Thursday 6 September 2018

377


இன்றைய 377 தீர்ப்பு பல அச்சங்களையும், கவலைகளையும் விதைத்துள்ளதை என் நட்பு வட்டத்திலேயே பார்க்கிறேன்.

ஒரு சின்ன தகவல்… 2016 தரவுகள் படி இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 கற்பழிப்புகள் நடக்கின்றன. இதில் 40% மைனர்கள் மேலான தாக்குதல். கிட்டத்தட்ட 95% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மிக நெருங்கிய சொந்தங்களே..! (அப்பா, தாத்தா, சகோதரன், மகன் போன்றவர்கள்)

இது போலீஸில் ரிப்போர்ட் செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே…. வெளியில் சொன்னால் மானம் போகும் என்று பயந்து, தொண்டைக்குள் கசப்பை விழுங்கி, தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு மறைத்தவை தனிக்கணக்கு.

இதற்கு என்ன செய்யலாம்…? நாளை முதல் ஆண்-பெண் திருமணத்தை நிறுத்தலாமா? அல்லது ஆண்களையும் பெண்களையும் தனித்தனி சமூகமாக்க போகிறோமா? இந்த ரேஞ்சில் யோசித்தால் பிரியாணி கடைகளை கூட மூடவேண்டி வரும்.

377 சட்ட மாற்றத்தினால் தவறுகள் அதிகரிக்கும் என்னும் சிந்தனை, LGBT சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான பிம்பத்தினால் எழுவதுதான்…. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்குகள் அதிகமான ஆண் இனம் செய்யாத குற்றங்கள் LGBT சமூகத்தால் பெருகும் என்று நினைப்பது சுத்த அபத்தம்.

சமூகத்தில் சிலருக்கு பால் விருப்பங்கள் வேறுபடுகின்றன. அது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். மதத்தின் காரணமாகவோ, பெருவாரியான விருப்பத்திற்கு மாற்றாக இருப்பதன் காரணமாகவோ அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. இப்போது அவர்களுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தேவையற்ற சித்ரவதைகளில் இருந்து ஒரு விடுதலை கிடைத்துள்ளது.

US, UK, Australia, ஐரோப்பிய, தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஒரு பால் மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இப்போது இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒருபால் தம்பதியினர் குழந்தை பெற்று கொள்கின்றனர். சிறப்பாகவே குழந்தைகளை வளர்க்கின்னறனர். நம்மை போல்தான் அவர்களும்.

இந்த 377 தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த சட்டதிருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்தாத வகையிலும், நெறிப்படுத்தவேண்டிய முறையிலும் சட்டரீதியான வேறு மாற்றங்களும் தேவைப்படுகிறது. சட்டநிபுணர்கள் கூடிய விரைவில் மற்ற சட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.

முன்னேற்றம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். அந்த வகையில் ஒரு அரவணைப்பு இன்று நடந்துள்ளது. அதை வாழ்த்துவோம்….!

இந்திய தொல்லியல் புதிய கண்டுபிடிப்புகள்


சிந்து சமவெளி நாகரீகத்தை குறித்து புதிய செய்தி ஒன்று போன வாரம் வெளியானது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த ஒரு மனிதனின் காது எலும்பை DNA ஆய்வு செய்ததில், ஆரிய ஜீன் எனப்படும் R1a ஜீன் அந்த மனிதஉடலில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த உடலில் உள்ள ஜீன்அமைப்பு தமிழகத்தில் நீலகிரி மலையில் உள்ள இருளர்களோடு ஒத்துப்போகிறது.

மாறாக, வடஇந்தியாவை சேர்ந்தவர்களின் ஜீன்கள் வடக்கு ஐரோப்பியர்களின் ஜீன்களோடு ஒத்துப்போகின்றன. வடக்கு ஐரோப்பியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். ஆக, வடஇந்தியர்களும் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்னும் கருத்துக்கு இந்த ஜீன் ஆராய்ச்சி வலுசேர்க்கிறது. (இந்த இடப்பெயர்வு எல்லாம் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.)

1920-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொல்லியல் ஆய்வுகள் நடந்தபோது, சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் வேதகாலத்திற்கு முற்ப்பட்டவர்கள் என்றும், அவர்களை ஆரியர்கள் படையெடுத்து வந்து வென்றதாகவும் கூறப்பட்டது. சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்று ஆரிய-திராவிட தியரிகள் தோன்றின.

ஆனால், இந்தியாவில் இருக்கும் மதம் மற்றும் கட்சி சார்ந்த அரசியல் காரணமாக அந்த தியரி அவ்வளவு பெரிதாக எடுபடவில்லை. தற்போது மத்தியில் பாஜக அரசு இருப்பதால், இந்த ஆராய்ச்சி முடிவுகளை பூசிமெழுகும் முயற்சிகளும் நடப்பதாக தெரிகிறது.

காரணம், ஹிந்துத்வா அரசியல் எனலாம். இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஹிந்துக்கள், இந்த மண் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது, புராணங்கள் என்பவை கட்டுக்கதைகள் அல்ல, அவை உண்மையான வரலாறு என்றெல்லாம் சொல்லும் ஹிந்துத்வா அரசியல், இந்தியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த குடிகள் என்பதை எவ்வாறு ஒப்புக்கொள்ளும்?

மத்திய அரசு ஏற்கனவே ஒரு தொல்லியல் துறை கமிட்டியை அமைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கமிட்டியின் வேலை, வேதங்கள், புராணங்களை ‘தேவையான சான்றுகளோடு’ உண்மை என்று நிரூபிப்பது. அதாவது, இந்த ஆராய்ச்சிகளுக்கு எதிர் ஆராய்ச்சி அரசாங்க ஆதரவோடு நடக்கிறது.

பல மதத்தலைவர்கள் கூட ஆரிய-திராவிட தியரிகளை ஒப்புக்கொள்வதில்லை. அது ஹிந்து மதத்தை சிதைக்கக்கூடும் என்னும் அச்சம்தான் காரணம்.

ஆனால், அறிவியல் என்பது ஈவிரக்கமற்றது. அது உண்மையை சமரசம் இல்லாமல் காட்டுவது. சமரசமில்லாமல் உண்மைகள் வெளியாகுமா என்பது மட்டும்தான் கேள்வி.

முழு விவரங்களோடு படிக்க விரும்புவோருக்கு –
  1. https://www.indiatoday.in/amp/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31?__twitter_impression=true
  2. https://tribune.com.pk/story/1654465/3-modi-appoints-committee-scholars-prove-hindus-descended-indias-first-inhabitants/

Monday 27 August 2018

GST – Twitter Support


ஒரு வருடத்திற்கு முன்பு GST வரி அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வர்த்தகர்களுக்கு அதுகுறித்து தலையும் புரியவில்லை… காலும் புரியவில்லை. வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கை எடுத்தது… அதுதான் டிவிட்டர் சப்போர்ட்.
GST@GOI  என்னும் டிவிட்டர் அக்கௌண்ட் மூலம் வரித்துறை அதிகாரிகள், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில், ‘இது புதிய நிர்வாக முறை’ என்று புகழ்ந்திருந்தார்.
இந்த டிவிட்டர் சப்போர்ட் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், என்னால் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வாதம் இதுதான்…. Twitter support is not legally binding...! அதிகாரிகளின் வழிகாட்டுதல் தவறாக இருக்கும்பட்சத்தில் வர்த்தகர்கள் மேல்தான் பெனால்டி விதிக்கப்படும். டிவிட்டரில் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படிதான் நடந்தேன் என்று கோர்ட்டில் சொல்லமுடியாது.
ஒரு வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், அங்கே சட்டம் மட்டும்தான் நிற்கும். இந்த டிவிட்டர் ஆலோசனைகள் நிற்காது… அரசாங்கம் இதற்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றேன். நண்பர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்துக்கு என் மோடி விரோதமே காரணம் என்று குறை கூறினார்.
ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. சட்டத்தோடு ஒத்துப்போகாத சில வழிகாட்டுதல்கள் இந்த டிவிட்டர் அக்கௌண்டில் வழங்கப்பட்டன. அதன் காரணமாக வர்த்தகர்களுக்கு பெனால்டியும் விதிக்கப்பட்டது. அரசாங்கம், இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லையென்று கைகழுவிவிட்டது.
தற்போது GST வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அரசு இந்த டிவிட்டர் சப்போர்ட்டை நிறுத்திவிட்டது.
இதே போன்று ரயில்வேயிலும், பாஸ்போர்ட் பிரச்சனைகளிலும் டிவிட்டர் மூலம் புகார்கள் ஏற்கப்பட்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிவிட்டர் மூலம் சப்போர்ட் என்பதில் இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று, அதிகார மையங்களை வெகு சுலபமாக அணுகமுடிகிறது. இரண்டு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் கணக்காக உடனடி தீர்வுகள் எட்டப்படுகின்றன.
அவசர உதவிகளுக்கு டிவிட்டர் சப்போர்ட் ஒரு நல்ல வழிமுறை. சமீபத்தில் 25 சிறுமிகள் கடத்தலை தடுக்க டிவிட்டர் சப்போர்ட் உதவியது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்கும் responsibility-யோ, நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரமோ இருப்பதில்லை. அதற்கு இந்த GST வழிகாட்டுதல்கள் ஒரு நல்ல உதாரணம். மேற்சொன்ன குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து விஷமிகளால் போலியாக தரப்பட்டால், போலீஸும், அரசு நிர்வாகமும் புகார் உண்மையா, பொய்யா என்ற குழம்பிவிடும்.
ஏதோ ஒரு வகையில் டிவிட்டர் சப்போர்ட் சட்டரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும். அப்போதுதான் இந்த நடைமுறையின் பயன்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

Saturday 25 August 2018

Why Primary Sector is Important to India


நேற்று London School of Economics –ல் மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடி கொண்டிருந்தார். ஒரு மாணவியின் கேள்வியும், ராகுலின் பதிலும் என் ஞாபகத்திலிருந்து தருகிறேன். இது Verbatim கிடையாது.

கேள்வி – நீங்கள் ஏன் விவசாயத்திற்கு முன்னுரிமை தருகிறீர்கள்? தொழில்துறை, டெக்னாலஜிக்கு முன்னுரிமை தரலாமே….!

ராகுல் – நீங்கள் பொருளாதாரத்தை அப்படி பிரித்து பார்க்கலாம். நான் அப்படி பார்க்கவில்லை. அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது. விவசாய முன்னுரிமை குறித்து சொல்லவேண்டுமென்றால் நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். சில காலத்தில் Rural demand உயர்ந்தது. அது பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் kick start செய்தது. பொருளாதாரமே வளர்ந்தது.
வேறு விதத்தில் சொன்னால், நீங்கள் எல்லோரும் ஏன் மெடிக்கல் படிக்கக்கூடாது. ஏன் சிலர் தத்துவம் படிக்கிறீர்கள், சிலர் பொருளாதாரம் படிக்கிறீர்கள். இது அத்தனையும் சேர்ந்ததுதான் அறிவு அல்லவா? அது போலத்தான் பொருளாதாரமும். (மாணவர்களிடையே பலத்த கைத்தட்டல்கள்)

ராகுல் இந்த கேள்விக்கு இன்னும் முழுமையான விடையளித்திருக்கலாம். ஆனால், கூடியிருக்கும் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமென்று சுருக்கமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராகுலின் கருத்தை நான் எப்போதும் ஆதரித்திருக்கிறேன். அமெரிக்காவின் labour by sector பாருங்கள் – Primary: 0.9%, Secondary: 18.9%, Tertiary: 80.2%. சைனா - Primary: 29.5%, Secondary: 29.9%, Tertiary: 40.6% (2014). இப்போது இந்தியாவை பார்ப்போம் - Primary: 47%, Secondary: 22%, Tertiary: 31%

சைனா தன்னை secondary sector-ல் வளர்த்து கொண்டபோது காலம் அதற்கு சாதகமாக இருந்தது. இனி வரப்போகும் காலம் post-trump காலம்... outsourcing-ற்கு எதிராகவே இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் டெக்னாலஜி படையெடுப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இதில் outsourcing-ற்கு இடம் ஏது?

அதே போல டெக்னாலஜி படையெடுப்பால், tertiary sector-ல் வேலைவாய்ப்புகளும் வளரப்போவதில்லை. இந்தியாவில் employment elasticity (GDP வளர்ச்சிக்கு எத்தனை வேலைவாய்ப்புகள் என்னும் ratio) ஏற்கனவே குறைவாக இருக்கிறது. இனியும் அப்படி தொடரவே வாய்ப்பிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை நிறைய தருவது MSME (Micro, Small, Medium Enterprises). ஆனால், பாஜக அரசு அதைத்தான் நசுக்கி கொண்டிருக்கிறது. மாறாக, Make in India கோஷம் போட்டு வெளிநாட்டு பெரிய கம்பெனிகளை கூப்பிட்டு கொண்டிருக்கிறது. கடைசியில், MSMEயும் அடிவாங்கிவிட்டது. Make in India-வும் முன்னே சொன்ன காரணங்களால் வெற்றியடையவில்லை. இரண்டும் உருப்படவில்லை.

அப்படியே Make in India வெற்றியடைந்திருந்தாலும், எத்தனை பில்லியன் முதலீடுகள் வேண்டியிருக்கும்? அதனால், எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை சுற்றுசூழல் மாசடைந்திருக்கும்? சைனாவின் Primary செக்டாரில் 30% மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அதற்க்குள்ளேயே அந்த நாட்டின் சுற்றுசூழல் மோசமாகிவிட்டது. மக்கள்தொகை மிகக்குறைந்த அமெரிக்க மாடல், மக்கள்தொகை மிகுந்த சைனாவிற்கு ஒத்துப்போகாது. இனி வரப்போகும் outsourcing-ற்கு எதிரான காலத்தில் இந்தியாவிற்கு சுத்தமாக ஒத்துப்போகாது.

மிச்சமிருக்கும் ஒரே துறை விவசாயம் சார்ந்த துறைகள்தான். (கண்மூடித்தனமான சுரங்க தொழிலை நான் ஆதரிப்பதில்லை. வேறொரு சமயம் இதுகுறித்து பேசலாம்) எதிர்கால சமுதாயத்திற்கு செய்வதற்கு ஏதாவது வேலை வேண்டும். அதை விவசாயம் சார்ந்த வேலைகள் மட்டுமே தரும். லாப நோக்கம் மட்டுமே கொண்ட கார்ப்பரேட்டுகளால் பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியாது. GDP நம்பர் விளையாட்டு மட்டுமே நடக்கும்… வளர்ச்சி இருக்காது.

Thursday 23 August 2018

Indian Power Sector and Uday Scheme


மின்சார விநியோகம் செய்யும் கம்பெனிகள் (சுருக்கமாக டிஸ்காம்) ஏகமாக கடனில் மூழ்கியிருக்க அவற்றை காப்பாற்ற வந்ததாக சொல்லப்படும் ஒரு ஸ்கீம்தான் உதய்.
கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும், யூனியன் டெரிடரிகளும் உதய் திட்டத்தில் இணைந்துவிட்டன. இந்த திட்டம் மூலமாக இந்திய மின்துறையில் அபாரமான மாற்றம் வரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. 2015 இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது இரண்டாண்டுகளை கடந்து விட்டது. இந்த திட்டம் என்ன, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

உதய் திட்டத்தின் செயல்பாட்டை பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முதலில் டிஸ்காம்களின் கடன்சுமையை தெரிந்து கொள்ளலாம். 2015 செப்டம்பரில் இந்தியாவில் இருந்த அனைத்து டிஸ்காம்களின் மொத்த கடன்சுமை 4.3 லட்சம் கோடிகள். அதிகபட்சமாக ராஜஸ்தான் 85000 கோடிகள் கடன், தமிழ்நாடு 75000 கோடிகள் கடன். இந்த கடனுக்கு வட்டி கட்டியே லாபம் மொத்தமும் போய்விடும். (லாபம் வந்துட்டாலும்… அது வேறு கதை)

டிஸ்காம்கள் நஷ்டத்தில் இருந்தால் இருந்துவிட்டு போகிறது, பிரச்சனை என்ன? நாடு முழுக்க தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பது மத்திய அரசுகளின் குறிக்கோள். மின்சாரம் இல்லாமல் வளர்ச்சி இல்லை. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியாவது இந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க காசு வேண்டுமே. நஷ்டத்தில் இயங்கும் டிஸ்காம்களால் மின்சாரம் வாங்க முடியாது, அல்லவா?

அதனால், டிஸ்காம்கள் லாபமாக இயங்கவேண்டும்…. அப்போது அவற்றின் கையிலே காசு புழங்கும்… மின்சாரத்தை அதிகமாக வாங்கும்…. மின்துறையில் முதலீடுகள் பெருகும். இப்படி நடந்தால் அனைவருக்கும் win-win situation.

சரி, டிஸ்காம்களின் கடன்தானே பிரச்சனை? அந்தந்த மாநில அரசுகளே அவர்கள் மாநிலத்தில் உள்ள டிஸ்காம்களின் கடனை எடுத்து கொண்டால் என்ன? டிஸ்காம்களை எளிதாக காப்பாற்றி விடலாமே…! அதுதான் முடியாது… FRBM Act என்னும் ஒரு சட்டம், அப்படி மாநில அரசுகள் கடன்களை எடுத்து கொள்வதை தடுக்கிறது. அது என்ன சட்டம்?

ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கண்டமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தன. வரவுக்கு மீறிய செலவு… fiscal deficit என்று சொல்வார்கள். வரவுக்கு மீறி செலவு செய்தால் என்ன ஆகும்? கடன்தான் ஆகும். இப்படி ஒரேடியாக கடன் வாங்க கூடாது என்பதை மத்திய அரசுகள் (காங், பாஜக இரண்டுமே) உணர்ந்தன. அதனால், Fiscal deficit-ற்கு லிமிட் வரையறுத்து ஒரு சட்டத்தை போட்டது. அதுதான் FRBM Act.

இப்போது டிஸ்காம்களின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் FRBM சட்டப்படி நிர்ணயித்த fiscal deficit அளவை தாண்டிவிடும். அதனால், மாநில அரசுகள் கடனை ஏற்க முடியாது.

நாளடைவில், டிஸ்காம்களின் கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே போனதால், debt trap எனப்படும் கடன் சுழலில் மாட்டி கொண்டன.

டிஸ்காம்களின் நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், வோட்டு அரசியல். மாநில அரசுகள் வோட்டு அரசியலை மனதில் வைத்துக்கொண்டு மின்கட்டணத்தை ஏற்றுவதில்லை. அதாவது, டிஸ்காம்களின் கடன் சுமையையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. அதே சமயம், வருமானம் அதிகமாக வர மின்கட்டணத்தையும் அதிகரிக்காது.

டிஸ்காம்களின் திறமையை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை அடுத்து பார்க்கலாம். டிஸ்காம்களின் திறன் Aggregate Technical and Commercial Losses எனப்படும் AT&C losses-யை அடிப்படையாக கொண்டது.

மொத்தம் இவ்வளவு மின்சாரம் அனுப்பினால், எத்தனை மின்சாரம் பெறப்படுகிறது என்பது டெக்னிக்கல் நஷ்டம். அதிக மின்சார லோடு, டிரான்ஸ்பார்மர், லைன் கெபாசிடி குறைவு, தரமான பராமரிப்பு இன்மை போன்றவை இதற்கான காரணங்கள். மற்றதெல்லாம் கமர்சியல் நஷ்டம். உதா. மின் திருட்டு, மீட்டரில் திருட்டுத்தனம், பில் பணம் கட்டாதது போன்றவை.

ஒரு டிஸ்காமின் திறமையை இந்த AT&C loss வைத்தே கணக்கிடுவார்கள். 15 சதவிகிதத்திற்குள் AT&C loss கொண்டு வரவேண்டும் என்பது உதய் திட்டத்தின் டார்கெட்.

சரி, ஓரளவிற்கு பேக்கிரவுண்ட் தகவல்களை பார்த்துவிட்டோம். இப்போது உதய் ஸ்கீம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் டிஸ்காம்களின் நஷ்டத்தை கட்டுப்படுத்துவது அந்த டிஸ்காம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் வேலை. தேவையான உதவிகளை செய்வது மட்டுமே மத்திய அரசின் வேலை.

முதலில் கடன்சுமையை எப்படியாவது குறைக்கவேண்டும். அப்போதுதான் டிஸ்காம்களால் புதிய கடன்களை பெற்று, தேவைப்படும் மின் உபகரணங்களில் முதலீடு செய்யமுடியும். லாபத்தின் பாதையில் திரும்பமுடியும். இல்லையென்றால் பழைய உபகரணங்களை கொண்டு AT&C loss-ஐ கட்டுப்படுத்த முடியாது.

உதய் திட்டத்தின் கீழே, டிஸ்காமின் கடன்களில் 75% மாநில அரசு எடுத்துக்கொண்டு பாண்டுகள் வெளியிடலாம். இது FRBM சட்டத்தின் கீழே தவறாக கருதப்படாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதே போல மீதமிருக்கும் 25% கடனை டிஸ்காம்கள், மாநில அரசின் கேரண்டியோடு பாண்டுகளாக மாற்றி கொள்ளலாம். மாநில அரசின் கேரண்டி இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். மாநிலங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக மின்கட்டணத்தை ஏற்றிவரவேண்டும். இதுவும் டிஸ்காம்களின் நஷ்டத்தை குறைக்கும்.

சரி, கடன்சுமை போனது… அடுத்து AT&C loss குறைக்கவேண்டும். புதிய எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்துவது, டிரான்பார்மர் பராமரிப்பு, மாற்றம் உள்ளிட்ட வேலைகள், மின்திருட்டை தடுப்பது, பணவசூல் ஆகியவை இதில் அடக்கம்.

AT&C loss கட்டுப்படுத்தினால் மின்உற்பத்திக்கு தேவையான கரி, அந்தந்த மாநிலங்களுக்கு சகாயவிலையில் கிடைக்கும். மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் உண்டு. இல்லையென்றால், ஒன்றும் கிடையாது. இது ஒரு கேரட்-ஸ்டிக் அப்ரோச்.

உதய் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், Coal Linkage Rationalisation என்னும் திட்டம். இதன்படி பவர் பிளாண்டுகளுக்கு அருகிலிருக்கும் கரி சுரங்கங்களிலிருந்து கரி வாங்கி கொள்ளலாம். முன்பெல்லாம் பிளாக் அலாக்கேஷன் என்று எந்த சுரங்கம் ஒதுக்கப்பட்டதோ, அங்கிருந்துதான் கரி வரவேண்டும். சரக்கு போக்குவரத்து கட்டணமே அதிகமாக இருக்கும். இப்போது அருகிலிருக்கும் சுரங்கங்களில் இருந்து கரி வருவதால் அந்த செலவு குறைவு.

இதன் நீட்சியாக, அடுத்திருக்கும் பவர் பிளாண்டுக்கு கரி இல்லையென்றால், கரியை கைவசம் வைத்திருக்கும் அருகாமை பிளாண்டிலிருந்து எடுத்து கொடுக்கலாம். இதை Swapping என்று சொல்கிறார்கள்.

இந்த இரண்டு ஐடியாக்களின் மூலம் போக்குவரத்து (Transportation and Logistics) செலவுகள் குறையும். அப்போது, மின் உற்பத்தி விலையும் குறையுமல்லவா? டிஸ்காம்கள் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கலாம்.

இப்போது உதய் திட்டத்தின் பயன்களை பார்க்கலாம்… முதல் வருடம் நல்ல ஆரம்பம். AT&C நஷ்டம் ஒரு சதவிகிதம் குறைந்தது. நிதி சீரமைப்பு (Fin Restructure) காரணமாக டிஸ்காம்களுக்கு 15000 கோடி ரூபாய்கள் மிச்சமாயின.

இரண்டாம் வருடத்தில் AT&C நஷ்டம் 20.3% லிருந்து 19.1%-ஆக வந்து விட்டது. (தற்சமயம் 18.75%). 4 மாநில டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் டிஸ்காம் லாபம் 1565 கோடி (போன வருடம் 10203 கோடி நஷ்டம்)

மோசமான மாநிலங்களை பார்ப்போம். பீமாரு மாநிலங்களில் ராஜஸ்தான் ஒருபக்கம் லாபகரமாக போனாலும், இன்னொரு பக்கம் ஜார்கண்ட் வந்து இணைந்து விட்டது. இந்த மாநிலங்களில் AT&C நஷ்டம் உபி 28%, பீஹார் 33%, மபி 30%, ஜார்கண்ட் 32%. இருப்பதிலேயே குறைச்சல் ஆந்திராவாம் 8.7%. (தமிழ்நாடு தற்சமயம் 14.23%)
வட்டியை குறைத்ததாலேயே டிஸ்காம்களின் பெரும் சுமை குறைந்துவிட்டது. Coal Linkage Rationalisation திட்டமும் சில ஆயிரம் கோடிகள் செலவை குறைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் மீட்டர்கள் மூலமும், துல்லியமாக மின்சார உபயோகம் கணக்கெடுக்கப்படுவதால் வரவு அதிகமாகிறது. இரண்டே வருடங்களில் டிஸ்காம்களின் நஷ்டம் 70% குறைந்து விட்டது. Very good என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?

அவ்வளவு எளிதாக சொல்லமுடியாது. டிஸ்காம்களின் லாபத்தை முழுவதுமாக கொண்டாட முடியாது. காரணம், டிஸ்காம்களின் கடன், வட்டி சுமையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது. அதாவது, மக்கள் மின்கட்டணம் கட்டியதற்கும் மேலாக வரிப்பணத்தை தருகிறார்கள் என்று அர்த்தம். FRBM சட்டத்திலிருந்து விலக்கு அளித்தாலும், கடன் என்பது கடன்தான். அதை அடைக்கும் வழிகளையும் பார்க்கவேண்டும்.

டிஸ்காம்களின் லாபத்தை கொண்டாட முடியாததற்கு இன்னும் ஒரு ரொம்ப முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் மின்உற்பத்திக்கு நிறுவனங்களுக்கு (Gencos) காசு கொடுப்பது. டிஸ்காம்கள் நஷ்டம் 17350 கோடிகள் குறைந்தது என்றால், ஜென்கோஸ்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 150% அதிகரித்து, 32071 கோடியாக உயர்ந்துள்ளது. உபி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே இந்த தொகையில் 60% காரணம்.

இதனால் என்னவாயிற்று…? 180000 கோடிகள் மதிப்புள்ள ஜென்கோஸ்களின் பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியுள்ளது. அதில் 70000 கோடி NPAவாக மாறிவிட்டது. ஜென்கோஸ்களுக்கு சரியான நேரத்தில் ஒழுங்காக பணம் கொடுத்திருந்தால், டிஸ்காம்களின் நஷ்டம் அதிகரித்திருக்கும் என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம் டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வருகிறது என்று பார்த்தால், இன்னொரு பக்கம் ஜென்கோஸ்கள் அடிவாங்குவதையும், கடன்கள் NPA ஆவதையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதாவது, நஷ்டம் மாறவில்லை…. நஷ்டம் ஏற்படும் இடம்தான் மாறியிருக்கிறது.

அடுத்ததாக ஜென்கோஸ்களையும், அவற்றின் பிரச்சனைகளையும் கவனிப்போம்.
உதய் திட்டம் என்பது பவர் செக்டாரின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை வல்லுனர்கள் இழந்துவிட்டனர். மத்திய அரசு உதய் திட்டத்தின் வெற்றி பற்றி மட்டுமே பேசும். ஜென்கோஸ்கள் பற்றியும், பவர் செக்டாரின் பிரச்சனைகள் குறித்தும் பேசவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.

முன்பெல்லாம் மின்சாரம் என்றாலே தெர்மல், ஹைட்ரோ, நியூக்ளியர் என்றிருந்தது. இப்போது பிரபலமாகி வருவது ரினூவபல்ஸ் (Renewables). அதாவது சோலார், விண்ட் போன்றவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல நாடுகள் ரினூவபல் எனர்ஜியில் முதலீடு செய்து வருகின்றன. பழைய தெர்மல் பிளாண்டுகளை மூடியும் வருகின்றன. இந்த மாற்றம் இந்தியாவின் ஜென்கோஸ்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் பவர் பிளாண்டுகளின் இன்ஸ்டால்டு கபாசிடி வைத்து பார்த்தால் தெர்மல் கிட்டதட்ட 65%, ஹைட்ரோ 14.5%, ரினூவபல்ஸ் 16.2% (நியூக்ளியர் எல்லாம் வெறும் 2%). இப்போதைய முதலீடுகள் பெரும்பாலும் ரினூபவல்ஸ் ஏரியாவில்தான், அதிலும் முக்கியமாக சோலார் பவர்.

2012ல் ரினூவபல் கபாசிடி 24500 மெகாவாட்டுகள். 2017ல் 57000 மெகாவாட்டுகள். 2018ல் 69000 மெகாவாட்டுகள். முக்கியமாக மோடி அரசு சோலார் மின்சாரத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. அதுதான் பிரச்சனைக்கு அடிநாதம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? விவரமாக சொல்கிறேன். (படத்தை கவனமாக பார்க்கவும். UPA2, NDA அரசுகளின் கீழே Growth% கவனிக்கவும். NDA ஆட்சியில் ரினூவபிலில் இருக்கும் அசுர வளர்ச்சியையும் கவனிக்கவும்)

ஆரம்பகாலத்திய டெக்னாலஜியில் ரினூவபல் மின்சாரம் விலை அதிகம். தெர்மல் மின்சாரம் விலை குறைவு. ஆனால், இப்போது டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு பிறகு ரினூவபல் மின்சாரம் விலை வெகுவாக குறைந்து விட்டது.

வேறுவிதத்தில் சொன்னால், தற்போதைய தெர்மல் மின்சாரம் மொத்தத்தையும் ரினூவபல் மின்சாரத்தின் விலையில் வாங்கினால் டிஸ்காம்களுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய்கள் மிச்சமாகும். தற்போதைய ரினூவபல் மின்சாரம் அவ்வளவு சீப்…!

உதய் திட்டம், லாபத்தை நோக்கமாக, அளவுகோலாக கொண்டு டிஸ்காம்களை குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்க தூண்டுகிறது. இப்போது, டிஸ்காம்கள் தெர்மல் மின்சாரம் வாங்குவார்களா, அல்லது குறைந்த விலையில் ரினூவபல் மின்சாரம் வாங்குவார்களா?

இன்னொரு விஷயமும் இருக்கிறது. ரினூவபல் மின்சாரத்தை மட்டுமே எடுத்து கொண்டாலும், ஆரம்ப காலத்து ரினூவபல் மின்சாரத்தின் விலை அதிகம். சமீபத்திய ரினூவபல் மின்சாரத்தின் விலை குறைவு. டிஸ்காம்கள் ஆரம்பித்தில் போட்ட PPA-க்களின் (Power Purchase Agreement) விலையில் மின்சாரம் வாங்க மறுக்கின்றன. இந்த PPAக்கள் 25 வருட காலத்திற்கு போடப்பட்டவை. (முக்கியமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் முந்திரிக்கொட்டை போல ஆரம்பகாலத்திய ரிடனூபவலில் ஏகத்துக்கும் இறங்கிவிட்டன. இப்போது விலையை குறைக்க கேட்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் மத்திய அரசும் இதே போல அவசர கதியில் இறங்குவதை கவனிக்கலாம்)

இந்த PPAக்கள் அடிப்படையில்தான் முன்னர் பிராஜெக்டுகள் தொடங்கப்பட்டன… கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது 40GW பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட 25GW பிராஜெக்டுகளுக்கு PPA-க்களே போடப்படவில்லை.

சரி, தெர்மல் பிளாண்டுகளில் முதலீடுகள் அடியோடு நிறுத்துப்பட்டுவிட்டனவா? அதுதான் இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி தெர்மல் பிளாண்டுகள் ஒரு பக்கம் கட்டப்பட்டு கொண்டிருகின்றன. அவற்றின் எதிர்காலம் என்னவாகும்?


இனி இந்திய பவர் செக்டாரின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பொறுமையாக பார்ப்போம்.
இந்தியா இப்போது உலகிலேயே மின் உற்பத்தியிலும் மின் நுகர்விலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிடம் சைனா 6000 டெராவாட்டுகள், இரண்டாமிடம் அமெரிக்கா 4300 டெராவாட்டுகள், மூன்றாமிடம் இந்தியா 1400 டெராவாட்டுகள். இந்தியாவில் இன்னும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வரவில்லை. இன்னுமும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற போகிறது. அப்போது மின்தேவை எவ்வளவு இருக்கும்?

சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்தால் ரினூவபல்ஸ்தான் எதிர்காலம். இப்போது கிடைக்கும் டெக்னாலஜியை கொண்டு ரினூவபல்ஸில் முதலீடு செய்கிறார்கள். ஒரு யூனிட் 2 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். நாளையே டெக்னாலஜி வளருகிறது. ஒரு யூனிட் 50 பைசாவுக்கு கிடைக்கலாம். தற்போது முதலீடு செய்பவர்கள் அப்போது நஷ்டத்தில போய்விடுவார்கள், அல்லவா?

அப்படியானால் என்ன செய்யவேண்டும்? உதய் திட்டத்திலே டிஸ்காம்களை ஒரு வர்த்தக போட்டியிலே, லாப நோக்கத்திலே அரசு தள்ளுகிறது. குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவது டிஸ்காம்களுக்கு லாபம். ஆனால், ஜென்கோஸ்களுக்கு நஷ்டம். இந்த நஷ்டம் பழைய டெக்னாலஜி ரினூவபல்ஸ்க்கும் வருகிறது.

இந்த லாப நோக்கத்தை கைவிட்டுவிட்டு, ஜென்கோஸ், டிஸ்காம், நுகர்வோர் இந்த மூவருக்கும் நிலையான பலன் தரும் திட்டங்கள்தான் நமக்கு தேவை. குறுகிய கால லாப நோக்கில் தீட்டப்படும் திட்டங்கள், நீண்ட கால முதலீடுகளை அழித்துவிடும். இன்றைய ஜென்கோஸ்களின் திண்டாட்டம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். காரணம், டெக்னாலஜியின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் மின்சார விலை குறையும் வாய்ப்பு/ ரிஸ்க் இருக்கிறது என்றால் எந்த முதலீட்டாளர் நீண்டகால முதலீடுகளை செய்வார்? இது மின்சாரத்துறையின் நீண்டகால நலனுக்கு எதிரானது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான துறையினை, வோட்டு அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. டிஸ்காம்களின் நஷ்டம் பல்லாயிரம் கோடிகள் குறைந்துவிட்டது என்று விளம்பரப்படுத்துவதும், பேட்டிகள் கொடுப்பதும் வோட்டுகளை கொண்டுவரலாம். ஆனால், கண்டிப்பாக நாட்டிற்கு முன்னேற்றத்தை கொண்டுவராது.
உதய் திட்டத்தை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். ஆனால், as usual the devil is in details. ஜென்கோஸ்களின் cash flow பிரச்சனை, டெக்னாலஜி பாய்ச்சல், மின்துறையில் NPA என்று பல விஷயங்களை காணும்போது, மத்திய அரசின் செயல்பாடு மின்துறையின் நீண்டகால குறிக்கோள்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
 

மின்சாரம் அனைவருக்கும் வேண்டும். அதில் சந்தேகமேயில்லை…. ஆனால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தில்தான் அது நடக்குமானால், அது சந்தை பொருளாதாரம் கிடையாது… நீண்ட கால வளர்ச்சிக்கும் அது உதவாது. இதை மனதில் கொண்டே மத்திய அரசு அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும்.


Monday 6 August 2018

Kiki – Cochin man – Jaipur Police


கொச்சியை சேர்ந்த ஜவஹருக்கு ஏகப்பட்ட போன் கால்கள்… பல வருடங்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட அவருக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்கள். அவர் பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட போன்கால்கள்.

காரணம், ஜெய்ப்பூர் போலீஸ் வெளியிட்ட ஒரு விளம்பரம்… கிகி சேலன்ஜ் செய்யும்போது உயிரிழந்த வாலிபர் என்று ஜவஹரின் படம் போட்டு விளம்பரம் வந்திருந்தது.

ஆனால், ஜவஹர்தான் உயிரோடு இருக்கிறாரே…! அதுதான் காமெடி…! ஜவஹரின் உறவுக்காரர் ஒருவர் விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுப்பவர். ஒரு நாள் கேஷுவலாக ஜவஹரை போட்டோ எடுத்தவர், அதை ஷட்டர்ஸ்டாக் என்னும் வலைத்தளத்திலே வெளியிட்டார். அந்த தளம் போட்டோக்களை விற்பனை செய்யும் ஒரு பிரபல தளம். ஜெய்ப்பூர் போலீஸ் மாடர்ன் லுக்கில் இருக்கும் ஜவஹரின் போட்டோவை எடுத்து அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டது.

ஜெய்ப்பூர் காவல்துறையை பொருத்தவரை அவர்கள் காசு கொடுத்துதான் போட்டோ வாங்கினார்கள்…. அதை விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வாதம். இது சரியான வாதமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன கிகி சேலன்ஜ்? Drake என்னும் பாடகர் ‘In my feelings‘ என்றொரு வீடியோ பாடலை வெளியிட்டார். Shiggy என்றொரு சோஷியல் மீடியா ஸ்டார் (18 லட்சம் followers) அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார்.  Shiggy- யின் வீடியோவினால் அந்த பாட்டு செம பிரபலம் ஆனது.
Shiggy and Drake

ஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் சும்மா இல்லாமல் ஒரு பாலத்தின் மேல் ஏறி அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அதையும் வீடியோ எடுத்து போட்டார். அதிலிருந்து ‘Kiki Challange’  அல்லது ’Shiggy Challenge’ ஆரம்பித்தது.

சும்மா அந்த பாட்டிற்கு நடனம் ஆடாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். ஓடுகிற காரில் இருந்து கீழே இறங்கி நடனம் ஆடவேண்டும்…. நடனம் ஆடி கொண்டே காரை தொடரவேண்டும். இதுதான் தற்போதைய சாலன்ஜ்.

இந்த கூத்திலே பலருக்கு அடிபடுகிறது… மோசமான விபத்துகள் நடக்கின்றன. Shiggy – யே ஒரு தொலைக்காட்சி பேட்டியிலே ஜாக்கிரதையாக நடனமாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நம்மூரிலும் கிகி சேலன்ஜ் கூத்து ஆரம்பித்தது. அதனால்தான், ஜெய்ப்பூர் போலீஸ் கிகி சேலன்ஜிற்கு எதிராக விளம்பரம் வெளியிட, கொச்சினில் இருக்கும் ஜவஹருக்கு போன்கால்கள் குவிந்தன.

இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாவின் பவர் என்ன என்பதை ஜவஹர் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஜவஹரோ, “பரவாயில்லையே, நான் இறந்தால் இத்தனை பேர் விசாரிக்கிறார்களே…?“ என்று நடந்ததை பாஸிட்டிவ்வாக எடுத்து கொண்டு போய்விட்டார்.

Tuesday 31 July 2018

NSE and Sharemarket reforms


90-களில் நரசிம்மராவும், மன்மோகனும் சேர்ந்து செய்த பல பொருளாதார சீர்திருத்தங்களில் முக்கியமான ஒன்று, பங்கு சந்தையை நவீனமயமாக்கியதே.

24 ஆண்டுகளுக்கு முன்பு (23.7.94), NSE  ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை BSEதான் நாட்டிலேயே பெரிய பங்குசந்தை. உண்மையிலேயே சந்தைக்கடை போல கூவிக்கூவித்தான் பங்குகளை வாங்க/ விற்கவேண்டும். பேப்பரில்தான் பங்கு சர்டிபிகேட்டுகள். Delivery default-கள் அதிகம்.

NSE அவற்றையெல்லாம் மாற்றியது. முதன்முறையாக Screen Based Trading அறிமுகப்படுத்தப்பட்டது. கம்ப்யூட்டரில் விலையை போட்டால் உங்கள் ஆர்டரோடு பொருந்தும் இன்னொரு ஆர்டரை கம்ப்யூட்டர் மேட்ச் செய்தது.

மன்மோஹன் NSE-ஐ தொடங்கிவைக்கிறார்
ஆரம்பத்தில் NSE சந்தையை ஒருத்தரும் மதிக்கவில்லை. NSE-ல் வர்த்தகம் ஒரு நாளைக்கு 10 கோடிதான். BSE-ல் வர்த்தகமோ 200-250 கோடி. ஒரு பங்கு சந்தை வளர வர்த்தகம் முக்கியம். வர்த்தகம் அதிகமாக இருந்தால்தான், நீங்கள் பங்குகளை எளிதாக வாங்கவோ, விற்கவோ முடியும். இதை Liquidity என்பார்கள். ஆக, liquidity இருந்தால்தான் நீங்கள் அந்த சந்தைக்கு போவீர்கள். உங்களை போன்ற பலர் சந்தைக்கு வந்தால்தான் liquidity பெருகும். Chicken or Egg பிராப்ளம்தான்.

NSE இதை அனாயசமாக சமாளித்தது. Screen based trading  புரோக்கர்களை ஈர்த்தது. எட்டே மாதத்தில் BSE-க்கு நிகரான வர்த்தகம், 18 மாதங்களில் BSE போல ஒன்றரை மடங்கு வர்த்தகம். கொஞ்சம் கொஞ்சமாக BSE  ஆதரவு புரோக்கர்கள் NSE வசம் வந்துவிட்டார்கள்.

சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பங்குகளை டிமாட்டாக (Demat) வைத்து கொள்ள, 96-ல் NSDL ஆரம்பிக்கப்பட்டது. அதே போல பங்கு வர்த்தகத்தில் default வராமல் இருக்க NSCCL ஆரம்பிக்கப்பட்டது. இவையிரண்டும் சேர்ந்து T+2 செட்டில்மெண்டுக்கு வழிவகுத்தது. (T+2 என்றால் நீங்கள் பங்குகள் வாங்கிய இரண்டு நாட்களில் உங்கள் டிமாட் அக்கௌண்டுக்கு பங்குகள் வந்துவிடும் என்று அர்த்தம்)

இவற்றுக்கெல்லாம் முன்பேயே 92ல் SEBI ஆரம்பிக்கப்பட்டு, பங்குச்சந்தைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தரப்பட்டது.

இவையனைத்தையும் செய்தது காங்கிரஸ்தான் என்பதை மறக்கக்கூடாது. காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்பவர்களுக்காக சொல்கிறேன்.

எதற்காக பழைய கதை என்றால், NSE ஆரம்பித்து 24 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது இரவு நேரத்திலும் டிரைவேடிவ் வர்த்தகம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு வெற்றியடையும் என்று தெரியவில்லை.

காரணம், Cash Market எனப்படும் உண்மையான பங்குச்சந்தை இரவிலே இயங்காது. பங்குகளின் விலையை அடிப்படையாக வைத்துதான் டிரைவேடிவ் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆக, Cash market இல்லாது derivative market சிறக்காது.

இரவு பொழுதில் நிறைய பேர் வர்த்தகம் செய்யமாட்டார்கள். அதனால் கமிஷன் கட்டுபடியாகாது என்கிறார்கள் புரோக்கர்கள். எப்படியிருப்பினும் இது NSE-ன் புது முயற்சி…!

Monday 30 July 2018

VVPAT for 2019


2019 தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் VVPAT கொண்டு தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2017 ஏப்ரலில், தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டிலே சொன்னது.

இதையடுத்து Bharat Electronics Ltd (BEL) மற்றும் Electronics Corporation of India Ltd (ECIL) ஆகிய இரண்டு கம்பெனிகளிடம் 16.15 VVPAT யூனிட்டுகள் செய்து தரச்சொல்லி தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்தது.

நாளது தேதி வரையில் 3.5 லட்சம் யூனிட்டுகள்தான் ரெடியாகி இருக்கின்றன. தயாரிப்பு வேகத்தில் BEL ஆமை, ECIL நத்தை.

இப்போ 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்படி நடக்கப்போகிறது? EVM, VVPAT அல்லது Ballot Paper?

Monday 23 July 2018

Jobless Growth


இந்தியாவில் அமைப்பு சார்ந்த வேலைகளில் (Formal Employment) இருப்பவர்கள் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. 2017ல் 40.67 கோடி பேர் பணிபுரிந்த இடத்தில் தற்போது 40.62 கோடி பேர் பணிபுரிகிறார்களாம். அதாவது, வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை, புதிதாக வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கையை விட 5 லட்சம் அதிகம். இது formal sector மட்டும் என்பதை கணக்கில் கொள்ளவும். Informal sector-ல் இன்னமும் அதிகமாக இருக்கக்கூடும்.

மார்ச் மாதமே இதுகுறித்து பதிவு போட்டிருந்தேன். https://www.facebook.com/vijayasarathy.rao/posts/1680577802035035. கூடிய விரைவில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த வருடம் ஒரு காலாண்டு கழிந்த பின்னரும் ராக் பாட்டம் எனப்படும் அடிமட்டம் தொடப்படவில்லை.

சென்ற வருடத்தோடு ஒப்பிடுகையில் புதிய முதலீடுகள் 38% குறைந்துவிட்டன. ஏற்கனவே ஆரம்பித்த பிராஜெக்டுகளும் முடியாமல் தாமதமாகி கொண்டிருக்கிறது. சென்ற வருடம் (17-18) FDI 15% குறைந்துவிட்டதாக தெரிகிறது. பொருளாதாரம் Demo, GST பாதிப்பிலிருந்து இன்னும் வெளிவரவில்லை.


வேலைவாய்ப்புகள் மீண்டும் வர எத்தனை மாதங்களாகுமோ? இதில் புதிய வேலைவாய்ப்புகள் என்று நாடாளுமன்றத்தில் மோடி சொல்வதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை? Jobless growth யாருக்கு நன்மை?


Friday 20 July 2018

Chinese Yuan and Indian Exports


அமெரிக்கா சீனபொருட்கள் மீது வரிவிதித்ததாலோ என்னவோ, சீனா நைஸாக தன் கரன்ஸியின் மதிப்பை குறைத்து கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 8% மதிப்பு குறைந்துவிட்டது. இது சீனாவின் ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான விஷயம்.

யானையும் யானையும் சண்டை போடும்போது கோழி நசுங்குவது போல, நடுவிலே 
இந்திய ஏற்றுமதி அடிபடும். ஒருவேளை டாலருக்கு எதிராக ரூபாய் விழுவது மத்திய அரசின் ராஜதந்திரமா அல்லது காலி பெருங்காய டப்பாவா?

யுவான் ஏப்ரலிலிருந்து விழுகிறது… அதாவது, அமெரிக்கா சீன பொருட்கள் மீது வரிவிதிப்பை முன்மொழிந்த நாளிலிருந்து….!

அதற்கு மாறாக ரூபாய் ஜனவரியிலிருந்து விழுகிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள் – ஏற்றுமதி – இறக்குமதி வித்தியாசம், க்ரூட் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்ததும்/ வெளியேறுவதும்.

ஸோ, சீனாவை சமாளிக்கும் விதமாக ரூபாய் மதிப்பு விழவில்லை… காலி பெருங்காய டப்பாதான்…!

Wednesday 18 July 2018

Demonitisation Overtime Pay


டிமானிடைஸேஷன் (Demo) சமயத்தில் வங்கி ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் வேலை செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அத்தனை கூட்டத்தையும் சமாளித்து, மை வைப்பது, ஐடென்டிடி ஆதாரம் வாங்குவது என்று மத்திய அரசு செய்த அத்தனை கோமாளித்தனத்திற்கும் ஈடு கொடுத்தனர். வாடிக்கையாளர்களின் கோபத்தையும் அவர்களே எதிர்கொண்டனர்.

அதிக நேரம் வேலை செய்த அவர்கள் ஓவர்டைம் சம்பளம் கேட்டனர். நியாயமான கோரிக்கை…! அனைத்து வங்கிகளும் ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் கொடுத்ததா என்று தெரியவில்லை. கனரா வங்கியில் இந்த பிரச்சனை இன்னும் தொடர்வதாக தெரிகிறது. (படம் பார்க்கவும்)

கடந்த ஏப்ரல் 1, 2017 அன்று, SBI வங்கியுடன் அதன் subsidiary வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஹைதராபாத், மைசூர், ட்ரிவாங்கூர் மற்றும் பிகானிர் & ஜெய்ப்பூர் ஆகியவை இணைக்கப்பட்டன.

இதன்பின்னர், SBI வங்கி தனது ஊழியர்களுக்கு 17000-30000 ரூபாய் (ஊழியரின் நிலைகேற்ப) Demo ஓவர்டைம் சம்பளம் தந்தது. இப்போது இணைக்கப்பட்ட அந்த ஐந்து வங்கியை சேர்ந்த 70000 ஊழியர்களிடமிருந்தும் SBI ஓவர்டைம் காசை திருப்பி கேட்கிறது…!

Demo சமயத்தில் இந்த வங்கிகள் SBI-உடன் இணைக்கப்படவில்லை. இணைப்பு நடந்தபின்தான் Demo ஓவர்டைம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. “நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு மட்டும்தான் ஓவர்டைம் சம்பளம் வழங்கினோம். மற்ற ஊழியர்களுக்கு ஓவர்டைம் சம்பளம் தந்திருக்க வேண்டியது பழைய நிர்வாகத்தின் பொறுப்பு” என்பது SBI வாதம்.

Demo ஓவர்டைம் சம்பளம் கொடுப்பது குறித்து பலகாலம் விவாதம் நடந்ததாக நினைவு. கனரா வங்கியில் இன்னும் பிரச்சனை இருக்கிறதல்லவா? அப்படி இருக்கும் பட்சத்தில் SBI வங்கியின் வாதம் சரியில்லை…!

பழைய வங்கிகளின் அனைத்து சொத்துக்களையும், கடன்களையும் SBI ஏற்றுக்கொண்டுதான் இந்த இணைப்பு நடந்துள்ளது. பழைய நிர்வாகத்தில் ஓவர்டைம் சம்பளம் குறித்து முடிவெடுக்காததோ, பாலன்ஸ் ஷீட்டில் நிதி ஒதுக்காததோ ஊழியர்கள் தவறில்லை. (இணைப்பு சமயத்தில் யூனியன்கள் இதை கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தன?) யூனியன் தவறிழைத்திருந்தாலும் ஊழியர்கள் உழைத்தது உண்மைதான்…. அதற்கு பணம் தரவேண்டியதும் நியாயம்தான்.

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளரையும், ஊழியரையும் திருப்திப்படுத்திதான் லாபம் ஈட்ட பார்க்கும். இந்த SBI வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களையும் சிரமப்படுத்துகிறது…. ஊழியர்களையும் சிரமப்படுத்துகிறது….! என்ன டிசைனோ?

Tuesday 17 July 2018

Minimum Support Price


சமீபத்தில் மத்திய அரசால் விவசாய பொருட்களுக்கான MSP அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50% விலை என்னும் தேர்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றிவிட்டது என்று பாஜகவினரும், இந்த MSP கணக்கு ஏமாற்று வேலை என்று எதிர்கட்சியினரும் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை கொஞ்சம் அலசியிருக்கிறேன். 
ராகுல்காந்தி ஒரு கணக்கு சொல்கிறார். இந்தியாவில் 12 கோடி விவசாயக்குடும்பங்கள் உள்ளன. பட்ஜெட்டில் 15000 கோடி ரூபாய் MSP-க்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு விவசாய குடும்பத்திற்கு சராசரியாக 1250 ரூபாய் மட்டுமே. இதனால் பயன் ஏதும் இல்லை என்கிறார். 
இந்த கணக்கு சரியா? தவறு. முதலில் 15000 கோடி என்பது அதிகரிக்கப்பட்ட MSPக்கான ஒதுக்கீடு. இதை மொத்த ஒதுக்கீடு போல பேசக்கூடாது. இரண்டாவது, இது ஆப்பிளையும், ஆரஞ்சையும் கம்பேர் செய்யும் பேச்சு. MSP என்பது பயிர்களின் உற்பத்தி அடிப்படையில் தருவது. விவசாய குடும்பம் அடிப்படையில் அல்ல. ஆக, ராகுலின் வாதத்தில் சாரம் இல்லை. 
இவ்வளவு MSP அதிகரிப்பதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை (Fiscal Deficit) அதிகரிக்கும் என்கிறார்கள். இதற்கு ஜேட்லி, பட்ஜெட்டில் ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்துவிட்டதால் பற்றாக்குறை அதிகரிக்காது என்று அசட்டுத்தனமான விளக்கம் அளித்திருக்கிறார். MSP ஏற்றுவது ஒரு வருட கதையல்ல, ஒவ்வொரு வருடமும் மொய் வைக்க வேண்டும், அல்லவா? 
இப்படி இரண்டு பக்கமும் அசட்டுத்தனமான வாதங்களைத்தான் முன்வைக்கிறார்கள். 
இப்படி MSP ஏற்றப்பட்டிருப்பதால் rural demand அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும் என்பது பாஜகவின் வாதம். UPA அரசு வருடாவருடம் அதிகரித்து வந்த MSP சதவிகிதத்தில்தான் இந்த முறையும் MSP அதிகரித்திருக்கிறது. இதில், விசேஷமாக ஒன்றும் இல்லை. இது வெறும் தேர்தல் விளம்பரம் என்றும் சொல்கிறார்கள். (படத்தை பார்க்கவும், தேர்தல் வருடங்களில் அதிக ஒதுக்கீடு நடப்பதை கவனிக்கவும்) 
இன்னொரு பக்கம், அதிகரிக்கப்பட்டிருக்கும் MSP தவறான பார்முலா… இந்த MSP விவசாயிகளுக்கு போதாது என்றும் கிளம்பியிருக்கிறார்கள். அதையும் பார்க்கலாம். 
இந்தியாவில் விவசாயம் தொடர்ந்து பொய்த்ததால் 2004ல் M.S. சுவாமிநாதன் தலைமையிலே ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 வரை இந்த கமிஷன் 5 அறிக்கைகளை சமர்ப்பித்தது. அதில் ஐந்தாவது அறிக்கையில், Weighted Average Cost of Production-ஐ விட 50% அதிகமாக MSP இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், Weighted Average Cost of Production என்றால் என்னவென்று சொல்லவே இல்லை என்பது சிறப்பு. இங்கே முக்கியமாக இரண்டு பார்முலாக்கள் வருகின்றன. ஒன்று A2+FL, இன்னொன்று C2. A2+FL என்பது உற்பத்திக்கு செலவழித்த தொகையும், உற்பத்திக்காக வேலை செய்த விவசாய குடும்பத்தின் Notional கூலியும் சேர்ந்தது. C2 என்பது Comprehensive Cost. விவசாய நிலத்திற்கான குத்தகை பணம், அல்லது சொந்த நிலமாக இருந்தால் Notional வாடகை மற்றும் உபகரணங்களின் தேய்மானம் ஆகியவை வரும்.

மோடி அவர்கள் 2014 பிரச்சாரத்தில் Cost + 50% என்று வாக்குறுதி அளித்தார். உஷாராக, A2+FL, C2 குழப்பத்திற்குள் அவர் போகவில்லை. அவர் அறிவித்தபோதே பல பயிர்களின் MSP A2+FL விட 50% அதிகமாகத்தான் இருந்தது. ஆக, அவர் சொன்னது C2தான் என்பது விவசாயிகளின் வாதம். M.S. சுவாமிநாதனும் தான் அறிக்கையிலே குறிப்பிட்டது C2தான் என்று தற்போது விளக்கமளித்துள்ளார்.

அப்போது, C2+50%தானே அரசு அறிவித்துள்ள MSPயாக இருக்கவேண்டும். அதுதான் கிடையாது…! அரசு கூறியுள்ளது A2+FL+50%தான். காரணம் A2+FL மற்றும் C2 இடையேயான தொகை வித்தியாசம் அதிகம். அரசுக்கு C2 கண்டிப்பாக கட்டுப்படியாகாது. (படம் பார்க்கவும்)

சில நிபுணர்கள் அடிப்படையிலேயே கைவைக்கிறார்கள். அதாவது, பயிரை பொறுத்து பணம் தரும் திட்டங்கள் கூடாது. மாறாக, விவசாயியை பொறுத்து பணன் தரும் திட்டங்கள் வேண்டும் என்கிறார்கள் (Crop based vs Farmer based schemes). ஐரோப்பிய நாடுகள் தற்போது farmer based formula-விற்கு மாறிவிட்டனவாம். இதன் மூலம் பணக்கார விவசாயிகளுக்கு பதிலாக ஏழை விவசாயிகளுக்கு பலன் போய் சேரும்.

பொதுவாக Cost plus பார்முலாக்கள் திறனின்மையை (Ineffeciency) வளர்க்கும் என்பார்கள். அது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதில் விவசாயிகளுக்கு உண்மையான பலன் இருக்கிறதா? அதை வரும் தேர்தல்கள்தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முன் விவசாயிகளை தாஜா செய்வது பாஜக பார்முலா. இதுவும் அதில் சேர்த்திதான்.

இந்த திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா என்பதை அறிய சில வருடங்கள் தேவைப்படலாம். அதற்குமுன் இதை விமர்சிப்பதோ பாராட்டுவதோ சரியல்ல.

Friday 13 July 2018

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்டு...!


வரிவிதிப்பு தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்குமல்லவா….? இது போன்ற வழக்குகளில், அப்பீல் போவதற்கான வரம்பை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 29600 நேரடி மற்றும் மறைமுக வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் அரசால் திரும்ப பெறப்படும்.

இதனால், வழக்குகளில் கோரப்பட்ட 5600 கோடி ரூபாய் (Disputed Amount) அரசுக்கு வராது. இதை இழப்பு என்று சொல்லமுடியாது… ஆனாலும், அரசு விட்டு கொடுத்ததாய் எடுத்து கொள்ளலாம்.

முன்பொரு முறை GST காரணமாக புதிய வழக்குகள் நிறைய வந்து சேரும் என்று பதிவிட்டிருந்தேன். ஏற்கனவே குவிந்த வழக்குகளை குறைக்கும் முயற்சியை மத்திய அரசு செய்துள்ளது. நல்ல விஷயம், மத்திய அரசிற்கு பாராட்டுகள்...!

இதற்கு முன்னதாகவும் விரைவாக assessment முடிப்பதை ஊக்கப்படுத்தும் விதத்தில், அதிகாரிகளின் performance appraisal முறைகளையும் அரசு மாற்றியமைத்திருந்தது.

அரசின் போக்கு இப்படி இருந்தாலும், அதிகாரிகளின் போக்கு மாறினாற் போல தெரியவில்லை.  கடந்த மே மாதம், தாக்கல் செய்யப்பட்ட இரண்டு GST return-களுக்கு இடையே 78 பைசா வித்தியாசம் இருந்ததற்காக ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

GST குறித்த புரிதல் இன்னும் சிறு, குறு வியாபாரிகளுக்கு வரவில்லை… சின்ன சின்ன விஷயங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, பெனால்டி போடுவது போன்ற நடவடிக்கைகளிலிருந்து அதிகாரிகள் விலக வேண்டும். மத்திய அரசு இதற்கும் வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday 12 July 2018

கல்வி – அந்த காலமும் இந்த காலமும்


பகுதி 1 - முன்னுரை
சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்தேன். சுவையான சந்திப்பின் நடுவிலே, நண்பர் சீரியஸான இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
நண்பர் எழுப்பிய கேள்விகளில் ஒன்று, Morality மற்றும் Ethics குறித்தது. இன்னொரு கேள்வி, பண்டைய இந்தியாவின் கல்வி குறித்து.
இரண்டாவது கேள்வி என்னை மிகவும் சிந்திக்க தூண்டியது. அந்த காலத்தைய குருகுல நடைமுறைகள் குறித்து காஞ்சி பெரியவாள் தெய்வத்தின் குரலில் கூறியிருந்த விஷயங்களை மீண்டும் படித்து பார்த்தேன். இன்றைய கல்வி கற்பிக்கும் முறைகளையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
காஞ்சி பெரியவாளின் தெய்வத்தின் குரல், உபநிஷதங்கள், மஹாபாரதம் இவற்றை அடிப்படையாக வைத்து, நம்மிடையே இருந்த கல்விமுறை குறித்து பதிவு செய்திருக்கிறேன்.
இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை தொடரவேண்டாம்...! பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க கல்வியை குறித்தது... மாறாக ஜாதியை முன்வைத்து கிண்டலடிக்கும் கமெண்டுகள் கண்டிப்பாக நீக்கப்படும். கல்வி குறித்த விவாதங்கள் மட்டுமே வரவேற்கப்படும்.

பகுதி 2 – படிப்புக்கு கூலி என்ன?
பண்டைய கால கல்வி குறித்த இந்த பதிவில், முதலில் ஆசிரியர் என்னும் அர்த்தம் தரும், ஆசார்யர், உபாத்யாயர் என்னும் இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.
ஆசார்யர் என்பவர் காசுக்காக இல்லாமல் வித்தையை தானமாக கொடுப்பவர். அந்த காலத்தில் குருகுல வாசம் முடிந்த பின்னர் குருதக்ஷிணை என்று மாணவன் தருவதை ஆசார்யர் வாங்கி கொள்ளுவார்.
வித்தையை தானம் செய்வது என்னும் கான்செப்ட் வேறு கலாச்சாரங்களில் இருந்ததா என்று தெரியவில்லை. வித்தை அடுத்த தலைமுறையை சேரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டவர் ஆசார்யர்.
உபாத்யாயர் என்பவர் fees வாங்கி கொள்பவர். இவரை ‘ப்ருதக அத்யாபகர்’ (Bhruthaka) அதாவது கூலிக்கு வேலை செய்பவர் என்று மனு கண்டிக்கிறார்.
குரு தக்ஷிணை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம்... அது வெறும் டோக்கன்தான். பசு, நிலம், தங்கம் போன்ற காஸ்ட்லி தக்ஷிணைகளுக்கு நடுவில் கொஞ்சம் தானியம், காய்கறி, குடை, செருப்பு ஆகிய எது கொடுத்தாலும் அது தக்ஷிணைதான்.
அந்த காலத்து படிப்பு என்பது முடிய பொதுவாக 12 ஆண்டுகாலம் ஆகுமாம். இந்த பன்னிரெண்டு ஆண்டு காலமும் கூடவே தங்க வைத்துக்கொண்டு, சோறு போட்டு, வித்தையும் சொல்லித்தருபவரே ஆசாரியன்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள், இந்த காலத்தில் 12 வருடங்களுக்கு ஹாஸ்டலில் தங்கவைத்து, சாப்பாடு போட்டு, படிப்பும் சொல்லி தந்து ஒரு கூடை காய்கறியையோ, ஒரு ஜோடி காலணியையோ கட்டணமாக தந்தால் எந்த கல்வி தந்தையாவது ஒப்புக்கொள்வாரா?
சரி குருதக்ஷிணை எப்போது கிடைக்கும்?
குருதக்ஷிணை என்பது சிஷ்யன் ‘கற்று கொண்டாய் விட்டது’ என்ற திருப்தியில் தருவதல்ல... மாறாக ‘கற்று தந்தாகிவிட்டது’ என்ற திருப்தியில் ஆசார்யர் பெறுவது. உதாரணமாக, யாக்ஞவால்கியர் என்னும் ரிஷி உபதேசம் செய்ய செய்ய, ஜனகராஜா தக்ஷிணை வைக்கிறார். யாக்ஞவால்கியரோ, உபதேசம் முழுவதும் செய்து முடியாமல் தக்ஷிணையை ஏற்கமாட்டேன் என்று ஏற்க மறுக்கிறார். (பிருஹதாரண்யக உபநிஷதம்).
இதைத்தான் குருதக்ஷிணையாக கொடுக்கவேண்டும் என்று முன்கூட்டியே பேசிவைத்துக்கொண்டு பாடம் ஆரம்பிக்கவும் கூடாது. அப்படி செய்யும் அந்தணனை, சிராத்தம் முதலிய சடங்கிற்கு கூப்பிடக்கூடாது என்று மனு கூறியிருக்கிறார். அதாவது, அப்படிப்பட்ட குருவிற்கு எந்த மதிப்பும், மரியாதையும் கிடையாது.
இந்த காலத்தில் இரவு முழுவதும் க்யூவில் நின்று, அப்ளிகேஷன் வாங்கி, டொனேஷன் கொடுத்து ப்ரீகேஜியில் சேர்க்கும் காட்சி கண் முன்னே வருகிறதா?

பகுதி 3 – தனிநபர் சார்ந்த கல்வி
அந்த காலத்து குருகுலம் என்பது ஒரு நிறுவனம் கிடையாது. It is not an institution. மாறாக அது ஒரு தனிநபரால் நடத்தப்படுவது. ஏன் அப்படி வைத்தார்கள் என்றால் ஆசார்யருக்கான தகுதி வரையரை அப்படி. ஆசார்யருக்கு மூன்று தகுதிகள் இருக்க வேண்டும்.
ஆசார்யர் தெளிவாக கற்றிருக்க வேண்டும். கற்றதை வாழ்க்கையில் ஒழுக வேண்டும். மற்றவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க செய்யவேண்டும்.
கற்க கசடற, நிற்க அதற்கு தக – இந்த இரண்டும் மாணவனுக்குதான். கூடுதல் கடமையாக ஆசிரியர் மாணவனை ‘அதற்கு தக’ நிலைநிறுத்த வேண்டும். மூன்றாவது விஷயம் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான், குருகுலத்தை தற்போதைய educational institution போல நிறுவனமாக நடத்தாமல் தனிமனித ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டே நடத்தியிருக்கிறார்கள். அதாவது, ஆசார்யர் என்பவர் Role Model. அவரை பார்த்து மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை அதே அடிச்சுவட்டில் அமைத்துகொண்டனர்.
தற்காலத்தில் நல்லாசிரியர்கள் அதிக அளவில் இல்லை என்பதும் ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. Role Model என்று சொல்லப்படும் தகுதிநிலையை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள் என்பதும் நிதர்சனம், அல்லவா?
அதோடு மாணவர்கள் ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்க போவதில்லை. நேரத்திற்கு வந்து பாடம் எடுத்தாலே, ஆசிரியர் அவரது கடமையை செய்தவராகிறார். இதில் என்ன ரோல் மாடல் இருக்கிறது? வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதில் தர்மம் தவறாமல் நடந்து கொள்ளுதல், கோபம், பொறாமை போன்ற தீயக்குணங்களை தவிர்த்தல், இடைவிடாத சமய ஒழுக்கம் இவைகளெல்லாம் தனிப்பட்ட வாழ்விலிருந்துதான் கற்று கொள்ளமுடியும்.
இன்னும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்... பிள்ளையின் முக்கியமான வளரும் பருவத்தில் எந்த தகப்பனாவது குருகுலம் என்று வேறொருவரிடம் 12 ஆண்டுகள் அனுப்புவாரா? முக்கியமான டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளை வேறொருவரிடம் வளரவேண்டும்... அப்படியானால் அந்த குருவின் நடத்தை எப்படி இருக்கவேண்டும்?
குரு என்பவர் வெறும் புத்திசாலியாக மட்டும் இருந்தால் போதாது, ஒழுக்கமானவராக இருக்கவேண்டும்.... அதோடு, அன்பானவராக இருந்தால்தான் குழந்தைகளை ஒழுக்கம் தவறாமல் வளர்த்து, கல்வியும் கற்று தரமுடியும்.
ஒழுக்கத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று மாணவர்களை அடிக்கக்கூடாது என்பது சாஸ்திரம். அப்படி ஒருவேளை மாணவன் ரொம்ப ஒழுங்கீனமாக இருந்து அடிக்கவேண்டி வந்தால் கூட கயிறு, மெல்லிய மூங்கில் குச்சியினால் முதுகில் மட்டும் அடிக்கலாம்... தலையில் எல்லாம் அடிக்கக்கூடாது என்று மனு கூறுகிறார்.
இந்த காலத்தில் செய்தித்தாள்களில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது குறித்த செய்திகளை படித்தால் மனம் பதைக்கிறது. அந்த காலத்தில் ஆசிரியருக்கு எவ்வளவு கண்டிஷன்கள்?

பகுதி 4 – நிறுவனம் சார்ந்த கல்வி
சர்வகாலசாலைகள் என்பது அந்த காலத்தில் இல்லையா? வெறும் குருகுலம்தான் இருந்ததா? பௌத்தர்கள்தான் முதலில் கல்வியை institutionalise செய்தவர்கள். அபூர்வமாக இந்துக்களும் கலாசாலை போன்ற அமைப்பை வைத்திருந்தனர். அப்படிப்பட்ட அமைப்பை நடத்தியவர்களை குலபதி என்று அழைத்தனர். கண்வர், வசிஷ்டர் போன்றவர்கள் குலபதி.
குலபதிகளும் fees வாங்கி கொண்டு பாடம் எடுக்கக்கூடாது. ‘யோ அன்ன தானாதி போஷனாத் அத்யா பயதி’ என்பது விதி.
இத்தனை பேருக்கு எப்படி சாப்பாடு போடுவது..?. அதனால் ராஜமான்யங்கள் இருந்தன. கல்வியின் மூலமாக நல்ல குடிமக்களை உருவாக்கி தருவதால் ராஜமான்யம் கிடைத்தது. கல்வி கற்க மாணவர்கள் செலவு செய்ய தேவையில்லை. கல்வி என்பது அன்று அரசாங்க செலவு. நம் நாட்டின் இன்றைய நிலையை பாருங்கள். கல்வி கடன் கிடைப்பது கூட கஷ்டமாக இருக்கிறது.
சரி, படிப்பு எப்படி இருந்தது? படிப்பு என்பது வெறும் அறிவை சார்ந்து இல்லாமல், ஒழுக்கத்தை சார்ந்தே இருந்தது. ஒரு வருஷமாவது குரு தன் கூடவே சிஷ்யனை வைத்து கொண்டு, அவன் குணத்தை பற்றி திருப்தி செய்து கொண்ட பிறகே பெரிய விஷயங்களை சொல்லித்தர வேண்டுமென்பது சாஸ்திரம்.
அப்படி ஒரு வருஷத்தில் திருப்தியடைந்து வித்தை சொல்லி தராமல் குருகுலத்தில் வேலை மட்டும் வாங்கி அனுப்பினால் என்னவாகும்? அந்த மாணவனின் பாவம் அத்தனையும் குருவுக்கு வந்து சேரும் என்பதே விதி..
அது மட்டுமில்லை, ஒருவன் சிஷ்யனாக ஆன பின்பு செய்யும் பாவமும் குருவையே சேரும். கல்வி கற்பிப்பவர் சீடனை நல்வழிப்படுத்தவேண்டும், அல்லவா? அப்படி நல்வழிப்படுத்தும் அளவிற்கு போதனை இல்லாவிட்டால் அதுவும் பாவம்தான்.
சரி வம்பே வேண்டாம் என்று, சிஷ்யனையே சேர்த்து கொள்ளாவிட்டால்...? தகுந்த மாணவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாவம் வந்து சேரும். உதா. தேவர்களின் குருவின் மகனான கசன் என்பவன், அசுரகுருவான சுக்ராச்சாரியடம் கல்வி கற்க வருகிறான். நீ எதிரிக்கூட்டத்தை சேர்ந்தவனாயிற்றே என்று சுக்ராசாரியார் அவனை புறந்தள்ளவில்லை.... அவனை மாணவனாக சேர்த்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியே கிடையாது... தகுதியுள்ள மாணவன் வந்தால் வித்தை கற்று தந்தே தீரவேண்டும் என்பது விதி. (மஹாபாரதம், ஆதி பர்வம்)
படிப்பை விட ஒழுக்கத்திற்கே அதிக மதிப்பு என்பதற்கு ஒரு உதாரணம்... உத்தாலகர் என்னும் குரு தன் மகளான சுஜாதையை, வேதபடிப்பு சரியாக வராத, ஒழுக்கத்தில் சிறந்த கஹோளகருக்கு தருகிறார். (மஹாபாரதம், வனபர்வம்)
எல்லா வர்ணத்தினருக்கும் ஒரே மாதிரி படிப்பு இல்லை என்பது கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம்... இன்னும் கேட்டால் ஒரே வயதில் அனைவரும் குருகுலம் போகவில்லை. அந்தணர்கள் 8 வயதிலும், மற்ற வர்ணத்தினர்கள் சில வருடங்கள் கழித்தும் போனார்கள். இரண்டரை வயதில் ப்ரீகேஜியெல்லாம் நடக்காது.
அவரவர்கள் துறைசார்ந்த கல்வி வழங்கப்பட்டது. ஒரே கல்வி என்பது கிடையவே கிடையாது. நாடெங்கிலும் ஒரே கல்வி என்பதெல்லாம் தற்காலத்திய கோஷங்கள்.
எல்லாருக்கும் கல்வி என்பது கட்டாயம்.... படிக்காதவர்களை ஜாதியை விட்டு விலக்கிவைத்து விடுவார்கள். எல்லா வர்ணத்தினருக்கும் கட்டாய கல்வி என்பது ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. (கல்வியையும் எழுத்தறிவையும் குழப்பி கொள்ள வேண்டாம். அந்த காலத்தில் எழுத்தறிவு அனைவருக்கும் இல்லை. ஆனால், துறை சார்ந்த மகத்தான கல்வியறிவு இருந்தது)

பகுதி 5 – சீடன் எப்படி இருக்கவேண்டும்?
குரு எப்படி இருக்கவேண்டும், நடக்கவேண்டும் என்று பார்த்தோம். சீடன் எப்படி இருக்கவேண்டும்?
தீவிர தாபமில்லாதவன், பக்தி இல்லாதவன், பணிவிடை செய்யாதவனுக்கு போதிக்கக்கூடாது என்று கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். வித்தையானது பாத்திரமறிந்தே தரவேண்டும். நல்லவிதையானது உவர்நிலத்தில் விதைக்கப்படக்கூடாது என்பதே மூலக்கருத்து.
யோக்தையுள்ள சிஷ்யன் கிடைக்கவில்லை என்றால் குரு தன் வித்தையோடு செத்தாலும் சாகலாமே தவிர, என்ன ஆபத்து வந்தாலும் தவறானவர்களுக்கு வித்தையை சொல்லி கொடுக்க கூடாது. (தெ. குரல் 4.28) அப்படி செய்பவன் நரகத்துக்கு போவான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாணவன் தகுதியுள்ளவன் என்பதை எப்படி அறிவது? ஆசார்யர் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி தருவார். பிரம்மசர்யம் காத்து, தவம் செய்து, சொல்லி தந்ததை மனதிலே சிந்தித்த பிறகு மீண்டும் வரச்சொல்லுவார். ஒழுங்காக கற்றுக்கொண்டிருந்தால் மீண்டும் கொஞ்சம் சொல்லித்தருவார்.
உதாரணமாக, இரண்டு கதைகளை சொல்லலாம். தேவர்களின் அரசனான இந்திரனும், அசுரர்களின் அரசனான விரோசனனும் பிரம்மாவிடத்திலே ஆத்மவித்தை கற்க போகிறார்கள். இருவரும் 32 வருஷம் பிரம்மச்சர்ய விரதம் இருந்தபிறகு பிரம்மா உடல்தான் ஆத்மா என்று உபதேசிக்கிறார்.
விரோசனன் இதை ஏற்றுக்கொண்டு திரும்பி போகிறான். ஆனால், இந்திரன் சிந்தனை செய்து பிரம்மாவிடம் கேள்வி எழுப்புகிறான். பிரம்மா மீண்டும் 32 வருடங்கள் பிரம்மசர்ய விரதம் இருக்க சொல்லி மீண்டும் உபதேசம் செய்கிறார். அதுவும் முழு உண்மை கிடையாது.
இப்படி நூறு வருடங்கள் பிரம்மசர்யம் காத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஆத்மவித்தையை இந்திரன் கற்கிறான். ஒரு விஷயத்தை சொல்லி தரவேண்டும். அதில் தேர்ந்தால்தான் அடுத்த விஷயம். ஒவ்வொன்றுக்கு இடையில் பிரம்மசர்ய விரதம். காரணம், வித்யாப்யாசம் என்பது தவம்... அதனால், புலனடக்கம் முக்கியம். (சாந்தோக்ய உபநிஷதம்)
இந்த கதையிலே, தேவர்களின் தலைவன் மட்டுமல்ல, அசுரர்களின் தலைவனும் ஞானத்தை தேடி போய், குருவை பணிகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆயினும், அவனுக்கு பக்குவம் இல்லாத காரணத்தால்தான் அவன் முழுவதுமாக கற்கவில்லை. பிரம்மாவுக்கு பாரபட்சம் கிடையாது.
இன்னொரு கதையிலே, வருணன் தன் மகனான ப்ருகு மஹரிஷிக்கு உபதேசிக்கிறார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் உபதேசிக்காமல் கொஞ்சம் உபதேசித்து விட்டு தவம் செய்ய சொல்கிறார். மகன் தவம் செய்து, தன் புரிதலை விளக்க, அடுத்த விஷயத்தை விளக்குகிறார். மகனே ஆனாலும், procedure procedureதான். (தைத்திரிய உபநிஷதம்)
பிரச்நோபநிஷதத்தில் ஐந்து பிரம்ம நிஷ்டர்கள் பிப்பலாதரை தேடி வந்து தர்ப்பை சமர்ப்பிக்கிறார்கள். பிப்பலாதர் அவர்களுக்கு ஒரு வருடம் பிரம்மச்சர்யமும், தபஸும் விதிக்கிறார். “தபஸிற்கு பின்னர் கேள்வி கேளுங்கள், எனக்கு தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன்” என்கிறார். (தெரிந்தவரை பதில் சொல்கிறேன் என்றது குருவின் விநயம்). பிரம்ம நிஷ்டர்கள் ஆனாலும் அதே procedureதான்..!

பகுதி 6 – குருவும் சிஷ்யன்தான்
So, எப்படியாவது குருவாக ஆகிவிட்டால் மாணவர்களை சுத்தவிடலாம்.. அப்படித்தானே..! அதுதான் கிடையாது. Continous Education கான்செப்ட் அந்த காலத்திலேயே இருக்கிறது.
உத்தாலகர் (Uddalka) என்பவரின் மகன் ச்வேதகேது. ச்வேதகேதுவிற்கு கொஞ்சம் அகம்பாவம் உண்டு. ச்வேதகேதுவை பிரவாஹனன் என்னும் ராஜா கொஞ்சம் கேள்விகளால் குடைந்தெடுக்கிறார். கேள்விகளுக்கு பதில் தெரியாத ச்வேதகேது அவமானம் தாங்காமல் உத்தாலகரிடம் திரும்புகிறான். உத்தாலகருக்கும் ராஜா கேட்ட கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.
“மகனே! எனக்கே இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது. வா, அந்த ராஜாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்து விடை தெரிந்து கொள்வோம்” என்கிறார். ஆனால், அவமானம் பொறாத மகன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்தணன் போய் க்ஷத்திரியனிடம் பாடம் கேட்பதா என்று உத்தாலகருக்கு எந்த ஈகோவும் கிடையாது. 
உத்தாலகர் பிரவாஹனனிடம் போகிறார். அரசன் அவருக்கு பெரும் செல்வத்தை தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளாத உத்தாலகர், அரசனிடம் ஞானத்தையே வேண்டி, சிஷ்யனாகிறார். பஞ்சாக்னி வித்தை என்னும் வித்தையை கற்றுக்கொண்டு திரும்புகிறார். (சாந்தோக்ய உபநிஷதம்)
இதே போல ஐந்து வைதீக சீலர்கள் உத்தாலகரிடம் வைச்வாநர ஆத்மா பற்றி தெரிந்து கொள்ள போகிறார்கள். தெளிவாக தெரியாமல் எதையாவது சொல்லக்கூடாது என்பதற்காக உத்தாலகர் அவர்களை கேகய ராஜாவான அஸ்வபதியிடம் அனுப்பிவைக்கிறார். அதாவது, அந்தணர் தனக்கு வித்தை கற்றுத்தர தகுதியில்லை என்று சொல்லி, அந்தணர்களை க்ஷத்திரியனிடம் அனுப்பி வைக்கிறார்.
உத்தாலகரின் கதையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு. ஆச்சார்யருக்கு ஈகோ துளியும் கூடாது. தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டாவது, வர்ண வித்தியாசங்கள் கல்வியை தடைசெய்யக்கூடாது என்பதில் பழங்காலத்தில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். வித்தையை யாரும் யாரிடமிருந்தும் கற்று கொள்ளலாம் என்று வைத்திருந்தனர். தேவையெல்லாம் ஒழுக்கமும், ஆர்வமும், புத்திகூர்மையும்தான்.
அந்தணன் கூட எந்த வருணத்தாரிடமிருந்தும் வித்தையை கற்று கொள்ளலாம். வேதத்தை கூட இப்படி மற்ற வருணத்தாரிடம் இருந்து அந்தணர் கற்று கொள்ளலாம் என்று மனு சொல்லியிருக்கிறார்.
வேதங்களை நான்காக வகுத்த வியாசர், புராணங்களை நான்காவது வருணத்தினரான சூதருக்கு உபதேசிக்கிறார். வேதம் கற்ற அந்தணர்கள் அவருக்கு உயர்ந்த ஆசனம் அளித்து, மரியாதை செய்து புராணங்களை கற்று கொள்கிறார்கள். (பாகவதம், மஹாபாரதம்)
கொங்கணர் என்னும் ரிஷியும் தன் பாடத்தை தர்மவியாதன் என்னும் கசாப்பு கடைக்காரனிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார். (மஹாபாரதம், வனபர்வம்).




பகுதி 7 - முடிவுரை
கல்வி குறித்த இந்த பதிவிலிருந்து நாம் அறிந்தது என்ன? சுருக்கமாக பார்த்துவிடுவோம்… பழங்காலத்தில் கல்வி என்பது இலவசமாக கிடைத்து கொண்டிருந்தது. தனிநபர்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டது. இதனால், ஆசிரியர் மாணவன் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த முடிந்தது. மாணவன் ஆசிரியரை ரோல் மாடலாக கொள்ள முடிந்தது.
அறிவை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒழுக்கத்தில் மாணவனை நிலைநிறுத்துவதுதான் ஆசிரியரின் தலையாயப்பணி.
கல்வி என்பது நடைமுறை வாழ்விற்கு பொருந்தியதாக இருந்தது. ஆசிரமத்தின் அன்றாட தேவைகளுக்கு உழைப்பது முதல், தொழிலை கல்வியாக கற்க முடிந்தது வரை practical application என்பது இருந்தது.
கல்வி என்பது அறிவு சார்ந்ததாக மட்டும் இல்லை… ஒழுக்கம் சார்ந்ததாக, திறமை சார்ந்ததாக, தொழில் சார்ந்ததாக, ஆன்மீகம் சார்ந்ததாக இருந்தது. கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயம். தொடர்ந்து பயில்வது (Continuous Education), கல்வி தேடல் என்பது இருந்தது.
சரி, இன்றைய நிலையில், 21ம் நூற்றாண்டில் இவற்றை எல்லாம் பொருத்தி பார்க்க முடியுமா? இன்றைய கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுவதால் common syllabus என்பது இருக்கிறது. இந்த common syllabus என்பதே தரம் குறைந்த படிப்பு என்பது என் கருத்து. புத்திசாலி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்குமான சராசரிதான் இந்த common Syllabus. படிப்பு வராத மாணவர்களுக்கு வேறு என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டறியாமல் அவர்களை முட்டாள் என்று பெயர் கொடுப்பது சரியல்ல.
இன்னொரு புறம் அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை syllabus என்னும் பெயரால் அறிவாற்றலில் முன்னேற்றாமல் தடுத்து நிறுத்துவதும் சரியில்லை… இது இரண்டு வகை மாணவர்களுக்கும் செய்யப்படும் துரோகம்…!
கல்விக்கு கட்டணம் என்பதும், இலவச கல்வியென்றால் தரமில்லாத கல்வியாக இருப்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வழியல்ல. கண்டிப்பாக தற்போதைய கல்வியின் scope விரிவுப்படுத்தப்பட வேண்டும். அறிவை மட்டுமே சார்ந்து இல்லாமல், ஒழுக்கம், தொழில், மற்ற திறமைகள் என்று பலவற்றை மையப்படுத்தி கல்வி அமையவேண்டும்.
அனைவரும் வெறும் படிப்பறிவை பெறுவதையே சாதனை என்று விளம்பரப்படுத்துவது, கல்வித்தரம் குறைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. இவ்வளவு ‘படித்தவர்கள்’ இருந்தும் நம் தெருக்கள் சுத்தமாக இல்லை… ஊழல் அதிகமாக இருக்கிறது…. தவறான ஆட்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள்… உறவுகள் கூட கசக்கின்றன… சுயமரியாதை இல்லாமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் இருக்கின்றனர். தகவல்கள் அடிப்படையில் இது நாள் வரை தரப்பட்ட படிப்பானது தோற்றுவிட்டது என்றே நான் கருதுகிறேன்..
மேற்குலகின் கல்வியை நாம் கடைப்பிடித்ததில் நம் பொருளாதார கணக்குகள் முன்னேறியிருக்கலாம்… ஆனால், அடிப்படைகளில் நாம் தோற்க ஆரம்பித்துவிட்டோம். மாற்றத்தை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதுதான் உண்மை…!
பொருளாதார ரீதியாக பார்த்தாலும் கூட, தகவல்களை மனப்பாடம் செய்யும் தற்போதை கல்வி போல அல்லாமல், தகவல்களை சீர்தூக்கி ஆராயும் சிந்திக்கும் முறையை கற்பிப்பதே உண்மையான கல்வி. Internet-ம், Cloud-ம் வந்துவிட்ட இந்த காலத்தில் தகவல்களை அடைவதை விட, அந்த தகவல்களை கொண்டு முடிவெடுப்பதும், செயல்படுவதுமான திறமைகளே தேவைப்படுகின்றன.
சமுதாய ரீதியாக பார்த்தால், பண்டைய காலத்து கல்வி கோட்பாடுகளை, தற்போதைய கல்வியில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்… இல்லையென்றால், பொருளாதாரம் மட்டும் முன்னேறும், சமுதாயம் பின்னடையும்…!