நேற்று பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தில் கோகா (Ghogha) மற்றும்
தஹேஜ் (Dahej) இடையேயான ரோரோ படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த படகு
போக்குவரத்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. இதன் முக்கியத்துவம் என்ன,
சாகர்மாலா திட்டம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
வாஜ்பாய் செய்த முக்கியமான சாதனை தங்கநாற்கர சாலைகள். அதாவது
நாட்டின் நான்கு திசைகளிலும் உள்ள முக்கிய நகரங்களை 4/6 வழி சாலைகள் மூலமாக
இணைத்தது.
இதே போல வலுவான கட்டமைப்பை நீர் வழியிலும் ஏற்படுத்த வேண்டும்
என்பது வாஜ்பாயின் கனவு. ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு
மேம்படுத்துவது, தொழில்நகரங்களை அந்த துறைமுகத்துடன் இணைப்பது, இவற்றின் மூலம்
இந்திய கடலோர பகுதிகளை நாட்டின் வளர்ச்சிக்கு உட்படுத்துவது என்று பெரிய திட்டம்.
இந்த தொலைநோக்கு திட்டம்தான் சாகர்மாலா அதாவது கடல்மாலை. ஆனால்
அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாறியது. காங்கிரஸ் அரசாங்கம் இந்த திட்டத்தை 10
வருடங்கள் கிடப்பில் போட்டது.
பா.ஜ.க மீண்டும் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த மெகா
திட்டத்தை தூசி தட்டி மேம்படுத்தியது... மொத்தம் 415 பிராஜெக்ட்டுகள்.... 20
வருடங்களில் 8 லட்சம் கோடி முதலீடு... பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு...! இந்த
திட்டத்தின் கீழ்தான் இந்த ரோரோ படகு போக்குவரத்து வருகிறது.
கோகா குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ளது. தஹேஜ் தெற்கு குஜராத்தில்
உள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5000 வாகனங்கள் இரண்டு நகரங்களுக்கும் இடையிலே
செல்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலே கம்பட் வளைகுடா உள்ளது. படத்தை
பார்த்தாலே விளங்கிவிடும்... கோகாவிலிருந்து தஹேஜிற்கு செல்ல 7 மணி நேரம் பயணம்
செய்து இந்த வளைகுடா முழுவதையும் சுற்றி கொண்டு 360 கிலோ மீட்டர் செல்ல வேண்டும்.
அதற்கு பதிலாக இந்த படகு பயணத்தின் மூலமாக, வண்டிகளையும் ஏற்றி போட்டுக் கொண்டு
கடலிலே 31 கிலோமீட்டரை ஒரு மணி நேரத்திலே எளிதாக தாண்டி போய் விடலாம். நேரமும்,
பணமும் மிச்சமோ மிச்சம்...
ஆனால், இதற்கு கடலை ஆழப்படுத்த வேண்டும்... இரண்டு இடங்களிலும்
துறைகளை நிர்மாணிக்க வேண்டும்... இன்னபிற கட்டமைப்பு வேலைகளையும் செய்தாக
வேண்டும். 2012ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ரோரோ திட்டத்திற்கு அடிக்கல்
நாட்டினார். பட்ஜெட் 296 கோடி ரூபாய்... திட்ட காலம் 15 மாதங்கள். இப்போது
பிரதமராக வந்த பின் திறந்துள்ளார். அதாவது 70 மாதங்களுக்கு பிறகு 615 கோடிகள்
செலவு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
காலதாமதமானாலும், திட்டத்தை செயல்படுத்திய மோடி அரசுக்கு மிகுந்த
பாராட்டுக்கள்..! இந்த திட்டத்தில் ஊழல் எதுவும் நடந்திருக்காது என்று
நம்புவோமாக...!
அப்புறம் இரண்டு கேள்விகள் – ஒன்று, சாகர்மாலா போன்ற திட்டத்தை
காங்கிரஸ் அரசு ஏன் கிடப்பில் போடவேண்டும்? ஊழலோ, என்னவோ வசதிபோல பண்ணிக்கொண்டு
திட்டத்தை செயல்படுத்தலாமே? இரண்டு, குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பி.ஜே.பி
அரசுதான். 2014ல் இருந்து மத்தியிலும் பி.ஜே.பிதான். ஆனாலும் காலதாமதம்....
காங்கிரஸோ, பி.ஜே.பி யோ, அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தளவுக்கு காலதாமதம்
ஆவதும், செலவு அதிகரிப்பதும் ஏன்?
No comments:
Post a Comment