Saturday, 6 January 2018

ஒரு மாற்று திறனாளியின் சாதனை


50000 மரக்கன்று நடுவோம், ஒரு லட்சம் மரக்கன்று நடுவோம் என்று சில இயக்கங்கள் அறைகூவல் விடுகின்றன.... உண்மையில் அத்தனை மரக்கன்றுகளுக்கு எங்கே போவார்கள் என்று யோசித்ததுண்டா? ஆந்திராவில் ராஜமுந்திரி அருகிலிருக்கும் கடியம் என்னும் பகுதிக்கு போய்தான் அத்தனை மரக்கன்றுகளையும் வாங்கி வருகிறார்கள். கடியம் பகுதியில் என்ன விசேஷம்... பார்க்கலாமா?
கடியம் என்பது சீமாந்திரா பகுதியில் கோதாவரிக்கு சற்று தொலைவில் இருக்கும் கிராமம். இப்போது சுற்றியிருக்கும் கிராமங்களையும் சேர்த்து கடியம் மண்டலம் என்றே அந்த பகுதிக்கு பெயர் வந்துவிட்டது. இந்த மண்டலத்திற்கு பின்னால், அதன் வளர்ச்சிக்கு பின்னால் ஒரு மாற்று திறனாளியின் உழைப்பும் ஆர்வமும் இருக்கிறது.
பல்ல வெங்கண்ணா – ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த, போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்று திறனாளி. நடப்பதற்கே சிரமம்... ஆனால் விவசாயித்தில் பெரும் ஆர்வம். தந்தையின் மறைவிற்கு பின்னர், சகோதரர்கள் சொத்து பிரிக்கும் போது, ‘நடக்கவே சிரமப்படும் உனக்கு விவசாயம் நிலம் எதற்கு?’ என்று சொல்லி அரை ஏக்கர் நிலம் மட்டுமே கொடுத்துவிட்டு, மீதம் நிலமெல்லாம் சகோதரர்களே பாகம் பிரித்து கொண்டனர். இது நடந்தது 1952ல்.
தன் உடல் ஊனத்தை காட்டி சொந்த சகோதரர்களே இகழ்ந்ததால் பல்ல வெங்கண்ணாவிற்கு கோபம் வந்தது. ஆனால், தன் கோபத்தை சரியான திசையிலே திருப்பினார். இருக்கும் அரை ஏக்கர் நிலத்தை கொண்டு முன்னேற தீர்மாணித்த அவர், அந்த வளமான பூமியிலே ஒரு நர்சரி தோட்டம் ஆரம்பித்தார். அயராத உழைப்பு, நேர்மை – அவருக்கு வெற்றியை தந்தது. அரை ஏக்கர் நர்சரி இன்று 150 ஏக்கராக பரந்திருக்கிறது. இத்துடன் நின்றிருந்தால் அது வெங்கண்ணாவின் தனிப்பட்ட வெற்றியாக இருந்திருக்கும், அவ்வளவுதான்! அவர் ஒரு மாமனிதராகி இருக்க மாட்டார்.
வெங்கண்ணா, விவசாயத்தில் நஷ்டப்பட்ட மற்ற விவசாயிகளையும் நர்சரி ஆரம்பிக்க ஊக்கப்படுத்தினார். அவர்களுக்கு உதவிகள் செய்தார். மற்றவர்கள் நர்சரி ஆரம்பிப்பதற்கு வெங்கண்ணா உதவி செய்வதால் கடைசியில் அவன் நஷ்டப்படப்போகிறான் என்று அவர் காது படவே சொன்னார்கள். ஆனால், மற்றவர்களுக்கு உதவுவதை வெங்கண்ணா நிறுத்தவில்லை.
இன்று கடியம் மண்டலத்தில் (11 கிராமங்கள்) 1300க்கும் மேற்பட்ட செழிப்பான நர்சரிகள், 3500 ஏக்கர் நிலத்தில் அமைந்திருக்கின்றன. 20000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு. இப்படி தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவியதால்தான் வெங்கண்ணா ஒரு மாமனிதராக உயர்ந்திருக்கிறார்.
இந்தியா முழுக்க மட்டுமல்லாது, வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்கிறார்கள். பல அரியவகை தாவரங்களை வளர்க்கிறார்கள் என்பதும் விசேஷம். இமயத்தில் மட்டுமே இருக்கும் பிரம்மகமலம், ருத்திராக்ஷம் போன்றவற்றை கூட வளர்க்கிறார்கள்
அரசாங்கமும் இவர்களுக்கு உதவுகிறது. நர்சரிகளுக்கு இலவச மின்சாரம் தருகின்றனர். இப்போது மானியத்துடன் குறைந்த விலையில் சோலார் பேனல்களும் தருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்கென்றே தனியாக ஒரு தோட்டக்கலை வல்லுனரை நியமித்திருக்கிறது.
ஆனால், செய்யவேண்டியவை நிறைய இருக்கிறது. கடியம் பகுதியில் தோட்டக்கலை பல்கலைகழகம் ஒன்று ஆரம்பிப்பதாக அறிவித்து பல வருடங்கள் ஆகின்றன. அதே போல தோட்டங்களுக்கு காயர் பித் (Coir Pith) அதிகமாக தேவைப்படுவதால் காயர் போர்டு உதவியோடு தயாரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும். மலர்களுக்கான பல்கலைகழகம் ஆரம்பிப்பதாகவும் சொன்னார்கள். விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு உதவ வேண்டும்.
ஒரு தனி மனிதர் அறுபது ஆண்டு காலத்தில் கொண்டு வந்த மாற்றத்தை, ஒரு அரசாங்கம் நினைத்தால் விரைவாகவே கொண்டு வரமுடியும். கடியம் மண்டலத்தில் நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment