Friday 27 October 2017

Mormugaon Coal Import


மர்முகாவ்(ன்) துறைமுகம்... இந்தியாவின் மேற்கு கரையோரம் இருக்கும் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கரியால் கோவா மாநிலமே மூச்சு திணறும் அபாயத்தில் உள்ளது. இது குறித்து Indian Express நான்கு மாதங்கள் ஆய்வு செய்து தந்த ரிப்போர்ட்டிலிருந்து முக்கிய விஷயங்கள் மட்டும்.
2016-17ல் 12.75 மில்லியன் டன் கரி மர்முகாவ் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இன்னும் மூன்று வருடங்களில் இது 25 மில்லியன் டன்களாகும். அடுத்த பத்து வருடங்களில், அதாவது 2030ல் 51.6 மில்லியன் டன்கள்.
இதில் ஒரு டன் கரிக்கு கூட கோவாவில் உபயோகம் இல்லை. அத்தனை கரியும் கர்நாடகாவில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கும், எஃகு தொழிற்சாலைகளுக்கும் செல்கிறது. இறக்குமதியாகும் கரி ரோடுகள், படகுகள், ரயில் என மூன்று விதமாக கோவாவிலிருந்து கர்நாடகத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. (படத்தை பார்க்கவும்)

இப்படி ட்ராஸ்போர்ட் செய்யப்படும் கரியின் துகள்கள் காற்றிலே பரவி வீடுகள், வயல்கள், ஆறுகள் என எல்லா இடத்திலும் கரித்துகள் படிகிறது. மனிதர்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து. கரிவண்டிகள் மீது தார்பாலின் கவர்கள் போடப்பட்டாலும் காற்றடிக்கும் போது இந்த கவர்கள் விலகி கரித்துகள் எங்கும் பறக்கிறது. இதுதான் கோவாவிற்கு வந்துள்ள பெரிய தலைவலி.
எமர்ஜென்ஸி நெபுலைஸர் சிகிச்சைகள் அதிகமாகிவிட்டதாக டா. பெட்ரோ டா கோஸ்டா கூறுகிறார். தினமும் ஏராளமான ஆஸ்துமா மற்றும் பிற நுரையீரல் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். அவருடைய மருத்துவமனையிலே படிந்திருக்கும் கரித்துகளையே ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்யவேண்டியிருக்கிறது.
இப்படி சுற்றுசூழல் சீர் கெட்டால் டூரிஸம் மொத்தமும் அடிபடும். எந்த வெளிநாட்டு பயணி கோவா வந்து சுவாச கோளாறை விலை கொடுத்து வாங்குவார்?
இப்போது மூன்று ஆண்டுகளில் இறக்குமதியை இரண்டு மடங்காக்க போகிறார்கள். கர்நாடகாவில் இருக்கும் மேலும் 17 அனல் மின்நிலையங்களும், 22 எஃகு தொழிற்சாலைகளும் மர்முகாவ்-இல் இறக்குமதி செய்யப்படும் கரியை உபயோகிக்கலாம் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை எதிர்பார்க்கிறது.
இலக்கை எட்டவேண்டுமானால் இவ்வளவு கரியையும் துறைமுகத்திலிருந்து உடனுக்குடன் எடுக்க வேண்டும். கரி சுமக்கும் படகுகள் போகும் ஆற்றை ஆழப்படுத்தவேண்டும். இது மீன்பிடி தொழிலையும், ஆற்றில் இருக்கும் உயிர்சங்கிலியையும் பாதிக்கும். மேலும் ஆற்றின் இருபக்கம் கரியை கொட்டி அதை தற்காலிக சேமிக்கும் இடமாக மாற்றும் திட்டமும் உள்ளது.
இருக்கும் ரயில்வே லைனை அதிகரிக்க போகிறார்கள். அதற்கான நிலம் கையகப்படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சில பழமைவாய்ந்த சர்ச்சுகளும், வீடுகளும், விவசாய நிலங்களும் அடிபட போகின்றன. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இறக்குமதி இந்த அளவில் இருக்கும் போதே சூழல் பிரச்சனை அதிகமாக இருக்க முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கரி இறக்குமதி செய்வது. இரண்டாவது, சுற்றுசூழல் துறை குறிப்பிடும் விதிகளை கடைப்பிடிக்காதது. உதா, கரியின் மேல் எப்போதும் நீர் தெளிக்க வேண்டும், ஐந்து மீட்டருக்கு மேல் கரியை குவிக்க கூடாது. இதையெல்லாம் கடைபிடித்தால் பிரச்சனையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
ஆனால், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இந்த இறக்குமதியை நிறுத்தக்கூடாது என்றும் சிலர் கூறுகிறார்கள். காரணம், வேலைவாய்ப்பு. முன்பு கோவாவில் இரும்பு தாது வெட்டியெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் பெரும் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்து உச்சநீதிமன்றம் இரும்பு தாது எடுப்பதை தடை செய்தது. (தற்போது குறைந்த அளவில் தாது எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது). அந்த தடையால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் பறிபோயின.
கூடவே, இப்படி கோவாவில் இறக்குமதி செய்து கர்நாடகத்திற்கு கரி அனுப்பப்படுவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலவை வெகுவாக குறைக்கிறது.
ஆக, வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் ஒருபுறம். உயிர் வாழும் சூழல் மறுபுறம். இரண்டுமே முக்கியம். இரண்டில் எதை விட்டு கொடுத்தாலும் நஷ்டம் கோவாவிற்கே. Out of the Box தீர்வுகள் ஏதாவது கிடைத்தால் உண்டு...
கோவாவில் புத்தாண்டை கொண்டாட விரும்புபவர்கள் எதற்கும் சீக்கிரம் போய்விட்டு வருவது நல்லது...
முழு ரிப்போர்ட் படிக்க - 
http://indianexpress.com/…/coal-on-move-25-tonnes-a-minute…/

No comments:

Post a Comment