பகுதி 1 -
முன்னுரை
சமீபத்தில் முகநூல் நண்பர் ஒருவரை நேரில் சந்தித்தேன். சுவையான
சந்திப்பின் நடுவிலே, நண்பர் சீரியஸான இரண்டு கேள்விகளை எழுப்பினார்.
நண்பர்
எழுப்பிய கேள்விகளில் ஒன்று, Morality மற்றும் Ethics குறித்தது. இன்னொரு கேள்வி,
பண்டைய இந்தியாவின் கல்வி குறித்து.
இரண்டாவது
கேள்வி என்னை மிகவும் சிந்திக்க தூண்டியது. அந்த காலத்தைய குருகுல நடைமுறைகள்
குறித்து காஞ்சி பெரியவாள் தெய்வத்தின் குரலில் கூறியிருந்த விஷயங்களை மீண்டும்
படித்து பார்த்தேன். இன்றைய கல்வி கற்பிக்கும் முறைகளையும் ஒப்பிட்டு பார்க்காமல்
இருக்கமுடியவில்லை.
காஞ்சி
பெரியவாளின் தெய்வத்தின் குரல், உபநிஷதங்கள், மஹாபாரதம் இவற்றை அடிப்படையாக
வைத்து, நம்மிடையே இருந்த கல்விமுறை குறித்து பதிவு செய்திருக்கிறேன்.
இதிலெல்லாம்
நம்பிக்கை இல்லாதவர்கள் பதிவை தொடரவேண்டாம்...! பதிவின் நோக்கம் முழுக்க முழுக்க
கல்வியை குறித்தது... மாறாக ஜாதியை முன்வைத்து கிண்டலடிக்கும் கமெண்டுகள்
கண்டிப்பாக நீக்கப்படும். கல்வி குறித்த விவாதங்கள் மட்டுமே வரவேற்கப்படும்.
பகுதி 2 – படிப்புக்கு கூலி என்ன?
பண்டைய கால கல்வி குறித்த இந்த பதிவில், முதலில் ஆசிரியர் என்னும்
அர்த்தம் தரும், ஆசார்யர், உபாத்யாயர் என்னும் இரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள
வித்தியாசத்தை பார்க்கலாம்.
ஆசார்யர் என்பவர் காசுக்காக இல்லாமல் வித்தையை தானமாக கொடுப்பவர்.
அந்த காலத்தில் குருகுல வாசம் முடிந்த பின்னர் குருதக்ஷிணை என்று மாணவன் தருவதை
ஆசார்யர் வாங்கி கொள்ளுவார்.
வித்தையை தானம் செய்வது என்னும் கான்செப்ட் வேறு கலாச்சாரங்களில்
இருந்ததா என்று தெரியவில்லை. வித்தை அடுத்த தலைமுறையை சேரவேண்டும் என்ற எண்ணம்
மட்டுமே கொண்டவர் ஆசார்யர்.
உபாத்யாயர் என்பவர் fees வாங்கி கொள்பவர். இவரை ‘ப்ருதக அத்யாபகர்’
(Bhruthaka) அதாவது கூலிக்கு வேலை செய்பவர் என்று மனு கண்டிக்கிறார்.
குரு தக்ஷிணை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம்... அது வெறும்
டோக்கன்தான். பசு, நிலம், தங்கம் போன்ற காஸ்ட்லி தக்ஷிணைகளுக்கு நடுவில் கொஞ்சம்
தானியம், காய்கறி, குடை, செருப்பு ஆகிய எது கொடுத்தாலும் அது தக்ஷிணைதான்.
அந்த காலத்து படிப்பு என்பது முடிய பொதுவாக 12 ஆண்டுகாலம் ஆகுமாம்.
இந்த பன்னிரெண்டு ஆண்டு காலமும் கூடவே தங்க வைத்துக்கொண்டு, சோறு போட்டு, வித்தையும்
சொல்லித்தருபவரே ஆசாரியன்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள், இந்த காலத்தில் 12 வருடங்களுக்கு
ஹாஸ்டலில் தங்கவைத்து, சாப்பாடு போட்டு, படிப்பும் சொல்லி தந்து ஒரு கூடை
காய்கறியையோ, ஒரு ஜோடி காலணியையோ கட்டணமாக தந்தால் எந்த கல்வி தந்தையாவது
ஒப்புக்கொள்வாரா?
சரி குருதக்ஷிணை எப்போது கிடைக்கும்?
குருதக்ஷிணை என்பது சிஷ்யன் ‘கற்று கொண்டாய் விட்டது’ என்ற
திருப்தியில் தருவதல்ல... மாறாக ‘கற்று தந்தாகிவிட்டது’ என்ற திருப்தியில்
ஆசார்யர் பெறுவது. உதாரணமாக, யாக்ஞவால்கியர் என்னும் ரிஷி உபதேசம் செய்ய செய்ய,
ஜனகராஜா தக்ஷிணை வைக்கிறார். யாக்ஞவால்கியரோ, உபதேசம் முழுவதும் செய்து முடியாமல்
தக்ஷிணையை ஏற்கமாட்டேன் என்று ஏற்க மறுக்கிறார். (பிருஹதாரண்யக உபநிஷதம்).
இதைத்தான் குருதக்ஷிணையாக கொடுக்கவேண்டும் என்று முன்கூட்டியே
பேசிவைத்துக்கொண்டு பாடம் ஆரம்பிக்கவும் கூடாது. அப்படி செய்யும் அந்தணனை,
சிராத்தம் முதலிய சடங்கிற்கு கூப்பிடக்கூடாது என்று மனு கூறியிருக்கிறார். அதாவது,
அப்படிப்பட்ட குருவிற்கு எந்த மதிப்பும், மரியாதையும் கிடையாது.
இந்த காலத்தில் இரவு முழுவதும் க்யூவில் நின்று, அப்ளிகேஷன்
வாங்கி, டொனேஷன் கொடுத்து ப்ரீகேஜியில் சேர்க்கும் காட்சி கண் முன்னே வருகிறதா?
பகுதி 3 – தனிநபர் சார்ந்த கல்வி
அந்த காலத்து குருகுலம் என்பது ஒரு நிறுவனம் கிடையாது. It is not
an institution. மாறாக அது ஒரு தனிநபரால் நடத்தப்படுவது. ஏன் அப்படி வைத்தார்கள்
என்றால் ஆசார்யருக்கான தகுதி வரையரை அப்படி. ஆசார்யருக்கு மூன்று தகுதிகள் இருக்க
வேண்டும்.
ஆசார்யர் தெளிவாக கற்றிருக்க வேண்டும். கற்றதை வாழ்க்கையில் ஒழுக
வேண்டும். மற்றவர்களுக்கு கற்று கொடுத்து, அவர்களும் வாழ்க்கையில் ஒழுக்கத்தை
கடைப்பிடிக்க செய்யவேண்டும்.
கற்க கசடற, நிற்க அதற்கு தக – இந்த இரண்டும் மாணவனுக்குதான்.
கூடுதல் கடமையாக ஆசிரியர் மாணவனை ‘அதற்கு தக’ நிலைநிறுத்த வேண்டும். மூன்றாவது
விஷயம் எவ்வளவு கஷ்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அதனால்தான், குருகுலத்தை தற்போதைய educational institution போல
நிறுவனமாக நடத்தாமல் தனிமனித ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டே
நடத்தியிருக்கிறார்கள். அதாவது, ஆசார்யர் என்பவர் Role Model. அவரை பார்த்து
மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை அதே அடிச்சுவட்டில் அமைத்துகொண்டனர்.
தற்காலத்தில் நல்லாசிரியர்கள் அதிக அளவில் இல்லை என்பதும்
ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. Role Model என்று சொல்லப்படும் தகுதிநிலையை
ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள் என்பதும் நிதர்சனம், அல்லவா?
அதோடு மாணவர்கள் ஆசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்க்க
போவதில்லை. நேரத்திற்கு வந்து பாடம் எடுத்தாலே, ஆசிரியர் அவரது கடமையை
செய்தவராகிறார். இதில் என்ன ரோல் மாடல் இருக்கிறது? வாழ்க்கையில் எதிர்கொள்ளும்
சிக்கல்கள், அதில் தர்மம் தவறாமல் நடந்து கொள்ளுதல், கோபம், பொறாமை போன்ற
தீயக்குணங்களை தவிர்த்தல், இடைவிடாத சமய ஒழுக்கம் இவைகளெல்லாம் தனிப்பட்ட
வாழ்விலிருந்துதான் கற்று கொள்ளமுடியும்.
இன்னும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்... பிள்ளையின் முக்கியமான வளரும்
பருவத்தில் எந்த தகப்பனாவது குருகுலம் என்று வேறொருவரிடம் 12 ஆண்டுகள்
அனுப்புவாரா? முக்கியமான டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளை வேறொருவரிடம் வளரவேண்டும்...
அப்படியானால் அந்த குருவின் நடத்தை எப்படி இருக்கவேண்டும்?
குரு என்பவர் வெறும் புத்திசாலியாக மட்டும் இருந்தால் போதாது,
ஒழுக்கமானவராக இருக்கவேண்டும்.... அதோடு, அன்பானவராக இருந்தால்தான் குழந்தைகளை
ஒழுக்கம் தவறாமல் வளர்த்து, கல்வியும் கற்று தரமுடியும்.
ஒழுக்கத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று மாணவர்களை
அடிக்கக்கூடாது என்பது சாஸ்திரம். அப்படி ஒருவேளை மாணவன் ரொம்ப ஒழுங்கீனமாக
இருந்து அடிக்கவேண்டி வந்தால் கூட கயிறு, மெல்லிய மூங்கில் குச்சியினால் முதுகில்
மட்டும் அடிக்கலாம்... தலையில் எல்லாம் அடிக்கக்கூடாது என்று மனு கூறுகிறார்.
இந்த காலத்தில் செய்தித்தாள்களில் ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது
குறித்த செய்திகளை படித்தால் மனம் பதைக்கிறது. அந்த காலத்தில் ஆசிரியருக்கு
எவ்வளவு கண்டிஷன்கள்?
பகுதி 4 – நிறுவனம் சார்ந்த கல்வி
சர்வகாலசாலைகள் என்பது அந்த காலத்தில் இல்லையா? வெறும்
குருகுலம்தான் இருந்ததா? பௌத்தர்கள்தான் முதலில் கல்வியை institutionalise
செய்தவர்கள். அபூர்வமாக இந்துக்களும் கலாசாலை போன்ற அமைப்பை வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட அமைப்பை நடத்தியவர்களை குலபதி என்று அழைத்தனர். கண்வர், வசிஷ்டர்
போன்றவர்கள் குலபதி.
குலபதிகளும் fees வாங்கி கொண்டு பாடம் எடுக்கக்கூடாது. ‘யோ அன்ன
தானாதி போஷனாத் அத்யா பயதி’ என்பது விதி.
இத்தனை பேருக்கு எப்படி சாப்பாடு போடுவது..?. அதனால் ராஜமான்யங்கள்
இருந்தன. கல்வியின் மூலமாக நல்ல குடிமக்களை உருவாக்கி தருவதால் ராஜமான்யம்
கிடைத்தது. கல்வி கற்க மாணவர்கள் செலவு செய்ய தேவையில்லை. கல்வி என்பது அன்று
அரசாங்க செலவு. நம் நாட்டின் இன்றைய நிலையை பாருங்கள். கல்வி கடன் கிடைப்பது கூட
கஷ்டமாக இருக்கிறது.
சரி, படிப்பு எப்படி இருந்தது? படிப்பு என்பது வெறும் அறிவை
சார்ந்து இல்லாமல், ஒழுக்கத்தை சார்ந்தே இருந்தது. ஒரு வருஷமாவது குரு தன் கூடவே
சிஷ்யனை வைத்து கொண்டு, அவன் குணத்தை பற்றி திருப்தி செய்து கொண்ட பிறகே பெரிய
விஷயங்களை சொல்லித்தர வேண்டுமென்பது சாஸ்திரம்.
அப்படி ஒரு வருஷத்தில் திருப்தியடைந்து வித்தை சொல்லி தராமல்
குருகுலத்தில் வேலை மட்டும் வாங்கி அனுப்பினால் என்னவாகும்? அந்த மாணவனின் பாவம்
அத்தனையும் குருவுக்கு வந்து சேரும் என்பதே விதி..
அது மட்டுமில்லை, ஒருவன் சிஷ்யனாக ஆன பின்பு செய்யும் பாவமும்
குருவையே சேரும். கல்வி கற்பிப்பவர் சீடனை நல்வழிப்படுத்தவேண்டும், அல்லவா? அப்படி
நல்வழிப்படுத்தும் அளவிற்கு போதனை இல்லாவிட்டால் அதுவும் பாவம்தான்.
சரி வம்பே வேண்டாம் என்று, சிஷ்யனையே சேர்த்து கொள்ளாவிட்டால்...?
தகுந்த மாணவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாவம் வந்து சேரும். உதா.
தேவர்களின் குருவின் மகனான கசன் என்பவன், அசுரகுருவான சுக்ராச்சாரியடம் கல்வி கற்க
வருகிறான். நீ எதிரிக்கூட்டத்தை சேர்ந்தவனாயிற்றே என்று சுக்ராசாரியார் அவனை
புறந்தள்ளவில்லை.... அவனை மாணவனாக சேர்த்து கொள்கிறார். அவருக்கு வேறு வழியே
கிடையாது... தகுதியுள்ள மாணவன் வந்தால் வித்தை கற்று தந்தே தீரவேண்டும் என்பது
விதி. (மஹாபாரதம், ஆதி பர்வம்)
படிப்பை விட ஒழுக்கத்திற்கே அதிக மதிப்பு என்பதற்கு ஒரு உதாரணம்...
உத்தாலகர் என்னும் குரு தன் மகளான சுஜாதையை, வேதபடிப்பு சரியாக வராத, ஒழுக்கத்தில்
சிறந்த கஹோளகருக்கு தருகிறார். (மஹாபாரதம், வனபர்வம்)
எல்லா வர்ணத்தினருக்கும் ஒரே மாதிரி படிப்பு இல்லை என்பது
கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம்... இன்னும் கேட்டால் ஒரே வயதில் அனைவரும் குருகுலம்
போகவில்லை. அந்தணர்கள் 8 வயதிலும், மற்ற வர்ணத்தினர்கள் சில வருடங்கள் கழித்தும்
போனார்கள். இரண்டரை வயதில் ப்ரீகேஜியெல்லாம் நடக்காது.
அவரவர்கள் துறைசார்ந்த கல்வி வழங்கப்பட்டது. ஒரே கல்வி என்பது
கிடையவே கிடையாது. நாடெங்கிலும் ஒரே கல்வி என்பதெல்லாம் தற்காலத்திய கோஷங்கள்.
எல்லாருக்கும் கல்வி என்பது கட்டாயம்.... படிக்காதவர்களை ஜாதியை
விட்டு விலக்கிவைத்து விடுவார்கள். எல்லா வர்ணத்தினருக்கும் கட்டாய கல்வி என்பது
ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. (கல்வியையும் எழுத்தறிவையும் குழப்பி கொள்ள
வேண்டாம். அந்த காலத்தில் எழுத்தறிவு அனைவருக்கும் இல்லை. ஆனால், துறை சார்ந்த
மகத்தான கல்வியறிவு இருந்தது)
பகுதி 5 – சீடன் எப்படி இருக்கவேண்டும்?
குரு எப்படி இருக்கவேண்டும், நடக்கவேண்டும் என்று பார்த்தோம்.
சீடன் எப்படி இருக்கவேண்டும்?
தீவிர தாபமில்லாதவன், பக்தி இல்லாதவன், பணிவிடை செய்யாதவனுக்கு
போதிக்கக்கூடாது என்று கீதையிலே கிருஷ்ணர் சொல்கிறார். வித்தையானது பாத்திரமறிந்தே
தரவேண்டும். நல்லவிதையானது உவர்நிலத்தில் விதைக்கப்படக்கூடாது என்பதே
மூலக்கருத்து.
யோக்தையுள்ள சிஷ்யன் கிடைக்கவில்லை என்றால் குரு தன் வித்தையோடு
செத்தாலும் சாகலாமே தவிர, என்ன ஆபத்து வந்தாலும் தவறானவர்களுக்கு வித்தையை சொல்லி
கொடுக்க கூடாது. (தெ. குரல் 4.28) அப்படி செய்பவன் நரகத்துக்கு போவான் என்று
சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மாணவன் தகுதியுள்ளவன் என்பதை எப்படி அறிவது? ஆசார்யர் கொஞ்சம்
கொஞ்சமாக சொல்லி தருவார். பிரம்மசர்யம் காத்து, தவம் செய்து, சொல்லி தந்ததை மனதிலே
சிந்தித்த பிறகு மீண்டும் வரச்சொல்லுவார். ஒழுங்காக கற்றுக்கொண்டிருந்தால்
மீண்டும் கொஞ்சம் சொல்லித்தருவார்.
உதாரணமாக, இரண்டு கதைகளை சொல்லலாம். தேவர்களின் அரசனான இந்திரனும்,
அசுரர்களின் அரசனான விரோசனனும் பிரம்மாவிடத்திலே ஆத்மவித்தை கற்க போகிறார்கள்.
இருவரும் 32 வருஷம் பிரம்மச்சர்ய விரதம் இருந்தபிறகு பிரம்மா உடல்தான் ஆத்மா என்று
உபதேசிக்கிறார்.
விரோசனன் இதை ஏற்றுக்கொண்டு திரும்பி போகிறான். ஆனால், இந்திரன் சிந்தனை செய்து பிரம்மாவிடம் கேள்வி எழுப்புகிறான். பிரம்மா மீண்டும் 32 வருடங்கள் பிரம்மசர்ய விரதம் இருக்க சொல்லி மீண்டும் உபதேசம் செய்கிறார். அதுவும் முழு உண்மை கிடையாது.
விரோசனன் இதை ஏற்றுக்கொண்டு திரும்பி போகிறான். ஆனால், இந்திரன் சிந்தனை செய்து பிரம்மாவிடம் கேள்வி எழுப்புகிறான். பிரம்மா மீண்டும் 32 வருடங்கள் பிரம்மசர்ய விரதம் இருக்க சொல்லி மீண்டும் உபதேசம் செய்கிறார். அதுவும் முழு உண்மை கிடையாது.
இப்படி நூறு வருடங்கள் பிரம்மசர்யம் காத்து, கொஞ்சம் கொஞ்சமாக
ஆத்மவித்தையை இந்திரன் கற்கிறான். ஒரு விஷயத்தை சொல்லி தரவேண்டும். அதில்
தேர்ந்தால்தான் அடுத்த விஷயம். ஒவ்வொன்றுக்கு இடையில் பிரம்மசர்ய விரதம். காரணம்,
வித்யாப்யாசம் என்பது தவம்... அதனால், புலனடக்கம் முக்கியம். (சாந்தோக்ய உபநிஷதம்)
இந்த கதையிலே, தேவர்களின் தலைவன் மட்டுமல்ல, அசுரர்களின் தலைவனும்
ஞானத்தை தேடி போய், குருவை பணிகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆயினும், அவனுக்கு
பக்குவம் இல்லாத காரணத்தால்தான் அவன் முழுவதுமாக கற்கவில்லை. பிரம்மாவுக்கு
பாரபட்சம் கிடையாது.
இன்னொரு கதையிலே, வருணன் தன் மகனான ப்ருகு மஹரிஷிக்கு
உபதேசிக்கிறார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் உபதேசிக்காமல் கொஞ்சம்
உபதேசித்து விட்டு தவம் செய்ய சொல்கிறார். மகன் தவம் செய்து, தன் புரிதலை விளக்க,
அடுத்த விஷயத்தை விளக்குகிறார். மகனே ஆனாலும், procedure procedureதான்.
(தைத்திரிய உபநிஷதம்)
பிரச்நோபநிஷதத்தில் ஐந்து பிரம்ம நிஷ்டர்கள் பிப்பலாதரை தேடி வந்து
தர்ப்பை சமர்ப்பிக்கிறார்கள். பிப்பலாதர் அவர்களுக்கு ஒரு வருடம் பிரம்மச்சர்யமும்,
தபஸும் விதிக்கிறார். “தபஸிற்கு பின்னர் கேள்வி கேளுங்கள், எனக்கு தெரிந்தவரை
பதில் சொல்லுகிறேன்” என்கிறார். (தெரிந்தவரை பதில் சொல்கிறேன் என்றது குருவின்
விநயம்). பிரம்ம நிஷ்டர்கள் ஆனாலும் அதே procedureதான்..!
பகுதி 6 – குருவும் சிஷ்யன்தான்
So, எப்படியாவது குருவாக ஆகிவிட்டால் மாணவர்களை சுத்தவிடலாம்..
அப்படித்தானே..! அதுதான் கிடையாது. Continous Education கான்செப்ட் அந்த
காலத்திலேயே இருக்கிறது.
உத்தாலகர் (Uddalka) என்பவரின் மகன் ச்வேதகேது. ச்வேதகேதுவிற்கு
கொஞ்சம் அகம்பாவம் உண்டு. ச்வேதகேதுவை பிரவாஹனன் என்னும் ராஜா கொஞ்சம் கேள்விகளால்
குடைந்தெடுக்கிறார். கேள்விகளுக்கு பதில் தெரியாத ச்வேதகேது அவமானம் தாங்காமல்
உத்தாலகரிடம் திரும்புகிறான். உத்தாலகருக்கும் ராஜா கேட்ட கேள்விகளுக்கு விடை
தெரியவில்லை.
“மகனே! எனக்கே இந்த கேள்விகளுக்கு விடை தெரியாது. வா, அந்த
ராஜாவிடம் சிஷ்யர்களாக சேர்ந்து விடை தெரிந்து கொள்வோம்” என்கிறார். ஆனால்,
அவமானம் பொறாத மகன் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அந்தணன் போய் க்ஷத்திரியனிடம்
பாடம் கேட்பதா என்று உத்தாலகருக்கு எந்த ஈகோவும் கிடையாது.
உத்தாலகர் பிரவாஹனனிடம் போகிறார். அரசன் அவருக்கு பெரும் செல்வத்தை தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளாத உத்தாலகர், அரசனிடம் ஞானத்தையே வேண்டி, சிஷ்யனாகிறார். பஞ்சாக்னி வித்தை என்னும் வித்தையை கற்றுக்கொண்டு திரும்புகிறார். (சாந்தோக்ய உபநிஷதம்)
உத்தாலகர் பிரவாஹனனிடம் போகிறார். அரசன் அவருக்கு பெரும் செல்வத்தை தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளாத உத்தாலகர், அரசனிடம் ஞானத்தையே வேண்டி, சிஷ்யனாகிறார். பஞ்சாக்னி வித்தை என்னும் வித்தையை கற்றுக்கொண்டு திரும்புகிறார். (சாந்தோக்ய உபநிஷதம்)
இதே போல ஐந்து வைதீக சீலர்கள் உத்தாலகரிடம் வைச்வாநர ஆத்மா பற்றி
தெரிந்து கொள்ள போகிறார்கள். தெளிவாக தெரியாமல் எதையாவது சொல்லக்கூடாது என்பதற்காக
உத்தாலகர் அவர்களை கேகய ராஜாவான அஸ்வபதியிடம் அனுப்பிவைக்கிறார். அதாவது, அந்தணர்
தனக்கு வித்தை கற்றுத்தர தகுதியில்லை என்று சொல்லி, அந்தணர்களை க்ஷத்திரியனிடம்
அனுப்பி வைக்கிறார்.
உத்தாலகரின் கதையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு.
ஆச்சார்யருக்கு ஈகோ துளியும் கூடாது. தொடர்ந்து கல்வி கற்றுக்கொண்டே
இருக்கவேண்டும். இரண்டாவது, வர்ண வித்தியாசங்கள் கல்வியை தடைசெய்யக்கூடாது
என்பதில் பழங்காலத்தில் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். வித்தையை யாரும் யாரிடமிருந்தும்
கற்று கொள்ளலாம் என்று வைத்திருந்தனர். தேவையெல்லாம் ஒழுக்கமும், ஆர்வமும்,
புத்திகூர்மையும்தான்.
அந்தணன் கூட எந்த வருணத்தாரிடமிருந்தும் வித்தையை கற்று கொள்ளலாம்.
வேதத்தை கூட இப்படி மற்ற வருணத்தாரிடம் இருந்து அந்தணர் கற்று கொள்ளலாம் என்று மனு
சொல்லியிருக்கிறார்.
வேதங்களை நான்காக வகுத்த வியாசர், புராணங்களை நான்காவது
வருணத்தினரான சூதருக்கு உபதேசிக்கிறார். வேதம் கற்ற அந்தணர்கள் அவருக்கு உயர்ந்த
ஆசனம் அளித்து, மரியாதை செய்து புராணங்களை கற்று கொள்கிறார்கள். (பாகவதம்,
மஹாபாரதம்)
கொங்கணர் என்னும்
ரிஷியும் தன் பாடத்தை தர்மவியாதன் என்னும் கசாப்பு கடைக்காரனிடம் இருந்தே கற்றுக்கொள்கிறார்.
(மஹாபாரதம், வனபர்வம்).
பகுதி 7 - முடிவுரை
கல்வி குறித்த இந்த பதிவிலிருந்து நாம் அறிந்தது என்ன? சுருக்கமாக
பார்த்துவிடுவோம்… பழங்காலத்தில் கல்வி என்பது இலவசமாக கிடைத்து கொண்டிருந்தது. தனிநபர்கள்
மூலம் கல்வி வழங்கப்பட்டது. இதனால், ஆசிரியர் மாணவன் மீது தனிப்பட்ட கவனம் செலுத்த
முடிந்தது. மாணவன் ஆசிரியரை ரோல் மாடலாக கொள்ள முடிந்தது.
அறிவை விட ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஒழுக்கத்தில் மாணவனை நிலைநிறுத்துவதுதான் ஆசிரியரின் தலையாயப்பணி.
கல்வி என்பது நடைமுறை வாழ்விற்கு பொருந்தியதாக இருந்தது.
ஆசிரமத்தின் அன்றாட தேவைகளுக்கு உழைப்பது முதல், தொழிலை கல்வியாக கற்க முடிந்தது
வரை practical application என்பது இருந்தது.
கல்வி என்பது அறிவு சார்ந்ததாக மட்டும் இல்லை… ஒழுக்கம்
சார்ந்ததாக, திறமை சார்ந்ததாக, தொழில் சார்ந்ததாக, ஆன்மீகம் சார்ந்ததாக இருந்தது. கல்வி
என்பது அனைவருக்கும் கட்டாயம். தொடர்ந்து பயில்வது (Continuous Education), கல்வி
தேடல் என்பது இருந்தது.
சரி, இன்றைய நிலையில், 21ம் நூற்றாண்டில் இவற்றை எல்லாம் பொருத்தி
பார்க்க முடியுமா? இன்றைய கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுவதால் common syllabus
என்பது இருக்கிறது. இந்த common syllabus என்பதே தரம் குறைந்த படிப்பு என்பது என்
கருத்து. புத்திசாலி மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்குமான சராசரிதான் இந்த
common Syllabus. படிப்பு வராத மாணவர்களுக்கு வேறு என்ன திறமை இருக்கிறது என்பதை
கண்டறியாமல் அவர்களை முட்டாள் என்று பெயர் கொடுப்பது சரியல்ல.
இன்னொரு புறம் அறிவாற்றல் மிகுந்த மாணவர்களை syllabus என்னும்
பெயரால் அறிவாற்றலில் முன்னேற்றாமல் தடுத்து நிறுத்துவதும் சரியில்லை… இது இரண்டு
வகை மாணவர்களுக்கும் செய்யப்படும் துரோகம்…!
கல்விக்கு கட்டணம் என்பதும், இலவச கல்வியென்றால் தரமில்லாத
கல்வியாக இருப்பதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வழியல்ல. கண்டிப்பாக
தற்போதைய கல்வியின் scope விரிவுப்படுத்தப்பட வேண்டும். அறிவை மட்டுமே சார்ந்து
இல்லாமல், ஒழுக்கம், தொழில், மற்ற திறமைகள் என்று பலவற்றை மையப்படுத்தி கல்வி
அமையவேண்டும்.
அனைவரும் வெறும் படிப்பறிவை பெறுவதையே சாதனை என்று
விளம்பரப்படுத்துவது, கல்வித்தரம் குறைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. இவ்வளவு
‘படித்தவர்கள்’ இருந்தும் நம் தெருக்கள் சுத்தமாக இல்லை… ஊழல் அதிகமாக இருக்கிறது….
தவறான ஆட்கள் தேர்தலில் ஜெயிக்கிறார்கள்… உறவுகள் கூட கசக்கின்றன… சுயமரியாதை
இல்லாமல், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் இருக்கின்றனர். தகவல்கள் அடிப்படையில் இது
நாள் வரை தரப்பட்ட படிப்பானது தோற்றுவிட்டது என்றே நான் கருதுகிறேன்..
மேற்குலகின் கல்வியை நாம் கடைப்பிடித்ததில் நம் பொருளாதார
கணக்குகள் முன்னேறியிருக்கலாம்… ஆனால், அடிப்படைகளில் நாம் தோற்க
ஆரம்பித்துவிட்டோம். மாற்றத்தை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
என்பதுதான் உண்மை…!
பொருளாதார ரீதியாக பார்த்தாலும் கூட, தகவல்களை மனப்பாடம் செய்யும் தற்போதை கல்வி போல அல்லாமல், தகவல்களை சீர்தூக்கி ஆராயும் சிந்திக்கும் முறையை கற்பிப்பதே
உண்மையான கல்வி. Internet-ம், Cloud-ம் வந்துவிட்ட இந்த காலத்தில் தகவல்களை அடைவதை
விட, அந்த தகவல்களை கொண்டு முடிவெடுப்பதும், செயல்படுவதுமான திறமைகளே தேவைப்படுகின்றன.
சமுதாய ரீதியாக பார்த்தால், பண்டைய காலத்து கல்வி கோட்பாடுகளை,
தற்போதைய கல்வியில் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்… இல்லையென்றால், பொருளாதாரம்
மட்டும் முன்னேறும், சமுதாயம் பின்னடையும்…!
No comments:
Post a Comment