நாடாளுமன்றம், சட்டமன்றம் இரண்டிற்கும் ஒன்றாக தேர்தல்
நடத்தவேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இது குறித்து நிதி ஆயோக்-ஐ
சேர்ந்த பிபேக் திப்ராயின் கட்டுரை (பேப்பர்) ஒன்றை படிக்க நேர்ந்தது. கட்டுரை ஒரு
தலை பட்சமாக இருப்பதாக நான் கருதுகிறேன். அந்த கட்டுரையில் படித்ததை மட்டுமே
வைத்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன். தவறுகளை திருத்தினால் சந்தோஷப்படுவேன்…
ஆனால், ஆதாரங்கள், லிங்குகள் அவசியம்.
முதலில் எதற்காக இந்த ஒன்றாக தேர்தல் என்கிற பேச்சு வருகிறது என்று
பார்ப்போம். முதல் காரணம், ஒரேடியாக தேர்தல் வைத்தால் செலவு குறைச்சல். கடந்த
நாடாளுமன்ற தேர்தல் அரசுக்கு 3400 கோடிகளுக்கு மேல் செலவு வைத்தது. ஒரே நேரத்தில்
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வைத்தால் பாதுகாப்பு செலவு, கண்காணிப்பு செலவு
ஆகியவற்றை குறைத்து விடலாம். ஆனால் விஷயம் என்னவென்றால், நாடு முழுக்க தேர்தல்கள்
நடத்த ஐந்தாண்டுகளுக்கு 8000 கோடி ரூபாய்தான் செலவாகிறதாக சொல்கிறார்கள்…. அதாவது,
சராசரியாக ஒரு வருஷத்திற்கு 1600 கோடி ரூபாய். இந்திய பட்ஜெட் படி ஒரு ஆண்டு மொத்த
செலவு 25 லட்சம் கோடிகள். இதில் 1600 கோடி ரூபாய் ஒரு விஷயமேயில்லை. பிபேக்
massive expenditure என்று சொல்கிறார்... பணத்தை சேமிக்கலாம் என்றால் தப்பில்லை,
massive expenditure என்பது பில்டப்பு.
அடுத்தது மாடல் கோட்… தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து
அரசாங்கம் புது திட்டங்களை அறிவிக்க கூடாது, முக்கிய முடிவுகளை எடுக்க கூடாது.
இதனால், அரசாங்கமே முடங்கி போவதாக குற்றச்சாட்டு. இதில் உண்மை இருக்கத்தான்
செய்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 மாதங்கள்
கட்டுப்பாடுகள் இருக்கிறது என்றால், 5 வருடங்களில் மொத்தம் 4 மாதங்கள்… 6% நாட்கள்
அரசாங்கம் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை என்றே அர்த்தம். ஆனால், நம் நாட்டின்
நிலைமையை வைத்து பார்த்தால் ஏதோ 56 மாதங்கள் வெட்டி முறித்து விட்டு, அந்த 4
மாதங்களால்தான் நாடு முன்னேறமுடியவில்லை என்று சொல்வதெல்லாம் அபத்தம். பிபேக்
எதிர்கேள்விகளுக்கு எதிர்பார்க்கும் தரவுகளை, இந்த மாடல் கோட் காலத்திற்கு
தரவில்லை…. அதாவது, எத்தனை முக்கிய திட்டங்கள் மாடல் கோட் காலத்தில் நின்று போய்,
என்ன நஷ்டம் வந்தது என்றெல்லாம் சொல்லவில்லை. வாதத்தில் உண்மை இருந்தாலும்,
தரவுகள் இல்லை.
அடுத்தது, தேர்தல் ஜாதி, மத, இன உணர்வுகளை கிளப்புகிறது. எப்போது
பார்த்தாலும் தேர்தல் நடந்து கொண்டிருந்தால், இதற்கு ஒரு விமோசனமே கிடையாது என்று
முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி சொல்கிறார். ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.... இந்த
இன்டர்நெட் யுகத்தில், குஜராத்திலும், ராஜஸ்தானிலும் செய்யப்படும் (அல்லது
செய்வதாக சொல்லப்படும்) மதம் சார்ந்த பிரச்சாரங்கள் இந்தியா முழுக்க
செய்தியாகிறது. அதே சமயத்தில் நாடு முழுக்க ஒரே நேரத்தில் மதத்துவேஷம் தோன்றினால்,
மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என்னும் ரிஸ்கும் இருக்கிறது.... காரணம் தேர்தலும்,
மதவாதமும் ஒன்றாக பிணைந்துள்ளது.
1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல் என்ற நடைமுறைதான் இருந்தது
என்கிறார் பிபேக். இது அபத்தமான வாதம்… அப்போது காங்கிரஸிற்கு, நேருவிற்கு இருந்த
செல்வாக்கு வேறு. நேரு மறைவிற்கு பின்னரே இந்திய அரசியல் களம் சூடாகி நாசமாகி
போனது. இன்றைய சூழ்நிலையில், 30 வருடங்களுக்கு பிறகு 2014ல்தான் ஒரு கட்சி ஆட்சி
வந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்பது ஒரு தவிர்க்க முடியாத உண்மை. நமது அரசியல் சூழல்
மாறிவிட்டது. 50 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்தகால நடைமுறை என்பது
லாஜிக்கில்லாத வாதம்.
இப்போது இந்த ஐடியாவிற்கு எதிர்ப்புகளை பார்க்கலாம் …. அதற்கு
முன்னர் – இந்த ஐடியாவை எந்த கட்சியெல்லாம் எதிர்க்கிறது என்று முழு லிஸ்ட் பிபேக்
தரவில்லை. இது தவறு. பிபேக்கின் stature – ல் இருக்கும் ஒருவர் ஒரு அபெண்டிக்ஸில்
இதையெல்லாம் போட வேண்டும். நான்கு கட்சிகள் பேர் போட்டு Etc போடுவது கூடாது. யார்
எதிர்க்கிறார்கள் என்பதை முழுமையாக பதிவு செய்யவேண்டும். சரி, இனி விவாதத்திற்கு
போவோம்.
இப்போது எதிர்ப்புக்கான முதல் காரணம், நடைமுறை சாத்தியம். ஒரே
நேரத்தில் நாடு முழுக்க இரட்டை தேர்தல்கள் நடத்தினால் பாதுகாப்பை, கண்காணிப்பை
உறுதி செய்வது எப்படி? கிட்டத்தட்ட 10 லட்சம் BSF ஆட்கள் நாடாளுமன்ற தேர்தல்
பாதுகாப்பிற்கு தேவைப்படுகிறார்கள். ஒரே தேர்தலாக நடத்தினால் இந்த பாதுகாப்பு
பிரச்சனை சுலபமாகிவிடும். ரொம்ப காலத்திற்கு BSF படைகள் தேவைப்படும் என்று
எதிர்ப்பாளர்கள் சொல்வது சரியல்ல… பாராளுமன்ற தேர்தலுக்கு எவ்வளவு காலம் ஆகுமோ அதே
அளவுதான் ஆகும்... May be கொஞ்சம் கூடுதலாக ஆகலாம்.
ஆனால், கண்காணிப்பு? ஒரு RK நகரை கண்காணிக்கவே விழி
பிதுங்குகிறது... இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் முறைகேடு நடந்தால் தேர்தல் ஆணையம்
எப்படி கண்காணிக்கும்? நேர்மையில்லாத தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தி என்ன
புண்ணியம்? ஒரு அதிகாரி முறைகேடு செய்தார் என்று இடமாற்றம் செய்யலாம். எல்லா
இடத்திலும் தேர்தல் நடக்கும் போது எங்கே இடமாற்றம் செய்வது? அத்தனை மனுக்களை
பரிசீலனை செய்யவேண்டும்... வேட்பு மனு செல்லாது போன்ற வம்பு வழக்குகளை சமாளிக்க
வேண்டும்.... இதற்கு நடுவில் சட்டம் ஒழுங்கையும் பார்த்து கொள்ளவேண்டும்.
ஒரே நேரத்தில் நாடு முழுக்க தேர்தல் நடத்தினால் எத்தனை வோட்டு
மெஷின்கள் தேவைப்படும் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதெல்லாம் one time
investment என்று நினைக்கிறேன். ஆனால், மெஷின்களை தேர்தலுக்கு முன்பு டெஸ்ட்
செய்வது, கவுண்டிங் வரை ஒழுங்காக பாதுகாப்பது இவையெல்லாம் சிரமம்தான்... நம்
தேர்தல் ஆணையம் அனுபவமிக்கது... சமாளித்து விடலாம்.
இந்தியா முழுமைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் எந்த
மாதத்தில் தேர்தல் நடத்துவது? இந்தியா போன்ற பரந்து விரிந்த, பல கலாச்சார,
காலநிலைகளை கொண்ட நாட்டில் இது கஷ்டம்தான். ஆனால், நாம் ஏற்கனவே அப்படித்தான்
நாடாளுமன்ற தேர்தல் நடத்துகிறோம். இதெல்லாம் பெரிய பாயிண்டில்லை. ஆக, தேர்தல்
கண்காணிப்பை தவிர மிச்ச விஷயங்கள் சாத்தியமாகத்தான் படுகிறது.
இரண்டாவது விஷயம் – முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி இரண்டு
பாயிண்டுகள் சொல்கிறார். தேர்தல் காலத்தில் பொருளாதாரம் மேம்படுகிறது...
வேலைவாய்ப்புகள் பெருகுகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் இப்படி நடவாது.
ஆனால், பிபேக் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் சார்ந்த பொருளாதாரம் கருப்பு
பொருளாதாரம்... வேலைவாய்ப்புகள் நிரந்தரமல்ல என்கிறார். கருப்பு பொருளாதாரம்
பாயிண்ட் ஓகே... உபி தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் செய்த செலவு 5500 கோடியாம்....
அத்தனையும் கருப்பு பணம்தான். அதேசமயம், இந்த காலத்தில் எந்த வேலைவாய்ப்பும்
நிரந்தரமல்ல என்பது தான் உண்மை. நிரந்தரமின்மையை பார்த்தால் நூறு நாள்
வேலைவாய்ப்பு திட்டத்தையும் நிறுத்த வேண்டுமல்லவா? கருப்பு பொருளாதாரத்தை
ஆதரிக்கவில்லை, ஆனால் ஏதோ ஒரு வகையில் distribution of wealth நடக்கிறது. இந்தியா
போல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வெகுவாக இருக்கும் நாட்டில் இது போன்ற wealth
distribution சந்தர்ப்பங்களும் (துரதிர்ஷ்டவசமாக) முக்கியம்.
அடுத்தது, ஐந்தாண்டுகளுக்கு நடுவில் தேர்தல் வந்தால்,
அரசியல்வாதிகள் பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் கட்டாயம் கூடுதலாக வருகிறது…
பொறுப்பு கூடுகிறது என்கிறார் குரேஷி. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும்
பொறுப்பே போதும் என்கிறார் பிபேக். குரேஷி சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது.
மக்களை அவ்வப்போது நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்க வேண்டுமென்பதால் அரசாங்கத்திற்கு
கொஞ்சமேனும் பயம் இருக்கிறது.
இனிதான் மிக முக்கியமான பாயிண்ட் வருகிறது… ஒரு ஆய்வில் என்ன
சொல்லியிருக்கிறது என்றால், ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்
நடத்தினால் 86% பேர் ஒரே கட்சிக்குதான் வோட்டு போடுகிறார்கள். (99ல் 68%, 2004ல்
77%, 2014ல் 84%). அதாவது, நம் வாக்காளர்களுக்கு சட்டசபை, நாடாளுமன்றம்
இரண்டிற்கும் இடையே பிரச்சனைகளை, தீர்வுகளை ஆராயும் அறிவு மழுங்கி கொண்டு
வருகிறது. லோக்கல் பிரச்சனையை தீர்க்க சட்டமன்ற தேர்தல், அதற்கான தேர்தல் அறிக்கை
பார்க்கவேண்டும்.... நாடு அளவில் உள்ள விஷயங்களுக்கு அதற்கான தேர்தல் அறிக்கை,
செயல்பாடுகளை பார்க்கவேண்டும். நம்ம ஆட்களுக்கு அவ்வளவு விவரம் போதவில்லை.
இப்போது, இரண்டு தேர்தலுக்கும் இடையில் 6 மாத காலம் இடைவெளி
விட்டால் 61% பேர் ஒரே கட்சிக்கு ஓட்டு போடுவார்கள். அதாவது, ஆறு மாத காலத்தில்
அனுபவப்பட்டு, நிதானப்பட்டு முடிவெடுக்கும் திறன் அதிகமாகிறது எனலாம். இதே
விஷயத்தை வேறொரு ஆய்வும், வேறு விதமாக தெரிவிக்கிறது. விஷயம் இதுதான் – ஒரே
நேரத்தில் தேர்தல் வைத்தால் ஒரே கட்சிக்குதான் ஓட்டு போடுவார்கள்.
இதை பிபேக் மறுக்கமுடியவில்லை…. ஆனால், ஒப்புக்கொள்ள மாட்டேன்
என்கிறார். Correlation is not causation, voter’s behaviour is complex
என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார். இது பிபேக்கின் வாதத்தில் மிக பெரிய ஓட்டை.
நம் நாட்டு மக்கள் பொதுவாகவே உணர்ச்சி வசப்படுபவர்கள்… ஒவ்வொரு
தேர்தலுக்கும் அனுதாப அலையோ, எதிர்ப்பு அலையோ ஏதோ ஒரு அலை வருகிறது. அந்த
நேரத்தில் ஒரே கட்சி இந்தியா முழுவதையும் (சட்டமன்றங்கள், நாடாளுமன்றம்) பிடித்து
விட பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
அடுத்து, வாக்காளரின் இந்த முதிர்ச்சியின்மை காரணமாக மாநில
கட்சிகள் அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது… மக்கள் தேசிய கட்சிக்கு மட்டுமே வோட்டு
போடுவார்கள். அல்லது கிறுக்குத்தனங்களும் நடக்கலாம்… உதாரணமாக, போன 2014
நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்றே சொல்லாத அதிமுக, இன்று நாட்டின்
மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது.
அடுத்து, ஒரே நேரத்தில் தேர்தல்
குறித்து அரசியலமைப்பு சட்டமும், மற்ற சட்டங்களும் என்ன சொல்கிறது என்று
பார்ப்போம்.
அரசியலமைப்பு சட்டத்தில் ஒரே
நேரத்தில் தேர்தல் வைக்கவேண்டும் என்பது குறித்து ஒன்றும் சொல்லவில்லை. தேர்தல்
நடத்தவேண்டும் அவ்வளவுதான்... அதாவது, வெவ்வேறு நேரத்தில் தேர்தல் வைப்பது தவறல்ல.
நாம் இப்போது தவறேதும் செய்யவில்லை... சாதகமாக இருந்தால், தேர்தல் நடைமுறைகளை
சீர்திருத்தம் செய்யத்தான் பார்க்கிறோம். இந்த புரிதல் அவசியம்.
இப்படி ஒரே நேரத்தில் தேர்தல்
என்பதை எப்படி நடைமுறைப்படுத்துவது… ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு நேரத்தில்
தேர்தல் வருகிறதே... முதல்முறை அனைத்தையும் ஒரு syncல் கொண்டு வருவது எப்படி? ஒரு
நாடாளுமன்ற, சட்டமன்றத்தின் காலத்தை ஒரு ஆண்டு வரை நீட்டிக்கலாம். அல்லது, இடையிலே
கலைக்கவும் செய்யலாம். இது இரண்டும் விரும்பத்தகாதது அல்ல என்றாலும் ஒரே ஒரு முறை
மட்டும் செய்துவிட்டு, அனைத்து தேர்தல்களையும் Sync செய்துவிடலாம். (கொஞ்சம்
கொஞ்சமாகவும் Sync செய்யலாம்)
சரி, ஒரு முறை அனைத்து
தேர்தல்களையும் ஒருங்கிணைத்தாலும், நடுவில் ஏதாவது ஆட்சி கவிழ்ந்தால் என்ன
செய்வது? இனி மேல்தான் அபத்தங்கள் ஆரம்பம். ஆட்சி கவிழாமல் இருப்பதே நல்லது....
அப்போதுதான் இந்த ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ செல்லுபடியாகும். அதனால்,
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், கூடவே யாருக்கு ஆதரவு என்னும்
நம்பிக்கை தீர்மானமும் கொண்டு வரவேண்டும். அதாவது, இந்த பிரதமர், முதல்வர் ஆட்சி
வேண்டாம் என்றால், எந்த பிரதமர், முதல்வர் ஆட்சி வேண்டுமென்றும் சொல்லவேண்டும்.
இதன் மூலமாக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தடுக்கப்படும். ஐந்தாண்டுகள் நிலையான
(அசைக்க முடியாத) ஆட்சி அமையும்.
ஆட்சியை கவிழ்த்த பின் கட்சிகள்
ஆதரவை மாற்றி கொள்வதும் உண்டு. They change their camps. ஒரு வகையில் இது
அசிங்கமாக இருந்தாலும், குதிரைபேரத்தை ஊக்குவித்தாலும், கட்டுப்பாடில்லாத நிலையான
ஆட்சியை தடுப்பதால், இதுவும் நல்லதென்றே தோன்றுகிறது.
அடுத்து, ஒரு வேளை ஆட்சி
கவிழ்ந்து விட்டால்? இன்னும் எவ்வளவு பதவி காலம் மீதமிருக்கிறதோ, அதை வைத்து
முடிவு எடுக்கப்படும். மீதமிருக்கும் பதவிகாலத்திற்கு மறு தேர்தல் வைப்பதிலிருந்து,
ஜனாதிபதியே (அல்லது கவர்னரே) ஆட்சி செய்வது வரை பாஸிபல் சொல்யூஷன்கள் தருகிறார்
பிபேக். (இது குறித்து ப.சிதம்பரம் சொல்வதை நம்பாதீர்கள். எல்லா நேரத்திலும்
ஜனாதிபதி ஆட்சி என்பது கிடையாது)
ஆனால், இப்போது பிரதமர்
தலைமையிலே ஒரு சட்டம் நிறைவேறினால், அதை ஜனாதிபதி அப்ரூவ் செய்கிறார். ஜனாதிபதி,
அதே அமைச்சரவையை வைத்து கொண்டு சட்டம் நிறைவேற்றினால் யார் அப்ரூவ் செய்வது?
ஏற்கனவே மத்திய அரசு சொல்லும் விஷயங்களுக்கு ஜனாதிபதி தலை ஆட்டுகிறார் என்னும்
குற்றச்சாட்டு உண்டு. பிரணாப் ஆம் ஆத்மியின் Office of Profit சட்டத்தை
நிராகரித்தார். ஒரே கட்சி எல்லா இடத்திலும் இருந்தால் இது போல நடப்பது சந்தேகமே.
நம் துணை ஜனாதிபதியை எடுத்து கொள்ளுங்கள்.... அவர் இன்னும் பாஜக உறுப்பினர் போலவே
நடந்து கொள்கிறார். அவர் நாளை ஜனாதிபதியானால் எப்படி செயல்படுவாரோ?
ஜனாதிபதி ஆட்சியில் வெளியுறவு
விவகாரங்கள் எப்படி நடக்கும்? நம் நாட்டு அரசியலமைப்பு ஜனாதிபதியை ம்யூட்டாகவும்,
பிரதமரை ஆக்டிவாகவும் வைத்திருக்கும். ஜனாதிபதியே ஆட்சி செய்தால், அது
அரசியலமைப்புக்கு எதிராக அமையும்.
அடுத்து, ஜனாதிபதி சட்டமன்ற
உறுப்பினர்களின் வோட்டுகள் மூலமாக தேர்ந்தெடுக்க படுகிறார். ஒரே நேரத்தில் தேர்தல்
நடந்தால், ஒரே கட்சி ஜெயிக்கவே பெரிய வாய்ப்பு என்று ஏற்கனவே பார்த்தோம். ஒரே
கட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதியும் அதே கட்சியை சேர்ந்தவராகத்தான்
இருப்பார். இப்போது, அதே கட்சி அமைச்சரவையை வைத்து அதே கட்சியை சேர்ந்த ஜனாதிபதி
ஆட்சி நடத்தினால்… இதற்கு எதற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து ஆட்சியை
கவிழ்க்க வேண்டும்? So, there will not be any real democracy post elections.
இப்போதே பல சட்டங்களை, money
bill என்று சொல்லி ராஜ்யசபாவை மீறி கொண்டுவருகிறார்கள்...ஒரே நேரத்தில் தேர்தல்,
ஒரே கட்சி நாடு முழுவதும் ஆட்சி என்று வந்தால், எதிர்ப்பு என்பதே இல்லாமல் அனைத்து
சட்டங்களும் நிறைவேறிவிடும். Genunine தவறுகளை கூட கண்டிக்கவோ, தடுக்கவோ ஆள்
இல்லாமல் போய்விடும்.
இந்த திட்டத்திற்கு பல அரசு
அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக பிபேக் சொல்கிறார். அரசு நிறுவனங்கள் (institutions)
இப்போது சுதந்திரமாக செயல்படுவதாக தெரியவில்லை. இந்த கருத்துகளையெல்லாம் பெரிதாக
எடுத்து கொள்ள முடியாது.
பிபேக் இதை மிகவும் முன்னுரிமை
தரவேண்டிய சீர்திருத்தம் என்கிறார். அப்படி எந்த அவசரமும் எனக்கு தெரியவில்லை.
அரசியலமைப்பு சட்டத்தையே பட்டி டிங்கரிங் செய்ய வேண்டிய முக்கியமான சீர்திருத்தம்
இது. பொறுமையாக அனைத்து கட்சிகளும் உட்கார்ந்து, அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து
பேசி மாற்ற வேண்டிய விஷயம். குறுகிய கால நோக்கங்களுக்காக இதை செய்ய கூடாது என்பதே
என் கருத்து.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதியை திரும்ப வரவழைக்க எந்த உரிமையும் இல்லாத நிலையில், நம்பிக்கையில்லா
தீர்மானங்களுக்கு செக் வைப்பது போன்ற திருத்தங்கள், ஜனாதிபதியே ஆட்சி செய்வார்
போன்ற திருத்தங்கள் மட்டும் ‘சீர்’ திருத்தங்களாக இருக்காது என்றே நான்
நினைக்கிறேன்.