Saturday 21 October 2017

Floating Solar Panels


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையிலே (Renewable Energy) கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதில் அரசாங்கங்கள் ஆர்வம் கொண்டுள்ளன.
சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது நமக்கு புதிதில்லை... தரையிலே சோலார் பேனல்கள் அமைப்பதில் செலவு அதிகமாகிறது. காரணம் குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டுக்கு நிலம் கையகப்படுத்த செலவு அதிகம். அதற்கு பதிலாக நீர்நிலைகளின் மேலே சோலார் பேனல்கள் அமைத்தால்...?
நிலத்தை கையகப்படுத்தும் செலவு குறைவது மட்டுமல்லாமல் மிதக்கும் சோலார் பேனல்களில் வேறு பெரிய நன்மைகளும் உள்ளன. ஒன்று கீழே குளுமையான தண்ணீர் இருப்பதால் சோலார் பேனல்கள் சூடாவதில்லை. இதன் மூலமாக நிலத்தில் பேனல் நிறுவி மின்சாரம் தயாரிப்பதை விட 16-20% அதிக மின்சாரம் தயாரிக்கலாம். போனஸாக, பேனல்களுக்கு கீழே இருக்கும் தண்ணீரும் ஆவியாகாது... வீணாகாது. இப்படியாக, ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்...! இப்படி மிதக்கும் பேனல்களால் நீர்நீலைகளில் எந்த சூழல் மாசும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
இப்படி நீர்நிலைகள் மேலே பேனல் அமைத்து மின்சாரம் தயாரிக்க குஜராத்தே முன்னோடி. 2012ஆம் ஆண்டு குஜராத்தில் நர்மதை நதியின் கால்வாய் ஒன்றின் மேலே, 1MW அளவிற்கு மின் உற்பத்தி செய்ய சோலார் பேனல்கள் நிறுவப்பட்டன. இதுதான் நீர்நிலை மேல் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம். ஆனால் இவை மிதக்கும் பேனல்கள் அல்ல.
நாட்டிலேயே முதன்முறையாக, 2015ஆம் ஆண்டு மேற்கு வங்கத்திலே 10KW அளவிற்கு மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. இதன் வெற்றிக்கு பின்னர், கேரளா இந்த திட்டத்தை வேகமாக முன்னெடுத்து செல்கிறது.
கடந்த மார்ச் மாதம் கேரளத்தின் காயங்குளத்திலே NTPC நிறுவனம் Make In India திட்டத்தின் கீழ் 100KW மின் திட்டத்தை அமைத்தது. தற்போது, வயநாட்டில் உள்ள பாணாசுரா அணையிலே மிதக்கும் சோலார் பேனல்களை கொண்டு 500KW அளவிலே மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் பேனல் திட்டமாகும். (இது தவிர அணையின் மேல் இருக்கும் பாதையிலே கூரை போல சோலார் பேனல் அமைத்து மின்உற்பத்தி செய்யும் 400KW திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தனிக்கதை) 
மேலும், 10MW அளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டங்களை கேரளாவும், ஆந்திராவும் ஆய்வு செய்து வருகிறது. நீர் வளம் நிரம்பவும், நிலம் குறைவாகவும் இருப்பதால் கேரளா இந்த திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறது. மேலும், சுற்றுசூழலை பாழாக்காத திட்டமிது... எனவே கடவுளின் தேசம் ஆதரவளிக்கிறது.
நம் நாட்டின் மின்தேவைக்கு இதெல்லாம் ரொம்ப சொற்பமே... அதனால் இதன் அடுத்த லெவல் கடலில் மிதக்கும் பேனல்கள் அமைப்பது. இது குறித்த ஆய்வு லட்சதீவுகளில் நடக்க போகிறது. அந்த சோதனை முயற்சி வெற்றி பெற்று விட்டால், இந்தியாவின் கடற்கரைகளில் கணிசமான பேனல்கள் பொருத்தி வெகுவாக மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியா போல நீண்ட கடற்கரை உள்ள நாட்டிற்கு இதை விட வேறு வரபிரசாதம் என்ன?

No comments:

Post a Comment