உங்கள் வாகனத்தில் இருக்கும் High Beam விளக்கு வசதியை அதிகமாக
உபயோகிப்பவரா? அல்லது அது என்ன High Beam, Low Beam... எனக்கு எதுவும் தெரியாதே
என்பவரா? உங்களுக்கான பதிவுதான் இது. மேலே படியுங்கள்.
High Beam என்பது உங்கள் வாகனத்தில் உள்ள விளக்கின் வெளிச்சத்தை
தூரத்திற்கு குவித்து அனுப்பும் வசதியாகும். அதாவது, உங்களால் வெகு தூரத்திற்கு
பார்க்க முடியும். Low Beam என்பது விளக்கின் வெளிச்சத்தை சிதறடித்து குறைந்த
தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சும்.
பொதுவாக நகரத்திற்கு உள்ளே வண்டி ஓட்டும்போது High Beam
பயன்படுத்தக்கூடாது. நீங்கள் High Beam உபயோகித்தால், உங்களுக்கு எதிரில் யாராவது
வாகனம் ஓட்டி வந்தால், அதீத வெளிச்சத்தால் அவர்களது கண் கூசும். உங்களுக்கு
முன்னால் யாராவது வாகனம் ஓட்டினால், வெளிச்சம் அவர்களது ரியர் வியூ மிரரில் பட்டு
அவர்களுக்கும் கண் கூசும். நீங்கள் உங்களுக்கு முன்னே இருக்கும் கார் போன்ற
வாகனத்தை அருகிலே தொடர்ந்தால் உங்கள் கண்ணும் கூசும்.
கண் கூசினால் என்ன ஆகும்? ரொம்ப சிம்பிள்... கவனம் சிதறும். வாகனம்
ஓட்டுபவர் தன்னையே அறியாமல் ஒரு எரிச்சலான மனநிலையை அடைவார். விபத்து நடப்பதற்கு
வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எப்போது High Beam உபயோகிக்கலாம்? பெரிய நெடுஞ்சாலைகளில்,
கிட்டத்தட்ட 500 அடிக்கு தூரத்திற்கு வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் மட்டுமே,
அல்லது தெருவில் வெளிச்சம் இல்லையென்றால் மட்டுமே High Beam உபயோகிக்கலாம்.
சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் உள்ளன. இந்த
எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலைஅலையாக வாகனங்கள் தொடர்ந்து
வரும்போது High Beam வெளிச்சத்தால் வாகனம் ஓட்டுபவர் தன்னையே அறியாமல் மன
அழுத்தத்திற்கு உள்ளாவார். கண்கள் சோர்ந்து விடும். அதனால்தான் டிராபிக்கில் வண்டி
ஓட்டினால் மிகுந்த களைப்பை உணர்கிறோம்.
நெடுஞ்சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டும்போது உபயோகப்படுத்த வேண்டிய
High Beam –ஐ, சென்னையின் பிரகாசமான தெருவிளக்குகள் அமைக்கப்பட்ட, குறுகலான
தெருக்களில், அதுவும் ஓரடி இடைவெளியில் வாகனங்களை முட்டி கொண்டு பின்தொடரும்போது
பயன்படுத்த அவசியமே இல்லை.
என் வண்டியில் இருப்பது High Beam-ஆ, Low Beam-ஆ என்று
தெரியவில்லையே என்பவர்கள் - உங்கள் நண்பர்களிடமோ, வண்டி மெக்கானிக்கிடமோ கொஞ்சம்
கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் எளிமையாக ஒரே ஒரு ஸ்விட்சை அழுத்துவதன்
மூலமாக Low Beam-க்கு மாறி கொள்ளலாம்.
சிந்தித்து பொறுப்புடன் செயல்படுங்கள்... உங்கள் மகிழ்ச்சியான
பயணம் மற்றவர்களுக்கு துயரத்தை தருவதாக இருக்கக்கூடாது.
No comments:
Post a Comment