பாய் சரியான காரணங்களை கூறி தவறான முடிவெடுக்க துடிக்கிறார்.
எப்போதுமே அமெரிக்கா ஒரு டிரெண்ட் செட்டர்… இப்போது அமெரிக்கா சமநிலைக்கு எதிரான முடிவெடுத்தால் பல நாடுகள் அமெரிக்காவை தொடரும். ஆக, FCC ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்கப்போகிறது. All eyes on FCC…

Wednesday 29 November 2017

BitCoin Touches 10000 USD


பிட் காயின் மதிப்பு முதன் முறையாக 10000 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் அதன் மதிப்பு 14 மடங்கு ஏறிவிட்டது. Futures & Derivatives சந்தைகளை நடத்தும் CME Group பிட் காயினுக்கு சந்தை ஒன்றை ஆரம்பிக்க போவதாக சொன்னதிலிருந்து அதன் விலை விஷம் போல ஏறி வருகிறது (50% ஏறிவிட்டது).
Traditional investors எனப்படும் மியுச்சுவல் பண்டுகள், ரிடயர்மெண்ட் பண்டுகள் போன்றவை இந்த பிட்காயினில் முதலீடு செய்வதில்லை. காரணம், மத்திய வங்கிகள் பிட்காயினை ஏற்று கொள்வதில்லை. அதோடு பிட்காயினில் ரிஸ்க் மிக அதிகம்.
உதாரணம் - 2014ல் உலகின் மிகப்பெரிய பிட்காயின் சந்தை MtGox என்னும் ஜப்பானிய சந்தை. அதன் பாதுகாப்பறையிலிருந்து (vault) 850000 பிட்காயின்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அந்த சந்தை திவாலானது. பணம் போட்டவர்கள் கதியும் அதோகதிதான்.
ஆனால், பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், யாரும் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதாக தெரியவில்லை. அடுத்த 18 மாதங்களில் அதன் மதிப்பு லட்சம் டாலர் வரை போகும் என்று நம்புகின்றனர். தற்போது விஷம் போல பிட்காயின் மதிப்பு ஏறுவதால் இது கூடிய சீக்கிரம் பெரியதாக சரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday 28 November 2017

Delhi Metro


டெல்லி மெட்ரோ – நம் நாட்டிலேயே பெரிய மெட்ரோ. 2007-லிருந்து இயங்குகிறது. முதல் மூன்று வருடங்கள் மட்டும் லாபம் காட்டியது. பின்னர் 2010-லிருந்து நஷ்டம்தான். (2015-16 – 470 கோடி நஷ்டம். 2016-17 – 348 கோடி நஷ்டம் PBT). இத்தனைக்கும் கடந்த ஐந்து வருடங்களில் மெட்ரோவை உபயோகிப்போர் எண்ணிக்கை 56% உயர்ந்துள்ளது.
கடன் தலைக்கு மேலே நிற்கிறது. டெல்லி மெட்ரோ Phase II PPP (Public Private Partnership) மாடலில் செய்ய முயற்சி செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் வராது என்று கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்த பிரைவேட் பார்ட்னர்கள் ஒரு வருட காலத்தில் ஓடிவிட்டனர். (அவர்கள் 15% லாபம் எதிர்பார்த்தனர்)
இப்படி நிதி நிலைமை மோசமாக இருப்பதாலும், செலவுகள் அதிகரிப்பதாலும், கட்டணங்களை உயர்த்தவேண்டிய கட்டாயம். இந்த ஆண்டு இதுவரை மே மாதத்தில் ஒரு முறையும், அக்டோபரில் ஒரு முறையும் சேர்த்து கட்டணங்களை (கிட்டதட்ட) இரண்டு மடங்கு உயர்த்தியாகி விட்டது. ஒவ்வொரு முறை கட்டணத்தை அதிகரிக்கும் போதும் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை குறைகிறது. குறிப்பாக அக்டோபரில் கட்டணம் உயர்ந்தவுடன் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை 3.2 லட்சம் (12% m-o-m) குறைந்துவிட்டது.
ஆனால், மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு அக்டோபரிலும் பண்டிகையினால் இப்படி பயணிப்போர் எண்ணிக்கை குறையும்.... போன ஆண்டும் 1.3 லட்சம் குறைந்தது என்கிறது. ஆனால், 1.3 லட்சமும் 3.2 லட்சமும் வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.
மெட்ரோவுடைய மிக பெரிய சாதகமாக சொல்லப்படுவதே அது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்பதுதான். ஆனால், இந்த 3 லட்சம் பேர் மெட்ரோவை விட்டு மீண்டும் சாலை போக்குவரத்திற்கு சென்றால் மெட்ரோவின் பயன்தான் என்ன? அதாவது, கட்டணத்தை குறைத்தால் மெட்ரோ நடத்த முடியாது... கட்டணத்தை அதிகரித்தால் மக்கள் வருவதில்லை.
நகரங்கள் வளரும் போது மக்களின் தினசரி போக்குவரத்து தூரம் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்று ஐநா சபையின் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. அப்படி போக்குவரத்து தூரம் அதிகரிக்கும் பிரச்சனையை மெட்ரோவால் தீர்க்கமுடியுமா? மெட்ரோவால் தீர்க்கமுடியுமா என்றால் பொருளாதார ரீதியாகவும் தீர்க்க முடியுமா என்று பார்க்கவேண்டும். மெட்ரோ திட்டங்கள் பொருளாதார ரீதியாக வெற்றி பெறாது என்று இந்தியாவின் மெட்ரோ மேன் என்று புகழப்படும் ஸ்ரீதரனே கூறுகிறார். லேட்டஸ்டாக வந்த கொச்சி மெட்ரோவுக்கு கேரள அரசாங்கம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக தருகிறது.

என்னை பொறுத்த வரை, அதிக செலவு வைக்கும் மெட்ரோ ரயிலோ புல்லட் ரயிலோ நமது பிரச்சனைகளை தீர்க்காது. நகரங்களில் ஏராளமான பாலங்களும் கட்டியாகிவிட்டது. நகரமயமாக்கலை குறைத்தால் போக்குவரத்து மட்டுமல்லாது மேலும் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்/ உருவாகாது தடுக்கலாம். அரசாங்கங்கள் ஏதாவது இந்த திசையில் யோசிக்குமா?

Tuesday 21 November 2017

ஆத்யா சிங் - Dengue Treatment


ஆத்யா சிங் என்னும் 7 வயது சிறுமி, டெங்கு முற்றிய நிலையில் குருகிராமில் இருக்கும் ஃபோர்ட்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

உறவினர்கள் ஆத்யாவிற்கு தரப்பட்ட சிகிச்சை குறித்து சந்தேகங்கள் எழுப்பியுள்ளனர். குழந்தைக்கு மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சொன்னபோதும், CT ஸ்கானோ, MRI – யோ எடுக்கவில்லை. குழந்தையின் மூளை 80% பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய மருத்துவர்கள், ரத்த மாற்று சிகிச்சை (Full Body Plasma Transplant) செய்யவேண்டும் என்றிருக்கிறார்கள்.
80% சதவீதம் மூளை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இப்படி ரத்தமாற்று சிகிச்சை செய்தால் பலனிருக்குமா என்று கேட்டதற்கு, பிற உறுப்புகளை காப்பாற்ற இந்த சிகிச்சை செய்யவேண்டும் என்றிருக்கின்றனர். மருத்துவமனை மேல் சந்தேகப்பட்ட உறவினர்கள் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முன்னர் குழந்தை இறந்துவிட்டது.
சிகிச்சை குறித்த சந்தேகங்கள் ஒருபுறம் இருக்க, இனிமேல் வருவது பணவிஷயம்….. 15 நாள் சிகிச்சைக்கு 16 லட்சம் ரூபாய் பில் வந்தது. விரிவான பில் அறிக்கையில் (Itemised bill) 15 நாளிலே 660 சிரிஞ்சுகளும், 2700 க்ளவுஸ்களும் உபயோகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக 44 சிரிஞ்சுகள்… 180 க்ளவுஸ்கள். சர்க்கரை அளவை அளக்கும் பட்டைகள் (சாதாரணமாக 10-12 ரூபாய்க்கு கிடைப்பது) ஒவ்வொரு பட்டையும் 200 ரூபாய்க்கு சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
உறவினர்கள் கன்ஸ்யுமர் கோர்ட்டை நாட போவதாக சொல்லியுள்ள நிலையில், மத்திய அரசு ஹரியானா அரசாங்கத்தை இது குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடியும்வரை மருத்துவமனை குறித்து ஏதும் சொல்ல இயலாது. ஆனால், கார்ப்பரேட் மருத்துவமனைகள் குறித்து அவ்வபோது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அரசாங்கங்கள், இந்த கார்ப்பரேட் மருத்துவமனைகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஏதாவது செய்யுமா?

Friday 17 November 2017

Julie Briskman - Follow up


சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நடுவிரல் காட்டி கடுப்பேற்றிய ஜூலி பிரிஸ்க்மேன் குறித்து பதிவிட்டிருந்தேன். பதிவின் லிங்க் இங்கே – https://goo.gl/tHSyBLஅந்த பதிவிற்கு updates இதோ...
ஜூலி வேலை பார்த்த நிறுவனம் அரசாங்க காண்ட்ராக்டுகளை(யும்) எடுக்கும் நிறுவனம். எதற்கு வம்பு என்று நினைத்தார்களோ என்னவோ, ஜூலியை வேலையை விட்டு தூக்கி விட்டனர்.
ஜூலிக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. வேலை இல்லாமல் ஜூலி கஷ்டப்பட கூடாது என்று நினைத்தவர்கள் ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து Gofundme – யில் பணம் திரட்ட ஆரம்பித்தனர். நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் டாலர்கள்... ஆனால், 10 நாட்களி்லேயே 116000 டாலர்கள் வசூலாகிவிட்டது. இன்னும் தொகை குவிகிறது. (நான் இந்த பதிவை டைப் செய்து முடிப்பதற்குள் நன்கொடை 2000 டாலர்கள் அதிகரித்து விட்டது).

இன்னொரு செய்தி... சமீபத்தில் ட்ரம்பின் ட்விட்டர் அக்கௌண்ட் சில நிமிடங்களுக்கு செயலிழந்து விட்டது. ட்விட்டரில் பணியாற்றிய ஒருவர் தன் கடைசி வேலைநாளில் இது போல ஒரு சேட்டை செய்து போய்விட்டார். உடனடியாக சுதாரித்து கொண்ட ட்விட்டர், ட்ரம்பின் அக்கௌண்டிற்கு மீண்டும் உயிர் கொடுத்து விட்டது. ஆனால், அந்த பணியாளருக்கு பலத்த பாராட்டுக்கள் குவிந்தன.
ட்ரம்புக்கு அவங்க ஊரில் மதிப்பு இப்படி இருக்கு...!

Thursday 16 November 2017

நாச்சியார்


நேற்று வெளிவந்த நாச்சியார் பட டீஸர்… ஜோதிகா சொல்லும் ஒரு வார்த்தையின் காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அப்படி சர்ச்சைக்கு உள்ளானதாலேயே பிரபலமும் ஆகியிருக்கிறது.
மக்கள் தியேட்டர்களில் படம் பார்ப்பதை குறைத்து கொண்ட இந்த காலத்தில், ஒவ்வொரு திரைப்படமும் மக்கள் கவனத்தை ஈர்க்க முயல்கிறது. அந்த கவன ஈர்ப்புக்கு சுலபமான விளம்பரம்தான் – சர்ச்சை. அது படத்தின் டைரக்டர் கதாநாயகியை அறைந்ததாக இருக்கலாம், அரசாங்கத்திற்கு எதிரான வசனமாக இருக்கலாம்… ஏதோ ஒன்று, ஒரு பரபரப்பு… ஒரு சர்ச்சை… படத்தை விளம்பரப்படுத்த வேண்டும், அவ்வளவுதான் நோக்கம்.
இப்படிப்பட்ட சர்ச்சைகளை ஊதி பெரிதாக்குவதன் மூலம் நாம் அந்த படத்திற்கு விளம்பரம்தான் தேடி தருகிறோம். ஒவ்வொரு படமும் இன்னும் மோசமான சர்ச்சைகளை உருவாக்குவதற்கு நம்மையே அறியாமல் துணை போகிறோம் (ஒருவிதத்தில் இந்த பதிவும் அதையேதான் செய்கிறது).
சரி, இதற்கு வழிதான் என்ன? ரொம்ப சிம்பிள்… சுயகட்டுப்பாடு. மானமிகு சமுதாயம் இப்படிப்பட்ட படங்களை ஏன் புறக்கணிக்கக்கூடாது..? அதுமட்டுமல்ல, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளுக்கு கடுமையான சென்ஸார் தடை வரும் வரை எந்த திரைப்படத்தையும் பார்க்க மாட்டோம் என்று ஏன் சொல்லக்கூடாது? அப்போது பாருங்கள்... திரைத்துறையினரே மத்திய அரசிடம் சென்று சட்டதிருத்தம் செய்ய சொல்லி கெஞ்சி நிற்பார்கள்.... அடுத்த முறை படமெடுக்கும்போது இன்னும் கவனமாக இருப்பார்கள்.
ஒத்துழையாமை இயக்கம் என்பது காந்தி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக உபயோகப்படுத்தியது என்று வரலாற்றில் படித்திருப்போம்… அந்த ஆயுதம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறது. Social media உதவியால் அந்த ஆயுதத்தை உபயோகப்படுத்துவது இன்னும் சுலபம்தான். தேவையெல்லாம் மக்களின் மனக்கட்டுப்பாடும் ஒற்றுமையும்தான்.
இன்னொரு விஷயம்… அந்த படத்தின் டீஸரில் ஒரு பெண்ணை போலீஸ் சித்திரவதை செய்வது போல ஒரு கொடூரமான காட்சி வருகிறது. இதை குறித்து யாராவது எதிர்த்தார்களா? போலீஸ் விசாரணையில் சித்திரவதை செய்வதை காட்டுவது யதார்த்தம் என்றால், கெட்டவார்த்தை பேசுவதும் யதார்த்தம்தானே? இதற்கு மட்டும் பொங்குவது ஏனோ?

Monday 13 November 2017

ப்ரத்யுமன் தாகூர் – கொலை வழக்கு


ப்ரத்யுமன் தாகூர் என்னும் 7 வயது குழந்தை, செப் 8 அன்று அவன் படித்த பள்ளியிலேயே மர்மமான முறையில் இறக்கிறான். அதுவும் அவன் தந்தை அவனை பள்ளியில் விட்டு சென்ற 15 நிமிடங்களுக்குள்ளாக இறக்கிறான். அவன் படித்த பள்ளி ஒன்றும் சாதாரணமானது அல்ல.. ஹரியானா குருகிராமில் உள்ள ரையான் இண்டர்நேஷனல் பள்ளி... இந்தியாவின் 18 மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் 186 கல்வி நிலையங்களை நடத்தும் குழுமம்.

ப்ரத்யுமன் தாகூர் பள்ளி கழிப்பறையில் கழுத்து வெட்டுப்பட்ட நிலையில் இறந்தான். அந்த பள்ளி பேருந்தின் கண்டக்டர் அசோக் குமார் என்பவர் பாலியல் காரணங்களுக்காக அவனை கொன்றதாக கூறி போலீஸ் அவரை கைது செய்தது. பின்னர் விவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர தொடங்கின.
பள்ளி நிர்வாகம் ஆதாரங்களை அழிக்க கருதி கழிப்பறையை சுத்தம் செய்தது தெரியவந்தது. அசோக் குமார், தன்னை போலீஸ் சித்ரவதை செய்ததால், தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். பெற்றோர்கள் பள்ளிக்குள் புகுந்து நாற்காலிகளையும், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து போராடினர். போலீஸ் தடியடி நடத்த வேண்டி வந்தது.
நிலவரம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஹரியானா அரசாங்கம் CBI விசாரணைக்கு செப் 23 அன்று உத்தரவிட்டது.
CBI தன் விசாரணையில் அசோக் குமார் கொலையாளி அல்ல என்றும், அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன்தான் கொலையாளி என்றும் தெரிவித்தது. தன் தந்தையின் முன்னிலையிலேயே அந்த மாணவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான் என்றும் செய்திகள் வெளியாயின.
தன் வீட்டில் பெற்றோர்கள் எப்போதும் சண்டையிடுவார்கள் என்றும், தனக்கு பரீட்சை குறித்த பயம் இருந்ததால் பரீட்சையை தள்ளி போட ப்ரத்யுமனை கொன்றதாகவும் ஒப்புக்கொண்டான். ப்ரத்யுமனை கொன்ற கத்தியை கண்டக்டர் அசோக் குமாரின் பையிலே வைத்ததாகவும் ஒப்புக்கொண்டான். இதெல்லாம் CBI விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நான்கு போலீஸ்காரர்கள் ஆதாரங்களை கலைக்க முயன்றதாக CBI குற்றம் சாட்டியுள்ளது. இந்த விஷயத்தை தோண்ட தோண்ட பல மர்மங்கள் வெளியாகலாம். தோண்ட விடுவார்களா என்பது சந்தேகமே...! (ரையான் கல்வி குழுமம் இதற்கு முன்பும் பிரச்சனைகளில் மாட்டியிருக்கிறது. Google செய்து பார்க்கவும்)
இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தகவல்கள் வெளியாகிறது. இதுவரை வந்த விவரங்கள் அனைத்தும் உண்மை என்று கொள்ளவும் முடியாது. ஆனால் இதுவரை வந்துள்ள விவரங்களை குறித்து சிந்திப்போம்... வீட்டில் பெற்றோர்கள் சண்டையிடுவது பிள்ளைகளை எப்படி பாதிக்கிறது, அரசாங்கம் கல்வியை தனியார் மயமாக்கியது, கல்வி குழுமங்களின் பணபலம், அரசியல் செல்வாக்கு, பெரிய பள்ளிகளில்தான் தரமான கல்வி கிடைக்கும் என்னும் மக்களின் நம்பிக்கை, பரீட்சைகள் மேல் இருக்கும் பயம், குழந்தைகள் கொலை செய்யும் அளவிற்கு போவது, (உண்மையான கல்வி கிடைத்திருந்தால் குழந்தையை கொலை செய்ய மனம் வருமா?) அப்பாவிகளை குற்றவாளியாக்குவது, ஆதாரங்களை அழிப்பது... நம் சமூகத்தின் நோய்கள்தான் எத்தனை எத்தனை?

Saturday 11 November 2017

ஒரு சாதனை பெண்ணை குறித்த பதிவு


ஈ.சி.ஜி – நம்மில் அனைவருக்கும் தெரியும். நமது இதயத்தின் மின் அதிர்வை ஒரு பேப்பரில் படமாக வரையும். தேர்ந்த மருத்துவர் (Specialist) ஒருவர் இந்த ஈ.சி.ஜி கொண்டு இதயத்தில் என்ன பாதிப்பு, என்ன சிகிச்சை அளிக்கலாம் என்று முடிவு செய்வார்.
இந்தியாவின் கிராமங்களில் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் இருக்கமாட்டார். சாதாரண பொதுநல மருத்துவர் இருந்தாலே சந்தோஷம். அரசாங்கமோ, நல்லிதயம் படைத்தவர்களோ ஒரு கிராம மருத்துவமனைக்கு ஈ.சி.ஜி மெஷின் வாங்கி தரலாம். ஆனால் என்ன விதமான இதயநோய் (diagnosis) என்று எப்படி கண்டறிவது? சிகிச்சை?
இங்குதான் ரமா என்னும் பயோமெடிக்கல் இன்ஜினியர் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதாவது, பல ஈ.சி.ஜி ரிப்போர்ட்டுகளை மென்பொருளில் புகுத்தி, மாடல் ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இந்த மாடலில் ஒரு நோயாளியின் ஈ.சி.ஜி ரிப்போர்ட்டை கொடுத்தால் அவருக்கு என்ன பாதிப்பு இருக்கிறது என்று சொல்லி விடும். அந்த மருத்துவரே சிகிச்சை அளிக்கலாம், அல்லது அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனைக்காவது அனுப்பலாம். டெலிமெடிசினும் சாத்தியம்தான்.
இந்த மென்பொருள் இன்னும் முழுமையாக முடியவில்லையெனினும் நல்ல முன்னேற்றம் உள்ளது. தன்னுடைய மென்பொருளையும், ஈ.சி.ஜி கருவியையும் ஒன்றாக இணைத்துவிட்டால் இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார். ரமாவின் இந்த ஐடியாவும், முயற்சியும் பாராட்டத்தக்கதே.

சரி, இப்போது ரமா தன்னுடைய வாழ்க்கையில் போராடி கடந்து வந்த பாதையை காண்போமா?
ரமாவிற்கு போலியோ உண்டு... சிறு வயதில் அவரால் நிற்க கூட முடியாது. மூன்று சக்கர சைக்கிளில்தான் பள்ளிக்கூடத்திற்கு செல்வார். ஆனால், தன் முயற்சியால் எழுந்து நடந்தார். சைக்கிள் பழகினார், ஸ்கூட்டர் ஓட்டினார், இப்போது காரையும் ஓட்டுகிறார்.
ரமாவிற்கு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் பெண்கள் இன்ஜினியரிங் படிக்க கூடாது என்று ஒரு உறவினர் கூறியதால், பயாலஜி குரூப் எடுத்து படித்துள்ளார். ஒரு மார்க் பயாலஜியில் குறைந்ததால் டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.
வேறு வழியில்லாமல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமா முடித்தார். 3 ஆண்டுகள் கழித்தே, பி.டெக் (பகுதி நேரமாக) சேர்ந்தார். முதலாம் ஆண்டு படிக்கும் போதே கல்யாணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. வகுப்பிற்கு ஒழுங்காக வருகை தரமுடியவில்லை. எப்படியோ குறைந்த மதிப்பெண்களில் பாஸாகி விட்டார்.
பின்னர் ஐ.ஏ.எஸ் எழுத முயன்றாலும் குழந்தையை வைத்து கொண்டு கடினமான அந்த தேர்விற்கு தயாராக முடியவில்லை. ஐ.ஏ.எஸ் கனவை கை விட வேண்டி வந்தது.
சில கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றிய ரமா, பின் NITW (National Institute of Warangal) – இல் பணிக்கு சேர்ந்தார். தெலுங்கு மீடியத்தில் படித்ததால் ஆங்கிலத்திலேயே முழு வகுப்பெடுக்க முடியவில்லை. தளராமல் ஸ்போக்கன் ஆங்கிலத்தில் பயிற்சிகள் எடுத்து, தன்னுடைய வேலைக்கு தன்னை தகுதி படுத்தி கொண்டார்.
கூடவே பகுதி நேர படிப்பாக எம்.டெக்... இரண்டாவது குழந்தையும் பிறந்தது. குடும்பம், படிப்பு இரண்டிலும் தன் அயராத உழைப்பால் வெற்றி கண்டார்.
குடும்பம், படிப்பு, ஆராய்ச்சி தவிர சமூக சிந்தனையும் கொண்டவர். தெலுங்கானா மாநிலம் அமைய போராடிய அமைப்பொன்றில் துணை-தலைவராக இருக்கிறார். பெண்களுக்கு கல்வியும், சம உரிமையும் கிடைக்க தொடர்ந்து போராடுகிறார். பெண்களுக்கு இவையிரண்டையும் தராமல் நாடு முன்னேற முடியாது என்கிறார். சரிதானே? வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் துன்பங்களை கண்டு துவளாமல் போராடி வென்றவரை வாழ்த்துவோம்..!

Thursday 9 November 2017

டெல்லி காற்று மாசும் பொருளாதார சிக்கல்களும்


டெல்லி காற்று மாசை பார்க்கும் முன் கொஞ்சம் விவசாய காலங்களை புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இந்தியாவில் விவசாயம் செய்யும் பருவத்தை இரண்டாக பிரிப்பர் – ஒன்று, கரிஃப், அதாவது தென்மேற்கு பருவழை காலத்தில் நெல் முதலிய தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பது. இரண்டாவது, ரபி. அதாவது பருவமழை முடிந்தபின் கோதுமை முதலிய பயிர்களை வளர்ப்பது. கோடைகாலத்திலும் கொஞ்சம் விவசாயம் நடக்கும்.
கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் நெல் பயிரிட முடியாது. பருவமழை ஆரம்பித்தவுடன் நெல் பயிரிடுவார்கள். பருவமழை முடிந்தவுடன் கோதுமை முதலிய ரபி பயிர்களுக்கு சென்று விடுவார்கள்.
இப்போது நெல் அறுத்து முடித்தவுடன் மிச்சம் இருக்கும் கதிர்களை அகற்ற வேண்டுமல்லவா...? அதற்கு நேரமும் இருப்பதில்லை... ஆட்களும் இருப்பதில்லை. அதனால் பஞ்சாப், ஹரியானா மாவட்டங்களில் வயல்களில் இருக்கும் கதிர்களை கொளுத்தி விடுகிறார்கள். பனி காலமான நவம்பர் மாதத்தில் கதிர்கள் கொளுத்தப்பட்டு உண்டாகும் அந்த மாசுதான் டெல்லியின் வில்லன்.

இப்படி கதிர்களை கொளுத்தக்கூடாது என்று சட்டமெல்லாம் உண்டு. ஆனால், இரண்டு மாநிலம் முழுவதும் வயல்களில் கதிர்கள் கொளுத்தப்பட்டால் எப்படி கண்டுபிடிப்பது, என்ன தண்டனை எத்தனை பேருக்கு தருவது? அதெல்லாம் வேலைக்காவதில்லை.
சரி, ஆட்களை கொண்டு ஏன் அந்த கதிர்களை சுத்தமாக அகற்றக்கூடாது? முன்பெல்லாம் விவசாயம் என்பது ஆட்களை சார்ந்திருந்தது. பஞ்சாப், ஹரியானா விவசாயத்திற்கு உ.பி. யிலிருந்து ஆட்கள் வருவார்கள். ஆனால், அதற்கும் சிக்கல்கள்.
ஒன்று, விவசாயம் இயந்திரமயமாகிவிட்டது. விவசாயம் முழுக்க இயந்திரங்களால் செய்யப்பட, கொஞ்சூண்டு கதிர் அறுக்க மட்டும் உ.பி.யிலிருந்து ஆட்கள் வருவார்களா? விவசாயத்தில் லாபம் குறைந்து விட்டது. லாபம் பார்க்க இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். அடுத்து, NRGEA திட்டம். சிலபல காரணங்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால் விவசாய கூலிகள் கிடைப்பதில்லை.
இப்படி கதிர்களை எரிப்பது மட்டுமா வில்லன்...? இல்லை... டெல்லியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளும்தான். என்னத்தான் மாசை கட்டுப்படுத்த சட்டம் இருந்தாலும் அதெல்லாம் வேலைக்காகுமா, என்ன?
அது தவிர பொதுவான தூசி, வாகனங்கள், இன்னபிற காரணங்கள். மொத்தத்தில் டெல்லியில் இருக்கும் காற்று மனிதர்கள் சுவாசிக்க தகுதியில்லாதது. அங்கீகரிக்கப்பட்ட நுண்ணியமாசை (PM 2.5) விட இரண்டு மடங்கு மாசு இருக்கிறது.
ஒரு பக்கம் கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க NRGEA திட்டம். அதனால், விவசாய கூலிகள் கிடைப்பதில்லை. NRGEA திட்டத்தை நிறுத்தினால், குறைந்தபட்சம் வருமானம் கூட இல்லாது Rural Demand அடி வாங்கும்.... பொருளாதாரம் தாங்காது.
விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க இயந்திர மயமாக்கம். அதனால் விவசாய கூலிகள் விவசாயத்தை சார்ந்து வாழ முடியாத சூழ்நிலை. ஆனால், முழுக்க முழுக்க இன்னும் இயந்திரமயமாகாத விவசாயம். விவசாய கூலிகள் கிடைக்காத நிலை.
இன்னொரு பக்கம் டெல்லியை சுற்றி தொழிற்சாலைகள். வேலைவாய்ப்பும், தொழில் முன்னேற்றமும் வேண்டுமல்லவா? ஊழல் துணை கொண்டு, சுற்றுசூழல் விதிகளை மதிக்காத தொழிலதிபர்கள். கார் இல்லாமல் வாழவே முடியாது என்று அடம்பிடிக்கும் மக்கள். (கார் இல்லாமல் டூவீலர் ஓட்டினால், வண்டி ஓட்டுபவருக்கு எத்தனை நுண்மாசு உள்ளே போகும். அதையும் பார்க்க வேண்டும்)
விவசாயிகளுக்கு, தொழிலதிபர்களுக்கு, சாதாரண டெல்லி மக்களுக்கு - அனைவர் கையிலும் ஏதோ காசு நிற்கிறது.... அவரவர் கையிலிருக்கும் காசுக்கேற்ப நுரையீரல் வைத்தியம் செய்து கொள்ளலாம்... மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே போகலாம்.... கடைசியில் இதுதான் நிகர லாபம்.

Tuesday 7 November 2017

Julie Briskman


ஒரு பத்து நாட்கள் முன்னாடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அவர்கள் கோல்ஃப் விளையாட சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதியிலே இருக்கும் ஜூலி என்னும் பெண்மணியும் அதே சாலையிலே சைக்கிளில் சென்றிருக்கிறார்.
ட்ரம்ப் ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்தவர். அம்மணியோ டெமோக்ரட் கட்சி. ட்ரம்பை பார்த்ததும் ரத்தம் கொதிப்பேறியவர் தன்னுடைய நடுவிரலை தூக்கி காட்டி விட்டார். இதை போட்டோவும் பிடித்து விட்டனர்.

ஆனால் போட்டோவில் நடுவிரலை தூக்குபவர் யாரென்று அடையாளம் தெரியாது. முதுகு மட்டுமே தெரிந்தது. ஆனால் யாரோ ஒரு பெண்மணி ஜனாதிபதிக்கு எதிராக விரல் உயர்த்தினார் என்று புகைப்படமும் வைரல் ஆகிவிட்டது.
வைரல் ஆன புகைப்படத்தை பார்த்த நம் அம்மணி குஷியாகி தானே அந்த செய்கையை செய்தது என்று பப்ளிக்காக கூறி, அந்த புகைப்படத்தை தனது புரொஃபைல் படமாக பேஸ்புக், ட்விட்டரில் வைத்து கொண்டார்.
இப்போது பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டார் என்று கூறி அவரது நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால்....
1. நம் ஊரில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் வாகனங்களுக்கு அருகே சாதாரண மனிதன் சைக்கிள் ஓட்டி செல்ல முடியுமா? இத்தனைக்கும் அமெரிக்கர்களுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் உண்டு.
2. அப்படிப்பட்ட ஒரு பிரமுகருக்கு தைரியமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய சாதாரண குடிமகனுக்கு தைரியம் வருமா? (ஆபாசமாக எதிர்ப்பு காட்ட சொல்லவில்லை... நாகரீகமாக எதிர்ப்பை காட்ட முடியுமா?)
3. முதுகு மட்டுமே தெரியும் புகைப்படத்தை, நான்தான் இதை செய்தேன் என்று பெருமையடித்து கொண்டு புரொஃபைல் படமாக வைக்க இயலுமா?
அவர்கள் ஊரிலே கோர்ட்டுகள், சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை.... அதை நம் ஊரிலே கொண்டு வர வேண்டும்.

Sunday 5 November 2017

Shell Companies


சமீபத்தில் கிட்டத்தட்ட 224000 ஷெல் கம்பெனிகள் அரசால் நீக்கம் செய்யப்பட்டன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அந்த கம்பெனிகளின் டைரக்டர்கள் இனி எந்த கம்பெனியிலும் டைரக்டராக செயல்பட கூடாது என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
அது என்ன ஷெல் கம்பெனி என்றால் - ஒரு பிஸினஸும் செய்யாது, சில பொருளாதார குற்றங்களை செய்யவும், வரி ஏய்ப்பு செய்யவும் உருவாக்கப்பட்ட டுபாக்கூர் கம்பெனிகள்.
இப்போது விஷயம் என்னவென்றால் அந்த டுபாக்கூர் கம்பெனிகளில் 35000 கம்பெனிகள், பணமதிப்பிழப்பிற்கு முன்னாலும் பின்னாலும் கிட்டத்தட்ட 17000 கோடி ரூபாயை வங்கியில் போட்டு எடுத்துள்ளன. அதிலும் ஒரு கம்பெனி மட்டும் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாயை போட்டு எடுத்துள்ளது.
பணமதிப்பிழப்பினால் ஒரு நன்மையும் இல்லை என்ற புலம்பலை நிறுத்த, ஒரு பத்து ஃபிராடு பசங்களையாவது பிடித்து உள்ளே போடவும்.

Saturday 4 November 2017

Chennai Floods - Problem and Solution


சென்னைக்கு இந்த மழைக்காலத்தில் வெள்ளம் வருவதும், ஏரிகள், கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறுவதும் இயல்பாகி விட்டது.
ஆக்கிரமிப்புகளை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று சட்டத்திற்கு புறம்பாக, ஒரு அனுமதியும் இன்றி கட்டிடம் கட்டியது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது.
இன்னொரு வகையான ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்பட்டது. அதாவது, உரிய அரசு அமைப்புகளிடம் உரிமம் வாங்கி, நிலத்தை மேம்படுத்தி, வீடுகள், நகர்கள் அமைத்தது. இவை ஏரி நிலங்களிலும் உள்ளது.
இவற்றை வாங்கியவர்கள் நேர்மையான (Bonafide) உரிமையாளர்கள். இவர்களிடம் வாங்கியவர்களும் நேர்மையானவர்களே. அப்படிப்பட்டவர்கள் வீடுகளை எப்படி அகற்ற முடியும்? விவகாரம் நீதிமன்றங்களில்தான் மாட்டி கொள்ளும்.
ஏரிகளை மீட்க வேண்டுமென்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இந்த உண்மையான, நேர்மையான (Genuine, bonafide) உரிமையாளர்கள் அதற்காக நஷ்டப்படுவது நியாயமாகாது. அவர்களில் எத்தனை பேர் வீட்டு கடன் வாங்கியவர்களோ? அவர்கள் கட்டிய வட்டித்தொகையும் நஷ்டமாகும். அத்தனை மக்களும் வேறு வசிப்பிடங்களுக்கு குடி பெயர வேண்டும்... பெரியவர்களுக்கான அலுவலகமாவது அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்... ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிகள்?
கண்டிப்பாக இவர்களுக்கு அரசாங்கம் தகுந்த நஷ்டஈடு தந்தே ஆகவேண்டும். எத்தனை பேருக்கு எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பது? அதற்கான நிதி எங்கிருந்து வரும்? ஊழல் செய்தவர்களிடம் இருந்து மீட்டு கொடுப்போம் என்பதெல்லாம் வெறும் வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.... வேலைக்கு ஆகாது. முதலில் ஊழலை நிரூபிக்க வேண்டும். அதுவே பிரம்ம பிரயத்தனம். அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதெல்லாம்... வியாழன் கிரகத்திற்கே ராக்கெட் விட்டுவிடலாம்.
மூன்றாவது வகை ஆக்கிரமிப்பு ரொம்ப ஸ்பெஷல்... அதாவது, அரசாங்கமே விதிகளை மீறி/ மாற்றி, வளர்ச்சி திட்டம் என்னும் பெயரில் ஏரி, கால்வாய், சதுப்பு நிலங்களை எடுத்து கொள்வது. உதா. பள்ளிக்கரணை, எண்ணூர், பறக்கும் ரயிலுக்காக பக்கிம்காம் கால்வாய் முதலியன. இப்போது ஏரிகளுக்காக, கால்வாய்களுக்காக மக்களுடைய வீடுகளை அகற்றினால், இந்த ‘வளர்ச்சி’ திட்டங்களையும் அகற்ற வேண்டுமல்லவா? அதுதானே நியாயம்?
ஆக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்று பேசுவது எல்லாம் பேச்சோடு நின்று விடும். பிரச்சனைக்கு இது தீர்வாகாது என்பதே நிதர்சனம்.
அப்போது சென்னை வெள்ளத்திற்கு என்னத்தான் தீர்வு...?
ஒரு நோயை சிகிச்சை செய்யும் போது நோய் அதற்கு மேலும் முற்றாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுதான் முதல்படி. அதே போல, மேன்மேலும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதற்கு தேவையெல்லாம், அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத தனி அதிகாரம் (Autonomous) பெற்ற அமைப்பும் அதற்கு ஒரு நேர்மையான தலைவரும். இதற்கு மேல் விளக்கங்கள் தேவையில்லை.
இப்போது இருக்கும் ஏரிகள், கால்வாய்களை அளவெடுத்து வேலி அமைக்க வேண்டும். அட்லீஸ்ட் இப்போது இருக்கும் நீர் பிடிப்பு பகுதியாவது மிஞ்சும். சில இடங்களில் இந்த பணி நடந்துள்ளது.
இரண்டு/ மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஏரி, கால்வாய்களை தூர் வார வேண்டும். ஏரிக்கரைகளில் மரம் வளர்ப்பதும் நல்லது. ஏரிகளை குட்டி மகிழ்வூட்டும் இடமாக (entertainment center) மாற்றினால் மக்கள் நடமாட்டமும் இருக்கும்... ஆக்கிரமிப்புகள் தவிர்க்கப்படும். அரசுக்கு கொஞ்சம் வருமானமும் வரும்.
முக்கியமாக மரங்கள் பெருகினால், இப்படி அடித்து கொட்டும் மழை இல்லாது, மழை மேகங்கள் சீராக பொழியுமாம். சென்னையில் வார்தா புயலை அடுத்து லட்சம் மரங்கள் விழுந்தன. (http://www.thehindu.com/…/1-lakh-trees-…/article16871807.ece) எத்தனை மரங்கள் நடப்பட்டன என்று தெரியவில்லை. ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு மரங்கள் வெட்டப்பட்ட செய்திதான் கண்ணில் பட்டது. சாலை விரிவாக்கத்தை விட்டு தள்ளுங்கள்... எவ்வளவுதான் சாலையை விரிவாக்கினாலும் சில வருடங்களில் போதாமல்தான் போகும். அசோகர் சாலை ஓரங்களில் மரங்களை நட்டது ஆறாம் கிளாசுக்கான விஷயம் அல்ல... ஆயுசுக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விஷயம்.
அடுத்தது, மழைநீர் வடிகால் கால்வாய்கள். சென்னை முழுவதும் 1900 கி.மீ நீளத்திற்கு இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெயரளவிற்கு, திட்ட அளவிற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் திட்டத்தில் பெரிய ஓட்டை இருப்பதாக தோன்றுகிறது. அதாவது, சென்னையின் புவியியல் அமைப்பை கவனிக்காமல், மேடான இடம் தாழ்வான இடம் என்று பிரிக்காமல், வெறும் சாலை அகலத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இந்த கால்வாய் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கால்வாய் முழுவதையும் தரமான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். (http://www.dinamalar.com/news_detail.asp?id=1889013)
மேடான இடங்களில் எல்லாம் நீரேற்று நிலையங்கள் அமைத்து கால்வாய் நீரை அடுத்த தாழ்வான பகுதிக்கு வெளியேற்ற வேண்டும். கால்வாயின் கீழே கான்கிரீட் இல்லாமல் மண்ணாக இருந்தால் தண்ணீர் ஓரளவிற்காவது பூமிக்குள் செல்லும். அருகில் இருக்கும் ஏரிகளுக்கு, குளங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லப்படவேண்டும்... நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாக ஏற்றிவிடும். இதை முறையாக எல்லா இடங்களிலும் செய்யவேண்டும்.
ஒவ்வொரு முறை சாலை போட வரும்போதும் பழைய சாலையின் மீதே புதிதாக சாலை அமைக்கக்கூடாது. இதனால், வீடுகள் பள்ளத்திற்குள் சென்று இல்லாத வெள்ளத்தை உண்டாக்குகிறது. கான்கிரீட் ரோடு போட்டால் தயவு செய்து மரங்களை சுற்றி சிமெண்ட் ஊற்றாதீர்கள். மரங்கள் வலிமை இழந்து விடும். (https://timesofindia.indiatimes.com/…/articles…/55991710.cms)
முக்கியமானது, பிளாஸ்டிக் குப்பைகள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தடை ரொம்ப காலமாக சொல்லி கொண்டிருப்பதுதான். வருடம் முழுவதும் நகரை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் வைத்திருப்பதற்கு மழைகாலத்தில் கிடைக்கும் தண்டனைதான் இது. முக்கியமாக பொதுமக்கள் சாலைகளில் குப்பை போடாமல் இருத்தல் அவசியம். பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி எந்த திட்டமும் வெற்றி பெறாது.
கடைசியாக ஆக்கிரமிப்புகள் - சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை எந்த பிரச்சனையுமின்றி தாராளமாக அகற்றி விடலாம். தேவையெல்லாம் அரசின் உறுதிதான் (Political will). அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை முழுவதுமாக அகற்ற முடியாது. முக்கியமான இடங்களில் மட்டும் அகற்றிவிட்டு, உரிய நஷ்டஈடு தரவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீரை (மெட்ரோ ரயில் போன்று tunnel அமைத்து) சீராக கீழே எடுத்து சென்றுவிட்டு பின்னர் மேலேற்ற முடியுமா, அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும்.
அரசாங்கம்தான், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும். அரசாங்கமே சுற்றுசூழலை பாழ் செய்ய கூடாது. பொருளாதார வளர்ச்சி என்பது சூழலை சிதைத்து வரக்கூடாது. இயற்கையோடு இயைந்த வளர்ச்சியே அழகு. ஏற்கனவே அமைந்தவற்றை சரி செய்ய முடியாவிட்டால் தண்ணீர் வெளியேற மாற்று பாதையாவது அமைத்தல் வேண்டும்.
வளர்ச்சி என்னும் பெயரிலே புதியதாக எதையும் சென்னைக்கு கொண்டு வராதீர்கள். கொஞ்சம் திருச்சி, திருநெல்வேலி பக்கம் செல்லுங்கள். அவையும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன.
மேற்சொன்ன யோசனைகளை நிறைவேற்ற சில வருடங்களே ஆகும். இதை செய்தாலே பிரச்சனையை பல மடங்கு சமாளித்து விடலாம். தேவையெல்லாம் அரசின் அக்கறையும் கவனமும் உறுதியும்தான். இதற்கெல்லாம் செலவு ஆகுமே என்று பார்க்காதீர்கள்... ஒவ்வொரு வெள்ளத்திலும் நாம் இழப்பது ஆயிரக்கணக்கான கோடிகளை..! (https://en.wikipedia.org/wiki/2015_South_Indian_floods)

Friday 3 November 2017

Obese and Nutrition Deficiency


உடல் பருமனுள்ளவர்கள் (obese) அதிகமாக இருக்கும் பட்டியலில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாவிற்கு மூன்றாவது இடம்.

உலகிலே இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் இந்தியாவில்தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 40% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாம்.

ஒரு பக்கம் உடற்பருமன்…. ஒரு பக்கம் ஊட்டச்சத்து குறைபாடு… இந்தியாவில் வினோதங்களுக்கு பஞ்சமே இல்லை…!

Wednesday 1 November 2017

மூன்று ஓட்டைகள்


மக்கள் எல்லோரும் வரி கட்டவேண்டும், மானியங்களை விட்டு விட வேண்டும் என்று அரசாங்கம் சொல்வதும், அதற்கும் மக்களிள் சிலர் ‘ஆமாம், சாமி’ போடுவதும் தொடர் கதையாகி கொண்டு வருகிறது.
எவ்வளவு வரி கட்டினாலும், எவ்வளவு வருமானம் வந்தாலும் அரசாங்கத்துக்கு போதவில்லையே என்றால் சிஸ்டத்தில் ஓட்டைகள் உள்ளன என்று பொருள்.
ஓட்டை நம்பர் ஒன்று - அரசாங்க திட்டங்களில் நடக்கும் ஊழல். ஓட்டை நம்பர் இரண்டு - கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும், கடன்களும், கடன் தள்ளுபடிகளும். ஓட்டை நம்பர் மூன்று - அரசு திட்டங்களை திறன்பட செயல்படுத்தாமை.
இந்த மூன்று ஓட்டைகளையும் அடைக்காமல் எத்தனை வரி விதித்தாலும், அத்தனை குடிமக்களும் வரி கட்டினாலும், மானியங்களை எல்லாம் விட்டு கொடுத்தாலும் பிரயோஜனமில்லை.