Friday 20 October 2017

Small Scale Vs Large Scale


நம் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்பெல்லாம் Small Scale-ல் உற்பத்தியும், நுகர்வும் இருந்தன. அதை Large Scale – ல் செய்ய புகுந்து பல விரும்பத்தகாத பிரச்சனைகளில் மாட்டி கொள்கிறோம் என்று தோன்றுகிறது.
உதாரணமாக, பால் உற்பத்தியை எடுத்து கொள்வோம். ஒவ்வொரு ஏரியாக்களிலும் மாடு வளர்ப்பவர்கள் இருந்தார்கள். நம் கண்ணெதிரிலேயே பால் கறந்து கொடுப்பார்கள். (தண்ணீர் சேர்ப்பதாயிருந்தால் பாத்திரத்தை ஒரு நிமிடம் உள்ளே எடுத்து சென்றுவிட்டு கொண்டு வருவார்கள். நாமும் புரிந்து கொள்வோம்!)
பின்னர் ஆவின் வந்தது. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் வந்தன. இன்றைய தேதியிலே பால் உற்பத்தி துறையின் நிலையென்ன? நாட்டு மாடுகள் காணாமல் போகின்றன. ஹார்மோன் ஊசிகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பாலை திருடி சர்க்கரை கொட்டி ஊழல்... பால் உற்பத்தியை Small Scale –லில் இருந்து Large Scale – க்கு கொண்டு போனதன் விளைவா இது?
சரி, நம் சமையலுக்கு அத்தியாவசியமான உப்பை எடுத்து கொள்வோம். தெருமுனை செட்டியார் கடையிலே ஒரு சணல் மூட்டையிலே கல் உப்பு இருக்கும். என் அம்மா அதைத்தான் சமையலுக்கு உபயோகப்படுத்துவார்கள். பின்னர், அயோடின் உப்பு என்றார்கள். இப்போது சாதாரண உப்பு கிடைப்பதில்லை.... அயோடின் அதிகம் உட்கொள்ளுவதால் வரும் தீமைகள் குறித்து பேசுகிறார்கள். லோக்கலில் கிடைத்த உப்பை, கம்பெனிகள் கையில் கொடுத்ததன் விளைவா இது?
கருப்பட்டி தொலைத்து வெள்ளை சர்க்கரைக்கு மாறினோம். வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம், உடல் நலத்திற்கு கேடு என்னும் பிரச்சாரம் பலமாக நடக்கிறது.
கோழியை எடுத்து கொள்ளுங்கள். பிராய்லர் கோழி குறித்து வரும் செய்திகள் வருங்கால சந்ததி குறித்த அச்சத்தை தருகின்றன. கோழிகளுக்கு ஏதாவது நோய் வந்தால் முட்டைகள் அழிக்கப்படுகின்றன... சமயத்தில் கோழிகளும்.
இந்த வரிசையிலே இப்போது காய்கறி பழங்களும் இணைந்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட கம்பெனி விதைகளே பெருமளவில் உபயோகிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். என்ன நடக்குமோ...?
குழந்தைகள் கடலை மிட்டாய்களிலிருந்து கேண்டிகளுக்கு சென்றதையும் இதோடு சேர்த்து கொள்வோம்.
லோக்கல் குளிர்பானங்கள்/ சோடா நிறுவனங்கள் அழிக்கப்பட்டு இரண்டு கம்பெனிகளே இந்தியாவில் கோலோச்சுகின்றன. அந்த கம்பெனிகள் எந்த பகுதியிலே தங்கள் தொழிற்சாலையை நிறுவுகின்றனவோ, சில ஆண்டுகளில் அந்த பகுதியின் நிலத்தடி நீர் முழுக்க காலியாகிவிடுகிறது... விவசாயம், குடிநீர், கால்நடை வளம் எல்லாமே அவுட்.
ஆக, உணவு பொருட்களை பொறுத்த வரை அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் உற்பத்தி செய்து, அந்தந்த பகுதி மக்களே அவற்றை பயன்படுத்தும் வரை எந்த பிரச்சனையும் எழுவதில்லை. அதை கம்பெனிகளிடம் ஒப்படைத்து, ஒரே இடத்தில் உற்பத்தி, நாடு முழுவதும் நுகர்வு என்று Large Scale-ல் கொண்டு போனால் இன்னல்தான்...!
சிறிய அளவில் உற்பத்தி செய்ய முடியாத, உணவில்லாத பிற பொருட்களுக்கு மட்டுமே கார்ப்பரேட் மாடல் அவசியம். உதா – வாகனங்கள், சிமெண்ட். இவற்றை குடிசை/ சிறு தொழிலாக செய்ய முடியாது. ஆக, இது கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க வேண்டிய விஷயம்.
முன்னேற்றம் என்பது பெரும் உற்பத்தியோ, பெரும் நுகர்வோ அல்ல... அது மக்களின் வளமான வாழ்வுதான்.

No comments:

Post a Comment