Wednesday 27 December 2017

மாண்டோவி நதிநீர் பங்கீடும் பாஜகவின் தண்ணீர் அரசியலும்


கோவா மாநிலத்தின் உயிர் நதிகள் இரண்டு. ஒன்று ஸுவாரி, இன்னொன்று மாண்டோவி. கோவா சென்றவர்கள் கண்டிப்பாக பன்ஜிம் நகரில் cruise (உல்லாச படகு) போயிருப்பார்கள்... ரொம்பவே பிரசித்தம். அந்த நதிதான் மாண்டோவி (கர்நாடகாவில் மஹதாயி என்பார்கள்).
மாண்டோவி கர்நாடகாவில் உற்பத்தி ஆகி கோவா வழியாக சென்று கடலிலே கலக்கிறது. இந்த மாண்டோவி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்குதான் பல ஆண்டுகளாக கர்நாடகமும் கோவாவும் அடித்து கொள்கின்றன.
கோவா, கர்நாடகா, தெற்கு மஹாராஷ்டிரா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைகளின் புண்ணியத்தால் நல்ல மழையை பெறுகின்றன. ஆனால், தண்ணீரை தேக்கி வைக்க வசதிகள் இல்லை. வெயில் காலத்திலும், அல்லது வானம் கொஞ்சம் பொய்த்தாலும் தண்ணீர் கஷ்டம் வந்துவிடும். வடக்கு கர்நாடகத்தில் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது.

அதனால், மாண்டோவிக்கு கலசா மற்றும் பண்டூரி என்னும் துணைநதிகளில் இருந்து பாயும் தண்ணீரில் இருந்து ஏழெட்டு TMC தண்ணீரை மலப்ரபா என்னும் நதியோடு இணைந்த கால்வாயாக மாற்ற வேண்டும் என்பது கர்நாடகாவின் திட்டம். இது கர்நாடகாவில் மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.
ஆனால், கர்நாடகாவின் ஏமாற்றுத்தனத்தை கோவா நன்கு அறியும். முதலில் குடிநீர் தேவை என்று ஆரம்பித்து, பின்னர் விவசாயத்திற்கு தண்ணீர் விட்டு விடுவார்கள் என்று கூறி கோவா திட்டத்திற்கு சம்மதிக்கவில்லை. மேலும், இந்த திட்டங்களால் காடுகள் வெகுவாக அழிந்துவிடும், சுற்றுசூழல் பெரிதாக பாதிக்கப்படும் என்பதும் உண்மையான குற்றச்சாட்டு.
நதிநீர் ஆணையம் அமைக்கவே இழுத்தடித்து 2010ல்தான் ஆரம்பித்தார்கள். அப்படியும் பேச்சுவார்த்தையில் ஒன்றும் முன்னேற்றமில்லை. கர்நாடகா ஏதாவது செய்ய ஆரம்பித்தால் நீதிமன்றத்திற்கு சென்று ஸ்டே வாங்கிவிடுவார்கள். அப்புறம் திட்டம் கிணற்றில் போட்ட கல்தான்.
இப்போது கோவாவில் பாஜக ஆட்சி, கர்நாடகாவில் தேர்தல் வரப்போகிறது. இந்த நிலையிலே பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கருதப்படும் எடியூரப்பா தனது அரசியலை ஆரம்பித்தார். மத்திய அரசின் (அமித்ஷாவின்) செல்வாக்கோடு தண்ணீர் பெற்று தந்தால் வடக்கு கர்நாடகாவில் ஒரு 50 சீட் தேறும் என்று கணக்கு போட்டார். இதற்கு பேச்சு வார்த்தைகளும் நடந்தன.
பின்னர், கோவா முதல்வர் பரிக்கர், மாண்டோவி நதியின் நீரை பங்கீடு செய்ய கர்நாடகாவிற்கு சாதகமாக தனக்கு கடிதம் அனுப்பியதாக அறிவித்தார். விவசாயிகள் துள்ளி குதித்தனர்... தங்கள் கஷ்டம் தீர்ந்தது என்று நினைத்தனர். கர்நாடக காங்கிரஸ் அரசு பெரிதாக அலட்டி கொள்ளவில்லை. பரிக்கர் அப்படி கடிதம் எழுதினால், முதல்வரான சித்தராமையாவுக்குதான் கடிதம் எழுதவேண்டும். எடியூரப்பா கூறுவது பொய் என்று விட்டது.
அதுதான் நடந்தது... கோவாவின் நீர்வளத்துறை அமைச்சர், கர்நாடகவிற்கு சொட்டு நீர் கூட அதிகம் கிடையாது என்று சொல்லிவிட்டார். இப்போது விவசாயிகள், பொதுமக்களின் கோபம் பாஜக மேல் திரும்பியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் மக்கள் செம கடுப்பில் உள்ளனர். இன்று வடக்கு கர்நாடகாவில் பந்த்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று... ஒன்று, பாஜகவின் அசிங்கமான நீர் அரசியல். வரும் சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்காக கோவா மற்றும் கர்நாடகா மாநில மக்களை ஏமாற்ற தயாரானதே ஒழிய நீண்டகால நோக்கில் மழைநீரை எப்படி சேமிக்கலாம் என்றோ, எப்படி பயன்படுத்தலாம் என்றோ அதற்கு கவலையே இல்லை. தேர்தலில் வென்றால் போதும். இதுதான் பாஜகவின் மனநிலை. காவிரி விஷயத்தில் தமிழகத்தை பாஜக எப்படி ஏமாற்றுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இரண்டு, இதே கர்நாடகா தமிழகத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தது? தனக்கு வந்தால் ரத்தம், தமிழகத்திற்கு தக்காளி சட்னியா? கர்நாடகம் விவசாயிகள் ஓட்டுக்காக இரட்டை வேடம் போட தயாராக இருக்கிறது.
மூன்று, காவிரியை போலவே மாண்டோவியும் கர்நாடகாவிலேதான் உற்பத்தி ஆகிறது. கோவா மாநிலம், கட்சி பேதமின்றி கர்நாடகத்தின் கண்ணிலே விரலை விட்டு ஆட்டுகிறது.... தமிழகமோ கர்நாடகாவிடம் வருடாவருடம் தண்ணீர் பிச்சை கேட்கிறது... இந்த வருடம் கர்நாடகாவில் தேர்தல்... காவிரி தண்ணீர் குறித்து என்ன வாக்குறுதிகளை கர்நாடக அரசியல்வாதிகள் அள்ளி வீச போகிறார்களோ... தமிழகத்திற்கு தண்ணீர் வருமா?

No comments:

Post a Comment