Thursday 28 December 2017

ஐசிஐசிஐ வங்கி, ஐசிஐசிஐ காப்பீடு நிறுவனம் – மோசடி


ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு புதிய மோசடியை கண்டுபிடித்துள்ளனர். மோசடியை செய்தது நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளுள் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி மற்றும் காப்பீடு நிறுவனத்தின் அதிகாரிகள்.
படிப்பறிவில்லாத, சூதுவாது தெரியாத, விவசாயிகள், விதவைகள், சாதாரண கூலிகள்தான் இவர்களது டார்கெட். ஏதோ ஒரு வகையில் இந்த அப்பாவிகளிடம் கொஞ்சம் sizable பணம் வருகிறது. நிலம் விற்ற காசோ, வாழ்நாள் முழுக்க வேலை செய்ததற்கு கிராஜுவிட்டி பணமோ, கணவன் இறந்ததற்கு நஷ்டஈடோ ஏதோ ஒரு வகையிலே பணம் கிடைக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள். அதை ஒரு வைப்பு நிதியில் (Fixed deposit) போட்டால், அதில் வரும் வட்டியை கொண்டு வயிற்றை கழுவலாமே என்று நினைப்பார்கள்.
பணத்தை கொண்டு போய் ஐசிஐசிஐ வங்கி அதிகாரிகளிடம் கொடுத்து வைப்பு நிதியில் போட சொல்கிறார்கள். வங்கி அதிகாரி ஆங்கிலம் புரியாத (அல்லது படிப்பறிவில்லாத) அவர்களுக்கு விண்ணப்பம் நிரப்பி, கையெழுத்து பெற்று கொள்கிறார். தங்கள் பணம் பத்திரமாக வங்கியில் இருப்பதாக அவர்கள் நம்பிக்கையுடன் வீட்டுக்கு செல்கிறார்கள்.
ஆனால், அவர்கள் பணம் கட்டியது வைப்பு நிதிக்கு அல்ல…. மாறாக காப்பீடு திட்டத்திற்கு. அடுத்த தவணை பிரீமியம் கட்டவில்லை என்றால் அவர்கள் கட்டிய பணமும் பறிபோய்விடும்.
இப்படித்தான், சோஹன்தாஸ் என்னும் முதியவர் தன் வயதான காலத்தில் தன்னிடம் இருந்த கடைசி துண்டு நிலத்தை 7,50,000 ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை வைப்பு நிதியில் போட்டிருக்கிறார். 9 மாதங்கள் கழித்து ஒரு போன்கால்….. மேலும் 7,50,000 ரூபாய் கட்டவில்லையென்றால், ஏற்கனவே கட்டிய பணமும் போய்விடும் என்கிறார்கள். அவர் பதறியடித்து கொண்டு ஒரு வக்கீலிடம் போய் தன்னிடம் இருந்த வைப்பு நிதி பத்திரத்தை காட்டினால், வக்கீல் அதை காப்பீடு பத்திரம் என்று சொல்லி விட்டார். அவர் ஒவ்வொரு வருடமும் இதுபோல 7,50,0000 கட்டவேண்டும். பணத்திற்கு அவர் எங்கே போவார்? அவர் ஏற்கனவே கட்டிய ரூபாய் 7,50,0000?
இது போல பல கேஸ்கள்… வங்கியில் கடன் வாங்குபவரிடம் கூட, ஒரு தொகையை வைப்பு நிதியில் வைக்க வேண்டும் என்று கூறி, அந்த பணத்திற்கு காப்பீடு திட்டம் விற்றுவிட்டனர் வங்கி அதிகாரிகள்.
அவ்வளவு எளிதாக ஏமாற்றி, மோசடி செய்து காப்பீடு விற்க முடியுமா? முடியாதுதான்… அதற்காக வேறு என்னவெல்லாம் செய்தார்கள்? டாகுமெண்டுகளில் பொய் விவரம் அளித்தனர் (வாடிக்கையாளரின் கல்வி தகுதி, வருமானத்தை ஏற்றி காட்டுவது, வயதை குறைப்பது), பிரீமியம் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் Form 61ல் அதிகாரிகளே பொய் கையெழுத்து போடுவது, IRDA சொல்லியுள்ள விதிகளை பின்பற்றாதது, காப்பீடு கம்பெனியின் கஸ்டமர் கால் சென்டருக்கு வாடிக்கையாளர் போல போனில் பேசுவது, பொய் சாட்சி கையெழுத்துக்கள்… அடேங்கப்பா!
இந்த மோசடிகள் வெளிவர காரணமாக இருந்தவர் – அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பால்சந்தானி என்பவர். அங்கு நடக்கும் மோசடிகளை மேலதிகாரிகளிடம் சொல்ல, அவரை வேலையை ராஜினாமா செய்ய வைத்தனர். பால்சந்தானி, இப்போது இப்படி ஏமாந்து போன மக்களுக்காக போராடி கொண்டிருக்கிறார். இதுவரை 400 பேர்களின் பணத்தை மீட்டு கொடுத்திருக்கிறார்.
பால்சந்தானி நாட்டின் முன்னனி வங்கியோடு மோதுகிறார்… அவ்வளவு எளிதாக இருக்குமா அவரது போராட்டம்? அவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. அதிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், மீண்டும் தேவையில்லாமல் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போராடுகிறார்.
பால்சந்தானி சொல்லும் விஷயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன… இந்த மோசடியானது, அதிகாரிகள் மட்டும் தொடர்புடையது அல்ல… இது இரண்டு நிறுவனங்களுக்கும் தெரிந்தே நடந்த மோசடி என்கிறார். இது போலத்தான் பல தனியார் காப்பீடு நிறுவனங்கள் காப்பீடு விற்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார். அடையவே முடியாத டார்கெட்டுகளை விற்பனை அதிகாரிகளுக்கு கொடுத்து அவர்களை மோசடி செய்ய தனியார் நிறுவனங்கள் தூண்டுகின்றன என்கிறார்.
இவர்கள் மோசடி செய்ய எது வசதி செய்து தருகிறது தெரியுமா? டேட்டாபேஸ்…. Know Your Customer என்று ஒவ்வொரு வாடிக்கையாளரும் தரும் படிவங்கள், இது போன்ற நிறுவனங்களுக்கு பொக்கிஷம்… எந்த வாடிக்கையாளரை குறி வைக்கலாம் என்று தீர்மாணிப்பது எளிதல்லவா?
நாடு முழுவதும் எத்தனை படிப்பறிவில்லாதவர்கள்? இந்த விவகாரத்தை தோண்டினால் இன்னும் எத்தனை மோசடிகள் வருமோ?

No comments:

Post a Comment