Monday, 30 October 2017

Inflation - Method of Calculation


பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாய் அரசாங்கம் சொல்வதும், விலைவாசி தொடர்ந்து ஏறிக்கிட்டு இருக்கு... இவனுங்க என்ன பொய் சொல்றாங்க என்று குடும்பஸ்தர்கள் புலம்புவதும் எப்போதும் நடப்பதுதான். அரசாங்கம் அத்தனை புள்ளிவிவரம் சேகரித்து கணக்கு போட்டு தரும் தகவல் பொய்யாகுமா? அல்லது நாம்தான் சும்மாச்சுக்கும் அரசாங்கத்தை குறை கூறுகிறோமா? ஒரு எளிமையாக்கப்பட்ட பதிவு.
இதற்கு முதலில் இரண்டு விஷயங்களை பார்க்க வேண்டும். ஒன்று, Price Index. அடுத்து, Inflation. முதலில் Price Index பற்றி பார்ப்போம். Price Index என்றால் நடப்பு வருடத்தின் விலைகளோடு ஒரு அடிப்படை வருடத்தின் (Base year) விலைகளை ஒப்பிட்டு பார்ப்பது. உதா. இந்தியாவில் இப்போது Base year 2012-ஆக உள்ளது. 2012-ல் மளிகை சாமான்கள் விலை 4000 ரூபாய். இப்போது 2017-ல் அதே மளிகை விலை 6000 ரூபாய். Price Index = 6000/ 4000 * 100 = 150. சிம்பிளாக இருக்கு இல்லையா?
சரி, சிக்கல்களுக்கு போவோம். முதலில் ஒரு பொருளை மட்டுமே கொண்டு Price Index கணக்கிட கூடாது. குறிப்பிட்ட பொருட்களின் தொகுப்பு வேண்டும். Basket of Goods என்பார்கள். (அரிசி, பருப்பு, முட்டை, பெட்ரோல், பள்ளி கட்டணம் etc)
அடுத்த பிரச்சனை.... கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி கிலோ 50 ரூபாய். நம்ம தெருமுனை கடையிலே 100 ரூபாய். எந்த விலையை கொண்டு Price Index கணக்கிடுவது?
மொத்த மார்க்கெட் (Whole Sale) விலையை கொண்டு Price Index கணக்கிட்டால் அது WholeSale Price Index (WPI) எனப்படும். சில்லறை மார்க்கெட் விலையை கொண்டு கணக்கிட்டால் அது Consumer Price Index (CPI) எனப்படும்.
இதற்கு முன்பு இந்தியாவில் WPI கொண்டு பணவீக்கத்தை கணித்தார்கள். திரு. ரகுராம் ராஜன் இந்த முறையை மாற்றி CPI கொண்டு பணவீக்கத்தை கணிக்க ஆரம்பித்தார். (மாற்றத்திற்கு ரெகமண்ட் செய்தது இப்போதைய RBI கவர்னர் திரு. உர்ஜித் படேல்தான்)
இப்படி மாற்றியதற்கு வலுவான காரணம் உண்டு. WPI பொருட்களின் விலை மாற்றத்தை மட்டும்தான் கவனத்தில் கொள்ளும். CPI பொருட்கள் மட்டுமல்லாது, சேவைகளின் விலை மாற்றத்தையும் எடுத்து கொள்ளும். பள்ளி கட்டணம், மருத்துவ செலவு போன்றவை CPI முறையில்தான் வரும். மேலும், CPI முறையிலே உணவு பொருட்களுக்கு நல்ல weightage உண்டு (50%). அதனாலும் CPI முறை WPI முறையை விட மேலானதாக இருக்கிறது.
இந்த CPI எடுத்தாலும் இன்னும் கொஞ்சம் குழப்பங்கள் உண்டு. நகரத்தில் இருக்கும் விலைவாசியும், அதன் மாற்றங்களும் கிராமங்களில் கிடையாது. அதனால், CPI urban, CPI rural என்று எடுத்து அதன் சராசரி ஆக்கி விடுகிறார்கள். அதாவது நகரங்களில் ஏற்படும் விலைவாசி மாற்றங்கள், கிராமங்களில் ஏற்படும் விலைவாசி மாற்றங்கள் இரண்டையும் தனித்தனியாக கணித்து, பின்னர் சராசரி எடுத்து கொள்கிறார்கள். இதற்கு CPI Combined என்று பெயர்.
சரி, இப்போது Price Index பார்த்து விட்டோம். அடுத்தது, Inflation.
Price Index கணித்து விட்டால் Inflation கணிப்பது சுலபம். Inflation-ஐ கணக்கிட தற்போதைய price Index - ஐ ஒரு வருடத்திற்கு முந்தைய price Index - உடன் ஒப்பீடு செய்யவேண்டும்.
உதா. சென்ற வருட price Index 150... இந்த வருடம் 160 என்று கொள்வோம். அப்போ inflation = 10/150 *100 = 6.67%
சரி, கணக்கெல்லாம் நியாயமாகத்தானே இருக்கிறது. என் வீட்டு பட்ஜெட் எகிறுகிறது. ஆனால், inflation 3% என்கிறார்களே... புரியவில்லையே என்கிறீர்களா?
முதல் விஷயம் – Basket – அதாவது, index கணிக்க என்ன பொருளை எடுக்கிறார்களோ, அதே பொருளை நீங்களும் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உதா. முட்டை, இறைச்சி. இவை CPI Basket- லே இருக்கும் இவற்றின் விலை இறங்கினாலும், ஏறினாலும் அசைவம் உண்ணாதவர்களின் வீட்டு பட்ஜெட் மாறாது அல்லவா? இது ஒரு உதாரணம்தான்.
இரண்டாவது விஷயம் – Weightage – Index – இலே கொடுக்கப்படும் Weightage அடிப்படையிலா நமது செலவுகள் அமையும். இதெல்லாம் கொஞ்சம் குத்து மதிப்பாகத்தான் அமையும்.
மூன்றாவது விஷயம் – சராசரி. இந்தியா முழுக்க இருக்கும் முக்கிய நகரங்களில், கிராமங்களில் இருக்கும் விலை எடுத்து அனைத்தும் பல முறை சராசரியாக்கப்பட்டு Price index கிடைக்கிறது. இத்தனை முறை சராசரி ஆகும் போது விலை அதிகமாகும் பொருளும், குறையும் பொருளும் ஒன்றோடு ஒன்று கேன்சல் ஆகிவிடும்.
நான்காவது விஷயம் – ஒரு வருடத்திற்கு முந்தைய Price Index மட்டுமே inflation கணக்கிட எடுத்து கொள்ளப்படும். மூன்று வருடங்களாக தொடர்ந்து விலை ஏறிக்கொண்டு இருக்கிறது என்று நமக்கு தெரிந்தாலும், inflation ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை மட்டுமே கணக்கில் கொள்ளும். அதனால், நல்ல ஞாபக சக்தி இருப்பவர்கள் inflation data-வை நம்பாமல் அதிகம் புலம்புவார்கள்.
சரி, இப்போது பணவீக்கத்தை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் இருக்கின்றன. Monetary Policy என்பார்கள். முக்கியமாக வட்டி விகிதத்தை ஏற்றி நாட்டிலே இருக்கும் பணப்புழக்கத்தை குறைக்க முயல்வார்கள். இப்போது நாட்டிலே பொருளாதாரம் வளர வட்டியை குறைக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், வட்டியை மேலும் குறைத்தால் பணவீக்கம் அதிகமாகிவிடும் என்று மத்திய வங்கி அதை செய்ய தயங்குகிறது. இதே காரணத்திற்காகத்தான், ரகுராம் ராஜனோடு மோடி அரசு மோதியது. இறுதியில், ராஜன் கூறியதே உண்மையானது. இப்போது உர்ஜித் படேலும் வட்டியை குறைக்க தயங்குகிறார்.
அடுத்து, fiscal policy என்பார்கள். அதாவது அரசு வீண் செலவுகளை குறைத்தல். இதை எந்த அரசும் செய்வதில்லை. ஓட்டுக்காக அரசு ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம், இலவசங்கள்.
இன்னோரு வழி, வரிகளை ஏற்றுவது. (மக்களிடம் பணபுழக்கம் குறைய வேண்டும். அதிக வரிவிதிப்பினால் மக்களிடம் இருக்கும் பணம் அரசிடம் வந்துவிடுமல்லவா? அதுதான் விஷயம்) ஆனால், இதை தவறான முறையில் செயல்படுத்தினால், ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், அதிக வரியினால் இன்னும் பாதிக்கப்படுவார்கள். அதுதான், இப்போது ஜி.எஸ்.டி விஷயத்தில் நடக்கிறது.
இதை தவிர, தேவைப்பட்டால் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வது, கள்ள மார்க்கெட்டை ஒடுக்குவது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம். இதெல்லாம் பொருட்களின் விலையை குறைத்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும்.
சமையல் கேஸ், ரேஷன் பொருட்ளின் மானியத்தை குறைப்பது போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தால் பணவீக்கம் ஏறத்தான் செய்யும். நாமும் புலம்பிகொண்டே இருக்க வேண்டியதுதான்.

Sunday, 29 October 2017

High Beam


உங்கள் வாகனத்தில் இருக்கும் High Beam விளக்கு வசதியை அதிகமாக உபயோகிப்பவரா? அல்லது அது என்ன High Beam, Low Beam... எனக்கு எதுவும் தெரியாதே என்பவரா? உங்களுக்கான பதிவுதான் இது. மேலே படியுங்கள்.
High Beam என்பது உங்கள் வாகனத்தில் உள்ள விளக்கின் வெளிச்சத்தை தூரத்திற்கு குவித்து அனுப்பும் வசதியாகும். அதாவது, உங்களால் வெகு தூரத்திற்கு பார்க்க முடியும். Low Beam என்பது விளக்கின் வெளிச்சத்தை சிதறடித்து குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சும்.
பொதுவாக நகரத்திற்கு உள்ளே வண்டி ஓட்டும்போது High Beam பயன்படுத்தக்கூடாது. நீங்கள் High Beam உபயோகித்தால், உங்களுக்கு எதிரில் யாராவது வாகனம் ஓட்டி வந்தால், அதீத வெளிச்சத்தால் அவர்களது கண் கூசும். உங்களுக்கு முன்னால் யாராவது வாகனம் ஓட்டினால், வெளிச்சம் அவர்களது ரியர் வியூ மிரரில் பட்டு அவர்களுக்கும் கண் கூசும். நீங்கள் உங்களுக்கு முன்னே இருக்கும் கார் போன்ற வாகனத்தை அருகிலே தொடர்ந்தால் உங்கள் கண்ணும் கூசும்.
கண் கூசினால் என்ன ஆகும்? ரொம்ப சிம்பிள்... கவனம் சிதறும். வாகனம் ஓட்டுபவர் தன்னையே அறியாமல் ஒரு எரிச்சலான மனநிலையை அடைவார். விபத்து நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எப்போது High Beam உபயோகிக்கலாம்? பெரிய நெடுஞ்சாலைகளில், கிட்டத்தட்ட 500 அடிக்கு தூரத்திற்கு வாகனங்கள் எதுவும் இல்லையென்றால் மட்டுமே, அல்லது தெருவில் வெளிச்சம் இல்லையென்றால் மட்டுமே High Beam உபயோகிக்கலாம்.
சென்னை போன்ற நகரங்களில் ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலைஅலையாக வாகனங்கள் தொடர்ந்து வரும்போது High Beam வெளிச்சத்தால் வாகனம் ஓட்டுபவர் தன்னையே அறியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவார். கண்கள் சோர்ந்து விடும். அதனால்தான் டிராபிக்கில் வண்டி ஓட்டினால் மிகுந்த களைப்பை உணர்கிறோம்.
நெடுஞ்சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டும்போது உபயோகப்படுத்த வேண்டிய High Beam –ஐ, சென்னையின் பிரகாசமான தெருவிளக்குகள் அமைக்கப்பட்ட, குறுகலான தெருக்களில், அதுவும் ஓரடி இடைவெளியில் வாகனங்களை முட்டி கொண்டு பின்தொடரும்போது பயன்படுத்த அவசியமே இல்லை.
என் வண்டியில் இருப்பது High Beam-ஆ, Low Beam-ஆ என்று தெரியவில்லையே என்பவர்கள் - உங்கள் நண்பர்களிடமோ, வண்டி மெக்கானிக்கிடமோ கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மிகவும் எளிமையாக ஒரே ஒரு ஸ்விட்சை அழுத்துவதன் மூலமாக Low Beam-க்கு மாறி கொள்ளலாம்.
சிந்தித்து பொறுப்புடன் செயல்படுங்கள்... உங்கள் மகிழ்ச்சியான பயணம் மற்றவர்களுக்கு துயரத்தை தருவதாக இருக்கக்கூடாது.

Friday, 27 October 2017

Mormugaon Coal Import


மர்முகாவ்(ன்) துறைமுகம்... இந்தியாவின் மேற்கு கரையோரம் இருக்கும் முக்கிய துறைமுகங்களில் ஒன்று. இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் கரியால் கோவா மாநிலமே மூச்சு திணறும் அபாயத்தில் உள்ளது. இது குறித்து Indian Express நான்கு மாதங்கள் ஆய்வு செய்து தந்த ரிப்போர்ட்டிலிருந்து முக்கிய விஷயங்கள் மட்டும்.
2016-17ல் 12.75 மில்லியன் டன் கரி மர்முகாவ் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டது. இன்னும் மூன்று வருடங்களில் இது 25 மில்லியன் டன்களாகும். அடுத்த பத்து வருடங்களில், அதாவது 2030ல் 51.6 மில்லியன் டன்கள்.
இதில் ஒரு டன் கரிக்கு கூட கோவாவில் உபயோகம் இல்லை. அத்தனை கரியும் கர்நாடகாவில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கும், எஃகு தொழிற்சாலைகளுக்கும் செல்கிறது. இறக்குமதியாகும் கரி ரோடுகள், படகுகள், ரயில் என மூன்று விதமாக கோவாவிலிருந்து கர்நாடகத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. (படத்தை பார்க்கவும்)

இப்படி ட்ராஸ்போர்ட் செய்யப்படும் கரியின் துகள்கள் காற்றிலே பரவி வீடுகள், வயல்கள், ஆறுகள் என எல்லா இடத்திலும் கரித்துகள் படிகிறது. மனிதர்கள், கால்நடைகள் என அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து. கரிவண்டிகள் மீது தார்பாலின் கவர்கள் போடப்பட்டாலும் காற்றடிக்கும் போது இந்த கவர்கள் விலகி கரித்துகள் எங்கும் பறக்கிறது. இதுதான் கோவாவிற்கு வந்துள்ள பெரிய தலைவலி.
எமர்ஜென்ஸி நெபுலைஸர் சிகிச்சைகள் அதிகமாகிவிட்டதாக டா. பெட்ரோ டா கோஸ்டா கூறுகிறார். தினமும் ஏராளமான ஆஸ்துமா மற்றும் பிற நுரையீரல் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். அவருடைய மருத்துவமனையிலே படிந்திருக்கும் கரித்துகளையே ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம் செய்யவேண்டியிருக்கிறது.
இப்படி சுற்றுசூழல் சீர் கெட்டால் டூரிஸம் மொத்தமும் அடிபடும். எந்த வெளிநாட்டு பயணி கோவா வந்து சுவாச கோளாறை விலை கொடுத்து வாங்குவார்?
இப்போது மூன்று ஆண்டுகளில் இறக்குமதியை இரண்டு மடங்காக்க போகிறார்கள். கர்நாடகாவில் இருக்கும் மேலும் 17 அனல் மின்நிலையங்களும், 22 எஃகு தொழிற்சாலைகளும் மர்முகாவ்-இல் இறக்குமதி செய்யப்படும் கரியை உபயோகிக்கலாம் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை எதிர்பார்க்கிறது.
இலக்கை எட்டவேண்டுமானால் இவ்வளவு கரியையும் துறைமுகத்திலிருந்து உடனுக்குடன் எடுக்க வேண்டும். கரி சுமக்கும் படகுகள் போகும் ஆற்றை ஆழப்படுத்தவேண்டும். இது மீன்பிடி தொழிலையும், ஆற்றில் இருக்கும் உயிர்சங்கிலியையும் பாதிக்கும். மேலும் ஆற்றின் இருபக்கம் கரியை கொட்டி அதை தற்காலிக சேமிக்கும் இடமாக மாற்றும் திட்டமும் உள்ளது.
இருக்கும் ரயில்வே லைனை அதிகரிக்க போகிறார்கள். அதற்கான நிலம் கையகப்படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. சில பழமைவாய்ந்த சர்ச்சுகளும், வீடுகளும், விவசாய நிலங்களும் அடிபட போகின்றன. மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.
இறக்குமதி இந்த அளவில் இருக்கும் போதே சூழல் பிரச்சனை அதிகமாக இருக்க முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் கரி இறக்குமதி செய்வது. இரண்டாவது, சுற்றுசூழல் துறை குறிப்பிடும் விதிகளை கடைப்பிடிக்காதது. உதா, கரியின் மேல் எப்போதும் நீர் தெளிக்க வேண்டும், ஐந்து மீட்டருக்கு மேல் கரியை குவிக்க கூடாது. இதையெல்லாம் கடைபிடித்தால் பிரச்சனையை ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம்.
ஆனால், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் இந்த இறக்குமதியை நிறுத்தக்கூடாது என்றும் சிலர் கூறுகிறார்கள். காரணம், வேலைவாய்ப்பு. முன்பு கோவாவில் இரும்பு தாது வெட்டியெடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் பெரும் முறைகேடுகளும், ஊழல்களும் நடந்து உச்சநீதிமன்றம் இரும்பு தாது எடுப்பதை தடை செய்தது. (தற்போது குறைந்த அளவில் தாது எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது). அந்த தடையால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் பறிபோயின.
கூடவே, இப்படி கோவாவில் இறக்குமதி செய்து கர்நாடகத்திற்கு கரி அனுப்பப்படுவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலவை வெகுவாக குறைக்கிறது.
ஆக, வேலைவாய்ப்புகள், தொழிற்சாலைகள் ஒருபுறம். உயிர் வாழும் சூழல் மறுபுறம். இரண்டுமே முக்கியம். இரண்டில் எதை விட்டு கொடுத்தாலும் நஷ்டம் கோவாவிற்கே. Out of the Box தீர்வுகள் ஏதாவது கிடைத்தால் உண்டு...
கோவாவில் புத்தாண்டை கொண்டாட விரும்புபவர்கள் எதற்கும் சீக்கிரம் போய்விட்டு வருவது நல்லது...
முழு ரிப்போர்ட் படிக்க - 
http://indianexpress.com/…/coal-on-move-25-tonnes-a-minute…/

Monday, 23 October 2017

Gujrat Roro Ferry Service


நேற்று பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தில் கோகா (Ghogha) மற்றும் தஹேஜ் (Dahej) இடையேயான ரோரோ படகு போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இந்த படகு போக்குவரத்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது. இதன் முக்கியத்துவம் என்ன, சாகர்மாலா திட்டம் என்றால் என்ன என்று பார்ப்போம்.
வாஜ்பாய் செய்த முக்கியமான சாதனை தங்கநாற்கர சாலைகள். அதாவது நாட்டின் நான்கு திசைகளிலும் உள்ள முக்கிய நகரங்களை 4/6 வழி சாலைகள் மூலமாக இணைத்தது.
இதே போல வலுவான கட்டமைப்பை நீர் வழியிலும் ஏற்படுத்த வேண்டும் என்பது வாஜ்பாயின் கனவு. ஏற்கனவே இருக்கும் துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது, தொழில்நகரங்களை அந்த துறைமுகத்துடன் இணைப்பது, இவற்றின் மூலம் இந்திய கடலோர பகுதிகளை நாட்டின் வளர்ச்சிக்கு உட்படுத்துவது என்று பெரிய திட்டம்.
இந்த தொலைநோக்கு திட்டம்தான் சாகர்மாலா அதாவது கடல்மாலை. ஆனால் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சி மாறியது. காங்கிரஸ் அரசாங்கம் இந்த திட்டத்தை 10 வருடங்கள் கிடப்பில் போட்டது.
பா.ஜ.க மீண்டும் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த மெகா திட்டத்தை தூசி தட்டி மேம்படுத்தியது... மொத்தம் 415 பிராஜெக்ட்டுகள்.... 20 வருடங்களில் 8 லட்சம் கோடி முதலீடு... பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு...! இந்த திட்டத்தின் கீழ்தான் இந்த ரோரோ படகு போக்குவரத்து வருகிறது.
கோகா குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ளது. தஹேஜ் தெற்கு குஜராத்தில் உள்ளது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5000 வாகனங்கள் இரண்டு நகரங்களுக்கும் இடையிலே செல்கின்றன. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலே கம்பட் வளைகுடா உள்ளது. படத்தை பார்த்தாலே விளங்கிவிடும்... கோகாவிலிருந்து தஹேஜிற்கு செல்ல 7 மணி நேரம் பயணம் செய்து இந்த வளைகுடா முழுவதையும் சுற்றி கொண்டு 360 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். அதற்கு பதிலாக இந்த படகு பயணத்தின் மூலமாக, வண்டிகளையும் ஏற்றி போட்டுக் கொண்டு கடலிலே 31 கிலோமீட்டரை ஒரு மணி நேரத்திலே எளிதாக தாண்டி போய் விடலாம். நேரமும், பணமும் மிச்சமோ மிச்சம்...
ஆனால், இதற்கு கடலை ஆழப்படுத்த வேண்டும்... இரண்டு இடங்களிலும் துறைகளை நிர்மாணிக்க வேண்டும்... இன்னபிற கட்டமைப்பு வேலைகளையும் செய்தாக வேண்டும். 2012ல் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ரோரோ திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பட்ஜெட் 296 கோடி ரூபாய்... திட்ட காலம் 15 மாதங்கள். இப்போது பிரதமராக வந்த பின் திறந்துள்ளார். அதாவது 70 மாதங்களுக்கு பிறகு 615 கோடிகள் செலவு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
காலதாமதமானாலும், திட்டத்தை செயல்படுத்திய மோடி அரசுக்கு மிகுந்த பாராட்டுக்கள்..!  இந்த திட்டத்தில் ஊழல் எதுவும் நடந்திருக்காது என்று நம்புவோமாக...! 
அப்புறம் இரண்டு கேள்விகள் – ஒன்று, சாகர்மாலா போன்ற திட்டத்தை காங்கிரஸ் அரசு ஏன் கிடப்பில் போடவேண்டும்? ஊழலோ, என்னவோ வசதிபோல பண்ணிக்கொண்டு திட்டத்தை செயல்படுத்தலாமே? இரண்டு, குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பி.ஜே.பி அரசுதான். 2014ல் இருந்து மத்தியிலும் பி.ஜே.பிதான். ஆனாலும் காலதாமதம்.... காங்கிரஸோ, பி.ஜே.பி யோ, அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தளவுக்கு காலதாமதம் ஆவதும், செலவு அதிகரிப்பதும் ஏன்? 

Saturday, 21 October 2017

Floating Solar Panels


இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையிலே (Renewable Energy) கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல்கள் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்வதில் அரசாங்கங்கள் ஆர்வம் கொண்டுள்ளன.
சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிப்பது நமக்கு புதிதில்லை... தரையிலே சோலார் பேனல்கள் அமைப்பதில் செலவு அதிகமாகிறது. காரணம் குறிப்பிட்ட ப்ராஜெக்ட்டுக்கு நிலம் கையகப்படுத்த செலவு அதிகம். அதற்கு பதிலாக நீர்நிலைகளின் மேலே சோலார் பேனல்கள் அமைத்தால்...?
நிலத்தை கையகப்படுத்தும் செலவு குறைவது மட்டுமல்லாமல் மிதக்கும் சோலார் பேனல்களில் வேறு பெரிய நன்மைகளும் உள்ளன. ஒன்று கீழே குளுமையான தண்ணீர் இருப்பதால் சோலார் பேனல்கள் சூடாவதில்லை. இதன் மூலமாக நிலத்தில் பேனல் நிறுவி மின்சாரம் தயாரிப்பதை விட 16-20% அதிக மின்சாரம் தயாரிக்கலாம். போனஸாக, பேனல்களுக்கு கீழே இருக்கும் தண்ணீரும் ஆவியாகாது... வீணாகாது. இப்படியாக, ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்...! இப்படி மிதக்கும் பேனல்களால் நீர்நீலைகளில் எந்த சூழல் மாசும் ஏற்படுவதில்லை என்று கூறுகின்றனர்.
இப்படி நீர்நிலைகள் மேலே பேனல் அமைத்து மின்சாரம் தயாரிக்க குஜராத்தே முன்னோடி. 2012ஆம் ஆண்டு குஜராத்தில் நர்மதை நதியின் கால்வாய் ஒன்றின் மேலே, 1MW அளவிற்கு மின் உற்பத்தி செய்ய சோலார் பேனல்கள் நிறுவப்பட்டன. இதுதான் நீர்நிலை மேல் செயல்படுத்தப்பட்ட முதல் திட்டம். ஆனால் இவை மிதக்கும் பேனல்கள் அல்ல.
நாட்டிலேயே முதன்முறையாக, 2015ஆம் ஆண்டு மேற்கு வங்கத்திலே 10KW அளவிற்கு மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டன. இதன் வெற்றிக்கு பின்னர், கேரளா இந்த திட்டத்தை வேகமாக முன்னெடுத்து செல்கிறது.
கடந்த மார்ச் மாதம் கேரளத்தின் காயங்குளத்திலே NTPC நிறுவனம் Make In India திட்டத்தின் கீழ் 100KW மின் திட்டத்தை அமைத்தது. தற்போது, வயநாட்டில் உள்ள பாணாசுரா அணையிலே மிதக்கும் சோலார் பேனல்களை கொண்டு 500KW அளவிலே மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிகப்பெரிய மிதக்கும் சோலார் பேனல் திட்டமாகும். (இது தவிர அணையின் மேல் இருக்கும் பாதையிலே கூரை போல சோலார் பேனல் அமைத்து மின்உற்பத்தி செய்யும் 400KW திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அது தனிக்கதை) 
மேலும், 10MW அளவில் மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டங்களை கேரளாவும், ஆந்திராவும் ஆய்வு செய்து வருகிறது. நீர் வளம் நிரம்பவும், நிலம் குறைவாகவும் இருப்பதால் கேரளா இந்த திட்டத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறது. மேலும், சுற்றுசூழலை பாழாக்காத திட்டமிது... எனவே கடவுளின் தேசம் ஆதரவளிக்கிறது.
நம் நாட்டின் மின்தேவைக்கு இதெல்லாம் ரொம்ப சொற்பமே... அதனால் இதன் அடுத்த லெவல் கடலில் மிதக்கும் பேனல்கள் அமைப்பது. இது குறித்த ஆய்வு லட்சதீவுகளில் நடக்க போகிறது. அந்த சோதனை முயற்சி வெற்றி பெற்று விட்டால், இந்தியாவின் கடற்கரைகளில் கணிசமான பேனல்கள் பொருத்தி வெகுவாக மின்சாரம் தயாரிக்கலாம். இந்தியா போல நீண்ட கடற்கரை உள்ள நாட்டிற்கு இதை விட வேறு வரபிரசாதம் என்ன?

Friday, 20 October 2017

Small Scale Vs Large Scale


நம் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்பெல்லாம் Small Scale-ல் உற்பத்தியும், நுகர்வும் இருந்தன. அதை Large Scale – ல் செய்ய புகுந்து பல விரும்பத்தகாத பிரச்சனைகளில் மாட்டி கொள்கிறோம் என்று தோன்றுகிறது.
உதாரணமாக, பால் உற்பத்தியை எடுத்து கொள்வோம். ஒவ்வொரு ஏரியாக்களிலும் மாடு வளர்ப்பவர்கள் இருந்தார்கள். நம் கண்ணெதிரிலேயே பால் கறந்து கொடுப்பார்கள். (தண்ணீர் சேர்ப்பதாயிருந்தால் பாத்திரத்தை ஒரு நிமிடம் உள்ளே எடுத்து சென்றுவிட்டு கொண்டு வருவார்கள். நாமும் புரிந்து கொள்வோம்!)
பின்னர் ஆவின் வந்தது. தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களும் வந்தன. இன்றைய தேதியிலே பால் உற்பத்தி துறையின் நிலையென்ன? நாட்டு மாடுகள் காணாமல் போகின்றன. ஹார்மோன் ஊசிகள், கொழுப்பு நீக்கப்பட்ட பால், பாலை திருடி சர்க்கரை கொட்டி ஊழல்... பால் உற்பத்தியை Small Scale –லில் இருந்து Large Scale – க்கு கொண்டு போனதன் விளைவா இது?
சரி, நம் சமையலுக்கு அத்தியாவசியமான உப்பை எடுத்து கொள்வோம். தெருமுனை செட்டியார் கடையிலே ஒரு சணல் மூட்டையிலே கல் உப்பு இருக்கும். என் அம்மா அதைத்தான் சமையலுக்கு உபயோகப்படுத்துவார்கள். பின்னர், அயோடின் உப்பு என்றார்கள். இப்போது சாதாரண உப்பு கிடைப்பதில்லை.... அயோடின் அதிகம் உட்கொள்ளுவதால் வரும் தீமைகள் குறித்து பேசுகிறார்கள். லோக்கலில் கிடைத்த உப்பை, கம்பெனிகள் கையில் கொடுத்ததன் விளைவா இது?
கருப்பட்டி தொலைத்து வெள்ளை சர்க்கரைக்கு மாறினோம். வெள்ளை சர்க்கரை சாப்பிட வேண்டாம், உடல் நலத்திற்கு கேடு என்னும் பிரச்சாரம் பலமாக நடக்கிறது.
கோழியை எடுத்து கொள்ளுங்கள். பிராய்லர் கோழி குறித்து வரும் செய்திகள் வருங்கால சந்ததி குறித்த அச்சத்தை தருகின்றன. கோழிகளுக்கு ஏதாவது நோய் வந்தால் முட்டைகள் அழிக்கப்படுகின்றன... சமயத்தில் கோழிகளும்.
இந்த வரிசையிலே இப்போது காய்கறி பழங்களும் இணைந்துள்ளன. மரபணு மாற்றப்பட்ட கம்பெனி விதைகளே பெருமளவில் உபயோகிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். என்ன நடக்குமோ...?
குழந்தைகள் கடலை மிட்டாய்களிலிருந்து கேண்டிகளுக்கு சென்றதையும் இதோடு சேர்த்து கொள்வோம்.
லோக்கல் குளிர்பானங்கள்/ சோடா நிறுவனங்கள் அழிக்கப்பட்டு இரண்டு கம்பெனிகளே இந்தியாவில் கோலோச்சுகின்றன. அந்த கம்பெனிகள் எந்த பகுதியிலே தங்கள் தொழிற்சாலையை நிறுவுகின்றனவோ, சில ஆண்டுகளில் அந்த பகுதியின் நிலத்தடி நீர் முழுக்க காலியாகிவிடுகிறது... விவசாயம், குடிநீர், கால்நடை வளம் எல்லாமே அவுட்.
ஆக, உணவு பொருட்களை பொறுத்த வரை அந்தந்த பகுதிகளில் சிறிய அளவில் உற்பத்தி செய்து, அந்தந்த பகுதி மக்களே அவற்றை பயன்படுத்தும் வரை எந்த பிரச்சனையும் எழுவதில்லை. அதை கம்பெனிகளிடம் ஒப்படைத்து, ஒரே இடத்தில் உற்பத்தி, நாடு முழுவதும் நுகர்வு என்று Large Scale-ல் கொண்டு போனால் இன்னல்தான்...!
சிறிய அளவில் உற்பத்தி செய்ய முடியாத, உணவில்லாத பிற பொருட்களுக்கு மட்டுமே கார்ப்பரேட் மாடல் அவசியம். உதா – வாகனங்கள், சிமெண்ட். இவற்றை குடிசை/ சிறு தொழிலாக செய்ய முடியாது. ஆக, இது கார்ப்பரேட்களிடம் ஒப்படைக்க வேண்டிய விஷயம்.
முன்னேற்றம் என்பது பெரும் உற்பத்தியோ, பெரும் நுகர்வோ அல்ல... அது மக்களின் வளமான வாழ்வுதான்.

Friday, 13 October 2017

Swedish Death Cleaning


Swedish Death Cleaning – பேரை பார்த்து பயந்து போக வேண்டாம்... இது ஒரு புது விஷயம்.... வாழ்க்கையை குறித்த ஒரு மாறுபட்ட பார்வையை தருகிறது.
புது விஷயத்திற்கு போவதற்கு முன் Minimalism பற்றி தெரிந்து கொள்வோம். வாழ்க்கைக்கு தேவையான, அடிப்படை (basic) பொருட்களை மட்டுமே வைத்து கொண்டு எளிமையான வாழ்கை வாழ்வதே மினிமலிசம். உதாரணம் – மகாத்மா காந்தி வாழ்ந்தது ஒரு மினிமலிச வாழ்க்கை.
தற்காலத்தில் நுகர்வு கலாச்சாரம் அதிகமாகி விட்ட நிலையில், அதை விரும்பாத மக்களால் மினிமலிசம் வெளிநாடுகளில் பிரபலமடைந்து வருகிறது.... நம் நாட்டிலும் மினிமலிசம் பரவலான பேசுபொருளாகி இருக்கிறது. இந்த மினிமலிச கோட்பாட்டிலிருந்து, அதை போலவே இன்னொரு கோட்பாடு கிளம்பியுள்ளது. அதுதான் Swedish Death Cleaning.
சிலரது வீடுகளில் தாத்தா, பாட்டி காலத்து பொருள்கள் யாவும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அதை தூக்கி போடவும் மனசு வராது.... “அந்த காலத்து சாமான், எங்க பாட்டியோடதாக்கும்” என்று பழைய குப்பைகளை வைத்திருப்பார்கள். வருங்கால சந்ததிகளுக்கு ஏன் இந்த குப்பைகளையும், தூக்கி போட மனம் வராத தர்மசங்கடத்தையும் தரவேண்டும்? மரணத்திற்கு முன்பே ஒருவர் தன்னுடைய உடைமைகளை ஏன் ஒழித்து கட்ட கூடாது?
ஐம்பது வயதாகிவிட்டவர்கள் தங்களுடைய உடைமைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்வதே டெத் க்ளீனிங். இது வீட்டை சுத்தம் செய்வது போல, ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் தூக்கி போடுவது அல்ல... மாறாக இது ஒரு வாழ்க்கை முறை. (lifestyle)
தன் உடைமை என்று கருதும் ஒவ்வொரு பொருளாக எடுத்து, அது தன் வாழ்க்கைக்கு அவசியமானதா, விருப்பத்தினால் சேர்ந்த பொருள் எது, தேவைக்காக சேர்ந்த பொருள் எது என்றெல்லாம் சுயமாக ஆராய வேண்டும். பின் அந்த பொருளை விடவேண்டும்.... அதாவது, மனத்துறவு. பின்னர் அந்த பொருளை இல்லாதவருக்கு கருணையோடும், அல்லது நண்பர், உறவினர்களுக்கு அன்போடும் பரிசாகவோ கொடுக்க வேண்டும். இது எதுவும் இயலவில்லையெனில் சிறுதொகைக்கு விற்றும் விடலாம். இப்போது அந்த பொருள் இல்லாத வாழ்க்கை முறைக்கு பழகவேண்டும். அப்படி பழகி, வாழ்க்கை இயல்பான பின்னர் அடுத்த பொருளை எடுத்து ஆராயவேண்டும். இப்படியே ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆராய்ச்சி, மனத்துறவு, விலக்கம், எளிய வாழ்க்கை...
இப்படி சிறிது சிறிதாக உடைமைகளை துறந்து, மரணிக்கும் காலத்தில் அதம பட்ச உடைமைகளை மட்டுமே கொண்டு வாழவேண்டும். அடுத்த தலைமுறைக்கு பாரமாக உடைமைகளை விட்டு போகாமல் அனைத்தையும் தங்கள் வாழ்நாளிலேயே ஒழித்து கட்ட வேண்டும். இதுதான் டெத் க்ளீனிங்.
வயதாக வயதாக பொறுப்புக்களை குறைத்து கொள்வது நம் நாட்டில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு வழக்கம்... அதை வானபிரஸ்தம் என்பர். ஆனால், காலம் மாறிவிட்ட சூழ்நிலையில் பொறுப்புகளோடு, பொருள்களையும் குறைத்து கொள்வதும் நல்லதுதானே...

Tuesday, 10 October 2017

மரணமும், சிராத்தமும்


ஒவ்வொரு உயிரும் மரணத்தை கண்டு அஞ்சுகிறது. உடலோடு தன்னை அடையாளப்படுத்தி கொண்ட மனிதனும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏதோ சிலர் மட்டுமே தாங்கள் உடலல்ல.. அதையும் தாண்டிய ஆத்மா எனும் அழிவில்லாத வஸ்து என்று உணர்கிறார்கள். அவர்களையே மகான்கள் என்று கூறுகிறோம்.
எண்ணிக்கையில் வெகு சொற்பமான மகான்களை விட்டு தள்ளுவோம். இப்போது மெஜாரிட்டியாக இருக்கும் என்னை போன்ற சாதாரணமானவர்களை பார்ப்போம். அவர்களுக்கு ஆத்மாவெல்லாம் புரியவில்லை. ஆனால் மரணம் குறித்த பயம் மட்டுமே உள்ளது. உடல் அழியும்.. ஆனால் நீ மீண்டும் பிறப்பெடுப்பாய் என்பது convincing ஆக இல்லை. மறு பிறப்பெடுக்கும் போது பழைய நினைவுகள் இருப்பதில்லையே. அந்த மறு பிறப்பு நாம்தான் என்று எப்படி உணர்வது?
மரணமே தனக்கு வரக்கூடாது, எப்போதும் நீடித்த வாழ்வு வேண்டும் என்று விரும்பும் மனிதன் கசப்பான மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். அதே சமயம் அவனது தீராத ஆசைகள் தரும் வேதனையிலிருந்து அவனை ஆச்வாசப்படுத்தவேண்டும். அதுவே இந்த முன்னோர்கடன் போன்ற விஷயங்கள் என்று எனக்கு தோன்றுகிறது.
“மாமா! உனக்கு தெரியாதா…? நான் ஜாங்கிரின்னா உசுரையே கொடுப்பேன்…”
“கவலைப்படாம போய் சேருடா… வருஷாவருஷம் உனக்கு தெவசத்துல ஜாங்கிரி செஞ்சு போடறேன்…”
எத்தனை எளிமையான நம்பிக்கை தரும் வழியனுப்பல். நான் இறந்தாலும் எனக்கு பிடித்ததை தொடர்ந்து சாப்பிடுவேன். என்னை சுற்றியிருக்கும் நண்பர்களும், உறவினர்களும் என்னை ஞாபகம் வைத்துகொள்ளுவார்கள். சரி, விடு… மாரை வலிக்கிறது, மூச்சிழுக்கிறது, கொஞ்சம் செத்துதான் பார்ப்போமே என்று நம்பிக்கையோடு பிராணனை விடலாம்.
இது இறப்பவனுக்கு சரி, உயிரோடு இருப்பவனுக்கு…? அவனுக்கும் ஒரு ஆறுதல். நான் செத்தாலும் எனக்கு பிடித்த வடை செய்து வைப்பார்கள். நாமும் தின்னலாம்… மரணபயம் சற்றே விலகி போகிறது. தினசரி வேலைகள் தொடர்ந்து நடக்கிறது.
உயிரோடு இருக்கிறவன் திவசம் செய்யவேண்டிய அவசியம்…? ஒன்று நீ திவசம் செய்தால் உன் பிள்ளை உனக்கு திவசம் செய்வான். உனக்கு ஜாங்கிரியோ, வடையோ தடையில்லாமல் கிடைக்கும். பித்ருக்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வார்கள். அப்படி திவசம் செய்யவில்லையென்றால் உனக்கு பித்ரு சாபம் வந்து சேரும். நீ மட்டுமல்ல… உன் வம்சமே விளங்காது என்னும் பயமுறுத்தல்கள். அதாவது, கேரட் அல்லது பிரம்படி.
நேற்று வரை என் போல் சாதாரண மனிதனாக கோபம், பொறாமை போன்ற குணங்களோடு உலவி கொண்டிருந்த மனிதர், இறந்ததும் எப்படி வரமளிக்கும் ஆற்றல் பெற்றவரானார்? ஹிட்லரும், போல்பாட்டும் ஆசீர்வதிப்பதை நம்பமுடிகிறதா? லட்சக்கணக்கான மக்களை பட்டினியில் தள்ளி கொன்ற ஸ்டாலினும், மாவோவும் திடீரென்று நல்லவர்களாகி விடுவார்களா?
பித்ருக்களுக்கு ஸ்பெஷல் பவர் உண்டு என்று சொல்லப்பட்டது. தேவ பூஜையை விட பித்ரு பூஜைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது (மஹாபாரதம்). மாதா, பிதாவுக்கு பிறகே தெய்வம் என்று வைக்கப்பட்டதால், இறந்த பிறகும் பித்ருக்களுக்கே முன்னுரிமை
எப்படியோ, சாகின்றவனை ஆறுதல் படுத்தியாயிற்று. இருக்கிறவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது…? சொர்க்கமும், நரகமும் படைக்கப்பட்டன… இறந்த பிறகு ஒரு புதிய உடம்பு கிடைக்கும் (யாதனா சரீரம்?). அது அழியாது என்று சொல்லப்பட்டது. நரகத்தில் அணையாத கொடும் நெருப்பும், சொர்கத்தில் அழகு மங்கைகளின் நாட்டியமும் வந்தது. கவனித்து பார்த்தால் நரகத்தில் யாரும் உம்மை லேசர் கதிர்களால் சுட்டு பொசுக்க மாட்டார்கள்… ஆண்ட்ராய்ட் போனிலே பேஸ்புக் சேட் செய்ய மாட்டார்கள்… அந்த காலத்து டெக்னாலஜி படி உம்மை சட்டியிலே வறுப்பார்கள்… அல்லது அழகிகளின் டான்ஸ் பார்க்க சொல்லுவார்கள். பெண்கள் சொர்க்கம் போனால் அங்கேயும் கணவருக்கு பணிவிடை செய்வார்கள்…
சுஜாதா இந்த அபத்தங்களை கேலி செய்கிறார். ஒரு நாயின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்று சிக்கலான கேள்வி கேட்கிறார். நாம் டிரெண்டியாக டெங்கு வைரஸின் சொர்க்கத்தை யோசிப்போம்.
ஆனால், ஆன்மீக தலைவர்கள் இப்படிப்பட்ட சடங்குகளுக்கு பெரும் முக்கியத்துவம் தருகிறார்கள். சாஸ்திரங்களை பிறழாமல் கடைப்பிடித்த மஹா பெரியவாள் சிரார்த்த சடங்கை மிகவும் முக்கியம் என்கிறார். விவேகானந்தர் இறந்து போய் ஆவியாய் சுற்றும் ஒருவருக்கு மணலால் சிரார்த்தம் செய்கிறார். ஆனால், இவையெல்லாம் இந்துகளுக்கு மட்டுமே என்பதை கவனிக்க வேண்டும். கிறித்தவ, முகமதிய, யூத பித்ருக்கள் கதி என்னவென்று தெரியவில்லை.
பிரையன் வெய்ஸைற்கு பிறகு மேற்கத்திய நாடுகளிலும் மறுபிறவி நம்பிக்கைகள் பெருகிவிட்டன. இறந்தவர்கள் அதே குடும்பத்திலோ, அல்லது தன்னுடன் தொடர்பு உடையவர்களிடமோ மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்று பிரையன் வெய்ஸ் சொல்கிறார்.
அப்படி இறந்தவர்கள் பிறக்கும் பட்சத்தில், நாம் தரும் பிண்டம் எங்கு போய் சேருகிறது… மீண்டும் பிறந்தவர்களுக்கு அந்த பிண்டம் சென்று சேருகிறது என்று பெரியவாள் கூறுகிறார். இப்போது நாம் தானம் தரும்போது நல்லவர்களுக்கே தானம் தரவேண்டும், தீயவர்களுக்கு தானம் தந்தால் பாவம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் அடுத்த ஜென்மத்தில் என் பித்ரு நல்லவரா, தீயவரா என்று தெரியாத பட்சத்தில் பிண்டம் இடலாமா? (மஹாபாரதத்தில் துரியோதனனுக்கு சிரார்த்தம் செய்ய அவன் தந்தை திருதராஷ்டிரன் விரும்ப, அதை பீமன் தடுக்கிறான்)
சிரார்த்தத்திற்கான விதிமுறைகள் மிக கடுமையானவை. அவற்றையெல்லாம் இந்த காலத்தில் முழுமையாக கடைபிடிப்பது என்பது ரொம்ப கஷ்டம். மனதிருப்திக்காக சிரார்த்தம் என்று ஏதோ சடங்கை செய்பவர்களே அதிகம்.
இவையெல்லாம் மனிதன் மரண பயத்தினாலும், வாழும் வாழ்க்கையை அறத்தோடு வாழ வேண்டும் என்ற விருப்பத்தினாலும் தானாகவே உண்டாக்கி கொண்டவை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யும் போது இறந்தவன் செய்த நன்செயல்களும், தீயசெயல்களும் நினைவுக்கு வந்து நம்மை சிந்திக்க செய்து வழிப்படுத்தும். ஏதோ ஒரு விதத்தில் நல்லது நடந்தால் சரி.

Tuesday, 3 October 2017

Infant Mortality Rate


சத்தமில்லாமல் தமிழ்நாட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. பிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தைகள் இறந்து போவதை infant mortality என்பார்கள். ஆயிரம் குழந்தைகளுக்கு எத்தனை குழந்தைகள் இறக்கின்றனவோ அதை infant mortality rate என்பார்கள். இது எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக இருக்கிறதோ அது நல்லது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்த IMR 19-லிருந்து 17-ஆக குறைந்துள்ளது. இந்திய சராசரி 34. அதாவது இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சேய்களுக்கு இரண்டு மடங்கு மருத்துவ பாதுகாப்பு கிடைக்கிறது எனலாம்.
இந்தியாவிலேயே இரண்டாவது சிறந்த IMR தமிழ்நாடுதான். முதலிடம் சேட்டன்களுக்கே... கேரளாவில் IMR விகிதம் 6...! (ஆதாரம் – தி ஹிந்து மற்றும் இதர வலைத்தளங்கள்)

Monday, 2 October 2017

Facebook Discussions


உடனடியாக எதையும் செய்ய முடியாது. பண மதிப்பிழப்பிலேயே பொருளாதாரம் அடிவாங்கிவிட்டது. அதிலிருந்து வெளிவர சிறிது காலம் பிடிக்கத்தான் செய்யும். இதற்கு நடுவே ஜி.எஸ்.டி என்ன செய்கிறது, செய்யப்போகிறது என்பதே புரியவில்லை. பண மதிப்பிழப்பினாலும், வருமான வரித்துறை கடுமையான பாய்ச்சல் காட்டுவதாலும் கட்டுமானத்துறை (Real Estate and Construction) வீழ்ந்து விட்டது. கொஞ்ச நாள் அரசாங்கம் எதுவும் செய்யாமல் இருத்தல் வேண்டும். ஐந்து வருடத்தில் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றெல்லாம் வீறாப்பு கூடாது.
இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு நம்மால் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது கடினம். இது நாள் வரை விவசாயம்தான் வேலை தந்து வந்தது. இந்தியா விவசாயத்தை விட்டுவிட்டு வெகு வேகமாக நகரமயமாகிறது. நகரமயமாகும் வேகத்தை குறைக்க வேண்டும்.
நகரத்தில் இருக்கும் ஜனங்கள் சுகபோகமாக இருக்க கிராமங்களில் இருப்பவர்கள் அவதிப்படுவார்களா? சிறிது சிறிதாக வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு போக வேண்டும். எந்த அரசாங்கமும் இதை செய்வதில்லை.
ஆட்டோமேஷனை சில காலத்துக்கு ஊக்கப்படுத்தக்கூடாது. ஏற்கனவே Car Driving –ல் ஆட்டோமேஷனை ஏற்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதை மற்ற துறைகளுக்கும் தொடரவேண்டும். 
கார்ப்பரேட்டுகளை மட்டும் ஊக்கப்படுத்துவதை விட்டுவிட்டு சிறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த வேண்டும், உதவி செய்ய வேண்டும். இந்த Startup-களை ஊக்கப்படுத்துகிறோம் என்னும் விளம்பரங்களை நிறுத்தி கொண்டு உண்மையிலேயே தொழில்களுக்கு உதவ வேண்டும்.
நான் கூறுபவை பத்தாம்பசலித்தனமாக தோன்றக்கூடும். ஆனால், இதுதான் வழி. நதிநீர் இணைப்பு என்று அரசாங்கம் பேச ஆரம்பித்திருப்பது வேலை வாய்ப்பை உருவாக்கவே என்பது என் எண்ணம். ஆனால் அது அடுத்த தலைவலி. 
நான் சொன்னது எதுவுமே சின்ன விஷயம் கிடையாது... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இந்தியாவுல இருக்குற லட்சக்கணக்கான கிராமங்களுக்கு நகரத்து வசதிகள கொண்டு போகணும். எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள், சாலை வசதிகள், கடைகள், மின்சாரம், வாகனங்கள்...? எத்தனை மருத்துவர்கள், மருத்துவ கல்லூரிகள், ஆசிரியர்கள், மின்உற்பத்தி நிலையங்கள்...? எவ்வளவு மூலதனமும், எத்தனை வருஷ உழைப்பும் தேவை? பொறுமையா யோசிச்சு பாருங்க. நான் சொல்லியிருக்கற ஒவ்வொரு பாயிண்டும் அப்படிப்பட்டதுதான். யானையை விட ரொம்ப பெருசு....
அரசாங்கத்த சும்மா இருக்க சொன்னது, பண மதிப்பிழப்பு மாதிரி நடவடிக்கைகள. ஏதாவது மாற்றம் கொண்டு வந்தா, அதோட எதிர்விளைவுகள் (ripple effects) அடங்கற வரைக்கும் பொறுமை வேணும். அது இந்த அரசாங்கத்துக்கிட்ட இல்ல.
மானியம் குறித்த என்னோட பார்வைகள் வேற. பேஸ்புக்கில ரொம்ப பெரிய அளவுல விவாதிக்க முடியாது. இந்தளவுக்குத்தான் பதிவு போடமுடியுது. இது பேஸ்புக்குல இருக்கற சங்கடம்.
நான் சொன்னது வெறும் பொருளாதார கட்டமைப்பு மட்டுமல்ல. நான் பொருளாதாரத்த தனியா பாக்கல... அப்படி பாக்கவும் முடியாது. ஒட்டுமொத்தமா அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, மொழி, நீதி, சுற்றுசூழல் - இப்படி நாட்டோட எல்லா விஷயங்களையும் பத்தி சொல்றேன். நான் சொல்றது கிராமங்கள நோக்கி அரசியல், பொருளாதாரத்தோட பார்வைய திருப்பற ஒரு விஷயம். 
மற்ற நாடுகளும் இந்தியாவும் வேற. நமக்கான திட்டத்த நாமதான் உருவாக்கனும். அது பொருளாதாரமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி.... இப்படி புதுப்பார்வையோட ஒரு புதுப்பயணத்த ஆரம்பிக்கனும். 
5 அல்லது 10 வருஷத்துல முடியற விஷயம் இல்ல. எந்த ஒரு நாடும் ஒரு இலக்கை அடைஞ்சுட்டு உக்காரமுடியாது. இது ஒரு பயணம். இலக்கு மட்டுமே சந்தோஷமல்ல, பயணம் மொத்தமே சந்தோஷம்தான். இன்னிக்கு எல்லாரும் ஒரு சந்தோஷமான இலக்கை எதிர்பாக்கறாங்க. நான் ஒரு சந்தோஷமான பயணத்த பத்தி பேசறேன்.