பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாய் அரசாங்கம் சொல்வதும், விலைவாசி
தொடர்ந்து ஏறிக்கிட்டு இருக்கு... இவனுங்க என்ன பொய் சொல்றாங்க என்று
குடும்பஸ்தர்கள் புலம்புவதும் எப்போதும் நடப்பதுதான். அரசாங்கம் அத்தனை
புள்ளிவிவரம் சேகரித்து கணக்கு போட்டு தரும் தகவல் பொய்யாகுமா? அல்லது நாம்தான்
சும்மாச்சுக்கும் அரசாங்கத்தை குறை கூறுகிறோமா? ஒரு எளிமையாக்கப்பட்ட பதிவு.
இதற்கு முதலில் இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். ஒன்று, Price
Index. அடுத்து, Inflation. முதலில் Price Index பற்றி பார்ப்போம். Price Index
என்றால் நடப்பு வருடத்தின் விலைகளோடு ஒரு அடிப்படை வருடத்தின் (Base year) விலைகளை
ஒப்பிட்டு பார்ப்பது. உதா. இந்தியாவில் இப்போது Base year 2012-ஆக உள்ளது. 2012-ல்
மளிகை சாமான்கள் விலை 4000 ரூபாய். இப்போது 2017-ல் அதே மளிகை விலை 6000 ரூபாய்.
Price Index = 6000/ 4000 * 100 = 150. சிம்பிளாக இருக்கு இல்லையா?
சரி, சிக்கல்களுக்கு போவோம். முதலில் ஒரு பொருளை மட்டுமே கொண்டு
Price Index கணக்கிட கூடாது. குறிப்பிட்ட பொருட்களின் தொகுப்பு வேண்டும். Basket
of Goods என்பார்கள். (அரிசி, பருப்பு, முட்டை, பெட்ரோல், பள்ளி கட்டணம் etc)
அடுத்த பிரச்சனை.... கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி கிலோ 50
ரூபாய். நம்ம தெருமுனை கடையிலே 100 ரூபாய். எந்த விலையை கொண்டு Price Index
கணக்கிடுவது?
மொத்த மார்க்கெட் (Whole Sale) விலையை கொண்டு Price Index
கணக்கிட்டால் அது WholeSale Price Index (WPI) எனப்படும். சில்லறை மார்க்கெட்
விலையை கொண்டு கணக்கிட்டால் அது Consumer Price Index (CPI) எனப்படும்.
இதற்கு முன்பு இந்தியாவில் WPI கொண்டு பணவீக்கத்தை கணித்தார்கள்.
திரு. ரகுராம் ராஜன் இந்த முறையை மாற்றி CPI கொண்டு பணவீக்கத்தை கணிக்க
ஆரம்பித்தார். (மாற்றத்திற்கு ரெகமண்ட் செய்தது இப்போதைய RBI கவர்னர் திரு.
உர்ஜித் படேல்தான்)
இப்படி மாற்றியதற்கு வலுவான காரணம் உண்டு. WPI பொருட்களின் விலை
மாற்றத்தை மட்டும்தான் கவனத்தில் கொள்ளும். CPI பொருட்கள் மட்டுமல்லாது, சேவைகளின்
விலை மாற்றத்தையும் எடுத்து கொள்ளும். பள்ளி கட்டணம், மருத்துவ செலவு போன்றவை CPI
முறையில்தான் வரும். மேலும், CPI முறையிலே உணவு பொருட்களுக்கு நல்ல weightage உண்டு
(50%). அதனாலும் CPI முறை WPI முறையை விட மேலானதாக இருக்கிறது.
இந்த CPI எடுத்தாலும் இன்னும் கொஞ்சம் குழப்பங்கள் உண்டு.
நகரத்தில் இருக்கும் விலைவாசியும், அதன் மாற்றங்களும் கிராமங்களில் கிடையாது.
அதனால், CPI urban, CPI rural என்று எடுத்து அதன் சராசரி ஆக்கி விடுகிறார்கள்.
அதாவது நகரங்களில் ஏற்படும் விலைவாசி மாற்றங்கள், கிராமங்களில் ஏற்படும் விலைவாசி
மாற்றங்கள் இரண்டையும் தனித்தனியாக கணித்து, பின்னர் சராசரி எடுத்து
கொள்கிறார்கள். இதற்கு CPI Combined என்று பெயர்.
சரி, இப்போது Price Index பார்த்து விட்டோம். அடுத்தது, Inflation.
Price Index கணித்து விட்டால் Inflation கணிப்பது சுலபம்.
Inflation-ஐ கணக்கிட தற்போதைய price Index - ஐ ஒரு வருடத்திற்கு முந்தைய price
Index - உடன் ஒப்பீடு செய்யவேண்டும்.
உதா. சென்ற வருட price Index 150... இந்த வருடம் 160 என்று கொள்வோம்.
அப்போ inflation = 10/150 *100 = 6.67%
சரி, கணக்கெல்லாம் நியாயமாகத்தானே இருக்கிறது. என் வீட்டு பட்ஜெட்
எகிறுகிறது. ஆனால், inflation 3% என்கிறார்களே... புரியவில்லையே என்கிறீர்களா?
முதல் விஷயம் – Basket – அதாவது, index கணிக்க என்ன பொருளை
எடுக்கிறார்களோ, அதே பொருளை நீங்களும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதா.
முட்டை, இறைச்சி. இவை CPI Basket- லே இருக்கும் இவற்றின் விலை இறங்கினாலும்,
ஏறினாலும் அசைவம் உண்ணாதவர்களின் வீட்டு பட்ஜெட் மாறாது அல்லவா? இது ஒரு
உதாரணம்தான்.
இரண்டாவது விஷயம் – Weightage – Index – இலே கொடுக்கப்படும்
Weightage அடிப்படையிலா நமது செலவுகள் அமையும். இதெல்லாம் கொஞ்சம் குத்து
மதிப்பாகத்தான் அமையும்.
மூன்றாவது விஷயம் – சராசரி. இந்தியா முழுக்க இருக்கும் முக்கிய
நகரங்களில், கிராமங்களில் இருக்கும் விலை எடுத்து அனைத்தும் பல முறை சராசரியாக்கப்பட்டு
Price index கிடைக்கிறது. இத்தனை முறை சராசரி ஆகும் போது விலை அதிகமாகும்
பொருளும், குறையும் பொருளும் ஒன்றோடு ஒன்று கேன்சல் ஆகிவிடும்.
நான்காவது விஷயம் – ஒரு வருடத்திற்கு முந்தைய Price Index மட்டுமே
inflation கணக்கிட எடுத்து கொள்ளப்படும். மூன்று வருடங்களாக தொடர்ந்து விலை
ஏறிக்கொண்டு இருக்கிறது என்று நமக்கு தெரிந்தாலும், inflation ஒரு வருடத்திற்கு
முன்பு இருந்த விலையை மட்டுமே கணக்கில் கொள்ளும். அதனால், நல்ல ஞாபக சக்தி
இருப்பவர்கள் inflation data-வை நம்பாமல் அதிகம் புலம்புவார்கள்.
சரி, இப்போது பணவீக்கத்தை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்?
பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் இருக்கின்றன. Monetary Policy என்பார்கள்.
முக்கியமாக வட்டி விகிதத்தை ஏற்றி நாட்டிலே இருக்கும் பணப்புழக்கத்தை குறைக்க
முயல்வார்கள். இப்போது நாட்டிலே பொருளாதாரம் வளர வட்டியை குறைக்க வேண்டும் என்று
அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், வட்டியை மேலும் குறைத்தால் பணவீக்கம்
அதிகமாகிவிடும் என்று மத்திய வங்கி அதை செய்ய தயங்குகிறது. இதே
காரணத்திற்காகத்தான், ரகுராம் ராஜனோடு மோடி அரசு மோதியது. இறுதியில், ராஜன்
கூறியதே உண்மையானது. இப்போது உர்ஜித் படேலும் வட்டியை குறைக்க தயங்குகிறார்.
அடுத்து, fiscal policy என்பார்கள். அதாவது அரசு வீண் செலவுகளை
குறைத்தல். இதை எந்த அரசும் செய்வதில்லை. ஓட்டுக்காக அரசு ஊழியர்களுக்கு
அதிகப்படியான சம்பளம், இலவசங்கள்.
இன்னோரு வழி, வரிகளை ஏற்றுவது. (மக்களிடம் பணபுழக்கம் குறைய வேண்டும்.
அதிக வரிவிதிப்பினால் மக்களிடம் இருக்கும் பணம் அரசிடம் வந்துவிடுமல்லவா? அதுதான்
விஷயம்) ஆனால், இதை தவறான முறையில் செயல்படுத்தினால், ஏற்கனவே விலைவாசி உயர்வால்
பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், அதிக வரியினால் இன்னும் பாதிக்கப்படுவார்கள்.
அதுதான், இப்போது ஜி.எஸ்.டி விஷயத்தில் நடக்கிறது.
இதை தவிர, தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வது,
கள்ள மார்க்கெட்டை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இதெல்லாம்
பொருட்களின் விலையை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்.
சமையல் கேஸ், ரேஷன் பொருட்ளின் மானியத்தை குறைப்பது போன்ற வேலைகளை
தொடர்ந்து செய்து வந்தால் பணவீக்கம் ஏறத்தான் செய்யும். நாமும் புலம்பிகொண்டே
இருக்க வேண்டியதுதான்.
No comments:
Post a Comment