Friday 14 June 2019

முர்முரேஷன் (Murmuration)


பறவைகள் கூட்டம் கூட்டமாக, டிசைன் டிசைனாக பறப்பதை முர்முரேஷன் என்பார்கள். கூட்டம் என்றால் பெருங்கூட்டம்தான்… ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்று சேர்ந்து பறக்கும்.

இத்தனை பறவைகள் ஒன்று சேர்ந்து, வானத்திலே அழகாக கோலம் போடுவதை போன்று உருவாக்கும் டிசைன்கள் ஒரு நொடியில் மாறிவிடுவது கண்களுக்கு விருந்தாகும்.

பில்பர் என்னும் புகைப்படக்கலைஞர் ஒருவர், ஸ்பெய்ன் நாட்டில் இப்படிப்பட்ட முர்முரேஷன் படங்களை எடுத்தார். படம் எடுக்கும் போது எப்பேற்ப்பட்ட பொக்கிஷத்தைப் படம் பிடித்திருக்கிறோம் என்று அவருக்கே தெரியாது. காரணம், கூட்டமாக பறக்கும் பறவைகள் நொடிக்கொருதரம் வடிவங்களை மாற்றிக் கொள்ளும்.

பின்னர், வீட்டிற்கு வந்து படங்களை கம்யூட்டரில் அப்லோட் செய்து பார்த்து வியந்தார். இந்தப் படங்கள் அவருக்குப் புகைப்படப்போட்டிகளில் பரிசுகளைப் பெற்று தருகிறது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.
Image may contain: sky, mountain, cloud, nature and outdoorImage may contain: sky, water, outdoor and nature
Image may contain: sky, outdoor and nature

Thursday 13 June 2019

இரவு உயிரிகள் (Nocturnal)


மனிதர்களுடைய நடமாட்டத்திற்கு அஞ்சி, பிற உயிரினங்கள், குறிப்பாக பாலூட்டிகள், தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்கிறதாம்.

6 கண்டங்களில் 62 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் நடமாட்டம் காரணமாக, உயிரினங்கள் இரை தேடும் நேரத்தை மாற்றிக் கொள்வது, குறைந்த நேரமே இரை தேடுவது, வழக்கமாக தாங்கள் புழங்கும் இடத்தை மாற்றிக் கொள்வது என்று பலவிதங்களில் மாறி வருகின்றன.

சில உயிரினங்கள் மனிதர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று கொஞ்சம் கொஞ்சமாக இரவு உயிரிகளாக (Nocturnal) மாறுகின்றனவாம்.

இதே போல வெயில் கொளுத்தினால் இந்தியாவில் மனிதர்களும் இரவு உயிரிகளாக மாற வேண்டியதுதான்.


Thursday 6 June 2019

இந்தியாவில் 44% பேருக்கு தாய்மொழி ஹிந்தியா?


“ஹிந்தியில் இருப்பது இரண்டே இலக்கியங்கள்தான் – ஒன்று, துளசி ராமாயணம். இன்னொன்று ரயில்வே கைடு” என்று அண்ணா கூறியதாக ஒரு ஜோக்கைப் படித்தேன். ஜோக்கிற்கு சிரிக்கும்போதே சந்தேகம் வந்து கொஞ்சம் ஆராய ஆரம்பித்தேன்.

துளசியின் ராமாயணமான ராம்சரிதமானஸ் ‘அவதி’ என்னும் மொழியில் எழுதப்பட்டது. அவதி என்பது தெற்கு நேபாளம், அதற்கு கீழே இருக்கும் உ.பி பகுதிகளில் பேசப்படும் மொழி. அது ஒரு தனிமொழி என்று வாதிடுவோரும் உண்டு… ஹிந்தியின் ஒரு வட்டார வழக்குதான் என்று கூறுபவர்களும் உண்டு.

இந்திய சென்சஸ் படி அவதியைத் தாய்மொழியாகக் கொண்ட 38 லட்சம் பேரும் இந்தி பேசுபவர்கள்தான். இப்படி எத்தனை மொழிகள் ஹிந்தியின் வட்டார வழக்காகக் கணக்கிடப்படுகிறது என்று பார்த்தால், எண்ணிக்கை மலைக்க வைக்கிறது.

ஹிந்திக்கு கீழே 55 வட்டாரவழக்குகள் இருக்கின்றன. 56வது Others என்று துக்கடா கேட்டகரி மொழிகளை மட்டுமே 1.67 கோடி பேர் பேசுகிறார்கள்.

சரி எந்த வட்டார வழக்குகள்/ மொழிகள் நிறைய பேசப்படுகின்றன? போஜ்பூரி 5.05 கோடி, ராஜஸ்தானி 2.58 கோடி, சத்தீஸ்கர்ஹி 1.62 கோடி, மகதி 1.27 கோடி, ஹர்யான்வி 1 கோடி மக்களுக்குத் தாய்மொழி. இதில் எது வட்டார வழக்கு, எது தனி மொழி? தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்டாலே அது ஹிந்திதான் என்று எடுத்துக் கொள்கிறார்கள் போல.
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சென்சஸ் சொல்லும் 52.83 கோடியில் வட்டார வழக்குகள் பேசுபவர்கள் 20.61 கோடி(39%). இப்போது மற்ற முக்கிய மொழிகளைப் பார்ப்போம். (அதாவது, 5 கோடி பேருக்கு மேல் பேசும் மொழிகள்)

பெங்காலி 9.72 கோடி (வட்டார மொழி பேசுவோர் 1.03%), மராத்தி 8.30 கோடி (0.24%), தெலுங்கு 8.11 கோடி (0.25%), தமிழ் 6.90 கோடி (0.14%), குஜராத்தி 5.55 கோடி (0.72%), உருது 5.07 கோடி(0.11%).ஆக, 

முக்கிய மொழிகளில் வட்டார மொழியினர் வெறும் கால் சதவிகிதம்தான். குஜராத்தியில் முக்கால் சதவிகிதம், அதிகபட்சம் பெங்காலியில் கூட ஒரு சதவிகிதம்தான். ஆனால், ஹிந்தியில் மட்டும் வட்டார மொழியினர் 39%. வாவ்..! (போஜ்பூரி பேசுபவர்கள் மட்டுமே 5.05 கோடி)

உண்மையிலேயே அவை தனி மொழிகளா, வட்டார மொழிகளா என்னும் விவாதத்தில் இறங்க எனக்குத் தகுதி கிடையாது. ஆனால், 39% என்பது பெரிய நம்பர்… சந்தேகத்தைத் தருகிறது.

ஹிந்தியின் ஆதிக்கத்தால் அவதி, போஜ்பூரி போன்ற மொழிகள் சொல்வளத்தை இழந்துவருகின்றன. வெளியிடங்களில் வேற்றுமொழி ஆதிக்கம் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக வீடுகளிலும் நுழைந்து தாய்மொழியை அழித்துவிடுகிறது.

நேற்று ஒரு பதிவைப் பார்த்தேன். உ.பி மாநிலத்தில் ஹிந்தி பாடத்தில் 10 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்தனர் என்றால் நாம் சிரிக்கிறோம். ஆனால், இதில் சிரிப்பதற்கு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு ஹிந்தி தாய்மொழி இல்லை. அதனால்தான் தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று பதிவர் கருத்துக் கூறியிருந்தார். சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.

இப்படி வட்டாரமொழிகளை ஏன் ஹிந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும்? இந்தியாவில் 44% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று சொல்வதற்கும், இந்தியாவில் 26% பேர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதற்கும், தாக்கத்தில் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள்...!

ஆதாரம் – 2011 சென்சஸ் அறிக்கை (http://www.censusindia.gov.in/2011Cen…/C-16_25062018_NEW.pdf)

Saturday 25 May 2019

Manekken Pis


மானேகென் பிஸ் என்பது பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இரண்டு அடி உயரம் கொண்ட ஒரு வெண்கலச் சிலை. மானேகன் பிஸ் என்றால் the litter pisser, அதாவது சிறுநீர் கழிக்கும் சிறுவன் என்று அர்த்தம்.

ஆமாம், சிறுநீர் கழிக்கும் சிறுவன் சிலைதான் பிரஸ்ஸல்ஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. பிரஸ்ஸல்ஸ் நகர மக்களின் நகைச்சுவை உணர்வுக்கு அடையாளமாக இந்தச் சிலை விளங்குகிறது. நகைச்சுவைக்கு மட்டுமல்ல, அவர்களின் தன்மான உணர்வுக்கும் இந்தச் சிலை அடையாளம் எனலாம்.

இந்தச் சிலையை எப்போது நிறுவினார்கள் என்று தெரியவில்லை. ஏன் நிறுவினார்கள் என்று பல கதைகள் இருக்கின்றன. எனக்குப் பிடித்தக் கதை இதுதான். ஒரு முறை பிரஸ்ஸல்ஸ் நகரம் முற்றுகைக்கு உள்ளானது. எதிரிகள் கோட்டையை வெடி வைத்துத் தகர்க்க பார்த்திருக்கிறார்கள். எதிரிகள் இடையே உளவு பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், பற்றியெரிந்த திரி மீது சிறுநீர் கழித்து அதை அணைத்திருக்கிறான். பிரஸ்ஸல்ஸ் நகரையே காப்பாற்றிய இந்தத் தீரச்செயலைப் (!) பாராட்டி சிலை வைத்தார்களாம். (ஏதோ தமிழ் சினிமாவில் இப்படி ஒரு சீன் பார்த்த ஞாபகம் இருக்கிறது..!)

1451-ம் வருடத்தைய பிரஸ்ஸல்ஸ் நகர குடிநீர் சப்ளை கட்டுமானம் குறித்த ஆவணங்களிலேயே இந்தச் சிலையைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. 1619-20ல் பழைய சிலை அகற்றப்பட்டுப் புதிதாக வெண்கல சிலையொன்று அமைக்கப்பட்டது. இப்போது இருக்கும் சிலை ஒரிஜினல் சிலை கிடையாது. ஒரிஜினலை மியூசியத்தில் வைத்துவிட்டு, அதே போல டூப்ளிகேட் செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிலை பிரஸ்ஸல்ஸ் நகர அடையாளம் என்பதால் போர்களில் இதைத் சேதப்படுத்த முயன்றிருக்கின்றனர். திருடர்கள் இதைக் களவாட பார்த்திருக்கின்றனர். இது போல பல சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஒரு முறை பிரான்ஸ் நாட்டின் சிறப்புப்படைப் பிரிவொன்று இந்தச் சிலையைத் திருட முயல, மக்கள் வீராவேசமாக கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். மக்கள் எதிர்பைக் கண்டு திகைத்த பிரான்ஸ் மன்னர் 15ம் லூயி, திருட்டு முயற்சியைக் கைவிட்டு, தங்க அங்கி ஒன்றைப் பரிசாக அளித்திருக்கிறார். இது போல பல்வேறு நாட்டினர் இந்தச் சிலைக்கு ஆடைகளை அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்கள். (போன மே மாதம் வரை இதுமாதிர 1000 உடைகள் சேர்ந்திருக்கின்றன)




விசேஷ நாட்களில் இந்தச் சிலைக்கு விதவிதமான ஆடை அலங்காரங்கள் செய்வர். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பீரை சிறுநீராக கழிப்பது போல செட்டப் செய்வார்கள். அந்தப் பீரை அனைவரும் குடித்து மகிழ்வார்கள்…!

அடுத்த சனிக்கிழமை, அதாவது, ஜூன் ஒன்றாம் தேதி உலக பால் தினமாம்…. அன்று இந்தச் சிறுவன் பாலைக் கழிக்கப் போகிறானாம். அதைப் பிடித்துக் குடித்துக் கொண்டாட போகிறார்கள்.

என்னது, ‘அவர்’ எப்போ பிரஸ்ஸல்ஸ் போவாரா? ஆளை விடுங்க…!

Friday 19 April 2019

சம்மதத்தோடு உறவு, கற்பழிப்பா?


போன வாரம் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு தீர்ப்பு…

சத்தீஸ்கரில் ஒரு ஆள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியிருந்தார். இரண்டு வீட்டின் சம்மதமும் அந்தத் திருமணத்திற்கு இருந்தது. பிற்பாடு என்ன காரணமோ, அவருக்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் ஆனது. இந்த விஷயம் முதல் பெண்ணிற்கு தெரியாது.

அப்புறம் ஆசாமி என்ன பண்ணினார் என்றால், முதல் பெண்ணின் சம்மதத்தோடு ஜாலியாக இருந்தார். வேலை முடிந்ததும் இந்தப் பெண்ணைக் கழட்டி விட்டுவிட்டு நிச்சயம் செய்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சந்தேகமே இல்லாத, பக்கா திட்டமிட்ட ஏமாற்று வேலை…!

போலீஸ் புகார், வழக்கு என்று கதை போனது. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம், அந்த நபர் மேல் கற்பழிப்புக் குற்றம் சுமத்தி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. மேல் முறையீட்டில் சு.கோர்ட் கற்பழிப்புக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியது, தண்டனையை மட்டும் 7 ஆண்டுகளாகக் குறைத்திருக்கிறது.

எனக்கு என்ன விசித்திரமாகப் படுகிறதென்றால், சில காலத்திற்கு முன்னால் லிவ்இன் உறவுகளை இதே சு.கோர்ட் அங்கீகரித்தது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, லிவ்இன் உறவில் இருந்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், சம்மதத்தோடு நடந்த உறவு கற்பழிப்பாக மாறிவிடுமா? என்ன லாஜிக்?

இதற்கு கோர்ட் அளித்திருக்கும் விளக்கம்தான் தலையைச் சுற்ற வைக்கிறது. "It tantamounts to a serious blow to the supreme honour of a woman and offends both her esteem and dignity."

பெண்ணின் கண்ணியமும், கௌரவமும் கற்பில் இருக்கிறது போன்ற சிந்தனைகளை இன்னும் எத்தனை காலத்திற்கு வைத்துக் கொள்ளப்போகிறோம்? கற்பு என்னும் நிலைப்பாட்டை மட்டும் வைத்துக் கொண்டு கற்பழிப்புக் குற்றத்தைப் பார்ப்பதால்தான் marital rape வன்முறையாக இருந்தாலும் இந்திய சட்டப்படி அது தவறாகக் கருதப்படவில்லை. திருமணம் இல்லையென்றால் சம்மதத்தோடு நடக்கும் உறவும் கற்பழிப்பாகக் கருதப்படுகிறது.

With due respect to Supreme Court, சம்மதத்தோடு உறவு கொள்வதைக் கற்பழிப்பு என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. லிவ்இன் தீர்ப்போடு இது முரண்படுவதாகக் கருதுகிறேன்.

Ref - https://www.ndtv.com/india-news/sex-on-false-promise-of-marriage-is-rape-supreme-court-2023409

Thursday 6 September 2018

377


இன்றைய 377 தீர்ப்பு பல அச்சங்களையும், கவலைகளையும் விதைத்துள்ளதை என் நட்பு வட்டத்திலேயே பார்க்கிறேன்.

ஒரு சின்ன தகவல்… 2016 தரவுகள் படி இந்தியாவில் ஒரு நாளைக்கு 106 கற்பழிப்புகள் நடக்கின்றன. இதில் 40% மைனர்கள் மேலான தாக்குதல். கிட்டத்தட்ட 95% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் மிக நெருங்கிய சொந்தங்களே..! (அப்பா, தாத்தா, சகோதரன், மகன் போன்றவர்கள்)

இது போலீஸில் ரிப்போர்ட் செய்யப்பட்ட குற்றங்கள் மட்டுமே…. வெளியில் சொன்னால் மானம் போகும் என்று பயந்து, தொண்டைக்குள் கசப்பை விழுங்கி, தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு மறைத்தவை தனிக்கணக்கு.

இதற்கு என்ன செய்யலாம்…? நாளை முதல் ஆண்-பெண் திருமணத்தை நிறுத்தலாமா? அல்லது ஆண்களையும் பெண்களையும் தனித்தனி சமூகமாக்க போகிறோமா? இந்த ரேஞ்சில் யோசித்தால் பிரியாணி கடைகளை கூட மூடவேண்டி வரும்.

377 சட்ட மாற்றத்தினால் தவறுகள் அதிகரிக்கும் என்னும் சிந்தனை, LGBT சமூகத்தின் மேல் கொண்டிருக்கும் தவறான பிம்பத்தினால் எழுவதுதான்…. அதைவிட எண்ணிக்கையில் பல மடங்குகள் அதிகமான ஆண் இனம் செய்யாத குற்றங்கள் LGBT சமூகத்தால் பெருகும் என்று நினைப்பது சுத்த அபத்தம்.

சமூகத்தில் சிலருக்கு பால் விருப்பங்கள் வேறுபடுகின்றன. அது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம். மதத்தின் காரணமாகவோ, பெருவாரியான விருப்பத்திற்கு மாற்றாக இருப்பதன் காரணமாகவோ அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்தது. இப்போது அவர்களுக்கு ஒரு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தேவையற்ற சித்ரவதைகளில் இருந்து ஒரு விடுதலை கிடைத்துள்ளது.

US, UK, Australia, ஐரோப்பிய, தென்அமெரிக்க நாடுகளில் எல்லாம் ஒரு பால் மணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் இப்போது இந்தியாவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் ஒருபால் தம்பதியினர் குழந்தை பெற்று கொள்கின்றனர். சிறப்பாகவே குழந்தைகளை வளர்க்கின்னறனர். நம்மை போல்தான் அவர்களும்.

இந்த 377 தீர்ப்பை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த சட்டதிருத்தத்தை தவறான முறையில் பயன்படுத்தாத வகையிலும், நெறிப்படுத்தவேண்டிய முறையிலும் சட்டரீதியான வேறு மாற்றங்களும் தேவைப்படுகிறது. சட்டநிபுணர்கள் கூடிய விரைவில் மற்ற சட்டங்களில் தேவையான மாற்றங்களை கொண்டுவருவார்கள் என்று நம்புகிறேன்.

முன்னேற்றம் என்பது அனைவரையும் அரவணைத்து செல்வதுதான். அந்த வகையில் ஒரு அரவணைப்பு இன்று நடந்துள்ளது. அதை வாழ்த்துவோம்….!

இந்திய தொல்லியல் புதிய கண்டுபிடிப்புகள்


சிந்து சமவெளி நாகரீகத்தை குறித்து புதிய செய்தி ஒன்று போன வாரம் வெளியானது. தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த ஒரு மனிதனின் காது எலும்பை DNA ஆய்வு செய்ததில், ஆரிய ஜீன் எனப்படும் R1a ஜீன் அந்த மனிதஉடலில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அந்த உடலில் உள்ள ஜீன்அமைப்பு தமிழகத்தில் நீலகிரி மலையில் உள்ள இருளர்களோடு ஒத்துப்போகிறது.

மாறாக, வடஇந்தியாவை சேர்ந்தவர்களின் ஜீன்கள் வடக்கு ஐரோப்பியர்களின் ஜீன்களோடு ஒத்துப்போகின்றன. வடக்கு ஐரோப்பியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளி பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். ஆக, வடஇந்தியர்களும் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து இடம் பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்னும் கருத்துக்கு இந்த ஜீன் ஆராய்ச்சி வலுசேர்க்கிறது. (இந்த இடப்பெயர்வு எல்லாம் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.)

1920-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தொல்லியல் ஆய்வுகள் நடந்தபோது, சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் வேதகாலத்திற்கு முற்ப்பட்டவர்கள் என்றும், அவர்களை ஆரியர்கள் படையெடுத்து வந்து வென்றதாகவும் கூறப்பட்டது. சிந்துசமவெளியில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்று ஆரிய-திராவிட தியரிகள் தோன்றின.

ஆனால், இந்தியாவில் இருக்கும் மதம் மற்றும் கட்சி சார்ந்த அரசியல் காரணமாக அந்த தியரி அவ்வளவு பெரிதாக எடுபடவில்லை. தற்போது மத்தியில் பாஜக அரசு இருப்பதால், இந்த ஆராய்ச்சி முடிவுகளை பூசிமெழுகும் முயற்சிகளும் நடப்பதாக தெரிகிறது.

காரணம், ஹிந்துத்வா அரசியல் எனலாம். இந்த மண்ணின் பூர்வகுடிகள் ஹிந்துக்கள், இந்த மண் ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது, புராணங்கள் என்பவை கட்டுக்கதைகள் அல்ல, அவை உண்மையான வரலாறு என்றெல்லாம் சொல்லும் ஹிந்துத்வா அரசியல், இந்தியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த குடிகள் என்பதை எவ்வாறு ஒப்புக்கொள்ளும்?

மத்திய அரசு ஏற்கனவே ஒரு தொல்லியல் துறை கமிட்டியை அமைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த கமிட்டியின் வேலை, வேதங்கள், புராணங்களை ‘தேவையான சான்றுகளோடு’ உண்மை என்று நிரூபிப்பது. அதாவது, இந்த ஆராய்ச்சிகளுக்கு எதிர் ஆராய்ச்சி அரசாங்க ஆதரவோடு நடக்கிறது.

பல மதத்தலைவர்கள் கூட ஆரிய-திராவிட தியரிகளை ஒப்புக்கொள்வதில்லை. அது ஹிந்து மதத்தை சிதைக்கக்கூடும் என்னும் அச்சம்தான் காரணம்.

ஆனால், அறிவியல் என்பது ஈவிரக்கமற்றது. அது உண்மையை சமரசம் இல்லாமல் காட்டுவது. சமரசமில்லாமல் உண்மைகள் வெளியாகுமா என்பது மட்டும்தான் கேள்வி.

முழு விவரங்களோடு படிக்க விரும்புவோருக்கு –
  1. https://www.indiatoday.in/amp/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31?__twitter_impression=true
  2. https://tribune.com.pk/story/1654465/3-modi-appoints-committee-scholars-prove-hindus-descended-indias-first-inhabitants/

Monday 27 August 2018

GST – Twitter Support


ஒரு வருடத்திற்கு முன்பு GST வரி அவசரகதியில் அறிமுகப்படுத்தப்பட்ட போது வர்த்தகர்களுக்கு அதுகுறித்து தலையும் புரியவில்லை… காலும் புரியவில்லை. வர்த்தகர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு ஒரு புதிய நடவடிக்கை எடுத்தது… அதுதான் டிவிட்டர் சப்போர்ட்.
GST@GOI  என்னும் டிவிட்டர் அக்கௌண்ட் மூலம் வரித்துறை அதிகாரிகள், வர்த்தகர்களின் சந்தேகங்களுக்கு பதில் சொன்னார்கள். இது குறித்த என்னுடைய முந்தைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில், ‘இது புதிய நிர்வாக முறை’ என்று புகழ்ந்திருந்தார்.
இந்த டிவிட்டர் சப்போர்ட் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்தாலும், என்னால் அதை முழுவதுமாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய வாதம் இதுதான்…. Twitter support is not legally binding...! அதிகாரிகளின் வழிகாட்டுதல் தவறாக இருக்கும்பட்சத்தில் வர்த்தகர்கள் மேல்தான் பெனால்டி விதிக்கப்படும். டிவிட்டரில் அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின் படிதான் நடந்தேன் என்று கோர்ட்டில் சொல்லமுடியாது.
ஒரு வழக்கு என்று கோர்ட்டுக்கு போனால், அங்கே சட்டம் மட்டும்தான் நிற்கும். இந்த டிவிட்டர் ஆலோசனைகள் நிற்காது… அரசாங்கம் இதற்கு ஒரு சட்டரீதியான அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றேன். நண்பர் என் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. என் கருத்துக்கு என் மோடி விரோதமே காரணம் என்று குறை கூறினார்.
ஆனால், நான் சொன்னதுதான் நடந்தது. சட்டத்தோடு ஒத்துப்போகாத சில வழிகாட்டுதல்கள் இந்த டிவிட்டர் அக்கௌண்டில் வழங்கப்பட்டன. அதன் காரணமாக வர்த்தகர்களுக்கு பெனால்டியும் விதிக்கப்பட்டது. அரசாங்கம், இந்த வழிகாட்டுதல்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லையென்று கைகழுவிவிட்டது.
தற்போது GST வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில் அரசு இந்த டிவிட்டர் சப்போர்ட்டை நிறுத்திவிட்டது.
இதே போன்று ரயில்வேயிலும், பாஸ்போர்ட் பிரச்சனைகளிலும் டிவிட்டர் மூலம் புகார்கள் ஏற்கப்பட்டு சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிவிட்டர் மூலம் சப்போர்ட் என்பதில் இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று, அதிகார மையங்களை வெகு சுலபமாக அணுகமுடிகிறது. இரண்டு, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் கணக்காக உடனடி தீர்வுகள் எட்டப்படுகின்றன.
அவசர உதவிகளுக்கு டிவிட்டர் சப்போர்ட் ஒரு நல்ல வழிமுறை. சமீபத்தில் 25 சிறுமிகள் கடத்தலை தடுக்க டிவிட்டர் சப்போர்ட் உதவியது.
அதே சமயம், சம்பந்தப்பட்ட எந்த தரப்புக்கும் responsibility-யோ, நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரமோ இருப்பதில்லை. அதற்கு இந்த GST வழிகாட்டுதல்கள் ஒரு நல்ல உதாரணம். மேற்சொன்ன குழந்தைகள் கடத்தல் போன்ற புகார்கள் தொடர்ந்து விஷமிகளால் போலியாக தரப்பட்டால், போலீஸும், அரசு நிர்வாகமும் புகார் உண்மையா, பொய்யா என்ற குழம்பிவிடும்.
ஏதோ ஒரு வகையில் டிவிட்டர் சப்போர்ட் சட்டரீதியான அங்கீகாரத்தை பெறவேண்டும். அப்போதுதான் இந்த நடைமுறையின் பயன்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும். இல்லையென்றால் குழப்பங்கள்தான் மிஞ்சும்.

Saturday 25 August 2018

Why Primary Sector is Important to India


நேற்று London School of Economics –ல் மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாடி கொண்டிருந்தார். ஒரு மாணவியின் கேள்வியும், ராகுலின் பதிலும் என் ஞாபகத்திலிருந்து தருகிறேன். இது Verbatim கிடையாது.

கேள்வி – நீங்கள் ஏன் விவசாயத்திற்கு முன்னுரிமை தருகிறீர்கள்? தொழில்துறை, டெக்னாலஜிக்கு முன்னுரிமை தரலாமே….!

ராகுல் – நீங்கள் பொருளாதாரத்தை அப்படி பிரித்து பார்க்கலாம். நான் அப்படி பார்க்கவில்லை. அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தது. விவசாய முன்னுரிமை குறித்து சொல்லவேண்டுமென்றால் நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோம். சில காலத்தில் Rural demand உயர்ந்தது. அது பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் kick start செய்தது. பொருளாதாரமே வளர்ந்தது.
வேறு விதத்தில் சொன்னால், நீங்கள் எல்லோரும் ஏன் மெடிக்கல் படிக்கக்கூடாது. ஏன் சிலர் தத்துவம் படிக்கிறீர்கள், சிலர் பொருளாதாரம் படிக்கிறீர்கள். இது அத்தனையும் சேர்ந்ததுதான் அறிவு அல்லவா? அது போலத்தான் பொருளாதாரமும். (மாணவர்களிடையே பலத்த கைத்தட்டல்கள்)

ராகுல் இந்த கேள்விக்கு இன்னும் முழுமையான விடையளித்திருக்கலாம். ஆனால், கூடியிருக்கும் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டுமென்று சுருக்கமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ராகுலின் கருத்தை நான் எப்போதும் ஆதரித்திருக்கிறேன். அமெரிக்காவின் labour by sector பாருங்கள் – Primary: 0.9%, Secondary: 18.9%, Tertiary: 80.2%. சைனா - Primary: 29.5%, Secondary: 29.9%, Tertiary: 40.6% (2014). இப்போது இந்தியாவை பார்ப்போம் - Primary: 47%, Secondary: 22%, Tertiary: 31%

சைனா தன்னை secondary sector-ல் வளர்த்து கொண்டபோது காலம் அதற்கு சாதகமாக இருந்தது. இனி வரப்போகும் காலம் post-trump காலம்... outsourcing-ற்கு எதிராகவே இருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் டெக்னாலஜி படையெடுப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இதில் outsourcing-ற்கு இடம் ஏது?

அதே போல டெக்னாலஜி படையெடுப்பால், tertiary sector-ல் வேலைவாய்ப்புகளும் வளரப்போவதில்லை. இந்தியாவில் employment elasticity (GDP வளர்ச்சிக்கு எத்தனை வேலைவாய்ப்புகள் என்னும் ratio) ஏற்கனவே குறைவாக இருக்கிறது. இனியும் அப்படி தொடரவே வாய்ப்பிருக்கிறது.

வேலைவாய்ப்புகளை நிறைய தருவது MSME (Micro, Small, Medium Enterprises). ஆனால், பாஜக அரசு அதைத்தான் நசுக்கி கொண்டிருக்கிறது. மாறாக, Make in India கோஷம் போட்டு வெளிநாட்டு பெரிய கம்பெனிகளை கூப்பிட்டு கொண்டிருக்கிறது. கடைசியில், MSMEயும் அடிவாங்கிவிட்டது. Make in India-வும் முன்னே சொன்ன காரணங்களால் வெற்றியடையவில்லை. இரண்டும் உருப்படவில்லை.

அப்படியே Make in India வெற்றியடைந்திருந்தாலும், எத்தனை பில்லியன் முதலீடுகள் வேண்டியிருக்கும்? அதனால், எத்தனை வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை சுற்றுசூழல் மாசடைந்திருக்கும்? சைனாவின் Primary செக்டாரில் 30% மக்கள் இன்னும் இருக்கிறார்கள். அதற்க்குள்ளேயே அந்த நாட்டின் சுற்றுசூழல் மோசமாகிவிட்டது. மக்கள்தொகை மிகக்குறைந்த அமெரிக்க மாடல், மக்கள்தொகை மிகுந்த சைனாவிற்கு ஒத்துப்போகாது. இனி வரப்போகும் outsourcing-ற்கு எதிரான காலத்தில் இந்தியாவிற்கு சுத்தமாக ஒத்துப்போகாது.

மிச்சமிருக்கும் ஒரே துறை விவசாயம் சார்ந்த துறைகள்தான். (கண்மூடித்தனமான சுரங்க தொழிலை நான் ஆதரிப்பதில்லை. வேறொரு சமயம் இதுகுறித்து பேசலாம்) எதிர்கால சமுதாயத்திற்கு செய்வதற்கு ஏதாவது வேலை வேண்டும். அதை விவசாயம் சார்ந்த வேலைகள் மட்டுமே தரும். லாப நோக்கம் மட்டுமே கொண்ட கார்ப்பரேட்டுகளால் பெரிய மாற்றங்களை கொண்டு வரமுடியாது. GDP நம்பர் விளையாட்டு மட்டுமே நடக்கும்… வளர்ச்சி இருக்காது.

Thursday 23 August 2018

Indian Power Sector and Uday Scheme


மின்சார விநியோகம் செய்யும் கம்பெனிகள் (சுருக்கமாக டிஸ்காம்) ஏகமாக கடனில் மூழ்கியிருக்க அவற்றை காப்பாற்ற வந்ததாக சொல்லப்படும் ஒரு ஸ்கீம்தான் உதய்.
கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களும், யூனியன் டெரிடரிகளும் உதய் திட்டத்தில் இணைந்துவிட்டன. இந்த திட்டம் மூலமாக இந்திய மின்துறையில் அபாரமான மாற்றம் வரும் என்பது மத்திய அரசின் நம்பிக்கை. 2015 இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் இப்போது இரண்டாண்டுகளை கடந்து விட்டது. இந்த திட்டம் என்ன, எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

உதய் திட்டத்தின் செயல்பாட்டை பார்ப்பதற்கு முன்னால், சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். முதலில் டிஸ்காம்களின் கடன்சுமையை தெரிந்து கொள்ளலாம். 2015 செப்டம்பரில் இந்தியாவில் இருந்த அனைத்து டிஸ்காம்களின் மொத்த கடன்சுமை 4.3 லட்சம் கோடிகள். அதிகபட்சமாக ராஜஸ்தான் 85000 கோடிகள் கடன், தமிழ்நாடு 75000 கோடிகள் கடன். இந்த கடனுக்கு வட்டி கட்டியே லாபம் மொத்தமும் போய்விடும். (லாபம் வந்துட்டாலும்… அது வேறு கதை)

டிஸ்காம்கள் நஷ்டத்தில் இருந்தால் இருந்துவிட்டு போகிறது, பிரச்சனை என்ன? நாடு முழுக்க தடையின்றி மின்சாரம் கிடைக்கவேண்டும் என்பது மத்திய அரசுகளின் குறிக்கோள். மின்சாரம் இல்லாமல் வளர்ச்சி இல்லை. தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கியாவது இந்த குறிக்கோளை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க காசு வேண்டுமே. நஷ்டத்தில் இயங்கும் டிஸ்காம்களால் மின்சாரம் வாங்க முடியாது, அல்லவா?

அதனால், டிஸ்காம்கள் லாபமாக இயங்கவேண்டும்…. அப்போது அவற்றின் கையிலே காசு புழங்கும்… மின்சாரத்தை அதிகமாக வாங்கும்…. மின்துறையில் முதலீடுகள் பெருகும். இப்படி நடந்தால் அனைவருக்கும் win-win situation.

சரி, டிஸ்காம்களின் கடன்தானே பிரச்சனை? அந்தந்த மாநில அரசுகளே அவர்கள் மாநிலத்தில் உள்ள டிஸ்காம்களின் கடனை எடுத்து கொண்டால் என்ன? டிஸ்காம்களை எளிதாக காப்பாற்றி விடலாமே…! அதுதான் முடியாது… FRBM Act என்னும் ஒரு சட்டம், அப்படி மாநில அரசுகள் கடன்களை எடுத்து கொள்வதை தடுக்கிறது. அது என்ன சட்டம்?

ஒரு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் கண்டமேனிக்கு செலவு செய்து கொண்டிருந்தன. வரவுக்கு மீறிய செலவு… fiscal deficit என்று சொல்வார்கள். வரவுக்கு மீறி செலவு செய்தால் என்ன ஆகும்? கடன்தான் ஆகும். இப்படி ஒரேடியாக கடன் வாங்க கூடாது என்பதை மத்திய அரசுகள் (காங், பாஜக இரண்டுமே) உணர்ந்தன. அதனால், Fiscal deficit-ற்கு லிமிட் வரையறுத்து ஒரு சட்டத்தை போட்டது. அதுதான் FRBM Act.

இப்போது டிஸ்காம்களின் கடனை மாநில அரசு ஏற்றுக்கொண்டால் FRBM சட்டப்படி நிர்ணயித்த fiscal deficit அளவை தாண்டிவிடும். அதனால், மாநில அரசுகள் கடனை ஏற்க முடியாது.

நாளடைவில், டிஸ்காம்களின் கடனும், வட்டியும் ஏறிக்கொண்டே போனதால், debt trap எனப்படும் கடன் சுழலில் மாட்டி கொண்டன.

டிஸ்காம்களின் நஷ்டத்திற்கு இன்னொரு காரணம், வோட்டு அரசியல். மாநில அரசுகள் வோட்டு அரசியலை மனதில் வைத்துக்கொண்டு மின்கட்டணத்தை ஏற்றுவதில்லை. அதாவது, டிஸ்காம்களின் கடன் சுமையையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது. அதே சமயம், வருமானம் அதிகமாக வர மின்கட்டணத்தையும் அதிகரிக்காது.

டிஸ்காம்களின் திறமையை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பதை அடுத்து பார்க்கலாம். டிஸ்காம்களின் திறன் Aggregate Technical and Commercial Losses எனப்படும் AT&C losses-யை அடிப்படையாக கொண்டது.

மொத்தம் இவ்வளவு மின்சாரம் அனுப்பினால், எத்தனை மின்சாரம் பெறப்படுகிறது என்பது டெக்னிக்கல் நஷ்டம். அதிக மின்சார லோடு, டிரான்ஸ்பார்மர், லைன் கெபாசிடி குறைவு, தரமான பராமரிப்பு இன்மை போன்றவை இதற்கான காரணங்கள். மற்றதெல்லாம் கமர்சியல் நஷ்டம். உதா. மின் திருட்டு, மீட்டரில் திருட்டுத்தனம், பில் பணம் கட்டாதது போன்றவை.

ஒரு டிஸ்காமின் திறமையை இந்த AT&C loss வைத்தே கணக்கிடுவார்கள். 15 சதவிகிதத்திற்குள் AT&C loss கொண்டு வரவேண்டும் என்பது உதய் திட்டத்தின் டார்கெட்.

சரி, ஓரளவிற்கு பேக்கிரவுண்ட் தகவல்களை பார்த்துவிட்டோம். இப்போது உதய் ஸ்கீம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் டிஸ்காம்களின் நஷ்டத்தை கட்டுப்படுத்துவது அந்த டிஸ்காம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் வேலை. தேவையான உதவிகளை செய்வது மட்டுமே மத்திய அரசின் வேலை.

முதலில் கடன்சுமையை எப்படியாவது குறைக்கவேண்டும். அப்போதுதான் டிஸ்காம்களால் புதிய கடன்களை பெற்று, தேவைப்படும் மின் உபகரணங்களில் முதலீடு செய்யமுடியும். லாபத்தின் பாதையில் திரும்பமுடியும். இல்லையென்றால் பழைய உபகரணங்களை கொண்டு AT&C loss-ஐ கட்டுப்படுத்த முடியாது.

உதய் திட்டத்தின் கீழே, டிஸ்காமின் கடன்களில் 75% மாநில அரசு எடுத்துக்கொண்டு பாண்டுகள் வெளியிடலாம். இது FRBM சட்டத்தின் கீழே தவறாக கருதப்படாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அதே போல மீதமிருக்கும் 25% கடனை டிஸ்காம்கள், மாநில அரசின் கேரண்டியோடு பாண்டுகளாக மாற்றி கொள்ளலாம். மாநில அரசின் கேரண்டி இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். மாநிலங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் சீராக மின்கட்டணத்தை ஏற்றிவரவேண்டும். இதுவும் டிஸ்காம்களின் நஷ்டத்தை குறைக்கும்.

சரி, கடன்சுமை போனது… அடுத்து AT&C loss குறைக்கவேண்டும். புதிய எலக்ட்ரானிக் மீட்டர்களை பொருத்துவது, டிரான்பார்மர் பராமரிப்பு, மாற்றம் உள்ளிட்ட வேலைகள், மின்திருட்டை தடுப்பது, பணவசூல் ஆகியவை இதில் அடக்கம்.

AT&C loss கட்டுப்படுத்தினால் மின்உற்பத்திக்கு தேவையான கரி, அந்தந்த மாநிலங்களுக்கு சகாயவிலையில் கிடைக்கும். மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் உண்டு. இல்லையென்றால், ஒன்றும் கிடையாது. இது ஒரு கேரட்-ஸ்டிக் அப்ரோச்.

உதய் திட்டத்தின் முக்கியமான சிறப்பம்சம், Coal Linkage Rationalisation என்னும் திட்டம். இதன்படி பவர் பிளாண்டுகளுக்கு அருகிலிருக்கும் கரி சுரங்கங்களிலிருந்து கரி வாங்கி கொள்ளலாம். முன்பெல்லாம் பிளாக் அலாக்கேஷன் என்று எந்த சுரங்கம் ஒதுக்கப்பட்டதோ, அங்கிருந்துதான் கரி வரவேண்டும். சரக்கு போக்குவரத்து கட்டணமே அதிகமாக இருக்கும். இப்போது அருகிலிருக்கும் சுரங்கங்களில் இருந்து கரி வருவதால் அந்த செலவு குறைவு.

இதன் நீட்சியாக, அடுத்திருக்கும் பவர் பிளாண்டுக்கு கரி இல்லையென்றால், கரியை கைவசம் வைத்திருக்கும் அருகாமை பிளாண்டிலிருந்து எடுத்து கொடுக்கலாம். இதை Swapping என்று சொல்கிறார்கள்.

இந்த இரண்டு ஐடியாக்களின் மூலம் போக்குவரத்து (Transportation and Logistics) செலவுகள் குறையும். அப்போது, மின் உற்பத்தி விலையும் குறையுமல்லவா? டிஸ்காம்கள் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கலாம்.

இப்போது உதய் திட்டத்தின் பயன்களை பார்க்கலாம்… முதல் வருடம் நல்ல ஆரம்பம். AT&C நஷ்டம் ஒரு சதவிகிதம் குறைந்தது. நிதி சீரமைப்பு (Fin Restructure) காரணமாக டிஸ்காம்களுக்கு 15000 கோடி ரூபாய்கள் மிச்சமாயின.

இரண்டாம் வருடத்தில் AT&C நஷ்டம் 20.3% லிருந்து 19.1%-ஆக வந்து விட்டது. (தற்சமயம் 18.75%). 4 மாநில டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வந்துள்ளது. மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களின் டிஸ்காம் லாபம் 1565 கோடி (போன வருடம் 10203 கோடி நஷ்டம்)

மோசமான மாநிலங்களை பார்ப்போம். பீமாரு மாநிலங்களில் ராஜஸ்தான் ஒருபக்கம் லாபகரமாக போனாலும், இன்னொரு பக்கம் ஜார்கண்ட் வந்து இணைந்து விட்டது. இந்த மாநிலங்களில் AT&C நஷ்டம் உபி 28%, பீஹார் 33%, மபி 30%, ஜார்கண்ட் 32%. இருப்பதிலேயே குறைச்சல் ஆந்திராவாம் 8.7%. (தமிழ்நாடு தற்சமயம் 14.23%)
வட்டியை குறைத்ததாலேயே டிஸ்காம்களின் பெரும் சுமை குறைந்துவிட்டது. Coal Linkage Rationalisation திட்டமும் சில ஆயிரம் கோடிகள் செலவை குறைத்துள்ளது. இது தவிர ஸ்மார்ட் மீட்டர்கள் மூலமும், துல்லியமாக மின்சார உபயோகம் கணக்கெடுக்கப்படுவதால் வரவு அதிகமாகிறது. இரண்டே வருடங்களில் டிஸ்காம்களின் நஷ்டம் 70% குறைந்து விட்டது. Very good என்று சொல்ல தோன்றுகிறதல்லவா?

அவ்வளவு எளிதாக சொல்லமுடியாது. டிஸ்காம்களின் லாபத்தை முழுவதுமாக கொண்டாட முடியாது. காரணம், டிஸ்காம்களின் கடன், வட்டி சுமையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதை மறக்கக்கூடாது. அதாவது, மக்கள் மின்கட்டணம் கட்டியதற்கும் மேலாக வரிப்பணத்தை தருகிறார்கள் என்று அர்த்தம். FRBM சட்டத்திலிருந்து விலக்கு அளித்தாலும், கடன் என்பது கடன்தான். அதை அடைக்கும் வழிகளையும் பார்க்கவேண்டும்.

டிஸ்காம்களின் லாபத்தை கொண்டாட முடியாததற்கு இன்னும் ஒரு ரொம்ப முக்கியமான விஷயம் உள்ளது. அதுதான் மின்உற்பத்திக்கு நிறுவனங்களுக்கு (Gencos) காசு கொடுப்பது. டிஸ்காம்கள் நஷ்டம் 17350 கோடிகள் குறைந்தது என்றால், ஜென்கோஸ்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 150% அதிகரித்து, 32071 கோடியாக உயர்ந்துள்ளது. உபி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே இந்த தொகையில் 60% காரணம்.

இதனால் என்னவாயிற்று…? 180000 கோடிகள் மதிப்புள்ள ஜென்கோஸ்களின் பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியுள்ளது. அதில் 70000 கோடி NPAவாக மாறிவிட்டது. ஜென்கோஸ்களுக்கு சரியான நேரத்தில் ஒழுங்காக பணம் கொடுத்திருந்தால், டிஸ்காம்களின் நஷ்டம் அதிகரித்திருக்கும் என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம் டிஸ்காம்கள் லாபகரமான பாதைக்கு வருகிறது என்று பார்த்தால், இன்னொரு பக்கம் ஜென்கோஸ்கள் அடிவாங்குவதையும், கடன்கள் NPA ஆவதையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. அதாவது, நஷ்டம் மாறவில்லை…. நஷ்டம் ஏற்படும் இடம்தான் மாறியிருக்கிறது.

அடுத்ததாக ஜென்கோஸ்களையும், அவற்றின் பிரச்சனைகளையும் கவனிப்போம்.
உதய் திட்டம் என்பது பவர் செக்டாரின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையை வல்லுனர்கள் இழந்துவிட்டனர். மத்திய அரசு உதய் திட்டத்தின் வெற்றி பற்றி மட்டுமே பேசும். ஜென்கோஸ்கள் பற்றியும், பவர் செக்டாரின் பிரச்சனைகள் குறித்தும் பேசவேண்டியது எதிர்கட்சிகளின் கடமை.

முன்பெல்லாம் மின்சாரம் என்றாலே தெர்மல், ஹைட்ரோ, நியூக்ளியர் என்றிருந்தது. இப்போது பிரபலமாகி வருவது ரினூவபல்ஸ் (Renewables). அதாவது சோலார், விண்ட் போன்றவை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல நாடுகள் ரினூவபல் எனர்ஜியில் முதலீடு செய்து வருகின்றன. பழைய தெர்மல் பிளாண்டுகளை மூடியும் வருகின்றன. இந்த மாற்றம் இந்தியாவின் ஜென்கோஸ்களுக்கு பெரிய பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் பவர் பிளாண்டுகளின் இன்ஸ்டால்டு கபாசிடி வைத்து பார்த்தால் தெர்மல் கிட்டதட்ட 65%, ஹைட்ரோ 14.5%, ரினூவபல்ஸ் 16.2% (நியூக்ளியர் எல்லாம் வெறும் 2%). இப்போதைய முதலீடுகள் பெரும்பாலும் ரினூபவல்ஸ் ஏரியாவில்தான், அதிலும் முக்கியமாக சோலார் பவர்.

2012ல் ரினூவபல் கபாசிடி 24500 மெகாவாட்டுகள். 2017ல் 57000 மெகாவாட்டுகள். 2018ல் 69000 மெகாவாட்டுகள். முக்கியமாக மோடி அரசு சோலார் மின்சாரத்தில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. அதுதான் பிரச்சனைக்கு அடிநாதம். ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? விவரமாக சொல்கிறேன். (படத்தை கவனமாக பார்க்கவும். UPA2, NDA அரசுகளின் கீழே Growth% கவனிக்கவும். NDA ஆட்சியில் ரினூவபிலில் இருக்கும் அசுர வளர்ச்சியையும் கவனிக்கவும்)

ஆரம்பகாலத்திய டெக்னாலஜியில் ரினூவபல் மின்சாரம் விலை அதிகம். தெர்மல் மின்சாரம் விலை குறைவு. ஆனால், இப்போது டெக்னாலஜி முன்னேற்றத்திற்கு பிறகு ரினூவபல் மின்சாரம் விலை வெகுவாக குறைந்து விட்டது.

வேறுவிதத்தில் சொன்னால், தற்போதைய தெர்மல் மின்சாரம் மொத்தத்தையும் ரினூவபல் மின்சாரத்தின் விலையில் வாங்கினால் டிஸ்காம்களுக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய்கள் மிச்சமாகும். தற்போதைய ரினூவபல் மின்சாரம் அவ்வளவு சீப்…!

உதய் திட்டம், லாபத்தை நோக்கமாக, அளவுகோலாக கொண்டு டிஸ்காம்களை குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்க தூண்டுகிறது. இப்போது, டிஸ்காம்கள் தெர்மல் மின்சாரம் வாங்குவார்களா, அல்லது குறைந்த விலையில் ரினூவபல் மின்சாரம் வாங்குவார்களா?

இன்னொரு விஷயமும் இருக்கிறது. ரினூவபல் மின்சாரத்தை மட்டுமே எடுத்து கொண்டாலும், ஆரம்ப காலத்து ரினூவபல் மின்சாரத்தின் விலை அதிகம். சமீபத்திய ரினூவபல் மின்சாரத்தின் விலை குறைவு. டிஸ்காம்கள் ஆரம்பித்தில் போட்ட PPA-க்களின் (Power Purchase Agreement) விலையில் மின்சாரம் வாங்க மறுக்கின்றன. இந்த PPAக்கள் 25 வருட காலத்திற்கு போடப்பட்டவை. (முக்கியமாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்கள் முந்திரிக்கொட்டை போல ஆரம்பகாலத்திய ரிடனூபவலில் ஏகத்துக்கும் இறங்கிவிட்டன. இப்போது விலையை குறைக்க கேட்கிறார்கள். கூர்ந்து பார்த்தால் மத்திய அரசும் இதே போல அவசர கதியில் இறங்குவதை கவனிக்கலாம்)

இந்த PPAக்கள் அடிப்படையில்தான் முன்னர் பிராஜெக்டுகள் தொடங்கப்பட்டன… கடன்கள் வழங்கப்பட்டன. இப்போது 40GW பிராஜெக்டுகள் Stressed Assets ஆக மாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட 25GW பிராஜெக்டுகளுக்கு PPA-க்களே போடப்படவில்லை.

சரி, தெர்மல் பிளாண்டுகளில் முதலீடுகள் அடியோடு நிறுத்துப்பட்டுவிட்டனவா? அதுதான் இல்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி தெர்மல் பிளாண்டுகள் ஒரு பக்கம் கட்டப்பட்டு கொண்டிருகின்றன. அவற்றின் எதிர்காலம் என்னவாகும்?


இனி இந்திய பவர் செக்டாரின் எதிர்காலம் என்ன? கொஞ்சம் பொறுமையாக பார்ப்போம்.
இந்தியா இப்போது உலகிலேயே மின் உற்பத்தியிலும் மின் நுகர்விலும் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதலிடம் சைனா 6000 டெராவாட்டுகள், இரண்டாமிடம் அமெரிக்கா 4300 டெராவாட்டுகள், மூன்றாமிடம் இந்தியா 1400 டெராவாட்டுகள். இந்தியாவில் இன்னும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வரவில்லை. இன்னுமும் இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற போகிறது. அப்போது மின்தேவை எவ்வளவு இருக்கும்?

சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளையும் கணக்கில் எடுத்தால் ரினூவபல்ஸ்தான் எதிர்காலம். இப்போது கிடைக்கும் டெக்னாலஜியை கொண்டு ரினூவபல்ஸில் முதலீடு செய்கிறார்கள். ஒரு யூனிட் 2 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். நாளையே டெக்னாலஜி வளருகிறது. ஒரு யூனிட் 50 பைசாவுக்கு கிடைக்கலாம். தற்போது முதலீடு செய்பவர்கள் அப்போது நஷ்டத்தில போய்விடுவார்கள், அல்லவா?

அப்படியானால் என்ன செய்யவேண்டும்? உதய் திட்டத்திலே டிஸ்காம்களை ஒரு வர்த்தக போட்டியிலே, லாப நோக்கத்திலே அரசு தள்ளுகிறது. குறைந்த விலையில் மின்சாரம் வாங்குவது டிஸ்காம்களுக்கு லாபம். ஆனால், ஜென்கோஸ்களுக்கு நஷ்டம். இந்த நஷ்டம் பழைய டெக்னாலஜி ரினூவபல்ஸ்க்கும் வருகிறது.

இந்த லாப நோக்கத்தை கைவிட்டுவிட்டு, ஜென்கோஸ், டிஸ்காம், நுகர்வோர் இந்த மூவருக்கும் நிலையான பலன் தரும் திட்டங்கள்தான் நமக்கு தேவை. குறுகிய கால லாப நோக்கில் தீட்டப்படும் திட்டங்கள், நீண்ட கால முதலீடுகளை அழித்துவிடும். இன்றைய ஜென்கோஸ்களின் திண்டாட்டம், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைத்துவிடும். காரணம், டெக்னாலஜியின் வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் மின்சார விலை குறையும் வாய்ப்பு/ ரிஸ்க் இருக்கிறது என்றால் எந்த முதலீட்டாளர் நீண்டகால முதலீடுகளை செய்வார்? இது மின்சாரத்துறையின் நீண்டகால நலனுக்கு எதிரானது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான துறையினை, வோட்டு அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. டிஸ்காம்களின் நஷ்டம் பல்லாயிரம் கோடிகள் குறைந்துவிட்டது என்று விளம்பரப்படுத்துவதும், பேட்டிகள் கொடுப்பதும் வோட்டுகளை கொண்டுவரலாம். ஆனால், கண்டிப்பாக நாட்டிற்கு முன்னேற்றத்தை கொண்டுவராது.
உதய் திட்டத்தை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். ஆனால், as usual the devil is in details. ஜென்கோஸ்களின் cash flow பிரச்சனை, டெக்னாலஜி பாய்ச்சல், மின்துறையில் NPA என்று பல விஷயங்களை காணும்போது, மத்திய அரசின் செயல்பாடு மின்துறையின் நீண்டகால குறிக்கோள்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.
 

மின்சாரம் அனைவருக்கும் வேண்டும். அதில் சந்தேகமேயில்லை…. ஆனால், முதலீட்டாளர்களின் நஷ்டத்தில்தான் அது நடக்குமானால், அது சந்தை பொருளாதாரம் கிடையாது… நீண்ட கால வளர்ச்சிக்கும் அது உதவாது. இதை மனதில் கொண்டே மத்திய அரசு அடுத்த அடியை எடுத்து வைக்கவேண்டும்.


Monday 6 August 2018

Kiki – Cochin man – Jaipur Police


கொச்சியை சேர்ந்த ஜவஹருக்கு ஏகப்பட்ட போன் கால்கள்… பல வருடங்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட அவருக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்கள். அவர் பெற்றோர்களுக்கும் ஏகப்பட்ட போன்கால்கள்.

காரணம், ஜெய்ப்பூர் போலீஸ் வெளியிட்ட ஒரு விளம்பரம்… கிகி சேலன்ஜ் செய்யும்போது உயிரிழந்த வாலிபர் என்று ஜவஹரின் படம் போட்டு விளம்பரம் வந்திருந்தது.

ஆனால், ஜவஹர்தான் உயிரோடு இருக்கிறாரே…! அதுதான் காமெடி…! ஜவஹரின் உறவுக்காரர் ஒருவர் விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுப்பவர். ஒரு நாள் கேஷுவலாக ஜவஹரை போட்டோ எடுத்தவர், அதை ஷட்டர்ஸ்டாக் என்னும் வலைத்தளத்திலே வெளியிட்டார். அந்த தளம் போட்டோக்களை விற்பனை செய்யும் ஒரு பிரபல தளம். ஜெய்ப்பூர் போலீஸ் மாடர்ன் லுக்கில் இருக்கும் ஜவஹரின் போட்டோவை எடுத்து அஞ்சலி போஸ்டர் அடித்து விட்டது.

ஜெய்ப்பூர் காவல்துறையை பொருத்தவரை அவர்கள் காசு கொடுத்துதான் போட்டோ வாங்கினார்கள்…. அதை விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்பது வாதம். இது சரியான வாதமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

அதுசரி, அதென்ன கிகி சேலன்ஜ்? Drake என்னும் பாடகர் ‘In my feelings‘ என்றொரு வீடியோ பாடலை வெளியிட்டார். Shiggy என்றொரு சோஷியல் மீடியா ஸ்டார் (18 லட்சம் followers) அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போட்டார்.  Shiggy- யின் வீடியோவினால் அந்த பாட்டு செம பிரபலம் ஆனது.
Shiggy and Drake

ஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் சும்மா இல்லாமல் ஒரு பாலத்தின் மேல் ஏறி அந்த பாட்டிற்கு நடனம் ஆடி, அதையும் வீடியோ எடுத்து போட்டார். அதிலிருந்து ‘Kiki Challange’  அல்லது ’Shiggy Challenge’ ஆரம்பித்தது.

சும்மா அந்த பாட்டிற்கு நடனம் ஆடாமல் ரிஸ்க் எடுத்து நடனம் ஆட ஆரம்பித்தார்கள். ஓடுகிற காரில் இருந்து கீழே இறங்கி நடனம் ஆடவேண்டும்…. நடனம் ஆடி கொண்டே காரை தொடரவேண்டும். இதுதான் தற்போதைய சாலன்ஜ்.

இந்த கூத்திலே பலருக்கு அடிபடுகிறது… மோசமான விபத்துகள் நடக்கின்றன. Shiggy – யே ஒரு தொலைக்காட்சி பேட்டியிலே ஜாக்கிரதையாக நடனமாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

நம்மூரிலும் கிகி சேலன்ஜ் கூத்து ஆரம்பித்தது. அதனால்தான், ஜெய்ப்பூர் போலீஸ் கிகி சேலன்ஜிற்கு எதிராக விளம்பரம் வெளியிட, கொச்சினில் இருக்கும் ஜவஹருக்கு போன்கால்கள் குவிந்தன.

இன்டர்நெட் மற்றும் சோஷியல் மீடியாவின் பவர் என்ன என்பதை ஜவஹர் கதையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஜவஹரோ, “பரவாயில்லையே, நான் இறந்தால் இத்தனை பேர் விசாரிக்கிறார்களே…?“ என்று நடந்ததை பாஸிட்டிவ்வாக எடுத்து கொண்டு போய்விட்டார்.