Wednesday 10 January 2018

Fowl Language Comics


குழந்தை வளர்ப்பது எவ்வளவு சிரமமான காரியம்? அதை வேடிக்கையாக கார்ட்டூன் வடிவில் சொல்வதே Fowl Language Comics...
ஒரு அப்பா வாத்து... அதன் குழந்தை வாத்துக்களை வளர்க்க எப்படி சிரமப்படுகிறது என்பதுதான் Fowl language கார்ட்டூனின் மையக்கருத்து. நம்ம பசங்களும் இப்படித்தானே பண்ணுது (அல்லது) இதுக்கு நம்ம பசங்க எவ்வளவோ மேல் என்று நம்மை எண்ண தூண்டும் வகையில், குழுந்தை வாத்துகள் அப்பாவை படுத்தியெடுத்து விடும்.
இந்த கார்டூன்களை வரைபவர் பிரையன் கார்டன் என்பவர். முன்பு Hallmark என்கிற கிரீட்டிங் கார்டு கம்பெனியில் கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார். அவர் உருவாக்கிய Chuck & Beans எனப்படும் நாய் மற்றும் முயல் கேரக்டர்கள் Hallmark கிரீட்டிங் கார்டுகளில் பிரபலம். இந்த இரண்டு பாத்திரங்களுமே சிங்கிள், 20 வயதிற்குட்பட்டவை... பாப் இசையில், டேட்டிங் கலாச்சாரத்தில் ஆர்வம்.
கார்டனுக்கு வயதானது, திருமணமானது, குழந்தைகளும் பிறந்தனர். அவர் வயதுக்கு, அவரால் மீண்டும் மீண்டும் சிங்கிள்களின் வாழ்க்கையை பற்றியோ, பாப் கலாசாரத்தையோ வரையமுடியவில்லை. அவரால் தன் படைப்பில் பொருந்த முடியவில்லை.
அதே சமயம், அவர் வேலை பார்த்த கிரீட்டிங் கார்டு கம்பெனி கொஞ்சம் பணக்கஷ்டத்தில் மாட்டிகொண்டது. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம் என்னும் குழப்பமும் நிலவியது. என்ன செய்யலாம் என்று கார்டன் யோசித்து கொண்டிருந்த போது, புதிதான கார்டூன் கேரக்டர்களை உருவாக்கி ஒரு புதிய கார்டூன் சீரியஸ் ஆரம்பிக்க சொல்லி நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
இதுவரை தான் வாத்துக்களை வரைந்ததில்லையே என்று நினைத்த கார்டன் தன் புது சீரியஸ்ஸிற்கு வாத்துகளை கேரக்டர்களாக உருவாக்கினார். தன் குழந்தைகளை வளர்க்க தான் படும் சிரமங்களையே கார்ட்டூனாக போட தொடங்கினார். அதனால்தான், அவர் கார்ட்டூனில் அம்மா வாத்து எப்போதாவதுதான் வரும். அப்பா வாத்துதான் குழந்தைகளிடம் மாட்டி கொண்டு முழிக்கும்.
இப்படி ஆரம்பித்ததுதான் Fowl Language Comics. இரண்டு வருடங்களில் கார்ட்டூன் பிரபலமான நிலையில் கார்டனுக்கு Hallmark-ல் வேலை போனது. ஆனால், சில மணி நேரங்களிலேயே Huffington Post –லிருந்து தொடர்பு கொண்டனர். அவர் கார்ட்டூன்களை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட ஆர்வம் தெரிவித்தனர். கார்டனுக்கு இருந்த பொருளாதார கவலை தீர்ந்தது.
கார்டனிடமிருந்து நாம் கற்று கொள்ள விஷயம் இருக்கிறது. கார்டன் சிறு வயதிலிருந்தே கார்டூனிஸ்ட் ஆக ஆசைப்பட்டவர். அந்த ஆசையை, ஆர்வத்தை விடாமல் தன் திறமையை வளர்த்து கொண்டார். வயதாகும் போது ஏற்படும் மாற்றங்களை ஏற்று கொண்டார்... தன் கார்டூன்களை மாற்றி கொண்டார். வேலை போய்விடும் என்ற நெருக்கடியில் அவர் ஆரம்பித்த புதிய கார்டூன் சீரியஸ் புதிய வாய்ப்புகளை அவருக்கு தேடி தந்தது.
கனவுகளில் நம்பிக்கை, திறமைகளை வளர்த்து கொள்வது, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது, நல்லநண்பர்கள், தொடர்புகளை உருவாக்கி கொள்வது, மற்றவர்கள் ஆலோசனைகளை கேட்டு கொள்வது.... கார்டன் ஒரு நல்ல உதாரணம்.
Fowl Language Comics – முகநூல் பக்கம் இருக்கிறது. விரும்புபவர்கள் தொடரலாம்.

No comments:

Post a Comment