ஒவ்வொரு உயிரும் மரணத்தை கண்டு அஞ்சுகிறது. உடலோடு தன்னை
அடையாளப்படுத்தி கொண்ட மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏதோ சிலர் மட்டுமே தாங்கள்
உடலல்ல.. அதையும் தாண்டிய ஆத்மா எனும் அழிவில்லாத வஸ்து என்று உணர்கிறார்கள்.
அவர்களையே மகான்கள் என்று கூறுகிறோம்.
எண்ணிக்கையில் வெகு சொற்பமான மகான்களை விட்டு தள்ளுவோம். இப்போது
மெஜாரிட்டியாக இருக்கும் என்னை போன்ற சாதாரணமானவர்களை பார்ப்போம். அவர்களுக்கு ஆத்மாவெல்லாம்
புரியவில்லை. ஆனால் மரணம் குறித்த பயம் மட்டுமே உள்ளது. உடல் அழியும்.. ஆனால் நீ
மீண்டும் பிறப்பெடுப்பாய் என்பது convincing ஆக இல்லை. மறு பிறப்பெடுக்கும் போது
பழைய நினைவுகள் இருப்பதில்லையே. அந்த மறு பிறப்பு நாம்தான் என்று எப்படி உணர்வது?
மரணமே தனக்கு வரக்கூடாது, எப்போதும் நீடித்த வாழ்வு வேண்டும் என்று
விரும்பும் மனிதன் கசப்பான மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். அதே சமயம் அவனது தீராத
ஆசைகள் தரும் வேதனையிலிருந்து அவனை ஆச்வாசப்படுத்தவேண்டும். அதுவே இந்த
முன்னோர்கடன் போன்ற விஷயங்கள் என்று எனக்கு தோன்றுகிறது.
“மாமா! உனக்கு தெரியாதா…? நான் ஜாங்கிரின்னா உசுரையே கொடுப்பேன்…”
“கவலைப்படாம போய் சேருடா… வருஷாவருஷம் உனக்கு தெவசத்துல ஜாங்கிரி செஞ்சு போடறேன்…”
“கவலைப்படாம போய் சேருடா… வருஷாவருஷம் உனக்கு தெவசத்துல ஜாங்கிரி செஞ்சு போடறேன்…”
எத்தனை எளிமையான நம்பிக்கை தரும் வழியனுப்பல். நான் இறந்தாலும்
எனக்கு பிடித்ததை தொடர்ந்து சாப்பிடுவேன். என்னை சுற்றியிருக்கும் நண்பர்களும்,
உறவினர்களும் என்னை ஞாபகம் வைத்துகொள்ளுவார்கள். சரி, விடு… மாரை வலிக்கிறது,
மூச்சிழுக்கிறது, கொஞ்சம் செத்துதான் பார்ப்போமே என்று நம்பிக்கையோடு பிராணனை
விடலாம்.
இது இறப்பவனுக்கு சரி, உயிரோடு இருப்பவனுக்கு…? அவனுக்கும் ஒரு ஆறுதல். நான்
செத்தாலும் எனக்கு பிடித்த வடை செய்து வைப்பார்கள். நாமும் தின்னலாம்… மரணபயம்
சற்றே விலகி போகிறது. தினசரி வேலைகள் தொடர்ந்து நடக்கிறது.
உயிரோடு இருக்கிறவன் திவசம் செய்யவேண்டிய அவசியம்…? ஒன்று நீ
திவசம் செய்தால் உன் பிள்ளை உனக்கு திவசம் செய்வான். உனக்கு ஜாங்கிரியோ, வடையோ
தடையில்லாமல் கிடைக்கும். பித்ருக்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வார்கள். அப்படி
திவசம் செய்யவில்லையென்றால் உனக்கு பித்ரு சாபம் வந்து சேரும். நீ மட்டுமல்ல… உன்
வம்சமே விளங்காது என்னும் பயமுறுத்தல்கள். அதாவது, கேரட் அல்லது பிரம்படி.
நேற்று வரை என் போல் சாதாரண மனிதனாக கோபம், பொறாமை போன்ற
குணங்களோடு உலவி கொண்டிருந்த மனிதர், இறந்ததும் எப்படி வரமளிக்கும் ஆற்றல்
பெற்றவரானார்? ஹிட்லரும், போல்பாட்டும் ஆசீர்வதிப்பதை நம்பமுடிகிறதா?
லட்சக்கணக்கான மக்களை பட்டினியில் தள்ளி கொன்ற ஸ்டாலினும், மாவோவும் திடீரென்று நல்லவர்களாகி
விடுவார்களா?
பித்ருக்களுக்கு ஸ்பெஷல் பவர் உண்டு என்று சொல்லப்பட்டது. தேவ
பூஜையை விட பித்ரு பூஜைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது (மஹாபாரதம்). மாதா,
பிதாவுக்கு பிறகே தெய்வம் என்று வைக்கப்பட்டதால், இறந்த பிறகும் பித்ருக்களுக்கே
முன்னுரிமை
எப்படியோ, சாகின்றவனை ஆறுதல் படுத்தியாயிற்று. இருக்கிறவனை எப்படி
வழிக்கு கொண்டு வருவது…? சொர்க்கமும், நரகமும் படைக்கப்பட்டன… இறந்த பிறகு ஒரு
புதிய உடம்பு கிடைக்கும் (யாதனா சரீரம்?). அது அழியாது என்று சொல்லப்பட்டது.
நரகத்தில் அணையாத கொடும் நெருப்பும், சொர்கத்தில் அழகு மங்கைகளின் நாட்டியமும்
வந்தது. கவனித்து பார்த்தால் நரகத்தில் யாரும் உம்மை லேசர் கதிர்களால் சுட்டு
பொசுக்க மாட்டார்கள்… ஆண்ட்ராய்ட் போனிலே பேஸ்புக் சேட் செய்ய மாட்டார்கள்… அந்த
காலத்து டெக்னாலஜி படி உம்மை சட்டியிலே வறுப்பார்கள்… அல்லது அழகிகளின் டான்ஸ் பார்க்க
சொல்லுவார்கள். பெண்கள் சொர்க்கம் போனால் அங்கேயும் கணவருக்கு பணிவிடை
செய்வார்கள்…
சுஜாதா இந்த அபத்தங்களை கேலி செய்கிறார். ஒரு நாயின் சொர்க்கம்
எப்படி இருக்கும் என்று சிக்கலான கேள்வி கேட்கிறார். நாம் டிரெண்டியாக டெங்கு
வைரஸின் சொர்க்கத்தை யோசிப்போம்.
ஆனால், ஆன்மீக தலைவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளுக்கு பெரும்
முக்கியத்துவம் தருகிறார்கள். சாஸ்திரங்களை பிறழாமல் கடைப்பிடித்த மஹா பெரியவாள்
சிரார்த்த சடங்கை மிகவும் முக்கியம் என்கிறார். விவேகானந்தர் இறந்து போய் ஆவியாய்
சுற்றும் ஒருவருக்கு மணலால் சிரார்த்தம் செய்கிறார். ஆனால், இவையெல்லாம்
இந்துகளுக்கு மட்டுமே என்பதை கவனிக்க வேண்டும். கிறித்தவ, முகமதிய, யூத
பித்ருக்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
பிரையன் வெய்ஸைற்கு பிறகு மேற்கத்திய நாடுகளிலும் மறுபிறவி
நம்பிக்கைகள் பெருகிவிட்டன. இறந்தவர்கள் அதே குடும்பத்திலோ, அல்லது தன்னுடன்
தொடர்பு உடையவர்களிடமோ மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்று பிரையன் வெய்ஸ்
சொல்கிறார்.
அப்படி இறந்தவர்கள் பிறக்கும் பட்சத்தில், நாம் தரும் பிண்டம்
எங்கு போய் சேருகிறது… மீண்டும் பிறந்தவர்களுக்கு அந்த பிண்டம் சென்று சேருகிறது
என்று பெரியவாள் கூறுகிறார். இப்போது நாம் தானம் தரும்போது நல்லவர்களுக்கே தானம்
தரவேண்டும், தீயவர்களுக்கு தானம் தந்தால் பாவம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால்
அடுத்த ஜென்மத்தில் என் பித்ரு நல்லவரா, தீயவரா என்று தெரியாத பட்சத்தில் பிண்டம்
இடலாமா? (மஹாபாரதத்தில் துரியோதனனுக்கு சிரார்த்தம் செய்ய அவன் தந்தை
திருதராஷ்டிரன் விரும்ப, அதை பீமன் தடுக்கிறான்)
சிரார்த்தத்திற்கான விதிமுறைகள் மிக கடுமையானவை. அவற்றையெல்லாம்
இந்த காலத்தில் முழுமையாக கடைபிடிப்பது என்பது ரொம்ப கஷ்டம். மனதிருப்திக்காக
சிரார்த்தம் என்று ஏதோ சடங்கை செய்பவர்களே அதிகம்.
இவையெல்லாம் மனிதன் மரண பயத்தினாலும், வாழும் வாழ்க்கையை அறத்தோடு
வாழ வேண்டும் என்ற விருப்பத்தினாலும் தானாகவே உண்டாக்கி கொண்டவை என்றே
தோன்றுகிறது. ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யும் போது இறந்தவன் செய்த
நன்செயல்களும், தீயசெயல்களும் நினைவுக்கு வந்து நம்மை சிந்திக்க செய்து
வழிப்படுத்தும். ஏதோ ஒரு விதத்தில் நல்லது நடந்தால் சரி.
No comments:
Post a Comment