இது ஆன்மீக பதிவு... நோ அரசியல்..!
என் பேவரைட் படங்களில் ஒன்றான ரஜினி நடித்த ஸ்ரீராகவேந்திரா படத்தை
நேற்று பார்த்து கொண்டிருந்தேன். கவனம் ஈர்த்த மூன்று விஷயங்களை சொல்கிறேன்.
முதலில் காட்சிகளை பார்ப்போம்.
1. ஒரு வீட்டிலே சுவாமி பூஜை செய்கிறார். அச்சமயம், அந்த வீட்டு
குழந்தை மாம்பழ சாறு வைத்திருக்கும் அண்டாவிலே வீழ்ந்து உயிரிழக்கிறது. சுவாமி
அந்த குழந்தையை மீண்டும் உயிர்ப்பித்து தருகிறார்.
2. தீண்டத்தகாதவர் ஒருவர் சுவாமிகளின் தரிசனத்திற்கு வருகிறார்.
அவரை கோயிலுக்குள் நுழைய விடாமல் அந்தணர் ஒருவர் தடுக்க, சுவாமிகள் அந்த
தீண்டத்தகாதவர் பக்தியுடன் சமர்ப்பிக்கும் கடுகை அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். ஜாதி
வித்தியாசம் பார்த்த அந்த பக்தரை மந்திராட்சதையின் நிறம் மாற்றி, அவர் மனம் மாற்றி
ஆட்கொள்கிறார்.
3. வெங்கண்ணா என்பவர் ஒரு கிராமத்தில் ஆடு மேய்ப்பவர். அந்த வழியே
வரும் சுவாமிகளிடம் ஆசி வேண்டுகிறார். கஷ்டம் வரும் சமயத்தில் தன்னை நினைக்க, தான்
அருள் புரிவதாக சுவாமிகள் கூறுகிறார். பின்னொருநாளில் நவாப் ஒருவனிடம் வெங்கண்ணா
மாட்டி கொண்டு சவுக்கடி படுகிறான். அப்போது சுவாமிகளை ஸ்மரிக்க, அவன் இன்னல்
தீர்கிறது…. வாழ்க்கையே மாறுகிறது.
இப்போது இதில் நான் கவனித்த விஷயங்களை சொல்கிறேன்.
1. வீட்டிலே குழந்தை இறந்த செய்தியை குடும்ப தலைவர்
மற்றவரிடமிருந்து மறைக்க முயல்கிறார். காரணம்.. குழந்தை இறந்த செய்தி கேட்டால்
பசியோடு வந்த ஏழைகளுக்கு உணவிட முடியாது போகும் என்பதே. தனக்கு பெரிய கஷ்டம்
ஏற்பட்டபோதும் அடுத்தவர்கள் நலனை பற்றி சிந்திப்பது எவ்வளவு உயரிய குணம்..!
இவருக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
2. தீண்டத்தகாதவருக்கு அந்த காலத்தில் மகான் தரிசனம் கிடைப்பதே
பெரிய விஷயம். அவரது காணிக்கையை ஏற்பது என்பது நடக்கவே முடியாத காரியம். ஆனால்,
எந்த நம்பிக்கையில் அந்த பெரியவர் கடுகு காணிக்கையை கொண்டு வருகிறார்? அந்த
நம்பிக்கைக்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே அல்லவா?
3. கஷ்டம் இரண்டு வகைகளில் வரும்… ஒன்று நிதானமாக வந்து சேரும்
வியாதி போன்ற கஷ்டங்கள்… இரண்டாவது, திடீரென்று இடி போல் வந்து சேர்வது. இப்படி
இடி போன்று கஷ்டம் வந்து தலையில் விடியும் போது, உடனே கடவுளை நினைப்பது சாதாரண
விஷயமல்ல. எந்நேரமும் கடவுளை ஸ்மரித்து கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இப்படிப்பட்ட பக்தி கொண்டிருந்த வெங்கண்ணாவிற்கு சுவாமிகள் அருள் புரிந்தது சரியே
அல்லவா?
ஆன்மீகத்தை கவனிக்காதவர்கள் கூட, படத்திலே பூர்ணம் விஸ்வநாதன்,
V.S. ராகவன் இருவரது நடிப்பையும் கவனிக்க வேண்டும். அந்த இடத்திலே நாம் நின்று
கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள். அபாரமான நடிப்பு…!
No comments:
Post a Comment