பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் நிறைய ஸ்டைல்கள் உண்டு... அதில்
ஒன்றுதான் Dividend Investing. அதாவது, தொடர்ந்து, நிறைய டிவிடண்ட் தரும் நல்ல
கம்பெனி பங்குகளாக பார்த்து முதலீடு செய்வது.
நான் சொன்னதில், மூன்று விஷயங்கள் கவனிக்க வேண்டும் - ஒன்று,
தொடர்ந்து டிவிடெண்ட் தர வேண்டும். அப்படியென்றால் கம்பெனி தொடர்ச்சியாக நல்ல
லாபம் ஈட்ட வேண்டும்.
இரண்டு, நிறைய டிவிடெண்ட் தர வேண்டும். இதை எப்படி கண்டுபிடிப்பது?
டிவிடெண்டை பங்கின் விலையோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும். டிவிடெண்ட் ஈல்ட்
(Dividend Yield) என்பார்கள். இது சாதகமாக இருக்கவேண்டும். பொதுவாக பங்கு சந்தை
விழும்போது குறைந்தவிலையில் பங்குகளை வாங்கினால் இந்த டிவிடெண்ட் ஈல்ட் வாட்டமாக
அமையும்.
மூன்றாவது, நல்ல கம்பெனியாக இருக்கவேண்டும். நிறைய சம்பாதிப்பதோ,
டிவிடெண்ட் தருவதோ நல்ல கம்பெனிக்கு சான்று அல்ல. Fundamentals எனப்படும்
அடிப்படைகள் சிறப்பாக இருக்கவேண்டும். முக்கியமாக கம்பெனியின் பிரமோட்டர்கள்
ஓரளவிற்காவது நேர்மையானவர்களாக இருக்கவேண்டும்.
மேலே சொன்ன மூன்று விஷயங்களையும் கவனித்து கொண்டால் Dividend
Investing செய்யலாம். அது சரி, டிவிடெண்டிற்காக பங்குகளில் ஏன் முதலீடு
செய்யவேண்டும்? வங்கியில் டெபாஸிட் போட்டால் போதாதா.. வட்டி வருமே?
வங்கி வட்டிக்கு வருமான வரி உண்டு. டிவிடெண்டிற்கு (10 லட்சம்
வரையில்) வரி கிடையாது. டெபாஸிட்டுகளுக்கு தற்போது அதிகபட்சமாக 7% வட்டி
தருகிறார்கள். நீங்கள் 20% வரி கட்டுபவராக இருந்தால், உங்கள் Post Tax Return
5.6%. இப்போது 5.6% மேல் டிவிடெண்ட் ஈல்ட் கிடைத்தால் உங்களுக்கு லாபம்தானே?
நம் நாட்டின் பொதுத்துறை கம்பெனிகள் பொதுவாக நல்ல டிவிடெண்ட்
தரும். இந்த கம்பெனிகளில் அரசாங்கம்தான் முக்கிய பங்குதாரராதலால் அரசாங்கத்திற்கு
வருமானம் வர இப்படி ஒரு வழி...! அதுவும் கடந்த 2,3 வருடங்களாக பொதுத்துறை
நிறுவனங்கள் ஏராளமான டிவிடெண்ட் தருகின்றன. (பாஜகவின் நிதி நிர்வாகம் அப்படி...
அது வேறு கதை)
நேற்றைய விலைமதிப்பின் படி சில அரசு நிறுவனங்களின் டிவிடெண்ட்
ஈல்ட் (> 5.6%) தந்திருக்கிறேன். உடனடியாக இந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்
என்று பாயாதீர்கள்...! பங்கு மார்க்கெட் முதலீடுகளில் ரிஸ்க் அதிகம். ஒரு நல்ல
நிதிநிலை ஆலோசகரை கலந்தாலோசித்து, மார்க்கெட் நிலவரம் பார்த்து முடிவெடுங்கள்.
இந்த லிஸ்டில் உள்ள நிறுவனங்களில் நானே எந்த முதலீடும் செய்யவில்லை.
No comments:
Post a Comment