Friday 13 October 2017

Swedish Death Cleaning


Swedish Death Cleaning – பேரை பார்த்து பயந்து போக வேண்டாம்... இது ஒரு புது விஷயம்.... வாழ்க்கையை குறித்த ஒரு மாறுபட்ட பார்வையை தருகிறது.
புது விஷயத்திற்கு போவதற்கு முன் Minimalism பற்றி தெரிந்து கொள்வோம். வாழ்க்கைக்கு தேவையான, அடிப்படை (basic) பொருட்களை மட்டுமே வைத்து கொண்டு எளிமையான வாழ்கை வாழ்வதே மினிமலிசம். உதாரணம் – மகாத்மா காந்தி வாழ்ந்தது ஒரு மினிமலிச வாழ்க்கை.
தற்காலத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகி விட்ட நிலையில், அதை விரும்பாத மக்களால் மினிமலிசம் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.... நம் நாட்டிலும் மினிமலிசம் பரவலான பேசுபொருளாகி இருக்கிறது. இந்த மினிமலிச கோட்பாட்டிலிருந்து, அதை போலவே இன்னொரு கோட்பாடு கிளம்பியுள்ளது. அதுதான் Swedish Death Cleaning.
சிலரது வீடுகளில் தாத்தா, பாட்டி காலத்து பொருள்கள் யாவும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அதை தூக்கி போடவும் மனசு வராது.... “அந்த காலத்து சாமான், எங்க பாட்டியோடதாக்கும்” என்று பழைய குப்பைகளை வைத்திருப்பார்கள். வருங்கால சந்ததிகளுக்கு ஏன் இந்த குப்பைகளையும், தூக்கி போட மனம் வராத தர்மசங்கடத்தையும் தரவேண்டும்? மரணத்திற்கு முன்பே ஒருவர் தன்னுடைய உடைமைகளை ஏன் ஒழித்து கட்ட கூடாது?
ஐம்பது வயதாகிவிட்டவர்கள் தங்களுடைய உடைமைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்வதே டெத் க்ளீனிங். இது வீட்டை சுத்தம் செய்வது போல, ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் தூக்கி போடுவது அல்ல... மாறாக இது ஒரு வாழ்க்கை முறை. (lifestyle)
தன் உடைமை என்று கருதும் ஒவ்வொரு பொருளாக எடுத்து, அது தன் வாழ்க்கைக்கு அவசியமானதா, விருப்பத்தினால் சேர்ந்த பொருள் எது, தேவைக்காக சேர்ந்த பொருள் எது என்றெல்லாம் சுயமாக ஆராய வேண்டும். பின் அந்த பொருளை விடவேண்டும்.... அதாவது, மனத்துறவு. பின்னர் அந்த பொருளை இல்லாதவருக்கு கருணையோடும், அல்லது நண்பர், உறவினர்களுக்கு அன்போடும் பரிசாகவோ கொடுக்க வேண்டும். இது எதுவும் இயலவில்லையெனில் சிறுதொகைக்கு விற்றும் விடலாம். இப்போது அந்த பொருள் இல்லாத வாழ்க்கை முறைக்கு பழகவேண்டும். அப்படி பழகி, வாழ்க்கை இயல்பான பின்னர் அடுத்த பொருளை எடுத்து ஆராயவேண்டும். இப்படியே ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆராய்ச்சி, மனத்துறவு, விலக்கம், எளிய வாழ்க்கை...
இப்படி சிறிது சிறிதாக உடைமைகளை துறந்து, மரணிக்கும் காலத்தில் அதம பட்ச உடைமைகளை மட்டுமே கொண்டு வாழவேண்டும். அடுத்த தலைமுறைக்கு பாரமாக உடைமைகளை விட்டு போகாமல் அனைத்தையும் தங்கள் வாழ்நாளிலேயே ஒழித்து கட்ட வேண்டும். இதுதான் டெத் க்ளீனிங்.
வயதாக வயதாக பொறுப்புக்களை குறைத்து கொள்வது நம் நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம்... அதை வானபிரஸ்தம் என்பர். ஆனால், காலம் மாறிவிட்ட சூழ்நிலையில் பொறுப்புகளோடு, பொருள்களையும் குறைத்து கொள்வதும் நல்லதுதானே...

No comments:

Post a Comment