Thursday, 29 March 2018

Fake News – சமாளிப்பது எப்படி?


ஃபேக் நியூஸ் – அதாவது ஆதாரமற்ற, குற்ற எண்ணத்தோடு வேண்டுமென்றே (baseless and malicious) பரப்பப்படுகிற பொய் செய்திகள்.... இண்டர்நெட் யுகத்தில் பொய் செய்திகள் மிக வேகமாக பரவுகின்றன.... பரப்பப்படுகின்றன.


கோப்ரா போஸ்ட் என்னும் நிறுவனம் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியிருக்கிறது. இந்தியாவின் பல செய்தி நிறுவனங்கள் காசு தந்தால் ஹிந்துத்துவா சார்ந்த செய்திகளை வெளியிடவும், எதிர்க்கட்சி தலைவர்களை குறித்த பொய்யான தகவல்களை (Character Assasination) பரப்பவும் தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விவரமாக அறிய -
https://thewire.in/media/large-media-houses-seen-striking-deals-for-paid-news-to-promote-hindutva-agenda

தேர்தல் வெற்றிக்காக எந்த லெவலுக்கும் இறங்க எல்லா கட்சிகளும் தயாராக இருக்கின்றன என்பது நாம் அறிந்ததுதான். அதற்கு துணை செய்ய மீடியாவும் தயாராக உள்ளதே இந்த ஸ்டிங் ஆபரேஷன் உணர்த்தும் உண்மை.

ஸ்டிங் ஆபரேஷனோ, கேம்பிரிட்ஜ் அனலிடிகாவோ... வரப்போவது தேர்தல் காலம்.... பரபரப்பான பொய் செய்திகளின் குழியிலே போய் விழாதீர்கள். நீங்கள்தான் உஷாராக இருக்க வேண்டும். அதற்கு சில யோசனைகள் –

1. கட்சி சார்ந்த பத்திரிக்கைகள், வலைத்தளங்கள், முகநூல் பக்கங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எனக்கு பிடித்த கட்சியை சார்ந்த பத்திரிக்கை, வலைத்தளம் என்று பெருமிதம் கொள்ளாதீர்கள்.
2. ஊழல் செய்யாத கட்சிகள் எதுவும் கிடையாது. ஊழலில்லாத கட்சி என்று செய்தி வந்தால் அந்த சேனலோ, வலைதளமோ கட்சி சார்ந்தவை.
3. எந்த காரணமுமின்றி தனிநபர் தாக்குதல் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். (உதா. எதற்கெடுத்தாலும் மோடியை திட்டுபவர்கள், ராகுல் கிளார்க் வேலைக்கு கூட ஆக மாட்டார் என்பவர்கள், கொச்சை வார்த்தைகள் உபயோகிப்பவர்கள்)
4. செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்... ஆனால், உணர்ச்சி வசப்பட வைப்பவர்களை ஒதுக்கிவிடுங்கள். (உதா. அர்னாப் போல வெறித்தனமாக கத்துபவர்கள்)
5. கூச்சலிடாமல், அறிவுஜீவித்தனமாக பேசினாலும், பேசுபவரின் நேர்மையை, அவர் கடந்து வந்த பாதையை பாருங்கள்.
6. சிரமம் பார்க்காமல் ஒரே செய்தியை பல வலைதளங்களில், செய்தி தாள்களில் படியுங்கள். ஒருமித்த கருத்து அந்த செய்திகளில் வந்திருக்கிறதா என்று பாருங்கள். உதா. இந்த லிங்கை பாருங்கள்
https://www.livemint.com/Home-Page/WpuNaIcqbRbsLUgXbkgIPM/Govt-extends-facility-of-fixed-term-employment-for-all-secto.html. Fixed Term Employment குறித்த சாதகங்களை மட்டுமே குறிப்பிட்ட இந்த வலைத்தளம் அதன் பாதகங்களை பற்றி சொல்லவில்லை.
7. தலைவர்கள் குறித்த குற்றச்சாட்டுகளையோ, ஏதாவது மதத்தினர் குறித்த குற்றச்சாட்டு செய்திகளையோ அப்படியே நம்பாதீர்கள். விஷயத்தை கொஞ்சம் ஆறப்போடுங்கள்.
8. மேற்சொன்ன குறிப்புகளை கடைப்பிடிக்கா விட்டால், அட்லீஸ்ட் சமூக வலைத்தளங்களில் எதையும் பகிராமலாவது இருங்கள்.

அனைத்திற்கும் மேலாக, தேர்தலில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தான கருத்துக்களை இப்போதே லைட்டாக, பென்சிலால் மனதில் எழுத ஆரம்பியுங்கள். காரணம், இனிமேல் பொய் செய்திகள் அதிகம் வர ஆரம்பிக்கும்... தேர்தல் சமயத்தில் உங்கள் அறிவு சரியான முடிவெடுப்பது கஷ்டமாகும்.

பொய் செய்திகள் அல்ல, நீங்கள்தான் உங்கள் வாக்கை தீர்மாணிக்கவேண்டும்..!

Monday, 26 March 2018

Latest Developments


இரண்டு மிக முக்கிய நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

ஒன்று, ‘Fixed Term Employment’ அனைத்து தொழில் துறைகளுக்கும் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் நிரந்தர வேலை என்று ஒன்று இனிமேல் இருக்காது, காண்ட்ராக்ட் வேலைகள் மட்டுமே இருக்கும், வேலைக்கு பாதுகாப்பு இருக்காது என்று தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கின்றன.

இப்படி fixed term employment வந்ததில் தொழிலாளர்களுக்கு சில பலன்கள் இருக்கிறதென்றாலும், தொழிலாளர்கள் இதை வரவேற்கவில்லை. (எந்த நேரத்திலும் தொழிலாளி வேலையிலிருந்து தூக்கப்படலாம், notice pay கிடையாது) முன்பு வாஜ்பாய் இதே சட்ட திருத்தத்தை கொண்டு வந்தார். அவர் தேர்தலில் தோல்வியுற்ற பின்னர் காங்கிரஸ் அரசு அந்த சட்டத்திருத்தத்தை நீக்கியது.

வழக்கம் போல நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்காமலேயே, இந்த சட்டத்திருத்தத்தை அரசு கொண்டுவந்துள்ளது. விவாதம் வரக்கூடிய விஷயங்களில், பாராளுமன்றத்தை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருவது கவனிக்கவேண்டிய விஷயம். அதாவது, ஒரு விவாதத்தில் கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் தரும் நேர்மை அரசுக்கு இல்லை என்றே இதை பார்க்கவேண்டும்.

இந்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் 2ம் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாடு முழுக்க தொழிலாளர் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவது நிகழ்வு, வன்கொடுமை சட்டத்தின் விதிகளில் சுப்ரீம் கோர்ட் கொண்டு வந்துள்ள சில மாற்றங்கள். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளில் 90% குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை, பொய் வழக்குகள் தொடரப்படுகின்றன என்று காரணம் கூறி உடனடி கைது நடவடிக்கைகள் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மத்திய அரசாங்கம் இதற்கு என்ன விதமான மேல் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் இந்த இரண்டு மாற்றங்களும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்திற்கு நல்ல தீனியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

Friday, 23 March 2018

அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையும் தடையற்ற வர்த்தகமும்


ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இருக்கும் இடைவெளியை Balance of Trade என்பார்கள். ஏற்றுமதி அதிகமாக இருந்தால் வர்த்தக மிகை/ உபரி. உபரியாக இருந்தால், பணம் உள்ளே வருகிறது என்று அர்த்தம், சந்தோஷம். இறக்குமதி அதிகமாக இருந்தால் பற்றாக்குறை. பற்றாக்குறை என்றால் பணம் வெளியே போகிறது, நஷ்டம்..!

பொதுவாக, ஒவ்வொரு நாட்டோடும் வர்த்தகம் பற்றாக்குறையாக இருக்கிறதா, உபரியாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்ப்பார்கள். அதற்கேற்றார் போல வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டு அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.


அமெரிக்காவின் balance of payment பல வருடங்களாக பற்றாக்குறைதான். சீனா எப்போது உலக வர்த்தக நிறுவனத்தில் நுழைந்ததோ அதிலிருந்து சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையும் ஏறி வருகிறது. அமெரிக்காவின் மொத்த வர்த்தக பற்றாக்குறை 566 பில்லியன் டாலர்கள். அதில் சீனாவுடனான பற்றாக்குறை மட்டுமே 375 பில்லியன் டாலர்கள்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் அளித்த ஒரு முக்கிய வாக்குறுதி வர்த்தக பற்றாக்குறையை முடிந்தவரை சரிசெய்வது. அதற்கான முக்கிய நடவடிக்கையாக இப்போது சீனப்பொருட்கள் மீது வரி விதிக்க ட்ரம்ப் தீர்மாணித்திருக்கிறார். 50 - 60 பில்லியன் டாலர் அளவிற்கு சீன இறக்குமதி பொருட்கள் மீது அமெரிக்கா வரிவிதிக்கப்போகிறது. பதிலுக்கு சீனா அமெரிக்க பொருட்கள் மீது 3 பில்லியன் டாலர் அளவிற்கு வரிவிதிக்கப்போகிறது.

இதன் மூலம் உலகளாவிய வரிச்சண்டை மூளும், இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிப்படையும் என்ற அச்சம் நிலவுவதால் பங்குச்சந்தைகள் வீழ்ந்தன.

அமெரிக்கா இத்தனை நாள் ஊருக்கு உபதேசம் செய்த Free market என்பது மாயையா? இதே மாதிரிதான் தன் நாட்டு மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றதும் பிரிட்டனும் ஐரோப்பிய யூனியனை விட்டு விலக தீர்மாணித்தது. இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனது மார்க்கெட்டாக பயன்படுத்தவே தடையற்ற மார்க்கெட் தத்துவங்களை அமெரிக்கா உபயோகித்தது. இப்போது தன் நாட்டின் பொருளாதாரம் தடுமாறினால், தத்துவங்களை தூக்கிப்போட்டுவிடுகிறது.

Thursday, 22 March 2018

Mining in India – New Changes


இயற்கைவளம் நிரம்பிய நம் நாட்டில் சுரங்கத்துறை ஒரு முக்கியமான துறையாகும். சுரங்கத்துறை நம்நாட்டு ஜி.டி.பி-யில் 2.5% வரை பங்களிக்கிறது.... கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு நிதி ஆயோக் நிலக்கரியைதான் நம்பியிருக்கிறது என்றால் இந்த துறையின் முக்கியத்துவத்தை அறியலாம்.

இந்த துறை இன்னமும் வளர மிகப்பெரிய வாய்ப்பிருக்கிறது. ஆனால், வளராததற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் – ஒன்று, 2008க்கு பிறகு உலக மார்க்கெட் அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால், ஏற்றுமதி வளர்ச்சி குறைந்து போனது. இரண்டாவது, சட்ட சிக்கல்கள், வெளிப்படைத்தன்மையின்மை, அரசு விதிமுறைகள் போன்ற காரணங்கள்.

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று கொண்டதும் இந்த துறையில் Foreign Direct Investment (FDI) ஒரு லட்சம் கோடி வரை அதிகரிக்கவேண்டும் என்று விரும்பியது. 2014ல் இருந்து 2016 வரை இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7800 கோடி ரூபாய் FDI வழியாக கிடைத்தது. (2017ல் மீண்டும் FDI 330 கோடியாக விழுந்துவிட்டது வேறு விஷயம்). மேலும், அரசு அனுமதியை எளிதாக்க 31 கனிமங்களை மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, மாநிலங்களின் நிர்வாகத்திற்கு கொடுத்தது.

இப்படி அரசாங்கம் சுரங்கத்துறை வளர முயற்சிகள் எடுக்கும்போது, நம் நாட்டின் அரசு நடைமுறைகள், ஊழல் காரணமாக Illegal Mining எனப்படும் முறையில்லாத சுரங்கத்தொழில் அதிகமாக நடைபெறுவதும், நீதிமன்றம் தலையிட்டு சுரங்க உரிமங்களை ரத்து செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது.


இப்படி ஒரிஸ்ஸாவில் இரும்பு மற்றும் மங்கனீஸ் தாது எடுக்க அரசாங்கம் உரிமம் கொடுக்க, அனுமதி பெறாத இடங்களில் சட்டவிரோதமாக தாது எடுப்பது, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் தாது எடுப்பது என்று அட்டகாசம் நடந்திருக்கிறது. சுற்றுசூழல் சீர்கேடு சொல்லி மாளாதது. பாதிக்கப்பட்ட ஆதிவாசியினர் போன்றோருக்கு ஒரு நிவாரணமோ, நஷ்டஈடோ கிடையாது. இதற்கெல்லாம் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆசி இருந்திருக்குமென்று சொல்ல தேவையில்லை. (அரசு கம்பெனியான கோல் இந்தியாவும் இது போன்ற விதிமீறல்கள் செய்திருக்கிறது)

இது குறித்த வழக்கு பல ஆண்டுகள் நடந்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு அதிர்ச்சி தீர்ப்பளித்தது. அதாவது, சுற்றுசூழல் பாதிப்பு இருந்தால், அது உரிமம் பெற்ற சுரங்கமாக இருந்தாலும், அங்கு நடப்பது illgal mining என்று அதிரடியாக சொல்லியது. தீர்ப்பின் விளைவு - MMDRA சட்டப்படி எவ்வளவு தாது தோண்டப்பட்டதோ அதன் மதிப்பிற்கு அபராதம் கட்டவேண்டும்! ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம்! மேலும், புதிய சுரங்க கொள்கை உருவாக்க வேண்டுமென்றும் மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

இதற்காக ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு சுற்றுசூழல் ஆர்வலர் கூட இல்லையென்பது வருத்தமான விஷயம். இதுநாள் வரை யார் illegal mining நடக்க யார் உதவி செய்தார்களோ, யார் கடமை தவறினார்களோ அந்த அரசு அதிகாரிகளை கொண்டே ஒரு கமிட்டி அமைந்தது.

கமிட்டி எப்படியோ போகட்டும்.... இப்போது விஷயம் என்னவென்றால், உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் சுற்றுசூழல் குறித்த விஷயத்தை கிளறியிருக்கிறது என்பது அரசின் கருத்து. அதனால், சுற்றுசூழல் காரணமாக உரிமம் பெற்ற mining-ஐ illegal என்று சொல்லக்கூடாது என்று முன்தேதியிட்டு (retrospectively) சட்டதிருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது.

இரண்டு விஷயங்கள் – ஒன்று ஆயிரக்கணக்கான கோடிகள் அபராதம் என்பது சுரங்க தொழிலை நிச்சயம் பாதிக்கும். சுற்றுசூழல் குறித்த நிபந்தனை MMDRA சட்டத்தில் இல்லாதது. அதனால், அபராதத்தை குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தருவது, சுற்றுசூழல் பாதிக்கப்பட்ட இடங்களை முடிந்தவரை சரிசெய்வது போன்ற விஷயங்களுக்கு நிதி ஒதுக்கீடு எங்கிருந்து வரும்? இரண்டையும் அரசாங்கம் கவனிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களை, சுற்றுசூழல் நாசத்தை அப்படியே கைகழுவ கூடாது.

இரண்டாவது, நாளது தேதி வரையில் சுற்றுசூழலுக்கும் illegal mining –ற்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால், உச்சநீதிமன்றம் இதுகுறித்து ஒரு சரியான பார்வையை வழங்கியபின்னரும், சுற்றுசூழலுக்கும் சுரங்க உரிமத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல சட்டத்திருத்தம் கொண்டு வருவது தவறுகள் தொடர்ந்து நடக்கவே வழிவகுக்கும்.

மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!

Tuesday, 20 March 2018

Three Sector Hypothesis and Indian Economy



பொருளாதாரத்திலே, மூன்று செக்டார்கள் உண்டு. முதல் செக்டார் (Primary Sector), இயற்கை வளங்களை சார்ந்தது. விவசாயம், சுரங்கம், கால்நடை வளர்ப்பு போன்றவை. இரண்டாவது (Secondary Sector), தொழிற்சாலைகள் சார்ந்தவை. மூன்றாவது (Tertiary) சேவை சார்ந்தவை... உதா. ஹோட்டல்கள், வங்கிகள், வாணிபம், மென்பொருட்கள், ரியல் எஸ்டேட் போன்றவை. (தற்காலத்தில் மென்பொருள் போல அறிவு சார்ந்த வேலைகளை நான்காவது செக்டாராகவும் கருதுகிறார்கள்)

ஆரம்பத்தில், எந்த ஒரு நாட்டிலும் பிரைமரி செக்டாரே ஜி.டி.பியில் முக்கிய பங்கு வகிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக இரண்டாவது செக்டாருக்கும், பின்னர் மூன்றாவது செக்டாருக்கும் முக்கியத்துவம் வரும். அதாவது, அதிக வேலைவாய்ப்புகளும், ஜி.டி.பி வருவாயும் இரண்டாவது, மூன்றாவது செக்டாருக்கு சென்றுவிடும்.

நோபல் பரிசு பெற்ற பால் க்ருக்மேன் (Paul Krugman) என்பவர் இந்தியாவின் செக்டார் மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் சர்வீஸ் செக்டார் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது, தொழில்துறை செக்டார் வளரவில்லை.... தொழில்துறை செக்டாரில்தான் அதிக வேலைவாய்ப்பு வரும்... இந்தியாவின் தொழில்துறை வளராவிட்டால், வேலையில்லா திண்டாட்டம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதல் செக்டார்தான் இப்போதும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது (படத்தை பார்க்கவும்). இவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுத்து, நிறைய தொழிற்சாலைகளையும் ஆரம்பித்து அதில் வேலைவாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதே க்ருக்மேனின் கருத்து.  
அதிலும் சிக்கல் இருக்கிறது.... டெக்னாலஜி (Automation என்று படிக்கவும்) வளர்ச்சியால் இப்போது தொழில்துறை செக்டாரிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் வருமா என்று க்ருக்மேன் சந்தேகம் எழுப்பி, இதுவே இந்தியாவின் சவாலாக இருக்கப்போகிறது என்று சொல்லியிருக்கிறார்.

இந்தியாவில் எப்போதுமே தொழில்துறையை விட சேவை துறைதான் பெரிது. 1950லியே மூன்று செக்டார்களும் முறையே 59%, 13%, 28% ஜி.டி.பி. பங்களித்தன. 1990லே இது 35%, 24%, 41% சதவிகிதமாக மாறியது. அதாவது, விவசாயத்திலிருந்து நேரடியாக சேவைத்துறைக்கு வளர்ச்சி சென்றுவிட்டது. 90களில் நடைபெற்ற பொருளாதார கொள்கை மாற்றங்களுக்கு பிறகும், தொழில் துறையை விட சேவைத்துறையே வளர்ந்து வருகிறது. (15%, 31%, 54%)

அதாவது, இந்தியாவின் வளர்ச்சி, மற்ற நாடுகளை போல அல்லாது எல்லா காலத்திலும் (சோஷலிஸமோ, கேபிடலிஸமோ) வித்தியாசமாகத்தான் இருந்திருக்கிறது. ஆக, க்ருக்மேன் பொதுவாக மற்ற நாடுகளில் நடந்த மாற்றங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை கணிக்க பார்ப்பது சரியல்ல... க்ருக்மேன் இந்த பாயிண்டை மிஸ் செய்துவிட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால், அவரது இரண்டாவது எச்சரிக்கை என்னவோ உண்மை. டெக்னாலஜி மூலமாக வேலைவாய்ப்புகள் அடிபடபோகிறது. இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனை என்றாலும், இந்தியாவின் நிலை வேறு. இந்தியாவில்தான் அதிகமான வொர்க்கிங் பாப்புலேஷன் இருக்கிறது.... அதாவது, வேலைசெய்யும் வயதில் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு வேலை இல்லாவிட்டால் பல சமூக சிக்கல்கள் உண்டாகும்.

வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்கான விஷயம் மட்டுமல்ல, அது மனிதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் (positively engaging activity) விஷயமும் கூட. சமூகம், பொருளாதாரம் அனைத்தையும் டெக்னாலஜி பூதம் அடுத்த பத்தாண்டுகளில் வெகுவாக மாற்றப்போகிறது என்பது நிச்சயம்.

Wednesday, 14 March 2018

Job Market Recovery


2018ல் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை வருகிறது..... தற்போதைக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. ஆனால், பணிநீக்க எண்ணிக்கை (Layoffs) குறைந்து கொண்டே வருவதாக தெரிகிறது.

பணமதிப்பிழப்பு, GST, RERA முதலிய நடவடிக்கைகளால் பொருளாதாரம் அடிவாங்கியது தெரிந்த விஷயம்தான். அதன் காரணமாக 2017ல் நிறைய வேலைவாய்ப்புகள் பறிபோயின. வீழ்ச்சியின் தரைமட்டத்தை தொட்டு விட்டோம் என்று தோன்றுகிறது. இன்னும் ஒன்றிரண்டு காலாண்டுகளில் recovery எதிர்பார்க்கலாம்.

Friday, 9 March 2018

மக்கள் தொகை குறைவது தீங்கு


தலைப்பை பார்த்து அதிர்ச்சியடையாதீர்கள்.... உண்மையைத்தான் சொல்கிறேன். மக்கள் தொகையை குறைப்பது மாநிலங்களுக்கு பெரும் பாதகம்தான். விவரமாக சொல்கிறேன்.

நம் நாட்டில் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பது, நாடாளுமன்ற தொகுதிகளை நிர்ணயிப்பது, ஏன் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது வரை அனைத்தையும் முடிவு செய்வது – மாநிலங்களின் மக்கள்தொகையே.

70களில் இந்திராகாந்தி மக்கள்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்பித்தார். அடுத்த 25 ஆண்டுகளில் மக்கள்தொகையை குறைத்துவிடலாம் என்று எண்ணினாரோ என்னவோ, 1976ல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தும் போது 2001 வரை லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றக்கூடாது என்று விட்டார். நாடு முழுவதும் ஒரே மாதிரி மக்கள்தொகை குறையும் என்பதுதான் அவரது assumption.

ஆனால், நடந்தது வேறு. நோயாளி மாநிலங்கள் என்று சொல்லப்படும் BIMARU (Bihar, Madhya pradesh, Rajasthan, Uttar Pradesh) மாநிலங்கள் மக்கள்தொகையில் வீங்கி கொண்டிருக்க, தென்னக மாநிலங்கள் மக்கள் தொகையை நன்றாக கட்டுப்படுத்தி கொண்டிருந்தன. கடந்த நாற்பதாண்டுகளில் தென்னக மாநிலங்களின் மக்கள்தொகை 121% அதிகரித்தது. பீமாரு மாநிலங்களின் மக்கள்தொகை 145% அதிகரித்தது. மக்கள்தொகையை மிகவும் கட்டுப்படுத்தியது கேரளமும், தமிழகமும்தான் (56%, 75%)

நிதி ஒதுக்கிட்டிலிருந்து, நாடாளுமன்றத்தில் குரல் ஒலிப்பது வரை இந்த மக்கள்தொகை முடிவு செய்யுமாதலால், 2001-ஆம் ஆண்டு லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றுவதற்கு எதிர்ப்பு வந்தது. இதையடுத்து வாஜ்பாய் அரசு 2026-ம் ஆண்டு வரை எந்த மாற்றமும் கொண்டு வரப்படாது என்று அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியது.

முதன்முதலாக 14வது நிதி கமிஷன் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு, 2001 மக்கள்தொகையை சிறிய அளவில் பயன்படுத்தியது. அதாவது, 1971 மக்கள்தொகைக்கு 90%, 2001 மக்கள்தொகைக்கு 10% weightage. (இதற்கே தமிழகத்திற்கு வருமான இழப்பு ஏற்பட்டது)

இப்போது 15வது நிதி கமிஷன் 2011 மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு நிதிஒதுக்கீடு செய்யப்போவதாக சொல்லியுள்ளது. (மாநிலங்களுக்கான Weightage முடிவு செய்யப்படும்போது இந்த மக்கள்தொகை ஒரு முக்கிய காரணி). 15வது நிதி கமிஷனின் முடிவுகள் 2020-2025 வரை செல்லுபடியாகும்.

இன்னும் பார்ப்போம்.... ஏறத்தாழ பத்தரை லட்சம் மக்களுக்கு ஒரு தொகுதி என்னும் அடிப்படையில் லோக்சபா தொகுதிகள் முடிவுசெய்யப்பட்டன. தற்போது பீமாரு மாநிலங்களுக்கு 174 தொகுதிகளும் (மக்களவையில் 32%), தென்னக மாநிலங்களுக்கு 129 தொகுதிகளும் (மக்களவையில் 24%) இருக்கிறது.

இப்போது இதை 2011 சென்சஸ் அடிப்படையில் மாற்றினால், மக்களவையில் 1152 தொகுதிகள் இருக்கும். பீமாரு மாநிலங்களுக்கு 423 தொகுதிகளும் (37%), தென்னக மாநிலங்களுக்கு 239 தொகுதிகளும் (21%) கிடைக்கும். அதாவது, மக்கள் தொகையில் மட்டும முன்னேறி, வேறெதிலும் முன்னேறாத மாநிலங்கள் லோக்சபாவில் வலுவாக இருக்க, மக்கள் தொகையை குறைத்து, வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் பலவீனமாக இருக்கும். அது மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்த மாநிலங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி வளர்ச்சியடையாத (அப்படி அடைய விருப்பமில்லாத?) மாநிலங்களுக்கே செல்லும். 



கூட்டாட்சியில் இது போல பணக்கார மாநிலங்கள், ஏழை மாநிலங்களோடு பங்கீடு செய்வதுதான் நியாயம் என்றாலும் எந்த அளவிற்கு, எவ்வளவு காலத்திற்கு என்பதை முடிவு செய்யவேண்டும். Performers should not be punished.

இப்போது அரசியல்.... வடக்கு மாநிலங்களை மட்டும் ‘கவனித்தாலே’ (in other words படிப்பறிவு தராமல், மக்கள் தொகையை அதிகரித்து, மோசமான நிலையில் வைத்திருந்தாலே) மத்தியில் ஆட்சியை கைப்பற்றிவிடலாம், அல்லவா? பீமாரு மாநிலங்களில் பாஜக இருப்பதும் (பீஹாரிலும்), தென்னக மாநிலங்களில் பாஜக இல்லாததையும் கூட்டி கழித்து பாருங்கள். நிதி கமிஷன் 2026க்கு முன்பே 2011ஆம் ஆண்டு சென்சஸ் கணக்கை ஏன் உபயோகப்படுத்தவேண்டும்? இது குறித்து அறிவிப்பு வந்தும் எந்த கட்சியும் எதிர்த்து கேள்வி கேட்டதாக தெரியவில்லை.

Wednesday, 7 March 2018

Murmuration


Birds of feather flock together என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… அப்படிப்பட்ட flock- தான் முர்முரேஷன். ஸ்டார்லிங் (Starling) எனப்படும் பறவைகள் கூட்டம் கூட்டமாக, டிசைன் டிசைனாக பறப்பதை முர்முரேஷன் என்பார்கள். கூட்டம் என்றால் பெருங்கூட்டம்தான்… 40000 பறவைகள் ஒன்றாக பறந்த வீடியோ கூட இருக்கிறது.

இத்தனை பறவைகள் ஒன்று சேர்ந்து, வானத்திலே அழகாக கோலம் போடுவதை போன்று உருவாக்கும் டிசைன்கள் ஒரு நொடியில் மாறிவிடுவது கண்களுக்கு விருந்தாகும். எதற்காக இப்படி பறவைகள் ஒன்றாக பறக்கின்றன, அவ்வளவு கூட்டமாக பறக்கும் போது எப்படி ஒன்றை ஒன்று இடித்து விடாமல் இருக்கின்றன, திசை மாறுவதை எப்படி தங்களுக்குள் கம்யூனிகேட் செய்து கொள்கின்றன என்று பல கேள்விகள் உண்டு.

வீடியோக்கள், கம்ப்யூட்டர்கள் உதவியுடன் விஞ்ஞானிகள் இந்த மர்மத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து வருகின்றனர். எதிரி பறவைகளிடமிருந்து தப்பிப்பதற்கும், உடல் உஷ்ணத்தை காப்பாற்றி கொள்ளவும் இப்படி கூட்டமாக பறக்கின்றனவாம். அது கூட பெரிய விஷயமில்லை. பறவைகள் தங்கள் அருகிலுள்ள ஏழே ஏழு பறவைகளை மட்டும் பார்த்து தங்கள் திசையை மாற்றி கொள்ளுகின்றன என்பதுதான் அதிசயம். (சோஷயல் மீடியாக்களில் ஒரு டாபிக் வைரல் ஆவதை போன்றது இது…. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் நடப்பதுதான் ஆச்சர்யம்)

பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை…. ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டமாக பறப்பதால் விமான போக்குவரத்துக்கு ஆபத்து… விவசாயத்திற்கும் பிரச்சனை. பிஸியான நகர சாலைகளில் சில சமயம் வந்து உட்கார்ந்து விடும். இவை கிளம்பும் வரை வாகனங்கள் போக முடியாது. எல்லாவற்றையும் விட வேடிக்கையான பிரச்சனை, இவ்வளவு பறவைகளும் கக்கா போன இடத்தை சுத்தம் செய்வது..!

எது எப்படி இருந்தாலும், பார்ப்பதற்கு மிக அழகு! கீழே உள்ள வீடியோவை பாருங்கள். நேரில் பார்க்க வேண்டுமெனில் இங்கிலாந்தில் உள்ள RSPB சரணாலயத்திற்கு போகலாம். குறைந்த செலவில் பார்க்க வேண்டுமெனில், பள்ளிக்கரணை ஏரிக்கு சாயந்திரம் 6 மணி வாக்கில் சென்றால் ரத்த கொசுக்கள் முர்முரேஷன் செய்வதை கண்டு களிக்கலாம்…! 😜

https://m.youtube.com/watch?v=Cr4xc79tSYQ

Tuesday, 6 March 2018

ஷி ஜின்பிங்


சீன அரசியலமைப்பு சட்டப்படி, யாரும் இரண்டு முறைகளுக்கு மேல் பிரசிடென்ட் பதவியை வகிக்க முடியாது. தற்போதைய பிரசிடென்ட் ஷி ஜின்பிங் அந்த சட்டவிதியை நீக்க முயற்சிக்கிறார். ஷி-க்கு இன்னும் ஐந்து வருட காலம் பதவி இருக்கிறது. அதற்கு முன்பே, அவர் தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள பார்க்கிறார்.

ஷி நிரந்தர அதிபராவது சீனா சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. ஏற்கனவே சீனா அண்டைநாடுகளுடன் வம்பு சண்டைக்கு போய் கொண்டிருக்கிறது. ஷி ஆட்சியில் தொடர்ந்தால் இந்த சண்டைகள் இன்னும் அதிகமாகும். இந்தியாவிற்கு தலைவலியும் அதிகமாகும். உலக அரசியலில் இது முக்கியமான விஷயம். இது குறித்து பார்க்கும் முன்னர், இந்த இரண்டு முறை அதிபர் விதி ஏன் வந்தது என்பதை குறித்தும் பார்க்கவேண்டும்.

சீனாவில் முன்பு மாவோ என்று ஒரு தலைவர் இருந்தார். கலாசார புரட்சி என்று கிறுக்குத்தனம் செய்து சீனாவை ஒரு வழி பண்ணினார். அவர் ஆட்சியில் ரொம்பவும் கஷ்டப்பட்டவர்தான் டெங் ஷாஓ பெங். மாவோவின் மறைவுக்கு பிறகு டெங் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவுயர்ந்த (Paramount leader) தலைவரானார்.

மாவோ கீழே சீனா பட்ட கஷ்டத்தை நினைத்த டெங், நாட்டின் நன்மைக்காக சில மாறுதல்களை கொண்டுவந்தார். அதன்படி நாடு சர்வாதிகாரி ஒருவரின் கைப்பிடிக்குள் இனிமேல் போகக்கூடாது என்று முடிவு செய்து மூன்று பதவிகளுக்கு மொத்த அதிகாரத்தையும் பிரித்து அளித்தார். ஒன்று, கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர். இரண்டு, பிரீமியர் (நம்ம ஊர் பிரதம மந்திரி போன்ற பதவி), மூன்று பிரசிடென்ட். உண்மையில் சீனாவின் அரசியலமைப்பு சட்டம் பிரசிடென்ட் பதவி பெரிதா, பிரீமியர் பதவி பெரிதா என்பது குறித்தெல்லாம் பேசவில்லை. இன்னும் கேட்டால் சீன ராணுவமே அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது, கட்சியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஆக, யார் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரோ அவர்கள்தான் உண்மையில் ‘பாஸ்’.

டெங் இன்னொரு மரபு மாறுதலையும் செய்தார். அதாவது, கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் பதவி பறிபோனவர்களை, ரிட்டயர் ஆனவர்களை மன்னித்து விடுவது. அவர்கள் மேல் ஏதாவது குற்றச்சாட்டு போட்டு உள்ளே தள்ளுவது, மொத்த குடும்பத்தையும் சித்ரவதை செய்வது போன்ற பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழல் என்பது சர்வ சாதாரணம். ஆனால், டெங்கிற்கு பிறகு யாரும் இதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அளவோடு ஊழல், கட்சிக்கு கட்டுப்படுவது, உயிருக்கு உத்தரவாதம் – இதுதான் டெங் வகுத்த கொள்கை. இதெல்லாம் டெங் செய்த பெரிய சீர்திருத்தங்கள்.

டெங் வகுத்த கொள்கைப்படிதான் சீனா 20 வருடங்களாக நடந்து வந்தது. 2013ல் ஷி ஜின்பிங் வந்த பிறகு அதிரடி மாறுதல்கள் ஆரம்பித்தன. ஷி ஜின்பெங்கின் வலது கை, துணை அதிபரான வாங் சீஷான். ஊழலை அறவே ஒழிப்பேன் என்று முழங்கிய ஷி, வாங்கின் துணை கொண்டு தனக்கு போட்டியாக கருதப்பட்ட அரசியல் எதிரிகள் அத்தனை பேர் மீதும் ஏதாவது ஒரு ஊழல் வழக்கு தொடுத்து ஒழித்தார். கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஊழல் மிகுந்த கட்சியாதலால் இதை மிக எளிதாக செய்ய முடிந்தது.

சீனாவிற்கு புது யுகம் (New Era) பிறக்கிறது என்று முழக்கமிட்டார். சோஷலிஸம் சார்ந்த தன் கொள்கைகளே சீனாவின் புது யுகத்திற்கான கொள்கைகள் என்றார். சீனாவில் ஊழல் இருக்காது, உலகிலேயே வலிமை வாய்ந்த நாடாக சீனா உருவாகும் என்பதெல்லாம் அவரது உறுதிமொழிகள்.


இப்போது அவர் அரசிலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, தன்னை நிரந்தர அதிபராக்கி கொள்ள முயல்கிறார். அதோடு, தன் வலது கையான வாங் சீஷானை நிரந்தர துணை அதிபராக்கவும் முயல்கிறார்.

ஷி ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர்,. மத்திய ராணுவ கமிஷனின் தலைவர். இது தவிர நாட்டை வழிநடத்தும் கட்சியின் பல்வேறு கமிட்டிகளிலும் இருக்கிறார். அவர் உத்தரவின்றி யாரும் சுண்டு விரலையும் அசைக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த நிலையில்தான் அவர் நிரந்தர அதிபராக இருக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வர பார்க்கிறார்.

சீனாவிலும் ஒரு ஒப்புக்கு சப்பாணி பார்லிமென்ட் உண்டு. கட்சி சொல்வதை ஒப்புக்கொண்டு, தீர்மானங்களுக்கு சமர்த்தாக ஓட்டு போட்டுவிடுவார்கள். ஆக, ஷி நிரந்தர அதிபராவதை தடுக்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.

ஷி தொடர்ந்து அதிபராக இருக்கப்போவது கட்சியினருக்கும், மக்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளதாக தெரிகிறது. அதிபரை நேரடியாக விமர்சித்தால் ஜெயில் நிச்சயம். (ஜெயிலுக்கு போனால் உடலுறுப்புகளை அகற்றி விற்றுவிடுவார்கள் என்பது வேறு கதை. ஆக, ஜெயிலுக்கு போவது என்பது அந்த ஊரில் ஒரு பயங்கரமான விஷயம்). அதற்கு பதிலாக, ஒரு கரடி (Winnie the pooh) கேரக்டரை வைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.

ஷி நிரந்தர அதிபரானால் முதலில் அடிபட போவது பிரீமியரான லீகூஹ் சாங்-காகத்தான் இருக்கும். இவருக்கும் ஷி – க்கும் எப்போதும் ஒத்து போகாது. அவருக்கு கூடிய சீக்கிரம் கல்தா கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் பொருளாதாரம் அவ்வளவு வலிமையாக இல்லை. ஷி-யின் பொருளாதார கொள்கைகளுக்கு ஏற்ப உற்பத்தி குறைக்கப்பட்டது (supply side reforms). ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால்(!?) ஆடம்பர பொருள்களின் நுகர்வு குறைந்து விட்டது. அதே சமயம் ஊழலை தடுக்கும் விதமாக நிரந்தர மாற்றமும் வரவில்லை. கார்ப்பரேட்களின் கடன் சீனாவின் ஜிடிபியில் 130 சதவிகிதம். அரசு கடன் 70 சதவிகிதம்.

பொருளாதாரம், வெளியுறவு இந்த நிலைமையில் இருக்கும் போது ஷி நிரந்தர அதிபராக துடிக்கிறார். சீனாவின் மாற்றங்கள் இந்தியாவுக்கு சந்தோஷமாக அமைய வாய்ப்புகள் குறைவு…. இந்தியாவிற்கு நீடித்த தலைவலி நிச்சயம்.

Sunday, 4 March 2018

ரேஷனில் விரல்ரேகை பதிவு


ஜூன் மாதம் முதல் தமிழகத்து ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே உணவு பொருட்கள் வாங்க முடியும். ரேஷன் முறைகேடுகளை முற்றிலுமாக தடுக்க இந்த நடவடிக்கை. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1970009)

குஜராத்தில் இதே நடைமுறை மூலமாக 1.25 கோடி மக்களின் கைரேகை திருடு போனது குறித்து முன்னமே பதிவிட்டிருந்தேன் (
http://bit.ly/2oMi9nt). அடுத்தது, நம்ம ஊர்தான் போல.