Tuesday 9 January 2018

Sneha Village


AIDS – 2005ல் இந்தியாவில் 150000 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். UNAIDS ரிப்போர்ட் படி 2016ல் 80000 பேர் மட்டுமே இந்தியாவில் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அரசாங்கங்களின், தொண்டு நிறுவனங்களின் சீரிய முயற்சியே காரணம். அதோடு, Antiretroviral Therapy (ART) எனப்படும் தெரபி முறையும் காரணம். இந்த தெரபியினால், எய்ட்ஸை குணப்படுத்த முடியாது. ஆனால், எய்ட்ஸ் நோயையும், அது மற்றவர்களுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்தலாம்.
எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் நிலை கஷ்டமான ஒன்று. குழந்தைகளாக அவர்கள் வளரும் போது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அன்பும், ஆதரவும், நம்பிக்கையும அவர்களுக்கு கிடைக்காது. அதனால், அவர்களுக்கு தனி கவனமும், தனியான காப்பகமும் தேவையாயிருக்கிறது.
அப்படி ஒரு காப்பகம்தான், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ளது. ஸ்நேஹா சாரிடபிள் டிரஸ்ட் எனப்படும் அமைப்பு சிநேஹாகிராம் என்னும் பெயரிலே இந்த காப்பகத்தை நடத்துகிறது. தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து கிராமப்புற எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இங்கே தங்கியிருக்கின்றனர். ஸ்நேஹா டிரஸ்ட் மற்ற மாநிலங்களிலும் இது போல காப்பகங்கள் நடத்துகிறது. மொத்தம் 350 குழந்தைகள் இந்த காப்பகங்கள் மூலம் பயனடைகின்றனர்.
இப்போது, AR தெரபி மூலமாக இந்த குழந்தைகளின் வாழ்க்கையானது முன்பிருந்ததை விட நீண்டுள்ளது. ஒரு பேட்ச் மாணவர்கள் +2 முடிக்கப்போகிறார்கள். அதனால், 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்க்கையை வாழ பணம் ஈட்டக்கூடிய தொழில்களையும் சொல்லி தர வேண்டியுள்ளது. இந்த காப்பகத்தில் பயிர் தொழில், தோட்டக்கலை, சமையல் வேலைகள் சொல்லி தரப்படுகின்றன.
சொல்லி தரப்படும் கல்வி என்பது வரையரைக்குட்பட்டது. தானே கற்று கொள்ளும் கல்வியே சிறந்தது. அதனால், இந்த காப்பகத்தின் நிர்வாகத்தில் ஒரு பகுதி இந்த குழந்தைகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பெண்கள் அணி காய்கறிகளை பயிர் செய்கிறது. அதை விற்கும் பணி ஆண்கள் அணிக்கு. ஒரு வாரம் பெண்கள் அணி சமைத்தால், மறு வாரம் ஆண்கள் அணி சமைக்கவேண்டும்.
ஒரு பார்லிமெண்ட் வடிவத்திலே இந்த குழந்தைகள் தங்கள் நிர்வாகத்தை நடத்துகின்றனர். பிரதமர், அமைச்சர்கள் உண்டு. உதாரணமாக, இந்த 17 ஏக்கர் காப்பகம் முழுவதையும் ஆர்கானிக் முறையிலே பயிர் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை கவனித்து கொள்வது சுற்றுசூழல் அமைச்சருடைய பொறுப்பு. இப்படி ஒவ்வொரு அமைச்சரும் தமக்குரிய வேலைகளை செய்கின்றனர்.
கல்வி அமைச்சர், இனிமேல் பார்லிமெண்டில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதிலிருந்து இவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ந்துள்ளது.
ஒழுங்கான நேரத்தில் மருந்து சாப்பிடுவதும், சீரான உடற்பயிற்சி செய்வதும் இவர்களின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். காலையில் எழுந்ததும் ஓட்டப்பயிற்சி, பின்பு மற்ற உடற்பயிற்சிகள். காலையில் அனைவரையும் நேரத்திற்கு எழுப்பவதற்கு ஒருவர் பொறுப்பேற்றிருக்கிறார். அனைவரும் ஒழுங்காக மருந்துகள் எடுத்து கொண்டனரா என்பதை உறுதி செய்ய ஒருவர் பொறுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.
இங்கிருக்கும் ஒவ்வொரு குழந்தைகளுமே சிறப்பானவர்கள்தான். பிரதமர் மாணிக்பிரபு இன்னும் கொஞ்சம் சிறப்பானவர். அவர் ஒரு தடகள வீரர். மாரத்தான் ஓடக்கூடியவர். பாஸ்டன், நெதர்லாண்ட்ஸ், கொழும்பு ஆகிய இடங்களில் நடந்துள்ள மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார்.
சமூகத்தின் ஆதரவும் இருந்தால் இவர்களின் வாழ்க்கை இன்னும் சிறப்பாக மலரும் என்பதில் சந்தேகமேயில்லை.

No comments:

Post a Comment