Tuesday, 8 May 2018

கர்நாடகா சட்டசபை தேர்தல் - அருமையான தேர்தல்


கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 2560 வேட்பாளர்களின் விண்ணப்ப படிவங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். சுவாரஸ்யமான தகவல்கள்....
மொத்த வேட்பாளர்களில் 391 வேட்பாளர்கள் மீது (அதாவது 15%) கிரிமினல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகமாக, பாஜகவின் வேட்பாளர்களில் 37% பேர் மேல் கிரிமினல் வழக்குகள் உண்டு. மற்ற கட்சிகளும் சளைத்தவை அல்ல.... காங்கிரஸ் வேட்பாளர்களில் 27%, ஜனதா தள் (செக்யுலர்) வேட்பாளர்களில் 21% பேர் கிரிமினல் வழக்கு உடையவர்கள்தான். (இது அவர்களாக ஒப்புக்கொண்டுள்ள தகவல்.... மற்றவர்கள் தகவல்களை மறைத்திருக்கவும் வாய்ப்புண்டு)
கிட்டத்தட்ட 35% வாக்காளர்கள் (883 பேர்) கோடீஸ்வரர்கள். பணம் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்றாகி விட்ட நிலையில் 65% பேரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கூட இல்லை என்றால் என்னால் நம்பமுடியவில்லை...! என்ன ஆச்சர்யம்..! (வெள்ளையில் இருந்தால்தான் கணக்கு காட்டவேண்டும் என்பது சிறு குழந்தைக்கும் தெரிந்த விஷயம்தானே..!)
309 பேர் PAN Number குறிப்பிடவில்லை. PAN Number குறிப்பிடவில்லையென்றால் நம்மை வங்கியில் எத்தனை கேள்விகள் கேட்கிறார்கள்? ஹ்ம்ம்ம்....!
இப்போதுதான் முக்கியமான விஷயம் வருகிறது.... 57% பேர் (1453) 12ம் வகுப்பு அல்லது அதற்கும் குறைவாக படித்தவர்கள். அதில் 102 பேருக்கு படிப்பறிவே கிடையாது.
கிரிமினல் கேஸ் இருந்தால் நம் நாட்டில் கான்ஸ்டபிளாக கூட ஆக முடியாது. ஆனால் அரசியல்வாதி ஆகலாம். சட்டத்தை வைத்து நிர்வாகம் செய்யும் அரசு அதிகாரிக்கு தனியாக படிப்பு, பரீட்சை எல்லாம் இருக்கிறது.... சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிக்கு படிப்பு, பரீட்சை எதுவும் கிடையாது.
இந்த நிலையில் கர்நாடகாவில் இதுவரையில் 152 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. வோட்டுக்கு காசு வாங்கும் கலாச்சாரம் அங்கும் பரவிவிட்டது.
நல்ல மக்கள், நல்ல அரசியல்வாதிகள், நல்ல தேர்தல், நல்ல விதிமுறைகள்...! சபாஷ்...!

Monday, 7 May 2018

Sri Raghavendra Movie


இது ஆன்மீக பதிவு... நோ அரசியல்..!
என் பேவரைட் படங்களில் ஒன்றான ரஜினி நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை நேற்று பார்த்து கொண்டிருந்தேன். கவனம் ஈர்த்த மூன்று விஷயங்களை சொல்கிறேன். முதலில் காட்சிகளை பார்ப்போம்.
1. ஒரு வீட்டிலே சுவாமி பூஜை செய்கிறார். அச்சமயம், அந்த வீட்டு குழந்தை மாம்பழ சாறு வைத்திருக்கும் அண்டாவிலே வீழ்ந்து உயிரிழக்கிறது. சுவாமி அந்த குழந்தையை மீண்டும் உயிர்ப்பித்து தருகிறார்.
2. தீண்டத்தகாதவர் ஒருவர் சுவாமிகளின் தரிசனத்திற்கு வருகிறார். அவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் அந்தணர் ஒருவர் தடுக்க, சுவாமிகள் அந்த தீண்டத்தகாதவர் பக்தியுடன் சமர்ப்பிக்கும் கடுகை அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். ஜாதி வித்தியாசம் பார்த்த அந்த பக்தரை மந்திராட்சதையின் நிறம் மாற்றி, அவர் மனம் மாற்றி ஆட்கொள்கிறார்.
3. வெங்கண்ணா என்பவர் ஒரு கிராமத்தில் ஆடு மேய்ப்பவர். அந்த வழியே வரும் சுவாமிகளிடம் ஆசி வேண்டுகிறார். கஷ்டம் வரும் சமயத்தில் தன்னை நினைக்க, தான் அருள் புரிவதாக சுவாமிகள் கூறுகிறார். பின்னொருநாளில் நவாப் ஒருவனிடம் வெங்கண்ணா மாட்டி கொண்டு சவுக்கடி படுகிறான். அப்போது சுவாமிகளை ஸ்மரிக்க, அவன் இன்னல் தீர்கிறது…. வாழ்க்கையே மாறுகிறது.
இப்போது இதில் நான் கவனித்த விஷயங்களை சொல்கிறேன்.
1. வீட்டிலே குழந்தை இறந்த செய்தியை குடும்ப தலைவர் மற்றவரிடமிருந்து மறைக்க முயல்கிறார். காரணம்.. குழந்தை இறந்த செய்தி கேட்டால் பசியோடு வந்த ஏழைகளுக்கு உணவிட முடியாது போகும் என்பதே. தனக்கு பெரிய கஷ்டம் ஏற்பட்டபோதும் அடுத்தவர்கள் நலனை பற்றி சிந்திப்பது எவ்வளவு உயரிய குணம்..! இவருக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
2. தீண்டத்தகாதவருக்கு அந்த காலத்தில் மகான் தரிசனம் கிடைப்பதே பெரிய விஷயம். அவரது காணிக்கையை ஏற்பது என்பது நடக்கவே முடியாத காரியம். ஆனால், எந்த நம்பிக்கையில் அந்த பெரியவர் கடுகு காணிக்கையை கொண்டு வருகிறார்? அந்த நம்பிக்கைக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
3. கஷ்டம் இரண்டு வகைகளில் வரும்… ஒன்று நிதானமாக வந்து சேரும் வியாதி போன்ற கஷ்டங்கள்… இரண்டாவது, திடீரென்று இடி போல் வந்து சேர்வது. இப்படி இடி போன்று கஷ்டம் வந்து தலையில் விடியும் போது, உடனே கடவுளை நினைப்பது சாதாரண விஷயமல்ல. எந்நேரமும் கடவுளை ஸ்மரித்து கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இப்படிப்பட்ட பக்தி கொண்டிருந்த வெங்கண்ணாவிற்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
ஆன்மீகத்தை கவனிக்காதவர்கள் கூட, படத்திலே பூர்ணம் விஸ்வநாதன், V.S. ராகவன் இருவரது நடிப்பையும் கவனிக்க வேண்டும். அந்த இடத்திலே நாம் நின்று கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். அபாரமான நடிப்பு…!

Friday, 4 May 2018

Rural Electrification


இந்தியாவின் கிராமப்புறங்கள் அனைத்திற்கும் மின்வசதி கிடைத்துவிட்டது, இது பாஜகவின் சாதனை என்றும் செய்தி வந்துள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கொஞ்சம் ஆராய்ந்து அதன் உண்மை தன்மையை அறிவோம்.
இப்போது ஒரு வரலாற்று சிறப்புமிக்க காரியம் செய்வோம். அதாவது, அடுத்த வாரத்தில் ஒரு நாள் இந்தியா முழுக்க இரவு 10 மணிக்கு அனைத்து வீடுகளிலும் மின்விளக்குகளை ஒளிர விடுவோம். அப்போது சேட்டிலைட் உதவியுடன் வானத்திலிருந்து இந்தியாவை படம் பிடித்தால் எப்படி இருக்கும்..? துணைக்கண்டமே வெளிச்சக்கடலில் மூழ்கியிருக்கும் அல்லவா...? காண கண்கொள்ளா காட்சி.... ஆனால், அப்படி ஒரு விஷயம் நடக்காது என்பதுதான் உண்மை..!
என்ன? அப்போது அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி வந்துவிட்டது என்ற செய்தி பொய்யா? பொய்யில்லை.... உண்மைதான். ஆனால் Devil is in Details... கொஞ்சம் விவரமாக பார்ப்போம்.
Village Electrification (VE) மற்றும் Household Electrification (HE) என்று இரண்டு இருக்கிறது... அதாவது, ஒரு கிராமத்தில் இருக்கும் 10% வீடுகளுக்கும், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற ஒருசில இடங்களுக்கும் மின் இணைப்பு வந்துவிட்டால் அந்த கிராமம் மின்வசதி பெற்றதாக (VE) கணக்கு எடுத்து கொள்ளப்படும்.
கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு இருக்கவேண்டும் என்பதில்லை... எல்லா குடியிருப்பு இடங்களிலிலும் மின்கம்பங்கள் இருக்க தேவையில்லை... அவ்வளவு ஏன், மின் இணைப்பு பெற்ற வீட்டிற்கு மின்சாரம் தடையின்றி கிடைக்கிறதா என்பது கூட கணக்கு இல்லை.
இதுதான் VE. ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கிடைத்தால்தான் HE. இப்போது இந்திய அரசு அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு 100% VE.
அது என்ன ‘அடைந்திருப்பதாக சொல்லப்படும் இலக்கு’ ? - அரசு சொல்வது உண்மைதானா என்பது யாருக்கும் தெரியாது. வெவ்வேறு அரசு வலைதளங்கள், ஆப்கள் (apps) வெவ்வேறு தரவை தருகின்றன. ஒன்றுக்கொன்று முரணாகவும் இருக்கின்றன. உதா. மின் இணைப்பு கொடுத்த கிராமங்களின் எண்ணிக்கை சில மாதங்களில் அதிகரிக்கிறது, ஆனால் மின் இணைப்பு கொடுத்த வீடுகளின் எண்ணிக்கையோ குறைகிறது. இது எப்படி சாத்தியம்? (படங்களை பாருங்கள்)


ஆக, அரசு தரும் தரவு நேர்மையானதா? தெரியாது...! சரி, போகட்டும் விடுங்கள். மின் இணைப்பு கொடுத்ததாக சொல்லப்படும் கிராமங்களின், வீடுகளின் நிலைமை எப்படியிருக்கிறது?
இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் சில கிராமங்களை கள ஆய்வு செய்தது. உண்மையான மின்வசதி அந்த கிராமங்களை பல காரணங்களால் எட்டவில்லை என்பது அந்த ஆய்விலிருந்து புரிகிறது. கிராமங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக சென்றடைவதே இல்லை. எப்போது நகர்புற தேவையை மிஞ்சிய உபரி மின்சாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் கிராமங்களுக்கு மின்சாரம். இந்த நிலைமையில் மின்இணைப்புக்கு மாத வாடகை வேறு தரவேண்டும். ஏழ்மையின் காரணமாக அவர்களால் அந்த வாடகையை கூட தரமுடிவதில்லை... (அதற்கேற்ற மின்சாரமும் வருவதில்லை). முழு கட்டுரையும் படிக்க விரும்புபவர்களுக்கு - https://www.hindustantimes.com/…/story-pLilYKEh7At99BoSeERq…
பொய் சொல்லி மின் இணைப்பு தருவது, மக்களின் அறியாமை போன்ற மேலும் சில காரணங்கள். காரணங்கள் என்னவாயினும் நாம் அரசு தரவுகளில் பார்க்கும் நிலை வேறு, கள நிலவரம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கிராமங்களை மின்சாரம் சென்று அடைந்ததா என்பது ஒருவருக்கும் தெரியாது... இதுதான் உண்மை.
அரசு தரவுகளின் நிலையை பற்றி கூறினேன். ஆனால், நம்மிடம் இருப்பவை இந்த தரவுகள்தான். இந்த தரவுகளை வைத்துதான் நாம் analyse செய்யவேண்டும். இருக்கும் தரவுகளை வைத்தே தொடர்வோம்.
100% VE வந்ததே ஒரு சாதனைதான்... மோடியின் பாஜக அரசு காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்... தூங்கி வழிந்து கொண்டிருந்த காங்கிரஸை விட செயல்படும் பாஜக எவ்வளவோ சிறப்பல்லவா?
இப்படித்தான் பாஜக பிரமுகர்கள், ஆதரவாளர்கள் சொல்லி கொள்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
மன்மோகனின் UPA அரசு ஆண்டுக்கு சராசரியாக 12000+ கிராமங்களுக்கும், 24 லட்சம்+ வீடுகளுக்கும் (Free connection to BPL Households) மின் இணைப்பு தந்திருக்கிறது. மோடியின் NDA அரசு ஆண்டுக்கு (2017 வரை) சராசரியாக ஆண்டுக்கு 4800+ கிராமங்களுக்கும், 14 லட்சம்+ வீடுகளுக்கும் மின் இணைப்பு தந்திருக்கிறது.
மன்மோகன் அரசாங்கத்தில் செயல் அதிகம், பேச்சு மிகக்குறைவு... மோடி அரசாங்கத்தில் செயல் மிகக்குறைவு, பேச்சு மிக மிக அதிகம். இதுதான் உண்மை... பாஜகவின் சாதனைகள் என்று சொல்லப்படும் விஷயங்களை தோண்டி பார்த்தால் இது போல எத்தனை உண்மைகள் வெளிவருமோ?
அடுத்து HE குறித்து காண்போம். HE என்றால் Household Electrification.
அனைத்து கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் மின்சாரம் என்னும் இலக்கு எப்போது நிர்ணயிக்கப்பட்டது தெரியுமா? 1978-ல்...! அப்போதைய இலக்குகள் – 1995 க்குள் 100% VE.... 2000 க்குள் 100% HE. ராஜீவ்காந்தி பெயரிலே திட்டம், தீனதயாள் பெயரிலே திட்டம், சௌபாக்யா திட்டம் என்று பல திட்டங்களின் உதவியுடன் இப்போது 2018ல் 100% VE அடைந்துவிட்டதாக கூறி கொண்டாடி கொண்டிருகிறோம். (VE என்றால் என்ன என்று முதல்பகுதியிலேயே சொன்னேன் அல்லவா? 10% வீடுகளுக்கு மின் இணைப்பு வந்தாலே அது VE கணக்கில் எடுத்து கொள்ளப்படும்)
இன்னமும் (ஆகஸ்ட் 2017 நிலவரப்படி) 23% வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இந்த 23% வீடுகளுக்கு அடுத்த 8 மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ மின் இணைப்பு கொடுத்துவிடுவோம் என்று யாராவது சொன்னால் பொய் சொல்லுகிறார்கள் என்று தாராளமாக அர்த்தப்படுத்தி கொள்ளுங்கள். ஜூம்லா..!
என்ன காரணம்... மோடி அரசு மின்மயமாக்கியதாக சொல்லப்பட்ட கிராமங்களில் வெறும் 10% கூட முழுமையாக மின்மயமாகவில்லை... இதிலிருந்தே 100% HE எவ்வளவு கடினமானது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு இன்னும் சில பல வருடங்கள் ஆகும்.
சரி, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலேயும் 23% மின் இணைப்பு கிடையாதா... ஏற்றதாழ்வுகள் உண்டா? இதில் மாநிலங்களின் செயல்பாடு எப்படி?
100% HE சாதித்த மாநிலங்கள் இந்தியாவில் ஆறு உண்டு. அவை தமிழ்நாடு, கேரளா, குஜராத், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப்..
மற்ற சில முக்கிய மாநிலங்கள் – பிராக்கெட்டில் இருப்பது இன்னும் மின் இணைப்பு தரவேண்டிய வீடுகளின் சதவிகிதம். பீஹார் (53%), ஜார்கண்ட் (56%), மத்திய பிரதேசம் (40%), ராஜஸ்தான் (23%), உத்தர பிரதேசம் (49%), அஸ்ஸாம் (47%).
ஆக, தென்னிந்தியா ஏறக்குறைய முழுமையான மின் இணைப்பு பெற்றுவிட்டது (கர்நாடகாவில் 8%, தெலுங்கானாவில் 7% வீடுகள் மட்டும் பாக்கி), வடஇந்தியாவின் நிலையை பாருங்கள்...!

Saturday, 28 April 2018

மோடி - ஷி சந்திப்பு


மோடி - ஷி இடையிலான சந்திப்பில் கவனிக்க வேண்டிய விஷயம், ஆப்கானிஸ்தானை குறித்தது. ஆப்கானிஸ்தானில் பொருளாதார திட்டங்களை இந்தியாவும், சீனாவும் ஒன்றாக செயல்படுத்துவது குறித்து ஆராயப்போகிறார்கள்.



ஆயிரம்தான் சொன்னாலும், அரசியலில் சீனர்கள் வெகு கில்லாடிகள்தான்.... பாராட்டவேண்டும். இனி வரும் காலத்தில் ஆப்கானில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கப்போகிறது. அமெரிக்காவின் செல்வாக்கு தேயப்போகிறது.

இந்தியாவிற்கு என்ன கிடைத்தது? வரும் நாட்கள்தான் சொல்லவேண்டும்.

Friday, 27 April 2018

நீதிபதிகள் நியமனம்


கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதியின் பெயரை மத்திய அரசு நிராகரித்து விட்டது. நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டுக்கும் (இனிமேல் சுருக்கமாக கோர்ட்) மத்திய அரசுக்கும் இடையில் என்னத்தான் பிரச்சனை?
அரசியலமைப்பு சட்டப்படி நீதிபதிகள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். ஜனாதிபதி புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்னால் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்க (Consultation) வேண்டும்.
நடைமுறையில் மத்திய அரசுதான், கோர்ட்டுடன் கலந்தாலோசித்து புதிய நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைத்தது. ஆனால், 90களில் இந்த நிலைமை மாறியது. Consultation என்று அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்ட வார்த்தையை Concurrence (ஒத்துப்போதல்) என்றே படிக்கவேண்டும் என்று கோர்ட் சொன்னது. அதாவது, கோர்ட் பரிந்துரைக்கும் நீதிபதிகளின் பெயரை ஜனாதிபதி ஒப்புக்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், நீதிபதிகளின் நியமன அதிகாரம் கோர்ட்டின் கைக்கு வந்துவிட்டது. இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் கொலீஜியம் முறை. இந்த முறையில் கோர்ட் பரிந்துரைக்கும் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் கொரியர் பாய்தான் மத்திய அரசு..!
இந்த முறை மிகவும் விசித்திரமானது... அரசியலமைப்பு சட்டத்திலும் சொல்லப்படாதது. வேறு எந்த நாட்டிலும் இது போன்ற கொலீஜியம் முறை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அவர்கள், இந்த முறையை மீண்டும் பரிசீலனை செய்யச்சொல்லி கோர்ட்டை வேண்டினார். கோர்ட்டும் கொலீஜியம் முறையையே உறுதி செய்தது.
மோடியின் அரசு, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிபதிகளை ஒரு தனிக்குழு நியமிக்கும் என்று ஒரு சட்டம் (NJAC Act) கொண்டு வந்தது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி அந்த சட்டத்தை கோர்ட் நிராகரித்து விட்டது.
கடுப்பான மத்திய அரசு அதற்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளை நியமிக்கவே இல்லை. கோர்ட்டின் பரிந்துரையை மத்திய அரசுதான் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு அப்படி எந்த பரிந்துரையையும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இப்படியாக சுப்ரீம் கோர்ட்டும் மத்திய அரசும் முட்டி கொண்டது. இதுதான் இதுவரை நடந்த வரலாறு.
சரி, இப்போதைய பிரச்சனை என்ன? கொலீஜியம் பரிந்துரைத்த ஒரு நீதிபதியின் நியமனத்தை மத்திய அரசு ஏற்கவில்லை. அரசு சொல்லும் காரணம் – சீனியாரிட்டி அடிப்படையில் அவர் 45வது இடத்தில் இருக்கிறார் என்பதே.
பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றாலும், திறமையின் அடிப்படையிலும் கொலீஜியம் நீதிபதியை பரிந்துரைக்கலாம். ஆக, மத்திய அரசு பெயரை நிராகரித்தது, தற்போது இருக்கும் நடைமுறை பிரகாரம் சரியில்லை.
பாஜக சில சித்து வேலைகள் செய்து உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை 2016-ல் கொண்டுவந்தது. அப்படி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது செல்லாது என்று தீர்ப்பளித்தவர்தான், தற்போது கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதி என்பதால் இந்த விஷயம் அரசியல் முக்கியத்துவமும் பெறுகிறது.
மத்திய அரசின் தலையீட்டிற்கு எதிராக நீதித்துறை இருந்தாலும், தலைமை நீதிபதி இது குறித்து பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பரிந்துரைக்கப்பட்ட பெயரை நிராகரிக்க மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்லியிருக்கிறார். அதே நீதிபதியை இரண்டாவது முறை பரிந்துரைப்பார் என்னும் நம்பிக்கை எனக்கில்லை.
அதே சமயம் கொலீஜியம் முறையை தலைமை நீதிபதியால் மட்டுமே மாற்ற முடியாது. கொலீஜியம் தொடரத்தான் போகிறது... இதில் மத்திய அரசின் அதிகாரம் என்ன என்பதுதான் கேள்விக்குறி...! கொலீஜியம் முறை அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படாதது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.

Thursday, 26 April 2018

இளமையில் செய்யவேண்டியது


ஒரு பொழுதுபோக்கு, ஒன்றும் செய்யாமல் சும்மா உட்காருவது – இவை இரண்டையும் இளமையிலேயே பயில வேண்டியது அவசியம்... இவை இரண்டும் முதுமையில் நம்மையும், நம் அருகில் இருப்போரையும் காக்கும்....!

Tuesday, 24 April 2018

Dividend Investing


பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் நிறைய ஸ்டைல்கள் உண்டு... அதில் ஒன்றுதான் Dividend Investing. அதாவது, தொடர்ந்து, நிறைய டிவிடண்ட் தரும் நல்ல கம்பெனி பங்குகளாக பார்த்து முதலீடு செய்வது.
நான் சொன்னதில், மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டும் - ஒன்று, தொடர்ந்து டிவிடெண்ட் தர வேண்டும். அப்படியென்றால் கம்பெனி தொடர்ச்சியாக நல்ல லாபம் ஈட்ட வேண்டும்.
இரண்டு, நிறைய டிவிடெண்ட் தர வேண்டும். இதை எப்படி கண்டுபிடிப்பது? டிவிடெண்டை பங்கின் விலையோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். டிவிடெண்ட் ஈல்ட் (Dividend Yield) என்பார்கள். இது சாதகமாக இருக்கவேண்டும். பொதுவாக பங்கு சந்தை விழும்போது குறைந்தவிலையில் பங்குகளை வாங்கினால் இந்த டிவிடெண்ட் ஈல்ட் வாட்டமாக அமையும்.
மூன்றாவது, நல்ல கம்பெனியாக இருக்கவேண்டும். நிறைய சம்பாதிப்பதோ, டிவிடெண்ட் தருவதோ நல்ல கம்பெனிக்கு சான்று அல்ல. Fundamentals எனப்படும் அடிப்படைகள் சிறப்பாக இருக்கவேண்டும். முக்கியமாக கம்பெனியின் பிரமோட்டர்கள் ஓரளவிற்காவது நேர்மையானவர்களாக இருக்கவேண்டும்.
மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் கவனித்து கொண்டால் Dividend Investing செய்யலாம். அது சரி, டிவிடெண்டிற்காக பங்குகளில் ஏன் முதலீடு செய்யவேண்டும்? வங்கியில் டெபாஸிட் போட்டால் போதாதா.. வட்டி வருமே?
வங்கி வட்டிக்கு வருமான வரி உண்டு. டிவிடெண்டிற்கு (10 லட்சம் வரையில்) வரி கிடையாது. டெபாஸிட்டுகளுக்கு தற்போது அதிகபட்சமாக 7% வட்டி தருகிறார்கள். நீங்கள் 20% வரி கட்டுபவராக இருந்தால், உங்கள் Post Tax Return 5.6%. இப்போது 5.6% மேல் டிவிடெண்ட் ஈல்ட் கிடைத்தால் உங்களுக்கு லாபம்தானே?
நம் நாட்டின் பொதுத்துறை கம்பெனிகள் பொதுவாக நல்ல டிவிடெண்ட் தரும். இந்த கம்பெனிகளில் அரசாங்கம்தான் முக்கிய பங்குதாரராதலால் அரசாங்கத்திற்கு வருமானம் வர இப்படி ஒரு வழி...! அதுவும் கடந்த 2,3 வருடங்களாக பொதுத்துறை நிறுவனங்கள் ஏராளமான டிவிடெண்ட் தருகின்றன. (பாஜகவின் நிதி நிர்வாகம் அப்படி... அது வேறு கதை)
நேற்றைய விலைமதிப்பின் படி சில அரசு நிறுவனங்களின் டிவிடெண்ட் ஈல்ட் (> 5.6%) தந்திருக்கிறேன். உடனடியாக இந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று பாயாதீர்கள்...! பங்கு மார்க்கெட் முதலீடுகளில் ரிஸ்க் அதிகம். ஒரு நல்ல நிதிநிலை ஆலோசகரை கலந்தாலோசித்து, மார்க்கெட் நிலவரம் பார்த்து முடிவெடுங்கள். இந்த லிஸ்டில் உள்ள நிறுவனங்களில் நானே எந்த முதலீடும் செய்யவில்லை.

Thursday, 19 April 2018

Direct Tax Collections

நாட்டிலே முதன்முறையாக நேரடி வரி வசூல் 10 லட்சம் கோடியை கடந்துள்ளது. நேரடி வரி வசூலை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கும் ஒரு அளவீடாக கொள்ளலாம். 2000-01 –ல் நேரடி வரி வசூல் 68000 கோடிகள்…. இந்த 17 வருடங்களிலே 14 மடங்கிற்கு மேலே வரிவசூல் உயர்ந்துள்ளது.
தேர்தல் காலம் நெருங்குவதால் ஒரு பெர்ஃபாமன்ஸ் அப்ரைஸல் செய்வோம். இணைக்கப்பட்டுள்ள படத்திலே வருடவாரியாக நேரடி வரி வசூலும், வளர்ச்சி விகிதமும் கொடுக்கப்பட்டுள்ளன. பச்சையில் இருப்பது UPA ஆட்சிகாலம். சிகப்பில் இருப்பது NDA ஆட்சிகாலம்.
UPA முதல் நான்கு வருடங்களில் அபாரமான வளர்ச்சி விகிதத்தை பாருங்கள். பின்னர் 2008ல் உலக பொருளாதாரம் வீழ்ந்த காரணத்தினால் வளர்ச்சியும் குறைந்தது. 2004ல் இருந்து (1.05 லட்சம் கோடி) 2014ல் (6.38 லட்சம் கோடி) வரை வளர்ச்சி விகிதம் (CAGR) 17.83%. அதாவது ஒவ்வொரு வருடமும் 17.83% 
இப்போது மோடி - ஜேட்லி கூட்டணியை கவனிப்போம். ஆட்சிக்கு வந்த முதல் வருடமே வளர்ச்சி குறைந்தது… இரண்டாவது வருடம் இன்னும் குறைவு. மூன்றாவது வருடத்தில் 14.16% வளர்ச்சி காண்பித்தாலும், வருவாயில் 30000 கோடிகள் IDS scheme-ல் (கருப்பு பணத்தை தானே அறிவிக்கும் திட்டம்) வந்தது. அதை கழித்தால் 10% வளர்ச்சிதான். இந்த வருடம்தான் நேரடி வரி வருவாய் உயர்ந்துள்ளது.
இந்த நான்கு வருடத்தின் CAGR 11.93%. UPA-வின் 10 வருட காலத்தில் 17.83%...! 

Tuesday, 10 April 2018

Virtual Water


உங்கள் ஜீன்ஸ் பேண்டில் எவ்வளவு நீர் இருக்கிறது என்று கேட்டால் ‘இவன் யாருடா லூஸு?’ போல பார்ப்பீர்கள்... ஆனால் உங்கள் ஜீன்ஸ் பேண்டில் 8000-10000 லிட்டர் தண்ணீர் இருக்கிறது.
அதாவது, ஜீன்ஸ் பேண்டிற்கு பருத்தி வேண்டும்.... பின்னர் அதை நூலாக்கி சாயம் ஏற்றவேண்டும்.... பேண்ட் தயாரித்தபின் அதை தோய்க்கவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நீர் வேண்டும். இப்படி ஒரு ஜீன்ஸ் பேண்ட் செய்ய மொத்தமாக 8000 லிட்டர் தண்ணீர் வேண்டும். இதை மறைநீர் (Virtual Water) என்கிறார்கள்.
இப்படி நாம் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் (உங்கள் செல்போனில் கூட) தண்ணீர் இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும்போதும் அதோடு சேர்த்து நீரை செலவழிக்கிறோம் என்பதை மனதில் வையுங்கள். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை....
இந்த பூமியின் 71% தண்ணீர்தான்... ஆனால், அத்தனை தண்ணீரும் நாம் உபயோகப்படுத்த தகுந்ததல்ல. இருக்கும் தண்ணீரில் 97% கடலிலே உப்பு நீராக உள்ளது. மிச்சம் இருக்கும் 3%தான் நல்ல நீர்.

அந்த 3 சதவீதத்தையே இப்போது எடுத்து கொள்ளுங்கள்... அதிலே கிட்டத்தட்ட 69% பனிப்பாறைகளாக (Glaciers) இருக்கின்றன. அவையெல்லாம் உருகினால் கடல் பொங்கி ஊரை மூழ்கடித்துவிடும். அதனால் அதை மறந்துவிடுவோம். ஒரு 30% நிலத்திற்கு கீழே உள்ளது. நிலத்தடி நீர் அனைத்தையும் எளிதாக எடுத்துவிட முடியாது. மிச்சம் இருக்கும் 1 சதவிகிதத்திற்கும் குறைவான நீர்தான் நாம் ஆறுகளில், ஏரிகளில் பார்க்கும் தண்ணீர். நாம் எளிதாக உபயோகிக்க முடிந்த நீர் இவ்வளவுதான்..!
முன்பிருந்ததை விட உலக மக்கள்தொகை அதிகரித்து விட்டது. மக்கள்தொகையாலும், தொழிற்சாலைகள் அதிகரித்ததாலும் தண்ணீரின் தேவை அதிகரித்துவிட்டது. ஆனால் உலகின் தண்ணீர் அளவுகள் மாறவில்லை... மாறவும் போவதில்லை.
சுருக்கமாக சொன்னால், தண்ணீர் ஒரு Limited Resource. அதை சிக்கனமாகவும், முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை தந்து உபயோகிப்பதும்தான் புத்திசாலித்தனம்.
முக்கிய தேவைகளுக்கு முன்னுரிமை தந்து அதற்கு ஏற்றபடி தண்ணீரை பயன்படுத்துவது எப்படி?
இங்குதான் Virtual Water Trade அதாவது மறைநீர் வர்த்தகம் என்னும் விஷயம் வருகிறது. அதாவது, தண்ணீர் குறைவாக இருக்கும் நாடுகள் பொருட்களை தாங்களே உற்பத்தி செய்யாமல் முடிந்தவரை பொருட்களை இறக்குமதி செய்வது, தண்ணீர் அதிகமாக இருக்கும் நாடுகள் Virtual Water அதிகம் தேவைப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்து தண்ணீர் வளத்தை காசாக மாற்றுவது.
இப்படி தண்ணீரை ஆதாரமாக கொண்டு ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை வகுப்பதெல்லாம் இன்னும் தெளிவான பொருளாதார கொள்கையாக வரையப்படவில்லை. ஆனால், சீனா ஏற்கனவே இந்த விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்கிறது.
சீனா கால்நடை தீவனம், பருத்தி, சோயாபீன்ஸ், தானியங்கள், கோழி ஆகியவற்றை இறக்குமதி செய்துகொள்கிறது. இதன்மூலம் தனது நீர்வளத்தை காத்து கொள்கிறது.
இந்தியா? இந்த விஷயத்தில் இந்தியா அசடுதான்…. அதிக தண்ணீர் தேவைப்படும் பருத்தி, காபி, மாட்டுக்கறி (Beef), முந்திரி, தாதுபொருட்கள் இதையெல்லாம் உலகிலேயே அதிக அளவில் உற்பத்தியும், ஏற்றுமதியும் செய்கிறது.
உலகிலேயே அதிகமாக மறைநீர் ஏற்றமதி செய்யும் நாடு, நம் இந்தியாதான்…!
தண்ணீர் செலவை பொறுத்தவரை பொருட்கள் மட்டுமல்ல, பொருட்களை உற்பத்தி செய்ய தேவைப்படும் மற்ற விஷயங்களும் கவனிக்கவேண்டியவை. ஒரு நல்ல, ஈரப்பதமுள்ள நிலத்தில் விவசாயம் செய்வதை விட, வறண்ட நிலத்தில் விவசாயம் செய்ய இரண்டு மடங்கு நீர் தேவை.
மண்வளத்திற்கேற்ற விவசாயம் ரொம்ப முக்கியம். உதா. கர்நாடகத்தின் மாண்ட்யா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் ஒருகாலத்தில் ராகி முக்கியமாக பயிரிடப்பட்டு வந்தது. நெல் உற்பத்தி செய்ய ஆகும் தண்ணீர் தேவையில் ஆறில் ஒரு பங்கிலே ராகி உற்பத்தி செய்யலாம். இந்த மாவட்டங்களுக்கு பாசன வசதிகளை அதிகப்படுத்தியப்பின் நெல், கரும்பு ஆகியவற்றை மிகுதியாக பயிரிட தொடங்கினர். கரும்பு சாகுபடிக்கு ஏற்ற மண்வாகே இந்த மாவட்டங்களில் கிடையாது. விளைவு – அதிக நீர் செலவு..!
உற்பத்தி முறைகளும் முக்கியமானவை… உதா. ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய அமெரிக்காவிலும், சீனாவிலும் ஏறக்குறைய 1300 லிட்டர் தண்ணீர் செலவாகிறதென்றால், இந்தியாவில் 2850 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. நெல் மட்டுமல்ல, எந்த பயிரை எடுத்தாலும் இந்தியா அதிகம் தண்ணீர் செலவழித்தே உற்பத்தி செய்கிறது. விவசாயம் மட்டுமல்லாது, இந்தியாவில் லெதர் போன்ற பொருட்களின் உற்பத்திக்கும் நிறையவே தண்ணீர் செலவாகிறது.
நம்முடைய விவசாய முறை, உற்பத்தி முறைகள் மாற வேண்டும் என்பதையே இது சுட்டி காட்டுகிறது. தண்ணீரை திறமையாக உபயோகிப்பது குறித்த கவனம் நம் நாட்டில் சுத்தமாக இல்லை.
இந்தியாவிற்கு நல்ல மழைவளம் இருந்தாலும், மொத்த மழையில் 50% மழை வெறும் 15 நாளில் பொழிந்து தள்ளிவிடும். 90% ஆறுகள் 4 மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கொண்டிருக்கும். தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு இயற்கையாகவே இருக்கிறது. ஆனால், அந்த சேமிப்பு நடப்பதில்லை.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் குடிமகன் ஒருவனுக்கு 5 மில்லியன் லிட்டர் அளவிற்கு சேமிப்பு ஆதாரம் கொண்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா கூட ஒரு குடிமகனுக்கு 1 மில்லியன் லிட்டர் சேமிப்பு ஆதாரம் கொண்டிருக்கிறது. இந்தியா 2 லட்சம் லிட்டர் அளவிற்குதான் சேமிப்பு ஆதாரம் வைத்திருக்கிறது… நிச்சயமாக இது போதாது. (2005ம் ஆண்டு உலக வங்கி ரிப்போர்ட்)
நிலத்தடி நீரையாவது சேமிக்கிறோமா என்றால் அதுவும் கிடையாது. உலகிலேயே நிலத்தடி தண்ணீரை அதிகம் உபயோகிப்பது நாம்தான். சேமிப்பதற்கான விழிப்புணர்வு சுத்தமாக இல்லை. உதா. பெங்களூரு நகரத்தில் பெய்யும் மழையில் 30% நீரை சேமித்தால் கூட, அந்த ஊருக்கு சப்ளை செய்யப்படும் காவிரி நீரை விட அதிகமாக சேமிக்க முடியும்.
அரசாங்க திட்டங்களும் கார்ப்பரேட்களின் நன்மையையே கருத்தில் கொண்டு அமைகின்றன என்பது வருத்தமான விஷயம். நதிநீர் மாசு, நிலத்தடி நீர் மாசு, வணிக பயன்பாட்டுக்கு வரைமுறையின்றி தண்ணீர் உறிஞ்சுவது என்று கார்ப்பரேட்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதும், அரசாங்கம் கண்மூடி வேடிக்கை பார்ப்பதும் வேதனை.
சரி, அரசாங்கத்தையோ, கார்ப்பரேட்களையோ நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீரை பாதுகாக்க குடிமக்களாகிய நாம் என்ன செய்ய முடியும்?
தண்ணீரை சேமிக்க வழிகள் என்ன? குழாயை மூடுவது, ஷவர் இல்லாமல் குளிப்பது போன்ற வழக்கமான வழிகளுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்களை சொல்கிறேன். முடிந்தவரை கடைப்பிடிக்க பாருங்கள்.
உணவை வீணடிக்காதீர். ஒவ்வொரு உணவு பொருளும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை பயன்படுத்தியே உங்கள் தட்டிற்கு வருகிறது. அதனால், உணவை வீணடிப்பவர் அத்தனை லிட்டர் தண்ணீரை வீணடித்தவரே..!
அசைவ பிரியர்கள் முடிந்தால் அசைவம் சாப்பிடுவதை கொஞ்சமாவது குறைத்து கொள்ளுங்கள். அசைவ உணவுகளுக்கு ஏராளமான தண்ணீர் தேவைப்படுமாம். எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை அறிய கொஞ்சம் கூகுள் செய்யுங்கள்.
Softdrinks என்னும் குளிர்பானங்கள் எல்லாம் அதிக தண்ணீரை உறிஞ்சுபவை. உதா. 1 லிட்டர் குளிர்பானம் உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 2 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இது நேரடி நீர் மட்டுமே. மறைநீரை சேர்த்தால் இது 250 லிட்டராக உயரும். (குளிர்பானங்களில் அதிகம் சர்க்கரை உண்டு... சர்க்கரை கரும்பிலிருந்து வருகிறது... கரும்பு அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்... புரிகிறதா?) பாட்டில் தண்ணீர் கூட தவிருங்கள். அதற்கும் அதிக தண்ணீர் தேவைப்படும்.
இந்த குளிர்பான கம்பெனிகள் நம்நாட்டின் நிலத்தடி நீரை உறிஞ்சுவது நாம் அறிந்ததே... நம் இயற்கை வளத்தை அழித்து, ஏராளமான சர்க்கரை போட்டு நமக்கு வியாதி கொடுத்து, அதிக விலைக்கு விற்கும் பானங்கள் நமக்கு தேவையா? கொஞ்சம் சிந்தியுங்கள்.
தண்ணீர் சேமிக்க இன்னும் கொஞ்சம் டிப்ஸ்...
ரசாயன உரத்தாலும், பூச்சி கொல்லிகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணும், நீரும் நஞ்சாகிறது. விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் முடிந்தவரை ஆர்கானிக் பயிர்களுக்கு ஆதரவளியுங்கள். கெமிக்கல் தெளிக்காவிட்டால் மண்வளமும், நீர்வளமும் காக்கப்படும்.
சிறு தானியங்களை சாப்பிட ஆரம்பியுங்கள். தண்ணீர் குறைவாக தேவைப்படும் சிறுதானியங்களுக்கு, பொதுவாக உரங்களும் தேவையில்லை. இவை Low Glycemic உணவாகும்... அதாவது, உங்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் இருக்க உதவும். இவ்வளவு நன்மை பொருந்திய சிறு தானியங்களை ஆதரியுங்கள்.
மின்சார பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள். மின் உற்பத்திக்கு தண்ணீர் தேவை என்பது அனைவரும் அறிந்ததே. மின்சாரத்தை சேமித்தால் தண்ணீரை சேமிப்பவர் ஆவோம். (நம் ஊரில் transmission loss 22%... அது இன்னொரு கதை)

Use and Throw கலாச்சாரத்தை முடிந்தவரை கைவிடுங்கள். ஒவ்வொரு பொருளிலும் நீர் உள்ளது. ஒரு பொருளை ஒரே ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறிவது தண்ணீரை வீணடிக்கும் செயலே, அல்லவா?
பிளாஸ்டிக் தயாரிக்கவும் தண்ணீர் வேண்டும். உபயோகித்தப்பின் தூக்கிப்போடும் பிளாஸ்டிக் குப்பைகள் தண்ணீரை மாசு படுத்துகின்றன... மழை நீர் பூமியில் இறங்காது தடுக்கின்றன... இவ்வளவு மோசமான பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்வில் இணைந்துவிட்டது. முடிந்த அளவு பிளாஸ்டிக்கை தவிருங்கள். பிளாஸ்டிக் கவர் வேண்டாம்... மஞ்சள் பையே உற்ற நண்பன்.
நம்மிடம் ஒரு சொத்து இருந்தால் அதை பாதுகாத்து நம் வாரிசுகளிடம் பத்திரமாக ஒப்படைப்போம் அல்லவா? சொத்திற்கு எல்லாம் மேலான சொத்து, இந்த பூமியும், நீரும், காற்றும். அவற்றை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாக ஒப்படைக்கும் பொறுப்புடன் செயல்படுவோம்.

Friday, 6 April 2018

Gaur Gopal Das


தத்துவம் என்றாலே எட்டி ஓடுபவர்களையும் தமது நகைச்சுவை பேச்சினால் கட்டியிழுப்பவர்…. உயர்ந்த கருத்துக்களை எளிமையாக கொடுக்க தெரிந்தவர்… அன்றாட வாழ்வின் பிரச்சனைகளை எதிர்கொள்ள நம் பார்வை கோணத்தை (perspective) மாற்றியமைக்கும் வித்தை தெரிந்தவர் – கௌர் கோபால் தாஸ்.
இவர் அடிப்படையில் ஒரு எலக்டிரிக் என்ஜினியர். பின்னர் இஸ்கான் இயக்கத்தில் சேர்ந்துவிட்டார். எளிய ஆங்கிலம் அல்லது எளிய ஹிந்தியில் பேசும் இவரது வீடியோக்கள் பிரபலமானவை.
ஒரு சின்ன வீடியோவை இணைத்துள்ளேன். பிடித்திருந்தால் முகநூலில் இவரை தொடரலாம் - 

Test of Proportionality


ஆதார் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திலே தொடர்ந்து நடந்து வருகிறது. ஆதார் Proportionality Test-ற்கு உட்பட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது என்ன proportionality test?
1882 பிரஷ்யாவில் (இன்றைய ஜெர்மனி) போலீஸின் அதிகாரம் குறித்த ஒரு வழக்கில் முதன்முதலாக இந்த proportionality கருத்து விவாதிக்கப்பட்டது. மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டன – ஒன்று, முக்கியத்துவம் (Suitability) சட்டம் என்ன செய்ய நினைக்கிறதோ, அந்த குறிக்கோளானது, குடிமக்களின் உரிமையை பறிக்கும் அளவிற்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். உதா. நீங்கள் சுதந்திரமாக நடமாட எல்லா உரிமையும் இருந்தாலும், முக்கியமான விஐபி செல்லும்போது நீங்கள் சாலையை கடக்கக்கூடாது.
இரண்டாவது, தேவை (Necessity) சட்டத்தின் குறிக்கோளை அடைய வரையறுக்கப்படும் வழிமுறைகள் உண்மையிலேயே தேவையானதாக இருக்கவேண்டும். வழிமுறைகளை எளிமையாக்கினாலும், குறிக்கோள் நிறைவேறும் என்றால், அந்த diluted வழிமுறைகளையே பின்பற்றவேண்டும். உதா. விமானநிலையத்தில் தீவிரமான security check இருக்கும். மற்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் போதும், ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உங்களை தொட்டு தடவி பரிசோதனை செய்வதில்லை.
மூன்றாவது, பொருத்தம் (Rationality). வழிமுறைகள் குறிக்கோளுடன் பொருந்தியதாக, அறிவுபூர்வமானதாக இருக்கவேண்டும். உதா. பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரும் பச்சை சட்டை அணியவேண்டும் என்றால் அது அறிவுக்கு பொருத்தமானதாக இல்லை.
இப்போது ஆதார், இந்த proportionality test-ஐ கடக்கவேண்டும். ஆதார் சட்டப்படி, UIDAI-க்கு மிக அதிகமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். UIDAI விரல் ரேகை, கண் ரேகை மட்டுமல்லாது, எந்த biological attribute-ம் கேட்கலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. இது ஒரு blanket approval.
செல்போன் சிம்களோடு ஆதார் இணைப்பதற்கு என்ன காரணம் என்று நீதிபதி கேட்டபோது அரசு வழக்கறிஞர், தீவிரவாதத்தை தடுப்பதற்கு என்று காரணம் கூறியுள்ளார். நீதிபதி இதை முழுதாக ஒப்புக்கொள்ளவில்லை.
அதே போல, வங்கியில் நடக்கும் மோசடிகளை ஆதார் போக்குமா என்று நீதிபதி கேட்டதற்கு, வங்கி அதிகாரிகளின் துணையோடு மோசடிகள் நடக்கின்றன, அவற்றை ஆதார் கொண்டு தடுக்கமுடியாது என்று வழக்கறிஞர் பதில் கூறியுள்ளர்.
விசாரணை தொடர்கிறது...